
இறுதிச் சடங்குகளை முடித்துக் கொண்டு ஆண்கள் அனைவரும் வீட்டுக்கு வந்த நேரம் சகுந்தலா ஒரு மூலையில் பரிமளத்தின மடியில் தலை வைத்துப் படுத்தவாறு விட்டத்தை வெறித்துக் கொண்டு இருந்தாள்.
நிரஞ்சனாவும் அவளின் அருகில் தான் அமர்ந்து இருந்தாள்.
அவளுக்கே இன்னும் நடந்த எதையும் ஜீரணிக்க முடியாமல் இருந்தது.
இதில் எங்கு அவள் சகுந்தலாவிற்கு ஆறுதல் சொல்வது?
பரத்தின் புன்னகை முகம் கண்ணுக்குள்ளேயே இருந்தது.
வீட்டினுள் நுழைந்த துஷ்யந்த் ஒரு ஓரமாக வந்து அமர்ந்து கொள்ள, சகுந்தலாவை நிரஞ்சனாவுடன் அவளின் அறைக்கு அனுப்பி வைத்து விட்டு மகனைத் தேடி வந்தார் பரிமளம்.
“கண்ணா… உன் பொண்டாட்டி ரெண்டு நாளா ஒன்னுமே சாப்பிடல. இப்படியே இருந்தா உடம்புக்கு ஏதாவது வந்துடப் போகுது. நாங்களும் எவ்வளவோ ட்ரை பண்ணி பார்த்துட்டோம். ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறா.” என்றார் பரிமளம் கவலையாக.
“நான் பார்க்குறேன்மா…” என்ற துஷ்யந்த் உடனே தட்டில் உணவைப் போட்டுக் கொண்டு மனைவியைத் தேடிச் சென்றான்.
சகுந்தலா கட்டிலில் ஒருக்களித்து படுத்திருக்க, அவளின் தலையை வருடியவாறு அமர்ந்து இருந்தாள் நிரஞ்சனா.
துஷ்யந்த் வந்ததும் அவனிடம் சகுந்தலாவை ஒப்படைத்து விட்டு நிரஞ்சனா வெளியேறினாள்.
உறங்கி இருந்த மனைவியை நெருங்கிய துஷ்யந்த் அவளின் கன்னத்தில் இருந்த கண்ணீர்த்தடத்தைப் பார்த்து மனம் வருந்தினான்.
மெதுவாக சகுந்தலாவின் கன்னத்தைத் தொடவும் சட்டென இமைகளைப் பிரித்துப் பார்த்த சகுந்தலாவின் பார்வையில் அவ்வளவு வெறுமை.
அதனைக் கண்டு துஷ்யந்தின் இதயம் நொறுங்கிப் போனது.
உணவைப் பிசைந்து சகுந்தலாவிற்கு ஊட்ட முயல, அவளோ தலையைத் திருப்பிக் கொண்டாள்.
மீண்டும் அவளின் வாய்க்கு அருகில் உணவைக் கொண்டு செல்லவும் சட்டென அதனைத் தட்டி விட்டாள் சகுந்தலா.
துஷ்யந்த் பெருமூச்சுடன் மீண்டும் உணவை ஊட்ட முயன்றான்.
இம்முறை சற்று ஆவேசத்துடன் தட்டையும் சேர்த்துத் தட்டி விட்ட சகுந்தலா கலங்கிய விழிகளுடன் துஷ்யந்தை முறைத்துப் பார்த்தாள்.
அவளை அழுத்தமாக ஏறிட்ட துஷ்யந்த், “சகுந்தலா… ப்ளீஸ்… ஆல்ரெடி ரொம்பவே கில்டி ஃபீலிங்ல இருக்கேன் நான். நீயும் ஒழுங்கா சாப்பிடாம ஏதாவதைத் தேடிக்கிட்டா சத்தியமா என்னாலயே என்னை மன்னிக்க முடியாது.” என்றான் உணர்வற்ற குரலில்.
“நான் எதுக்கு இன்னும் உயிரோட இருக்கணும்? என் புள்ளயே எனக்கு இல்லாம போய்ட்டான். இனிமே நான் வாழ்ந்து என்ன பயன்? உங்க பையனுக்காக தானே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. இப்போ அவனே இல்ல. இனிமே என்னால உங்களுக்கு என்ன பிரயோஜனம்?” என வார்த்தைகளாலேயே துஷ்யந்தை வதைத்தாள் சகுந்தலா.
மகனை இழந்த வலியில் அவளுக்கு தான் என்ன செய்கிறோம்? என்ன பேசுகிறோம்? என எதையும் உணர முடியவில்லை அவளால்.
ஆனால் அவளை உயிருக்கு உயிராகக் காதலிப்பவனின் இதயம் சகுந்தலாவின் வார்த்தைகளால் சுக்குநூறாக உடைந்ததை அவள் அறியவில்லை.
துஷ்யந்தின் விழிகளில் வலி அப்பட்டமாகத் தெரிய, சகுந்தலாவை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் அங்கிருந்து எழுந்து வெளியே சென்றான்.
துஷ்யந்த் கிளம்பியதும் சகுந்தலாவால் தன் கண்ணீரை அடக்க முடியவில்லை.
பாவம் அவளும் என்ன தான் செய்வாள்?
உரிமை உள்ள இடத்தில் தானே தன் உணர்வுகளை வெளிக்காட்ட முடியும்.
அறைக்கு வெளியே நின்றிருந்த நிரஞ்சனாவிடம் சென்ற துஷ்யந்த், “நிரஞ்சனா… நான் பக்கத்துல போனாலே சகுந்தலா வயலன்ட்டா பிகேவ் பண்ணுறா. அது அவளோட ஹெல்த்துக்கு நல்லது இல்ல. உன்னால முடிஞ்சா எப்படியாவது அவள சாப்பிட வை. நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்.” என்றவன் நிரஞ்சனாவின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காது அங்கிருந்து கிளம்பினான்.
வீட்டை விட்டு வெளியே வந்த துஷ்யந்தின் பார்வையில் முதலில் பட்டது என்னவோ பரத்துக்காக வேண்டி, அவனின் ஆசைகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டி துஷ்யந்த் வாங்கிய மோட்டார் பைக் தான்.
வண்டியை நெருங்கி லேசாகத் தடவிய துஷ்யந்தின் விழிகள் ஈரமாகின பரத்தின் நினைவில்.
முதன் முதலில் பைக்கைக் கொண்டு வந்து வீட்டின் முன்னால் நிறுத்தியதும் உல்லாசமாகக் கூச்சலிட்டபடி பரத் பைக்கை சுற்றி சுற்றி ஓடியதும், தந்தை மற்றும் மகனின் முதல் பைக் பயணத்தில் சிறுவன் எந்தளவு சந்தோஷமாக இருந்தான் என்பது எல்லாம் துஷ்யந்தின் நினைவுக்கு வந்து அவனை ஆட்டிப் படைத்தது.
பைக்கில் ஏறி அமர்ந்த துஷ்யந்த் தன் மகனுடன் சென்று நேரம் கழித்த ஒவ்வொரு இடத்துக்கும் சென்று சற்று நேரம் இருந்தான்.
நள்ளிரவில் துஷ்யந்த் வீடு வந்து சேர்ந்த போது துஷ்யந்தின் குடும்பத்தினரைத் தவிர அனைவருமே கிளம்பி இருந்தனர்.
நிரஞ்சனாவும் மாலை நேரமே வீட்டுக்குக் கிளம்பி இருந்தாள்.
எப்போதும் தான் வீட்டுக்குள் நுழையவும் ஓடி வந்து தன் காலைக் கட்டிக் கொள்ளும் மகனின் அணைப்புக்கு வெகுவாக ஏங்கினான் துஷ்யந்த்.
பரிமளம் உறங்காமல் அவனுக்காக விழித்திருந்து காத்திருந்தவர், “சாப்பாடு எடுத்து வைக்கட்டாப்பா?” எனக் கேட்டார்.
தாயைக் கவலை கொள்ள வைக்கக் கூடாது என்பதால், “நான் சாப்பிட்டு தான் வந்தேன்மா.” எனப் பொய் உரைத்த துஷ்யந்த், “சகுந்தலா சாப்பிட்டாளா?” எனக் கேட்டான்.
மகன் கூறுவது பொய் என அறிந்து இருந்தும் அவனின் மனநிலையைப் புரிந்து கொண்ட பரிமளம் அதனை விடுத்து, “எங்க கண்ணா? சாப்பிடவே முடியாதுன்னு பிடிவாதம் பிடிச்சவள நிரஞ்சனா தான் கொஞ்சம் அதட்டி உருட்டி வலுக்கட்டாயமா ரெண்டு மூணு வாய் சாப்பிட வெச்சி பாலைக் குடிக்க வெச்சா. திரும்பவும் பையன நினைச்சி அழுதுட்டு இருந்துட்டு இப்போ தான் தூங்கினா. எந்தப் பொண்ணும் அனுபவிக்கக் கூடாத கஷ்டத்த எல்லாம் இந்தச் சின்ன வயசுலயே அனுபவிச்சுட்டா. எப்போ தான் என் பிள்ளைங்களுக்கு ஒரு விடிவு காலம் வருமோ?” என்றார் வேதனையுடன்.
“நீங்க எதையும் யோசிக்காம போய் தூங்குங்க ம்மா. நான் பார்த்துக்குறேன்.” எனத் தாயை அனுப்பி வைத்த துஷ்யந்த் தன் அறைக்குள் நுழைந்த போது சகுந்தலா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
அவளின் உறக்கத்தைக் கலைக்காதவாறு போர்வை ஒன்றையும் தலையணை ஒன்றையும் எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றவன் நிலவொளியில் கட்டாந்தரையில் படுத்துக் கொண்டு நிலவை வெறித்தான்.
‘டாடி… மம்மி பரத்த மிஸ் பண்ணி அழுதாங்கன்னா அவங்கள வெளிய கூட்டிட்டுப் போய் நிலாவ காட்டுங்க. பரத் டாடிக்கும் மம்மிக்கும் நிலாவுல இருந்து கை காட்டுறேன்.’ என்ற மகனின் குரல் செவியில் ஒலிக்கவும் சந்திரனைத் தொடுவது போல் தன் கையை உயர்த்தினான் துஷ்யந்த்.
ஆனால் நிஜம் நெற்றிப்பொட்டில் அறைய, அவனின் விழிகள் ஈரமானது தான் மிச்சம்.
அடுத்து வந்த நாட்களிலும் இவ்வாறே கழிந்தன.
பரிமளமும் சந்திரசேகரனும் எவ்வளவோ கூறியும் இரண்டு நாட்கள் மட்டும் ஓய்வு எடுத்து விட்டு காலையிலேயே மருத்துவமனைக்குக் கிளம்பிச் செல்லும் துஷ்யந்த் நள்ளிரவிற்கு மேல் தான் வீட்டுக்கு வருவான்.
சகுந்தலா வேறு அவனிடம் முகம் கொடுத்துப் பேசாமல் இருக்க, துஷ்யந்த் தன் வீட்டிலேயே தனிமையை உணர்ந்தான்.
பசி, உறக்கம் மறந்து எப்போதும் வேலை வேலை என ஓய்வில்லாமல் சுற்றுபவனைக் கண்டு வேதனை அடைந்த அவனின் பெற்றோருக்கு யார் பக்கம் பேசுவது என்று தான் புரியவில்லை.
போதாக்குறைக்கு சகுந்தலாவை உண்ண வைப்பது வேறு மலையைப் பிரட்டும் காரியமாக இருந்தது.
அடிக்கடி மகனை நினைத்து அழுபவள் திடீர் திடீரென மயங்கி விழுந்து விடுவாள்.
அதற்காகவேணும் துஷ்யந்த் அவளை நெருங்கினால் பார்வையாலேயே அவனை சுட்டெரித்தாள்.
கணவன் மனைவி இருவருமே புத்திர சோகத்தில் இருக்க, ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்க வேண்டியவர்களோ இரு துருவங்களாக இருந்தனர்.
ஏற்கனவே மகனை இழந்த வலியுடன் சேர்த்து தன்னால் தன் மகனைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற துஷ்யந்தின் குற்றவுணர்ச்சியை மேலும் மேலும் அதிகப்படுத்தின சகுந்தலாவின் செயல்கள்.
அதற்காகவே துஷ்யந்த் சகுந்தலாவை விட்டு விலகி இருக்க, அது எவ்வளவு பெரிய தவறு என்று அன்றே அவனுக்குப் புரிய வைத்தான் அவனின் மனைவி.
மருத்துவமனையில் தன் அறையில் தலையில் கை வைத்தவாறு அமர்ந்து இருந்த துஷ்யந்தின் கைப்பேசி வெகு நேரம் ஒலி எழுப்பியது.
முதலில் அதனைக் கவனிக்காத துஷ்யந்த் அப்போது தான் கைப்பேசியை எடுத்துப் பார்த்தான்.
வீட்டில் இருந்து அவனின் தாயும் தந்தையும் தான் மாறி மாறி அழைத்து இருந்தனர்.
என்னவோ ஏதோ என பதட்டத்துடன் அழைப்பை ஏற்று காதில் வைக்க, மறு முனையில் கூறப்பட்ட செய்தியில் அவனின் கையில் இருந்த கைப்பேசி நழுவியது.
சில நொடிகளில் தன்னிலை அடைந்த துஷ்யந்த் வேகமாக மருத்துவமனை வாயிலை நோக்கி ஓடினான்.
அதே சமயம் சந்திரசேகரனின் கார் வந்து நிற்க, அதில் இருந்து மணிக்கட்டில் இருந்து இரத்தம் வடிய மயங்கிக் கிடந்த சகுந்தலாவை தூக்கிக் கொண்டு இறங்கினார் சந்திரசேகரன்.
கூடவே பரிமளமும் நிரஞ்சனாவும் வேறு இருந்தனர் கண்ணீருடன்.
அவசரமாக தந்தையின் கரங்களில் மயங்கிக் கிடந்த மனைவியை வாங்கிக் கொண்டு உள்ளே ஓடினான் துஷ்யந்த்.
துஷ்யந்தின் கண்கள் ஒரு பக்கம் விடாது கண்ணீரைச் சொரிய, கரங்கள் நடுங்க மனைவிக்கு சிகிச்சை அளித்தான்.
நல்ல வேளையாக கையில் ஆழமாகக் கத்தி கிழிக்கப்படவில்லை.
சகுந்தலாவிற்கு சிகிச்சை அளித்து முடித்ததும் பலவீனமாக இருந்தவளுக்கு ட்ரிப்ஸை ஏற்றியவன் என்ன நடந்தது என அறிய வெளியே வந்தான்.
துஷ்யந்த் வாயைத் திறக்கும் முன்னால் அவனை நெருங்கிய நிரஞ்சனா அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
அங்கிருந்த யாருமே இதனைக் கிஞ்சித்தும் எதிர்ப்பார்க்கவில்லை.
ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த நிரஞ்சனா, “உன்ன எல்லாம் என் ஃப்ரெண்ட்ன்னு சொல்லிக்கவே அசிங்கமா இருக்கு துஷ்யந்த். அந்தப் பொண்ணு எந்தளவுக்கு டிப்ரஷன்ல இருந்து இருந்தா வாழவே வேணாம்னு கைய அறுத்துக்கிட்டு இருப்பா? முழுசா ஒரு வருஷம் கூட பழக்கம் இல்லாத உனக்கே உன் பையனோட இழப்பு இவ்வளவு வலிய தருதுன்னா தனி ஆளா அவன பெத்து, வளர்த்து, உடம்பு சரி இல்லாம இருந்த பையன கையிலயே வெச்சிக்கிட்டு ஹாஸ்பிடல் ஹாஸ்பிடலா அலைஞ்சி கடைசியில பட்ட கஷ்டம் ஒன்னுத்துக்கும் அர்த்தம் இல்லாத மாதிரி தன் பையன ஒரேயடியா இழந்த உன் பொண்டாட்டிக்கு எவ்வளவு வலியும் வேதனையும் இருக்கும்? கொஞ்சமாச்சும் அதைப் பத்தி யோசிச்சியா?” எனக் கேட்டாள் கோபமாக.
மரியாதை எல்லாம் காற்றோடு பறந்து போய் விட்டு இருந்தது.
துஷ்யந்த் பதிலுக்கு ஏதோ கூற வர, உடனே அவன் முன் கரத்தை நீட்டி பேச வேண்டாம் என்ற நிரஞ்சனா, “உடனே சொல்லாதே நான் பக்கத்துல போனாலே அவ கோவப்படுறான்னு. என்ன தான் பெரிய கார்டியாலஜிஸ்ட்டா இருந்தாலும் ஹியுமன் சைக்காலஜி படிச்சிருக்க தானே. அவ உன் கிட்ட அவளோட உணர்வுகள வெளிக் காட்டாம ரோட்ல போறவன் கிட்டயா கோவப்பட முடியும்? அப்புறம் புருஷன்னு நீ எதுக்கு இருக்க?” எனக் கேட்கவும் அதிர்ச்சியில் பேச்சற்றுப் போனான் துஷ்யந்த்.
நிஜமாகவே அவன் இவ்வளவு தூரம் யோசிக்கவே இல்லை.
தன் மன வலியையும் விட, குற்றவுணர்ச்சி தான் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருந்தது.
“நான் மட்டும் சரியான நேரத்துக்கு போகலன்னா உன் புள்ள போன இடத்துக்கே உன் பொண்டாட்டியும் போய் இருப்பா.” என நிரஞ்சனா கூறவும், “நிரஞ்சனா…” என அலறி விட்டான் துஷ்யந்த்.
“பேச்சுக்கு சொன்னதுக்கே இவ்வளவு வலிக்குதா? அப்போ அந்தப் பொண்ணுக்கு எந்தளவுக்கு வலிச்சு இருக்கும்? புருஷன்னு பெருசா இருக்க. பொண்டாட்டிய அதட்டியாச்சும் சாப்பிட வைக்கணும்னு தெரியலயா? அவ வீக்கா இருக்கான்னு ஆன்ட்டி எனக்கு கால் பண்ணி கூப்பிட்டாங்க. நல்ல நேரம் நான் போய் பார்க்கவும் உன் பொண்டாட்டி பண்ண முட்டாள் காரியம் என் கண்ணுல விழுந்துச்சு. இல்லன்னா என்ன ஆகி இருக்கும்?” எனக் கேட்ட நிரஞ்சனாவிற்கு சகுந்தலா இருந்த நிலைமை இன்னுமே கண் முன் வந்து அவளை வாட்டியது.
சகுந்தலா அன்று காலையில் இருந்தே ஒரு மாதிரியாக இருந்ததால் அவளின் துணைக்கு நிரஞ்சனாவை அழைத்து இருந்தார் பரிமளம்.
சரியாக நிரஞ்சனா சகுந்தலாவின் அறைக்குள் நுழைந்த நேரம் அவளோ பழம் வெட்ட வைத்து இருந்த கத்தியை எடுத்து மணிக்கட்டை அறுத்து வைத்து இருந்தாள்.
அளவுக்கதிகமாக இரத்தம் வெளியேறியதில் சகுந்தலா மயங்கிக் கிடக்க, நிரஞ்சனாவோ சகுந்தலாவின் நிலையைக் கண்டு அலறி விட்டாள்.
சந்திரசேகரன் உடனே சகுந்தலாவை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல, செல்லும் வழியில் தான் துஷ்யந்திற்கு பல முறை அழைத்து இருந்தார்.
நிரஞ்சனா கூறியதில் இருந்த உண்மையில் கதி கலங்கிப் போய் விட்டான் துஷ்யந்த்.
“நான்… நான்…” என துஷ்யந்த் வார்த்தைகள் வராது துஷ்யந்த் திணற, “டாக்டர்… பேஷன்ட் கண் முழிச்சிட்டாங்க.” என ஒரு நர்ஸ் வந்து கூறவும் அனைத்தும் மறந்து வேகமாக மனைவியிடம் ஓடினான்.

