
நீண்ட சாலையில் இரண்டு பக்கமும் கூச்சலிட்டபடி இளைஞர்கள் நின்று கொண்டிருக்க, அதீத எடையுள்ள வண்டியில் ஜம்பமாய் அமர்ந்து ஓட்டி வந்தவன் தன்னிரு கால்களை உயர்த்தி கணைக்கும் குதிரை போல, முன் சக்கரத்தை உயர்த்திப் பிடித்து நிறுத்தினான்.
அதை கண்ட சம்ருதியும், அகரனும் வாயை பிளந்து பார்த்தனர்.
முன் சக்கரத்தை ஊண்டி, பின் சக்கரத்தை உயர்த்தி அப்படியே சுழற்றினான். அவனது அழுத்திற்கு இசைந்து கொடுப்பது போல அவ்வண்டியும் சுழன்று கொண்டிருந்தது!
இளைஞர்களின் உற்சாக கூச்சல்கள் அவனுக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்க, தன்னால் முயன்ற வரையில் வண்டியில் விதவிதமான சாகசங்களை செய்து காண்பித்து அசத்தியிருந்தான் மாறன்.
மறைவாக நின்றிருந்த இருவரும் அதை விழியகற்றாமல் கண்டனர். அகரன், மாறன் காட்டும் சாகசத்தை சம்ருதியின் அலைபேசியில் சேமித்து வைத்தான்.
“பெரிய சர்க்கஸ்காரனா இருப்பான் போலையேடா!”
“சர்க்கஸ்காரனா! ஏ சம்மு? இவரு பெரிய பைக் ரைடர்! நைட் ஹீரோனா எத்தனை பேரோட ஃபேவரைட் ஹீரோ தெரியுமா? இன்ஸ்டால இவருக்கு எத்தனை ஃபேன் பேஜ் இருக்கு தெரியுமா? அதுல கேர்ல்ஸ் அதிகம்.
இவருக்கு தனியா வாட்ஸ்அப் சேனல் இருக்கு. இவங்க சொல்ற டைமிங்ல தான் எல்லாரும் ஒன்னு கூடுவாங்க. லேடீஸ் வரக்கூடாது ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ். என் பிரண்ட் கூட இங்க தான் இருப்பான். என்னையும் கூப்பிட்டான். நான் தான் வீட்டுக்கு பயந்துட்டு வரலனு சொல்லிட்டேன்.”
“ம்…” என புருவம் உயர்த்தி அவனை முறைத்தவள், “ரொம்ப தான் பெருமை இந்த எருமைக்கு. இவனால எத்தனை குடும்பங்களும் எத்தனை அம்மாக்களும் எத்தனை பசங்களும் பாதிக்கப்படுறாங்க தெரியுமா உனக்கு? இவன் பண்றதே பைத்தியகாரத்தனம் இவனுக்கு ஃபேனுன்ற பைத்தியங்கள் வேற.
லைஃப பார்க்காம இப்படி ஹீரோ ஒர்ஷிப் அவசியமா டா? இதுல எத்தனை பேர் படிக்கிற பசங்க இருப்பாங்க? எத்தனை பேர் படிச்சி முடிச்சிட்டு வேலை இல்லாம சுத்திட்டு இருப்பானுங்க? இவனுங்க பின்னாடி இருக்க குடும்பத்தை இவன் நினைச்சு பார்ப்பானா? இவனை கொண்டாடிட்டு இருக்கானுங்க இவனுங்க குடும்பம் என்ன கதியில இருக்கோ?” என ஆவேசமாக பேசிட, அமைதியாக இருந்தான் அகரன்.
“ச்சே! வாடா போலாம் எனக்கு இதெல்லாம் பாக்க பாக்க வெறியாவுது இவனுங்க எல்லாரையும் விஷ ஊசி போட்டு கொல்லனும் தோணுது! முக்கியமா இவனை..” என்று மாறனை கை காண்பித்து சொன்னாள்.
“இவனை தான் முதல்ல கொல்லணும்! பகல்ல ஒரு வேஷம் ராத்திரில ஒரு வேஷம்னு சுத்திட்டு இருக்கான். இதுல இவன் அம்மா வேற தினமும் சுப்ரபாதம் மாதிரி என் புள்ள நல்லவன் வல்லவன்னுட்டு இருக்கு.
இந்த அயோக்கியத்தனத்தை அத்தாம்மாக்கு குறும்படமா போட்டு காட்டி அதோட வாயையும் சேர்த்து அடைக்கணும் டா!” என ஆவேசமாக அவளும் கத்திப்பேச, அகரனோ அக்கம்பக்கம் பார்த்துவிட்டு அவளது வாயை பொத்தினான்.
“முதல்ல நாம இங்க இருக்கிறது ஷேஃப் இல்ல, வா வீட்டுக்கு போகலாம்..” என்றவன் சம்ருதியை அங்கிருந்து இழுத்துச்சென்றான்.
இதுவரை தன்னை பற்றி மறைத்து வைத்த ரகசியம் கசிந்தது கூட தெரியாமல், தன் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்துக் கொண்டிருந்தான் மாறன்!
சம்ருதியும் அகரனும் இல்லம் வந்தனர். அவளை அவள் வீட்டில் இறக்கி விட்டவன், வண்டியை எடுக்காமல் அவளிடம் சந்தேகமாய், “நாளைக்கு நம்ம எடுத்த வீடியோவை அவங்க அம்மா கிட்ட போட்டு காட்டிவீயா சம்மு?” என்றான்.
“அப்படி தான் நானும் நினைச்சேன். ஆனா வர வழியில எல்லாம் யோசிச்சேன். அவங்க அம்மா கிட்ட பேசறத விட மாறன் கிட்ட இதைப்பத்தி முதல்ல பேசணும். இது இன்னொருத்தரோட பெர்சனல் நாம தலையிட்டு அது அவனுக்கு மிகப்பெரிய பாதிப்பு எதுவும் வந்திடக்கூடாது.
குறிப்பாக அவங்க அம்மாக்கு! அவங்களுக்கு ஹெல்த் இஸுஸ் இருக்கு இதை அவங்க கிட்ட சொல்லி அதனால எதுவும் ப்ராப்ளம் வந்தா? சோ, இதை பொறுமையா தான் ஹேண்டில் பண்ணனும் நான் பார்த்துக்கிறேன்..” என்றதுமே அவன் முகத்திலும் சம்ருதியை நினைத்து சிறு கர்வம் தோன்றியது.
“ஆங்.. அப்புறம்.. நாம பார்த்த விஷயத்தை உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கெத்து காட்டுறேன்னு சொல்லிட்டு இருக்காத! நாம பார்த்தத பத்தி வெளிய நீ மூச்சு விடக் கூடாது புரிஞ்சதா?”என மிரட்டினாள்.
“அதைப்பத்தி யோசிக்க கூட மாட்டேன் போதுமா?”
“இந்த விஷயம் லீக் ஆச்சி.. அதுவும் உன்னாலனு தெரிஞ்சது.. மவனே உன் விஷயமெல்லாம் பிரேக்கிங் நியூஸ்ல வந்திடும் ஜாக்கிரதை!” என மிரட்ட, பெரிய கும்பிடு ஒன்றை போட்டு அங்கிருந்துச் சென்றான்.
இவளும் மெதுவாக கதவை திறந்து உள்ளே நுழைய, கூடத்தில் தன்னை மறந்து உறங்கிக்கொண்டிருந்தார் வைத்தியநாதன். அவர் அருகே சென்று படுத்துக் கொண்டாள்.
பகலவன் சிறப்பாக தன் பணியை செவ்வனே தொடங்கி வைக்க, மக்களும் அவன் வழியை பின்பற்றி அக்காலைப்பொழுதில் அவரவர் வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர்.
பாதி இரவில் தூங்கி அதிகாலையில் எழுந்து கோலத்தில் ஆரம்பித்து, சமையலறையில் சமையல் வேலை என அனைத்தையும் முடித்திருந்தான் மாறன்.
வேலை செய்யும் மகனின் முகத்தில் சோர்வை கண்ட கோமதி அவன் அருகே வந்து, “என்ன தம்பி இன்னும் உனக்கு இந்த வீடு பழகலையா?” என பணிவாக கேட்டார்.
“ஏன் மதி அப்படி கேக்குற?”
“கண்ணுலாம் சிவந்திருக்கேப்பா அதான் கேட்டேன்..” எனவும் முழித்தவன் சமாளிப்பாக சிரித்துக்கொண்டே, “ஆமா மதி இன்னும் இந்த வீடு எனக்கு புதுசா தான் இருக்கு தூக்கம் வர கொஞ்சம் லேட்டாகுது. போக போக பழகிடும்!” என்றான்.
“அதுவரைக்கும் நான் எழுந்து சமைக்கட்டுமா தம்பி?”
“வேணாம் மதி! அதெல்லாம் சீக்கிரமா சரியாகிடும் எனக்கு ஒன்னுமில்ல. கடையில வேலை இல்லைன்னா, கொஞ்சநேரம் தூங்கினா சரியாகிடும். இதுக்காக நீ சீக்கிரமா எந்திருக்கணும் இல்லை நானே எல்லாத்தையும் பார்த்துக்கிறேன். என்னைப்பத்தி கவலைபடாம இரு..” என்று அவரை சமாதானம் செய்து, அவர் வார்த்த கோதுமை தோசையை சாம்பாருடன் ருசித்து சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்ல வெளியே வந்தான்.
அவரும் பத்திரம் வாசிக்க அவன் பின்னே வந்தார். வண்டி வாசலுக்கு கொண்டு வந்து உதைத்து அதை உயிர்ப்பித்தவன் தாயிடம் சொல்லிக்கொண்டு திரும்பிட, அங்கே பெட்ரோல் இல்லாமல் சம்ருதியின் வண்டி நகர மாட்டேன் என்று அடம்பிடித்தது!
“என்ன பாப்பா வண்டியில பெட்ரோல் இருக்கா? இல்லையா? பார்க்கிறது இல்லையா? நேரமாச்சி வேற சொல்லிட்டு இருக்க எப்படி போவ?” என வைத்தி அக்கறையாக கேட்டார்.
“மறந்துட்டேன்ப்பா.. இன்னைக்கி சீஃப் டாக்டர் வேற வர்றார் சீக்கிரம் போகலைன்னா திட்டுவாரு.. இப்போ என்ன பண்றது?” என நேரம் பார்த்து காலை வாரின வண்டிக்கு பல அர்ச்சனைகளை தந்ததும் இல்லாமல் ஒரு எத்து வேறு விட்டாள்.
சம்ருதியும் வைத்தியும் வண்டியை பார்த்துக்கொண்டு நிற்பதை கண்ட மாறன், “என்ன பாட்னர் வண்டிக்கு என்னாச்சி?” என்றான்.
“பெட்ரோல் இல்லப்பா! பாப்பா வேற சீக்கிரமா போகணும் சொல்லிட்டு இருக்கா என்ன பண்றது தெரியாம நிக்கிறோம்..”
“ஓ..” என்றவன் தாயை பார்த்து விட்டு, “நான் வேணும்னா உங்க பொண்ண ட்ராப் பண்ணவா பாட்னர்?”
அவரோ தயங்கி விட்டு கோமதியை தான் பார்த்தார். மகனும் இப்படி கேட்பான் என்று எதிர்பாராதவர் வேறு வழியின்றி, “பரவயில்லைண்ணே தம்பியே உங்க பொன்னை கூட்டிட்டு போகட்டும்..” என்றார் கஷ்டப்பட்டு சிரிப்பை வரவழைத்தபடி.
அவரும் சம்ருதியை பார்த்தார்
“சரிப்பா நான் அவர் கூடவே போறேன். நீ பார்த்து இருந்துக்க நேரத்துக்கு சாப்பிடு நான் வர்றேன்..” என்று அவன் பின்னே ஒருபக்கமாக ஏறிக்கொண்டவள் கம்பியை தான் பிடித்தாள்.
கோமதியும் அதை தான் எதிர்பார்த்தார்.
“வேகமாக போகணும் வேகத்தை கூட்டி போகாத தம்பி!” என உள்ளுக்குள் பதைக்கும் மனதை மறைத்தபடி சொன்னார்.
அதற்கு சம்ருதியோ அவர் பக்கம் திரும்பியவள், “உங்க புள்ளை நைட்ல தான் வேகத்தை கூட்டுவார் பகல்ல இல்ல ஆன்டி..” என்றதும் சட்டென அவளை திரும்பி ஒற்றை புருவத்தை உயர்த்தி பார்த்தான் மாறன்!
அவளோ இதழை சுழற்றி நக்கலாக சிரித்தாள்.
“நீ என்ன சொல்ல வர்ற?” என புரியாமல் மதி கேட்டிட, “ஆங்.. அது.. நைட்டானாலும் பரவாயில்லை மெதுவாக போங்க சொல்றேன்!” என இளித்து வைக்க அவரோ முறைத்து வைத்தார்.
இரு பெரியவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பி இருந்தார்கள் சிறியவர்கள். வரும் வழியெல்லாம் அவன் குழப்பத்துடன் வர, அவளோ வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள்.
இடையில் சிக்னலில் நின்றிருக்க, எதிர்திசையில் கே.டி.எம் பைக்கை வைத்து ஒருவன் ஏவுகணை போல் சர்ரென்று மகிழ்ந்து, பேருந்து என்று பாராமல் உள்ளே நுழைந்து போவதை கண்டு பக்கத்தில் தலையில் அடித்துக்கொண்டார் பெரியவர் ஒருவர்.
“எப்படி போறான் பாருங்களேன்! அவசரமா போய் என்னத்தை கிழிக்கப்போறான்? இந்த காலத்து பெத்தவங்களும் சரியில்லை பசங்களுக்கும் சரியில்ல! கொஞ்சம் மிஸ்ஸானாலும் வீல்ல மாட்டி செத்திருப்பான்.
ஆபாத்துனு தெரிஞ்சும் ஓட்டிட்டு போறவனுக்கு உயிரோட மதிப்பு எங்க தெரிய போகுது? இந்த மாதிரி வண்டி வச்சிருக்கவனுங்க லைசன்ஸ், வண்டியையும் பிடுங்குனா தான் திருந்துவானுங்க..” என்று திட்டினார்.
மாறனுக்கோ புரையேறியது, சம்ருதி அவனது தலைக்கவசத்தின் மீது கையை வைத்து தட்டினாள். திரும்பி அவளை தான் பார்த்தான்.
“உன்னை திட்டனது போல இருக்கா என்ன? புரையேறுது!”
அவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. சிக்னல் விழுந்ததும் வண்டியை கிளிப்பியவன் நேராக சென்று அவளது மருத்துவமனையில் தான் நிறுத்தினான்.
அவளும், “தேங்க்ஸ்” என்று உள்ளே செல்ல, “சம்ருதி!” என அவளை முதல்முறையாக பெயரை சொல்லி அழைத்திருந்தான்.
திரும்பியவள், “என்ன?” என்று கைகளை கட்டிக்கொண்டு கேட்டாள்.
“வண்டியில ஏறுனதுல இருந்தே பொடிவச்சி பேசுறது போல் இருக்கு! என்ன பிரச்சனை உனக்கு?”
“ஓ.. பொடி வச்சி பேசுறதால உங்களுக்கு புரியலையா மாறன்? நான் வேணும்னா டைரக்டா பேசட்டுமா? இல்ல வேணாம் வீடியோ காட்டட்டுமா?” என நக்கலாக பேசிக்கொண்டே தனது அலைபேசியில் எடுத்த வீடியோவை காட்டினாள்.
அதை கண்டதும் அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை அவனுக்கு!
“இ..து” என இழுக்க..
“இ..இது வேற ஒன்னுமில்ல நீங்க செஞ்ச சாகசம் தான்!” என்றதுமே அவனுக்கு நெஞ்சில் நீர் வற்றிப்போனது.
“என்ன ஹீரோ அதிர்ச்சியில் பேச்சு வரலையோ?” என கன்னத்தில் கைவைத்து கேட்டிட, எச்சில் விழுங்க நின்றான்!
“நீ.. நீ.. ப்ச்.. உனக்கு எப்படி இந்த வீடியோ கிடைச்சது?”
“சூட் பண்ணதே நான் தானே!”
“அப்படினா?”
“அப்படினா நேத்து நீங்க பண்ண சாகசத்தை கண் குளிர பார்த்து படம் பிடித்தது நான் தான் சொல்றேன் புரிஞ்சதா?”
“அப்போ என்னை நீ வேவ் பார்த்திருக்க? வெட்கமா இல்லை உனக்கு? நான் என்ன பண்ணா உனக்கு என்ன? எதுக்கு இப்படி சீப்பா பிஹேவ் பண்ற?”
“ஹே மைண்ட் யுவர் வேர்ட்ஸ்! யாரு இங்க சீப்பா பிகேவ் பண்றா நானா?”
“பின்ன நீ இல்லாம வேற யாரு? அடுத்தவங்க பெர்சனல்ல வீடியோவா எடுக்கிற உன் கேரக்டர சீப் மெண்டலிட்டினு சொல்லாம வேற என்ன சொல்ல?”
“ஓ.. பகல்ல நல்லவன் வேஷம் போட்டு ஊரை ஏமாத்திட்டு, நைட் இப்படியொரு வேலை பார்க்கிற நீ என்னைய சொல்றியா?”
“நான் என்ன பண்ணா உனக்கு என்ன?”
“நீ பிராடு வேலை பார்ப்ப, உங்க அம்மா நல்லவனு புகழ்வாங்க அத கேட்டு நான் சும்மா இருக்கணுமா?”
“பிராடா! அப்படி என்ன பிராடு வேலை பார்த்தேன் நான்? நைட் வெளிய போய் தப்பான தொழில் பண்ணேனா? திருடினேனா? பப்புக்கு போய் குடிச்சி கூத்தடிச்சேனா? இல்லையே எனக்கு பிடிச்சதை பண்றேன் அதுல என்ன தப்பு இருக்கு?”
“அப்போ எதுக்கு இந்த நல்லவன் வேஷம் எல்லாம்?”
“லுக்! நான் ஒன்னும் நல்லவன் வேஷம் போடல! நான் எப்பவும் போல தான் இருக்கேன்..”
“ஓ.. அப்போ மிட்நைட் சாகசம் பண்றது உங்களுக்கு கேஸ்வல் ஒர்க்ல?” என நக்கலாக கேட்டாள்.
“ஹே லிஸன்! என் பெர்சனல்ல நீ எதுக்கு தலையிடுற? நான் என்ன பண்ணா உனக்கு என்ன?”
“உன்னை முன்னுதாரணம் காட்டில அந்த சின்ன பசங்களை அவங்க அம்மாங்க திட்றாங்க! இதை அவங்க அம்மாங்க கிட்ட காட்டினா உன்னை கம்பேர் பண்ணி திட்ட மாட்டாங்கல..” என்றதுமே அவனுக்கு ஒருநொடி இதயம் நின்று துடித்தது.
“எனக்கு இது தேவை இல்லாதது தான். ஆனா, உங்க அம்மா வார்த்தைக்கு வார்த்தை என் புள்ள நல்லவன் வல்லவன் தினமும் எல்லார் கிட்டயும் திருப்புகழ் பாடுறாங்க பாரேன் அது தான் இரிட்டேடிங்கா இருக்கு.
அதான் அவங்க வாயடைக்க
உங்க புள்ளையோட திறமை என்னன்னு பாருங்க காட்ட தான் எடுத்தேன்!” என சொல்லவும் அவனுக்கு சர்வமும் அடங்கிப்போக அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்!
“இந்த வீட்டுக்கு வந்த முதல் நாளே உன்னை அப்படி பாராட்டீனாங்க! ஆனா நீ ஸ்ட்ரீட் டாக்ஸ்க்கு பிஸ்கெட் போடுற, அப்படியே தெருவெல்லாம் வலம் வந்து எதையோ நோட் பண்ணுன, எல்லாத்தையும் பார்த்தேன் அப்பவே உன் மேலே எனக்கு ஒரு டவுட்! அது இப்போ கிளியர் ஆச்சி. நீ என்னென்ன வேலை பார்க்குறன்னு எல்லாருக்கும் காட்ட வேணாம்!”
“நீ பண்றது எப்படி இருக்குனு தெரியுமா? அடுத்தவங்க பெட்ரூம் எட்டிப்பார்த்து வீடியோ எடுத்து மிரட்டுவது போல இருக்கு! உனக்கு அசிங்கமா இல்லையா? நான் யாரையும் என்னை முன்னுதாரணமா காட்ட சொல்லல, அவங்க பண்ணா அதுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்?
நான் என்னோட வாடிக்கையான விஷயங்களை தான் பண்றேன். அது உங்களுக்கு உறுத்துதுன்னா, தப்பு உங்க பக்கம் தான் இருக்கு! அதை திருத்திக்கிறது உங்க கையில தான் இருக்கு. அதை செய்யாம அடுத்தவன் லைஃப் என்ன பண்றான் அவன் பெர்சனல்ல எட்டிப் பார்க்கிறது அசிங்கமா இல்ல?”
“போதும் நிறுத்து! ரொம்ப நல்லவன் போல பேசாத.. உங்க அம்மாக்கு தெரியாம மறைச்சு பண்றதுலே தெரியல உன் யோக்கியம் என்னன்னு! நீ என்னை சொல்றியா? இங்க பாரு எனக்கும் உனக்கும் எந்த பகையும் வஞ்சகமும் கோபமும் இல்லை.
இதை வச்சி உன் கிட்ட பணம் கேட்டு மிரட்ட போறதும் இல்ல! ஆனா, இனி உன் அம்மா உன்னை எங்கேயும் புகழக்கூடாது! இன்னொன்னு உன்னை கம்பேர் பண்ணி என் பசங்களை திட்டக் கூடாது. மீறி நடந்ததுன்னா குறும்படமா உங்க அம்மா கிட்ட போட்டுக் காட்டுவேன்!”
“ஹேய் என்ன மெரட்டுறயா?”
“அப்படியும்.. வேணாம் வச்சுக்கலாம்?”
“உன் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் வேணும்ன்னா என் அம்மா கிட்ட போட்டுக்காட்டு. அவங்ககிட்ட நான் இல்லைன்னு அடிச்சி சொல்லி நம்ப வச்சிடுவேன். என்னை விட உன்னை நம்பிடுவாங்களா என்ன?” என இரண்டு புருவங்களை உயர்த்தி கேட்டான்.
“அரே நைட் ஹீரோ! சம்ருதி என்ன ஸ்கூல் பிள்ளைங்க போல அம்மா கிட்ட சொல்லிடுவேன் மிரட்டுற சின்ன பொண்ணு நினைச்சியா? வில்லி டா நானு! உன்னை டேக் பண்ணி இது தான் நீங்க பார்க்க துடிச்ச நைட் ஹீரோ இந்த வீடியோவ இன்ஸ்டலா அப்லோட் பண்ணிடுவேன்.
உன்னோட சேர்த்து டி.என் போலீஸ்க்கு ஒரு டேக் போட்டு நைட் இப்படி ஒரு விஷயம் நடக்குது உங்க கண்ணுக்கு தெரியலையா? கேப்ஷன் போட்டு போஸ்ட் போட்டா மவனே நீ காலி டா! பார்க்கிறீயா?” என தெனாவெட்டாக பேசினாள்.
அதை அவளிடம் எதிர்பாராதவன்,
“ஓகே ஓகே! நமக்குள்ள பேசிக்கலாம். இப்போ நான் என்ன பண்ணணும்?” என இறங்கி வந்தான்.
“நான் முன்னமே சொன்னது தான். உன்னைப்பத்தி உங்க அம்மா புகழக்கூடாது. அப்புறம் உன்னை கம்பேர் பண்ணி பசங்களை திட்டக்கூடாது. இப்போதைக்கு இது தான் வேற எதுவும் இல்லை..”
“ஒகே இனி இந்த ரெண்டுமே நடக்காது அதுக்கு நான் கியாரண்டி. தயவு செய்து வீடியோ லீக் பண்ணாத ப்ளீஸ்..”
“அரே! சம்ருதி சொன்னதே செய்தா போதும் அவளும் கொடுத்த வாக்க காப்பத்துவா?” என வாயில் பீடாவை குதப்பி துப்பி தமிழை கொல்லும் வடக்கர்களை போல பேச, இவனோ “ரொம்ப தான்..” என சலித்துக்கொண்டான்.
“வர்றேன் சாரே!” என சலியூட் அடித்து விட்டு உள்ளே சென்றவளின் பின்னே அவள் கழுத்தை நெரிப்பது போல கைகளை கொண்டு சென்று பின் ஒன்னும் செய்ய முடியாமல் கீழே போட்டான்.
தன் குடும்பி அவள் கையில் மாட்டிக் கொண்ட கோபத்தில் தரையில் உதைத்தான். அதே கோபத்தோடு அங்கிருந்து விடைபெற்று கடைக்குச் சென்றான்.
“கோமதி!” என தன் கடைக்கு தாயின் பெயரை வைத்து அன்னையின் மனதை நெகிழ வைத்திருந்தான் வெற்றிமாறன்.
டிப்ளமோ மெக்கானிக் முடித்து விட்டு மேற்கொண்டு பொறியியல் படிக்க வசதியில்லாமல் மெக்கானிக் கடையில் ஐந்து வருடங்களாக வேலை பார்த்து வேலைகளும் கற்றுக்கொண்டான்.
ஆள் பழக்கங்களை உருவாக்கிக்கொண்டும், இருசக்கர வாகனத்தை பழுது பார்க்கும் சிறுகடையாக தொடங்கியவன், அடுத்த ஐந்து ஆண்டில் அதே இடத்தில் தன் கடையை விரிவாக்கினான்.
மகிழுந்துகளை பழுது பார்ப்பதோடு வாங்கி விற்கும் தொழிலும் சேர்த்து பார்க்க துவங்கி லாபம் பார்க்க ஆரம்பித்து விட்டான்.
அவர்களுக்கென்று இருந்த ஒரே பிடிப்பு அவர்களது சொந்த வீடு தான்.
மாறனின் தந்தை இறந்த பின் அவரது நினைவால் தாய் வாட, அங்கிருக்காமல் அந்த வீட்டை வாடகைக்கு விட்டு இவர்கள் ஒத்திக்கு வீடு எடுத்து தங்கியிருக்கிறார்கள்.
வீட்டு பத்திரத்தை வைத்து கடன் வாங்கி தான் கடையை ஆரம்பித்தான்.
அதன் பின் அவன் ஈட்டிய லாபத்தை வைத்து, வீட்டு பாத்திரத்தையும் திருப்பியதோடு அவன் கடன் வைத்திருந்த இடத்தையும் சொந்தமாக வாங்கி விட்டான்.
போட்டி, பொறாமை, வஞ்சகம், வீழ்ச்சி என இறக்கங்கள் பல கண்டாலும் அவன் வாழ்வில் ஏற்றங்களும் உண்டு.
அதோடு அவனுக்கே அவனுக்கு உண்டான தனிப்பட்ட ஆசையான, சிறந்த பைக் ரைடராவதென சின்னவயசில் உண்டான
அவனது தனிப்பட்ட ஆசையை தாயிடம் மறைத்து வைத்து நிறைவேற்ற துடிக்கிறான்.
இதுவரை அவனுக்கு எந்த பிரச்சனையும் வந்தது இல்லை!
ஆனால், சம்ருதியால் அவனது தனிப்பட்ட ஆசைக்கு இடையூறு வரும் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை.
அவளிடமிருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசனையிலும் இப்படி மாட்டிக்கொண்டதை எண்ணி தன் மீதுள்ள கோபத்தோடும் கடைக்கு வந்தான்.
பெரிய காருக்கு அடியில் படுத்துக் கொண்டு பழுது பார்த்து கொண்டிருந்த விஷால் இவன் வந்ததை கவனித்து விட்டு மீண்டும் வேலையை தொடர, கோபமாக உள்ளே வந்த மாறன், கை முஷ்டியை இறுக்கி அந்தக் கோபத்தை சுவரில் காட்டினான்.
கடையில் வேலை செய்பவர்கள் வைத்த காலை வணக்கத்திற்கு கூட பதில் கூறாது கோபமாக உள்ளே சென்றவனை விஷாலிடம் சென்று வேலை செய்யும் ஒருவன் முறையிட,
அவனும் வேலையை முடித்து விட்டு மாறன் அருகே அவனை நோட்டம் விட்டபடி வந்தான்.
“என்ன டா ஆச்சி உனக்கு பசங்க கிட்ட கூட நீ சரியா பேசலனு சொன்னாங்க. ஏன்டா கோபமா இருக்க?” என்றவன் அவனருகே அமர்ந்து கேட்டான் விஷால்.
மாறானோ அவனிடம், “உன்கிட்ட தனியா பேசணும் வா..” என அவர்கள் இருவர் மட்டுமே உபயோகிக்கும் பிரத்தியேக அறைக்கு அவனை அழைத்துச்சென்றான்.
“என்ன டா ஆச்சி?”
“நான் தான் நைட் ஹீரோன்னு எங்க வீட்டுக்கு எதிர் வீட்டுப்பொண்ணுக்கு தெரிஞ்சு போச்சுடா!”
“எப்படி டா?”
அவனும் நடந்ததை சொன்னான்.
“வீடியோவை உங்க அம்மாகிட்ட போட்டு காட்டுவேன் சொல்லி மிரட்டுறாளா?”
“ஆமா மச்சி!”
“என்ன டா பணம் எதுவும் கேட்டா கொடுத்து வீடியோ வாங்கிடு டா.”
“பணம் கேட்டா கூட கொடுத்திடலாம் டா! அவ என்ன சொல்லி மிரட்டுறா தெரியுமா?” என அதையும் சொல்ல, விஷாலுக்கு சிரிப்பு வந்தது. மாறனின் முறைப்பில் அடக்கினான்.
“நான் கூட பணம் தான் கேட்பானு பார்த்தா, இவ என்னடா சின்ன விஷயத்துக்கு இவ்வளவு ரிஸ்க் எடுத்து உன்னை மெரட்டுறா? இன்ட்ரெஸ்டிங்கான கேரக்டரா இருப்பா போலயே..” என்று அவளை புகழ்ந்தவனின் வாய் கப்சிப்பென மூடியது.
“சரி! இப்போ என்ன பண்ணலாம்ன்னு இருக்க?”
“காம்பெடிஷன்ல கலந்துக்கிட்டு கப் ஜெயிக்கிற வரைக்கும் இந்த நைட் மீட்டிங் கொஞ்ச நாளைக்கு வேணாம்னு நினைக்கிறேன். கப்ப ஜெயிச்சிட்டா போதும் அதுக்கு அப்புறம் அந்த பல்லிக்கு இருக்கு..” என பல்லைக் கடித்தான். விஷாலும் அதை ஆமோதித்தான்.
***
மாறன் சொன்னபடியே இரவில் கூடி தனது சாகசத்தை ரசிகர்களிடம் வெளிப்படுத்துவதை கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தி வைத்து விட்டான். ரசிகர்களிடம் ஏதோ சொல்லி சமாளித்திருந்தார்கள்.
கோமதியுடன் யார் பேச வந்தாலும் மகனைப்பற்றி புகழ்ந்து பக்கம் பக்கமாக பேச, இவனுக்கே சலிப்பாகி விட்டது.
கோமதி அருகே அமர்ந்தவன், “மதி! இது மாதிரி வரவங்க போறவங்க கிட்ட என்னை புகழ்ந்து பேசிட்டே இருந்தா, என்னை கண்ணு வச்சிட மாட்டாங்களா? அப்புறம் எனக்கு ஏதாவது ஆயிடுச்சினா என்ன பண்ணுவ நீ? உனக்கு நான் மட்டும் தானே இருக்கேன்.
ஊர்ல இருக்க கண்ணெல்லாம் நல்ல கண்ணு நினைச்சிட்டு இருக்காத! நீ என்னை புகழ்ந்து, அவங்க கொள்ளிக்கண்ண என் மேலே வச்சி நல்லா இருக்க எனக்கு ஏதாவது ஆகிட போகுது!” என்றதுமே பதறிப் போனார்.
“ஐயோ! வேணாம் தம்பி! எனக்கு நீ தான் முக்கியம். இனி உன்னை பத்தி யார் கிட்டயும் பேசவே மாட்டேன்!” என்றவர் அன்றிரவே மகனுக்கு சுத்திப்போட்டார்.
அன்றிலிருந்து அவர் மாறனின் புகழை எங்கும் பாடவில்லை. சம்ருதிக்கே அது ஆச்சர்யமாக இருந்தது.
அது மட்டுமில்லாமல் அவனை வைத்து ஒப்பிட்டு குழந்தைகளை திட்டும் தாய்மார்களை கூட மாற்றி விட்டான்.
விடுமுறை நாளில் கடைத்தெருவில் மாறனை வைத்து குட்டி சதீஷை அவரது அன்னை திட்டவும் மாறனோ அவரிடம், “என்னை போய் குழந்தைகளோட கம்பேர் பண்றீங்களா கா? எனக்கு முப்பது வயசு. அவனுக்கு ஆறு கூட ஆகல! இவனும் நானும் ஒண்ணா? நான் பார்க்கிற வேலைய இவன் பார்க்க முடியுமா?
கொஞ்சமாச்சும் யோசிக்க வேணாமா? இப்படி குழந்தைகளை இன்னொருத்தரை வச்சி கம்பேர் பண்ணா, பாதிப்பு உங்க குழந்தைக்கு தான். அவன் கிட்ட நீங்க உன்னை போல யாரும் இல்லைன்னு மோட்டிவேட் பண்ணனும் அவனை போல நீ இல்லைனு டிமோட்டிவேட் பண்ணாதீங்க!
அப்புறம் உங்க புள்ளை அவனாகவும் இருக்க முடியாம இன்னொருத்தனை போல இருக்க முடியாம எப்படி இருக்கணும்னு தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டு பைத்தியமாவே ஆகிடுவான். உங்க குழந்தைக்கு அது தேவையா நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!” என்று அறிவுரை சொல்லிவிட்டு கடந்து விட, அதுவே பரவலாக எல்லா அம்மாக்களுக்கும் சென்று விட, மாறானோடு ஒப்பிடுவதை குறைத்து விட்டனர்.
குழந்தைகள் சம்ருதியிடம் பகிர்ந்து மகிழ்ந்தார்கள்.
“பரவாயில்ல பையன் நம்ம மிரட்டலுக்கு பயந்து வேலை பார்த்திருக்கான். இப்போதைக்கு இது போதும்!” என்று உள்ளுக்குள் நினைத்துககொண்டாள்.
மாறனோ மூச்சு விட்டு அமரும் முன் அடுத்த பிரச்சனை உண்டானது அவனது அன்னையால்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
                +1
	                                1        
	+1
	                                6        
	+1
	        	+1
	        	