
அப்போது தான் மயக்கம் தெளிந்து எழுந்து இருந்த சகுந்தலா கணவனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிப் கொண்டாள்.
துஷ்யந்தோ ஓடி வந்து மனைவியின் அருகே மண்டியிட்டு அமர்ந்தவன் அவள் கரத்தைப் பற்றிக் கொண்டு, “ஏன் டி?” எனக் கேட்டான் கரகரப்பான குரலில்.
துஷ்யந்திற்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
சகுந்தலா துஷ்யந்தின் கேள்விக்குப் பதில் அளிக்காது தன் கரத்தை அவனிடம் இருந்து விலக்க முயன்றாள்.
ஆனால் துஷ்யந்தின் பிடி வலுவாக இருக்க, சகுந்தலாவின் கன்னம் தாண்டி கண்ணீர் வழிந்தது.
“எனக்கு என்ன தண்டனை வேணாலும் கொடு. ஆனா உன்ன நீயே தண்டிச்சிக்காதே. சத்தியமா முடியல டி. ஆல்ரெடி நம்ம பையன காப்பாத்த முடியாம போய்ட்டேன்னு குற்றவுணர்ச்சிலயே செத்துட்டு இருக்கேன். சாகணும்னு முடிவெடுக்க முன்னாடி ஒரு நிமிஷம் கூட என்னைப் பத்தி யோசிக்கணும்னு தோணலயா? நான் உனக்கு அந்தளவுக்கு வேண்டாதவன் ஆகிட்டேனா?” என துஷ்யந்த் கண்ணீருடன் கேட்கவும் தன் மறு கரத்தால் பட்டென துஷ்யந்தின் கன்னத்தில் ஒரு அடியைப் போட்டாள் சகுந்தலா.
“எனக்கு சத்தியமா என்ன பண்ணிட்டு இருக்கேன்? என்ன பண்ணணும்னு ஒன்னுமே புரியல டி. அதனால தான் எல்லாமே தப்பு தப்பா பண்ணிட்டு இருக்கேன். உன்ன ஃபேஸ் பண்ணக் கூட முடியல. என் உலகமே தலைகீழா மாறிப் போய்ட்ட போல ஃபீல் பண்ணுறேன் டி. நான் என்ன தான் பண்ணட்டும்?” எனக் கேட்டான் துஷ்யந்த் கண்ணீருடன்.
சகுந்தலா பதில் ஏதும் கூறாமல் கண்ணீர் விட்டபடி துஷ்யந்தின் முகத்தை வெறித்துக் கொண்டு இருந்தாள்.
“நான் தப்பு பண்ணிட்டேன் தான். அதுக்காக என்னை மொத்தமா விட்டுட்டுப் போய்டுவியா நீ? பையனுக்காகத் தான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொன்ன. அவ்வளவு தானா நீ என்னைப் புரிஞ்சி வெச்சிருக்கிறது? சத்தியமா அந்த வார்த்தைகளைக் கேட்டதும் உள்ளுக்குள்ள செத்துட்டேன் டி.” என துஷ்யந்த் கூறவும் மறு நொடியே அவனைப் பாய்ந்து அணைத்துக் கொண்ட சகுந்தலா அவ் அறையே அதிரக் கதறி அழுதாள்.
இத்தனை நாட்கள் மனதிற்குள் பூட்டி வைத்து இருந்த பாரத்தை எல்லாம் தன்னவனின் நெஞ்சில் சாய்ந்து அழுது கரைத்தாள் சகுந்தலா.
“நம்ம பையன் நம்ம கூட தான் இருக்கான் சகுந்தலா…” என அமைதியான குரலில் கூறிய துஷ்யந்தைக் குழப்பமாக சகுந்தலா ஏறிட, அவளின் வயிற்றில் கரத்தை வைத்தவாறு கண்ணீருடன் மனைவியின் முகம் பார்த்தான் துஷ்யந்த்.
அதிர்ச்சியில் உறைந்த சகுந்தலாவிற்கு துஷ்யந்த் கூறியதைக் கிரகித்துக் கொள்ளவே சில நொடிகள் எடுத்தது.
சகுந்தலா துஷ்யந்தை நம்பாத பார்வை பார்க்க, கண்ணீருடன் உண்மை எனத் தலை அசைத்த துஷ்யந்த், “அன்னைக்கு நீ மயங்கினப்போ தான் உன்ன செக் பண்ணிட்டு டாக்டர் விஷயத்த சொன்னாங்க. ஆனா அப்போ நான் இருந்த மனநிலைல என்னால முழுசா சந்தோஷப்படக் கூட முடியல. உன் கிட்ட சொல்லாம வேற யார் கிட்டயும் சொல்லணும்னு கூட தோணல. ஆனா இப்போ எனக்கு தோணுது இந்தக் குழந்தைய என் சேம்ப் தான் நமக்கு துணையா அனுப்பி வெச்சி இருக்கான்னு.” என்றான் துஷ்யந்த்.
உதடுகள் அழுகையில் துடிக்க, கரங்கள் நடுங்க தன் வயிற்றின் மீது கரத்தைப் பதித்தவளுக்கு பரத்தை முதன் முதலாக தன் வயிற்றில் சுமந்த தருணங்கள் அனைத்தும் நினைவுக்கு வந்தன.
சகுந்தலாவின் கன்னங்களைப் பிடித்து அவளின் முகத்தைக் கைகளில் ஏந்திய துஷ்யந்த், “சகுந்தலா… எனக்கு ஒரேயொரு வாய்ப்பு கொடுடி. சத்தியமா திரும்ப உன்ன ஹர்ட் பண்ண மாட்டேன். பரத் நம்ம கூட இல்லைங்குற விஷயத்த இப்போ வரைக்குமே ஏத்துக்க முடியல. காலம் பூராவும் நம்ம மனசுல அந்தக் குறை இருக்கத் தான் போகுது. ஆனா பரத் இருந்து இருந்தா இந்தக் குழந்தைய நினைச்சி எந்தளவு சந்தோஷப்பட்டு இருப்பானோ, எப்படி எல்லாம் பார்த்து இருப்பானோ அதே மாதிரி நாம இந்தக் குழந்தைய வளர்க்கணும். என்ன நடந்தாலும் உனக்கு துணையா நான் இருப்பேன். தயவு செஞ்சு திரும்ப இந்த மாதிரி ஒரு தப்பான முடிவ மட்டும் எடுக்காதே. உனக்கு மட்டும் அப்படி ஏதாவது ஆச்சுன்னா அது தான் என் கடைசி மூச்சா இருக்கும். திரும்ப இன்னொரு இழப்பை தாங்குற சக்தி எனக்கு இல்ல டி.” என்றான் கண்ணீரும்.
சரி எனத் தலை அசைத்த சகுந்தலா துஷ்யந்தின் மார்பில் தலை சாய்த்தவாறு, “உங்க மேல கோவமா தான் இருந்தேன். ஆனா சத்தியமா உங்கள வெறுக்கலங்க. நீங்களும் விலகி விலகி போகவும் ரொம்பவே உடைஞ்சி போய்ட்டேன். நான் தான் ராசி இல்லாதவளோன்னு ஃபீல் பண்ணேன். அதனால தான்…” என இழுத்தவளுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வராது கண்ணீர் தான் வழிந்தது.
“இல்லம்மா… நீ ஒரு தேவதை. நீ எனக்கு கிடைச்சது என்னோட அதிஷ்டம். என்னோட வரம் நீ. நான் தான் சரியா ஒரு முடிவும் எடுக்காம என் வரத்தையே தொலைக்க பார்த்துட்டேன். சாரி டி.” என்ற துஷ்யந்த் தன்னவளை இறுக அணைத்துக் கொண்டான்.
“ஆ…ஆனா நான் எப்படிங்க என் பையன் இல்லாம இருக்க போறேன்? நான் ஒரு நல்ல அம்மாவே இல்ல. அது தான் என்னால என் பையன காப்பாத்த முடியல. ஒ… ஒருவேளை இந்தக் குழந்தைக்கும் என்னால ஒரு நல்ல அம்மாவா இருக்க முடியலன்னா என்ன பண்ணுறது?” எனக் கேட்டாள் வேதனையுடன் .
உடனே மறுப்பாகத் தலை அசைத்த துஷ்யந்த், “அப்படி எதுவும் இல்ல சகுந்தலா. பரத்துக்கு எதை எல்லாம் நம்மளால கொடுக்க முடியாம போச்சோ அதை எல்லாம் நம்மளோட இந்தக் குழந்தைக்கு செய்யலாம். கண்டிப்பா நம்ம பையன் கூட இதுக்காக சந்தோஷப்படுவான்.” எனக் கூறவும் சரி எனத் தலை அசைத்த சகுந்தலா அப்போது தான் தன் கணவனை சரியாக அவதானித்தாள்.
ஒரே மகனை இழந்த வேதனையில் சரியாக சாப்பிடாமல், தூங்காமல் உடல் மெலிந்து போய் கண்ணைச் சுற்றி கருவளையம் தோன்றி பார்க்கவே பாவமாகத் தோன்றியது சகுந்தலாவிற்கு.
துஷ்யந்தின் கன்னங்களைப் பற்றிய சகுந்தலா, “சாரிங்க… நானும் உங்க மேல காரணமே இல்லாம கோவபட்டு இருக்கக் கூடாது. என்னையும் கஷ்டப்படுத்தி உங்களையும் கஷ்டப்படுத்திட்டேன்.” என்றவள் துஷ்யந்தின் முகம் முழுவதும் முத்தம் இட்டாள்.
வெகுநாள் கழித்துக் கிடைத்த தன்னவளின் அருகாமையில் துஷ்யந்தின் மனதில் இருந்த வலி எல்லாம் லேசாகக் குறைவது போல் இருந்தது.
கண்களை மூடி மென் புன்னகையுடன் அமர்ந்து இருந்தவனின் முகத்தை சில நொடிகள் ரசித்த சகுந்தலா தன்னவனின் இதழில் மென் முத்தம் இட்டு விட்டு விலகினாள்.
மறு நொடியே சகுந்தலாவின் இதழ்களைக் கொய்த துஷ்யந்த் சில நிமிடங்கள் கழித்தே அவளை விட்டான்.
பல நாட்கள் கழித்து இருவரின் முகத்திலும் புன்னகை.
உள்ளுக்குள் மகனை இழந்த வேதனை இருந்தாலும் தம் இணைகளுக்காக அதனை மறைத்து வாழ முடிவு செய்தனர்.
சகுந்தலா உறங்கியதும் வெளியே வந்த துஷ்யந்த் சகுந்தலா நலமாக இருப்பதைக் கூறி விட்டு அவளின் கர்ப்பம் பற்றியும் கூறவும் அனைவருக்குமே மகிழ்ச்சி.
மனைவி வெகுவாக சோர்ந்து விட்டதால் சந்திரசேகரன் பரிமளத்தை அழைத்துக் கொண்டு கேன்டீனுக்குச் செல்ல, அங்கு துஷ்யந்தும் நிரஞ்சனாவும் மட்டும் தனித்து விடப்பட்டனர்.
நிரஞ்சனா மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு துஷ்யந்தை அழுத்தமாக நோக்க, துஷ்யந்தோ நிரஞ்சனாவின் முகத்தைப் பார்க்கவே சங்கடப்பட்டான்.
சில நொடிகள் கழித்து பெருமூச்சுடன் நிரஞ்சனாவின் முகம் பார்த்த துஷ்யந்த், “சாரி அன்ட் தேங்க்ஸ் நிரஞ்சனா. இதைத் தவிர என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல. நிறைய சமயங்கள்ல நீ என் கண்ணை திறந்து வெச்சிருக்க. அதுக்கு காலம் பூராவும் நான் கடமைப்பட்டு இருக்கேன்.” என்றான் உணர்ந்து.
“துஷ்யந்த்… எனக்கு உங்களோட தேங்க்ஸோ சாரியோ அவசியம் இல்ல. பரத் அவன் அப்பாவும் அம்மாவும் ஒன்னா சேர்ந்து சந்தோஷமா இருக்கணும்னு ஆசைப்பட்டான். என் விருப்பம் கூட அது தான். நான் உங்களுக்கு சொல்ல வேண்டியது எல்லாம் ஆல்ரெடி சொல்லிட்டேன். கடைசியா ஒன்னு மட்டும் சொல்ல விரும்புறேன். நான் உங்க கிட்ட அப்போவே சொன்னேன் நீங்க அடுத்தவங்களுக்காகப் பார்த்து பார்த்து ஒருநாள் உங்க சுயத்தையே தொலைச்சி நிற்கப் போறீங்கன்னு. இப்போ அப்படி தான் இருக்கீங்க நீங்க. நீங்க இப்படி இருக்குறதால கடைசியில உங்கள சார்ந்தவங்க தான் ஹர்ட் ஆகி இருக்காங்க இப்போ. எல்லாருக்கும் நல்லவனா இருக்கப் போய் எல்லாமே தப்பு தப்பா பண்ணிட்டு இருக்கீங்க. நம்மளால ஹன்ட்ரட் பர்சன்ட் பர்ஃபெக்ட்டா இருக்க நிச்சயம் முடியாது துஷ்யந்த். அப்படி இருக்கணும்னா நாம ரோபோவா தான் இருக்கணும். ஒருத்தருக்கு நாம கடவுளா இருப்போம். ஆனா இன்னொருத்தர் பார்வைல நாம ரொம்ப மோசமானவனா இருப்போம். எல்லாரையும் நம்மளால சேடிஸ்ஃபை பண்ணிட்டு வாழ முடியாது. முதல்ல நாம நமக்காக வாழணும். பாஸ்ட்ட விட்டுத் தள்ளுங்க. இனிமேலாவது உங்களுக்காக வாழுங்க. உங்கள கஷ்டப்படுத்திக்கிட்டு உங்கள சார்ந்தவங்கள சந்தோஷப்படுத்த நினைக்காதீங்க. ஏன்னா உங்க மேல உண்மையான அன்பை வெச்சிருப்பவங்க நிச்சயம் நீங்க கஷ்டப்படுறத விரும்ப மாட்டாங்க. அப்புறம் என் லைஃப பத்தி நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. கண்டிப்பா என் மனசுக்கு பிடிச்ச வாழ்க்கைய தான் நான் வாழ்வேன். சோ லிவ் யுவர் லைஃப். ஆல் தி பெஸ்ட். நான் கிளம்புறேன். சகுந்தலா கிட்ட என் சார்பா விஷ் பண்ணிடுங்க.” எனப் புன்னகையுடன் கூறிய நிரஞ்சனா அங்கிருந்து கிளம்பிப் போனாள்.
நிரஞ்சனாவின் பேச்சை மீண்டும் மீண்டும் அசை போட்டுப் பார்த்த துஷ்யந்திற்கு தன் தவறு என்ன என்று நன்றாகவே புரிந்து விட்டது.
‘சேம்ப்… எல்லாரோட பிறப்புக்கும் ஒரு அர்த்தம் இருக்குன்னு கேள்விப்பட்டு இருக்கேன். காரண காரியம் இல்லாம இங்க எதுவுமே நடக்காது. என்னையும் உங்க அம்மாவையும் சேர்த்து வைக்கத் தான் எங்க லைஃப்ல நீங்க வந்து இருக்கீங்கன்னு நம்புறேன் நான். வில் மீட் யூ சூன் மை பாய். டாடி மிஸ் யூ சோ மச்.’ என மகனுடன் மனதில் பேசிக் கொண்ட துஷ்யந்தின் இமையோரம் லேசாகக் கண்ணீர் துளிர்த்தது.
மறுநாளே சகுந்தலாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
அதன் பின் வந்த நாட்களில் துஷ்யந்த் சகுந்தலாவை விட்டு நொடியும் பிரியாமல் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான்.
பரிமளமும் சந்திரசேகரனும் கூட அவ்வாறு தான்.
வீட்டில் தனியாக இருந்தால் சகுந்தலாவிற்கு மகனை நினைத்து மன அழுத்தம் அதிகரிக்கும் என்பதால் அவள் முன்பு பார்த்த வேலையை ராஜினாமா செய்ய வைத்த துஷ்யந்த் அவளைத் தம் மருத்துவமனையிலேயே தரவுகளைப் பதியும் வேலையில் இணைத்துக் கொண்டான்.
அதனால் சகுந்தலா எப்போதும் துஷ்யந்தின் பார்வை வட்டத்துக்குள்ளேயே காணப்பட்டாள்.
கொஞ்சம் கொஞ்சமாக கணவன் மனைவி இருவரும் மகனை இழந்த துக்கத்தில் இருந்து வெளி வந்து வழமையான வாழ்க்கைக்குத் திரும்பினர்.
ஆனால் பரத்தை நினைக்கும் நேரம் எல்லாம் இதயம் கனமாவதை இருவராலும் தவிர்க்க முடியவில்லை.
என்ன தான் பரத் தம்முடன் இல்லாவிட்டாலும் அவ் வீட்டில் பரத் பயன்படுத்தியவைகள் எல்லாம் அந்தந்த இடத்தில் அப்படியே தான் காணப்பட்டது.
யாருமே பரத்தை மறக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.
மாறாக பரத்தின் அழகான நினைவுகளுடன் தம் வாழ்க்கையை வாழப் பழகினர்.
நாளுக்கு நாள் சகுந்தலாவின் வயிறு வளர்பிறையாய் வளர, துஷ்யந்த் தினமும் இரவு வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் பேசிப் பேசி இப்போதே குழந்தையுடன் நெருக்கம் ஆகி இருந்தான்.
பரத் எந்தளவு துஷ்யந்துடன் நெருக்கமாக இருந்தானோ அதே போல் சகுந்தலாவின் வயிற்றில் வளரும் குழந்தையும் துஷ்யந்தின் குரலுக்கே தாயின் வயிற்றை உதைத்து தன் இருப்பை வெளிப்படுத்தத் தொடங்கியது.
அதில் சகுந்தலாவிற்கு ஏக சந்தோஷம்.
தந்தையின் அருகாமை இன்றி தன் மகன் எவ்வளவு கஷ்டங்களைக் கடந்தான என்பதை நேரில் கண்டவள் சகுந்தலா.
அதனாலேயே பிறக்கப் போகும் குழந்தைக்கு இப்போதே தந்தையின் அன்பு கிடைத்ததில் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
அன்றும் சகுந்தலாவின் மார்பில் தலை வைத்து அவளின் வயிற்றை அணைத்த வண்ணம் குழந்தையுடன் பேசிக் கொண்டு இருந்த துஷ்யந்தின் தலையைக் கோதி விட்ட சகுந்தலா தம் அறையில் பெரிதாக மாட்டப்பட்டு இருந்த பரத்தின் புகைப்படத்தைப் பார்த்து, ‘பரத்… திரும்பவும் நீயே அம்மா வயித்துல வந்து பிறக்கணும்னு அம்மா ஆசைப்படுறேன் கண்ணா. ஐம் ஈகர்லி வெய்ட்டிங் டு சீ யூ.’ எனப் புன்னகையுடன் மனதில் மகனுடன் பேசியவளின் கண்கள் கலங்கின.
சட்டென ஒரு கரம் வந்து அவளது கண்ணீரைத் துடைக்க, துஷ்யந்த் தான் தன்னவளை விழி அகற்றாது பார்த்துக் கொண்டு இருந்தான்.
பதிலுக்குப் புன்னகைத்த சகுந்தலா, “ஐ லவ் யூ…” என்றாள் ஆத்மார்த்தமாக.
அதனைக் கேட்டுப் புன்னகைத்த துஷ்யந்த் அதற்குரிய பதிலை வார்த்தைகளில் இல்லாமல் செயலில் காட்டத் தொடங்கினான்.

