Loading

“தண்டனையா?” என்று அர்ச்சனா அதிர்ச்சியுடன் கேட்கவும்,

 

“ஆமா அர்ச்சனா. இளா மச்சானுக்கு கல்யாணம் ஆகிட்டதா தவறா நினைச்சு தான் நான் அர்ஜூனைக் கல்யாணம் செஞ்சிக்க ஒத்துக்கிட்டேன். ஆனா என்னால அர்ஜூன் கூட வாழ முடியாம போனதும் தான் என் மனசுல எப்பவுமே இளா மச்சானைத் தவிர வேற யாருக்குமே இடமில்லைனு புரிஞ்சிக்கிட்டேன். இளா மச்சானுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிட்டதை சொன்னா அர்ஜூன் டிவோர்ஸ் கொடுக்க மாட்டாருனு அவர்கிட்ட சொல்லாம, இளா மச்சானை கல்யாணம் செஞ்சிக்கிறதா சொல்லி டிவோரஸ் வாங்கினேன்.

 

என்னோட சின்ன வயசுலேயே அப்பா இறந்துட்டாங்க. டிவோர்ஸ்க்குப் பிறகு அம்மாவும் நானும் மட்டும் ஒன்னா வாழ்ந்துட்டு இருந்தோம். அப்படியே கல்யாணம் செஞ்சிக்காம அம்மா கூடவே வாழ்ந்து முடிச்சிடலாம்னு தான் நான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனா அம்மா ரெண்டு வருஷத்துல இறந்துட்டாங்க. அதுக்குப் பிறகு எனக்குனு யாருமில்லாம தனிமையான அநாதையான வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு இருந்தேன் அர்ச்சனா.  அர்ஜூன் மாதிரி நல்லவருக்கு நான் கொடுத்த வலிக்கு எனக்கு கிடைச்ச தண்டனையா அந்தத் தனிமையான வாழ்க்கையை ஏத்துக்கிட்டு வாழ்ந்துட்டு இருந்தேன்” மென்னகையுடன் கூறினாள் இளமயில்.

 

“அய்யோ என்னங்க நீங்க? அர்ஜூன் நீங்க கஷ்டப்படனும்னுலாம் என்னிக்குமே நினைச்சதே இல்லங்க. டாக்டரைப் பார்த்துட்டு வந்த அன்னிக்கு உங்களுக்கு கல்யாணம் ஆகாததை சொல்லி அர்ஜூன் எவ்ளோ வருத்தப்பட்டாரு தெரியுமா?  நீங்க என்னடானா இப்படி நினைச்சிட்டு கஷ்டப்பட்டிருக்கீங்களே! அப்புறமா உங்களை கொடைக்கானல்ல டாக்டரோட மனைவியா பார்த்த பிறகு தான் அவர் மனசுக்கு நிம்மதியாச்சு” என்றாள் அர்ச்சனா.

 

“என்னால தெரியாம ஒருத்தருக்கு கெடுதல் நடந்துட்டாலே பாவம்னு நினைப்பேன் அர்ச்சனா. ஆனா தெரிஞ்சே அர்ஜூன் மாதிரி நல்லவருக்கு வலியைக் கொடுத்துட்டேனேனு அவருக்கு டிவோர்ஸ் கொடுத்த பிறகு நான் கலங்காத நாள் இல்லை.

 

என்னால தான் அர்ஜூன் வாழ்க்கைல நிறைய கஷ்டப்பட்டுட்டாரு. அதனால அர்ஜூன் எப்பவுமே சந்தோஷமா இருக்கனும். நல்லாயிருக்கனும்னு அவருக்காக நான் தினமும் கடவுள்கிட்ட வேண்டிப்பேன் அர்ச்சனா. என்னோட பிரார்த்தனையோட பலனாய் தான் நீங்க அர்ஜூனுக்குக் கிடைச்சதா நிறைய நேரம் நினைச்சிருக்கேன். அந்தளவுக்கு அர்ஜூனுக்கு கிடைச்ச வரமா தான் உங்களை நான் பார்க்கிறேன் அர்ச்சனா.

 

அன்னிக்கு ரொம்ப நாள் கழிச்சி உங்களையும் அர்ஜூனையும் சேர்த்து பார்த்தப்ப அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு. ஆனா நீங்க என்கிட்ட அப்படி பேசவும் பயந்துட்டேன் அர்ச்சனா. இன்னுமா என்னால அர்ஜூன் வாழ்க்கைல கஷ்டத்தை அனுபவிக்கிறாருனு நினைச்சு மனசு ரொம்ப கஷ்டமா போச்சு. என்னால உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் என்னிக்கும் எப்பவும் எந்தப் பிரச்சினையும் வந்துடக் கூடாதுனு நினைக்கிறேன் அர்ச்சனா. அதான் இதெல்லாம் சொல்றேன்.

 

அர்ஜூன் உங்களுக்காகவே பிறந்தவரு தான். எப்பவுமே அர்ஜூன் மனசுல நீங்க மட்டும் தான் இருப்பீங்க. இருக்கீங்க அர்ச்சனா. அதை என்னிக்கும் மறந்துடாதீங்க. நீங்களும் அர்ஜூனும் எப்பவும் ஒத்துமையா சந்தோஷமா வாழனும். எப்பவுமே உங்களுக்காக கடவுள்கிட்ட இதை தான் நான் வேண்டிப்பேன்” மனதார உரைத்தாள் இளமயில்.

 

இளமயிலின் இந்த வெளிப்படையான அன்பான நேர்மையான பேச்சில் கனிவு பொங்க அவளைப் பார்த்தாள் அர்ச்சனா.

 

அர்ச்சனாவின் மனத்தில் இருந்த சுணக்கம் விலகிப் போக, பெருமூச்சு விட்டவாறு நிமிர்ந்து அமர்ந்து இளமயிலைப் பார்த்தவள் மனம் திறந்து பேசத் தொடங்கினாள்.

 

“எனக்குத் தெரியும் மயிலு. அவருக்கு நான்னா எவ்ளோ இஷ்டம்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். ஆனாலும் ஏதோ ஒரு இன்செக்யூரிட்டி ஃபீல் வந்துடுது. அதுவும் சென்னை வந்த பிறகு ரொம்ப வெயிட் ஏறிட்டேன்னா, எனக்கே என்னைப்‌ பார்க்கப் பிடிக்கலை. அர்ஜூன் என்னமோ என்னைச் சகிச்சிட்டு வாழுற மாதிரி எனக்கே தோணிடுது. இப்பலாம் நிறைய மூட் ஸ்விங் ஆகுது மயிலு. சாரி நான் அன்னிக்கு உங்களை ஹர்ட் செய்ற மாதிரி பேசியிருந்தா ரியலி சாரி” என்றாள் அர்ச்சனா.

 

“அய்யோ எதுக்கு சாரி எல்லாம் கேட்குறீங்க? சின்ன விஷயத்துக்குலாம் கலங்குற வயசைத் தாண்டியாச்சு அர்ச்சனா. என் படிப்பு அந்தப் பக்குவத்தை இன்னும் அதிகமாவே எனக்குக் கொடுத்திருக்கு” என்று புன்னகையுடன் உரைத்த இளமயில்,

 

“எனக்காக ஒன்னே ஒன்னு செய்றீங்களா அர்ச்சனா?” எனக் கேட்டாள்‌.

 

“என்ன செய்யனும் மயிலு?” அர்ச்சனா கேட்க,

 

“நான் சொல்ற டெஸ்ட்லாம் எடுத்துட்டு வர்றீங்களா? ஹார்மோன் இம்பேலன்ஸ்னால கூட இப்படி மூட் ஸ்விங் ஆக வாய்ப்பிருக்கு. கொஞ்சம் செக் பண்ணிடலாமே” என்றாள் இளமயில்.

 

“கண்டிப்பா மயிலு. என் மேல அக்கறை எடுத்து நீங்க சொல்றதுக்காகவே செய்றேன்” மென்னகையுடன் உரைத்தாள் அர்ச்சனா.

 

“செல்ஃப் லவ் ரொம்ப முக்கியம் அர்ச்சனா. எந்த நிலையிலும் உங்களுக்கே உங்களை ரொம்ப பிடிக்கனும். அப்ப தான் உங்களுக்கு உங்க மேல கான்பிடன்ஸ் வரும். உங்களுக்குப் பிடிச்சதை நீங்க செய்ய ஆரம்பிச்சாலே உங்களுக்கு உங்களைப் பிடிக்க ஆரம்பிச்சிடும். இனி எப்பவும் எனக்கே என்னைப் பிடிக்கலைனு சொல்லாதீங்க அர்ச்சனா. யூ ஆர் எ ஜெம்! உங்க மதிப்பைப் பத்தி அர்ஜூன்கிட்ட கேளுங்க. கதை கதையா சொல்லுவாரு” என்று சிரித்தாள் இளமயில்.

 

மெல்லச் சிரித்தவளாய் இளமயில் கூறியவற்றைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினாள் அர்ச்சனா.

 

அதே நேரம் அர்ஜூன் கைப்பேசியில் பேசி முடித்ததும் அவன் அருகே சென்று நின்றான் இளங்குமரன்.

 

சில நிமிடங்கள் இருவரும் பொது விஷயங்களைப் பற்றிப் பேசி முடிக்கவும், “அர்ச்சனாவை ஏன் நீங்க பாட அனுப்பலை அர்ஜூன்?” எனக் கேட்டான் இளங்குமரன்.

 

“நான் அவளைக் கச்சேரிக்குலாம் போகத் தான் சொன்னேன் டாக்டர். வேலைக்கு ஆள் வச்சி பார்த்துக்கலாம்னு சொன்னேன். அவ தான் பசங்களைப் பார்த்துக்கனும், அப்பா அம்மாவைப் பார்த்துக்கனும்னு சென்னைக்கு வந்த பிறகு எந்த ட்ரூப்லயும் முயற்சி செய்யலை. இப்ப என்னமோ நான் அவளை அனுப்பலைங்கிற மாதிரி ரியாக்ட் பண்றா! ஏன்னு தான் எனக்குப் புரியலை” நெறித்த புருவத்துடன் உரைத்தான் அர்ஜூன்.

 

“பொண்ணுங்க அப்படித் தான் அர்ஜூன். தன்னை விட தன்னோட குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செஞ்சிட்டு தன்னை மறந்துடுவாங்க. அந்த நேரத்துல அவங்களை அவங்க கவனிச்சிக்கனும்னு நாம தான் அவங்களுக்கு அழுத்தம் கொடுத்து செய்ய வைக்கனும். நீங்க அப்படி அவங்க சொன்னதும் ஓகேனு விடாம கொஞ்ச நாள் கழிச்சி அவங்களை பாட வச்சிருக்கனும்” என்று இளங்குமரன் சொன்னதும்,

 

“கரெக்ட் தான் டாக்டர். நாங்க சென்னை வந்ததும் ரிசார்ட் வேலைலயே அப்படியே மூழ்கிட்டேன். வாழ்நாள் முழுசும் சம்பாதிச்ச காசைப் போட்டிருக்கேனே! நஷ்டம் ஆகிடக் கூடாதேனு அதையே பார்த்ததுல அப்ப நான் குடும்பத்தைக் கூட கவனிக்கலை. இவ எல்லாரையும் கவனிச்சிக்கிறான்ற தைரியத்துல விட்டுட்டேன். ஆனா இவளை யாரும் கவனிக்காம போய்ட்டோமோனு இப்பலாம் அடிக்கடி தோணிட்டே இருக்கு” என்றான் அர்ஜூன்.

 

“சரியான பாதைல யோசிக்கிறீங்க அர்ஜூன். அவங்க தேவை என்னனு பார்த்துச் செய்யுங்க” என்றவனாய் அர்ஜூனின் தோளில் தட்டிக் கொடுத்தான் இளங்குமரன்.

 

‘மொதல்ல அர்ச்சனாவை ஏதாவது ஒரு மியூசிக் ட்ரூப்ல சேர்த்து விடனும். முன்னாடி கலகலனு இருந்த என் அச்சுமாவா அவளை மாத்தனும்’ மனத்தோடு நினைத்துக் கொண்டான் அர்ஜூன்.

 

அர்ச்சனா ஓய்வறைக்குச் செல்வதாய் உரைத்துக் கீழே செல்லவும், இவர்களின் அருகே வந்து நின்றாள் இளமயில்.

 

அவளைப் பார்த்துப் புன்னகைத்தவனாய், “நீங்களும் மயிலும் மேட் ஃபார் ஈச் அதர் டாக்டர்” மனமார உரைத்தான் அர்ஜூன்.

 

இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.

 

“நீங்களும் அர்ச்சனாவும் கூட தான் மேட் ஃபார் ஈச் அதர் அர்ஜூன்” என்ற இளமயில்,

 

“நான் ஒன்னு கேட்பேன், வெளிப்படையா பதில் சொல்லுவீங்களா அர்ஜூன்” எனக் கேட்டாள்.

 

இருவரையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் இளங்குமரன்.

 

“கேளு மயிலு! உண்மையைச் சொல்றேன்” என்று அர்ஜூன் சொல்லவும்,

 

“அர்ச்சனா குண்டா இருக்கிறது உங்களுக்கு எதுவும் அன்ஈசியா..”  என்று இளமயில் முடிப்பதற்கு முன்பே,

 

“நான் அப்படி நினைப்பேன்னு நீ நினைக்கிறியா மயிலு?” எனச் சற்றுக் கோபத்துடன் கேட்டான் அர்ஜூன்.

 

“நிச்சயமா இல்ல அர்ஜூன். அதை கன்பெர்ம் செஞ்சிக்க தான் கேட்டேன். அப்படி இருந்தும் அர்ச்சனா மனசுல ஏதோ உறுத்தல் இருக்குனா அதுக்கு என்ன காரணம்னு கண்டுபிடிச்சி சரி செய்ய பாருங்க அர்ஜூன். பெண்களுக்கு ஏகப்பட்ட ஹார்மோன் மாறுதல்கள் ஏற்படுற வயசு இது. நான் அர்ச்சனாக்கிட்ட சில டெஸ்ட் எடுக்கச் சொல்லி சொல்லிருக்கேன். நீங்க அவங்களை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வாங்க. செக் பண்ணி பார்த்துடலாம்” என்று இளமயில் சொல்லவும் உடனே சரியெனத் தலையசைத்தான் அர்ஜூன்.

 

தங்களின் நலனில் அக்கறையெடுத்து இளமயில் கூறியதில் மட்டற்ற மகிழ்ச்சி அவனுக்கு. அதை இளமயிலிடமே கூறவும் செய்தான் அர்ஜூன்.

 

“நிவேதா எப்படி? அம்மா பொண்ணா? அப்பா பொண்ணா அர்ஜூன்?” எனக் கேட்டாள் இளமயில்.

 

“பெங்களூர்ல இருக்கிற வரைக்கும் அப்பா பொண்ணா தான் இருந்தா! இங்கே வந்த பிறகு மேடமுக்கு பெரிய பொண்ணு ஆகிட்ட நினைப்பு. எப்பவும் படிப்பு ஃப்ரண்ட்ஸ்னு தான் சுத்திட்டு இருப்பா! அங்கே இருக்கிற வரைக்கும் அவளோட எல்லா ஆக்டிவிட்டிஸ்ஸூம் நான் தான் மானிட்டர் செஞ்சிட்டு இருந்தேன். அவளோட ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் எனக்கும் ஃப்ரண்ட்ஸ்ஸா இருந்தாங்க. சென்னை வந்த பிறகு ரிசார்ட் வேலைனால நிவேதாவை அச்சுமா கன்ட்ரோல்ல விட்டுட்டேன்” என்றான் அர்ஜூன்.

 

அமைதியாகக் கேட்டுக் கொண்ட இளமயில், “நிவேதாவை ஏன் வேற ஸ்கூல்ல சேர்த்து விட்டிருக்கீங்க. சிவகணேசன் கூடவே ஒரே ஸ்கூல்ல போட்டிருக்கலாமே” எனக் கேட்டாள்.

 

“நிவேதா ஃப்ரண்ட் அந்த ஸ்கூல்ல படிக்கிறதா சொல்லி அங்கே படிக்கிறேன்னு சொன்னா, சரினு சேர்த்து விட்டுட்டோம்” என்ற அர்ஜூன்,

 

யோசனை படர்ந்த முகத்துடன், “நீ நிவேதாவை முன்னாடியே பார்த்திருக்கியா மயிலு? அவகிட்ட பேசியிருக்கியா?” எனக் கேட்டான்.

 

மெல்ல ஆமெனத் தலையசைத்த இளமயில், “பசங்களோட டீனேஜ் வயசுல தான் பேரண்ட்ஸ் இன்னுமே க்ளோஸா ஃப்ரண்ட் போல பழகனும் அர்ஜூன். அவங்களோட உயிரா உலகமா அப்பாவும் அம்மாவும் இருக்கனும். அப்ப தான் அவங்க எந்த முடிவு எடுத்தாலும் தன்னைப் பத்தி மட்டும் யோசிக்காம குடும்பத்தையும் யோசிச்சு முடிவு எடுப்பாங்க” என்று இளமயில் கூறிக் கொண்டிருக்கும் போதே அர்ச்சனா வந்து விட அத்துடன் அப்பேச்சை நிறுத்திக் கொண்டாள் இளமயில்.

 

‘என்ன சொல்ல வர்றா இவ? மயிலு நிவியை முன்னாடி எங்கே பார்த்திருப்பா? ஸ்கூல்ல எங்கேயும் பார்த்திருப்பாளோ? ஆனா ஏன் நிவிக்கிட்ட அவளைத் தெரியாத மாதிரி மயிலு பேசினா?’ சிந்தனை படர்ந்த முகத்துடன் நிவேதாவைக் குறித்துச் சிந்தித்தான் அர்ஜூன்.

 

சிறிது நேரத்தில் அர்ஜூன் குடும்பத்தினர் கிளம்பத் தயாராகி நிற்கவும், அனைவருக்கும் தாங்கள் பிரத்யேகமாக வாங்கி வைத்திருந்த உடைகளையும் பரிசு பொருள்களையும் அவர்களுக்குக் கொடுத்தனர்.

 

“இதெல்லாம் எதுக்கு டாக்டர்?” என்று அர்ஜூனும் அர்ச்சனாவும் வாங்க மறுக்க,

 

“எங்களை நீங்க ஃப்ரண்ட்டா நினைச்சா வாங்கிக்கோங்க” என்று கூறி வற்புறுத்தி அவர்களை வாங்க வைத்தனர்.

 

அர்ஜூனையும் அர்ச்சனாவையும் விருந்துக்கு அழைத்த நோக்கம் நிறைவேறிய மகிழ்வுடன் அவர்களை வழியனுப்பி வைத்தனர் இளங்குமரனும் இளமயிலும்.

Click on a star to rate it!

Rating 2 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்