Loading

வீட்டில் பஞ்சாயத்து வைத்துப் பேசிய பின்பும், ஒரு வாரம் தாயும் மகனும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கடையில் வாங்கி அவர் கண் முன்னே அமர்ந்து அவன் சாப்பிட, இவருக்குக் கோபம் கோபமாக வந்தது.

எந்தத் தாய் தான் தன் பிள்ளைக்கு இப்படி ஒரு வரனைப் பேசி முடிப்பாள்? மஞ்சுளா பழமைவாதி, சாதி பார்ப்பவர். மருமகள் வீட்டிற்கு ஏற்றது போல வேலைகள் செய்வதில் தகுந்தவளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். பக்கா ‘மாமியார் மெட்டீரியல்’ அவரிடம் புதுமையை எதிர்பார்க்க முடியுமா? அவரும் வீம்பாகத்தான் இருந்தார்.

ஒரு வாரம் கழித்து கயலின் கணவன் கோபிநாத் மாமியாரைத் தேடி வந்தான்.

“அத்தே! அந்தப் பொண்ணைப் பத்தி விசாரிச்சேன்,” என்று ஜனனியைப் பற்றிய முழு விவரங்களையும் அவரிடம் பகிர்ந்தான்.

இடையில் விபுவுடன் நடந்த திருமணத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது என்பதால், அதைப் பற்றி அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. மற்ற விவரங்களையெல்லாம் அவன் சொல்ல, மஞ்சுளாவின் மனம் பிசைய ஆரம்பித்தது.

கணவனை இழந்த தனக்கே இந்தச் சமூகம் நல்லது கெட்டதுக்கு ஒதுக்கி வைக்கவில்லை என்றாலும், ஓரம் கட்டிவிட்டது. ஒரு சிறு பெண், கணவன் இறந்ததும் வாழ்க்கையில் எப்படிப்பட்ட போராட்டங்களைச் சந்திக்கிறாள் என்று பெண் மனம் அவளுக்காகத் துயர் கொண்டாலும், ஏனோ மகனுக்குக் கட்டி வைக்க மனம் இடம் கொடுக்கவில்லை.

“இப்போ என்ன செய்யலாம் மாப்பிள்ளை?”

“நான் சொல்றதைக் கேளுங்க அத்தை,” என்று அவனது திட்டத்தைச் சொல்ல, மனதிற்கு ஒப்பவில்லை என்றாலும் சரியென ஒத்துக் கொண்டார். அவரே மகனிடம் பேசவும் செய்தார்.

“கந்தா, உன் விருப்பப்படி அந்தப் பொண்ணு வீட்டுக்குச் சம்பந்தம் பேசலாம்… ஒருவேளை அந்தப் பொண்ணுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லன்னா, அந்தப் பொண்ணைத் தொந்தரவு பண்ணாம அம்மா பேச்சைக் கேட்டு வேற பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கத்தான் வேணும். உனக்குச் சரின்னா சொல்லு, பொண்ணு கேட்கப் போகலாம்,” என்றார்.

அவனும் சரி என்று ஒத்துக் கொள்ள, கந்தரூபனின் குடும்பம் ஜனனி வீட்டிற்குச் சென்றனர்.

அன்று விடுமுறை நாளாக இருந்தது. வீட்டில் தான் அனைவரும் இருந்தனர். சச்சினை விபு அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட, வீடே அமைதியாக இருந்தது. மூவர் மட்டுமே வீட்டில் இருந்தனர். ஜனனி சமையலறையில் வேலையாக இருந்தாள். வள்ளியும் நீலகண்டனும் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த வேளையில் அழைப்பு மணி அடிக்க, வள்ளிதான் கதவைத் திறந்தார்.

குடும்பமாகக் கையில் தட்டுடன் நிற்பவர்கள் யாரென அவர் யோசிக்க, “உள்ளே வந்து பேசலாமா?” என்றார் மஞ்சுளா. வள்ளியும் உள்ளே அழைக்க, சங்கடத்துடன் உள்ளே வந்து அமர்ந்தனர்.

ஜனனி, “யாரு அத்தை?” எனக் கேட்டபடி வந்தவள், மஞ்சுளாவையும் கந்தரூபனையும் கண்டதோடு, அவர்கள் குடும்பமாகப் பழத் தட்டுடன் வந்திருப்பதைப் பார்த்து விஷயத்தை யூகிக்க முடியாதவளா? கந்தரூபனைத் தீயாக முறைத்தாள். அவர்கள் இங்கு வந்த நோக்கத்தைச் சடுதியில் அறிந்து கொண்டு அவள் முறைப்பதைப் பார்த்து இவனுக்குள் சிரிப்புதான் வந்தது.

சுடிதார் அணிந்து, ஷாலைக் கழுத்தில் மாலையாகப் போட்டு, வியர்வை படிந்த முகத்துடன் வந்து நின்றவள் அவனது கவனத்தை மெல்ல ஈர்த்தாள்.

“ஜனனி மா, வந்தவங்களுக்குக் குடிக்க எடுத்துட்டு வா,” என வள்ளி கட்டளையிட, அவளும் உள்ளே சென்றுவிட்டாள்.

அவள் சென்றதும் மஞ்சுளா பேச்சை ஆரம்பித்தார். “நான் நேரடி பேச்சுக்கே வர்றேங்க! என் பையனுக்கு உங்க மருமகளைப் பிடிச்சிருக்காம். கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறான். என் பிள்ளை கந்து வட்டித் தொழில் பண்றான்; அவங்க அப்பா நடத்தின கேட்டரிங்கை இவன் எடுத்து நடத்துறான். வசதிக்கு எந்தக் குறைச்சலும் இல்லை. எனக்கு என் பிள்ளையோட சந்தோஷம்தான் முக்கியம். அதான் அவன் விருப்பத்துக்கு மறுப்பு தெரிவிக்காம பொண்ணு கேட்டு வந்திருக்கேன்,” என்று பெருமை பொங்கச் சொல்ல, கந்தரூபனோ கோபிநாத்தை ஒரு தரம் பார்த்தான். அவனோ சிரிப்பை அடக்கப் படாதபாடுபட்டான். கயல் அவனை அடக்கினாள்.

“என் மகன் ரொம்ப நல்லவன். அவனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. அடுத்தவங்க கஷ்டத்தைத் தன் கஷ்டமா பார்ப்பான். கண்டிப்பா உங்க மருமகளை அவன் கண்ணுக்குக் கண்ணா வச்சுப் பார்த்துப்பான்,” என மகனின் புகழைப் பாட, நீலகண்டனோ கந்தரூபனைப் பார்த்தார். அவனோ அசடு வழிந்தான்.

ஜனனி சரியாக அனைவருக்கும் ஜூஸ் எடுத்து வந்து கொடுத்தாள். கந்தரூபனிடம் நீட்ட, அவனோ அவளைப் பார்த்துக்கொண்டே வாங்கினான். அவளோ அவனைப் பார்க்கவே இல்லை. அதனை மஞ்சுளா கவனித்துக் கொண்டார்.

“நானும் நேரடியாச் சொல்றேன். ஜனனி எனக்கு மருமகள் இல்லை, மகள்! அவளுக்கு ஒரு நல்லது நடந்தால் எங்களுக்குச் சந்தோஷம்தான். அவ விருப்பம்தான் எங்களுக்கு முக்கியம். ஜனனி, நீ என்ன சொல்ற? உன் விருப்பம் என்னன்னு சொல்லுமா?” என்றார் வள்ளி.

“என்னை மன்னிச்சுடுங்க! எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லை. எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிற எண்ணமே இல்லை. நான், என் பிள்ளை, இவங்க மட்டும் போதும். புதுசா எந்த ஒரு உறவையும் சேர்க்க எனக்கு விருப்பமில்லை… உங்க சிரமத்துக்கு மன்னிக்கணும்,” என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.

அவளது நிராகரிப்பு அனைவருக்கும் இன்பமளிக்க, சம்பந்தப்பட்ட கந்தரூபனின் முகமோ இறுக்கமாக இருந்தது.

“ஜனனி, நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…”

“ஸாரி மிஸ்டர் கந்தரூபன், உங்ககிட்ட பேச எனக்கு ஒண்ணுமில்லை. நீங்க உங்க தொழில் ஆதாயத்துக்குத்தான் என்னைக் கல்யாணம் பண்றீங்கன்னு நல்லாவே தெரியுது! அதுக்கு நான் ஆள் இல்லை. எனக்கு என் கேட்டரிங் சர்வீஸ் போதும். ப்ளீஸ்,” என்று வாசலைக் காட்ட, அதற்கு மேல் அங்கிருப்பானா அவன்? எழுந்து சென்றுவிட, வந்தவர்களும் அவன் பின்னே எழுந்து சென்றுவிட்டனர்.

மஞ்சுளா மட்டும் அவர்கள் சென்றதை உறுதி செய்துவிட்டு ஜனனியிடம் வந்தார். “ரொம்ப நன்றி கண்ணு!” என்றார். அவரை கேள்வியாகப் பார்த்தாள் ஜனனி.

“என்னடா இவ எதுக்கு நன்றி சொல்றாளேன்னு பார்க்கிறியா? நான் ஒன்றும் பெரிய புதுமைவாதி இல்லை கண்ணு! கணவன் இறந்துட்டா புள்ள குட்டிய வச்சுத் தனியா வாழணும்னு நினைக்கிற ஆளு. இப்போ இருக்க காலம் மாதிரி இரண்டாவது கல்யாணம் பண்றது எனக்குச் சுத்தமா பிடிக்காது. யாரும் எப்படிப் போயிட்டுப் போகட்டும், ஆனா என் வீட்ல அப்படி நடக்கக் கூடாது. என் மகன் பொண்ணுங்க வாசம் படாம வாழ்ந்தவன். அவனுக்குப் புருஷனோட கூடிப் பழகிப் பிள்ளை பெத்தவளை எப்படி கட்டிக் கொடுக்கிறது? என் மனசுக்கு ஒப்பலை கண்ணு! அவன் ஆசைப்பட்டான்… என்னால உன்னை அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க முடியாது. நீ சம்மதிக்க மாட்டேன்னு மாப்பிள்ளை சொன்னதாலதான் வந்தேன். ஒருவேளை நீ சம்மதிச்சிருந்தா, நிச்சயம் இந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சிருக்க மாட்டேன் கண்ணு! நமக்குள்ள உறவு சுமுகமா போகணும்னுதான் நினைச்சேன். நான் வர்றேன் கண்ணு,” என்று விடைபெற்றுக் கொள்ள, வெற்றுச் சிரிப்புடன் அவர் செல்வதைப் பார்த்து நின்றாள்.

“என்ன ஜனனி, அந்த அம்மா இப்படிப் பேசிட்டுப் போகுது? நீ அமைதியா இருக்க,” எனச் சீறினார் வள்ளி.

“அவங்க சொல்றது சரிதானே அத்தை. எந்த அம்மா தன்னோட பையனுக்கு என்னைப் போல இருக்கிற பொண்ணைக் கட்டி வைப்பாங்க? நானும் நீங்களும் கூட அம்மாதானே! நமக்கே முதல்ல தயக்கமாத்தானே இருக்கும்? உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையான்னு யோசிக்க மாட்டோமா? விடுங்க, ஒரு அம்மாவா இருக்கிறதால அவங்க எண்ணத்தை நான் மதிக்கிறேன். அதுக்காக நான் வருத்தப்படப் போறதில்லை. ஏன்னா எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிற எண்ணமே இல்லை அத்தை,” எனத் தெளிவாகச் சொன்னாள்.

“அந்த அம்மா போல நானும் இருந்தேன். ஏன், நீ சொல்றது போல நானும் முதல்ல தயங்கியிருப்பேன். ஆனா உன்னைப் பத்தித் தெரிஞ்சதுக்கு அப்புறமாவும் நான் அப்படி யோசிச்சா நான் பெண்ணே இல்லமா! எனக்கு இன்னொரு பையன் இருந்தால், அவனுக்கு உன்னைப் பிடிச்சிருந்து கட்டிக்கக் கேட்டால் தாராளமா உன்னைக் கட்டி வச்சிடுவேன். மறுமணம் தப்பில்லை… நீ எங்களுக்காக யோசிக்காம உன்னைப் பத்தியும் சச்சினைப் பத்தியும் மட்டும் யோசி! நீ அனுபவிக்காத வாழ்க்கை இன்னும் உனக்காகக் காத்துட்டு இருக்கு, யோசி மா,” என்று அவள் பதிலைக்கூட எதிர்பாராது சென்றுவிட்டார்.

“உன் அத்தை சொல்றது எனக்குச் சரின்னு தோணுது,” என்று நீலகண்டனும் சொல்ல, வள்ளி பேசியதே மனதில் ஓட, சோர்வாக அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். அதன் பின் அவள் வெளியே வரவில்லை; அவளை அப்படியே விட்டுவிட்டனர்.

மாலை வேளையில் விபு, ஜோவிகா, சச்சின் மூவருமாக வெளியே சுற்றிவிட்டு சச்சினை வீட்டில் விட வந்திருந்தனர். அவர்களை வரவேற்ற பெரியவர்கள் இன்று நடந்ததைச் சொல்ல, விபுவும் ஜோவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

சச்சின் கதவைத் தட்ட, திறந்தவள் மற்ற இருவரையும் வரவேற்றாள். விபுவும் ஜோவும் அறைக்குள் நுழைய, பெண்கள் இருவரும் மெத்தையில் அமர்ந்தனர். சச்சினும் விபுவும் கீழே அமர்ந்து விளையாடினார்கள்.

முக வாட்டத்துடன் அமர்ந்திருந்த ஜனனியைக் கண்ட ஜோ,

“இன்னும் நீ காலையில நடந்ததை மறக்கலையா ஜானுக்கா?” என்றாள்.

“அப்படி இல்லை ஜோ! கல்யாண விஷயத்தைப் பேசினதுமே எனக்குப் பழைய நினைவுகள் சட்டுன்னு நியாபகம் வந்திருச்சு! அதுல இருந்து நான் இன்னும் மீண்டு வரலை போல ஜோ! நடந்த விஷயங்களை எப்போ நான் மொத்தமா மறப்பேன்னு எனக்கே தெரியல,” எனத் தோளைக் குலுக்கினாள். அவளை ஒரு தரம் வலியுடன் பார்த்தான் விபு.

“எனக்கென்னமோ நீ இன்னொரு கல்யாணம் பண்ணினாதான் இதுல இருந்து மீண்டு வருவ, மொத்தமா எல்லாத்தையும் மறப்பேன்னு தோணுது க்கா,” என்றாள் ஜோவிகா.

“என்னால முடியாது ஜோ! என் கடந்த காலம் என்னைக் கொல்லாம கொன்னுட்டு இருக்கு! எவன் ரெண்டு கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணை மூணாவதா கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிப்பான்? இதென்ன சகஜமான விஷயமா? பரவாயில்லைன்னு அப்படியே ஏத்துக்க? தினமும் ரணமா கொல்லுது ஜோ! எனக்குக் கல்யாண வாழ்க்கையே வேணாமே… நான் நிம்மதியா இருக்கேன். ஒரு இலக்கோட போயிட்டு இருக்கேன். எனக்கு இந்த வாழ்க்கையே போதும்னு தோணுது ஜோ,” என்று தன் மனநிலையை விளக்கினாள்.

“முதல்ல நீ விபுவோட நடந்ததைக் கல்யாணம்னு சொல்லாத… ஊர் உலகத்துல யாருக்கும் அந்தக் கல்யாணம் நடந்ததே தெரியாது. எப்படி அதை நீ கல்யாணமா கருதுற, ஜானுக்கா? அதெல்லாம் கல்யாணமே இல்லை! உனக்கு பாதுகாப்பு கொடுக்க உன் கழுத்துல கட்டப்பட்ட கயிறு, அவ்வளவுதான். என் விபுக்கு என்னோட மட்டும்தான் கல்யாணம் நடந்தது. நான் மட்டும்தான் அவனுக்கு ஒரே பொண்டாட்டி,” என்று அவனைப் பார்த்து முனைப்புடன் கூறினாள்.

அவள் கூறியதைக் கேட்டு இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. இதழை மடித்து ஜானு சிரிப்பை அடக்க, விபு இதழை கடித்துச் சிரிப்பை அடக்கி, புருவமிரண்டையும் உயர்த்தி அவளைக் காதலாகப் பார்க்க, அதில் நாணிப் போனாள் ஜோவிகா.

“விபு!” எனச் சச்சின் அவனை விளையாட்டுக்கு அழைக்க, இருவரும் பார்வையை மாற்றிக் கொண்டனர்.

“ஜானுக்கா!” என ஜோ இழுக்க,

“ப்ளீஸ் ஜோ! இந்த டாபிக் வேணாமே,” என்றதும் அவள் விபுவைப் பார்த்தாள். அவன் முறைப்பில் வாயைக் கப்சிப்பென்று மூடிக்கொண்டாள்.

“ஜானு! உன்னை நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லலை. ஆனா இன்னமும் பழசை நினைச்சு கஷ்டப்பட்டுட்டு இருக்காதடி. உன் இலக்குக்கு அது தடையா இருக்கலாம். ‘பாஸ்ட் இஸ் பாஸ்ட்’! எந்த ஒரு விஷயமும் உன்னைக் கடந்த காலத்துக்கு இழுத்துட்டுப் போகாதபடி பார்த்துக்கோ. கல்யாணம் பண்ணினாலும் பண்ணலைனாலும் உனக்குன்னு ஒரு அழகான லைஃப் இருக்கு. கடந்த காலத்தைப் பிடிச்சுத் தொங்கிட்டு நிகழ்காலத்தை விட்டுடாத!” என்று சிறந்த நண்பனென நிரூபித்தான் விபு.

அவனை அவள் நன்றியுடன் பார்க்க, கண்கள் மூடித்திறந்து இதமளித்தான். இருவரின் நட்பை வழக்கம் போல வியப்பாகப் பார்த்தாள் ஜோவிகா.

“அப்புறம் ஜோ, அம்மா பேசினாங்க… வீட்ல அடுத்த விசேஷமாமே, விருந்து வைக்கணும்னு சொன்னாங்க… என்ன விசேஷம்?” என கிண்டலாகக் கேட்டாள் ஜனனி.

“ஏன் உனக்குத் தெரியாதாக்கும்? என்ன விசேஷம்னு தெரியாத மாதிரி கேக்குறீங்க?” என்று சிலுப்பிக் கொள்ள,

“மறுபடியும் விபு உனக்குத் தாலி கட்டப் போறான் போல!”

“பச்! அதுதான் ஜானுக்கா கவலை. மறுபடியும் இவன் கையாலே தாலி வாங்குறோமேன்னு,” எனச் சலிப்பாகச் சொல்ல,

“மேடம் வேணும்னா சந்தீப் கையால தாலி வாங்கிக்கிறீங்களா?” என நக்கலாகக் கேட்க, “ம்ம்… எனக்கு ஓகே,” என வேகமாகத் தலையை ஆட்டினாள். சச்சினின் விளையாட்டுப் பொருள் அவள் மீது வந்து விழுந்தது.

“கொன்னுடுவேன் டி உன்னை… வீட்டுக்கு வா உனக்கு இருக்கு,” என்றான் விபு பொய்யான கோபத்தில். அவளோ அவனுக்குப் பழிப்பு காட்டினாள்.

“யார்ரா அது?” என ஜனனி கேட்க, அவளது அலைபேசியிலிருந்து அவனது புகைப்படத்தைக் காட்டினாள். அவளது ‘சமீபத்திய கிரஷ்’ என்று சொல்லி அப்பப்போ விபுவை வெறுப்பேற்றி, அவனிடம் பொறாமை முத்தமும் வாங்கிக்கொள்வதில் ஜோவிற்கு அளாதி சந்தோஷம்.

“அழகாத்தான் இருக்கான்,” என்றாள் ஜனனியும் விபுவை வெறுப்பேற்ற.

“என்ன பெரிய அழகு? ஸ்கூல் படிக்கிற பையன் போல இருக்கான். உடனே அழகா? நேச்சுரல் ஸ்டார் விபு போல இல்லை…” எனத் தன் காலரைச் சரிசெய்ய, இருவரும் நகைச்சுவை கேட்டது போலச் சிரித்தனர்.

வேகமாகப் பறந்து வந்து அவர்களின் நெற்றியைப் பதம் பார்த்தது சச்சினின் விளையாட்டுப் பொருட்கள். ஜோ தலையணையைத் தூக்கி எறிய, மாறி மாறி வீசிக்கொண்டு விளையாட, சச்சின் மற்றும் ஜனனியின் பாடுதான் திண்டாட்டமாகப் போனது.

“ஹலோ கப்புள்ஸ், என் ரூமை குப்பையாக்கினது போதும். நேரமாச்சு, வீட்டுக்குப் போறீங்களா?” எனக் கேட்டதும் தான் சுற்றி அந்த இடத்தைப் பார்த்தனர்.

“ஸாரி ஜானு! ஸாரி க்கா!” என இருவரும் சேர்ந்து இழுத்துக்கொண்டே சொல்ல,

இருவரையும் முறைத்து வைத்தாள்.

“விபு! நீ டீச்சர்னு வெளிய சொல்லிட்டு ஸ்கூல் பக்கம் வந்திடாத! உனக்கு என் பக்கத்துல இடம் போட்டு வைக்கிறேன், அங்க வந்து உட்காரு,” என்றான் சச்சின் முறைப்பாக.

“ஏன்டா?” எனப் புரியாமல் கேட்க,

“நானே இதெல்லாம் வச்சு விளையாட நான் என்ன சின்ன பையனான்னு அம்மா கிட்ட கேட்டேன்! நீ சின்னப் பிள்ளை மாதிரி என் கூட விளையாடுறயே, வெட்கமா இல்லை உனக்கு?” எனக் கேட்க, அசடு வழிந்தான் விபு.

“என்னடி, உன் புள்ளை ரொம்பப் பேசுறான்?” என விபு அவளை முறைக்க,

சிரிப்பை அடக்கியபடி, “பின்னப் பேசாம? பிள்ளையைப் பெத்து என் புள்ளை கூட விளையாட அனுப்பாம, நீ உட்கார்ந்து விளையாடினா கேட்கத்தான் செய்வான்,” என இவளும் சொல்ல, இருவரும் ஒரு கணம் வெட்கப்பட்டனர்.

பின் சுதாரித்த இருவரும் தாயையும் மகனையும் ஒரு சேர முறைத்தனர். வேற கதைகள் சில பேசிவிட்டு அவர்கள் கிளம்பிவிட, சச்சினை அழைத்துக் கொண்டு சாப்பிட வந்தாள் ஜனனி. மருமகள் தெளிவு பெற்றதைக் கண்டு பெரியவர்கள் இருவரும் இதமாக உணர்ந்தனர். குடும்பமாய் அமர்ந்து சாப்பிட்டு முடித்து, அவரவர் அறைக்குள் உறங்கச் சென்றனர்.

வழக்கமாக இளாவின் அழைப்பு வர, அவனுடன் பேசத் தொடங்கினாள். அவனுடன் பத்து

நிமிடம் தான் பேசியிருந்தாள், ஏதோ கோபத்தில் அவனை பிளாக்கில் போட்டுவிட்டாள். இவனும் (இளா) தலையில் கை வைத்தபடி அமர்ந்துவிட்டான்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்