Loading

மூவரும் வீட்டை அடைந்த நேரம் பரத் ஏற்கனவே உறக்கத்தின் பிடியில் இருக்க, சகுந்தலாவின் கரங்களில் இருந்த பரத்தை வாங்கிக் கொண்டு வீட்டினுள் நுழைந்த துஷ்யந்த் பரத்தை அவன் அறையில் கொண்டு சென்று படுக்க வைத்தான்.

“இங்க ஏன்?” எனக் குழப்பமாகக் கேட்ட சகுந்தலாவிற்கு வெறும் புன்னகையையே பதிலாகக் கொடுத்த துஷ்யந்த் அவளின் கை பிடித்து தன் அறைக்கு அழைத்துச் சென்றான்.

ஒன்றும் புரியாமல் துஷ்யந்த் இழுத்த இழுப்புக்கு சென்ற சகுந்தலாவின் கரத்தை தம் அறையை அடைந்ததும் விடுவித்த துஷ்யந்த், “நீ இங்க ஃப்ரெஷ் ஆகு. நான் பக்கத்து ரூம்ல போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன். நான் வரும் வரை தூங்கிடாதே. வெய்ட் பண்ணு. ப்ளீஸ்.” என்று விட்டு அங்கிருந்து அகன்றான்.

துஷ்யந்த் குளித்து உடை மாற்றி வந்து பார்க்கும் போது சகுந்தலா இன்னுமே குளியலறைக்குள் இருக்க, அவனுக்குத் தான் பொறுமை இருக்கவில்லை.

அதுவும் கடற்கரையில் வைத்து சில நொடிகளே என்றாலும் சகுந்தலாவுடன் இருந்த நெருக்கம் அவனது உணர்வுகளைக் கிளர்ந்து எழ வைத்து இருந்தது.

சற்று நேரம் பால்கனிக்கு சென்ற துஷ்யந்த் முழு நிலவில் தெரிந்த தன்னவளின் அழகு முகத்தை ஆசையோடு ரசித்தான்.

அவனின் மனமோ சகுந்தலாவை மீண்டும் சந்தித்ததில் இருந்து இப்போது வரை நடந்த அனைத்தையும் ஒவ்வொன்றாக மீட்டிப் பார்த்தது.

குளியலறையில் இருந்து வெளியே வந்த சகுந்தலாவிற்கு பால்கனிக்கும் செல்லும் வழியில் போடப்பட்டு இருந்த திரைச்சீலையால் பால்கனியில் துஷ்யந்த் நின்று இருப்பது தெரியவில்லை.

துஷ்யந்த் இன்னும் அறைக்குத் திரும்பவில்லை என நினைத்துக் கொண்டு தலையைத் துவாலையால் துவட்டிய சகுந்தலா மிச்சம் இருந்த ஈரத்தை அகற்ற ஹேர் ட்ரயரைப் போட்டுக் கொண்டு ட்ரெஸிங் டேபிளின் முன்னால் அமர்ந்தாள்.

இங்கு பால்கனியில் நின்று இருந்த துஷ்யந்திற்கோ அறையில் கேட்ட அரவம் தன்னவளின் இருப்பை உணர்த்த, முகத்தில் புன்னகையுடன் சத்தம் காட்டாது பால்கனி கதவை மூடி விட்டு அறைக்குள் நுழைந்தான்.

சகுந்தலா தலையைக் குனிந்து கொண்டு முடியை உலர வைத்துக் கொண்டு இருந்ததால் அவளின் பின்னால் துஷ்யந்த் வந்து நின்றதை அவள் அறியவில்லை.

திடீரென அவளது பின்னங்கழுத்தில் சூடான மூச்சுக்காற்று உரசவும் சட்டென விழிகளை உயர்த்தி தன் முன்னால் இருந்த கண்ணாடியை நோக்க, அவளுக்குப் பின்னே மிக நெருக்கமாக நின்று இருந்தான் துஷ்யந்த்.

சகுந்தலா அவசரமாக எழுந்து நிற்க முயல, அவளின் தோள்களைப் பிடித்து எழ விடாமல் செய்த துஷ்யந்த் சகுந்தலாவின் கரத்தில் இருந்த ஹேர் ட்ரயரை வாங்கி அவள் விட்ட வேலையைத் தொடர்ந்தான்.

துஷ்யந்தின் விரல்கள் சகுந்தலாவின் அடர்ந்த கார் கூந்தலுக்குள் நுழையும் ஒவ்வொரு முறையும் சகுந்தலாவின் உடலில் உஷ்ணம் ஏறியது.

அதற்கு மேல் தாங்க முடியாமல் சட்டென துஷ்யந்தின் கரத்தை அழுத்தமாகப் பற்றித் தடுத்தவளோ, “எ…என்ன பண்ணுறீங்க?” எனக் கேட்டாள் மெல்லிய குரலில்.

“பார்த்தா தெரியலயா?” எனக் குறும்பாகக் கேட்ட துஷ்யந்த் ஹேர் ட்ரயரை ட்ரெஸிங் டேபிளில் வைத்து விட்டு சகுந்தலாவின் முன்னே வந்து நின்றான்.

துஷ்யந்தின் பார்வை வீச்சைத் தாங்க முடியாது சகுந்தலா விழிகளைத் தாழ்த்த, அவளின் தாடையைப் பற்றிய துஷ்யந்த் சகுந்தலாவின் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பினான்.

சகுந்தலாவோ இமைகளைப் பிரிக்காது இருக்கவும் மெதுவாக சகுந்தலாவின் முகத்தை நோக்கிக் குனிந்த துஷ்யந்த் மூடி இருந்த சகுந்தலாவின் இமைகள் மீது அழுத்தமாக இதழ் பதித்தான்.

இதனை எதிர்ப்பார்க்காத சகுந்தலா இமைகளை சட்டெனப் பிரித்து துஷ்யந்தை அதிர்ச்சியுடன் நோக்கினாள்.

சகுந்தலா தன்னைப் பார்க்கவும் ஒற்றைக் கண் அடித்து புன்னகைத்த துஷ்யந்த் புருவங்களை உயர்த்தி என்ன என்று கேட்கவும் இட வலமாகத் தலை ஆட்டினாள் சகுந்தலா.

பின் சட்டென எழுந்த சகுந்தலா அங்கிருந்து செல்வதற்காக ஒரு அடி எடுத்து வைக்க, அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்ட துஷ்யந்தின் பிடி இறுகியது.

தன்னவனின் நெருக்கத்தில் சகுந்தலாவின் கன்னங்கள் வெட்கச்சதுப்பைப் பூசிக்கொள்ள, “ஐ நீட் யூ சகுந்தலா…” என்றான் துஷ்யந்த் கரகரப்பான குரலில் சகுந்தலாவின் செவியில்.

அதனைக் கேட்டு சகுந்தலா எச்சில் கூட்டி விழுங்க, அவளைத் தன் பக்கம் திருப்பிய துஷ்யந்த் சகுந்தலாவின் கன்னங்களைப் பற்றி, “அதுக்கு முன்னாடி நான் உன் கிட்ட மனசு விட்டுப் பேசணும் சகுந்தலா. நமக்கு மனசு விட்டுப் பேச நேரமே கிடைக்கல. நம்ம கல்யாணம் கூட அவசரகதியில நடந்தது. அன்னைல இருந்து இப்போ வர ஓடிட்டே இருக்கோம். கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமே.” என்கவும் சம்மதமாகத் தலை அசைத்தாள் சகுந்தலா.

உடனே சகுந்தலாவைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்ட துஷ்யந்த் அவளைத் தூக்கிச் சென்று கட்டிலில் அமர்த்தி விட்டு தானும் அவளருகே அமர்ந்து கொண்டான்.

சகுந்தலா அமைதியாக இருக்கவும் அவளின் கரங்களை எடுத்து தன் உள்ளங்கைகளுக்குள் புதைத்துக் கொண்ட துஷ்யந்த் சிறு மௌனத்துக்குப் பின், “முதல்ல நீ ஒரு விஷயத்த புரிஞ்சிக்கணும் சகுந்தலா. ஏன்னா நீ சொன்னாலும் சொல்லலன்னாலும் இந்த ஒரு விஷயம் எப்பவும் உன் மனசைப் போட்டு அரிச்சிட்டே இருக்கும்.” என்று கூறவும் அவனைக் குழப்பமாக நோக்கினாள் சகுந்தலா.

“பரத் சொல்லித் தான் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா அது மட்டும் தான் காரணம் இல்ல. நான் உன் மேல வெச்சிருந்த காதல் தான் நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கவும் இதோ இப்போ உன் பக்கத்துல இப்படி இருக்கவும் காரணம்.” என துஷ்யந்த் கூறவும் சகுந்தலாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.

கூடவே சகுந்தலாவின் விழிகளில் கண்ணீர் குளம் கட்ட, துஷ்யந்த் அது எதையும் கவனிக்காமல் சகுந்தலாவின் கரத்தில் பார்வையைப் பதித்தபடி பேசிக் கொண்டு இருந்தான்.

சகுந்தலாவைப் பார்த்ததும் அவள் மீது காதல் கொண்டதும் பின் பரத் பற்றி அறிந்ததும் தன் காதலை‌ உள்ளுக்குள் புதைத்ததும் என எல்லாமே கூறினான் துஷ்யந்த்.

“எங்க என் ஒருத்தனோட காதல் என் பேரன்ட்ஸ் உட்பட உன்னையும் இந்த சமூகத்துக்கு மத்தியில சங்கடப்படுத்திடுவேனோன்னு தான் என் காதல நான் வெளிப்படுத்தல. நிரஞ்சனா கிட்ட கூட உன்ன பத்தி எல்லாமே சொல்லித் தான் அவளுக்கு அது பிரச்சனை இல்லன்னு சொன்ன அப்புறம் தான் கல்யாணத்துக்கே ஒத்துக்கிட்டேன். ஆனா அதுக்கு அப்புறம் கூட அவ கிட்ட சொன்னது போல என்னால உன்ன மறக்க முடியல. உன்ன விட்டு விலகிப் போறத விட பரத்த விட்டு விலகிப் போகணும் அப்படிங்குறது தான் எனக்கு இன்னும் கஷ்டமா இருந்தது. ஆனா இப்போ தான் அதுக்கு காரணம் என்னன்னு புரியுது. ஒவ்வொரு தடவையும் நீ அழும் போது உன்ன கட்டிப் பிடிச்சு ஆறுதல் சொல்லணும் போல இருக்கும். அப்போ எல்லாம் என்னைக் கட்டுப்படுத்துறதே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அதுவும் அந்த ரிஷிகேஷ் திரும்பவும் உன் வாழ்க்கைல வந்ததும் இல்லாம நீ என் கிட்டயே அவன் பரத்தோட அப்பான்னு சொல்லவும் என்னால என் கோவத்த கன்ட்ரோல் பண்ணவே முடியல. அதுவும் நான் பரத்துக்கு ஜஸ்ட் ஒரு டாக்டர் தான்னு சொன்னத என்னால ஏத்துக்கவே முடியல. அதனால தான் நான் உங்க ரெண்டு பேரையும் சந்திக்கிறதையே தவிர்த்தேன். ஆனா அது எவ்வளவு பெரிய தப்புன்னு ஹாஸ்பிடல்ல உன்ன அப்படி ஒரு நிலமைல பார்த்த அப்புறம் தான் புரிஞ்சது.” என்ற துஷ்யந்தின் கண்கள் சிந்திய கண்ணீர் சகுந்தலாவின் கரத்தில் பட்டுத் தெறித்தது.

அப்போது கூட சகுந்தலா கண்ணீருடன் துஷ்யந்தைத் தான் வெறித்துக் கொண்டு இருந்தாள்.

தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சகுந்தலாவின் முகம் பார்த்த துஷ்யந்த் அவளின் கரங்களை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டு, “இதுக்கு மேல என்னால சத்தியமா முடியல டி. மூச்சு முட்டுற அளவுக்கு உன் மேல எனக்கு காதல் கொட்டிக் கிடக்குது. இதுக்கு மேலயும் அதை எனக்குள்ளயே வெச்சிட்டு இருந்தா எங்க என் ஹார்ட்டே வெடிச்சிடுமோன்னு பயமா இருக்குடி.” என்றான் கலங்கிய குரலில்.

துஷ்யந்தின் பிடியில் இருந்த தன் கரங்களை விடுவித்துக் கொண்ட சகுந்தலா மறு நொடியே தன் இரு கரங்களாலும் துஷ்யந்தைப் போட்டு மாறி மாறி அடித்தாள்.

அதுவும் கதறி அழுது கொண்டே துஷ்யந்தின் கன்னம், நெஞ்சு, கைகள் என மாறி மாறி அடித்தாள்.

திடீரென கதறி அழுது கொண்டே தன்னை அடிக்கும் மனைவியைப் புரியாமல் நோக்கிய துஷ்யந்த், “என்னாச்சு சகுந்தலா?” எனக் கேட்டான் பதட்டமாக.

“ஏன் டா இப்படி பண்ண? ஏன் இப்படி பண்ண? முன்னாடியே சொல்லி இருக்கலாமே.” எனக் கதறிய சகுந்தலா துஷ்யந்தை அடிப்பதை நிறுத்தவே இல்லை.

பாவம் துஷ்யந்திற்குத் தான் எதுவுமே புரியவில்லை.

“என்னாச்சுன்னு சொல்லு சகுந்தலா.” எனக் குரலை உயர்த்திய துஷ்யந்த் சகுந்தலாவின் கரங்கள் இரண்டையும் இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள, “இப்போ வந்து காதலிக்கிறேன்னு சொல்ற. நான் ஸ்கூல் ஃபேர்வெல் அன்னைக்கு கொஞ்சம் தனியா பேச வேண்டி இருக்குன்னு கூப்பிட்டப்போவே வந்து இருக்கலாமே. அப்படி நீ வந்து இருந்தா அந்த ரிஷிகேஷால நான் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க மாட்டேன்ல. பார்த்ததுமே உனக்குள்ள காதல் வந்திடுச்சுன்னு சொல்ற.‌ ஏன் அப்போ அந்தக் காதல் உனக்கு முன்னாடியே என் மேல வரல என்னைப் போல?” எனக் கேட்டாள் சகுந்தலா ஆதங்கமாக.

அவளால் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

சகுந்தலாவின் வார்த்தைகளில் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றான் துஷ்யந்த்.

“நீ….நீ… எ…என்…ன சொல்ற? கா…தலிச்சியா?” எனக் கேட்டான் துஷ்யந்த் திக்கித் திணறி நம்ப முடியாத பாவனையில்.

“ஆமா ஆமா ஆமா… ஸ்கூல் டேய்ஸ்ல இருந்து லவ் பண்ணுறேன். காலேஜ் போனப்போ கூட என் மனசுல உன்ன தவிர யாருக்கும் இடம் கொடுக்கல நான்.‌ எத்தனை தடவை உனக்கு கால் பண்ணிட்டு நீ ஆன்சர் பண்ணதும் பேச தைரியம் இல்லாம கட் பண்ணி இருக்கேன் தெரியுமா? ஸ்கூல் ஃபேர்வெல் அன்னைக்கு உன் கிட்ட வந்து சொன்னேன். ஒரு மணி நேரத்துக்கு மேலா உனக்காக நான் வெய்ட் பண்ணேன். கடைசி வரை நீ வரவே இல்ல. வீட்டுல கல்யாணம் பேசவும் எனக்குள்ள இருந்த காதல புதைச்சிக்கிட்டு சம்மதம் சொன்னேன். அப்போ கூட கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நைட் கடைசியா ஒரு தடவை உனக்கு கால் பண்ணி பார்க்கலாம்னு கால் பண்ணேன். அன்னைக்கும் நீ கால் அட்டன்ட் பண்ண. ஆனா என்னால தான் உன் கிட்ட தைரியமா சொல்ல முடியல. ஏன்னா உனக்கு என்னைப் பிடிக்காம தான் நான் அன்னைக்கு கூப்பிட்டு நீ வரலன்னு நினைச்சேன். என் காதல் எனக்குள்ள இருக்குற வரைக்கும் தான் அது எனக்கு உரிமை. அதை உன் கிட்ட சொல்லி அதை நீ ரிஜெக்ட் பண்ணிட்டா உன்ன காதலிக்கிற உரிமை எனக்கு இல்லாமலே போய்டும்னு உன் கிட்ட சொல்லல. ரிஷிகேஷ கல்யாணம் பண்ணப்போ உன் மேல இருந்த காதல அடி மனசுல புதைச்சிட்டு தான் அவன் கட்டின தாலிய ஏத்துக்கிட்டேன். ஆனா அதுக்கப்புறம் பல தடவை யோசிச்சு இருக்கேன் ஒரே ஒரு தடவை உன் கிட்ட பேசி இருக்கலாமோன்னு. ஹாஸ்பிடல்ல திரும்ப உன்ன பார்த்தப்போ இனிமே உன்ன காதலிக்குற தகுதி கூட எனக்கு இல்லையேன்னு எவ்வளவு அழுது இருப்பேன் தெரியுமா?” எனக் கேட்டாள் சகுந்தலா கதறலாக.

“சத்தியமா எனக்கு தெரியாது சகுந்தலா. அன்னைக்கு நீ கூப்பிட்டது, நீ எனக்காக வெய்ட் பண்ணுறது எதுவுமே எனக்கு தெரியாது.” என்ற துஷ்யந்தின் விழிகளில் கண்ணீர்.

சகுந்தலா சொல்வது போல் தான் மட்டும் சகுந்தலாவின் வாழ்வில் முன்பே நுழைந்து இருந்தால் தன்னவளுக்கு இந்தளவு வேதனை இருந்து இருக்காதே.

துஷ்யந்தை குற்றவுணர்வு கொன்று தின்றது.

தான் அனுபவித்த வலிகளின் நினைவிலும் இப்போது துஷ்யந்த் காதலை வெளிப்படுத்தியதும் எல்லாம் சேர்ந்து சகுந்தலா முகத்தை மூடிக் கொண்டு கதறி அழுதாள்.

அதற்குமேல் தன்னவளின் வேதனை பொறுக்காத துஷ்யந்த் அழுது கொண்டு இருந்த சகுந்தலாவை இழுத்து அணைத்தான் காற்று கூட புக முடியாதளவு நெருக்கமாக.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்