அத்தியாயம் 17 :
நேசம் கொண்ட நெஞ்சம் அன்பிற்கு சூட்டும் பெயர் நட்போ! காதலோ!நூலிழை அளவே மாற்றம்.
இடைவெளியின் ஒருமுனை நட்பு, மறுமுனை காதல்.
கோட்டினை கடக்க… நினைக்கையில், முயல்கையில், அங்கே காதல் பற்றிக்கொள்ளும். கோட்டின் அழுத்தம் கூட்டினால் நட்பு வலுப்பெற்றிடும்.
மனதின் எல்லையில் நட்போ! காதலோ! முதல் சந்திப்பிலேயே… தீர்மானிக்கப்பட்டுவிடும். நீ குழம்பும் போது மனதால் உன் நட்போ! காதலோ! விதிக்கப்படும். உன் தெளிவில் நீ உறுதியென்றால், நட்பு என்றும் நட்பாய்.
பாரியின் எல்லை நட்பை கடக்க நினைக்கவில்லை. ஆனால் பூவின் எல்லை என்றோ காதலை தொட்டுவிட்டது.
ஆராய மறுக்கும் அவளுக்கு நிச்சயம் சுமை கூடிடும்.
*****
“ஐ தின்க் யூ ஆர் இன் லவ் வித் த..”
பரிதி வாக்கியத்தை முடிவடையச் செய்யும் முன் பாரியின் சத்தம் அதிர்ந்து ஒலித்து பரிதியின் வார்த்தையை தொண்டைக்குழுயில் விழுங்கச் செய்தது.
“அண்ணா அவள், என்னோட பூ. அதுக்காக அவள் நீங்க சொன்ன ரிலேஷன்ஷிப்பா தான் இருக்கணும் இல்லை.
ஒருத்தங்களை பார்த்ததும் ஏன்னு காரணமே இல்லாம ரொம்ப பிடிக்கும். எனக்கு பூ அப்படித்தான்.
நமக்கு என்ன நடந்தாலும், கஷ்டமோ, சந்தோஷமோ அது என்னவா இருந்தாலும் அவங்க கையை பிடிச்சிக்கிட்டு எல்லாத்தையும் சொல்லணும் தோணும். அவங்ககிட்ட சொன்னா எல்லாம் சரியாப்போகும் தோணும். அவங்களோட இருந்தா சந்தோஷம் மட்டும் தான்னு ஃபீல் ஆகும். அவங்களோடவே இருக்கணும் தோணும். இதெல்லாம் பிரண்ட்ஷிப்பா கூட இருக்கலாம். இதே பூ அளவுக்கு அவியை நான் நினைச்சிருந்தா, அவியை லவ் பன்றேன்னு சொல்லுவீங்களா?” என அழுத்தமாகக் கேட்டான்.
பரிதிக்கு பாரியிடம் இதை கேட்டிருக்ககூடாதென்றே அக்கணம் தோன்றியது.
“அம்மாங்கிற உறவுக்கு அப்புறம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம நம்மளோட நலனை மட்டுமே மனசுல வச்சு கிடைக்குற உறவு ரொம்ப கஷ்டம் பரிதிண்ணா. அந்த உறவு எனக்கு பூவிடம் கிடைச்சது, கிடைக்குது.
அதை நான் நீங்க சொல்லுற அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல விரும்பல. இன்னமும் என் வாய்க்கு முன்னாடி நீட்டிய சாப்பாட்டு கையோடு என்னை பார்த்த அந்த குட்டி பூவாத்தான் என் கண்ணுக்கு தெரியுறாள்.அவளை வேற மாதிரி என்னா பார்க்க முடியாது பரிதிண்ணா.” விட்டால் கலங்கி விடுவான் போல்.
எந்தளவிற்கு பாரி பூவின் மீதான நட்பை நேசிக்கிறான் என்று பரிதிக்கு அக்கணம் புரிந்தது. இவ்வளவு ஆழமான நட்பு அவனுக்கு கூட வாய்க்கவில்லை.
தன்னுடன் பேசிவிட்டாலே அப்பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் பல ஆண்களுக்கு மத்தியில் தன் தம்பியை நினைக்கையில் பரிதிக்கு பெருமையாகவே இருந்தது.
ஆனாலும் தெளிவுபடுத்திக்கொள்ள மேலும் கேட்டான்.
முதலில் இவ்விடயமாக ஆரம்பிக்கும் போது பரிதி தயங்கத்தான் செய்தான். ஆனால் பாரியிடம் இருக்கும் தெளிவு அவனே எதிர்பாராதது. சிறு பையன் என்கிற பரிதியின் எண்ணத்தை இவ்விடயத்தில் பாரி பொய்யாக்கியிருந்தான். அதனால ஆரம்பித்ததை இன்றே முடித்துவிடலாமெனக் கேட்டிருந்தான்.
“பூ இல்லாம நிச்சயம் உன்னால் இருக்க முடியாதுன்னு இந்த டூ மன்த்சில் உனக்கு மட்டுமில்லை எங்களுக்கும் புரிஞ்சிடுச்சு” என்ற பரிதி மேலும் என்ன சொல்லவரப்போகிறான் என்று பாரி கூர்மையாக நோக்கினான்.
“பூ கடைசி வரை உன்னோட வர முடியாது தெரியுமா?” எனக் கேட்டான்.
பாரியிடம் ஏன் என்ற பார்வை மட்டுமே.
சில நிமிட அமைதிக்குப் பின்னர்,
“என் பூ எப்பவும் என்னோட பூவாத்தான் இருப்பாள்.” அழுத்தமாகக் கூறினான்.
“அது முடியாதே பாரி. நீ, உன்னோட பிரண்ட்ஷிப் மட்டும் அவளோட லைஃபை ஃபுல் ஃபில் ஆக்கிடாது” என்ற பரிதி, “காலம் இப்படியே நிக்காது. அவளுக்கு மேரேஜ் ஆகும். அவளுக்கு ஹஸ்பெண்டா வரப்போறவன், உங்க பிரண்ட்ஷிப்பை புரிஞ்சிக்கணும். உங்களுக்குள்ள அன்பை புரிஞ்சிக்கணும். முதலில் உங்களை சாதாரணம பேசவிடுறதே கஷ்டம் தான். ஒரு ஆணுக்கு மத்த பெண்களிடம் இருக்கும் பிராட் மைண்ட் தனக்குன்னு வர பொண்ணுகிட்ட இருக்காது. அது தான் ரியாலிட்டி. இங்க எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கு பாரி. அதேபோல உங்க பிரண்ட்ஷிப்பிற்கு ஒரு முடிவு வரும்.”
பரிதி சொல்லியதையெல்லாம் எவ்வித குறுக்கீடும் இல்லாது அமைதியாகக் கேட்ட பாரி… “என் பூ நீங்க சொல்லுற மாதிரி நடக்கவிடமாட்டாள் பரிதிண்ணா” என்றான்.
“நீ பையனோட மைண்ட் செட்டில் பேசுற பாரி. ஒரு பெண்ணுக்கு பெண்ணோட நட்பு இறுதிவரை தொடர்வதே கஷ்டம். புரிஞ்சிக்கோ. நீ பூவை லவ் பண்ணியே ஆகணுன்னு நான் இதை சொல்லல. நிச்சயம் எல்லா உறவுக்கும் பிரிவு உண்டு. அப்படி பிரிவு வரும்போது அதை ஏத்துக்க பழகிக்கோ பாரி. இப்போ டூ மன்த் இருந்தியே அந்த மாதிரி இருக்கக்கூடாதுங்கிறதுக்காத்தான் சொல்றேன்” என்று நீண்ட விளக்கம் கொடுத்தான் பரிதி.
“புரியுது பரிதிண்ணா. பட் எங்களுக்குள்ள பிரிவு வராது.
நாம இப்டிலாம் பேசினோம் தெரிந்தாலே பூ வருத்தப்படுவாள். என்கிட்ட கேட்ட மாதிரி அவகிட்ட கேட்டுடாதீங்க” என்ற பாரியின் முகத்திலும் அவ்வளவு வேதனை.
‘நீங்க கூட எங்க நட்பை புரிந்துகொள்ளவில்லையே’ என.
தம்பியின் பார்வையே அதன் பொருளை உணர்த்தியது பரிதிக்கு.
“உன்னை கஷ்டப்படுத்த கேட்கல பாரி. தெளிவுபடுத்தக் கேட்டேன். ஆனால் நீயே உன் நட்பில் தெளிவா உறுதியாத்தான் இருக்க” என்று சொல்லிய பரிதியே “உனக்கு இவ்வளவு உறுதியும் தெளிவும் பூவுடனான நட்பில் இருந்திருக்க வேண்டாம்” என்று சொல்லவிருக்கிறான் என இந்நொடி அறிந்திருக்கவில்லை.
“பூ ஃப்ரெண்டா இருக்கிறதுலதான் எனக்கு அதிக சந்தோஷம் பரிதிண்ணா. ஒரு ஆணுக்கு நல்ல லவ், நல்ல மனைவி ஈசியா கிடைச்சிடும். ஆனால் நல்ல பெண் நட்பு? அத்தனை ஈசி இல்ல. எனக்கு கிடைச்சிருக்கு. அது நட்பாவே பாதுகாக்கத்து வச்சிக்கணும்” என்ற தம்பியை ஆரத் தழுவியிருந்தான் பரிதி.
பூவுடனான நட்பில் மட்டும் பாரிக்கு வயதை தாண்டிய இந்த பக்குவம் எப்படியென்று பரிதிக்கு ஆச்சரியமாக இருந்தது.
“உங்க பிரண்ட்ஷிப் எனக்கே பொறாமையா இருக்குடா” என்று சொல்லிய பரிதியின் வார்த்தையில் மட்டுமே அந்த ஆமை இருந்தது.
இருவருக்குமே பூவின் அடுத்த நிலையில் தத்தளிக்கும் மனம் புரியாது போனது. பாரியே அதனை அறியப்போவதில்லை எனும்போது மற்றவர்களை சொல்வதில் பலனில்லை.
****
அடுத்த நாள் பாரி கல்லூரிக்கு அதி வேகத்தில் கிளம்பிக் கொண்டிருந்தான்.
“எதுக்குடா இப்படி பறக்குற.” பார்வதி மகனிடம் எரிந்து விழுந்தார்.
பின்னே அதிகபட்சமாக இருபது நிமிடங்களில் அடைந்துவிடும் எட்டு ஐம்பது கல்லூரிக்கு ஏழு மணிக்கே கிளம்பி வந்தது மட்டுமல்லாமல், சமையல் செய்பவரையும் தொல்லை செய்து கொண்டிருந்தால் அவரும் என்ன தான் செய்வார்.
“தம்பி நீங்க அப்படி போய் கொஞ்சம் உட்காருங்க… நான் செஞ்சிட்டு கூப்பிடுறேன்” என சமையல் செய்யும் அக்கா மங்கா சொல்லியும், ஒரு நிமிடம் தான் பொறுமையாக இருந்திருப்பான்.
அதற்குள் மீண்டும் கிச்சன் வந்து,
“அக்கா இன்னமுமா செய்றீங்க?” எனக் கேட்டதோடு, “சாப்பாடு நாளைக்குத்தான் கிடைக்குமா?” என்றும் கேட்க, மங்கா பாவமாக பார்வதியை பார்த்தார். அதனாலே அவர் பாரியை கடிந்தார்.
அப்போதும் கூட அவன் அமைதியாக இருந்தது சில நொடிகள் தான்…
“அம்மா பூரி தானே பிரேக்பாஸ்ட்” என்றவன் மங்காவிடம் “அக்கா கிரேவியில் பன்னீர் ஃபிரை பண்ணித்தானே போடுறீங்க?” என்று கேட்டபடி அவர்களுக்கு பின்னால் நிற்க…
“இந்தாங்க தம்பி நீங்களே செய்யுங்க” என்று மங்கா அவனிடம் கரண்டியை நீட்டிட,
எண்ணெயில் பூரியை போட்டு எடுத்துக் கொண்டிருந்த பார்வதி, “சூடான எண்ணெய்யை மூஞ்சிலே ஊத்திடுவேன். போய் அப்படி உட்காருடா” என்க பாரி நல்ல பிள்ளையாக வரவேற்பறை இருக்கையில் அமர்ந்துவிட்டான்.
அப்போதுதான் ஜாகிங் முடித்து வீட்டிற்குள் நுழைந்த தில்லை மற்றும் பரிதி தொழில் விடயமாக பேசியபடி பாரிக்கு எதிரேயிருந்த இருக்கையில் அமர்ந்தனர்.
அவர்கள் இருவரும் பாரியை கண்டுகொள்வதாக இல்லை.
பொறுத்து பார்த்த பாரி…
“இங்க ஒருத்தன் உட்கார்ந்திருக்கேனே என்னன்னு கேட்டீங்களா?” என்றிட…
“உனக்கு எதாவது இப்போ கேட்டுச்சா பரிதி?” என்றார் தில்லை.
“அப்பா” என்று பாரி அழுந்த உச்சரித்திட…
பரிதி தன் தந்தை கேட்டதற்க்கு இல்லையெனக் கூறினான்.
“பரிதிண்ணா நீங்களுமா?” என்றவன், “அம்மா ரெடியா?” என்று கிச்சன் நோக்கி குரல் கொடுக்க… பாரியை நோக்கி கரண்டி ஒன்று பறந்து வந்து அவனது காலடியில் விழுந்தது.
“ஜஸ்ட் மிஸ்டு” என்று இருக்கையில் வந்து அமர்ந்தான் பாரி.
“இப்போ எதுக்கு பாரி இவ்வளவு அலப்பறை பன்ற?” பரிதி நிதானமாகக் கேட்டான்.
“ஒன்னுமில்லையே” என்று தோளை குலுக்கிய பாரி தன்னுடைய அலைபேசியை எடுத்து பூவிற்கு தகவல் அனுப்பினான்.
“கிளம்பிட்டியா பூ?”
“பாரி டைம் செவன் தான் ஆகுது.”
“எனக்கு தெரியாது நான் கிளம்பிட்டேன், நான் கிளாசில் இருக்கும்போது நீயும் இருக்கணும்.” பதில் அனுப்பியவன் தனக்கு பின்னால் நின்ற பரிதியை பார்த்தவாறு அலைபேசியை அணைத்து பையில் போட்டான்.
“திஸ் இஸ் டூ மச் பாரி” என்ற பரிதி, “ஏண்டா இப்படியிருக்க… எனக்கென்னவோ அபக்ஷன் அப்டிங்கிற பேரில் தமிழை ரொம்ப படுத்தி வைக்கப்போறன்னு நினைக்கிறேன்” என்றான்.
“இல்லை பரிதிண்ணா…” என உடனடியாக மறுத்த பாரி, “என் பிரண்ட்ஷிப் வச்சு பூவை என்னைக்கும் கட்டிப்போட மாட்டேன்” என்றான்.
“அப்போ இப்போ நீ பண்ணிட்டிருக்கிறதுக்கு என்ன பேரு டா?” என்று பாரி சற்று நேரத்திற்கு முன் பூவிற்கு அனுப்பிய குறுந்தகவலை குறிக்கும் பொருட்டு அவனின் அலைபேசியை சுட்டிக்காட்டினான்.
“அச்சோ பரிதிண்ணா… செவன் இயர்ஸா பூவோட சாப்பிட்டுதான் பழக்கம். அவளோட பிளேட்டிலிருந்து எடுத்து சாப்பிடலன்னா சாப்பிட்ட ஃபீலே இருக்காது. அதை இந்த டூ மன்த்ஸ் ரொம்பவே மிஸ் பண்ணிட்டேன். அதான் இன்னைக்கு அவளோட சேர்ந்து சாப்பிடலான்னு. சாப்பிடறது அவளுக்கு பிடிச்சதா இருக்கனும் தான் அம்மாவை செய்ய சொல்லி எடுத்துட்டு போறேன்” என்றவனின் மனதை பரிதியால் நிச்சயம் விளங்கிக்கொள்ள முடியவில்லை.
‘இத்தகைய உணர்வு செய்கைகள் யாவும் காதலுக்கும் பொருந்தும் என்றால் எனக்கு தனியா லெக்ச்சர் அடிப்பான்’ என்று நினைத்த பரிதி… “எனக்கென்னவோ நீ தமிழோட அன்புக்கு அடிக்ட் ஆகிட்டன்னு தோணுது” என்றான்.
“எனக்கு அது ஹேப்பி தான் பரிதிண்ணா” என்று சிரித்த முகத்தோடு சொல்லிய பாரி, “அவளுக்கான ஸ்பேஸ் நிச்சயம் நான் கொடுப்பேன். நீங்க சொல்லிய பிரிவு வரலாம் வராமலும் போகலாம். எப்போ எப்படி நடந்துக்கணும் தெரியும். யூ டோன்ட் ஒர்ரி” என்றவன் அந்நேரம் டிபன் பாக்ஸுடன் வந்த பார்வதியிடமிருந்து பாக்ஸை பிடுங்கிக்கொண்டு மூவருக்கும் பொதுவாக பை சொல்லி வெளியேறினான்.
உற்சாகமாக ஓடும் தனது இளைய செல்ல மகனையே பார்த்தபடி இருந்த தில்லை… “இத்தனை நாளா இவன் இந்த துள்ளலை எங்டா ஒளிச்சு வச்சிருந்தான்” எனக் கேட்டார்.
“பூவிடம் இருக்குப்பா அவனோட சந்தோஷம்.”
“ஏன் பரிதி… பாரி பூவை விரும்ப ஆரம்பிச்சிடுவானோ!” ஒரு எதிர்பார்ப்போடு பார்வதி தன் மூத்த மகனிடம் கேட்க,
அவனோ… “இப்படி பாரிகிட்ட மட்டும் கேட்டுடாதீங்க. அதுக்கு அவன் கொடுக்குற விளக்கத்துல மூளை கலங்கிப்போகுது” என்றான்.
“அப்போ அதில்லையாடா?” பார்வதியிடம் ஏமாற்றம்.
“ஹேய் பாரு. இப்போ அவங்களுக்கு என்ன வயசாகுது. அதுக்குள்ள இந்தப்பேச்சு” என்று தில்லை அதட்டியதோடு, “அவங்களுக்கு அப்படி ஒரு விருப்பமிருந்தா அதுக்கு நாம தடைவிதிக்கப் போறதில்லை. முதலில் படிப்பை முடிக்கட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்” என்றார்.
“நான் ஒன்னும் சும்மா பேசலங்க… இந்த ரெண்டு மாசம் உங்க செல்ல மகன் நடந்துகிட்டதை வச்சுதான் எனக்கு இந்த எண்ணமே வந்துச்சு” என்று பார்வதியும் சற்று வேகமாக பதில் கொடுத்தார்.
“நீங்க ஏன் இப்போ ஆர்க்யூ மோடுக்கு போறீங்க… பாரி, பூவோட ஃபிரன்ட்ஷிப்பில் தெளிவா இருக்கான். அதே சமயம் பூ அவனுக்கு ஃபிரண்ட் தான் எப்பவு(ம்)ங்கிறதுல ரொம்ப உறுதியா இருக்கான்” என்று பாரி அவனிடம் சொல்லிய அழுத்தத்தோடு பரிதி கூறினான்.
“அப்போ அது இல்லையா பரிதி.” பார்வதிக்கும் பூ தங்களுடனே இருந்திட வேண்டுமென்ற ஆசை. எதனால் என்றெல்லாம் காரணமில்லை. காரணமேயில்லாமல் அந்த குடும்பத்தில் ஒருத்தியாகியிருந்தாள் பூந்தமிழ்.
உறவென்று சொல்லிக்கொள்ள வெளியிருந்து கிடைத்த முதல் உறவு என்பதால் கூட இருக்கலாம்.
“உங்களுக்கென்ன உங்க அரசு அண்ணன் உறவு காலத்துக்கும் நீடிக்கணும் அதுதானே. தமிழுக்கு ஒரு அக்கா இருக்காளே வேணுன்னா அவளை எனக்கு கட்டிவச்சிடுங்க” என்று பரிதி வேகமாக சொல்லியிருந்தான். பின்னாளில் பலிக்கப்போவது அறியாது.
இல்லையென்ற பதிலுக்கு எத்தனை முறை ஒரே கேள்வியை பலவிதத்தில் கேட்பாரென்று பரிதிக்கு கடுப்பாகிவிட… அதில் என்ன சொல்லுகிறோம் என்பதை உணராது சொல்லியிருந்தான்.
“நடக்கிறது என்னவோ நடக்கும்போது நடக்கட்டும் பாரு. அதுக்குள்ள எந்தவொரு எதிர்பார்ப்பும் வேண்டாம்” என்று தில்லை தான் தன் மனைவியை சமாதானம் செய்து அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
****
“என்ன தமிழ் இவ்வளவு சீக்கிரம் கிளம்பி நிக்குற?”
அப்போதுதான் படுக்கையை விட்டு எழுந்த லீலா, கல்லூரிக்கு செல்ல ஆயத்தமாக நின்றிருந்த பூவிடம் வினவினாள்.
“பாரி கிளம்பிட்டன்னு மெசேஜ் பண்ணான் லீலா. அதான் நானும் கிளம்பிட்டேன்.”
தமிழின் பதிலில் அவளை ஏறயிறங்க பார்வையிட்ட லீலா எதுவும் சொல்லவில்லை.
“என்ன லீலா அப்படி பாக்குற?”
“நத்திங்” என்ற லீலா, “மெஸ் டைம் ஆகலையே தமிழ். டிஃபன் வேணாமா?” எனக் கேட்டாள்.
“இல்லை வேணாம் லீ. காலேஜ் கேன்டினில் சாப்பிட்டுக்குவேன். பாரியோடு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு” என்ற பூ, பாரியிடமிருந்து வந்த அழைப்பில் அதனை ஏற்று காதில் வைத்தவளாக லீலாவிற்கு கையசைத்துவிட்டு நடந்தாள்.
“வேந்தா…”
“பூ… நான் வந்துட்டேன்.”
“வந்துட்டே இருக்கேன் வேந்தா.”
“நம்ம டிப்பார்ட்மெண்ட் சைடில் ஒரு சரக்கொன்றை மரம் இருக்கே அங்க வா பூ” என சொல்லியவன் அழைப்பைத் துண்டிக்க… பாரியின் முன் அமிர்தா நின்றிருந்தாள்.
“ஹாய்…”
….
“நான் அமிர்தா.”
“தெரியுது சொல்லுங்க?”
“நான் இங்க உட்காரலாமா?” பாரிக்கு அருகில் கை காண்பித்து கேட்டாள்.
“சிட் ஹியர்” என்று பாரி தன் எதிரில் கண் காட்டினான்.
அமிர்தாவின் கண்கள் பாரியின் முகத்திலேயே நிலைத்திருந்தது.
“தேன்க்ஸ்.”
எதற்கு எனும் பார்வை பாரியிடம்.
“அன்னைக்கு நைட்…”
“இட்ஸ் ஓகே” என்ற பாரிக்கும் பூவை தவிர்த்து ஒரு பெண்ணுடன் தனியாக அமர்ந்திருப்பது அவஸ்தையாக இருந்தது. அதிலும் அமிர்தாவின் பார்வை அவனை உள்ளுக்குள் ஏதோ செய்தது. தலையை உலுக்கி தன்னை சமன் செய்தான்.
‘பாரி யூ ஜஸ்ட் எண்ட் ஆஃப் தி செவண்டின். கன்ட்ரோல் யூவர் மைண்ட்’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
‘முதல்முறை ஒரு பெண் குறுகுறுவென்று பார்ப்பதால் எழுந்த பதற்றம் இது’ என அதனை ஒதுக்கி தள்ளினான்.
“என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க?”
“தோணுச்சு வந்துட்டேன்.”
“யாருக்காவது வெயிட் பன்றீங்களா?”
“உங்களுக்கு எதுக்கு?”
எதற்கு இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள் என்று பாரிக்கு அக்கணம் அமிர்தா மீது எரிச்சல் தான் வந்தது. முகத்தை காட்டவும் அவனுக்கு மனமில்லை.
“ஒரு ஃபிரண்டா சொல்லக்கூடாதா?”
விரல் கொண்டு புருவக்கீறலுடன் ஒரு பார்வை.
“அது தானா தோணனும்.”
“அப்போ பிரண்ட்ஸ்?” அமிர்தா அவனிடம் நட்பென்ற பெயரிலாவது நெருங்கிட வேண்டுமென்று பெரும் முயற்சி எடுத்தாள்.
அமிர்தா நீட்டிய கையினை பார்த்தவாறு பாரி அமைதியாக இருக்க…
“நான் பிராஞ்ச் சேன்ஞ் பண்ணிட்டேன். இப்போ நானும் சிஎஸ் தான்” என்றவள் சில நொடி இடைவெளியில், “உங்களுக்காக” என்றாள்.
அதில் சட்டென்று தன்னுடைய பார்வையை அவளின் முகத்தில் பதித்த பாரி எனக்காகவா எனும் கேள்வியை தாங்கினான்.
“ஐ மீன்… உங்க ஃபிரண்ட்ஷிப்க்காகா” என்று சமாளிக்க அப்போதும் பாரியிடம் நம்பாத பார்வை.
“ப்ளீஸ் அக்செப்ட் மை ஃபிரண்ட்ஷிப்.” கிட்டத்தட்ட இறைஞ்சும் குரலில் முகத்தை சுருக்கி அமிர்தா கேட்டிட… அவளின் பாவனையில் பாரிக்கு சிரிப்பு வந்துவிட்டது.
ஏனோ மறுக்கத் தோன்றவில்லை. ‘கல்லூரி வாழ்வில் இனி ஒவ்வொரு நாளும் புது புது பிரண்ட்ஷிப் கிடைத்துக்கொண்டுதானே இருக்கும்’ என எண்ணிய பாரி,
“அக்செப்டேட் யூவர் பிரண்ட்ஷிப்” என்று அமிர்தாவின் கரம் பிடிக்க… இணைந்த அவர்களின் கைகளை பார்த்தபடி அங்கு வந்தாள் பூந்தமிழ்.
_______________________
பாரி வர சொல்லிய இடத்திற்கு பூ வந்தபோது பாரியின் கரம் அமிர்தாவின் கரத்திற்குள் இருந்தது. இல்லையில்லை இப்படியும் சொல்லலாம், அமிர்தாவின் கரம் பாரியின் பிடியில் இருந்தது. ஆக மொத்தம் இரண்டு பேரின் கைகளும் இணைந்திருந்தன.
அதனை வெறித்தபடி பாரியின் அருகில் சென்ற பூவினுள் ஏனென்றே தெரியாது சுருக்கென்ற வலி தைய்த்தது.
மணித்துளிகள் பல அவர்களின் இணைந்திருந்த உள்ளங்கையினையே உள்வாங்கிட முயற்சித்த பூவினால் பாரியின் பிடி இன்னொரு பெண்ணின் கைக்குள் இருப்பதை ஏனோ காண முடியவில்லை.
மனதோடு பூட்டி வைத்திட நினைத்தவையெல்லாம் மேலெழும்பும் உணர்வு.
பூ விழியின் அழுத்தத்தை உணர்ந்த பாரி இன்னமும் அமிர்தாவுடன் குலுக்கியபடி கோர்த்திருந்த கையினை சட்டென விடுத்தான்.
“வா பூ. உட்காரு.” தனக்கு அருகில் அமர்த்திக் கொண்டான்.
பூ அமிர்தாவை யாரென்று ஏறிட…
“நேத்து மெசேஜில் சொன்னனே பூ. நைட்… ஸ்ட்ரீட் டாக்… பிரியாணி…” என கோர்வையாகக் கூறி பூவிற்கு நினைவு கூற முனைந்தான்.
“அமிர்தா” என்று பூ கேட்டிட பாரி ஆமென்று கூறினான்.
இதையெல்லாம் கூட பூவிடம் பகிர்ந்து கொண்டிருக்கின்றானே என உள்ளுக்குள் குமைந்த அமிர்தாவிற்கு ஏனோ அவர்களின் நெருக்கம் பார்த்தது முதல் பூவின் மீது அடி நெஞ்சில் ஒரு பிடித்தமின்மையை உருவாக்கியது.
“எஸ் அம் அமிர்தா” என்றவள், “வேந்தனோட நீயு பிரண்ட்” என்றாள்.
அமிர்தாவின் வேந்தன் என்ற விளிப்பும், பிரண்ட் என்ற வார்த்தைக்கு அவள் கொடுத்த அழுத்தமும் நொடியில் பூவின் முகத்தை சுருங்கச் செய்தது.
கூம்பிய பூவின் முகம் பார்த்து அமிர்தாவினுள் அல்ப சந்தோஷம். அதனை பாரி அவளுக்கு கணப்பொழுதும் நிலைக்க விடவில்லை.
“பிரண்ட் ஓகே. பட், டோன்ட் கால் மீ வேந்தா. அப்படி கூப்பிட என் பூ இருக்கா. அவள் கூப்பிட்டா மட்டும் தான் அது நல்லாவும் இருக்கும்” என்ற பாரியின் குரலில் இருந்த அழுத்தம் பூவின் வாடிய மனதை மலர வைத்தது.
“ஓகே… ஓகே… உனக்கு பிடிக்கலன்னா நான் பாரின்னே கூப்பிடுறேன்” என்று உடனடியாக மாற்றிக்கொண்டதைப்போல் காட்டிக்கொண்டாலும் அமிர்தாவின் மனதில் பூவின் மீதான கோபம் சற்று அதிகமாகவே கனன்றது.
கோபத்தை முகத்தில் பிரதிபலித்திடாது வெகுவாக மறைத்தாள்.
பூ வந்த பின்னர் பாரியின் முகம் அமிர்தாவின் புறம் திரும்பவே இல்லை.
பையிலிருந்து பிளாஸ்டிக் பாக்ஸ் ஒன்றை எடுத்த பூ, அதனை பாரியிடம் நீட்டினாள்.
பாரி என்ன என்றுக்கூட கேட்டிடாது அதனை திறக்க… அதில் மூன்று அதிரசம் இருந்தது.
“ஹாஸ்டல் போறேன்னு தெரிஞ்சதுமே அம்மா நிறைய ஸ்னாக்ஸ் செஞ்சு மூட்டை கட்டிட்டாங்கா வேந்தா. அதையெல்லாம் பார்த்ததுமே தலை சுத்திடுச்சு. பொறவு அப்பா தான் அம்மாவை அதட்டி எனக்கு வேணுமாட்டிக்கு மட்டும் எடுத்துக்க சொன்னாரு. அதனால அதிரசம் எண்ணி அஞ்சு தான் கொண்டு வந்தேன். நேத்து நைட் லீலா பசிக்குதுன்னு ரெண்டு சாப்பிட்டுட்டாள். சாப்பிடறவகிட்ட எப்படி சாப்படாதன்னு சொல்லுறது” என்றவள், “இந்த மூணுமே உனக்குத்தான்” என்றாள்.
அதிரசத்தை பார்த்ததும் பாரியின் கண்கள் அகல விரிந்ததை அமிர்தா கவனிக்கவில்லை. பாரிக்கு நாவின் சுவை மொட்டுக்கள் எழும்பி நர்த்தனமாடின.
ஒன்றை எடுத்து சுவைத்தவன் “ம்ம்” என்ற ஒலியுடன் சுவைத்து சப்புக் கொட்டிட அவனை வேற்று கிரகவாசி போல் பார்த்திருந்தாள் அமிர்தா.
“இதெல்லாம் சாப்பிடுவியா பாரி நீ?”
அவள் கேட்டதே சரியில்லை என பூவிற்கு பட்டது. இருப்பினும் பாரி பதில் சொல்லிக்கொள்வான் என்று அமைதியாக இருந்தாள்.
“ஏன் அதிரசம் நீ சாப்பிட்டது இல்லையா?” எனக்கேட்ட பாரி, “ஓ நீங்க சிட்டி ரிச் கேர்ள் அப்படிங்கிறதே மறந்துபோச்சு” என்று அமிர்தாவுக்கு கொட்டு வைத்தான். அதிலேயே அமிர்தாவின் முகம் விழுந்துவிட்டது.
பாரி மேற்கொண்டு எதுவும் சொல்லி விடுவானோ என நினைத்த பூ, அவனை மாற்றும் பொருட்டு…
“என்ன வேந்தா இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட” என்றாள்.
“ரொம்ப நாளாச்சு பூ உன்னோட சாப்பிட்டு. அதான் பிரேக்பாஸ்ட் உன்னோட” என்று பதில் வழங்கினான்.
“நானும் இதை நினைச்சேன் வேந்தா” என்ற பூ, “வா கேன்டின் போகலாம்” என அழைத்தாள்.
“எதுக்கு பூ?” என்ற பாரி, “நான் கொண்டு வந்திருக்கேன். இங்கயே சாப்பிடலாம்” என பையிலிருந்து உணவினை எடுத்தான்.
இருவரும் அமிர்தா என்றொருத்தி இருப்பதே நினைவில் இல்லாததைப்போல் தங்கள் உலகத்தில் இருந்தனர்.
அதுவும் பாரி அமிர்தாவின் பக்கம் திரும்பாதுகூட இருக்க… பூவின் மீதான வெறுப்பு அவளுக்கு கூடிக்கொண்டே போனது.
“என்ன டிஃபன் வேந்தா?”
“உனக்கு பிடிச்சது. கெஸ் பண்ணு!”
“பூரி… பன்னீர் கிரேவி” என்ற பூவின் கண்கள் ஒளிர அவளை பார்க்கும் பார்வையில் கனிவு பாரியிடம்.
அவனே அவளுக்கு ஊட்டியும் விட, பூவும் பாரிக்கு ஊட்டி விட்டாள்.
“டேய் எனக்குடா சாப்பாடு” என்று அவர்களுக்கு முன் அவி குதிக்க…
“குரங்குக்குலாம் சாப்பாடு கொடுக்கிறதில்லை” என்றான் பாரி.
“மீ… குரங்கு” என்ற அவி, பூவின் கையிலிருந்ததை பிடுங்கி உண்ண ஆரம்பித்தான்.
அவனின் தலையில் கொட்டிய பாரி, “உட்கார்ந்து சாப்பிடுடா” என சொல்லியவாறு தன் கையிலிருந்ததை பூவிடம் நீட்டினான்.
“எனக்கு போதும் வேந்தா நீ சாப்பிடு” என்று அவள் சொல்ல, “ஒரு பூரி எங்க பத்தும்… நீ சாப்பிடு” என்றான் பாரி. மேலும் பூவின் வாய் அருகே உணவை கொண்டு சென்றான்.
பூவின் மீதான பாரியின் அக்கறை அவனை நேசிக்கத் தொடங்கியிருக்கும் அமிர்தாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பூவின் இடத்தில் அவனது காதலியாக தானிருக்க வேண்டுமென்று அவளின் மனம் உறுதி கொண்டது.
“சாப்பாடு எங்களுக்குலாம் இல்லையா?” எனக் கேட்ட அமிர்தா, பாரி பதில் சொல்லும் முன்னே அவன் கையிலிருந்ததை தனது வாய்க்குள் வாங்கியதோடு, பாக்ஸை பிடுங்காத குறையாக வாங்கியிருந்தாள்.
பாக்சினை பிடுங்குபவளிடம் பிடுங்காதேயென மல்லுகட்டவா முடியும். அத்தோடு பூவுக்கு ஊட்ட முயன்றதை எதிர்பாராது அமிர்தா வாங்கியதை பாரியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவி வாங்கும் போது வராத கோபம் அவளின் இச்செயலில் பாரிக்கு வந்தது. இருப்பினும் ஃபிரண்ட் என்கிற உரிமையில் இப்படி செய்துவிட்டாள் என்று பாரி அதனை இலகுவாகவே எடுத்துக்கொண்டான்.
அவி போல் சாதாரணமாக அமிர்தா வாங்கியதாக பூவுக்கு தெரியவில்லை.
அமிர்தாவின் செயல் அவிக்கே என்னவோ போலிருந்தது. அவளின் இச்செயலில் பாரி கவனிக்காத பூவின் முகவாட்டத்தை அவி கவனித்தான்.
தன் கையிலிருந்த பூரியை பாரியிடம் கொடுத்து… “தமிழுக்கு கொடு மச்சான்” என்றான்.
“எனக்கு போதும் அவி. நீ சாப்பிடு” என்று பூ மறுத்த போதும், பாரியும் அவியும் சேர்ந்து அவளை சாப்பிட வைத்த பின்னரே அமைதியாகினர்.
அதையெல்லாம் கண்டு கொள்ளாது… பாரியின் உணவு முழுவதையும் காலி செய்த பின்னரே அமிர்தா நிமிர்ந்தாள். தான் கொஞ்சம் வைக்கப்போக அதனை எங்கு பாரி பூவிற்கு ஊட்டிவிடுவானோ என்பதற்காகவே மிச்சம் வைக்காது சாப்பிட்டிருந்தாள்.
“டெலிஷியஸ் வேந்தா. சோ, யம்மி. ஆண்டிக்கிட்ட சொல்லு” என்றாள். பாரி தலை மட்டும் அசைத்தான்.
“இந்தப்புள்ள இங்க எங்கடா?” அவி கேட்க…
“அவளும் நம்ம டிப்பார்ட் தான்” என்றதோடு பாரி பூவிடம் பேச ஆரம்பித்துவிட்டான்.
அவிக்குத்தான் அமிர்தா மீது சந்தேகம் எழுந்தது. நேற்று வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை என்று அங்கு நின்றுகொண்டிருந்தது கூட பாரியிடம் பேசுவதற்காக வேண்டுமென்றே செய்ததாகவே இப்போது அவிக்குத் தோன்றியது.
‘ஒரு நாள் இரவில் டிப்பார்ட்மெண்ட் மாற்றிக்கொண்டு வந்திருக்கிறாள் என்றால் காரணம் ரொம்ப பெருசு போல’ என சிந்தித்த அவி ‘பாரிக்காக வந்திருப்பாளோ’ என்று மனதிற்குள் தோன்றிய கணம்… அமிர்தாவை பார்க்கும்போது ரொம்ப பெரிய இடமாகவும் தெரிந்திட ‘அமிர்தா மீது ஒரு கண் வைக்க வேண்டும்’ என தீர்மானித்துக் கொண்டான்.
அவிக்கு ஏனோ பூவின் முகம் வாடச்செய்த அமிர்தாவை அந்நொடி முதல் பிடிக்காது போனது.
“டைம் ஆச்சு. இன்னும் கிளாஸ்க்கு வராம இங்கென்னடா பன்றீங்க” என்றபடி வந்த ஜென் பொதுவாக அனைவருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டு… “கிளாஸ்ல நீங்க யாருமில்லன்னதும் வரலன்னு நினைச்சேன்” என்றும் கூறியவளின் பார்வை யாரென்பதைப்போல் அமிர்தாவின் மீது படிந்தது.
அமிர்தாவே தன்னை அறிமுகம் செய்துகொண்டாள். ஜென்னும் சாதாரணமாக அவளுடன் ஓரிரு வார்த்தைகள் பேச… அவி ஜென்னை முறைத்தான்.
அவியின் முறைப்பை ஜென் கண்டு கொள்ளாது மற்றவர்களிடம் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் வகுப்பு ஆரம்பத்திற்கான மணி ஒலிக்க… அனைவரும் எழுந்தனர்.
இதுநாள்வரை இருவர் மட்டுமே இருந்த பாரியின் நட்பு வட்டம் இன்று ஐயவராகியது. அதில் எப்போதுமே பூவிற்கு அவனிடம் தனியிடம் தான். அதனை ஒரு புரிதலோடு அவியும் ஜென்னும் மகிழ்வுடனே ஏற்க அமிர்தாவால் முடியாதுபோனது.
பூ பாரிக்கு தனித்துவம் என்றாலும், தங்களுக்கும் அவனிடம் சிறப்பிடம் உண்டு என்பதை அவி மற்றும் ஜென் பாரியிடம் உணர்ந்திருந்தனர். அதனால் மற்ற நால்வரிடம் இருந்த புரிதலோ நெருக்கமோ அமிர்தாவிடம் இல்லை. அவளுக்கு வேண்டியதெல்லாம் பாரி என்றவனின் அன்பு அக்கறை காதல் மட்டுமே. அவனது உலகம் தானாகிட வேண்டும். அவளின் எண்ணம் ஈடேறிடுமா?
“இந்த இடம் தான் இனி நம்மளோட மீட்டிங் பாயிண்ட்” என்று சொல்லிய பாரிக்கு மரத்திலிருந்து நீண்டு சரம் சரமாகத் தொங்கிக்கொண்டிருந்த மஞ்சள் வண்ண சரக்கொன்றை மலர்கள் அவனது மலராகத்தான் தெரிந்தது.
அம்மரத்தை தலை தூக்கி பார்த்த ஜென்…
“நைஸ் பிளேஸ்டா” என்று சொல்ல…
“போதும் போதும் வாங்க போவோம்” என்றான் அவி.
அதில் கடுப்பான ஜென்,
“உனக்கென்னடா பிரச்சனை. வந்ததிலிருந்து நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்” என்று அவியிடம் கத்த ஆரம்பிக்க…
“இது அவ்வளவு சீக்கிரம் முடியாது. வா பூ நாம போகலாம்” என்ற பாரி பூவின் பையையும் சேர்த்து தன் தோளில் மாட்டியவனாக பூவுடன் இணைந்து நடக்க… அமிர்தா பாரியின் மறுபுறம் சென்று இணைந்து நடந்தாள்.
“எதுக்குடா என்னை அப்போலயிருந்து முறைச்சு பார்த்துட்டே இருக்க? ரொம்ப பன்ற அவி” என்ற ஜென் அவியின் பார்வை வேறு எங்கோ இருக்க… தன்னை கவனிக்காதவன் தலையிலேயே ஓங்கி கொட்டு வைத்தாள்.
“ஹேய் பிசாசே சும்மா கொட்டாத” என்ற அவி, தன்னுடைய பையை எடுத்து அவளின் கையில் கொடுத்துவிட்டு “வா போவோம்” என்று முன்னே நடக்க அவனின் பின்னால் ஓடிய ஜென் அருகில் சென்று…
“ரொம்ப வலிச்சிடுச்சா அவி?” எனக் கேட்டாள்.
அவளை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்தவன்…
“நான் வேற தாட்டில் இருக்கேன் ஜென்” என்றான்.
“என்னாச்சு அவி. எனித்திங் சீரியஸ்?”
“நத்திங்” என்றவன் வகுப்பிற்குள் வந்துவிட்டதால் பிறகு சொல்வதாகக் கூறி பாரியின் அருகில் சென்று அமர்ந்தான்.
நீண்ட பெஞ்சில் அவி, பாரி, பூ, ஜென், அமிர்தா அமர்ந்தனர்.
பூவும் ஜென்னும் நெருக்கம் ஏற்படுத்திக்கொள்ள அமிர்தா அவர்களிடம் நெருங்குவதில் விருப்பம் கொள்ளவில்லை. பாரிக்காக மட்டுமே அவர்களிடம் பேசினாள். பழகினாள்.
மாலை வீட்டிற்கு செல்லும்போது பாரி பூவுடன் விடுதி வரை செல்ல…
“இங்கிருக்கும் ஹாஸ்டலுக்கு வழித்தெரியாதா?” என்று அவி மற்றும் ஜென்னிடம் பொருமினாள் அமிர்தா. அதை இருவருமே கருத்தில் கொள்ளவில்லை.
“பாரிக்கு பூ எவ்வளவு முக்கியமுன்னு உனக்கு புரியல அமிர்தா” என்று சொல்லிய ஜென், அவியின் பார்வையில் பேச்சை நிறுத்திவிட்டு அவனுடன் வகுப்பிலிருந்து வெளியேறினான்.
“என்னாச்சு அவி… ஏன் அமிர்தாகிட்ட பேச வேணாம் கண் காட்டின?” என்று கேட்ட ஜென்னிடம் எதுவும் கூறாது பார்க்கிங் வரை அழைத்து வந்திருந்தான் அவி.
“எனக்கென்னவோ அமிர்தா பூவோட பிளேஸ்… எப்படி சொல்றது, பாரி பூவோட க்ளோஸா இருக்கிறது, பூவை பேம்பர் பன்றது இதெல்லாம் அமிர்தாவுக்கு பிடிக்கல. பாரி பூவுக்கு எதாவது செய்தாலே அவளோட ஃபேஸ் மாறுது” என்ற அவி தான் அமிர்தாவை கவனித்தவரை அவளின் செயல்களைக் கூறினான்.
“அவள் ஏன் அவி இப்படியெல்லாம் பண்ணனும். பாரியும் தமிழும் பல வருஷ நட்பு… அவங்க இந்தளவுக்குகூட புரிதலோட அன்பா இல்லாம வேறெப்படி இருக்கிறது.”
“அவள் ஏன் இப்படி பன்றான்னு தெரியல ஜென். ஆனால் தமிழை பாரிகிட்டேர்ந்து தள்ளி வைக்க எல்லாம் செய்றா(ள்)” என்ற அவி கூற ஜென்னிடம் யோசனை.
“நீ இதுக்காக ரொம்ப அலட்டிக்காத அவி… தமிழை ஓரங்கட்ட நினைச்சா அமிர்தா தான் பாரியோட நட்பை இழப்பாள். பாரிக்கு தமிழ் அவ்வளவு இம்பார்ட்ண்ட். பாரி நோட் பண்ணிட்டான்னா அமிர்தா ஃபிரண்ட்ஷிப்பை கட் பண்ணிடுவான். விடு” என்று அவியை சமாதானம் செய்த ஜென் தனக்கு தாமதமாவதாகக் கூறி கிளம்பிவிட்டாள்.
அவிக்கும் ஜென் சொல்லியது சரியெனப்பட அமிர்தா பற்றிய சிந்தனையை அத்தோடு நிறுத்தினான்.
ஆனால் இவர்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்ட அமிர்தா வேறொரு திட்டம் வகுத்தாள்.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்திட அந்த வருட இறுதியில் இருந்தனர். அவர்கள் ஒரு குழுவாக வகுப்பிலும் கல்லூரியிலும் தெரிந்தனர். அவர்கள் குழுவில் லீலாவும் அடக்கம். அதிலும் பாரி பூவின் நட்பு தனித்து தெரிந்தது.
வீட்டிற்கும் விடுதிக்கும் வந்த பிறகும் கூட இரவு உறங்குவதற்கு முன் சில நிமிடங்களாவது பேசிவிட்டு தான் அன்றைய நாள் இருவருக்குமே நிறைவு பெறும்.
பாரியின் அன்பும் அக்கறையும் கூடிக்கொண்டே போக பூ தான் தவித்துப்போனாள். பாரி போல் நட்பிற்கு தான் உண்மையாக இல்லையோ என்று வருந்தத் தொடங்கியவளின் கவலை லீலாவிற்கு நன்கு புரிந்தது.
பாரியை பற்றிய ஆழ் மன எண்ணத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத பூவிற்கு அந்நேரங்களில் துணையாக இருப்பது லீலா தான். ரொம்பவும் முடியாத தருணங்களில் தன் மனதை லீலாவிடம் மேலோட்டமாக சொல்லும் பூவிற்கு அது சற்று ஆறுதலாக இருந்தது.
அவர்கள் அறையில் இருவர் மட்டும் தான். அதனாலேயே இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறியிருந்தனர்.
அந்த வார இறுதியில் பூ பாரியின் இல்லம் சென்று தங்கி வந்தாள். இப்போதெல்லாம் பூ பாரியின் வீட்டிற்கு விடுமுறை நாட்களில் சென்று தங்குவது வழக்கமாகியிருந்தது. அங்கு அவளுக்கென்று தனியறையே உள்ளது. பாரியின் வீட்டார் அனைவரும் அவளை கொண்டாடித் தீர்த்தனர். பரிதி கூட அலுவலகத்திற்கு செல்லாது அவளுடனே சுற்றிக்கொண்டு திரிந்தான். பார்வதி தனக்கு மகள் இல்லையே என்கிற ஏக்கத்தை பூவிடம் முழுதாக தீர்த்துக்கொண்டார்.
“இனி மகள் இல்லையேங்கிற கவலை உனக்கு வராதே” என்று கேட்ட தில்லையிடம் சிரிப்புடன் கண் சிமிட்டினார் பார்வதி.
ஞாயிறு மாலை பூவை பாரி கொண்டு வந்து விடுதியில் விட்டுச் சென்றான்.
லீலாவிற்கு பார்வதி கொடுத்தனுப்பிய உணவினை பூ கொடுத்திட…
“ஏதோ நீ எங்கூட இருக்கிறதால எனக்கும் வீட்டு சாப்பாடு அப்பப்போ கிடைக்குது” என்ற லீலா அப்போதே உண்ண ஆரம்பித்திருந்தாள். அதிலேயே மதியம் அவள் மெஸ்ஸில் சாப்பிடவில்லை என்பது பூவுக்கு தெரிந்தது.
“நான் வேந்தன் வீட்டுக்கு போயிட்டா உனக்கு தனியா இருக்க கஷ்டமா இருக்கா லீ?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் இல்லை தமிழ். சன்டேஸ் நிறைய பேர் இருக்கமாட்டங்கன்னு லெமென் ரைஸ் தான் மெனுவாம். எனக்கு லெமென் ரைஸ் பிடிக்காது அதான் சாப்பிட போகல” என்றாள்.
“ஹோ…”
“இருந்தாலும் நீயில்லாம என்னவோ மாதிரி தான் இருந்தது” என்றும் லீலா சொல்லிட… அப்பொழுதும் பூவின் முகம் சிறிதாகவே இருந்தது.
“என்னாச்சு பூ?” லீலா வாடிய தோழியின் நலனை அறிய கேட்டாள்.
“எனக்கு அமிர்தா செய்கையே பிடிக்கல லீலா” என்ற பூவின் பார்வை சன்னலை கடந்து காற்றில் ஆடிக்கொண்டிருந்த மரக்கிளையில் படிந்திருந்தது.
“அப்படி என்ன செய்றா(ள்)?”
“பாரிகிட்ட க்ளோஸ் ஆக ட்ரை பண்ணுறா(ள்).” சிறுப்பிள்ளையின் பாவனை அவளிடம்.
“அவளும் பிரண்ட் தான தமிழ். தேவையில்லாம குழப்பிக்காத!” சாப்பிட்டுக்கொண்டே பேசினாள் லீலா.
“அச்சோ லீ… பாரி யார்கிட்ட பேசினாலும் அவனுக்கு நான் யாருன்னு எனக்கு நல்லாவேத் தெரியும். இதே, நீ ஜென்லாம் அவன்கிட்ட பேசுறீங்க, பழகுறீங்க எனக்கு அப்படித் தோணலையே! இந்த அமிர்தா என்னவோ ட்ரை பன்றா(ள்) லீ” என்று நெற்றியை அழுத்திவிட்ட பூ மெத்தையில் படுத்துவிட்டாள்.
அந்நேரம் பாரியிடமிருந்து அழைப்பு வர, அட்டெண்ட் செய்தவள்… “தூங்கிட்டு இருக்கேன் வேந்தா எழுந்ததும் கால் பன்றேன்” என அவன் பேசுவதற்கு முன்பே பேசி வைத்துவிட்டாள்.
பூவின் செயல் லீலாவிற்கு ஆச்சர்யம் தான்.
பின்னே நாள் முழுவதும் ஒன்றாக ஒரே வகுப்பில் இருந்தபோதும்… இரவு வெகு நேரம் அலைபேசியில் பாரியோடு பேசிக்கொண்டிருப்பவள் இன்று ஒரு நொடியில் வைத்தது ஆச்சர்யமாகத்தானே இருக்கும்.
சாப்பிட்டு, சாப்பிட்ட பாத்திரங்களை சென்று கழுவி வந்தவள், அதனை மேசையில் கவிழ்த்து விட்டு பூவை பார்க்க அவளோ உருண்டு புரண்டு கொண்டிருந்தாள்.
அவள் ஒருவித அலைப்புறுதலோடு இருக்கிறாள் என்பது லீலாவுக்கு புரிந்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
35
+1
2
+1
பூ மனநிலை செமடா