Loading

மருத்துவமனை வளாகத்தில் கார் நிறுத்தப்பட்டதும் அதில் இருந்து அடித்துப் பிடித்தவாறு இறங்கி ஓடினாள் சகுந்தலா.

அவளை வேகமாகப் பின் தொடர்ந்த பரிமளத்தின் கண்களிலும் கண்ணீர்.

ரிசப்ஷனிஸ்டிடம் கேட்டுக் கொண்டு வேகமாக ஐ.சி.யூவை நோக்கி ஓடிய சகுந்தலா தூரத்தில் ரொஉ இருக்கையில் உள்ளங்கைகளில் முகத்தைப் புதைத்தவாறு அமர்ந்து இருந்த கணவனைக் கண்டதும் தன் ஓட்டத்தை நிறுத்தினாள்.

துஷ்யந்த் அமர்ந்து இருந்த தோற்றமே சகுந்தலாவின் மனதில் பயப்பந்தை உருளச் செய்ய, மெதுவாக அவனை நோக்கி நடந்தாள்.

சகுந்தலாவைப் பின் தொடர்ந்து வந்த பரிமளத்திற்கு மகனின் தோற்றம் மனதைப் பிசைந்தது.

‘உனக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா கடவுளே? என் புள்ளைங்களுக்கு திரும்பத் திரும்ப கஷ்டத்த மட்டும் கொடுக்குறியே… ஐயோ… என் கண்ணே என் பசங்களுக்கு பட்டுடுச்சு போல.’ என மனதுக்குள் கடவுளோடு சண்டை போட்டார்.

மிக அருகில் ஏதோ அரவம் கேட்கவும் தலையை உயர்த்திப் பார்த்த துஷ்யந்தின் கண்கள் சிவந்து போய் இருந்தன.

தன்னையே கேள்வியாக நோக்கிக் கொண்டு இருந்த மனைவியைப் பார்த்ததும் துஷ்யந்த் இவ்வளவு நேரமும் கஷ்டப்பட்டு அடக்கி வைத்து இருந்த கண்ணீர் தங்குதடையின்றி வெளிப்பட்டது.

“எ…என்…னங்க ஆச்சு? பரத்தோட டீச்சர் கால் பண்ணி பரத் சடன்னா நெஞ்ச பிடிச்சிக்கிட்டு மயங்கிட்டான்னு சொன்னாங்க. நீ…ங்க இங்க இப்படி?” எனக் கேட்டாள் சகுந்தலா திக்கித் திணறியவாறு பதட்டமாக.

சகுந்தலாவிற்கு பதில் அளிக்காது அவளை அணைத்து வயிற்றில் முகம் புதைத்தவாறு கண்ணீர் விட்டவனுக்கு தான் ஒரு வைத்தியர் என்பது கூட மறந்து விட்டது.

அந்த அளவுக்கு உடைந்து போய் விட்டு இருந்தான் துஷ்யந்த்.

துஷ்யந்தின் கண்ணீர் சகுந்தலாவின் மனதில் பயப்பந்தை உருளச் செய்ய, வலுக்கட்டாயமாக துஷ்யந்தை தன்னை விட்டு விலக்கினாள்.

“இப்போ என்ன நடந்துச்சுன்னு சொல்றீங்களா? இல்லையா? என் பையன் எங்க?” எனக் கேட்டாள் சகுந்தலா குரலை உயர்த்தி அழுத்தமாக.

துஷ்யந்த் ஐ.சி.யூவை நோக்கி கை காட்ட, அவசரமாக சென்று கண்ணாடிக் கதவு வழியே பார்த்த சகுந்தலாவிற்கு தெரிந்தது எல்லாம் லைஃப் சப்போர்ட் இயந்திரங்களுக்கு மத்தியில் மயக்க நிலையில் இருந்த பரத் தான்.

தன் மகனின் நிலையைக் கண்டதும் சகுந்தலாவின் கால்கள் வலுவிழந்து சட்டென தரையில் மடிந்து அமர்ந்தாள் வெறித்த பார்வையுடன்.

துஷ்யந்தும் பரிமளமும் ஓடி வந்து சகுந்தலாவைத் தாங்கிக் கொள்ள, கணவனின் முகத்தைப் பார்த்த சகுந்தலாவின் பார்வையில் ஆயிரம் கேள்விகள்.

தன்னவளின் பார்வையைத் தாங்க முடியாமல் சட்டென அவளை அணைத்துக் கொண்ட துஷ்யந்த், “ஹார்ட் ரிஜெக்ஷன். பரத்தோட ட்ரான்ஸ்ப்லான்டட் ஹார்ட்ட அவனோட ஓன் இமியூன் சிஸ்டமே அதை ஃபாரின் ஒப்ஜெக்ட்டா நினைச்சு அட்டேக் பண்ணி இருக்கு. சடன்னா ஹார்ட் அட்டாக் போல வந்து தான் ஸ்கூல்ல மயங்கி விழுந்து இருக்கான்.” என்றான் கரகரத்த குரலில்.

அதனைக் கேட்டு சகுந்தலாவும் பரிமளமும் ஏகத்துக்கும் அதிர்ந்தனர்.

“ஆனா சர்ஜரி முடிஞ்சு இத்தனை மாசம் ஆகிடுச்சே துஷ்யந்த். இதுவரை பையன் நல்லா தானே இருந்தான். நாம மந்த்லி செக்கப் கூட பண்ணோமே.” எனக் கேட்டார் பரிமளம் குழப்பமாக.

“ஹார்ட் ரிஜெக்ஷன் ட்ரான்ஸ்ப்லான்ட் பண்ண உடனேயும் நடக்கலாம்… சில மாசத்துக்கு அப்புறமும் நடக்கலாம்… ஏன்? பல வருஷங்களுக்கு அப்புறம் கூட நடக்கலாம். அப்படி நடக்கக் கூடாதுன்னு தான் சர்ஜரிக்கு முன்ன மேஷன்ட்டுக்கு இமியுனோசப்ரசன்ட் மெடிகேஷன்ஸ் கொடுக்குறது. ஆனா சில சமயங்கள்ல அதையும் தாண்டி இப்படி நடக்கும். இப்போ பரத்துக்கும் அது தான் நடந்திருக்கு.” என்றான் துஷ்யந்த் வலி நிறைந்த குரலில்.

“இ…இப்போ என்ன தான் சொல்ல வரீங்க?” எனக் கேட்டாள் சகுந்தலா அமைதியாக.

துஷ்யந்த் அவளின் கேள்விக்குப் பதில் அளிக்காது தலை குனிய, அவனின் சட்டைக் காலரை ஆவேசத்துடன் பற்றிய சகுந்தலா, “இப்போ சொல்லப் போறீங்களா? இல்லையா? என் பையன காப்பாத்த முடியுமா? முடியாதா?” எனக் கேட்டாள் கண்ணீருடன் ஆவேசமாக.

அதே நேரம் சந்திரசேகரனும் வேகமாக அவ்விடம் வர, கணவனிடம் கண்ணீருடன் பரிமளம் நடந்ததைக் கூறவும்‌ சந்திரசேகரனின் கண்களும் கலங்கின.

தன்னவளின் கோபத்தைக் கூடத் தாங்கிய துஷ்யந்தால் அவளின் கண்ணீரைத் தாங்க முடியவில்லை.

சகுந்தலாவைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொள்ள முயன்ற துஷ்யந்தை வெறி கொண்டவளாகத் தள்ளி விட முயன்றாள் சகுந்தலா.

ஆனால் ஆண்மகன் அவனின் வலிமைக்கு முன்னால் பெண்ணவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

சகுந்தலாவை இறுக்கி அணைத்துக் கொண்ட துஷ்யந்த், “என்னால முடிஞ்ச எல்லாத்தையும் பண்ணிட்டு தான் இருக்கேன் சகுந்தலா. ஆ…ஆனா பரத்துக்கு சிவியர் ஹார்ட் ரிஜெக்ஷன். சோ இப்போதைக்கு ECMO மெஷின் பொருத்தி இருக்கோம். கூடவே இமியுனோசப்ரசன்ட்ஸ இன்க்ரீஸ் பண்ணி இருக்கோம். அதைக் கூட குறிப்பிட்ட அளவுக்கு மேல இன்க்ரீஸ் பண்ண முடியாது. அது நிலைமைய இன்னும் மோசமாக்கிடும். இன்னும் ஒரு சர்ஜரி பண்ண வேண்டி இருக்கு. ஆனா அதை உடனடியா பண்ண பரத்தோட வயசு தடையா இருக்கு. அவனோட உடம்பு இதை எல்லாம் தாங்க கொஞ்சம் டைம் எடுக்கும். அதுவரைக்கும் மெஷின் போட்டு தான் வெச்சிருக்கணும். அதுக்கு அப்புறம் கூட ரொம்ப கவனமா தான் பார்த்துக்கணும். ஏன்னா திரும்பவும் ஒரு ஹார்ட் ட்ரான்ஸ்ப்லான்ட் பண்ண முடியாது. அது ரொம்ப ரிஸ்க். இதுக்கு மேல பரத்துக்கு கான்ஷியஸ் வந்த அப்புறம் தான் எதையும் சொல்லலாம்.” என்றான் கண்ணீருடன்.

அதனைக் கேட்டு சகுந்தலா கதறி அழுதாள்.

பார்ப்போர் மனதையே அசைத்துப் பார்க்கும் அளவிற்கு வலி நிறைந்த ஒரு தாயின் கதறல் அது.

துஷ்யந்திற்கு மனைவியை சமாளிக்கவா? மகனைப் பார்க்கவா? எனப் புரியாமல் குழம்பித் தவித்தான்.

“எனக்கு என் பையன் வேணும்ங்க. ஏன் என் பையனுக்கு மட்டும் இவ்வளவு கஷ்டம்? இந்தப் பாவி வயித்துல பிறந்ததனாலயா? ஐயோ… சின்னக் குழந்தைங்க அவன். எப்படி இவ்வளவு வலியையும் தாங்குவான் அவன்? என் பையன் இல்லன்னா அப்புறம் நான் வாழுற வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லாம போயிடுமே. என் பையனுக்காக தானே இவ்வளவு கஷ்டத்தையும் பொறுத்துக்கிட்டேன் நான்.” என்றவாறு தலையில் அடித்துக் கொண்டு கதறிய சகுந்தலா துஷ்யந்தின் மடியிலேயே மயங்கிச் சரிந்தாள்.

உடனே இன்னொரு அறையில் சகுந்தலாவிற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

துஷ்யந்தின் பெற்றோரோ தம் பிள்ளைகளின் நிலையைக் கண்டு உடைந்து போய் விட்டனர்.

“அம்மா… நீங்க போய் சகுந்தலா கூட இருங்க. அவ மயக்கத்துல இருக்குறது தான் நல்லது. ஏன்னா இதை எல்லாம் பார்த்தா அவளால தாங்க முடியாது.” என்றான் துஷ்யந்த் தன் வலியை மறைத்துக் கொண்டு.

“நீ எப்படிக் கண்ணா வாங்கிட்டு இருக்க?” எனக் கேட்டார் பரிமளம் கண்ணீருடன் மகனின் கன்னத்தைத் தடவி.

உடனே தாயை அணைத்துக் கொண்ட துஷ்யந்த் மௌனமாகக் கண்ணீர் சிந்தினான்.

சந்திரசேகரன் ஒரு பக்கம் வந்து நின்று மகனுக்கு ஆதரவாக அவனின் தோளைத் தட்டிக் கொடுத்தார்.

பரிமளம் சகுந்தலாவிற்குத் துணையாக சென்று விட, சந்திரசேகரன் மகனுக்குத் துணையாக நின்றார்.

அவர் நன்றாக அறிவார் தானும் இல்லாவிட்டால் மகன் முற்றிலும் உடைந்து விடுவான் என்று.

சகுந்தலாவிற்கு சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்த மருத்துவர் துஷ்யந்திடம் வந்து ஏதோ கூறி விட்டுச் செல்ல, அவனின் கண்ணீரின் அடர்த்தி அதிகரித்தது.

சற்று நேரம் கழித்து பரத் மெதுவாக இமைகளைப் பிரிக்க, அருகில் சோகமே உருவாக அமர்ந்து இருந்த தந்தையைப் பார்த்து பெரிதாகப் புன்னகைத்தான் சிறுவன்.

துஷ்யந்த் பாய்ந்து மகனை அணைத்துக் கொண்டான் கண்ணீருடன்.

“அப்பா…” என பரத் அழைக்கவும் துஷ்யந்த் தலையை உயர்த்திப் பார்க்க, “எனக்கு இதெல்லாம் வேணாம்.” என்றான் தன்னைச் சுற்றி இருந்த மருத்துவ சாதனங்களைக் கை காட்டி முகத்தைச் சுருக்கியபடி.

பரத்தின் தலையைத் தடவி விட்ட துஷ்யந்த், “கொஞ்சம் நாளைக்கு தான் டா கண்ணா. அப்பா சீக்கிரம் பரத்துக்கு ட்ரீட்மென்ட் முடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன். என் சேம்ப் குட் போய் தானே.” என்றான்.

“இங்க ரொம்ப வலிக்கிது டாடி…” என வலியில் முகத்தை சுளித்தவாறு தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டினான் பரத்.

மகனின் வேதனை கண்டு துஷ்யந்தின் விழிகள் ஈரமாகின.

“ஒன்னும் இல்ல கண்ணா. சீக்கிரம் சரி ஆகிடும்.” என்றான் துஷ்யந்த் ஆறுதலாக.

“மம்மி வேணும்…” என பரத் கூறவும் துஷ்யந்த் உடனே தன் தாய்க்கு அழைத்து சகுந்தலாவை அழைத்து வரக் கூறினார்.

சில நிமிடங்களுக்கு முன்னால் தான் மயக்கம் தெளிந்து எழுந்து இருந்தாள் சகுந்தலா.

எழுந்ததில் இருந்தே பரத்தைப் பார்க்க வேண்டும் என்று தான் பிடிவாதம் பிடித்து இருந்தாள்.

சற்று நேரத்தில் சகுந்தலா துஷ்யந்தின் பெற்றோருடன் அறைக்குள் நுழைந்தாள்.

ஓடிச் சென்று மகனை அணைத்துக் கொண்ட சகுந்தலா மௌனமாகக் கண்ணீர் வடித்தாள்.

“தாத்தா… பாட்டி…” என அழைத்தவாறு பரத் புன்னகைக்க, துஷ்யந்தின் பெற்றோரின் மனம் கனத்தது.

அம் மூவருக்கும் தனிமை தந்து விட்டு சந்திரசேகரன் தம்பதி வெளியே கிளம்ப, “அழாதீங்க மம்மி…” என்ற பரத் தன் குட்டிக் கரத்தால் தாயின் கண்ணீரைத் துடைத்து விட்டான்.

பரத்தின் செயலில் சகுந்தலாவின் கண்ணீர் அதிகரித்தது தான் மிச்சம்.

“டாடி… மம்மிய அழ வேணாம் சொல்லுங்க.” என பரத் துஷ்யந்தைப் பார்த்துக் கூற, துஷ்யந்திற்கு வார்த்தைகளைக் கோர்ப்பதே கடினமாக இருந்தது.

தன் இரு பக்கமும் அமர்ந்து இருந்த பெற்றோரின் கரங்களை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்ட பரத் எதுவும் பேசாது புன்னகையுடன் கண்களை மூடிக் கொண்டு உறங்கினான்.

அந்தளவுக்கு சிறுவனின் உடல் சோர்வாக இருந்தது.

அடுத்த இரண்டு நாட்களுக்கும் இதுவே தொடர்கதை ஆனது.

சகுந்தலா பேசுவதே அரிதானது.

எப்போதும் ஏதோ யோசனையில் இருந்தாள்.

பரத்தின் அருகில் இருக்கும் போது மௌனமாகக் கண்ணீர் சிந்துவாள்.

துஷ்யந்திடம் கூட அவன் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் ஒற்றை வார்த்தையில் பதில் வரும்.

ஐ.சி.யூவில் பரத்தை வைத்து இருப்பதால் அடிக்கடி யாரும் உள்ளே நுழையவும் முடியாது.

ஏதோ துஷ்யந்த் இருப்பதால் சகுந்தலாவை மாத்திரம் சற்று நேரத்திற்கு அனுமதிப்பர்.

அப்போதும் கூட துஷ்யந்தும் பரத்தும் தான் ஏதாவது பேசிக் கொண்டு இருப்பர்.

சகுந்தலா அமைதியாகக் கேட்டுக் கொள்வாள்.

பரத் இருக்கும் நிலையில் அதிக நேரம் அவனால் பேசக் கூட முடியவில்லை.

பேசினால் மூச்சு வாங்குவது போல் இருக்கும்.

அதனால் பெரும்பாலும் துஷ்யந்த் தான் தன் வலியை மறைத்துக் கொண்டு மகனுடன் ஏதாவது கதை பேசுவான்.

அன்று இரவு துஷ்யந்த் இரவு நேரப் பணியில் இருக்க, சகுந்தலா பரிமளத்துடன் பரத்தின் அறைக்கு வெளியே அமர்ந்து பரிமளத்தின் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டு இருந்தாள்.

சந்திரசேகரன் வீட்டுக்கு சென்றிருந்தார்.

திடீரென பரத்தின் அறையில் இருந்த தாதி வேகமாக வெளியே ஓடவும் உறக்கம் கலைந்து எழுந்த பரிமளமும் சகுந்தலாவும் என்னவோ ஏதோ எனப் பதறினர்.

வெளியே சென்ற தாதி இன்னொரு மருத்துவரை அழைத்து வர, வேகமாக பரத்தின் அறைக்குள் நுழைவதும் வெளியே வருவதுமாய் இருந்தவர்களைப் பார்த்து இருவருக்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது.

அவர்களின் கேள்விகளுக்குக் கூட யாரும் பதில் அளிக்கும் நிலைமையில் இருக்கவில்லை.

சற்று நேரத்தில் துஷ்யந்த் எங்கிருந்தோ வேகமாக ஓடி வர, கணவனிடம் ஓடிய சகுந்தலா, “துஷ்யந்த்… துஷ்யந்த்… என்னாச்சு? ஏன் எல்லாரும் டென்ஷனா இருக்காங்க? பரத்துக்கு என்னாச்சு?” எனக் கேட்டாள் பதட்டமாக.

“சகுந்தலா நான் வந்து பேசுறேன். இப்போ டைம் இல்ல. அம்மா… பார்த்துக்கோங்க.” என அவசரமாகக் கூறிய துஷ்யந்த் சகுந்தலாவைப் பரிமளத்திடம் விட்டு விட்டு பரத்தைக் காணச் சென்றான்.

அங்கோ பரத்திற்கு சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தவர்கள் பதட்டத்தின் உச்சத்தில் இருந்தனர்.

துஷ்யந்த் உள்ளே நுழையவும் அவனை நெருங்கிய இன்னொரு மருத்துவர், “ஹார்ட் பீட் ரொம்ப லோ ஆகிட்டு போகுது டாக்டர். எவ்வளவோ ட்ரை பண்ணியும் ஸ்டேபிள் பண்ண முடியல. பேஷன்ட்டோட பீபி வேற லோ ஆகி இருக்கு. எந்த ட்ரீட்மென்ட்டுக்கும் பேஷன்ட்டோட பாடி ரெஸ்பான்ட் பண்ணுறது இல்ல. பேஷ்ன்ட்டும் காப்பரேட் பண்ணுறார் இல்ல.” என்றார் பதட்டமாக.

துஷ்யந்த் வேகமாக பரத்தை நெருங்க, தந்தையைக் கண்டதும் இவ்வளவு நேரமும் கஷ்டப்பட்டு மூச்சு வாங்கிக் கொண்டு இருந்த பரத் துஷ்யந்தின் கரத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு, “மம்மி… மம்மி…” என்றான் திக்கித் திணறியவாறு.

“மம்மிய வர சொல்றேன் கண்ணா. கொஞ்சம் நேரம் ட்ரீட்மென்ட்டுக்கு காப்பரேட் பண்ணுங்க. அப்பா இருக்கேன்ல.” எனக் கண்ணீருடன் கூறிய துஷ்யந்த் மற்ற மருத்துவருக்குக் கண் ஜாடை காட்டினான்.

உடனே மறுப்பாகத் தலை அசைத்த பரத், “வேணாம்… வேணாம்… மம்மி வேணும்… டாடி… மம்மி வேணும்…” என்றான் மூச்சு வாங்க.

தான் இப்போது மறுத்தால் பரத் இன்னுமே சிரமப்பட்டு பேச முயற்சிப்பான் என்பதால் உடனே சரி எனத் தலை அசைத்தான்.

ஒரு பக்கம் பரத்திற்கு சிகிச்சை நடக்க, பரத்தோ துஷ்யந்தின் கரத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டு இருந்தான்.

பரத்தின் நிலைமை மோசமடைந்து கொண்டே செல்ல, பரத்தைப் பிடித்து இருந்த துஷ்யந்தின் கரம் நடுங்கியது.

நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவது போல் பரத்துக்குப் பொருத்தி இருந்த மருத்துவ சாதனங்களும் சத்தமிட்டன.

எவ்வளவோ முயன்றும் பரத்தின் இதயத் துடிப்பு சீராகவே இல்லை.

துஷ்யந்த் கண்ணீருடனே பரத்திடம் பேச்சுக் கொடுத்தவாறு அவனைக் கட்டுப்படுத்த முயன்றான்.

பரத்திற்கு சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்த மருத்துவர் சற்று நேரம் பார்த்து விட்டு துஷ்யந்தைப் பார்த்து இட வலமாகத் தலை அசைத்தார் சோகமாக.

“நோ நோ… என் பையனுக்கு நான் எதுவும் ஆக விட மாட்டேன். சேம்ப்… சேம்ப்… இங்க பாருங்க. டாடி இருக்கேன்ல.” என்ற துஷ்யந்த் தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்டு பரத்திற்கு சிகிச்சை அளிக்க முயன்றான்.

தந்தையாக பரத்தின் நிலைமையை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் ஒரு மருத்துவராக அடுத்து என்ன நடக்கும் என்பதை உணர்ந்து தான் இருந்தான் துஷ்யந்த்.

பரத்திற்கு சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்த மருத்துவரும் தாதியர்களும் அங்கிருந்து வெளியேறி சகுந்தலாவை மாத்திரம் உள்ளே அனுப்பி வைத்தனர்.

ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து துஷ்யந்தின் கரத்தைப் பிடித்து இருந்த மகனைக் கண்டதும் சகுந்தலாவின் நடை தடைப்பட்டது.

சகுந்தலாவைக் கண்டு கொண்ட பரத் அவளை நோக்கிக் கரத்தை நீட்ட, வேகமாக வந்து அதனைப் பற்றிக் கொண்டாள் சகுந்தலா.

துஷ்யந்த் தடுப்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் தன் முகத்தில் இருந்த ஆக்சிஜன் மாஸ்க்கைக் கழட்டிய பரத், “டாடி… மம்மிய… பார்த்துக்கோங்க. மம்மி பா…வம். பரத்தால மம்மி ரொம்பவே… அழுதுட்டாங்க.” என்றான் திக்கித் திணறி.

அதனைக் கேட்டு சகுந்தலா கண்ணீர் வடிக்க, “சேம்ப்… அப்படி எல்லாம் பேசக் கூடாது. என் பையனுக்கு ஒன்னும் இல்ல.” என்றான் துஷ்யந்த் தன் வலியை மறைத்துக் கொண்டு.

தந்தையின் வார்த்தைகளைக் கேட்டு வலியிலும் புன்னகைத்த சிறுவன் தாயின் கரத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டான்.

“மம்மி… டாடி கூட.. சண்டை போடாதீங்க. டாடி பாவம்… பரத்துக்கு மம்மி கூடவே… இருக்…கணும் போல இருக்கு.” என்றான் பரத் கண்ணீருடன்.

“ஐயோ… பரத்… மம்மிக்கும் உன்ன விட்டா யாரும் இல்ல பரத்.” எனக் கதறினாள் சகுந்தலா.

துஷ்யந்திற்கோ இதயத்தைக் கசக்கிப் பிழிவது போல வலித்தது.

“டாடி… மம்மி… ஐ… லவ் யூ… பரத்து…க்கு ரொம்…ப வலிக்கிது மம்மி. இ…தெல்லாம் வேணாம்.” எனத் தன்னைச் சுற்றி இருந்த மருத்துவ சாதனங்களைக் காட்டிய பரத், “பரத் எல்லாரையும்… மிஸ் பண்…ணுவேன். தாத்தா… பாட்…டி… பரத்தோட ஃப்ரெண்ட்ஸ்… எல்லாரையும்…” என்றான்.

ஒவ்வொரு வார்த்தைக்கு இடையிலும் பரத்திற்கு மூச்சு வாங்கியது.

“மம்மி… ந…ம்ம பக்கத்து வீட்டுப் பாப்…பா இறந்த..ப்போ மம்மி சொன்..னீங்க தானே சாமிக்கு சின்னப் பசங்கன்னா… ரொம்பப் பிடிக்…கும்னு. அப்போ சாமி…க்கு பரத்…தையும் பிடிச்சு இருக்…கா மம்மி?” என பரத் கேட்கவும் கதறி விட்டாள் சகுந்தலா.

துஷ்யந்த் மகனின் கரத்தை அழுத்தமாகப் பற்றியவாறு கண்ணீர் வடிக்க, “டாடி… மம்மி அழு..தா வெளிய கூட்…டிட்டுப் போய்… மம்மிக்..கு நிலாவ காமிங்க. பரத் நிலால இருந்…து மம்மியையும் டா…டியையும் பார்த்து கை காட்…டுவேன். டாடி… உங்க சேம்ப்… ப்ரேவ் போய்… பார்த்…தீங்களா? அழவே இல்ல.” என வெள்ளந்தியாகப் புன்னகைத்தான் சிறுவன்.

கண்ணீருடன் ஆமோதிப்பாகத் தலை அசைத்த துஷ்யந்த் பரத்தை அணைத்துக் கொண்டு, “அப்பாவ மன்னிச்சிடு கண்ணா…” என்றான் கதறலாக.

அதற்கு மேல் அவனாலும் தன் வேதனையை மறைக்க முடியவில்லை.

பேசிக் கொண்டு இருக்கும் போதே பரத்திற்கு வேகமாக மூச்சு வாங்கத் தொடங்கியது.

பரத்தின் இதயத் துடிப்பு வேகத்தைக் காட்டிக் கொண்டு இருந்த மானிட்டர் பரத்தின் இதயத்துடிப்பு வேகமாகக் குறைவதைக் காட்டியது.

“பரத்… பரத்…” என சகுந்தலாவும் துஷ்யந்த்தும் பதற, “மம்மி… டாடி… கிஸ் மீ…” என்றான் பரத் புன்னகையுடன்.

மறு நொடியே துஷ்யந்த், சகுந்தலா இருவரும் பாய்ந்து பரத்தை அணைத்துக் கொண்டு அவன் முகம் முழுவதும் முத்தமிட்டனர்.

அதனைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட பரத் இருவரையும் தன் அருகில் அழைத்து அவர்களது கன்னத்தில் மாறி மாறி அழுத்தமாக முத்தமிட்டவன் துஷ்யந்தினதும் சகுந்தலாவினதும் கரங்களை ஒன்றாகச் சேர்த்துப் பிடித்து, “டாடி… மம்மி… நீங்க ரெண்..டு பேரும் தான் வேல்ட் பெஸ்ட்… மம்மி.. அன்ட்.. டாடி. ஐ… லவ்‌ யூ… சோ… மச்…” எனப் புன்னகையுடன் கூறியவன் நீண்ட மூச்சை இழுத்து வெளி விட்டவாறு தன் கண்களை மூடிக் கொண்டான்.

இவ்வளவு நேரமும் அவ் அறையை நிறைத்து இருந்த மருத்துவ சாதனங்களின் சத்தம் கூட அப்படியே நின்று விட்டன.

இதயத்துடிப்பு மானிட்டரில் நீண்ட கோடு ஒன்று சத்தமாக ஓட, துஷ்யந்த் மற்றும் சகுந்தலா எனும் காதல் காவியத்தை இணைக்க எழுதப்பட்ட பரத் என்ற அத்தியாயம் அத்துடன் நிறைவுற்றது.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
19
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்