
பெரிய பெரிய மூச்சுகளை வெளியே விட்டபடி கோபமாய் நீள்விருக்கையில், ஒரு காலை மடக்கி மற்றொரு காலை தொங்க விட்டு அமர்ந்திருந்தாள் சம்ருதி!
சம்ருதி, வைத்தியை போல ‘ஏன் அப்படி பேசினார்கள்?’ என்று தனக்குள் கேட்டு அழுது புலம்பும் ஆள் இல்லை அவள்.
முகத்திற்கு நேராக கேட்டு, பேசியதற்காக சண்டை போட்டு வரும் துணிச்சலான பெண்.
அதேநேரம் பொறுமையுடன், நிதானத்தை கடைபிடிப்பாள்! ஆளுக்கேற்றபடியும் நடந்து கொள்வாள் நாயகி.
அவளிடம் உள்ள குறை என்னவென்றால், வீட்டில் எந்த வேலையும் செய்ய மாட்டாள். செய்யவும் தெரியாது, பழகவும் இல்லை!
அவளை வேலை செய்ய விடாமலே வைத்தியே அனைத்தையும் பார்ப்பதால், அவளும் கற்றுக்கொள்ளாமல் அலட்சியமாக விட்டு விட்டாள்.
கோமதிக்கு, வீட்டிற்கு வரப்போகும் மருமகளை பற்றிய சில எதிர்பார்ப்புகள் உண்டு. அதில் முதலாவது சமையல் மற்றும் வீட்டுவேலை பார்க்க தெரிந்திருக்க வேண்டும். இன்னும் சில எதிர்பார்ப்புகள் இருந்தாலும், இதுவே முதன்மையானது.
கோமதி எதிர்பார்ப்புகளில் ஒன்று கூட சம்ருதியிடம் இல்லை தான். அதனால் அவளை மறுத்தது கூட அவளால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், அவளுக்கு யாருடனும் திருமணம் நடக்க கூடாது என்று நினைத்து வார்த்தைகளை விட்டது தான் முற்றிலும் தவறான செயல்.
அவருக்கும், பெண்ணிருந்து இவ்வாறு மற்றொருவர் சொல்ல கேட்டு சும்மா இருப்பாரா?
‘அவளை யார் தலையிலும் கட்டி வச்சிடாதீங்க!’ என்ற வார்த்தைகள் சம்ருதிக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தன.
‘இவன் இல்லை என்றால் வேறு மாப்பிள்ளை கிடைக்க மாட்டானா? வேலை செய்ய தெரியாத ஒரே காரணத்தில் வேண்டாம் என்று மறுப்பார்களா? நான் டாக்டர் கை நிறைய சம்பளம்! அழகா இருக்கேன்! இதுக்கு மேல என்ன தான் வேண்டும்?
இவர் தான் ஊரில் இல்லாத மாமியாரா? இவர் மறுத்தா எனக்கு கல்யாணமே ஆகாதா என்ன? இவங்க கண் முன்னே கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வர தான் போறேன்.
அப்போ இவங்க முகத்தை எங்க வச்சிப்பாங்கனு? நானும் பார்க்க தானே போறேன்!’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் நிமிர்ந்து தந்தையை பார்த்தாள்.
சோகத்தின் வடிவாக அமர்ந்திருந்தார்! கோமதி பேசியதற்கு கோபம் கொண்டு சண்டை போடாமல், தனியாக உட்கார்ந்து வருந்தும் வைத்தியை பார்க்க இவளுக்கு பத்திக்கொண்டு வந்தது.
அவர் அருகே வந்தவள், “இப்போ என்ன நடந்துச்சு? இப்படி உட்காந்துருக்க?”
“வேற என்ன பாப்பா பண்ணணுங்கற?”
“என்ன பண்ணணுமா? உனக்கு கோபம் வரலையா வைத்தி? அந்த அம்மாவை திட்டணும்ன்னு உனக்கு தோணலையா? உன் பொண்ணுக்கு கல்யாணமே நடக்க கூடாது நினைக்கிறாங்க! நீ இப்படி உட்காந்திருக்கிறது சரியா?”
“அந்த அம்மா பேசினது தப்பு தான்! ஆனா அவங்க சொன்ன ஒரு விஷயம் சரி தானே!”
“அவங்க சொன்ன எந்த விஷயம் சரிங்கற?”
“வீட்டு வேலை செய்ய தெரியாத உன்னை யார் தான் பாப்பா கட்டிப்பா? அட்லீஸ்ட் உனக்கு ஒரு டீ போட தெரியுமா பாப்பா? எல்லாம் என் தப்பு தான்.
உனக்கு வீட்டு வேலை எல்லாம் சொல்லிக்குடுத்து செய்ய வச்சிருக்கணும்.. என் மேலே தப்பை வச்சிட்டு உன்னை சொல்லி என்ன ஆகப்போகுது சொல்லு?” என தலையில் அடித்துக்கொண்டார்.
அவளுக்கு ஆறுதல் சொல்லாமல் கோமதி சொன்னதை சரியென்று சொல்லும் தந்தையின் வார்த்தைகளால், உள்ளுக்குள் காயப்பட்டு போனாள் சம்ருதி.
சுருக்கென்று ஒரு வலி பிரசவிக்க கண்களில் நீர் வழிந்தது.
அதை துடைத்தவள், “சரி! இப்போ என்ன வீட்டு வேலை செய்ய கத்துக்கணுமா? கத்துக்கிறேன். இனி எல்லா வேலையும் நானே செய்றேன். டீ கூட போட தெரியுமா கேட்டேல? டீயில இருந்தே ஆரம்பிக்கிறேன்!” என விறுவிறுவென சமையலறைக்குள் சென்றாள்.
தட்டுத்தடுமாறி அடுப்பை பற்ற வைத்தாள். அருகே சட்டியிலிருந்த பாலை எடுத்து அடுப்பில் வைத்தாள்.
கண்ணாடி புட்டியில் நிறைய பொடிகள் வரிசையாக அடுக்கி வைப்பட்டிருக்க, அதையெல்லாம் பார்த்துக்கொண்டு வந்தவள் கடைசியாக இருங்க டீ தூளை கண்டறிந்தாள் அதுவும் ஐயமாகவே!
“ப்பா! கருப்பு கலர்ல இருக்க பொடி தானே டீ தூளு!” என சத்தமாக கத்தி கேட்டிட, இவரோ தலையில் அடித்துக்கொண்டார்.
நான்கு ஸ்பூன் போட்டவள் டீயை கொதிக்க விட்டாள். அதுவும் கொதித்து பொங்கி வர சட்டென கை துணி காணாமல் போக, என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றத்தில் அடுப்பை அணைக்க மறந்தாள்.
வெறுங்கையோடு பாத்திரத்தை தொட்டு தூக்கிட, கையில் சூடுபட்டு பாத்திரத்தை கீழே போட்டு விட காலிலும் தேநீரைக் கொட்டிக்கொண்டாள்.
சூடான தேநீர் பட்டதும், “ஸ்.. ஆஆஆ.. அம்மா..” என எரிச்சலில் அலற ஆரம்பித்தாள். மகளின் அலறலில் பதறிக்கொண்டு வந்தார் வைத்தி.
கையிலும் காலிலும் எரிச்சல் அதிகமாக உதறி கொண்டிருந்தவளின் கையை நீருக்குள் விட்டார் வைத்தி. வேகமாக அவரிடமிருந்து கையை உருவினாள்.
“என்ன பாப்பா பண்ற கை எரிச்சலுக்கு பச்ச தண்ணீரில வச்சா சரியாகிடும் நீ டாக்டர் தானே தெரியாத உனக்கு? சின்ன குழந்தை மாதிரி பண்ணாத! கொடு பாப்பா!”
“நான் டாக்டர் தான் அதுக்கு என்ன இப்போ? டாக்டரா இருந்து என்ன பிரோயஜனம் வீட்டு வேலை செய்ய தெரியல! எதுக்கும் யாருக்கும் பிரோயஜனம் இல்லைல நான். தண்டம்மா உனக்கு பெரிய தொந்தரவா இருக்கேன்ல..” என கண்ணீருடன் பேசினாள்.
“ஏன் பாப்பா இப்படி பேசிட்டு இருக்க நீ? நீ தொந்தரவா இருக்கன்னு எப்போ சொன்னேன் நான்?”
“அதை நீ சொல்லணும் அவசியம் இல்லை! எனக்காக நீ கோவப்படலயே? அதுலயே புரிஞ்சுக்கிட்டேன். அவங்க சொல்றது சரில! பரவாயில்லை சூடு பட்டாலும் கைய வெட்டிக்கிட்டாலும் உனக்கு நான் வீட்டு வேலை பார்க்கணும்ல பார்க்கிறேன்.
எனக்கு கல்யாணமாகனும் நான் இங்கிருந்து போகணும். உனக்கு நிம்மதி கிடைக்கணும். அதுக்கு நான் இதெல்லாம் செஞ்சு தானே ஆகணும். செய்றேன்…” என்று கீழே விழுந்த பாத்திரத்தை சிங்கில் போட்டு விட்டு, அதை சூடு பட்ட கையோடு துடைக்க அவரால் பார்க்க முடியவில்லை.
“பாப்பா நீ எதுவும் பேசாத! வெளிய போ! நான் தொடைச்சிக்கிறேன். சூடு பட்ட கையால தொடைக்காத! இங்க குடு நான் பாத்துக்கிறேன்..” என அவளிடம் வாங்க முற்பட தட்டிவிட்டாள்.
“மறுபடியும் மறுபடியும் அதே தப்ப பண்ணி உன் தலையில அடிச்சிக்காத! இனி எல்லா வேலை நானே பாக்குறேன்..” என்று சுத்தமாக இரண்டுமுறை துடைத்து எடுத்தாள்.
இவர் வேகமாக கைக்கு மருந்தை தேடி எடுத்து வருவதற்குள் அவளோ அறைக்குள் சென்று கதவை சாற்றிக்கொண்டாள்.
“பாப்பா கதவை தொற! மருந்து போடணும்!” என கதவை தட்ட அவளோ திறக்கவில்லை மெத்தையில் விழுந்து அழுது கொண்டிருந்தாள். கதவை தட்டி தட்டி ஓய்ந்து போனவர் மருந்தை தூக்கிப் போட்டு விட்டு வெளியே வந்து, ஓரமாக இருந்த கதிரையில் அமர்ந்தார்.
வேலை முடித்து விட்டு அப்போது தான் இல்லம் வந்தான் மாறன். அவரை கண்டதும் புன்னகையுடன் சாவியை எடுத்துக்கொண்டு அவரை நோக்கி நடந்தான்.
அவரும் அவனை கண்டதும் முகத்தை துடைத்து சிரிப்பை வரவழைத்தபடி இருந்தார்.
“என்ன பாட்னர் தனியா உட்காந்து இருக்கீங்க?”
“சும்மா காத்து வாங்கலாம் தான்பா..”
“என்ன பாட்னர் உங்க குரலே சரியில்லயே என்னாச்சி? எதுவும் பிரச்சனையா?” என சிறு பதற்றத்துடன் கேட்டான்.
தன் குரலில் தெரிந்த மாற்றத்தை வைத்தே, ‘பிரச்சனையா?’ என்று கேட்பதில் மகளுக்கு அடுத்ததாக கேட்ட ஜீவன் மாறன் தான்.
அவனையே விழி விரித்து பார்த்தார்!
“என்ன பாட்னர்? என்ன பிரச்சனை?” என இவன் கேட்க, அவர் வாயை திறக்கும் முன் வாசலுக்கு வந்த வளர்மதி, “வெற்றி” என இவனை அழைத்தார்.
“என்ன சித்தி?”
“வீட்டுக்கு வந்துட்டு உள்ள வராம என்னப்பா பண்ணிட்டு இருக்க?”
“பச்… சித்தி! பேசிட்டு இருக்கேன். பாத்தா தெரியலையா?”
“இருக்கட்டும் பா உள்ள வாயேன் உன் கிட்ட பேசணும்!” என அவரும் வைத்தியிடம் பேசவிடாமல் அழைக்க,
“நீங்க போங்க தம்பி! ஆல்ரெடி ரொம்ப லேட் சாப்பிட்டு படுங்க. நான் கொஞ்ச நேரத்துல உள்ள போயிடுவேன்..”
“சரி இங்கே இருக்காம சீக்கிரமா உள்ள போங்க பாட்னர். நான் வர்றேன் குட்நைட்!” என்று சிரித்துக் கொண்டே விடைபெற்றான்.
வீட்டுக்குள் வந்ததும் வளர்மதியை கண்டவன் சிடுசிடுப்புடன், “என்ன சித்தி தனியா உட்காந்து இருக்க மனுஷன் கூட பேச கூட கூடாதா? இப்படி பேச விடாம கூப்பிட்டா, அவர் என்ன நினைப்பாரு?”
“அவர் என்ன வேணாம் நினைக்கட்டும் பா! அதை விட முக்கியமான விஷயம் உன் கிட்ட சொல்லணும்!” என்றார் ஆவலுடன்.
“என்ன விஷயம் அது? ஆமா ஏன் நீங்க இன்னமும் வீட்டுக்கு போகாம இருக்கீங்க?”
“உங்க அம்மாக்காக தான் வெற்றி கூடவே இருக்கேன்..”
“என் அம்மாக்காகவா? அவங்களுக்கு என்ன?” எனக் கேட்டு ‘அம்மா’ என்று அழைக்கவும் செய்தான்.
“அம்மாக்கு ஒன்னும் இல்ல தான். ஆனா, அந்த பஜாரி வந்து சத்தம் போட்டு போனதையே நினைச்சிட்டு உடம்புக்கு ஏதாவது இழுத்து வச்சிடுவான்னு தான் கூடவே இருக்கேன் வெற்றி!” என அக்காவின் மீது அக்கறை இருப்பது போல பேசினார் வளர்மதி.
“எந்த பஜாரி? யார் வந்தா? எதுக்கு வீட்டுக்கு வந்து சத்தம் போடணும்?” என புருவ முடிச்சுக்களுடன் கேட்டான்.
வளர்மதியும் நடந்த அனைத்தையும் சொல்ல, சரியாக அறைக்குள் இருந்து கோமதியும் வெளியே வந்தார்.
“உங்க அம்மா கிட்ட எப்படி கோபமா பேசிட்டு போனா தெரியுமா? எனக்கே ஒரு மாதிரி ஆயிடுச்சி பா! சும்மா விடக்கூடாது அவளை! நீயும் நறுக்குனு நாலு வார்த்தை அவளை கேக்கணும் வெற்றி!” என அவனை ஏற்றி விட பார்த்தார்.
ஆனால், அவனோ நிதானமாகவும் அதே நேரம் பொறுமையுடன் விஷயத்தை கையாண்டான்.
“எனக்கு ஒரு விஷயம் புரியல சித்தி. அந்த பொண்ணு சம்பந்தமே இல்லாம எதுக்கு வீட்டுக்கு வந்து அம்மா கிட்ட கத்திட்டு போகணும்? அதுக்கு பதில் சொல்லுங்க!”
உடனே அவரும் கோமதியை பார்க்க அவரோ தவறு செய்தது போல தலை குனிந்தார்.
“அம்மா! எதுக்கு அந்தப் பொண்ணு உன் கிட்ட வந்து சத்தம் போடணும்? என்னமா பிரச்சனை உங்களுக்குள்ள?”
கோமதிக்கு மகனிடம் உண்மையை கூற முடியாமல் இருக்க முடியவில்லை. அதே நேரம் வளர்மதி, அக்கா பொய் சொல்லி மழுப்புவார் என்று எதிர்பார்த்தார்.
ஆனால், கோமதியோ மகனின் கூர் விழிகளுக்கு முன்னால் பொய் சொல்ல முடியாமல், உண்மையை உளறி வைத்தார்.
வளர்மதியோ உள்ளுக்குள் அக்காவை கடிந்து கொண்டார்.
“என்னம்மா இதெல்லாம்? உன் கிட்ட இருந்து இதை நான் எதிர்பாக்கல! எப்படி மா ஒரு பொண்ணோட வாழ்க்கைய அழிக்கிறது போல பேசின? அந்த பொண்ண உங்களுக்கு பிடிக்கலனா வேற வரன் பார்க்க சொன்னதோடு நிறுத்தி இருக்கலாமே!
அவளைப்பத்தி இல்லாதது பொல்லாதது சொல்லி, ஏன் அவளை யார் தலையிலும் கட்டி வச்சிடாதீங்க சொன்ன? நீ சொன்னது நியாயமா? நீ பேசின வார்த்தைகள் எல்லாம் சரியா?
ஒரு பொண்ணு இருந்து வேற யாராவது இப்படி சொன்னா உன்னால ஏத்துக்க முடியுமா மா? அந்த பெரிய மனுஷன நினைச்சு பார்த்தியா? இவ்வளவு நடந்தும் என்கிட்ட எப்பவும் போல சாதாரணமா பேசினார்.
அந்த எண்ணம் ஏன் மா உனக்கு இல்ல? அவர் முகத்துல நான் எப்படி முழிப்பேன்? ச்ச.. போ மா!” என்றவன் வெளியே செல்ல எத்தனிக்க, “என்னப்பா பேசுற நீ? அந்த பொண்ணு வந்து சத்தம் போட்டதுக்கு கோபப்படாம.. அக்கா பேசினதுக்கு நீயும் அவளை திட்டுற?” என்றார் வளர்மதி.
“நிறுத்துங்க சித்தி! எங்க அம்மா எப்பவும் நடுநிலையில இருந்து தான் யோசிச்சி பேசணும்ன்னு சொல்லிக்குடுத்து தான் வளர்த்திருக்காங்க! இப்பவும் அப்படி நின்னு தான் பேசுறேன்.
என் அம்மா மேல தான் தப்பு! என்னை வேற யாராவது ஏதாவது
பேசினா நான் போய் ஏன் பேசினீங்க கேக்க மாட்டேனா? அது போல தான் அந்த பொண்ணு வந்து கேட்டு இருக்கா! அம்மா பேசினது தப்பு தான்.
என்னை ஒழுக்கமா வளர்த்த எங்க அம்மாவோட மூளை ஏன் இப்போ எல்லாம் மழுங்கிப் போகுதுன்னு தெரியல..” என வளர்மதியை பார்த்து சொல்ல, அவரோ திருட்டு முழியுடன் “சரி நான் வீட்டுக்கு போறேன்..” என்று அங்கிருந்து நழுவிக் கொண்டார்.
அவர் சென்றதுமே மாறன் “சித்தி கூட சேர்ந்து சேர்ந்து உன்னோட உண்மையான கேரக்டர் நீ மறந்து போறம்மா நீ! எல்லாருக்கு நல்லது நினைக்கிற நீ.. ஒரு பொண்ணுக்கு கல்யாணமே நடக்க கூடாதுன்னு எப்படிமா நினைச்ச?
அப்போ அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்காம வீட்டோட இருந்தா, நீ சந்தோஷப்படுவீயா? அந்த அங்கிள் எவ்வளவு உடைஞ்சு போயிருக்கார் தெரியுமா? உன் சார்பா நான் போய் மன்னிப்பு கேட்டு அவரை சமாதானம் செஞ்சிட்டு வர்றேன்..”
தான் செய்த தவறுக்கு மகன் மன்னிப்பு கேட்கும்படி ஆயிற்றே என்ற குற்றவுணர்வு ஊசியாய் உள்ளே சுருக்கென்று குத்திட, வலியோடு அவனை நிமிர்ந்து பார்த்தார்.
“வேற என்ன பண்ண முடியும்? பேசிட்டு வர்றேன்..” என அங்கிருந்து விறுவிறுவென அவரை தேடிச் சென்றான்.
மகளை எண்ணி கண்ணீர் விட்டு கொண்டிருந்தார். இவன் வந்து நிற்கவும் கண்ணீரை வேகமாக துடைத்து விட்டு
“என்ன பா இன்னும் தூங்கலயா? தூங்காம இந்த நேரத்துல?”என கேட்டு முடிக்கும் முன்னே அவரது கையை பற்றியிருந்தான் மாறன்.
“எங்க அம்மா சார்பா நான் உங்க கிட்ட மன்னிப்பு கேக்குறேன் பாட்னர். வெரி சாரி பாட்னர். எங்க அம்மா இப்படி பேசுறவங்க கிடையாது. அவங்க உண்டு அவங்க வேலை உண்டு தான் இருப்பாங்க!
இதுக்கு எல்லாம் என் சித்தி தான் காரணம்.. அவங்க தான் அம்மாவை இப்படி மாத்தினது. உண்மையாவே என் அம்மா அப்படி பேசி இருக்ககூடாது தான் பாட்னர்.
அந்த வார்த்தைகள் உங்களையும் உங்க பொண்ணையும் எவ்வளவு பாதிச்சி இருக்கும்ன்னு என்னால உணர முடியுது?
அதுக்கு மன்னிப்பு கேக்குறத விட வேற என்ன செய்ய எனக்கு தெரியல பாட்னர்” என கலங்கிய கண்களுடன் மன்னிப்பு கேட்டான். அவரும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
“என்ன பாட்னர் என் மேலே கோபமா? கோபம் இருந்தால் நாலு அடி கூட அடிச்சிக்கங்க! பேசாம இருக்காதீங்க பாட்னர்!” என கை கூப்பி கேட்டு நிற்பவனின் கையை பற்றிக்கொண்டார்.
“என்ன தம்பி? கை கூப்பிட்டு மன்னிப்பு கேட்டுட்டு! விடுங்க தம்பி!” என கையை எடுத்து விட்டவர், “உங்க அம்மா பேசினது வருத்தமா இருந்தாலும் அதுல சொல்லபட்ட விஷயத்துல ஒரு உண்மையும் இருக்கு தானே தம்பி!” என்றவரை ‘என்ன அது?’ என புருவங்களை கேள்வியாக உயர்த்தினான்.
“எந்த வேலையும் என் பொண்ணுக்கு செய்ய தெரியாது தானே தம்பி! இப்போ வரைக்கும் அவளோட துணிய நான் தான் துவைக்கிறேன். அவளுக்கு பல்லு வெளக்கி குளிக்க வைக்கிற வேலைய மட்டும் தான் நான் பண்ணல. ஆனா, சில நேரம் நான் தான் ஊட்டி விடுவேன் பா!
இப்படி செல்லமா வளர்த்திட்டு இப்போ நான் அல்லோல படுறேன் தம்பி! எந்த வேலையும் பார்க்க தெரியாது சொன்னா என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க யோசிக்க தானே செய்வாங்க தம்பி?”
“பாட்னர் நீங்களும் அப்படி சொல்லாதீங்க? வேலை பார்க்க தெரியலைனா கல்யாணமே நடக்காதுன்னு யார் சொன்னா?
ஏதோ பெண்களுக்குரிய மேரேஜ் குவாலிபிகேஷன்ல கண்டிப்பா வீட்டு வேலை தெரிஞ்சிருக்கணும். அப்போ தான் அவங்க மேரேஜ்க்கு ஃபிட்!
வேலை செய்ய தெரியலையா அன்ஃபிட் சொல்றது போல இருக்கு பாட்னர் நீங்க பேசுறது!” என்று சிரித்துக் கொண்டு சொல்பவனை ஆவென பார்த்தார்.
“எந்த ரூல் புக்ல பாட்னர் வீட்டு வேலை செய்ய தெரிஞ்ச பெண்களுக்கு மட்டும் தான் திருமணம்னு போட்டு இருக்காங்க?
சும்மா எங்க அம்மா சொல்றாங்கனு நீங்களும் அதே பிடிச்சிட்டு தொங்காதீங்க. வீட்டு வேலை செய்ய தெரியலைனாலும் கண்டிப்பா உங்க பொண்ணுக்கு கல்யாணம் நடக்கும்!” என்றான் அழுத்தமாக.
அவரோ, “எப்படிப்பா? அவளுக்கு தான் எதுவும் செய்ய தெரியாதே! அதை மாப்பிள்ளை வீட்ல சொன்னா யோசிக்க மாட்டாங்களா? என்ன இத்தனை வயதாகுற பொண்ணுக்கு ஒரு டீ கூட போட தெரியாதா? கேட்க மாட்டாங்களா?
எதையும் சொல்லாமல் கல்யாணம் பண்ணி போனாலும், அவ போற வீட்ல வேலை செய்ய தெரியாம கையை பிசைஞ்சுட்டு நிக்க தான் போறா! அப்போ எல்லாரும் என்னை தானேப்பா பேசுவாங்க! ஒரு வேலையும் உன் அப்பன் சொல்லி தரலயானு திட்ட மாட்டாங்களா?”
“எனக்கு நீங்க பேசுறது சில்லியா இருக்கு பாட்னர். உங்க பொண்ணோட மதிப்பு தெரியாம இப்படி சின்ன விஷயத்துக்கு அவங்க வொர்த் இல்லாதது போல பேசுறீங்க பாட்னர்” என்றதுமே புரியாமல் முழித்தார்.
“என்ன சொல்றீங்க தம்பி நீங்க?”
“உங்க பொண்ணு ஒரு டாக்டர் அதையே மறந்துட்டீங்களா நீங்க? எத்தனை உயிர்களை போராடி காப்பாத்துற இடத்துல இருக்காங்க உங்களுக்கு தெரியும் தானே? தினமும் அவங்களை நினைச்சு நீங்க பெருமைப்படாம.. வீட்டு வேலை செய்ய தெரியலன்னு சொல்லி பொலம்பிட்டு இருக்கீங்க..
உங்க பொலம்பல பார்த்தா, பணம் கொட்டி டாக்டருக்கு படிக்க வச்சதுக்கு பதிலா, நீங்க அவங்களை வீட்ல வச்சி வீட்டு வேலையெல்லாம் சொல்லி குடுத்திருக்கலாம்.
ஏன்னா இப்ப நீங்க அவங்களோட படிப்ப மதிக்கிறத விட, ஒன்னுமில்லாத வீட்டு வேலை செய்ய தெரியலனுல பீல் பண்ணிட்டு இருக்கீங்க..”
அவர் எதுவும் பேசவில்லை..
“உங்க பொண்ணை டாக்டருக்கு படிக்க வச்சதுக்கு வீட்டு வேலை செய்ய தானா? அவங்க வாங்குற சம்பளத்துக்கு வீட்டு வேலை செய்ய ஆள் வச்சுக்கிட்டா முடிஞ்சது! இதுக்கு எதுக்கு கல்யாணமே என் பொண்ணுக்கு நடக்காது பீல் பண்ணிட்டு இருக்கீங்க.
யாராவது டாக்டர் பொண்ணை வீட்டு வேலை செய்ய தெரியலைனு ரிஜெக்ட் பண்ணுவாங்களா?” என நகைச்சுவையாக கேட்டது போல சிரித்துக் கொண்டு கேட்டான்.
“உங்க அம்மா ரிஜெக்ட் பண்ணிட்டாங்களேப்பா “
“எங்க அம்மாக்கு படிப்போட அருமை தெரியாது பாட்னர். பழைய காலத்து ஆளு! வரப்போற மருமக வீட்டு வேலை செஞ்சா போதும் என்னை கவனிச்சிட்டா போதும் நினைக்கிறாங்க. அது போதுமா வாழ்க்கைக்கு?
ஆக்சுவலா அவங்க எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களா? இல்லை எனக்கு சேவை பண்ணா ஆள் தேடுறாங்களானு தெரியல பாட்னர்!”
“என்னோட வாழ வரப்போற பொண்ணு என் கூட வாழ தானே வர்றா! என் வீட்டு வேலைகளை பார்க்க வரலயே? வீட்டு வேலை பார்க்க எத்தனையோ ஆள் இருக்காங்க பாட்னர்! ஆனா, சேர்ந்து வாழ தான் இங்க பெண்ணையோ பையனையோ தேடுறோம்.
உங்க பொண்ணு போற வீட்டுல நல்லா வாழனும் தானே நீங்க அனுப்பி வைப்பீங்க? அங்க போய் நல்லா வீட்டு வேலை பாருமான்னா அனுப்பி வைப்பீங்க?
உங்க வீட்டு இளவரசி இன்னொரு வீட்டுக்கு ராணியா போகணும். வேலைக்காரியா போகக்கூடாது பாட்னர்!” என்றதுமே கலக்கம் கொண்டிருந்த வைத்தியின் முகம் தெளிவானது.
வைத்தியின் மனதில் சூழ்ந்த இருளை கொஞ்சம் கொஞ்சமாக பேசி பேசி கலைத்துக்கொண்டிருந்தான் மாறன். கோமதி ஏற்படுத்திய பயத்தையும் குழப்பத்தையும் மாறன் தான் அகற்றிக் கொண்டிருந்தான். அவருக்கோ கண்களில் நீர் வழிந்தது. அவன் துடைத்து விட்டான்.
“என்னாச்சி பாட்னர்? ஏன் அழறீங்க?”
“என்ன சொல்ல தம்பி? உங்க அம்மா ஏற்படுத்தின குழப்பத்தால என் பொண்ணு கிட்ட கொஞ்சம் கடினமா பேசிட்டேன். அவ அருமை புரியாம அவளை கஷ்டப்படுத்திட்டேன்.
அவளும் இனி நான் வீட்டு வேலை செய்றேன் சொல்லி கோபத்துல டீ போட போறேன்ணு கைய சுட்டு கிட்டா தம்பி!
மருந்து போட கூட என்னை விடல, எனக்காக நீ அவங்க கிட்ட பேசலன்ற கோபத்தில் உள்ள போய் கதவடைச்சி சாத்திக்கிட்டா தம்பி! சாப்பிட கூட இல்ல. பசி வேற தாங்க மாட்டா.. ஆனா, கோபத்துல வீம்புல உள்ளே இருக்கா!” என தன் தவறை உணர்ந்தவர் மகளை எண்ணி கவலை கொண்டார்.
“நானும் கேக்கணும் நினைச்சேன் பாட்னர்! ஏன் எங்க அம்மா கிட்ட வந்து சண்டை போடல? உங்க பொண்ணுக்காக ஏன் பேசல?”
“சரவணன் அப்பா சொன்னதும் எனக்கும் உங்க அம்மா மேலே கோபம் வந்திச்சுப்பா! அந்த நேரத்துல நிதானத்தை இழந்து அங்க போய் சண்டை போட்டிருக்கலாம்.
நாளைக்கு நான் உங்க முகத்துல தானே தம்பி முழிக்கணும். என்னோட கோபத்தினால ஒரு நல்ல உறவ இழக்கணுமா யோசித்து அமைதியாயிட்டேன் தம்பி!” என்றார்.
அவரை கனிவாக பார்த்தான்..
“உன்னை போல எனக்கு ஒரு பையனும் இருந்தான் தம்பி. நானும் அவனும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். ஆனா, என்ன நேரமோ அவனுக்கு பிடிச்ச வாழ்க்கைய தேர்ந்தெடுத்து என்னை விட்டு போயிட்டான் பா! நானும் அவன் மேலே கோபத்துல இருந்தேன்.
பாப்பா எங்களை சமாதானம் பண்ணி சேர்த்து வைக்க நினைச்சா. ஆனா, அதுக்கு வாய்ப்பில்லாம அவன் ஆக்ஸிடென்ட்ல இறந்து போயிட்டான்!
அவன் இல்லாத இடம் ரொம்ப வெறுமையா இருந்தது. நீ வந்ததும் தான் அந்த வெறுமை இல்லாம போச்சி தம்பி! உன்னை என் புள்ளையா பாக்கிறேன்.
ஆறுதலாக இருக்க உறவை சண்டை போட்டு இழக்க விரும்பலப்பா..” என அவர் சொல்ல, தன் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தை உணர்ந்தவன் நெகிழ்ந்து போனான்.
மாறனும் தான் இழந்த தந்தையின் பாசத்தை வைத்தியிடம் உணர்ந்திருக்கிறான். கொஞ்சநாள் பழக்கமென்றாலும், உணர்வுகளால் பல கால பந்தம் போல இணைந்திருந்தனர் இருவரும்.
“ரொம்ப நேரம் ஆச்சி பாட்னர். போய் உங்க பொண்ணை சமாதானம் செஞ்சு சாப்பிட வைச்சி தூங்க சொல்லுங்க. நீங்களும் சாப்புட்டு படுங்க! நாளைக்கு எல்லாம் சரியாகிடும்.
உங்க பொண்ணு வேலை செய்ய கத்துக்க நினைச்சா செய்ய விடுங்க. ஃபோர்ஸ் பண்ணி எதையும் செய்ய வைக்காதீங்க பாட்னர். குட் நைட்!” என்று அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு இவனும் உள்ளே வந்தான்.
அவனுக்காக காத்துக்கொண்டிருந்த
கோமதி அவன் வந்ததும், “என்ன மன்னச்சிடு தம்பி! நான் அப்படி பேசி இருக்க கூடாது தான். அந்த பொண்ணு மேலே இருக்க வெறுப்புல அப்படி பேசிட்டேன். என்னை மன்னிச்சிடுபா!” என மகனிடம் கெஞ்சினார்.
அவனோ “விடு மா! இனி இது போல யார பத்தியும் பேசாத. உன் குணம் மாறினது தான் எனக்கு கஷ்டமா இருக்கு. ப்ளீஸ் மா யாரையும் ஹார்ட் பண்ணி பேசிடாத..” என்றான்.
“அந்த அண்ணே என்னை திட்டினாராப்பா?”
அவனும் சிரித்துக் கொண்டே நடந்ததை சொல்ல, அவருக்கோ குற்றவுணர்வாகியது.
“அந்தப் பொண்ணுக்கு பெரிய காயம் எதுவும் இல்லைலப்பா?”
“இல்லைன்னு தான் நினைக்கிறேன். விடு மா! இனி இதைப்பத்தி நினைக்காத! வா சாப்பிடலாம்..” என்று சாப்பிட அழைத்துச் சென்றான்.
வைத்தியோ, சம்ருதியின் அறையை தட்டி தட்டி ஓய்ந்து போய் சாப்பிடாமலே உறங்கச்சென்றார்.
அதிகாலை வேளையில் எழுந்து கொண்ட சம்ருதி. நேற்று எடுத்துக் கொண்ட சபதத்தால் முதலில் கோலம் போடும் முடிவுடன் வெளியே வந்தாள்.
காய்ந்து போன தரையை பெருக்கி எடுத்தவள் நீரை தெளித்து கோலம் போட உட்கார்ந்தவளுக்கு, என்ன கோலம் போட வேண்டுமென தெரியவில்லை. அலைபேசியில் சின்னக்கோலமாக எடுத்து அதை பார்த்துக்கொண்டே புள்ளிகளை வைத்தாள்.
அடுத்து கம்பிகளை இழுக்க வேணும் முடியவில்லை! கோணலாக, பட்டையாக ஊடே விட்டு விட்டு என அலங்கோலமாக வந்தது. அழித்து அழித்து போட்டு அசிங்கமாகவும் இருந்தது.
‘ச்ச… என்ன இப்படி இருக்கு? பாக்கவே நல்லா இல்லையே! இப்புடியே விட்டுட்டு போனாலும் பார்க்கிறவங்க சிரிப்பாங்க! என்ன பண்றது இப்போ?’ என யோசித்துக் கொண்டிருந்தாள்.
தன் வீட்டு வாசலில் கோலம் போட வந்தவன், கையில் அலைப்பேசி வைத்துக் கொண்டு கோலத்தையும் அலைபேசியையும் மாறிப் மாறிப் பார்த்துக் கொண்டு ஒன்னும் புரியாமல் தலையை சொரிந்து கொண்டிருக்கும் சம்ருதியை பார்க்க இவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
“என்ன டாக்டர் மேடம் ஸ்கேன்ல பார்க்குற உடல் உறுப்பு போல வரைஞ்சு வச்சிருக்கீங்க! எப்பவும் அதே நினைப்பு தானா?” என அவளை நக்கலடித்தான்.
அவனை முறைத்தவள், கோலத்தை அழித்து விட்டு மீண்டும் அலைபேசியில் வேறு கோலத்தை பார்த்தாள்.
“என்ன இப்படி பார்த்து பார்த்து இன்னைக்கி முழுக்க இங்கே இருக்க போறீங்களா மேடம் ?” எனக் கேட்க அவளிடம் பதில் இல்லை பதிலாக முறைக்க தான் செய்தாள்.
“எந்திரிங்க டாக்டர் மேடம் நான் சொல்லி தர்றேன்..” என்று மீண்டும் நீர் தெளிச்சி சுத்தம் செய்தவன், அவளுக்கு கோலம் போட சொல்லிக் கொடுத்தான்.
முதலில் எதிரே அமர்ந்து சொன்னான். பின் பக்கவாட்டில் அமர்ந்து சொல்லிக் கொடுத்தான்.
இப்போது நெருங்கி அமர்ந்து முதன் முதலாக குழந்தைக்கு பென்சிலை பிடித்து எழுத சொல்லிக்கொடுப்பது போல, கோலப்பொடியை எவ்வாறு கையில் எடுத்து பிடித்துக் கொண்டு கோலம் போட வேண்டும் என்று அவள் கைப்பிடித்து சொல்லிக் கொடுத்தான்.
மின்சாரத்தை தொடாமலே தேகத்தில் ஊடுருவது போல அவள் தேகம் சிலிர்த்தது.
அவள் மணிக்கட்டை பிடித்துக்கொண்டு புள்ளிகளுக்கு நடுவே பட்டும் படாமல் கம்பிகளை இழுத்து கோலத்தை முடித்திருந்தான்.
ஆனால், அவளது கவனம் அவன் மீது தான் இருந்தது!
“திரும்ப திரும்ப கோலத்தை அழிச்சுட்டு உங்களுக்கு சொல்லி கொடுக்க முடியாது டாக்டர் மேடம். உங்க கவனம் எங்க இருக்கு?” என கணக்கு வாத்தியாரை போல கறாராக பேசி விட்டு நிமிர்ந்தவன் அவள் விழிகளை பார்த்தன.
நான்கு விழிகளும் சிக்கிக் கொண்டன!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
8
+1
+1
