Loading

முதல் தடவை நிரஞ்சனா துஷ்யந்திற்கு குறுஞ்செய்தி அனுப்பிய பின் சில வார்த்தைகள் பதில் அனுப்பி விட்டு கைப்பேசியை அணைத்து வைத்த துஷ்யந்த் இரவு தான் அதனை மீண்டும் ஆன் செய்தான்.

உடனே குறுஞ்செய்திகள் வந்து குவிய, எடுத்துப் பார்க்க அனைத்துமே நிரஞ்சனாவிடம் இருந்து தான்.

சில நிமிடங்களுக்கு முன் இறுதியாக ‘குட் நைட்’ என்று அனுப்பி இருக்க, வேறுவழியின்றி அதற்கு ‘குட் நைட் ‘ எனப் பதில் அனுப்பி விட்டு தூங்கி விட்டான் துஷ்யந்த்.

ஆனால் அங்கு நிரஞ்சனாவோ துஷ்யந்திற்கு ‘குட் நைட்’ என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு துஷ்யந்திடம் இருந்து மீண்டும் குறுஞ்செய்தி வருமா என ஆவலாகக் காத்துக் கொண்டு இருந்தாள்.

துஷ்யந்திடம் இருந்து பதில் வந்ததுமே அவளின் கண்கள் பளிச்சிட்டன.

‘இப்போ தான் வந்தீங்களா?’ என உடனே குறுந்தகவல் அனுப்ப, துஷ்யந்த் அதற்குள்ளே உறங்கி விட்டிருந்தான்.

மறுமுனையில் இருந்து எந்தப் பதிலும் வராமல் போகவும், ‘தூங்கிட்டீங்களா?’ என மீண்டும் அனுப்பினாள் நிரஞ்சனா.

ஆம் முறையும் பதில் இல்லாமல் போக, பெருமூச்சுடன் கைப்பேசியை அணைத்து வைத்தவளுக்கு முகம் சோர்வுற்றுக் காணப்பட்டது.

கல்லூரிப் படிப்பை முடித்து விட்டவளுக்கு ஏனோ வேலைக்கு செல்வதில் ஆரம்பத்தில் இருந்தே பெரிதாக விருப்பம் இல்லை.

படித்து ஏதோ ஒரு டிகிரி எடுத்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தவள் கல்லூரிப் படிப்பை முடித்ததும் வீட்டிலேயே நின்று விட்டாள்.

அதன் பின் நிரஞ்சனாவின் பெற்றோரும் அவளுக்கு திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

தரகர் மூலம் வந்த முதலாவது வரனே துஷ்யந்த் தான்.

பார்த்த முதல் பார்வையிலேயே பெண்ணவளின் மனதை மொத்தமாகக் கொள்ளை அடித்து விட்டான்.

எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாமல், நல்ல வேலையில், கை நிறைய சம்பாதிக்கும் வரன் கிடைக்கவும் நிரஞ்சனாவின் பெற்றோருக்கும் இச் சம்பந்தம் பிடித்து விட்டது.

துஷ்யந்தைப் பற்றி மேலும் விசாரித்ததில் அவன் ஒரு வகையில் தமக்கு தூரத்து உறவுமுறை என்பதை அறிந்ததும் நிரஞ்சனாவின் பெற்றோருக்கு மேலும் திருப்தி.

உடனே அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டார் முரளி.

பரிமளமே முதலில் அழைத்துப் பேசி தம் விருப்பத்தைத் தெரிவித்து இருக்க, இவர்களுக்கும் சம்மதமே.

நிரஞ்சனாவிற்கும் துஷ்யந்தை பார்த்ததுமே பிடித்து விட, போதாக்குறைக்கு அவளின் தங்கையும் அத்தை மகளும் வேறு துஷ்யந்தை வைத்து நிரஞ்சனாவை சீண்டி சீண்டி நேரில் பார்க்காமல், குரல் கூட கேட்காமல் துஷ்யந்துடன் ஆழமாகக் காதலில் விழுந்து விட்டாள் பெண்ணவள்.

துஷ்யந்த் அவளது மனதில் இடம் பிடித்ததில் இருந்தே அவனுடன் எதிர்காலக் கனவுகள் காண ஆரம்பித்து விட்டவளின் எண்ணங்கள் அனைத்தும் துஷ்யந்தே ஆகிப் போனான்.

அதன் பின் பெண் பார்க்க வந்த அன்று துஷ்யந்த் செய்த களேபரத்தில் அவனுக்கும் தன்னைப் பிடித்து இருக்கிறது என நினைத்து விட்டாள் நிரஞ்சனா.

துஷ்யந்தின் குரல் கேட்கவும், அவனின் விரல் கோர்க்கவும் நெஞ்சில் ஆசை முட்டியது.

அதனாலேயே வெட்கத்தை விட்டு தானே செய்தி அனுப்பினாள்.

இருந்தும் துஷ்யந்திடம் இருந்து ஒற்றை வார்த்தைகளிலேயே பதில் வர, பெண்ணவள் வெகுவாக ஏமாற்றம் அடைந்தாள்.

ஆனால் அவளின் காதல் கொண்ட மனமோ துஷயந்தின் செய்கைகளுக்கு சோர்வாக இருப்பான், பிஸியாக இருப்பான், தூங்கி இருப்பான் எனப் பலவாறு நியாயம் கற்பித்து அவளை சமாதானப்படுத்தியது.

தன்னை மறந்து நித்யா தேவியை அணைத்துக் கொண்டவளின் கனவுகளைக் கூட துஷ்யந்த் தான் ஆட்சி செய்தான்.

____________________________________________________________

அன்று காலையில் இருந்தே துஷ்யந்தின் வீடு பரபரப்பாகக் காணப்பட்டது.

நிரஞ்சனாவின் வீட்டில் இருந்து திருமணத்திற்கு நாள் குறிப்பதற்காக அன்று வர இருந்தனர்.

துஷ்யந்தும் அன்று வீட்டில் தான் இருந்தான்.

நடக்கும் அனைத்தையும் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான் அவன்.

இரண்டு நாட்கள் முன்பு தான் சகுந்தலாவும் பரத்தும் ஊருக்குக் கிளம்பிச் சென்று இருந்தனர்.

போய் சேர்ந்ததும் தகவல் தெரிவித்ததோடு சரி.

அதன் பின் சகுந்தலா துஷ்யந்துடன் பேசவே இல்லை.

ஆனால் பரத்தை மாத்திரம் இடைக்கிடையே துஷ்யந்துடன் பேச வைத்தாள்.

பரத் பேசும் போது சகுந்தலா மூச்சு விடும் சத்தம் கூட கேட்காது துஷ்யந்திற்கு.

அவ்வளவு அமைதியாக இருப்பாள்.

இல்லை என்றால் ஏதாவது வேலை என்று கூறி சற்றுத் தள்ளிச் சென்று விடுவான்.

என்ன தான் துஷ்யந்த் தன் காதலை முற்றாக மறந்து விட எண்ணினாலும் இந்த இரண்டு நாட்களும் சகுந்தலாவின் முகம் பார்க்காது, அவளின் குரல் கேட்காது தவியாய்த் தவித்து விட்டான்.

இரண்டு நாட்களுக்கே இப்படி என்றால் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால் வாழ்க்கை முழுவதும் இக் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டுமா என்ற எண்ணம் தான் துஷ்யந்தை வாட்டி வதைத்தது.

இந்த சில நாட்களில் நிரஞ்சனாவிடம் இருந்து வரும் குறுஞ்செய்திகளுக்கு பதில் அளிப்பவன் பதிலுக்கு தானும் ஏதாவது கேட்டு வைப்பான்.

திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தாயிற்று.

சகுந்தலாவை விட்டு விலகத் தான் முடியவில்லை.

குறைந்தது நிரஞ்சனாவுடன் பேசத் தொடங்கினாலாவது தன் காதலை மறந்து விட மாட்டோமா என்ற எண்ணத்தில் துஷ்யந்த் நிரஞ்சனாவுடன் வாட்சாப்பில் பேசத் தொடங்கினான்.

அதனால் தான் முயன்று ஏதாவது பேசுவான்.

எல்லாம் குறுந்தகவலில் தான்.

அதுவே துஷ்யந்திற்கு மலையைப் பிரட்டுவது போல் இருந்தது.

ஆனால் என்ன தான் முயன்றும் துஷ்யந்திற்கு நிரஞ்சனாவுடன் பெரிதாக ஒட்டுதல் வரவில்லை.

தான் திருமணம் செய்யப் போகும் பெண் என்ற ஆர்வமோ, எதுவுமே வரவில்லை அவனுக்கு.

பழகப் பழக சரி ஆகி விடும் என்ற எண்ணத்தில் தான் பேசிக் கொண்டு இருந்தான் துஷ்யந்த்.

இவ்வாறு இருக்கையில் தான் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல் சகுந்தலாவின் பிரிவு துஷ்யந்திற்கு அவளை மட்டுமே நினைக்க வைத்தது.

தான் செய்வது தவறு என்று அவனின் மூளைக்குத் தெரியும்.

ஆனால் மனதோ இது சாதாரண கரிசனம் தான் என்று கூறி துஷ்யந்தின் செய்கைகளுக்கு நியாயம் கற்பித்தது.

“கண்ணா… இன்னும் என்ன இங்கயே உட்கார்ந்துட்டு இருக்க? இன்னும் கொஞ்சம் நேரத்துல பொண்ணு வீட்டுல இருந்து வந்துடுவாங்க. சீக்கிரம் போய் ரெடி ஆகிட்டு வா.” என்ற தாயின் குரலில் கலைந்த துஷ்யந்த் பெருமூச்சுடன் தன் அறையை நோக்கி நடந்தான்.

சற்று நேரத்தில் வெளியே பேச்சுக் குரல் கேட்கவும் மூச்சை ஆழமாக வெளி விட்டவன் கண்ணாடியின் முன் நின்று தன் விம்பத்தையே சில நொடிகள் வெறித்தான்.

பின் கண்களை மூடவும் வழமை போலவே சகுந்தலாவின் புன்னகை பூத்த முகம் தான் தெரிந்தது.

ஆனால் இம்முறை கூடவே அவனின் பெற்றோரின் சிரித்த முகமும் வந்து போக, பட்டென இமைகளைப் பிரித்தவனின் விழிகள் லேசாகச் சிவந்து விட்டிருந்தது.

உள்ளுக்குள் இதயம் பேரிரைச்சல் புரிய, துஷ்யந்தின் முகத்திலோ ஒரு கசந்த புன்னகை.

‘அம்மா… அப்பா… என்ன தான் நான் உங்க ஆசைப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருந்தாலும் அதுக்கு முழுசா நான் உண்மையா இருக்கல. ஆனா எனக்கு என்னோட சுயநலத்தை விட உங்களோட ஆசையும் சந்தோஷமும் தான் முக்கியம். அதுக்காக நான் எதையும் இழக்க தயங்க மாட்டேன். என் காதலும் அதுக்கு விதிவிலக்கல்ல.’ என மனதுக்குள் பேசிய துஷ்யந்த் வெளியே செல்வதற்காக அறைக்கதவு வரை சென்று விட்டு அங்கேயே நின்றான்.

கைப்பிடியில் கரத்தை வைத்தவன், ‘இப்போ இந்தக் கதவைத் தாண்ட போறது சந்திரசேகரன், பரிமளத்தோட பையன் மட்டும் தான். அவன் மனசுக்குள்ள வேற ஒன்னுமே இல்ல. அவங்க பையனா மட்டும் தான் வெளிய போகப் போறேன். இந்த செக்கன்ல இருந்து என்னோட சொல்லாக் காதல் எனக்குள்ளேயே சமாதி அடையட்டும்.’ என மனதுக்குள் கூறிக் கொண்டவன் அறையைத் தாண்டும் போது தன் காதலை மொத்தமாக உள்ளுக்குள் பூட்டி வைத்து விட்டான்.

சகுந்தலா வேறு இப்போது முன்பைப் போல் அல்லாது துஷ்யந்திடம் இருந்து விலகிப் போக, அதுவே அவனுக்கு மேலும் உதவியாக இருந்தது.

“வணக்கம் மாப்பிள்ளை… வாங்க.” என துஷ்யந்தைக் கண்டதுமே முரளி பெரும் சிரிப்புடன் அவனை வரவேற்றார்.

நிரஞ்சனாவையும் பூஜாவையும் தவிர அவளின் குடும்பத்தினர் எல்லாருமே வந்திருந்தனர்.

சந்திரசேகரனுக்கும் பரிமளத்துக்கும் முதல் முறை தம் வீடு இப்படி நிரம்பி இருக்கவும் அவர்களின் மனதுக்கு அவ்வளவு இதமாக இருந்தது.

“வணக்கம் மாமா…” என்றவாறு புன்னகையுடன் அவருக்குத் தலையசைத்து விட்டு சந்திரசேகரனின் அருகில் அமர்ந்து கொண்டான் துஷ்யந்த்.

சந்திரசேகரன் முதல் பார்வையிலேயே துஷ்யந்தின் மாற்றத்தைக் கண்டுகொண்டார்.

எல்லாம் நன்மைக்கே என எண்ணியவர் துஷ்யந்தின் கரத்தின் மீது கரம் பதித்து அழுத்த, தந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்த துஷ்யந்தின் முகத்தில் ஒரு சாந்தமான புன்னகை.

சந்திரசேகரன் அவனுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக கண்களை மூடித் திறக்கவும் துஷ்யந்தின் முகத்தில் இருந்த புன்னகை மேலும் விரிவடைந்தது.

“இன்னைக்கு அப்போ வீட்டுலயா மாப்பிள்ளை?” எனப் பேச்சை ஆரம்பித்தார் முரளி.

“ஆமாம் மாமா… இன்னைக்கு பெரிசா எந்த அப்பாய்ன்மன்ட்டும் இல்ல. நாழு அஞ்சு ரெகியுலர் பேஷன்ட் தான் வருவாங்க. அவங்கள இன்னைக்கு வேற ஒரு டாக்டர் கிட்ட ஷிஃப்ட் பண்ணி விட்டேன்.” என முரளிக்குப் பதில் அளித்த துஷ்யந்த் சில நொடிகள் கழித்து, “அப்புறம் அன்னைக்கு நான் நடந்துக்கிட்ட முறைக்கு எல்லாரும் என்னை மன்னிச்சிடணும். உங்க யார் கிட்டயும் சரியா சொல்லிக்காம நான்‌ பாட்டுக்கு கிளம்பி வந்துட்டேன். நிச்சயம் உங்க எல்லாரோட மனசும் கஷ்டப்பட்டு இருக்கும்.” என்றான் உணர்ந்து.

துஷ்யந்த் மன்னிப்பு கேட்கவும் பதறிப் போய் விட்டார் வேணி.

“ஐயோ என்ன மாப்பிள்ளை நீங்க? இதுக்கெல்லாம் போய் மன்னிப்பு கேட்டுக்கிட்டு. எவ்வளவு பெரிய பதவில இருக்கீங்க நீங்க. டாக்டர்னா அப்படி அவசர வேலைகள் வரத் தான் செய்யும். நாங்க ஒன்னும் உங்கள தப்பா நினைக்கல மாப்பிள்ளை. உங்க நிலைமை எங்களுக்கு நல்லாவே புரிஞ்சது.” என்றார் வேணி.

அதனை அவரின் குடும்பத்தினர் அனைவருமே ஆமோதிக்க, சிறு தலையசைப்பைப் பதிலாக வழங்கினான் துஷ்யந்த்.

அதற்குள் பரிமளம் வந்தவர்களுக்கு காஃபி மற்றும் சிற்றுண்டிகள் கொடுத்து அனைவரையும் உபசரிக்க, “அப்புறம் மாமா… இன்னைக்கு ரொம்ப ஸ்டடியா நிற்கிறீங்க. அப்போ எங்க அக்காவ பார்த்தா மட்டும் தானா தடுமாறுறீங்க? அஞ்சான் மூவி சூரியா போல.” என்றவாறு தன் விளையாட்டை ஆரம்பித்து விட்டாள் காயத்ரி.

“அது ஃபர்ஸ்ட் டைம் அப்படிங்குறதால கொஞ்சம் தடுமாறிட்டேன். எப்போவும் அப்படி இருக்க மாட்டேன். அதுபோக உங்க அக்காவ பார்த்து நான் தடுமாறலன்னா தான் அதிசயம். என்ன கொழுந்தியா மேடம்? ஆமாவா?” எனக் கூறியவாறு ஒற்றைக் கண் அடித்து பதிலுக்கு சீண்டினான் துஷ்யந்த்.

 

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்