
சமையல் அறையில் கந்தரூபனின் தாய் மஞ்சுளா அடுப்பில் தாளித்துக் கொண்டிருந்தார்.
“ம்மா…!” என அழைத்தபடியே அவர் பக்கவாட்டில் வந்து நின்றான் கந்தரூபன்.
“ம்… சொல்லுடா, பசிக்குதா? இதோ ரெண்டு நிமிஷம்,” என்றபடி தாளித்ததை குழம்பில் கொட்டிவிட்டு, அடுப்பை அணைத்தார்.
“பசிக்கலமா! உன்கிட்ட கொஞ்சம் பேசணும்,” என்றவனின் வழக்கமான அதட்டல் குரல் இப்போது தணிந்து போயிருந்தது.
அவனை உற்றுப் பார்த்துவிட்டு, “ம்ம்… பேசுடா,” என்று கையோடு சமையல் மேடையைச் சுத்தம் செய்தவர், பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தார்.
அவரிடமிருந்து பாத்திரங்களை வாங்கி, சோப்பைத் தொட்டுத் தேய்த்தபடியே மீண்டும் “ம்மா…” என்றான்.
“ஐயே! இங்கதானே நிக்கிறேன், சொல்லேன்டா,” என்றார் தலையில் அடித்துக்கொண்டு.
“ம்மா… நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்,” என்றான்.
அவரோ இடையில் கையை ஊன்றியபடி, “பாக்குற பொண்ணெல்லாம் நல்லா இல்ல… அது இல்ல… இது இல்லனு நொட்டை சொல்லிட்டு, இப்போ என்னடா கல்யாணம் பண்ணலாம்னு வந்து நிக்கிற?! எத்தன பொண்ணுங்கள உனக்காக அந்தத் தரகரும், நம்ம மாப்பிள்ளையும் பார்த்துச் சொன்னாங்க. ஒருத்தியையும் விடாம குறை சொல்லி வேணாம்னு தள்ளுன! இப்போ எங்கிருந்து உனக்கு இந்தப் புத்தி வந்துச்சு?!”
“ம்மா… நிஜமாலுமே அந்தப் பொண்ணுங்கள எனக்குப் பிடிக்கவே இல்லம்மா…”
“அப்ப இனி பாக்குற பொண்ணுங்களாச்சும் பிடிச்சுக்குமா? இல்ல அவங்களையும் நொட்டை சொல்லுவியா?”
“ம்மா… எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கு…” என எச்சிலை விழுங்கியபடி சொன்னான்.
“ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கா? அதிசயமா இருக்கே! யாரு அந்தப் பொண்ணு? நம்ம ஆளுங்களா? பொண்ணு பக்கம் எப்படி? வசதியானவங்களா?” என அவர் கேள்வி மேல் கேள்விகளை அடுக்கிட,
“பொண்ணைப் பத்தி கொஞ்சம் தெரியும்மா! நம்ம ஆளுங்கதான். பொண்ணோட அப்பா கொஞ்சம் வசதியானவர், ஒரே பொண்ணு! ஆனா…?”
“ஆனாவா? ஆனா என்னடா? பொண்ணுக்கு அம்மா இல்லையா? அப்பா மட்டுமா?”
“அப்பா, அம்மா ரெண்டு பேரும் இருக்காங்க.”
“அப்புறம் என்னடா?”
“ஆனா அவ இப்போ அப்பா அம்மாவோட இல்ல…”
“அப்பா அம்மாவோட இல்லைன்னா யாரோட இருக்கா?!”
“அவ… அவ மாமியார் மாமனாரோட இருக்கா,” என்றதும் வேலை செய்துகொண்டிருந்தவரின் கைகள் அப்படியே நின்றன. திரும்பி அவனைப் பார்த்த பார்வையிலேயே உடலிலுள்ள அத்தனை பாகங்களின் இயக்கங்களும் ஸ்தம்பித்து நின்றன.
“என்னது… மாமனார் மாமியாரோட இருக்காளா? கல்யாணமான பொண்ணவா பிடிச்சிருக்குனு வந்து சொல்லுற? எடு செருப்பை நாயே! உன் புத்தி எங்கடா போச்சு? இந்தக் கெடுகெட்ட புத்தி எங்கிருந்து வந்துச்சு உனக்கு? அசிங்கமான நினைப்போட வளர்ந்து நிப்பேன்னு நான் நினைக்கவே இல்ல! இந்தக் கொடுமையை நான் கேட்கணுங்கிறதுக்காகவா அவர் முன்னாடி போய் சேர்ந்தார்! ஐயோ! ஐயோ! கேவலமான புத்தியோட வளர்ந்து நிப்பான்னு நினைக்கலையே! ஐயோ கடவுளே, நான் என் பிள்ளையை இப்படி வளர்க்கலையே! எதைப் பார்த்து இவன் கெட்டுப் போயிட்டான்னு தெரியலையே!” என அப்படியே அமர்ந்து தலையில் அடித்து அழ ஆரம்பித்தார்.
“ம்மா… புருஷனோட இருக்கிறவளையா கல்யாணம் பண்ணி வைன்னு கேட்டேன்? புருஷன் இறந்து போயிட்டான்மா. குழந்தையோட இருக்கிறவளைதான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேக்குறேன். அவளை எனக்குப் பிடிச்சிருக்குமா,” என்றான்.
“எடு துடைப்பக்கட்டையை!! புருஷன் இல்லையாம், பிள்ளைதான் இருக்காம். ச்சீ… அவளுக்குப் புருஷன் இல்லைன்னு உனக்குக் கவலையோ! நாயே, இன்னொரு வார்த்தை நீ பேசினா சோத்துல விஷத்தை வச்சுக் கொன்னுடுவேன் உன்னை… வாயை மூடிட்டு இரு!”
“ம்ம்… கறிக்குழம்புக்கு மசாலா அரைக்கும்போது அரளி விதையைச் சேர்த்து அரைச்சுக் கொன்னுடு! உனக்கு ஒத்தப் பொண்ணுன்னு வாழ்ந்துக்கோ… எனக்குக் கல்யாணம் நடந்துச்சுன்னா அது அவளோடதான், இல்லையா ஒண்டிக்கட்டையா கிடப்பேன். இல்லன்னா கட்டையோட கட்டையா வேகுவேன்… ஆனா நான் வேற ஒருத்தியைக் கட்டிப்பேன்னு நினைக்காத,” எனச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.
நெஞ்சு வதியே வந்துவிடும் போலிருந்தது அவருக்கு.
வேகமாகத் தன் மகள் கயலுக்கு அழைத்து, அவசரமாக வீட்டுக்கு வரச் சொன்னார். கயலும் தன் கணவனை அழைத்துக்கொண்டு பதற்றமாக வந்து சேர்ந்தாள்.
தாயின் அருகே அமர்ந்து என்ன பிரச்சனை என்று கேட்க, அவரும் மகன் சொன்னதை அழுதுகொண்டே சொல்ல, கயல் அதிர்ந்து போனாள்.
“அண்ணனா அப்படிச் சொன்னான்?”
“நான் ஏன் உன் அண்ணனைப் பத்தி இப்படிச் சொல்லப் போறேன்? அவன் அந்தப் பொண்ணைதான் கட்டிப்பேன், இல்லன்னா சாவேன்னு நிக்கிறான்டி. ஐயோ என் மகன் புத்தி தறிகெட்டுப் போயிருச்சே! என்ன செய்யப் போறேன்னு தெரியலையே!” என அழுது புலம்பினார்.
“அத்தை அழாதீங்க! மச்சான்கிட்ட நான் பேசுறேன்…”
“பேசுங்க மாப்பிள்ளை! அவன் மனசை மாத்துங்க! நம்ம சாதி சனத்துக்கு முன்னாடி மானம் மரியாதையா வாழ்ந்துட்டு இருக்கிற குடும்பம்… மொத்தமும் இவனால போயிடும் போல இருக்கு! அந்தப் பிள்ளை யாருன்னு விசாரிங்க மாப்பிள்ளை! அவ வீட்டுக்குப் போய் நாலு வார்த்தை கேட்டு, அவளை இவனை விட்டுப் போகச் சொல்லணும். குடியைக் கெடுக்க என் வீடுதான் கிடைச்சதா அவளுக்கு? மாப்பிள்ளை, அவன்கிட்ட கேட்டுச் சொல்லுங்க,” என ஆக்ரோஷமாகக் கத்தினார்.
“அத்தை கோபப்படாதீங்க! முதல்ல மச்சான்கிட்ட பேசி என்ன நிலவரம்னு கேக்குறேன்… அதுக்கப்புறம் அடுத்ததை யோசிப்போம்,” என்று அவரைச் சமாதானம் செய்துவிட்டு, கந்தரூபனை அழைத்தார்.
அவனும் உள்ளிருந்து நிதானமாக வெளியே வந்தான். “என்ன மச்சான், அத்தை சொல்றது உண்மையா? நீங்க கல்யாணமான பொண்ணையா விரும்புறீங்க?”
“ஆமா மாமா, அந்தப் பொண்ணைதான் விரும்புறேன். அவளைதான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். எனக்கு அவளைதான் பிடிச்சிருக்கு,” எனத் தீர்மானமாகச் சொன்னான்.
“உனக்கென்ன பைத்தியமா அண்ணே? குழந்தை பெத்தவளைப் போய் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிற? அறிவிருக்கா இல்லையா உனக்கு? அம்மாவைப் பாருண்ணே எப்படி கதறிட்டு இருக்காங்க! நல்ல பொண்ணாப் பார்த்து உனக்கு முடிப்போம். நீ அந்தப் பொண்ணை மறந்துடுண்ணே!” என கயலும் கெஞ்சினாள்.
“முடியாது கயலு, எனக்கு அந்தப் பொண்ணோடதான் வாழணும்…” என பிடிவாதமாக நின்றான்.
“அப்போ எனக்குக் கொள்ளி வச்சுட்டு அவளைக் கட்டிக்கச் சொல்லு! அந்த அசிங்கத்தை என்னால சகிக்க முடியாது,” என்றார் மஞ்சுளா ஆத்திரமாக. அவனோ தாயை முறைத்தான்.
“என்னடா முறைக்கிற? அவளைக் கட்டிட்டு வந்தா, நான் இல்லாத வீட்லதான் நீ வாழுவ!” எனத் தரையில் அடித்துச் சபதம் செய்தார்.
“அப்போ நானும் அடிச்சுச் சொல்றேன்… இந்த வீட்ல அந்தப் பிள்ளையைத் தவிர யாரும் உனக்கு மருமகளா வரமாட்டாங்க,” என்றான்.
“பாருங்க மாப்பிள்ளை இவன் பேச்சை! இவனுக்கு என்ன குறைச்சல்? அவளுக்கு இரண்டாவது புருஷனாப் போகணும்னு நிக்கிறான். அவ என் பிள்ளையை எப்படி மயக்கி வச்சிருக்கா பாருங்க! அவளை நான் சும்மா விடமாட்டேன்,” எனக் கொந்தளிக்க,
“அத்தை! கொஞ்சம் பொறுமையா இருங்க. விஷயம் என்னன்னு முழுசா தெரிஞ்சுக்காம கோபப்படாதீங்க… மச்சான், நீங்க சொல்லுங்க அந்தப் பிள்ளை யாரு? பேர், ஊர் என்ன? என்ன பண்றாங்க? விவரமா சொல்லுங்க,” எனப் பல கேள்விகளைக் கேட்டார்.
“அந்தப் பொண்ணு பேரு ஜனனி மாமா! கேட்டரிங் சர்வீஸ் வச்சிருக்கா, ஏழு வயசுல பையன் இருக்கான்…” என முடிக்கும் முன்னே,
“அவளா?” என மஞ்சுளா இடைமறித்தார்.
“இப்பதானே எல்லாம் புரியுது! அவ உன்னை மயக்கி ஆர்டர் வாங்கி இருக்கா! அதுமட்டுமில்லாம, சொத்து பத்து இருக்குன்னு இவன் வெகுளியா இருக்கறதைப் பார்த்துட்டு, அவ புள்ளையை இந்த வீட்டு வாரிசாக்க முடிவு பண்ணி இவனை மயக்கி வச்சிருக்கா! அவளைச் சும்மா விடக்கூடாது மாப்பிள்ளை. என் புள்ளைக்கு வசியம் வைக்கிறதுக்குள்ள அவ திட்டத்தைத் தவிடுபொடி ஆக்கணும். வாங்க இப்போவே போலாம்!” என்று கிளம்பினார்.
“அத்தை!” என அவரை அடக்குவதற்குள்,
“ம்மா! கொஞ்சம் அமைதியா இருக்கியா? நான் உன்கிட்ட சில உண்மையை மறைச்சுட்டேன்,”
என்றான் கந்தரூபன் குரல் தளர்ந்து.
அவரோ திகைப்புடன் பார்க்க, அவன் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னான்.
“அந்தப் பிள்ளைக்கு இது எதுவுமே தெரியாது. உங்ககிட்ட சொன்னதை நான் அவகிட்ட இன்னும் சொல்லவே இல்லை. எனக்குக் கேட்டரிங் சர்வீஸ் நடத்தத் துளியும் விருப்பம் இல்லை, கந்து வட்டியிலதான் என் கவனம் போகுது! ஆனா அப்பாவோட தொழிலை யாராவது விக்கவும் விட மாட்டேங்கிற, வாடகைக்குக் கொடுக்கவும் மாட்டேங்கிற! விருப்பமில்லாமதான் அதை நடத்திட்டு இருக்கேன். ஆனா ஜனனி நம்ம அப்பா மேலயும், இந்தத் தொழில் மேலயும் ரொம்ப மரியாதை வச்சிருக்கா. அதனாலதான் நான் அப்படி யோசிச்சேன். நம்ம கேட்டரிங் சர்வீஸை நல்லாப் பார்த்துப்பா, தொழிலுக்கு உதவியா இருப்பான்னு தோணுச்சு. அதுக்கும் மேல அவளை எனக்குப் பிடிச்சிருக்கு… அதுக்கப்புறம் உங்க இஷ்டம்,” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட, மஞ்சுளா அமைதியானார்.
“அத்தை, இதைப்பத்தி இப்போதைக்கு பேச வேண்டாம். கொஞ்சம் ஆறப்போடுங்க. நான் அந்தப் பொண்ணைப் பத்தி விசாரிக்கிறேன்…”
“என்ன மாப்பிள்ளை, நீங்களும் அவன் சொன்னதைக் கேட்டு அவளைக் கட்டி வைக்கப் போறீங்களா?”
“அத்தை! அந்தப் பொண்ணை விசாரிக்கிறதுக்குக் காரணம், அவளுக்கு இரண்டாவது கல்யாணத்துல விருப்பம் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்கத்தான். அவளுக்கு விருப்பம் இல்லைன்னா விஷயம் நமக்குச் சாதகமாத்தானே முடியும்?”
“ஒருவேளை விருப்பம் இருக்குன்னு சொல்லிட்டா?”
“உங்க மகன் தலையெழுத்து அதுதான்னா என்ன பண்றது அத்தை! ஆனா அப்படி எதுவும் நடக்காதுன்னு நம்புவோம்…” என்று தைரியம் கொடுத்துவிட்டுச் சென்றார் மாப்பிள்ளை. மஞ்சுளாவோ கவலையில் ஆழ்ந்தார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
2
+1
+1

