
அடுத்து வந்த நாட்களில் அனைத்தும் வழமை போல் திரும்பியது.
ஒரு பக்கம் துஷ்யந்த் மற்றும் நிரஞ்சனாவின் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன.
துஷ்யந்த் முன்பைப் போலவே பரத்தை அடிக்கடி சந்தித்து அவனுக்குத் தேவையான அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்தான்.
ஆனால் சகுந்தலாவிடம் மட்டும் தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை பேசவில்லை.
இது தான் இருவரின் எதிர்காலத்துக்குமே நல்லது என்பதால் இருவருமே அதனை ஏற்கப் பழகினர்.
முதல் நாளே சகுந்தலா தன் பேச்சுக்கு துஷ்யந்திடம் மன்னிப்பு கேட்க, துஷ்யந்தோ அவளின் மன்னிப்பை ஏற்காது அவளின் பேச்சுக்கு பின்னால் இருந்த காரணத்தை வினவினான்.
துஷ்யந்த் எதிர்ப்பார்த்தது போலவே சகுந்தலா அதற்குப் பதில் அளிக்காமல் மௌனம் காக்க, துஷ்யந்தோ சலிப்புடன் தலை அசைத்து விட்டு அங்கிருந்து அகன்றான்.
ஆனால் பரத் தான் பேசுவதை மிகவும் குறைத்துக் கொண்டு இருந்தான்.
அதன் காரணம் துஷ்யந்த், சகுந்தலா இருவருக்குமே பிடிபடவில்லை.
போதாக்குறைக்கு முன்பைப் போல சுறுசுறுப்பாகவும் இல்லாமல் போகவும் தான் இருவருமே பயந்தனர்.
இந்த சில நாட்களில் பரத்திற்கு ஒரு மாற்றம் ஏற்பட்டால் அவனின் உடல்நிலையிலும் சற்று மேம்பாடு ஏற்படும் என சகுந்தலா தன் வீட்டின் அருகில் இருந்த சிறுவர்களுடன் தன் கண் பார்வையில் பரத்தை விளையாட விட்டுக் கொண்டு இருந்தாள்.
ஆனால் இப்போதோ பரத் எங்கும் வெளியே செல்லக் கூட விரும்பவில்லை.
பரத்தைப் பரிசோதித்துப் பார்க்க, எப்போதும் போல் தான் ரிப்போர்ட் இருந்தது.
பரத்தைப் பழையபடி மாற்ற துஷ்யந்த் தன்னால் முடிந்த ஒவ்வொன்றையும் செய்து பார்த்தான்.
எதற்குமே பலன் இல்லை.
சந்திரசேகரன் மற்றும் பரிமளம் கூட சிறுவனுடன் நேரம் செலவிட்டனர்.
அப்போதும் கூட முகத்தில் ஒரு சாதாரண புன்னகையுடன் மௌனம் காத்தான் பரத்.
நிரஞ்சனாவைக் கூட அழைத்து வந்து பரத்துடன் பழக விட்டான் துஷ்யந்த்.
முதலில் அவளது முகத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டு இருந்த பரத் உடனே சென்று துஷ்யந்தின் காலைக் கட்டிக் கொண்டான்.
முதல் முறை என்பதால் இவ்வாறு நடந்து கொள்கிறான் என அனைவரும் நினைக்க, பரத்தோ நிரஞ்சனா வரும் நேரம் எல்லாம் துஷ்யந்தையே ஒட்டி அமர்ந்து கொண்டு நிரஞ்சனாவைப் பார்த்து புன்னகைத்தான்.
பரத் மௌனமாக ஒரு உரிமைப் போராட்டத்தை அங்கு நடத்த, துஷ்யந்த், சகுந்தலா, நிரஞ்சனா மூவருக்குமே அது தெளிவாகப் புரிந்தது.
துஷ்யந்த் சங்கடமாக நிரஞ்சனாவின் முகம் நோக்க, சகுந்தலா தான் பரத்தைக் கண்டிக்க முயன்றாள்.
ஆனால் அதனை உடனே தடுத்து விட்டாள் நிரஞ்சனா.
அப்படியாவது பரத் தன் கூட்டை விட்டு வெளியே வந்து விட்டால் நல்லது என்று நிரஞ்சனா கூறவும் மற்ற இருவருக்குமே அது ஏற்றுக் கொள்ளும்படியாகத் தான் இருந்தது.
நிரஞ்சனாவின் பக்குவமான பேச்சை துஷ்யந்த் பெருமையாகப் பார்க்க, சகுந்தலாவோ நிரஞ்சனாவைக் கட்டிக் கொண்டு அழுது விட்டாள்.
நிரஞ்சனாவின் இடத்தில் வேறு யாராவது இருந்தால் தன் வருங்காலக் கணவனிடம் யாரோ ஒருவர், அது சிறுவனாக இருந்தாலும் கூட உரிமைப் போராட்டம் நடத்துவதை விரும்ப மாட்டாள்.
இதற்கு இடையில் சகுந்தலாவும் நிரஞ்சனாவும் ஓரளவு நட்பாகி விட்டனர்.
துஷ்யந்தின் பள்ளிக் காலத்தைப் பற்றி சகுந்தலாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள் நிரஞ்சனா.
இவ்வாறு நாட்கள் வேகமாகச் செல்ல, துஷ்யந்த் மற்றும் நிரஞ்சனாவின் திருமணத்திற்கு ஒரு மாதமே இருந்த நிலையில் திருமணத்துக்கான ஆடைகளையும் நகைகளையும் எடுக்கச் செல்ல இரண்டு குடும்பமும் தயாராகின.
துஷ்யந்தோ தனக்கு மருத்துவமனையில் வேலை இருக்கிறது என்று கூறி வர மறுத்து விட, நிரஞ்சனா தான் கெஞ்சிக் கூத்தாடி அவனை சம்மதிக்க வைத்து இருந்தான்.
ஆண்கள் ஒரு பக்கம் செல்ல, பெண்கள் ஒரு பக்கமாகக் குழுமி தமக்கு ஆடைகளைத் தேர்வு செய்தனர்.
மணமகனான துஷ்யந்தோ யாருக்கு வந்த விருந்தோ என்பது போல கைப்பேசியுடன் ஒரு மூலையில் ஐக்கியம் ஆகி விட்டான்.
“என்னங்க நீங்க? இன்னைக்கு கூட எனக்காக டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டீங்களா?” எனக் கேட்டாள் நிரஞ்சனா தனியே நின்று இருந்த துஷ்யந்தை நெருங்கி ஆதங்கமாக.
நிரஞ்சனாவின் கேள்வியில் ஒரு நொடி அதிர்ந்த துஷ்யந்த் உடனே மறுப்பாகத் தலை அசைத்தான்.
ஆனால் பெண்ணவளின் குரலில் இருந்த சோகமும் கலங்கி இருந்த கண்களும் துஷ்யந்திற்கு வருத்தமாக இருந்தது.
ஏனெனில் இதுநாள் வரை நிரஞ்சனா துஷ்யந்தின் தொழில் விடயங்களிலும் சரி, அவனது தனிப்பட்ட விடயங்களிலும் சரி ஒரு அளவுக்கு மேல் தலையிடுவதும் இல்லை, அவனைக் கஷ்டப்படுத்துவதும் இல்லை.
துஷ்யந்தின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு இருந்தாள்.
தன் ஆசைகளையும் எதிர்காலக் கனவுகளையும் கூட குறைத்து இருந்தாள் நிரஞ்சனா.
பரத்தின் விடயத்தில் கூட அவள் துஷ்யந்திற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை.
அவ்வாறிருக்க இன்று தம் இருவருக்கும் ஒரு முக்கியமான நாளில் கூட இப்படி துஷ்யந்த் நடந்துகொள்வது நிரஞ்சனாவின் பொறுமையை வெகுவாக சோதித்து விட்டது.
நிரஞ்சனாவின் கேள்வியில் துஷ்யந்திற்கும் தன் தவறு புரிந்தது.
“ஹேய் சாரி நிரு. நிஜமா இந்த விஷயம் எல்லாம் எனக்குப் பழக்கம் இல்லை. அதனால தான் எல்லாத்தையும் உங்க எல்லாரோட விருப்பத்துக்கும் விட்டுட்டு ஓரமா நின்னேன்.” என்றான் துஷ்யந்த் வருத்தமாக.
“நான் மட்டும் வருஷத்துக்கு ஒரு கல்யாணம் பண்ணிக்குறேன் தானே இதெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்க.” என்றாள் நிரஞ்சனா கோபமாக.
நிரஞ்சனாவின் கோபத்தை முதல் முறை காண்கிறான் துஷ்யந்த்.
அவளும் என்ன தான் செய்வாள்?
உரிமை உள்ளவனிடம் தானே தன் உணர்வுகளை வெளிக்காட்ட முடியும்.
அதுவே துஷ்யந்திற்கு மேலும் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது.
“சாரி நிரு…” என துஷ்யந்த் மன்னிப்பு வேண்ட, நிரஞ்சனாவின் பொறுமை எல்லை மீறியதால் பட்டாசாக வெடித்தாள் அவள்.
“எல்லாத்தையும் எங்க விருப்பத்துக்குன்னு விட்டா அப்போ உங்களுக்குன்னு எதுக்கு ஒரு மூளை இருக்கு? வீட்டுல சொன்னாங்கன்னு கல்யாணம் பண்ணிப்பீங்க. எங்களுக்கு பிடிச்சிருந்தா செய்றதா சொல்றீங்க. இப்படி எல்லாத்தையுமே அடுத்தவங்களுக்காகப் பண்ணி ஒரு நாள் உங்க சுயத்தை இழந்துட்டு நிற்க போறீங்க நீங்க.” என்றாள் நிரஞ்சனா.
“இப்போ எதுக்கு நிரு இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க? அதான் சாரி கேட்டுட்டேனே. எனக்கு பிடிச்சவங்களுக்காக நான் ஒரு விஷயத்தை செய்றது தப்பு இல்லையே.” என்றான் துஷ்யந்த்.
“உங்க லைஃபுக்கு என்ன தேவைன்னு கூட உங்களால டிசைட் பண்ணிக்க முடியாதாங்க?” எனக் கேட்டாள் நிரஞ்சனா ஆதங்கமாக.
பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக வேறு திசையில் திரும்பி இருப்பதைக் கூட நிரஞ்சனா உணரவில்லை.
துஷ்யந்திற்குத் தான் நிரஞ்சனாவின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் ஐயோ என்று ஆனது.
“அக்கா… என்ன பண்ணிட்டு இருக்க? எல்லாரும் பார்க்குறாங்க.” என்றாள் காயத்ரி அவசரமாக நிரஞ்சனாவை நெருங்கி.
கடையில் இருந்த ஒரு சிலர் இவர்களைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
ஏதோ இவர்களின் நல்ல நேரத்திற்கு பூஜாவையும் காயத்ரியையும் தவிர குடும்பத்தினர் அனைவரும் வேறு பக்கம் சென்று இருந்தனர்.
துஷ்யந்த் தன் வருங்கால கொழுந்தியாளை நன்றியுடன் நோக்க, காயத்ரியோ துஷ்யந்தைக் குற்றம் சாட்டும் பார்வை பார்த்து வைத்தாள்.
‘இன்னும் எத்தனை பேரை சமாளிக்க வேண்டி இருக்குமோ?’ என இப்போதே துஷ்யந்திற்கு மலைப்பாக இருந்தது.
நிரஞ்சனாவோ துஷ்யந்தை முறைத்துப் பார்த்து விட்டு தங்கையை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.
பெருமூச்சு விட்ட துஷ்யந்தோ தலையை அழுத்தமாகக் கோதிக் கொண்டு கைப்பேசியை பாக்கெட்டில் போட்டு விட்டு நிரஞ்சனாவைத் தேடிச் சென்றான்.
காயத்ரியும் பூஜாவும் நிரஞ்சனாவின் முன்னால் ஒவ்வொரு சேலையாக எடுத்துப் போட, நிரஞ்சனாவோ அவற்றைக் கண்டு கொள்ளாது வேறு ஏதோ யோசனையில் ஆழ்ந்து இருந்தாள்.
அங்கு வந்த துஷ்யந்த் நிரஞ்சனாவின் வாடிய முகத்தைக் கண்டு கவலையுற்றான்.
அவனுக்கு தன் மீதே கோபம் வந்தது.
சத்தம் இல்லாமல் வந்து காயத்ரியிடம் தான் பார்த்துக் கொள்வதாகக் கண் காட்டவும் அவள் துஷ்யந்தை ஒரு வெற்றுப் பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து அகன்றாள்.
“இந்த சேலை நல்லா இருக்கு பாரு.” என்ற துஷ்யந்தின் குரலில் தன்னிலை அடைந்த நிரஞ்சனா திடுக்கிட்டு அவன் முகம் பார்க்க, துஷ்யந்த் தன் கையில் வைத்திருந்த தங்க நிற பார்டர் வைத்த மயில் நீல நிறப் புடவையை காட்டினான்.
நிரஞ்சனாவோ துஷ்யந்தைப் பார்த்து இதழ் சுழித்து விட்டு அங்கிருந்த பணியாளரிடம் வேறு புடவைகளைக் காட்டக் கூறினாள்.
துஷ்யந்த் மீண்டும் ஒரு புடவையை எடுத்து நிரஞ்சனாவிடம் காட்ட, அவளோ அவனைக் கிஞ்சித்தும் கண்டுகொள்ளவில்லை.
இதுவே தொடர்ச்சியாக நடக்க, துஷ்யந்திற்கே சலிப்பாக இருந்தது.
அங்கிருந்த பெண் பணியாளர்கள் வேறு இவர்களின் கூத்தில் வாயை மூடிக் கொண்டு சிரிக்கவும் அவர்களைப் பார்த்து சங்கடமாகப் புன்னகைத்தான் துஷ்யந்த்.
அதற்கு மேல் முடியாமல் சட்டென நிரஞ்சனாவின் தோளைப் பிடித்துத் திருப்பி தனக்கு முன்னால் முன்னே பார்த்தவாறு நிற்க வைத்த துஷ்யந்த் ஒரு அழகான இளஞ்சிவப்பு நிறப் புடவையை எடுத்து அவள் மீது வைத்துக் கண்ணாடியில் காட்டினான்.
நிரஞ்சனாவோ துஷ்யந்தின் இந்த அதிரடியை எதிர்ப்பார்க்காது திகைத்து நிற்க, போதாக்குறைக்கு துஷ்யந்த் வேறு நிரஞ்சனாவின் பின்னால் பாதி அணைத்தவாறு நின்றிருக்கவும் இவ்வளவு நேரமும் இருந்த கோபம் எல்லாம் மறந்து பெண்ணவளின் முகம் செவ்வானமாய் சிவந்து விட்டது.
நிரஞ்சனாவோ புடவையைப் பார்க்காமல் கண்ணாடியில் தெரிந்த தம் விம்பத்தையே தன்னை மறந்து ரசித்துப் பார்த்தாள்.
புடவையின் ஒரு முனையை நிரஞ்சனாவின் தோளில் வைத்து மறு முனையை குறுக்காக இடையில் வைத்துப் பிடித்து இருந்தான்.
தள்ளி நின்று பார்ப்பவர்களுக்கு நிச்சயம் இருவரும் அணைத்துக் கொண்டு இருப்பது போல் தான் தோன்றும்.
துஷ்யந்திற்கோ நிரஞ்சனாவை சமாதானப்படுத்துவதே பிரதானமாக இருக்க, தான் நிற்கும் கோலம் அவனது கருத்தில் பதியவில்லை.
“என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” எனக் கேட்டாள் நிரஞ்சனா வெட்கத்தில் சிவந்த முகத்துடன் கிசுகிசுப்பான குரலில் கூச்சமாக.
“ஏன்? நான் என்ன பண்ணேன்?” எனப் புரியாமல் கேட்ட துஷ்யந்த் அப்போது தான் நிரஞ்சனாவின் சிவந்திருந்த முகத்தையும் சுற்றி நின்றிருந்தவர்களின் பார்வையையும் கவனித்தான்.
அதன் பின்னே தான் செய்து கொண்டு இருக்கும் விடயம் புரிய, அவசரமாக நிரஞ்சனாவை விட்டு விலகியவன், “சாரி… சாரி…” என்றான் சங்கடமாக.
நிரஞ்சனாவோ இன்னுமே சிவந்த முகத்துடன் புன்னகையுடன் நின்றிருக்க, துஷ்யந்த் அங்கிருந்து செல்லவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் சங்கடமாக நின்று இருந்தான்.
“இதைப் பேக் பண்ணட்டுமா மேடம்?” என்ற குரலில் இருவருமே தன்னிலை அடைந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
துஷ்யந்த் உடனே தன் பார்வையை விலக்க, நிரஞ்சனாவோ புன்னகை மாறாமல், “ஆமா அண்ணா. அது கூட சேர்த்து இது எல்லாத்தையும் பேக் பண்ணிடுங்க.” என்றாள் துஷ்யந்த் முன்னமே தெரிவு செய்த புடவைகளைக் கை காட்டி.
அதனைக் கண்டு துஷ்யந்தின் முகத்திலும் மெல்லிய புன்னகை அரும்பியது.
