
வரதராஜர் அழைப்பை ஏற்று, கந்தரூபனின் தாய் மஞ்சுளாவும் திருமணத்திற்கு வந்திருந்தார்; சாப்பிடப் பந்திக்கும் வந்திருந்தார். அவருக்குத் தான் ஆர்டர் கை மாறிய விஷயம் தெரியாதே! தங்களது கேட்டரிங் உணவுதான் என்று எண்ணிக்கொண்டு ஆசையாகச் சாப்பிட அமர்ந்தார். அவருடன் தங்கை முறையிலுள்ள பெண்ணும் வந்து அமர்ந்தார்.
அவரிடம் பெருமையாக, “எங்க கேட்டரிங் சமையல்தான், சாப்பிட்டுப் பாரு! அம்புட்டு ருசியா இருக்கும். முன்னாடி என் புருஷன்தான் பார்த்திட்டு இருந்தார். அவர் போன அப்புறம் என் பிள்ளைதான் பார்க்கிறான்” என்று பெருமையாகச் சொன்னபடி, ஒரு விள்ளல் உணவை வாயில் வைத்தவருக்குச் சொன்னது போல ருசியாகத்தான் இருந்தது உணவு.
“சொன்னேன்ல!” என்று ருசித்துச் சாப்பிட, பக்கத்திலிருந்தவரும் “ஆமா அக்கா! ரொம்ப நல்லா இருக்கு! உங்க கேட்டரிங் பெயர் என்ன?” என்று கேட்டார்.
“கந்தன் கேட்டரிங் சர்வீஸ்! எங்க மாமனார் பேரு!” என்று பெருமையாகச் சொன்னபடி மீண்டும் ஒரு விள்ளலை வாயில் வைத்தார்.
பக்கத்தில் அமர்ந்திருந்தவரோ உணவு பரிமாறுபவரின் டீ-ஷர்ட்டைப் பார்த்தார். அதில் ‘ஜனனி கேட்டரிங் சர்வீஸ்’ என்று அச்சிட்டிருக்க, ‘என்ன இவங்க கந்தன் சொன்னாங்க! ஜனனினு இருக்கு’ என யோசித்தவர், அதை அவரிடமே கேட்டும் விட்டார்.
“அக்கா! உங்களோடது கந்தன் கேட்டரிங் தானே சொன்னீங்க! இவங்க சட்டையில என்ன ஜனனி கேட்டரிங் சர்வீஸ்னு போட்டு இருக்கு?” என்று அவர்கள் அணிந்திருந்த டீ-ஷர்ட்டின் பின்பகுதியைக் காட்டிட, எழுதப் படிக்கத் தெரிந்த அவரும் ‘ஜ… ன… னி… கே… ட்… ட… ரி… ங் சர்வீஸ்’ என எழுத்துக் கூட்டி வாசித்தவர், “ஆமா, ஜனனினுதான் இருக்கு! ஒருவேளை என் புள்ளை பேரை மாத்திட்டானோ!!” என வாய்க்குள்ளேயே சொல்லிக்கொண்டார்.
பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் சிரித்தபடி, “போங்க அக்கா! விளையாடிட்டு இருக்கீங்க! இது உங்க கேட்டரிங்கா இருக்காது! உங்க புள்ளை மாத்திச் சொல்லி இருப்பார்” என்று மேலும் சிரித்தபடி சாப்பிட்டார்.
மஞ்சுளாவிற்கு ஏதோ போல் இருந்தது. தன் மகனை விழிகளாலே அலசித் தேட, அவனோ ஜனனியின் முன்னே பேசிக்கொண்டிருந்தான்.
முகத்தில் படிந்த வேர்வையை ஒற்றி எடுத்தபடி நின்றிருந்தவளின் முன் வந்து நின்றான் கந்தரூபன்.
அவனைக் கண்டதும் கேள்வியாகப் புருவங்கள் ஏறி இறங்க, அதனைப் பார்த்து முறுவலுடன், “நான் கந்தரூபன்! கேள்விப்பட்டிருப்பீங்களே, கந்தன் கேட்டரிங் சர்வீஸ்! என்னுடையதுதான்” என்று மரியாதையாக அவளிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டான். அவளோ ‘அடுத்துப் பேசு’ என்பது போல அமைதியாகக் கைகட்டிக்கொண்டு நின்றாள்.
அவன், “ம்… சும்மா சொல்லக் கூடாது! சாப்பாட்டை அசத்திட்டீங்க!!! நானும் என்ன பெருசா செஞ்சிடப் போறீங்கன்னுதான் டேஸ்ட் பார்க்க வந்தேன். மூணு வேளைச் சாப்பாட்டையும் கலக்கிட்டீங்க!!! ரொம்ப நல்லா இருந்தது. டயட்ல இருக்கிற நானே கண்ட்ரோல் இல்லாம கேட்டு கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன்” என்றான்.
அவளோ “நன்றி” என்று அடக்கத்துடன் சொன்னாள். அவளிடம் எதிர்பார்த்த நக்கல் பார்வையோ, கேலிப் பேச்சோ எதுவும் இல்லை… ‘நன்றி’ என்று தன்மையாகச் சொன்னதைக் கேட்டு இவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. இதுவே அவனாக இருந்தால் சொல்லிக் காட்டிக் காலரை இழுத்துவிட்டுப் பெருமை பேசியிருப்பான்.
அவளது அமைதியும் அடக்கமும் அவனை ஈர்த்தது. மேலும் ஏதோ சொல்ல வர, “அடேய் கந்தா! யாருடா ஜனனி? எதுக்குடா நம்ம கேட்டரிங்க்கு அவ பெயர வச்சிருக்க?!” எனச் சத்தமாகக் கேட்டபடி தாய் வர, இவனோ தலையில் அடித்துக்கொண்டான். ஜனனியோ இருவரையும் புரியாமல் பார்த்து நின்றாள்.
“எங்க அம்மாதான்! ஆர்டர் கை மாறினதை இவங்ககிட்ட சொல்லல! அதான் கேட்டரிங் சர்வீஸ் பெயரை மாத்திட்டேனானு கேக்குறாங்க” என்று விளக்கம் கொடுக்க, அவளோ அவனை முறைத்தாள். அவன் இளித்து வைத்தான். அருகே வந்த மஞ்சுளாவும், மகன் தனக்குத் தெரியாத ஒரு பெண்ணிடம் பேசுவதைக் கண்டு, கேட்க வந்ததை மறந்துதான் போனார்.
“யாரு இந்தப் பொண்ணு கந்தா?! உனக்குத் தெரிஞ்ச பொண்ணா? உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சாமா?” – அவனிடம் ஆரம்பித்து ஜனனியிடம் முடித்தார்.
“அம்மா…!” என்று அவரை அடக்க முயல, அதைக் கவனித்தபடி அவரிடம், “நான் ஜனனிம்மா! எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு” என்றதும் தாய், மகன் இருவரின் பார்வையும் போனது என்னவோ அவளது நெற்றிக்கும் கழுத்திற்கும் தான். அவரது பார்வையைப் பொறுத்தவள், கந்தரூபனை மூன்றாம் கண் இல்லாமலே எரித்தாள். உடனே அவன் தன் பார்வையை மாற்றிக்கொண்டான்.
சரியாக ஜனனி அருகே வந்த விபு, “ஜானு! இங்க என்ன பண்ற? நிறைய வேலை இருக்கு” என்று சலித்தபடி வந்தவனையும் விடவில்லை; விழிகளால் இருவரும் அலசிட, ஜனனிக்குக் கடுப்பானது.
“இதுதான் உன் புருஷனாமா?” என்றார் மஞ்சுளா.
உடனே ஜனனியும் “இல்லம்மா, இது என் பிரண்ட் விபு” என்றாள்.
“உன் புருஷன் என்னம்மா பண்றார்?” – விடாமல் கேள்வி கேட்டார்.
அவளோ பொறுமையுடன், “இப்ப உயிரோட இல்லம்மா” என்று முடித்துக்கொள்ள, கந்தரூபனின் விழிகள் அகல விரிந்தன.
மஞ்சுளாவும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தார். ‘இந்தச் சின்ன வயசுல போகணுமா’ என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்டவர், மகனைச் சந்தேகமாகப் பார்த்தார்.
இவளோ விடாமல், “சாப்பாடு எப்படிம்மா இருந்தது?” என்றாள்.
“அட!!! நல்லா இருந்தது கண்ணு! நீதான் இந்தக் கேட்டரிங்க நடத்திரியாமா?”
“ஆமாம்மா! நான்தான் நடத்தினேன்; என் மாமனார் மாமியார் உதவியில! என்னால முடிந்ததைச் செய்றேன்மா” என்றாள்.
“பரவாயில்ல! பிள்ளை இல்லைனாலும் மகளாட்டம் உன்னைப் பார்த்துக்கிட்டு உனக்கு உதவி செய்ற அவங்களுக்குப் பெரிய மனசுதான். ஒத்தப் பொம்பளையா இதுல சாதிக்கணும்னு நினைக்கிற உனக்கு இனி எல்லாம் நல்லாதான்மா நடக்கும்” என வாழ்த்தினார்.
அவளும் “நன்றிம்மா” என்றாள் சின்னப் புன்னகையுடன். தன்னிடம் காட்டாத புன்னகையைத் தாயிடம் காட்டுவதைப் பார்த்தபடி நின்றான் கந்தரூபன்.
“ஏம்மா கேக்குறேன் தப்பா நினைக்காத, இவனுக்குத்தானே வரத அண்ணே ஆர்டர் கொடுத்ததா சொன்னான்? உன்கிட்ட எப்படிம்மா ஆர்டர் கை மாறிச்சு?” என விவரமறியக் கேட்டார்.
தன்னை வெறித்துப் பார்க்கும் கந்தரூபனைக் கண்டவள், மஞ்சுளாவிடம் “அதை நீங்க உங்க பையன்கிட்டதான் கேட்கணும்மா” என்றாள்.
சுப்பிரமணி மூலமாக விஷயம் தெரிந்தாலும் அவளுக்குச் சொல்ல விருப்பமில்லை. தாயின் முன் மகனைத் தாழ்த்திப் பேசினால் எந்தத் தாய் தாங்குவார் என்று எண்ணி, அவனாகச் சொல்லட்டும் என்று விட்டுவிட்டாள்.
“கந்தா…! டேய் கந்தா!” அவனை உலுக்கிட, “அம்மா” எனப் பதறிப்போனான். “என்னம்மா சொல்லு?” என்று தாயின் மீது கவனத்தை வைத்துப் கேட்டான்.
“கவனத்தை எங்க வச்சிருக்க?”
“அது… ஒன்னுமில்ல, என்ன விஷயம் சொல்லு” எனச் சமாளித்தான்.
“ஆர்டர் எப்படி கை மாறிச்சு? எதுக்கு உன்கிட்ட கொடுத்த ஆர்டரை அந்த அண்ணே இந்தப் பொண்ணுக்குக் கொடுக்கணும்?” என விவரமாகக் கேட்க,
தடுமாறியவன், பக்கத்தில் நின்ற ஜனனியைப் பார்க்க, அவளோ கைகளைக் கட்டிக்கொண்டு ‘சொல்லு’ என்ற ரீதியில் நின்றிருந்தாள். எச்சிலை விழுங்கியவன், “வரதர் மாமா எனக்குத்தான் கொடுத்தார். ‘உனக்குத்தான் இந்த ஆர்டர், நீதான் செய்யணும்’னு என் கையைப் பிடிச்சு ஒரே கதறல்… சரி மாமா, நானே பண்றேன்னு சொல்லிட்டேன்.
இந்தப் பொண்ணும் அப்பதான் மாமா கிட்ட ஆர்டர் கேட்டு வந்திச்சு. மாமா தான் என்கிட்ட ஆர்டர் கொடுத்துட்டார்ல! அப்புறம் என்கிட்ட வந்து ‘ஏதாவது ஆர்டர் வந்தா எனக்கும் சொல்லுங்க சார், புதுசா ஆரம்பிச்சிருக்கேன்’னு கெஞ்ச வேற செஞ்சுச்சு! நானும் நம்பரை வாங்கி அனுப்பிட்டேன். அப்புறம் யோசிச்சேன், நாம மட்டும் வளர்றதை விட, நாலு பேரை உயர்த்தி விடுறது நமக்கும் நல்லதுதானேம்மா! அதான் இந்தப் பொண்ணுக்கே ஆர்டர் கொடுக்கச் சொல்லிட்டேன். பரவாயில்லை, கொடுத்த வாய்ப்பை இந்தப் பொண்ணு நல்லா பயன்படுத்தியிருக்கு! இந்தப் பொண்ணு நல்லா வரும்மா!” எனக் கதையை அடித்துவிட்டவன், பெருமையாகக் காலரைத் தாயின் முன் தூக்கிவிட்டுக்கொண்டான்.
மகன் சொன்னதை நம்பி அவனைப் பெருமையாகப் பார்த்தார். அதற்கு மாறாக, விபுவும் ஜனனியும் அவனை அற்பமாகப் பார்த்தனர். அவன் சொன்ன கதையைக் கேட்டு கொதித்துப் போன விபு பேச வாயைத் திறக்க, அவனது கையைப் பிடித்துத் தடுத்தவள் ‘வேண்டாம்’ என்று தலையை அசைத்தாள். தனது கோபத்தைக் கட்டுப்படுத்தி நின்றான் விபு.
“அதானே! என் புள்ள மனசு!” என்று முகத்தை வழித்து நெற்றியில் திருஷ்டி கழிக்கும் வேளையில், ஜனனியிடம் கண்களைச் சுருக்கி மன்னிப்பு யாசித்தான் கந்தரூபன். கண்களை மூடித்திறந்து தன்னைச் சமன் செய்தாள் ஜனனி.
“அப்படியே இவன் அவங்க அப்பாவைப் போல சமையல் பக்குவத்திலும் சரி, உதவி செய்யுறதுலயும் சரி… அவரை மாதிரிதான். எங்க கேட்டரிங் சாப்பாட்டைச் சாப்பிட்டு இருக்கியா நீ?” என ஜனனியிடம் கேட்க, “இப்போ சாப்பிட்டது இல்லம்மா! ஆனா இவங்க அப்பா இருந்தப்போ சாப்பிட்டு இருக்கேன். என் கல்யாணத்துக்குக் கந்தன் கேட்டரிங் சர்வீஸைத்தான் என் அப்பா புக் பண்ணிருந்தார்” என்று ஜனனி சொல்ல,
விபு, “கல்யாணத்துல நடந்த ஒரே நல்ல விஷயம் அது மட்டும்தான்” என்றான் சலிப்பாக. ஜனனி அவனை இடித்து அமைதியாக இருக்கும்படி சொன்னவள், “எனக்கு வீரமணி சார் சமையல் பிடிக்கும்மா! நிறைய விசேஷ வீடுகள்ல அவரைப் பார்த்து வியந்திருக்கேன். அவரைப் போல கேட்டரிங் வைக்கணும்னு நெடுநாள் ஆசை எனக்கு இருந்தது. அது இன்னைக்குத்தான் நிறைவேறி இருக்கு. அதுக்குக் காரணம்…” என்று முடிக்கும் முன்பே,
இடைப்புகுந்த ரூபனோ, “அதுக்குக் காரணம் நான் தான்னு சொல்ல வர்றீங்க! ப்ளீஸ், என்னைப் புகழாதீங்க, எனக்குப் புகழ்ச்சி பிடிக்காது. செஞ்ச உதவியைப் பத்திப் பேசவும் பிடிக்காது, மத்தவங்க பேசுறதும் பிடிக்காது! இனி நீங்க கந்தன் கேட்டரிங் போலப் பெரிய அளவுக்கு இல்லைனாலும் ஓரளவு வளர்வீங்க! அப்போ நீங்க என்னை இல்லை, என் அப்பாவை நினைச்சாலே போதும்” என்று தன்னடக்கத்துடன் பேச, இவர்கள் இருவருக்கும் காதில் புகை வராத குறைதான்.
“அம்மாடி! என்ன இந்தப் புழுகு புழுகுறான். அண்டப் புழுகனா இருப்பான் போல” என்றான் விபு.
“ம்… அந்த அப்பாவி அம்மாவை எப்படி ஏமாத்துறான் பாரு! பாவமா இருக்கு அவங்களைப் பார்க்க…” என்றாள் ஜனனி அவனுக்கு மட்டும் கேட்கும்படி.
மஞ்சுளாவுடன் வந்த பெண் அவரை அழைக்க, “சரிடா தங்கம், நான் கிளம்புறேன். நீ நேரமா வீட்டுக்கு வந்து சேரு!” என்றவர், ஜனனியிடம் “நான் வர்றேன் கண்ணு” என்க, இவளும் தலை அசைத்து வழியனுப்பி வைத்தாள். அங்கிருந்து அவர் நகரும் வரை மூவரும் அவரையே பார்த்திருந்தனர்.
அவரது நிழல் மறைந்ததும் கோபமாகக் கந்தரூபன் பக்கம் திரும்பிய ஜனனி,
“நீயெல்லாம் மனுஷனா? பெத்த தாயையே ஏமாத்தற! அடுத்தவங்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பைத் தட்டிப் பறிக்கிற… இன்னும் என்னென்ன கெடுதலான பழக்கத்தை வச்சிருக்க? உங்க அம்மா ஒரு அப்பாவி, எப்படி அவங்களை ஏமாத்த உனக்கு மனசு வருது?! இங்க பாரு, எப்பவும் நீ நினைச்சதே நடக்காது. அதுக்கு உதாரணம் இந்த வாய்ப்பு! என்கிட்ட இருந்து தட்டிப் பறிக்கணும்னு நினைச்ச, ஆனா பாரு எனக்கே அந்த ஆர்டர் திரும்பக் கிடைச்சிடுச்சு!
அதேபோல உங்க அம்மாவை ஏமாத்துறியே, அதுவும் ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும். அவங்களை ஏமாத்திட்டு உனக்குக் கிடைக்கிற எதுவும் நிலைக்காது. அதை உன்னால அனுபவிக்கவும் முடியாது. போய் உண்மையச் சொல்லி அவங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேளு, நீ சேர்க்கிற பாவம் குறையும்… ச்ச!” என விபுவை அழைத்துக் கொண்டே செல்ல முற்பட்டாள்.
“ஹலோ ஜனனி மேடம்! என்ன ஓவரா பேசிட்டே போறீங்க? கொஞ்சம் அக்கம்பக்கம் பார்த்துப் பேசுங்க!” எனக் காலரை இழுத்துவிட்டவனே, “எங்க அம்மாவைத் தானே ஏமாத்தினேன்? உங்களை இல்லையே! ‘பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்’னு படிச்சதில்ல? அம்மாவுக்காக, அவங்க சந்தோஷத்துக்காகப் பொய் சொன்னேன்… இதுல என்ன தப்பு இருக்கு?” என்று தான் செய்த தவறை உணராது திமிராகப் பேசினான்.
“அடங்கொப்புறானே! எதுக்கு எதைடா எடுத்துக்காட்டுற! டீச்சர்டா நானும்… கேட்க முடியல! போங்கடா” என விபு நொந்துகொண்டு அங்கிருந்து கிளம்ப, ரூபனோ அசட்டையாகத் தோளைக் குலுக்கினான். இவளோ “ஊஃப்” என இதழ் குவித்து ஊதியவள், அவனை மதிக்காது அங்கிருந்து தன் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டாள். ஆனால் அவனோ தன் மனதை அவள் பின்னால் அலைபாயவிட்டு, மனமின்றி அங்கிருந்து சென்றான்.
“நம்ம ரெண்டு பேரும் ஏன் சேரக் கூடாது? சேர்ந்தால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கும், என்ன சொல்றீங்க?” எனக் கந்தரூபன் காலரை இழுத்துவிட்டபடி ஜனனியிடம் கேட்க, அவளோ “எனக்குச் சேர விருப்பம் இல்லை. அது எப்பவுமே நடக்காது!” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
‘சேர வச்சிட்டா?’ என வில்லனைப் போல யோசிக்க ஆரம்பித்தான் கந்தரூபன்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
+1

