Loading

அதே நேரம் வீட்டுக்கு வந்ததில் இருந்து அறைக்குள் முடிங்கிக் கிடந்தவாறு அழுது கொண்டே இருந்த நிரஞ்சனாவை கோபத்துடன் முறைத்துக் கொண்டு இருந்தாள் காயத்ரி.

“பெரிய தியாகச் செம்மல் மாதிரி உன் வாழ்க்கையவே விட்டுக் கொடுத்து வந்துட்டு என்ன உனக்கு?” எனக் கேட்டாள் காயத்ரி கோபமாக.

“நான் என்ன டி பண்ணட்டும்? நான் ஒருத்தி மட்டும் ஆசைப்பட்டு போதுமா? ரெண்டு கை சேர்ந்தா தானே சத்தம் வரும்.” என்றாள் நிரஞ்சனா விம்மிக் கொண்டே.

“ஆமா இந்த விளக்கத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. ச்சே… ரொம்ப டிசப்பாய்ன்ட் பண்ணிட்டக்கா. அதுவும் ஒரு பொண்ணோட வாழ்க்கைய அழிச்சிட்டோமேன்னு கொஞ்சம் கூட கில்ட்டி இல்லாம இருக்காரே அந்த மனுஷன்.” என துஷ்யந்தையும் திட்டினாள் காயத்ரி.

இவ்வளவு நேரமும் தங்கை திட்டுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்த நிரஞ்சனாவோ அவள் துஷ்யந்தைத் திட்டியதும் சட்டென எழுந்து அமர்ந்து கொண்டு, “சும்மா சும்மா அவர ஒன்னும் சொல்லாதே. இது முழுக்க முழுக்க என்னோட முடிவு தான். அவர் கிட்ட கூட டிஸ்கஸ் பண்ணாம தான் நான் இந்த முடிவ எடுத்தேன். இது தான் எங்க எல்லாருக்கும் நல்லதுன்னு எனக்கு தோணிச்சு. அதுவும் இல்லாம அவருக்கு கில்ட்டி இல்லன்னு நீ பார்த்தியா? இந்த ரெண்டு மூணு நாளா வெளிய சொல்லவும் முடியாம உள்ளுக்குள்ள வெச்சிக்கவும் முடியாம அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா? என் கிட்ட இன்னைக்கு மன்னிப்பு கூட கேட்டார்.” என்றாள் தலை குனிந்தவாறு.

சகுந்தலாவின் வார்த்தைகளில் கோபமடைந்த துஷ்யந்த் அங்கிருந்து கிளம்பி நேராக வந்தது என்னவோ நிரஞ்சனாவைத் தேடித் தான்.

இன்னுமே அவள் வீட்டுக்குச் செல்லாமல் மருத்துவமனை வாசலில் ஒரு மரத்துக்கு கீழே நின்று அழுது கொண்டு இருந்தாள்.

அவளை நெருங்கிய துஷ்பிரயோகம், “நிரு…” என்கவும் சட்டென முகத்தைத் துடைத்துக் கொண்டு வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் அவன் பக்கம் திரும்பினாள் நிரஞ்சனா.

இவ்வளவு நடந்தும் இப்போது கூட அவள் கண்ணீர் தன்னை வருந்த வைக்கும் என்பதால் அதனை அழகாக மறைக்கும் பெண்ணவளின் அன்பின் முன்னால் தான் மிகவும் கீழ் இறங்கி விட்டதாகத் தோன்றியது துஷ்யந்திற்கு.

“சாரி நிரு. சத்தியமா நான் இதெல்லாம் எதிர்ப்பார்க்கல. அந்த ஸ்பர்ம் டொனேட் பண்ணத கூட நான் சுத்தமா மறந்தே போய்ட்டேன். எப்போ உன்ன கல்யாணம் பண்ணிக்க முடிவு எடுத்தேனோ அப்போவே என் லைஃப்ல உனக்கு தெரியாம எதுவும் இருக்கக் கூடாதுன்னு தான் சகுந்தலா பத்தி கூட எல்லாமே சொன்னேன். ஆனா இந்த விஷயத்த பத்தி நான் யோசிக்கவே இல்ல. சீரியஸ்லி இங்க தப்பு முழுக்க என் மேல தான். எனக்கு இதுக்கு என்ன பரிகாரம் பண்ணுறதுன்னு கூட தெரியல நிரு. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடு.” எனக் கை ஏந்தினான் துஷ்யந்த் கலங்கிய கண்களுடன்.

அதனைக் கண்டு பதறிய நிரஞ்சனா சட்டென துஷ்யந்தின் கரத்தைப் பிடித்து கீழே இறக்கி விட்டு, “என்ன பண்ணுறீங்க துஷ்யந்த்? ஏன் என்னை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்குறீங்க? சத்தியமா சொல்றேன் துஷ்யந்த் இதுல உங்க தப்பு எதுவுமே இல்ல. நீங்க முன்னாடியே சொல்லிட்டீங்க. ஆனா நான் தான் என் காதல் உங்கள மாத்தும்னு நம்பி ரிஸ்க் எடுத்தேன். கஷ்டமா தான் இருக்கு. இல்லன்னு சொல்லல. ஆனா நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி கொஞ்சம் கூட சந்தோஷமே இல்லாம இருந்து பின்னாடி வருத்தப்படுறத விட இப்போ இந்த முடிவு கஷ்டமா இருந்தாலும் இது தான் சரி. இவ்வளவு நடந்த அப்புறமும் உங்க காதல் கை சேருதுன்னா இந்த பிரபஞ்சத்துக்கே உங்க காதல் புரிஞ்சிருக்கு. கூடிய சீக்கிரம் சகுந்தலாவும் புரிஞ்சிப்பாங்க. அன்ட் ஷீ இஸ் சோ லக்கி டு ஹவ் யூ.” என்றாள் புன்னகையுடன்.

மறுப்பாகத் தலை அசைத்த துஷ்யந்த், “பட் ஐம் நாட். உன்ன கட்டிக்கப் போறவர் ரொம்ப கொடுத்து வெச்சவரா இருப்பார். இந்த காலத்துல சுயநலம் இல்லாம ஒருத்தர் மேல அன்பு வைக்கிறது ரொம்ப ரேர். உன் கிட்ட அந்தக் குணம் இருக்கு. அதுக்காகவே உனக்கு கிடைக்கிற எல்லாம் பெஸ்ட்டா தான் இருக்கும். ஆனா எப்போன்னாலும் என்னோட ஃபர்ஸ்ட் அன்ட் பெஸ்ட் ஃப்ரெண்ட் நீ தான் நிரு.” என்றான் மனதார.

அதனைக் கேட்டு நிரஞ்சனாவின் முகத்தில் ஒரு விரக்தியான புன்னகை.

________________________________________________

தாலியும் குங்குமமும் எடுக்கச் சென்ற சந்திரசேகரன் சற்று நேரத்திலேயே வந்து விட்டார்.

போதாக்குறைக்கு கையுடன் ரெஜிஸ்ட்ராரையும் அழைத்து வந்து இருக்க, “அப்பா என்னப்பா இது? நீங்க கூட புரிஞ்சிக்காம பண்ணுறீங்க.” எனக் கேட்டான் துஷ்யந்த் இயலாமையுடன் தந்தையிடம்.

ஏனெனில் சகுந்தலா அவ் அறையில் ஒரு ஓரமாகத் தலையைக் கரங்களில் தாங்கியபடி நடப்பதை ஏற்கவும் முடியாமல் நிறுத்தவும் முடியாமல் அமர்ந்து இருந்தாள்.

சொல்லொணா வலி அவள் முகத்தில்.

பரத் வேறு பிடிவாதமாக இருக்க, அவனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு யாராலும் எதுவும் பேச முடியவில்லை.

“அம்மாடி சகுந்தலா… இங்க வந்து நில்லும்மா இப்படி.” எனப் பரிமளம் அழைக்கவும் தலையை உயர்த்திப் பார்த்த சகுந்தலா அப்படியே திரும்பி அவருக்கு அருகில் நின்று இருந்த துஷ்யந்தின் முகத்தை ஏறிட்டான்.

அவனின் முகத்தில் இருந்து எதையும் கண்டு கொள்ள முடியவில்லை பெண்ணவளால்.

பெருமூச்சுடன் எழுந்த சகுந்தலா கீ கொடுத்த பொம்மை போல் நடந்து வந்து துஷ்யந்தின் அருகில் நின்றாள்.

அவளின் பார்வை எல்லாம் பரத்திடமே இருந்தது.

அவ்வளவு பிரகாசம் அச் சிறுவனின் முகத்தில்.

முகத்தில் பெரிய புன்னகையுடன் தன் பெற்றோரைப் பார்த்துக் கொண்டு இருந்தான் பரத்.

சற்று நேரத்திலேயே மேள தாளம் எதுவும் இல்லாமல், அக்னி வளர்த்து சத்தியம் செய்யாது, மாலை மாற்றிக் கொள்ளாது தன் பெற்றோர் சாட்சியாக சகுந்தலாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளைத் தன் சரிபாதி ஆக்கிக் கொண்டான் துஷ்யந்த்.

அவ்வளவு நேரமும் பரத்தின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த சகுந்தலா துஷ்யந்த் தாலியை அவள் அருகில் கொண்டு வரவும் அவனின் முகத்தை ஏறிட்டு கண்ணீருடன் மறுப்பாகத் தலை அசைத்தாள்.

அதனைக் கண்டு துஷ்யந்தின் முகம் இறுகிப் போக, எதுவும் பேசாது தாலியைக் கட்டினான்.

“யே… சூப்பர்…” எனக் கை தட்டிக் குதூகலித்தான் பரத்.

பின் உடனே அவர்களது திருமணம் பதிவும் செய்யப்பட்டது.

ரெஜிஸ்ட்ரார் சென்றதும் அவர்களுக்கு சற்று நேரம் தனிமை கொடுக்க என்று பரிமளமும் சந்திரசேகரனும் அங்கிருந்து வெளியேறினர்.

சகுந்தலாவிற்கோ இதயம் கவர்ந்தவனைக் கை பிடித்து விட்டோம் என்ற மகிழ்ச்சி கிஞ்சித்தும் இல்லாது தன் கழுத்தில் பெரும் சுமை ஏறியது போல் உணர்ந்தாள்.

ஆனால் துஷ்யந்தோ வழி மாறிப் போய் எங்கெங்கோ அலைந்து விட்டு வீடு வந்து சேர்ந்த உணர்வு.

புன்னகையுடன் தம் இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்த பரத்தை நெருங்கிய துஷ்யந்த் அவனின் தலையைக் கோதி விட்டவாறு, “இப்போ சந்தோஷமா என் குட்டி சேம்ப்புக்கு?” எனக் கேட்டான் புன்னகையுடன்.

“பரத் இவ்வளவு ஹேப்பி அப்பா…” என்றவாறு தன் கரங்களை இயன்றளவு விரித்தவாறு சிரித்தான் பரத்.

“அப்போ பரத் இப்போ சமத்தா ஆப்பரேஷன் பண்ணிப்பீங்களா?” என துஷ்யந்த் கேட்கவும் உடனே சரி எனத் தலை அசைத்தான் சிறுவன்.

தான் இன்னும் அங்கு நின்றால் சகுந்தலாவிற்கு அழுத்தம் அதிகரிக்கும் என்பதால் இன்னுமே தன் கழுத்தில் தொங்கிய தாலியை நம்பிக்கை இல்லாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த சகுந்தலாவை ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பிப் போனான் துஷ்யந்த்.

அன்று இரவே பரத்தை இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக ஆப்பரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்ல, சகுந்தலா அனைத்தும் மறந்து பரத்தின் கரத்தைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.

“சகுந்தலா… என்ன இது? நீ அழுது பையனையும் பயம் காட்டுற.” என அதட்டினான் துஷ்யந்த்.

“பயமா இருக்குங்க.” என்றாள் சகுந்தலா கண்ணீருடன் தன் கோபம் மறந்து.

வழமையாக சகுந்தலாவை நெருங்க முடியாமல் விலகி நின்று தன்னவள் படும் கஷ்டத்தைக் கண்டு அவளுக்கு ஆறுதல் கூட சொல்ல முடியாமல் தவிக்கும் துஷ்யந்தோ இன்று உரிமையாக அவளை நெருங்கி கண்ணீரைத் துடைத்து விட்டான்.

அதனைப் பார்த்துக் கொண்டு இருந்த பரத்தின் முகத்தில் புன்னகை தான் நினைத்தது நடந்து விட்டது என்று.

பின் இருவரையும் தன் அருகே அழைத்த பரத் அவர்களின் கரத்தை சேர்த்துப் பிடித்து தன் நெஞ்சின் மீது வைத்துக் கொண்டு, “அப்பா… மம்மிய அழ விடாதீங்க. மம்மி பாவம்.” என்கவும் சகுந்தலா இன்னும் சத்தமாக அழுதாள்.

என்ன தான் பரத்துக்கு பொருத்தமான இதயம் கிடைத்தாலும் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தால் மட்டும் தான் எதையும் கூற முடியும் என்று துஷ்யந்த் ஏற்கனவே கூறி இருந்தான்.

அதுவும் பரத்தின் தற்போதைய நிலைக்கு ஐம்பதுக்கு ஐம்பது என்ற நிலை தான்.

அது தான் சகுந்தலாவை இன்னுமே பயம் காட்டியது.

“சேம்ப் எதுக்கும் கவலைப்படக் கூடாது. அப்பா இருக்கேன்ல. மம்மியையும் பரத்தையும் சேஃபா வெச்சிப்பேன் எப்போவும்.” என்றான் துஷ்யந்த் உறுதியான குரலில்.

“அப்பா… பரத்துக்கு பயமா இருக்குப்பா. ஒருவேளை பரத் சாமி கிட்ட போய்ட்டேன்னா அப்பா கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது.” என பரத் சோகமாகக் கூறவும் சகுந்தலா கதறி விட, துஷ்யந்தோ துக்கம் தாளாமல் சட்டென பரத்தை ஒரு கையால் அணைத்துக் கொண்டான்.

மறு கையால் அழும் மனைவியை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்ட துஷ்யந்த், “ரெண்டு பேருக்கும் தான் சொல்றேன். நான் இருக்கேன்ல. அப்பா மேல நம்பிக்கை வைங்க. என் சேம்ப்புக்கு எதுவும் ஆகாது. என் குட்டி சேம்ப்புக்காக அப்பா அந்தக் கடவுள கூட எதிர்த்துப் போராடுவேன்.” என்றவன் மனைவியின் முகம் பார்த்து, “ட்ரஸ்ட் மீ சகுந்தலா. நம்ம பையனுக்கு எதுவும் ஆகாது. உங்க ரெண்டு பேரோட கண்ணீரும் என்னை ரொம்ப வீக் ஆக்குது. ப்ளீஸ்… ட்ரஸ்ட் மீ. பரத் உன் பையனா மட்டும் இருக்கும் போதே அவனுக்கு எதுவும் ஆக விடாம பார்த்துக்கு நினைச்சவன் நான். இப்போ‌ அவன் என் பையன் கூட. அவ்வளவு ஈசியா விட்டுடுவேனா?” எனக் கேட்டான்.

சரி எனத் தலை அசைத்த சகுந்தலா தன்னவின் மார்பில் முகம் புதைத்துக் கொண்டு மௌனமாகக் கண்ணீர் வடித்தாள்.

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
17
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்