

அத்தியாயம் 23
மயில் குமரன் இல்லத்திலிருந்து கிளம்பியவர்கள் மகிழுந்தில் தங்களது வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அர்ச்சனா பழைய நினைவுகளில் மூழ்கியவளாய் அர்ஜூன் தன் மீது வைத்திருக்கும் காதலை நினைத்து பூரித்த மனத்துடன் மகிழுந்தில் முன்னிருக்கையில் அமர்ந்திருக்க, அர்ஜூனோ இளமயில் நிவேதாவைக் குறித்துக் கூறியதைப் பற்றிச் சிந்திந்தவாறு வண்டியை ஓட்டியிருந்தான்.
அர்ச்சனாவைப் பற்றி இளங்குமரனும் இளமயிலும் உரைத்தது எல்லாம் அவனின் மூளையில் பின்னே சென்றிருந்தன.
மகளின் மீது பேரன்பை வைத்திருக்கும் தந்தையாய் அவளின் நலனை எண்ணி கவலைக் கொண்டது அவன் மனம்.
நிவேதாவோ இளமயிலை மனத்தோடு திட்டியவாறு பயணித்திருந்தாள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையுடன் வீட்டை வந்தடைந்தனர்.
சிவகணேசன் மகிழுந்திலேயே உறங்கியிருக்க, அவனைத் தூக்கிச் சென்றான் அர்ஜூன்.
அர்ச்சனா மாடியில் இருக்கும் தங்களது அறைக்குள் செல்ல, சிவகணேசனைத் தோளில் போட்டுத் தூக்கிக் கொண்டு வந்த அர்ஜூன், மாடியில் இருக்கும் பிள்ளைகளின் அறைக்குள் நுழைந்தான்.
சிவகணேசனைப் பிள்ளைகளின் அறையிலுள்ள கட்டிலில் படுக்க வைத்து விட்டு தலைக் கோதி நெற்றியில் முத்தமிட்டு விலகிய அர்ஜூன், நிவேதா கழிவறையில் இருந்து வருவதற்காகக் காத்திருந்தான்.
நிவேதா உடை மாற்றி விட்டு குளியலறையில் இருந்து வெளியே வந்ததும், அவளை அழைத்து அருகில் அமரப் பணித்தான்.
என்றும் இல்லாது புதிதாக அர்ஜூன் இவ்வாறு அவளை அழைத்து உட்காரச் சொல்லவும், உள்ளுக்குள் நடுங்கியது நிவேதாவுக்கு.
அர்ச்சனாவும் அர்ஜூனும் எந்தளவிற்குச் சுதந்திரம் கொடுக்கிறார்களோ அந்தளவிற்கு கண்டிப்பான பெற்றோர்களும் கூட! அர்ஜூனின் பார்வையிலேயே பிள்ளைகள் வாயை மூடிக் கொள்வர் ஆயினும் அர்ச்சனா அடித்தால் தான் அடங்குவர்.
அதனாலேயே அர்ஜூனின் பார்வையிலேயே பயம் தொற்றிக் கொண்டது நிவேதாவுக்கு.
‘இந்த மயிலு மேடம் அப்பாகிட்ட எதுவும் போட்டுக் கொடுத்துட்டாங்களா?’ என்று மனத்திற்குள் நினைத்தவளாய் நடுங்கிய மனத்தை மறைத்தவாறு அவனருகில் சென்று அமர்ந்தாள் நிவேதா.
மகளின் தலையைப் பாசத்துடன் கோதியவனாய், “படிப்புலாம் எப்படிப் போகுது நிவிமா? அடுத்த வருஷம் பப்ளிக் எக்ஸாம் வேற! வேற ஸ்கூல் எதுவும் மாத்தி விடவா? இங்கே டீச்சிங்லாம் நல்லா இருக்கா?” எனக் கேட்டான்.
“இங்கே எல்லாமே நல்லா இருக்குப்பா. அதுவுமில்லாம என்னோட ஃப்ரண்ட்ஸ்லாம் இங்கே தானே இருக்காங்க. அதனால இங்கேயே படிக்கிறேன்ப்பா” என்றாள் நிவேதா.
“ஹ்ம்ம் சரி! நீ ஏற்கனவே நல்லா படிக்கிற பொண்ணு தான். உனக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் சொல்றேன். உன்னை நினைச்சு நீயே பெருமைப்படுற மாதிரி உன்னோட டென்த் ரிசல்ட் இருக்கனும்டா” என்றான்.
“நிச்சயம்ப்பா! ஸ்கூல் ஃபர்ஸ்ட் தான்ப்பா என் டார்க்கெட்! கண்டிப்பா அச்சீவ் பண்ணுவேன்” கண்கள் ஒளிர திடமான குரலில் உரைத்தாள்.
“தட்ஸ் மை கேர்ள்” என்றவனாய் அவளின் முதுகில் தட்டிக் கொடுத்தவன், அவளின் கன்னத்தில் முத்தமிட்டு, “குட் நைட் நிவிமா” என்றான்.
அவள் படுத்து கண்களை மூடும் வரை பார்த்திருந்து விட்டு தான் அங்கிருந்து அகன்றான்.
‘மயிலு நிவியை எங்கே பார்த்திருப்பா? நிவியும் ஏன் மயிலைத் தெரியாத மாதிரியே பேசினா? சம்திங் ராங்’
நிவேதாவைக் குறித்துச் சிந்தித்தவனாய் தங்களது அறைக்குள் நுழைந்த அர்ஜூனைத் தன்னை நோக்கி ஈர்த்திருந்தாள் அர்ச்சனா.
அறைக்குள் நுழைந்தவன் அர்ச்சனாவைக் கண்டு கொள்ளாது குளியலறைச் சென்று குளித்து உடை மாற்றி விட்டு வந்த போது தான் அர்ச்சனாவைப் பார்த்தான்.
குளித்து முடித்து இரவு உடை அணிந்து புத்துணர்வுடன் மலர்வாய் கட்டிலில் அமர்ந்திருந்தவளின் பார்வை தன்னையே வட்டமடிப்பதை அப்போது தான் கண்டான்.
கட்டிலில் அமர்ந்திருந்தவளாய் அவன் செல்லும் திசையெல்லாம் தலையைத் திருப்பியவாறு கண்ணெடுக்காமல் அவனையே அவள் பார்த்திருக்க, புன்சிரிப்புடன் அவள் எதிரில் வந்து அமர்ந்த அர்ஜூன், “என் பொண்டாட்டி என்னை சைட் அடிக்கிற மாதிரி தெரியுதே” எனக் கேட்டான்.
“ஆமா நான் பார்த்த நாள்லருந்து என் புருஷனை சைட் அடிச்சிட்டு தான் இருக்கேன். ஆனா என் புருஷனுக்குத் தான் சென்னைக்கு வந்த பிறகு பொண்டாட்டியை சைட் அடிக்கிறதுனா என்னனு மறந்து போச்சு” என்று குறும்புச் சிரிப்புடன் உரைத்தாள் அர்ச்சனா.
அவளின் பேச்சில் வாய்விட்டுச் சிரித்த அர்ஜூன், அவளை அணைத்துக் கட்டிலில் சாய்த்தவனாய் அவள் மீது படர்ந்தவன், “வேற என்னலாம் மறந்துட்டானாம் உன் புருஷன்?” எனக் கேட்டான்.
தான் எப்பொழுதும் ரசித்துப் பார்க்கும் அவனின் கண்களில் தவழ்ந்த குறும்பை ரசித்தவளாய் அவனது கண்ணோடு கண் நோக்கியவாறு, “இறுக்கமா எப்படி கட்டி அணைக்கிறதுனு மறந்துட்டாராம்!” என்றவள் சொன்னதும்,
இரு உடல்களும் ஒட்டிக் கொள்ளும் வண்ணம் அவளைத் தன்னுடன் இறுக்கமாய் அணைத்தான்.
இருவரின் மூச்சுக்காற்றும் மோதிக் கொள்ள அவனின் உதட்டோடு தனது உதட்டை உரசியவளாய் ஹஸ்கிக் குரலில், “எப்படி கிறங்கடிக்கிற மாதிரி டீப் லிப் கிஸ் கொடுக்கிறதுனு கூட மறந்துட்டாராம்” என்றவள் சொன்ன நொடி, அவள் இதழுக்குள் புதைந்தான்.
மெல்லமாய் மென்மையாய் ஆழ்ந்து ரசித்து முத்தமிட்டான் அவள் இதழில். அவன் கொடுக்கும் உணர்வுகளை உயிருக்குள் உணர்ந்து கிறங்கிக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.
அவளிதழோடு மெல்ல உரசியவனாய், “வேற என்ன மறந்துட்டானாம் உன் புருஷன்?” என மயக்கும் குரலில் கேட்டான்.
ஏதோ சொல்ல வாய் எடுத்தவளுக்கு வெட்கம் பிடுங்கித் தள்ள, உதட்டைக் கடித்து முகத்தைத் திருப்பி நாணப் புன்னகைச் சிந்தினாள்.
அவளின் முகத்தை தன்னை நோக்கித் திருப்பியவன், “இப்படிச் சிரிச்சா என்ன அர்த்தம்?” அவளின் மூக்கோடு உரசியவனாய் கேட்டான்.
அவன் காதோடு உதட்டைப் பொறுத்தியவள் ரகசியமாய், “என்னை காதலிக்கவே மறந்து போய்ட்டாராம்” என்றாள்.
அவள் ஏதேனும் மோகமாய் கூறுவாள் என்று நினைத்திருந்தவனுக்கு அவளின் இந்த வார்த்தைகள் மோகவலையை அறுந்து போகச் செய்து கோபத்தை உற்பத்திச் செய்யவும் சட்டென எழுந்து அமர்ந்த அர்ஜூன், “அச்சுமா டூ யூ ரியலி மீன் இட் (do you really mean it)” ஆதங்கமான குரலில் கேட்டான்.
கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்த அர்ச்சனா, “நீங்க அப்படித் தான் இருக்கீங்க அஜூப்பா! என்னைப் பத்தியோ என் மன உணர்வுகளைப் பத்தியோ என்னோட கஷ்டங்களைப் பத்தியோ நீங்க யோசிக்கிறதே இல்லை” கண்களில் துளிர்த்த நீருடன் உடைந்த குரலில் உரைத்தவள்,
“உங்களுக்கு உங்க ஹோட்டல், உங்க அப்பா அம்மா, நம்ம பசங்க அவங்க எல்லாரும் தான் முக்கியம். அவங்களுக்குலாம் பிறகு லாஸ்ட் பிரயாரிட்டி தான் எனக்கு. இதுல நீங்க என்னைக் காதலிக்கிறீங்கனு எப்படி நான் நினைக்கிறதாம்” கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் உடைப்பெடுத்து வழிய, அதனைத் துடைத்தவளாய் கலங்கிய குரலில் சற்றுக் கோபமாய் உரைத்தாள்.
அவள் அவன் மீது சுமத்திய குற்றச்சாட்டில் அவனுக்கு மேலும் கோபம் அதிகமான போதும் அவளின் அழுகையைக் கண்டு தன்னைக் கட்டுப்படுத்தியவனாய்,
“சரி நான் உன்னைப் பத்தி யோசிக்கலைனு நினைக்கிறவ அதை என்கிட்ட சொல்லிருக்கனும் தானே. அதை விட்டுட்டு எப்பவும் சண்டைப் போட்டுட்டு பேசாம மூஞ்சை தூக்கி வச்சிட்டு இருந்தா மனுஷனுக்கு என்ன புரியுமாம்?” சற்றுக் காட்டமான குரலிலேயே கேட்டான்.
“ஆமா இத்தனை வருஷ கல்யாண வாழ்க்கைல நான் எதுக்காக கோபப்படுறேன், பேசாம இருக்கேன், மூஞ்சைத் தூக்கி வச்சிக்கிறேன்னு கூட உங்களால கண்டுபிடிக்க முடியலை.
இதுல நான் விலாவரியா விளக்கிச் சொன்னதும் உங்களுக்குப் புரிஞ்சி நீங்க அப்படியே கேட்டு நடந்துடுவீங்க பாருங்க” கோபத்துடன் உரைத்தவளாய் உதட்டைச் சுழித்தாள் அர்ச்சனா.
பெருமூச்சுடன் தலையைக் கோதி தன்னை சமன்படுத்தியவனாய் அவளைப் பார்த்தவன், “இனி புரிஞ்சிக்க முயற்சி செய்றேன் சரியா” என்றான்.
அவனிடம் இருந்து சற்றும் எதிர்பாராத இந்தப் பதிலில் இன்ப அதிர்வுடன், “நிஜமாவா அஜூப்பா?” என்று கேட்டவள் அவன் மார்பில் சாய்ந்தாள்.
“ஆமாடா!” என்றவளாய் அவளின் முதுகை அவன் வருட,
“நீங்க அப்படித் தான் சொல்லுவீங்க. ஆனா செய்ய மாட்டீங்க. நான் குண்டா இருக்கனால தான் உங்களுக்கு என் மேல அக்கறை இல்லாம போச்சோனுலாம் நினைச்சி கவலைப்பட்டிருக்கேன் தெரியுமா?” அவன் மார்பில் முகத்தைப் புதைத்து தேம்பியவளாய் உரைத்தாள்.
அதிர்ந்து போனான் அர்ஜூன்.
‘மயிலு சொன்னது சரி தான் போலேயே! இவ குண்டா இருக்கிறதை நினைச்சு இன்செக்யூர்டா ஃபீல் செஞ்சிருக்கா! நான் கவனிக்காம விட்டிருக்கேன்’ என்று நினைத்தவாறு அவன் இருக்க,
“என் உடம்பைப் பத்தியோ குண்டா இருக்கிறதைப் பத்தியோ நான் எப்ப புலம்பினாலும், உங்ககிட்ட இருந்து பதிலே வராது. என்னை கன்வின்ஸ் பண்ற மாதிரி கூட எதுவுமே சொல்ல மாட்டீங்க. எவ்ளோ மனசுக்குக் கஷ்டமா இருக்கும் தெரியுமா?” என்று அழுகையின் விசும்பலுடன் கூறினாள் அர்ச்சனா.
அவளை தன்னுடன் இறுக்கி அணைத்தவனாய், “என்னடா கண்ணம்மா இப்படிலாம் யோசிச்சிருக்க நீ! அது எனக்கொரு பிரச்சனையாவே இல்லைங்கிறனால நான் அதுக்கு மதிப்பு கொடுத்து பதில் எதுவும் சொல்லாம விட்டிருப்பேன்டா.
சரி நீயே சொல்லு, நான் உன் கூட ஒன்னா நிக்கும் போதோ, ஒட்டி உறவாடின போதோ எப்பவாவது என் மூஞ்சில வெறுப்பையோ அசௌகரியத்தையோ பார்த்திருக்கியா?” என்றவன் கேட்டதும்,
இல்லை எனத் தலையசைத்தாள் அவள்.
“எனக்கு நீ-னாலே இஷ்டம்டா. நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும்டா. நீ என் உயிர்டா கண்ணம்மா. நீ குண்டா இருக்கிறதுலாம் எனக்குப் பெரிசா தோணுமா சொல்லு. அதுவுமில்லாம அந்தந்த வயசுக்குரிய உடல் மாறுதல்கள் இருக்கத் தானே செய்யும். இது கூட புரிஞ்சிக்காம நான் இருப்பேனா சொல்லு” அவளைத் தன்னோடு அணைத்தவனாய் அவளின் தலையைக் கோதியவாறு மென்மையான குரலில் கேட்டான் அர்ஜூன்.
அவனின் மார்பில் இருந்த முடிகளை வருடி சுருட்டியவாறே, “என்னமோ தெரியலை அஜூப்பா! எனக்கு இப்பலாம் ரொம்ப வெறுப்பா, என்னடா வாழ்க்கை இதுங்கிற மாதிரி ஃபீல் ஆகுது. கொஞ்ச நாளா எல்லாரும் இருந்தும் எனக்காகனு யாரும் இல்லாத மாதிரி நான் லோன்லியா இருக்க மாதிரி மனசு வெறுமையா ஃபீல் ஆகிடுது. அப்பலாம் உங்களை தான் மனசு தேடும். ஆனா நீங்க அன்னிக்கு தான் ரிசார்ட்லருந்து லேட்டா வருவீங்க. அதுவும் நான் தூங்கின பிறகு தான் வருவீங்க. அடுத்த நாள் உங்க மேல கோபம் கோபமா வரும். என் மேல உங்களுக்கு அக்கறையே இல்லங்கிற நினைப்பு மனசுல தங்கிடும். அழுகையா வரும். அது அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கோபமா மாறி உங்கக்கிட்ட சண்டைப் போட ஆரம்பிச்சிடுவேன்.
ஆனா நீங்க என்னோட அந்தக் கோபத்தை கூட புரிஞ்சிக்காம குழந்தைங்க வேலைனு ரொட்டீன் வாழ்க்கைல பிசி ஆகிடுவீங்க.
கொஞ்ச நாளா நீங்க கூட இருந்தும் இல்லாத மாதிரி ஐ மிஸ்டு யூ சோ மச்” என்றவள் அவனை அணைத்தாள்.
அவளின் நெற்றியில் முத்தமிட்டவாறு, “இனி அப்படி ஆகாம பார்த்துக்கிறேன்டா” என்றான்.
இளமயில் கூறியது அப்போது தான் நினைவுக்கு வந்தது அவனுக்கு.
‘ஹார்மோன் இம்பேலன்ஸ்னு மயிலு கூட ஏதோ சொன்னாளே! அதனால தான் இவ இப்படிலாம் யோசிச்சு கவலைப்படுறாளா?’ என்று நினைத்தவனாய் அவளை அணைத்திருந்தவன்,
“மயிலு ஏதோ டெஸ்ட்லாம் உனக்குச் செய்யனும்னு சொன்னாடா, நாளைக்குப் போய் அதை செஞ்சிடலாமா? நான் மயிலுக்கிட்ட பேசி ஈவ்னிங் டைம்க்கு அப்பாய்ண்ட்மெண்ட் வாங்குறேன்” என்றவன் கேட்கவும் சரியென்றாள் அர்ச்சனா.
அவளை அணைத்தவாறு பலவிதமான சிந்தனையுடன் அவன் அமர்ந்திருக்க, அவன் மார்பிலேயே உறங்கியிருந்தாள் அர்ச்சனா.
அவளிடமிருந்து சீரான சுவாசம் வெளியாவதை உணர்ந்து அவள் உறங்கியதை உணர்ந்தவன் அருகில் படுக்க வைத்து போர்வையைப் போர்த்தி நெற்றியின் முத்தமிட்டுவிட்டு அருகில் படுத்தான்.
அவன் முத்தமிட்டப் போது மெல்ல உறக்கம் கலைந்தவள் அவன் படுத்ததும் புரண்டு படுத்து அவனை அணைத்தவளாய் மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றாள்.
அவளை அணைத்துத் தட்டிக் கொடுத்தவனாய் உறங்கியிருந்தான் அர்ஜூன்.
மறுநாள் காலை அர்ஜூன் கண் விழித்த போது அவனது கை வளைவுக்குள் உறங்கிக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.
அவளின் கன்னத்தில் முத்தமிட்டவனாய் எழுந்தவன் தன்னுடைய காலை கடன்களை முடித்து விட்டு பிள்ளைகளின் அறைக்குச் சென்றான்.
அங்கு நிவேதா யாரிடமோ பேசிக் கொண்டிருப்பது கேட்டு அதிர்ந்து போனான் அர்ஜூன்.

