Loading

இதயம்-11

“வாஹினி! வாஹினி! எங்கே இருக்கே?” அதீத உற்சாகத்துடன் கேட்டது ஷியாமின் குரல்.

“எதுக்குடா ஏலம் போடுறே? இங்கே தான் இருக்கேன் வா!”

“உனக்கு விஷயம் தெரியுமா?” அவளுக்குத் தெரியுமா என்பதை தெரிந்துக் கொள்வதில் ஷியாமிற்கு ஆர்வம் அதிகமாகவே இருந்தது.

“ம்ப்ச்! உன்னை என்ன சொல்லியிருக்கேன், இங்கே வந்தால், கை காலெல்லாம் கழுவிட்டு, தலையில் கேப் போட்டுக்கோன்னு சொல்லிருக்கேனா இல்லையா? முதலில் அதை பண்ணிட்டு வந்து அப்பறம் என்னன்னு பேசு.!”

“ம்ப்ச், நேரங்காலம் தெரியாமல் இதைப் பண்ணு, அதைப் பண்ணுன்னு சொல்றே? இரு வர்ரேன்!” எனச் சொல்லிவிட்டு, சென்றவன், அவள் சொன்னபடியே செய்துவிட்டு, கரங்களை சானிடைஸ் செய்த பிறகே உள்ளே வந்தான்.

“இப்போ சொல்லுடா, அப்படி என்ன தலை போற விஷயம்? நானே உன்மேல் செம்ம கடுப்பில் இருக்கேன். எப்போ பார்த்தாலும் அந்த ஆதன் நெட்டகொக்கு கிட்டே என்னை மாட்டி விட்டுடுறே, அவன் என்னவோ பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்த மாதிரி என்னைப் பார்க்கிறான்.” பேச்சு வாக்கிலேயே எலெக்ட்ரிக் பீட்டரில் எதையோ கலக்கி அதற்கான அச்சுகளில் ஊற்றிக் கொண்டிருந்தாள்.

“சொன்னாலும் சொல்லலைன்னாலும் நீ மிட்டாய் கடை தானே?” புன்னகையுடன் சொன்னான் ஷியாம்.

“எருமைமாடு! என்ன நக்கல் பண்ணுறியா?!”

“உன்னைப் போய் நான் நக்கல் பண்ணுவேனா? சும்மா சொன்னேன் வாஹினி. ஆனால், ஒண்ணு நீ அன்னைக்கு அந்த ரிப்போர்ட்டர்ஸ் கிட்டே பேசினியே அது தான் இப்போ வைரலாகிட்டு இருக்கு. தமிழ்ப்பொண்ணுடான்னு டேக் லைன் கீழே உன் பேச்சு முக்கால்வாசி பேரோட ஸ்டேடஸா மாறி இருக்கு. ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆகிட்டீங்க மேடம்.!” மெச்சிக் கொண்டான் ஷியாம்.

“அதெல்லாம் இருக்கட்டும் டா! நான் இப்போ இன்ஸ்டாவில் நம்ம கேண்டி க்ரஷ் பேரில் பிஸ்னஸ் அக்கௌண்ட் க்ரியேட் செஞ்சுட்டேன். ரெண்டே நாளில் ஒன் மில்லியன் ஃபாலோவர்ஸ் தெரியுமா? நிறைய ஆடர்ஸ் கூட வருது. இப்படியே போச்சுன்னு வையி, உனக்கு தர வேண்டியதை ஒன் இயரிலேயே கொடுத்துடுவேன். எனக்கு ரொம்ப ஹேப்பியாய் இருக்கு தெரியுமா டா? நாம வளர்ந்துட்டு இருக்கோம். என் ஐடியா சரியானதுன்னு இப்போ புரிஞ்சுக்கறியா?” அதீத உற்சாகத்தில் பேசினாள் வாஹினி.

“ஆதன் உன்னை ப்ரமோட் பண்ணலைன்னா இதெல்லாம் நடந்திருக்காது வாஹினி. இதில் முக்கியமானப் பங்கு அவருக்கும் இருக்கு.!”

“அப்படின்னா, நாம சொந்த முயற்சியால் வளரலை, அவன் தான் ப்ரமோட் பண்ணினான்னு சொல்றியா டா? என்னைக் கடுப்பேத்தாதே ஷியாம்! அவன் என்ன ப்ரமோட் பண்ணினான்?”

“லூசு! நான் அப்படிச் சொல்லலை, சொந்த முயற்சி உழைப்பு எல்லாமே இருந்தாலும், நம்ம ப்ராடக்ட்டை அதிகமான இடங்களுக்கு கொண்டு போய் சேர்த்தது ஆதன் தான். நம்மளால் குறுகிய காலத்தில் இவ்வளவு சாதிச்சிருக்க முடியுமாங்கிறது சந்தேகம் தான்.!”

“நீ எனக்கு ஃப்ரெண்டா? இல்லை அந்த ஆதனுக்கு ஃப்ரெண்டா? ஃப்ராடு! எப்போ பார்த்தாலும் அவனுக்கே சப்போர்ட் பண்ணுறே?”

“ஆதனுக்கு சப்போர்ட் எல்லாம் இல்லை, நிதர்சனத்தைச் சொல்றேன். அன்னைக்கு அந்த ப்ரஸ் ரிப்போர்ட்டர்ஸ்கிட்டே நீ பேசினது கூட, இப்போ ட்ரெண்ட் ஆகி, நமக்கு ஆர்டர்ஸ் அதிகமா வருதுன்னா அதுவுமே ஆதனோட ப்ரமோஷன் தான்.!”

“லூசு! அவன் கூட என்னைச் சேர்த்து வச்சு பேசினது உனக்கு ப்ரமோஷனாடா? பைத்தியம் மாதிரி உளறாதே! நம்ம ப்ராடெக்ட் தரம் அப்படி. அதனால் தான் நமக்கு நிறைய ஆர்டஸ் வருது. இன்னொரு முறை இப்படி பேசினே, உன் ஃப்ரெண்ட்ஷிப் கட் பண்ணிடுவேன்!”

“நல்லா யோசிச்சு பாரேன் வாஹினி. நல்ல விஷயங்களாய் இருந்தாலும் கூட, அதை நெகட்டிவா சொன்னால் தான் நம்ம மக்கள் ஏத்துப்பாங்க! நேர்மறையான விஷயங்களையே எதிர்மறையா சொன்னால் தான் ரீச் ஆகும். ஒருவகையில் நெகட்டிவ் புரோமோஷன்னு வச்சுக்கோயேன். ஆனால், இனிமே இந்த மாதிரி பேச்சுக்களை நீ கேட்க வேண்டிய சூழல் இருக்காது.!”

“என்னடா சொல்றே? ஒண்ணுமே புரியலையே?” கண் முன்னே விடையிருந்தும் தீர்க்க முடியா குறுக்கெழுத்துப் புதிர் போல் அவன் பேசியதன் சாரம்சம் புரியாமல் விழித்தாள் வாஹினி.

“உனக்கு இன்னும் தெரியாதா? ஆதன் உன் கிட்டே சொல்லவே இல்லை? லேட்டஸ்ட் நியூஸ் இது தான் இது தெரியாமல் இருக்கியா? நிஜமாவே நம்பவே முடியலையே?”

“அடேய்! காட்டெருமை! என்னன்னு சொன்னால் தானே தெரியும்! ஏதோ விடுகதை சொல்ற மாதிரி, தலையும் புரியாமல், வாலும் புரியாமல் பேசினால், என்ன புரியும்?”

“நிஜமாவே தெரியாதா லூசு?”

“எருமை! என்னைக் கடுப்பேத்தாதே! என்னன்னு சொல்லித் தொலையேன்டா!”

“மிட்டாய் கடையை உத்துப் பார்த்த பட்டிக்காட்டானுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடுச்சு வாஹினி!”

“பட்டிக்காட்டான்.. மிட்டாய்.. ஏய்! நிஜமாவா டா? ஆதனுக்கு கல்யாணமா?”

“ஆமா! ஆதனுக்கும், அந்த ஃபேமஸ் மாடல் நிஷாவுக்கும் கல்யாணமாம். அந்த நிஷாவோட அப்பா பரமேஷ்வர் பெரிய பணக்காரர். மில்லியனில் புரளுறவர். ரெண்டும் இடமுமே பசையான பார்ட்டிகள் தான்.!”

“ஹப்பா! எனக்கு இப்போ தான் நிம்மதியாய் இருக்கு. அவனுக்கு கல்யாணம்னு சொன்னதும், அவனுக்கு சந்தோஷமோ இல்லையோ, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எப்போ பார்த்தாலுமே உத்து உத்து பார்க்கிற இம்சை எனக்கில்லை. என்னதான் என்னை ஆதன் பேரைச் சொல்லி வெறுப்பேத்தினாலும் கூட, நல்ல செய்தியாய் சொல்லியிருக்கிறே! தேங்க்ஸ்டா ஷியாம்!”

“ஆனாலும் அவர் கல்யாணத்திற்கு நீ சந்தோஷப் படுறது, கொஞ்சம் இல்லை ரொம்பவே ஓவர் தான்.!”

“என்னோட கெஸ் சரியாய் இருந்தால், அடுத்த மீட்டிங்கில் அவன் என் கிட்டே ப்ரபோஸ் பண்ணியிருப்பான். இப்போ தான் கல்யாணம் பண்ணப் போறானே நல்லா இருக்கட்டும்.!”

பெண்ணின் மன அகராதியில் ஆணின் பார்வைக்கான அர்த்தம் தெரிந்திருந்தது. ஆணின் பார்வை தன்னை என்ன காரண காரியத்திற்காகத் தீண்டுகிறது என்பதை முதல் விழித் தீண்டலிலேயே பெண் மனம் கண்டு விடும்.

தன் இருபத்தி நான்கு வருட வாழ்க்கையில் எத்தனை ஆண்களைக் கடந்து வந்திருப்பாள்? சுதந்திரமான பெண்ணை ஆண் ரசிப்பான் ஆனால் விரும்ப மாட்டான் என்பது அவளுக்குத் தெரியுமே..! எல்லாமே அவள் வாழ்க்கை அவளுக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள் தான். என்ன தான் ஆதனின் பார்வை அவள் மீது இருந்தாலும், கண்களைத் தாண்டி வேறெங்கும் பார்க்க முயலாத அவன் கண்ணியம் அவளுக்குப் பிடித்திருந்தது.

“ஆதனுக்கு கல்யாணம் ஆகப் போகுதுன்னு தெரிஞ்சதும் உன் இஷ்டத்திற்கு பேசறியே? பேசு! பேசு! சரி, டெலிவரி எதாச்சும் கொடுக்கணுமா? வேற எதாவது வேலை இருக்கா?”

“நிறைய இருக்கு டா! நாலு டெலிவரி இருக்குடா! அது இல்லாமல் நைட் மூணு டெலிவரி இருக்கு.!”

“நைட் டெலிவரி எல்லாம் வேணாம் சொல்லிடு. நளபாகம் மூலமா ஆன்லைன் ஆர்டர் போட்டுக்க சொல்லிடு. பகலில் நம்ம தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக சொல்ற அது ஓகே, ஆனால் நைட் டெலிவரி சரி வராது.!”

“லூசு! இன்னைக்கு வந்துருக்க ஆர்டர் எல்லாமே, நம்மோட ரெகுலர் கஸ்டமர்ஸ் நோ சொல்ல முடியாது. நம்மை நம்பி கேட்கும் போது நோ சொல்லவும் கூடாது. முதலில் நீ இந்த டெலிவரியை முடிச்சுட்டு வந்துரு. பலூன்ஸ், பார்ட்டி ஹேட்( Party hat) எல்லாம் எடுத்துட்டு போ! குழந்தையோட பர்த்டேன்னு சொன்னாங்க!”
பிறந்தநாளோ, திருமண நாளோ, என்ன ஏதென்று விசாரித்து, அதற்கேற்றாற் போல், பரிசுப் பொருட்கள் பலூன்கள் சேர்த்தே கொடுப்பது கேண்டி க்ரஷின் வழக்கம். இது போன்ற சின்ன சின்ன செயல்களால் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என யோசித்து அதைச் செயல்படுத்தியதும் வாஹினி தான்.

அவளின் சிந்திக்கும் விதமும், அவள் வகுக்கும் திட்டங்களும் ரொம்பவே புதுமையாய் இருந்தது அவளைப் போலவே..!

******

ஆதனின் திருமணச் செய்தியைக் கேள்விபட்டு சில நாட்கள் கடந்திருந்தது. ஏனோ ஆதனின் திருமணத்தைக் கேள்விப்பட்டதிலிருந்தே வாஹினியின் மனம் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தது.

‘அவனுக்கும் எனக்கானது வெறும் தொழில் சார்ந்த தொடர்புகள் மட்டுமே! அதைத் தாண்டி வேறு எதுவுமே இல்லை. இனி அவன் வழியும் பார்வைகள், குழையும் பேச்சுக்களில் இருந்து விடுதலை.’ மனதிற்குள் சொன்னபடியே, தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நிறைய வேலைகள் அவள் முதுகுக்குப் பின் வரிசைக்கட்டி நின்றன. அதிகமான ஆர்டர்கள் வருவதால், நிறைய நேரம் வேலை செய்து தேவையானவைகளைத் தயாரிக்க வேண்டியிருந்தது.

அதோடு அவளின் பிரத்யோக வாடிக்கையாளர்களுக்காகவும் சிறப்பான, புதுமையான தயாரிப்புகளையும் கொடுக்க வேண்டியிருந்தது. அவளுக்கு இருபத்து நான்கு மணிநேரம் கூடப் போதாமல் இருப்பதாய்த் தோன்றியது.

அப்படி ரொம்பவே தன் வேலைகளில், ஓய்வில்லாமல் இருந்த நேரத்தில் சத்தியமாய் அவள் அவனை எதிர்பார்க்கவில்லை. கேரமெல் சாக்லேட்டிற்காக இரட்டைக் கொதிமுறையில் (Double boiling method) சாக்லேட் கட்டிகளை உருக்கிக் கொண்டிருந்தவள் வாசலை நோக்கிப் போனாள்.

“ஹாய் சிமி!” கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தவனுக்கு, அவளைப் பார்த்ததும் கண்கள் சிரித்தது.

உள்ளே நுழைந்தவன், வாடிக்கையாளர் அமரும் இருக்கையில் அமர்ந்துக் கொண்டு சுற்றிலும் தன் பார்வையை ஓட்டினான். நேர்த்தியாய் அழகாய் பராமரிக்கப் பட்டிருப்பதில் அவன் முகத்தில் மெச்சுதல் வந்து போனது.

“ஹேய்! என்ன இந்தப் பக்கம்.?” அவசரமாய் உள்ளிருந்து அவன் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி வந்தாள் வாஹினி.

“ஏன் நான் வரக்கூடாதா? இப்போ நான் பிஸ்னஸ் விஷயமா வரலை. பர்ஸ்னலா வந்திருக்கேன்.!” என அவன் சொன்னபோது, அவன் குரலிலிருந்த வெறுமையை அவளால் உணர முடிந்தது.

“வாழ்த்துகள் ஆதன்! ரொம்ப ஹேப்பியா இருக்கு.!” தன் கரம் நீட்டி கை குலுக்கினாள் வாஹினி. அவளின் கரம்தனை அவன் தீண்டிய நொடிதனில், இப்படியே கையோடு இவளை அழைத்துப் போய் விடலாமா என்று கூடத் தோன்றியது.

பேசும் வார்த்தையை விட, பேசாத மௌனத்திற்கு அர்த்தங்கள் அதிகம் உண்டு. மௌனங்கள் பேசியது. யாரும் பேசாத பாஷையை யாருக்கும் புரியாத பாஷையை அவன் விழிகள் ரகசியமாய் பேசியது. ஆனால் புரிய வேண்டியவளுக்குத் தான் புரியவே இல்லை.

அவளின் நுனி விரல் தீண்டலில், அந்த ஏகபத்தினி விரதன், இராமனின் பாதத்துகள் பட்டு சாப விமோசனம் பெற்ற அகலிகை போல் உணர்ந்தான் ஆதன்.

வெறுமனே கை குலுக்குவதற்காக என்றாலும் கூட, அவளின் தீண்டல் அவனுக்குள் தித்திக்கத்தான் செய்தது.

‘இதயம் முழுதும் இவளை நிரப்பிக் கொண்டு, அந்த நிஷாவோடு நிம்மதியாய் உன்னால் வாழ்ந்து விட முடியுமா? ஒவ்வொரு நாளும் உயிரோடு செத்துப் பிழைக்க உன்னால் முடியுமா? முடியுமென்றால் தைரியமாக திருமணம் செய்து கொள். ஆனால் உயிரோடு செத்துவிட மாட்டாயே..?’ மனம் கேட்ட கேள்விக்கு அவனிடம் பதிலில்லை.

அவனால் மிகச் சுலபமாய் இவை எல்லாவற்றையும் உதறிக் கொண்டு போக முடியும் தான். அது அவனுக்கு பெரிய காரியம் ஒன்றுமில்லை. அவன் தந்தையை என்றுமே ஒரு பொருட்டாக அவன் மதித்ததே இல்லை. ஆனால் அவன் யோசிப்பது எல்லாமே சம்யூவிற்காகத்தான். அவள் மீது நிஜமான அக்கறை இருக்கிறது. அன்பு இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய, கட்டாயத்தில் இருக்கிறானே?

ஆனால் அவன் ஒன்றை மறந்து போனான், உண்மையான அன்பு என்பது, எதையும் திணிக்காது. நிரூபிக்கச் சொல்லாது. கட்டாயப் படுத்தவும் செய்யாது. ஆனால் இங்கே ஆதன் கட்டாயப் படுத்தப்பட்டு கட்டத்திற்குள் நிறுத்தப்பட்டிருக்கிறான். கோபம் எனும் கொதிநீரை ஊற்றி, தனக்கு முன்னிருக்கும் கோட்டை அழித்து விடலாம் தான். ஆனால் பாசம் எனும் பயிர் ஒட்டு மொத்தமாய் பட்டுப் போய் விடுமே..!

“ஆதன்! இப்போவே கனவுக்கு போயாச்சா? நிஷா மேம் கூடவா? என் கையை விடேன். என் கையைப் பிடிச்சுக்கிட்டு அவங்க கூட டூயட் பாடுறதெல்லாம் ரொம்ம ஓவர்.!” எனச் சொன்னபடியே தன் கரத்தை அவனிடமிருந்து வலுக்கட்டாயமாய் பிரித்துக் கொண்டாள் வாஹினி.

“ஃபர்ஸ்ட் டைம் இங்கே வந்திருக்கியே என்ன சாப்பிடுறே சொல்லு?”

“எப்போவும் போல ப்ளாக் டீ கொடு சிமி!” கண்கள் அவன் அனுமதி இல்லாமலே அவளை மொய்த்தது.

அன்று போலவே உச்சியில் அடக்கியிருந்த கூந்தல், ஆலம் விழுதுகளைப் போல், முன் நெற்றி தழுவி முகம் மறைத்துக் கொண்டிருக்க, கழுத்து வளைவைத் தொட்டுக் கொண்டிருந்தக் கூந்தலை, தன் கரம் கொண்டு காதோரம் ஒதுக்க ஆசைக் கொண்டது ஆதனின் மனம். ஏனோ தானே அவளின் கழுத்து வளைவில் தொட்டும் தொடாமலும் ஊஞ்சலாடுவது போல் அவனுக்குள் பிரம்மை கூட எழுந்தது.

இதற்கு முன் எந்தப் பெண்ணிடமும் தோன்றாத புதுவித உணர்வில், தண்ணீரில் தள்ளாடும் தாமரை மலரைப் போல், அவன் மனம் தள்ளாடிக் கொண்டிருக்க, அவன் பார்வை தன்னைத் தீண்டுவதில் அவஸ்தையாய் உணர்ந்தாள் சிம்மவாஹினி.

எங்கே நகர்ந்தாலும், அவளையே தொடரும் ஆணின் பார்வை அவளுக்கு ரொம்பவே ஒரு மாதிரியாய் இருந்தது.

“இவன் கல்யாணம் பண்ணிக்கப் போறது நிஷாவை. ஆனால், என்னை உத்து உத்து பார்த்துட்டு இருக்கான். ஆம்பிள்ளைன்னா எப்படி வேணும்னாலும், யாரை வேணும்னாலும் பார்க்கலாமா? இதுவே ஒரு பொண்ணு பண்ணினால் என்னென்ன பேசியிருப்பாங்க” என முணுமுணுப்பாய் புலம்பியபடியே, இடதுபுற தோளிலிருந்து வழிந்த டீ-ஷர்ட்டை சரி செய்தவள், கண்ணாடி கோப்பைகளில் தேநீரை ஊற்றிக் கொண்டு அவன் முன்னே சென்று அமர்ந்தாள்.

“சிமி! நீ கண்டிப்பா என் மேரேஜ்க்கு வரணும். !” திருமண அழைப்பிதழை அவள் முன்னால் நகர்த்தினான்.

‘ஆதன் வித் நிஷா ‘ தங்க நிற எழுத்துக்கள் பளபளக்க, அதைப் பார்த்த வாஹினினியின் மனதிலோ, எல்லையில்லா சந்தோஷம்.

‘நிஜமாவே இவனுக்கு கல்யாணம் தான். நான் கூட பொய் சொல்றானோன்னு நினைச்சேன். இனி என் வழிக்கு வர மாட்டான். என்னைப் பார்க்கவும் மாட்டான்.’ உள்ளுக்குள் உற்சாகம் காட்டாற்று வெள்ளமாய் கரை புரண்டோடியது. எனோ எதிலிருந்தே விடுதலை பெற்ற உணர்வு.

இந்தக் கல்யாணம், காதல் கத்தரிக்காய் எதிலுமே அவளுக்குத் துளி விருப்பம் கிடையாது. என் இனிய தனிமையே என தனிமையில் இனிமை காணும் ரகம்.

ஓர் ஆணை தன் சரிபாதியாக ஏற்றுக்கொண்டு, அவர்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது எனத் தன் விருப்பங்களை தியாகம் செய்து வாழும் வாழ்க்கையிலெல்லாம் அவளுக்கு சுத்தமாய் விருப்பமில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக ஓர் ஆணை நம்பி அவன் கரத்தினில் தன் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் ஒப்படைத்துவிட்டு ஒவ்வொன்றுக்கும் பள்ளி மாணவியைப் போல் அனுமதி கேட்டு நிற்கும் நிலையை அவள் அறவே வெறுத்தாள். அந்த நிலையில் தான் நின்றுவிடக் கூடாதென்பதிலும் உறுதியாகவே இருந்தாள்.

இத்தனை எண்ணங்கள் அவள் ஆழ்மனதிற்குள் தேங்கிக் கிடந்தாலும், எதையுமே வெளியில் காட்டிக் கொள்ளாது,

“உன் மனம் போல் மண வாழ்க்கை அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்!” புன்னகையோடு சொன்னவள்,

“டீ எடுத்துக்கோ! அடுத்தமுறை இங்கே உன் வைஃப் கூட வரணும்.!” நிறைந்து வழிந்தப் புன்னகையோடு சொல்ல, இங்கே ஆதனின் இதயத்தின் அடியாழம் வரை கசந்து தொலைத்தது.

‘மனம்போல் மண வாழ்க்கைன்னா நான் உன்னைத் தான் கல்யாணம் பண்ணணும் சிமி! ஆனால், என் வாழ்க்கை முழுசுமே உன்னை கடந்த காலமாய் பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுட்டேன். புதைகுழின்னு தெரிஞ்சு கண்ணைத் திறந்துக்கிட்டே விழப் போறேன். என்னைப் பொருத்தவரை இந்தக் கல்யாணம் ஜஸ்ட் சம்பிரதாயம் மட்டும் தான்.’ தனக்குள் பேசியவன் தன் மன உணர்வுகளை அவளிடம் காட்ட விரும்பாமல், புன்னகை எனும் பொய் முலாம் பூசி மறைத்திருந்தான்.

“நீ கண்டிப்பா கல்யாணத்திற்கு வருவே தானே சிமி?”

“கண்டிப்பா முயற்சி செய்யறேன். முடியுமா தெரியலை. நிறைய வேலைகள் இருக்கு. உனக்கே தெரியுமே! நிறைய ஆர்டர்ஸ் இருக்கு. புதுசா சில ட்ரை பண்ண வேண்டியிருக்கு.!” ஏதாவது காரணம் சொல்லி அவள் தப்பிக்க முயலவில்லை. நிஜமாகவே அவளுக்கு நிறைய வேலைகள் இருந்தது.

ஆனால், வாஹினியின் பதிலில் அவன் முகமோ சட்டெனச் சுருங்கிப் போனது.ஆனாலும் துளியளவு கூட அதைக் காட்டிக் கொள்ளாது, சட்டென நிமிர்ந்து அமர்ந்தவன்,

“நீ வருவே!” அவ்வளவு தான் என்பது போல், தேநீரை எடுத்துப் பருகத் துவங்கினான்.

“அவளிடம் சொல்லாமல்
விடுபட்ட காதலினால் மட்டுமே..
இன்னும் இசைத்துக் கொண்டிருக்கிறது..
ஒருதலை ராகம்..!”

இசைக்கும்…

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
9
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. ஆதன் ஏன் ஆதாரத்தை அழித்து லூசு சம்யூ காப்பாற்ற நினைக்கவில்லை.

    1. Author

      உண்மை தான் கலை மா, தொடர் ஆதரவிற்கு நன்றிகள் ❤

  2. சம்யு இவ்வளவு சுயநலமா இருக்க கூடாது. ஆதன் ஆகாஷ் பற்றி தெரிந்தும் தங்கையின் திருமணத்தை தடுக்கவில்லை.. அவன் தொழிலுக்கு ஒரு பிரச்சினை வந்தபோது எளிதாக சமாளிக்க முடிந்தவனால் தங்கையின் பிரச்சினை சமாளிக்க முடியவில்லையா?

    1. Author

      ஆதன் கண்டிப்பா சமாளிப்பான். அடுத்த அத்தியாயத்தில் புரியும். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டியர் ❤