Loading

“நான் யாரு ஜெஸி உனக்கு?” என அவளிடம் கேட்ட கேள்விக்கு பதில் வராது போக, பொறுமை இழந்து அடுத்த கேள்வியை கேட்டு வைத்தான் துருவன்.

“நீ என்னோட பாஸ்… நான் உனக்கு பாடிகா…”என சொல்ல வந்தவள்  அவன் முறைப்பில் பாதிலே வார்த்தைகளை விழுங்கி விட்டு “பிரண்ட்!”என்றாள்.

“ஓ… அப்போ மேடம் என்னை பாஸா நினைச்சி, என் கிட்ட பொய் சொல்லி லீவ் கேட்டு போயிருக்கீங்க…! ஓகே ரைட் , பட் இந்த பிரண்ட் கிட்ட உண்மையை சொல்லிட்டு போகலாம் உங்களுக்கு தோணல ! பொய் சொல்ற அளவுக்கு உங்களுக்கு இன்னமும் நான் பாஸா தான் இருக்கேன்… பிரண்டா இன்னும் நான் உனக்கு தெரியல… சாரி இன்னும் நீங்க என்னை ஏத்துக்கல ரைட்?”என்றான் சன்னமாக

“இல்ல துருவா ! நான் உன்னை என் பிரண்டா தான் நினைக்கிறேன்…”

“ஓ… அப்போ பொய் சொல்லிட்டு போக அவசியம் என்ன?”

“இது கொஞ்சம் பெர்சனல் துருவா ! அதான் நான் பொய் சொல்லிட்டு போனேன்…”என்று விளக்கம் கொடுத்தாள்.

“பிரண்டா நினைக்கிற என் கிட்ட பெர்சனல்ல சேர் பண்ண கூடாதா?”

“சாரி  துருவா ! என்னால சேர் பண்ணிக்க முடியாது. சில விஷயங்களை  கண்டிப்பா சேர் பண்ணிக்க முடியாது…!”என்று சொல்லாமல் மறுத்து விட, இவனுக்கு தான் என்னவோ போலானது.

“இட்ஸ் ஓகே போய் உங்க வேலைய பாருங்க “என்று இறுகிய முகத்துடன் வாசலை காமித்தான்.

அவள் ஏதோ சொல்ல வர, அவனோ வேறு வேலையில் கவனம் செலுத்துவது போல அவளை தவிர்த்தான். அவன் தவிர்ப்பதை கண்டு விட்டு எழுந்து வெளியே சென்று விட்டாள்.

அவள் சென்றதுமே அவள் திசையை பார்த்தவனுக்கு கோபமும் ஆற்றாமையுமே அவனது மூளையில்  நிறைந்திருந்தன.  அவள் ‘ பெர்சனல் ‘ என்றதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை…

அன்று முழுவதுமே கோபமாக இருந்தான். அவன் அறைக்குள் தப்பி தவறி நுழையும் அப்பாவி ஜீவ ராசிகளின் மேல் பாய்ந்து விழுந்தான்.

உள்ளே சென்று வெளியே வந்த அனைவரின் முகமும் வாடி வதங்கியே இருந்தது.

மற்றவர்கள் உள்ளிருந்து வந்தவர்களை பாவமாகவும் பயத்தோடும் பார்த்து வைத்தனர்.

“என்ன டா ஆச்சு உனக்கு? ஏன் முகத்தை இப்படி தொங்க போட்டுடே வர? என்னடா நடந்துச்சு உள்ள?”

“சின்ன மிஸ்டேக்  தான் டா எப்பவும்  பொறுமையா சொல்ற மனுசன். இன்னைக்கி அந்தக் கிழி கிழிக்காரு டா ! ஒரே அசிங்கமா போச்சிடா குமாரு ! யார் மேலே உள்ள கோபமோ, உள்ள போறவங்க மேலே எல்லாம் கொட்றார் டா ! இன்னைக்கி நாள் எனக்கு சரியில்லையா இல்லை அவருக்கா தெரியல டா !”என்று புலம்பி விட்டு தன் இடத்தில் சென்று அமர்ந்தான் ஒருவன்.

அவன் பேசுவதை அந்த நால்வரும் கேட்டுக் கொண்டு தான் இருந்தனர்.

‘ அப்படி யார் மேலே இருக்கற கோபத்தை இவங்க மேலே காட்டிட்டு இருக்கார் இவரு?’ தன்யா  கேட்கவும்

‘ ஆமா இவராம் இவரு ! இவனுக்கு மரியாதை ஒன்னு கேடு !  யார் கையில கிடைப்பா யார போட்டு குத்திக் கிழிக்கலாம் இருப்பான்’ என ரவி பல்லைக் கடித்தான்.

ரவியின் முகம் பார்த்த ஜெஸி, அதிர்வுடன்”என்னாச்சி ரவி? உனக்கு இன்னமும் அவன்  மேலிருக்கற கோபம் போகலியா? ஏன் அவன இப்படி பேசிட்டு இருக்க ?”என சாந்தமாக கேட்டாள்.

“போகல மேம்… உங்களை  ஹாஸ்பிடல் இரத்ததோட பார்த்தது இன்னமும்  என்னால மறக்க முடியல, அதுக்கு காரணம் இவனா இருக்க என்னால இவனை மன்னிக்க முடியல மேம்… அவனுக்கு பாடிகார்ட்ன்றதால அமைதியா போயிட்டு இருக்கேன்”என்று இறுகிய முகத்துடன் சொன்னான்.

“நானே மன்னிச்சிட்டேன் ரவி ! “

“அது உங்க பெருந்தன்மை என்னால முடியாது மேம்”என்று  அங்கிருந்து சென்று விட, முறுவலுடன் தலையை இருபுறம் ஆட்டி தோளை குலுக்கி விட்டு துருவனின் அறையை நோக்கி நகர்ந்தாள்.

‘ டொக் டொக் ‘ என்ற சத்தத்தை கேட்டு  நெற்றியை சுருக்கியவன் “பச்…”என்ற முணங்களுடன் “கம்மி இன்”என்றான் கண்களை திறவாமல்.

கதவை திறந்து உள்ளே ஆள் வரும் அரவம் அவனுக்கு நன்றாக கேட்டது. வந்தவர்கள் பேசட்டும் என்ற ரீதியில்  அமைதியாக விழிகளை முடிய நாற்காலியில் சாய்ந்த வண்ணமிருந்தான்.

பேசுவார்கள் என்று நினைத்தவனுக்கு அறையின் அமைதி ஏதோ உணர்த்த, மேலும் எரிச்சலுடன் “பச்  என்ன வேணும்?”என்று கண்களை திறந்தவன் ஜெஸியைக் கண்டு மூடிக் கொண்டு வேறு புறம் முகத்தை திருப்பிக் கொண்டான்.

“உனக்கு கோபம் என் மேலே தான?என்னை தானே நீ திட்டனும். ஏன் ஸ்டாஃப்ஸ் திட்டிட்டு இருக்க நீ?”என்று கைகளை கட்டிக் கொண்டு அவனேதிரே நின்று கேட்டாள்.

“உங்களை திட்ட நான் யாரு மேடம்?”

“ஓ… அதுனால தான் ஸ்டாஃப்ஸ் ஹர்ட் பண்றீயா? இப்ப தான் கம்பெனி ஆரம்பிச்சிருக்க துருவா ! கிடைச்சிருக்க ஸ்டாஃப்ஸ வச்சு கம்பெனிய உயர்த்த பார்க்கனும்… அவங்களை கைகுள்ள வச்சுக்கணும்… அவங்க கிட்ட கன்சர்ன்னா நடந்துக்க, இப்படி எரிஞ்சு விழாத, உனக்கு தான் லாஸ் துருவா !”என அவன் மேலுள்ள அக்கறையில் அறிவுரை சொன்னாள்.

“ரொம்ப அக்கறை தான். உங்க அக்கறைக்கு நன்றி ! கிளம்புங்க”என்றவன்

“கோபப்படுத்துவளாம், அப்புறம் கோபப்படாத சொல்லுவளாம்  நாங்க கேட்டுக்கணுமாம்…”என்று முனங்கி விட்டு உதட்டை சுழித்தான்.

அதை கேட்டு அவளுக்கு சிரிப்பே வர, இதழை மடக்கி சிரிப்பை அடக்கினாள்.

“ஏய்! இப்போ எதுக்கு சிரிக்கற நீ?”

“இல்ல நீ கோபப்படறது ரொம்ப கியூட்டா  குழந்தைங்க கோபப்படுறது போல இருந்தது. அதை பார்க்க எனக்கு சிரிப்பு வந்தது சிரிச்சேன்”என்றாள்.

அவள் வார்த்தைகள் அவனுடலுக்குள் நான்கைந்து ஐஸ் கட்டிகளை போட்டது போல ஜில்லென்று இருந்தது. கோபமாக தகித்து கொண்டிருந்தவன், அவளது ‘ கியூட் டில்’ தணிந்து விட்டான். இருந்தும் கோபம் போகாதது போல காட்டிக் கொள்ள முயன்றான்.

“இப்படி எல்லாம் பேசினா என் கோபம் போயிடும் நினைக்கறீயா?”

“அது தான் எப்பயோ போயிடுச்சே ! இன்னும்  இருக்குன்னா நினைச்சுட்டு இருக்கீயா” என கேட்கவும் அவனுக்குள் வெட்கம் வர, அதை மறைக்க அவளை முறைக்க முயன்று தோற்று போனான்.

“உட்காரு !”என்றான் வெட்கச்சிரிப்பை மறைத்து.

“துருவா ! ரியலி சாரி ! உன் கிட்ட பொய் சொல்லிட்டு போகணும் நினைச்சி போகல… போக வேண்டிய சூழ்நிலை… சில விஷயங்கள் ரொம்ப பெர்சனல்,  அதை உயிருக்கு உயிரா இருக்கறவங்க கிட்ட கூட பகிர முடியாம கூட போகலாம்… எல்லாமே பகிரணும் இல்லா ப்பா… ப்ளீஸ் அண்டர்ஸ்டென்ட்… மறச்சதுக்கு சாரி ! உன் கிட்ட பொய் சொன்னதுக்கு ரியலி சாரி ப்ளீஸ் என் மேலே  உள்ள கோபத்தை ஸ்டாஃப்ஸ் கிட்ட காட்டாத ! என் மேலே மட்டுமே காட்டு”என்றாள் மிகப் பொறுமையாக..

அவள்  சொன்ன ‘ உயிருக்கு உயிரான உறவு ‘ என்ற வார்த்தையிலே அவன் மனம் தொக்கி நின்றிட, அடுத்த வார்த்தை எல்லாம் மாயமானது…

‘ என்னை அப்படி நினைக்க ஆரம்பிச்சிட்டாளா? ‘ என மனம் தவறான கணக்கை போட ஆரம்பித்தது.  அவனுக்குள்ளே ஒரு பரவசம்… அவள் வார்த்தையில்  இன்னும் இன்னும் அவள் மேலே காதலாகி போனான்…

“இன்னமும் கோபமா துருவா !”என அப்பாவியாக கேட்க, “ஆமாம்” என்று சிலுத்து கொண்டான்.

“பச்… உன் கிட்ட உதவி கேட்கலாம் வந்தேன். என் பிரண்டு எனக்கு உதவி செய்வான் வந்தேன். ஆனா நீ கோபமா இருக்க? நீ எப்படியும் செய்ய மாட்ட, நான் வேற ஆள பார்த்துக்கிறேன்”என்று எழ இருந்தவளை வேகமாக  தடுத்தவன்

“என்ன உதவி?”என்றான் அவசரமாக,

“நீ தான் கோபமா இருக்கியே உன் கிட்ட என்ன உதவி கேட்க? நான் வர்றேன்”என்று மீண்டும் எழ, “இல்ல இல்ல எனக்கு கோபமே இல்லை… என்னை பார் நான் கோபமா இருக்கேனா இல்ல இல்ல… உனக்கு என்ன உதவி செய்யணும் சொல்லு செய்றேன்”என்றான். அவளோ வாய்விட்டே சிரித்து விட்டாள். அவனும் வழிந்தான்.

“சரி சொல்றேன்… அதுக்கு நீ என் கூட வரணும்…”என்றாள்.

“எங்க?”

“சொல்றேன்… இப்போ நீ ஃப்ரீ தான?இல்ல வர்க் இருக்கா?”

“நான் எப்போதும் ஃப்ரீ தான் போலாம்”என்றான்  அவளுக்கு முன்ன எழுந்து கொண்டு.

அவளும் மூரலுடன் “அதுக்கு முன்ன நீ ஒரு காரியம் பண்ணனும்”

“என்ன காரியம்?”

“நீ திட்டின ஸ்டாஃப் கிட்ட சாரி கேட்கணும்… இன்னைக்கி முழுக்க நீ திட்டினதை நினைச்சி ஃபீல் பண்ணிட்டே இருப்பாங்க. ஒரு வேலையும் ஓடாது. நீ ஒரு சாரி கேட்டு தட்டிக் கொடுத்தா போதும் சந்தோசமா வேலைய செய்வாங்க… என்ன சொல்ற எனக்காக நீ இதை செய்யணும்”என்றாள்.

அவனும் கோபம் கொள்ளாமல் “சரி”என்றான். இருவரும் சேர்ந்து வெளியே வர, துருவனோ, அவன் அருகே சென்று தோளை தட்டி”சாரி  ! ஏதோ கோபத்துல கத்திட்டேன்… தப்பா எடுத்துக்காதீங்க.. உங்க வர்க் சரியா பாருங்க”என்று அவனுடன் சிரித்து பேசி விட்டு ஜெஸியை பார்க்க,  அவளும் புன்னகையுடன் கட்டவிரலை காட்டினாள்.

தனது டீமிடம் சொல்லிக் கொண்டு அவனுடன் அவள் கிளம்பி விட, செல்லும் அவர்களை ஆச்சர்யதுடன் பார்த்தனர் அந்த நால்வரும்.

“என்ன டா நடக்குது இங்க?”தன்யா வாயைப் பிளந்து கொண்டு கேட்க, “தெரிலியே டி”ஶ்ரீயும் அவ்வாறே.

இருவரும் காரில் பயணிக்க, அவன் மனதிற்குள் ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டுப் போட்டுக் கொண்டிருந்தார்.

“என்னை கொஞ்சம் மாற்றி… என் நெஞ்சில் உன்னை ஊற்றி நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே

நேற்றும் இன்றும் வேறா?இன்று காணும் நானும் நானா?உன் பேச்சில் என்னை வீழ்த்தி செல்லாதே !”

மனதிற்குள் ஒரு இசைச் சாரல் தூவிக் கொண்டே இருந்தது அவளுடனான இந்த பயணத்தில்

அவள் சொன்ன இடத்திற்கு காரை செலுத்திக் கொண்டிருந்தான். ஆனால் மனமோ விண்ணையும் தாண்டி பறந்துக் கொண்டிருந்தது.

அவள் சொன்ன இடமும் வர, அவள் நிறுத்தச் சொன்ன இடத்தை கவனித்தான். அது குழந்தைகள் காப்பகம்…

“எதுக்கு இங்க வந்துருக்கோம் ஜெஸி ?!” என்றான் காப்பகத்தை பார்வையிட்டவாறே !

“இது தான் என் தாய் வீடு துருவா !”என்றதும் அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது.

“என்ன சொல்ற ஜெஸி?”என்றவனுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வர வில்லை.

“அதோ  அங்க ஒரு தொட்டில் இருக்கே, அந்த தொட்டித் தான் எனக்கு முதல்ல அடைக்கலம் கொடுத்துச்சி. இந்த காப்பகமும் இங்க இருக்க ஆட்களும் தான் எனக்கு தாய் வீட்டுச் சொந்தம்”என்று காப்பகத்தை பார்த்து புன்னகையுடன் சொல்ல, அவனோ மனமும் விழிகளும் கலங்க அவளை பார்த்திருந்தான்.

இருவரும் அந்த குழந்தைகள் காப்பகத்துக்குள் நுழைந்தனர். அவளுடன் காரில் வரும் போது இருந்த மனநிலை இப்போது இல்லை.

முற்றிலுமாக மாறியிருந்தது அவளது வார்த்தைகளால்…

‘ இது தான் தன் தாய் வீடு ! அந்த தொட்டிலே எனக்கு முதல் அடைக்கலம் !’ என்றாள்.

அதை அவன் எதிர்பாராத ஒன்று தான்… கணவன் இல்லை மட்டும் தான் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனா அவள் ஆசிரமத்தில் வளர்ந்தவள் என்று இன்று தான், அதுவும் அவள் கூறித் தான் தெரிகிறது.

‘ இன்னும் அவளை பற்றி முழுமையாக தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை ! நீயெல்லாம் என்ன தான் காதலிக்கிறீயோ? ‘ உள் மனம் காறி உமிழ, தன்னை தானே திட்டிக் கொண்டான்.

காரை பார்க் செய்து விட்டு  அவளுடன் நடந்தான்… மணியுடன் கூடிய தொட்டிலை அவளது விரல்கள் லேசாக வருடியது.

“கர்ணன போல  என்னை பெத்தவ, ப்ளூ கலர் சால்வையிலே சுத்தி இங்க போட்டு, இந்த மணியடிச்சி இங்க தெரிய படுத்திட்டு ஓடி போயிட்டா ! இங்க இருக்கவங்க, இன்னொரு தரித்திரமா நினைக்காம இன்னொரு செல்வமா நினைச்சி என்னை தூக்கிட்டு போய் வளர்க்க ஆரம்பிச்சாங்க… எனக்கு ‘ஜெஸி எமிரா !’ பெயர் வச்சது ஃபாதர் தான்… அவர் எனக்கு அப்பா போல தான்…”என்றாள் அதை வருடிய படி.

அவனும் அவளை குழந்தையாய் விட்டு சென்ற இடத்தை கைகளால் வருடினான். “வா “என்று  உள்ளே அழைத்துச் சென்றாள்.

போகும் வழியெங்கும் அவள் வளர்ந்ததையும் அவளுக்கு கிடைக்கும் உணவு , உடையைப் பற்றியும் சொல்லிக் கொண்டு வந்தாள்.

விஷேச நாட்களில் அவர்களுக்கு கிடைக்கும் புதிய ஆடை, புதிய உணவு, என அன்றைய நாளில் அவர்கள் சந்தோசத்தை பற்றியும் கூறினாள்.

அவன் கேட்டுக் கொண்டே வந்தாலும் மனதில்  ஓர் பாரம் ஏறிப்போவதை அவனால் உணர முடிந்தது.

“பெத்தவங்க இல்லைன்னு நாங்க பீல் பண்ணதே இல்ல துருவா ! படிக்க , குழந்தைங்களோட குழந்தைங்களா  விளையாட, எப்போவாது  கிடைக்கற புது துணி,புது சாப்பாடு இதுவே போதும் விவரம் தெரியிற வரைக்கும் இருந்தாச்சி..

ஓர் அளவுக்கு விவரம் புரிய ஆரம்பிக்க, அம்மா  , அப்பா தனியா பாசம் காட்ற இரு ஜீவன்கள் நமக்கு இல்லைன்னு புரிய ஆரம்பிச்சது… ஏன் இல்லை கடவுள் கிட்ட கேட்டு பார்த்தேன் பதில் இல்லை…

ஸ்கூலுக்கு கூட்டிட்டு வர, புது புது உணவா சமைச்சு கொடுக்க, யூனிஃபோர்ம் ஐயன் பண்ணி போட்டு விட ஷு,  சாக்ஸ், புது பேக் ராஃப்  நோட் பென்சில் பாக்ஸ், புடிச்ச ஸ்நாக்ஸ்  வாங்கி கொடுக்க பெத்தவங்கன்னு இரண்டு பேர் இருக்காங்க… ஆனா எனக்கு ஏன் இல்லை..?

கிழிஞ்சு ஒட்டு போட்ட  ட்ரெஸ்… ஷூ அப்படி தான்… யாரோ யூஸ் பண்ணி தூக்கி போட்ட  கிழிஞ்ச பேக்..

கொஞ்சோண்டு பேப்பர் இருக்கற ராஃப் நோட், ஏதாவது ஒரு சாதம்…அதுவும் கொஞ்சமா எங்க கிளாஸ் பிள்ளைகளுக்கு மத்தியில நாங்க கொஞ்சம் வித்தியாசமா தான் இருந்தோம் துருவா !”என அவள் விழியோரத்தில் துளிர்த்த நீரை துடைக்க , இவனும்  திரண்ட கண்ணீரை துடைக்க மணமின்றி கன்னத்தில் வடிய விட்டிருந்தான்.

பார்ன் வித் சில்வர் ஸ்பூன் என்ற வரிகளுக்கு ஏற்ற வாழ்க்கை தான் அவனுக்கு…  இதெல்லாம் அவனுக்கு செய்திகளாக கூட தெரிந்தது இல்லை… அவன் பள்ளியில் ஆரம்பித்து தொழில் வரைக்குமே தெரிந்தவர்கள், நண்பர்கள் என யாரும் இப்படி இருந்தது இல்லை ஜெஸி அவனுக்கு முதல் அனுபவம்.

குழந்தைகள் காப்பகம் இருப்பது தெரியும் அவனது பிறந்த நாளுக்கு அங்கு உணவும் உடையும் செல்வது தெரியும். ஆனால் அதை பற்றி அவன் கண்டு கொள்வதும் இல்லை வந்து பார்த்ததுமில்லை யோசித்ததும் இல்லை…

இன்று தான் முதல் முறையாக இதையெல்லாம் கேட்கிறான்… அவனால் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை…

அவளும் தான் வளர்ந்த ஒவ்வொரு இடத்தையும் சுட்டிக் காட்டி அவள் செய்த சேட்டை, குறும்புகள் அனைத்தையும் சொல்லி மகிழ, இவனும் புன்னகைத்தான்.

கடைசியாக அவர்கள் வந்து சேர்ந்தது, அந்த காப்பகத்தில் இருந்த சர்ச்சிற்கு தான். அவளுக்கு மூச்சடைத்தது… இதுவரை மூச்சு விடாமல் பேசிக் கொண்டு வந்தவள் அப்படியே நின்று விட்டாள்.

ஏனோ அவ்விடத்தை பார்க்க அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது… வார்த்தைகளை விழுங்கியது போல்  அவளால் கண்ணீரை விழுங்க முடியவில்லை..

அழ ஆரம்பிக்க, அவனோ பதறி போனான்.”ஜெஸி ! ஜெஸி…! என்னாச்சி உனக்கு?”அவள் கையைப் பற்றி உலுக்க ஆரம்பித்தான்.

அவளோ இதுவரை உள்ளே  அடக்கி வைத்திருந்த, துக்கத்தையும் அழுகையும் மடைத்திறந்த வெள்ளத்தை போல அவனிடம் கொட்டி விட்டாள்.

“நீ முதல் இங்க வந்து உட்கார் !”என அங்கே இருந்த கதிரையில் அவளை அமர வைத்து விட்டு, நீரை எடுத்து வர சென்றான்.

ஒரு கிளாஸ் நீரை கொண்டு வந்தவன் அவளுக்கு புகட்ட, கொஞ்சம் கொஞ்சமாக குடித்து விட்டு  தன்னை சமன் படுத்த  முயன்றாள்.

“ஆர் யூ ஓகே ஜெஸி?”

“ம்ம்… ஓகே”என்றாள். அவள் கையை அழுத்தினான்.

“போதும் ஜெஸி எதுவும் நீ சொல்ல வேணாம்… நீ  ரொம்ப அழற, என்னால பார்க்க முடியல ப்ளீஸ் வேணாம் ஜெஸி “எனக் கெஞ்சினான்.

அவளுக்கோ அவனது கெஞ்சலில் சிறு புன்னகை கீற்று மின்னல் போல வந்து மறைந்தது.

“உள்ளுக்குள்ள அடச்சி வச்சிருக்க துக்கத்தை யார் கிட்டயாவது கொட்டனும் போல இருக்கு துருவா ! கொஞ்ச நாளாக மனசு விட்டு பேச ஆள் இல்லாத மாதிரி பீல் பண்றேன். இப்போ என் பிரண்டா நீ இருக்க, உன் கிட்ட ஷேர் பண்ணனும் தோணுது பண்ணட்டுமா?”அவள் கேட்க, இவனுக்கு அழுகையிலும் அப்படி ஒரு ஆனந்தம்…

“கொட்டு ஜெஸி, எதையும் மிச்சம் வைக்காம கொட்டிரு ஜெஸி ! நான் இருக்கேன் கேட்க…”அவள் கொட்ட போகும் துக்கம் இவனை வந்து பிடித்துக் கொள்ள போகிறது என்று அறியாது சொல்லி வைத்தான்.

“இங்க தான் ஆரோன் எனக்கு புரோபோஸ் பண்ணினான்… இங்க தான் எங்களுக்கு மேரேஜ் ஆச்சி !”என்று ஆரம்பித்தவளின் விழிகளும் ஆரோனை பத்தி பேசும் போது விரிவதும் அதில் வழியும் காதலும் அவனை முற்றிலுமாக உடைத்தது.

ஆரோன் பற்றியும் அவனது காதல் இம்சைகளை பற்றி பேசி எதிரே இருந்தவனின் மனதை சுக்கு நூறாக உடைத்தாள்.

“மூணு வருசமா அவனோட லவ் அக்சப்ட் பண்ணிக்கவே இல்ல..  அப்புறம் ஏத்துக்கிட்டேன். அதுக்கு அப்புறம் என்னை நல்லா வச்சு செஞ்சான்… கல்யாணத்துக்கு அப்புறம் அவனுடைய லவ் கொஞ்சம் கூட குறையல கூட மட்டுமே செஞ்சது.

அவன் போன அப்புறமும் குறையல இன்னும் அதிக மாயிட்டே  இருக்கு… எனக்கு தூக்கம் வாரத போது அவனை தான் நினைச்சி படுப்பேன், அவன கட்டிப்பிடிச்சு தூங்கறது போல நினைச்சுப்பேன்… இப்படியே என் நாட்களை அவனை நினைச்சி கடத்திடனும்”என்று முடிக்க அவனுக்கு கோபம் சட்டென வந்தது.

அவள் கையை பற்றியிருந்தவன் சற்று உதறி விட்டு தனியாக நின்றான்.

“என்னாச்சி துருவா ?”

“போதும்  ஜெஸி போதும் இதுக்கு மேலே என்னால எதையும் கேட்க முடியாது… போதும் ஜெஸி “அவன்  கொந்தளிக்க, “ஏன்?” என அவனை சந்தேகமாக பார்க்க,

“என்னா நான் உன்னை லவ் பண்றேன் ஜெஸி ! நீ சொன்ன கடைசி வாக்கியத்தை என்னால ஏத்துக்க முடியல ! எனக்கு நீ வேணும் கடைசி வரைக்கும் வேணும் உன் காதல் வேணும் நான் ஆரோனை  போல பாதிலே. விட்டு போக மாட்டேன்… நீ செத்ததுக்கு அப்புறம் தான் நான் சாவேன்… எனக்கு உன் காதல் வேணும் முழுசா வேணும்… ஆரோன் உன் வாழ்க்கை இல்லை.. அவன் உன் வாழ்க்கையில இனி இல்லை… நான்… நான் மட்டும் தான் இருப்பேன்… நீ நான் டெனி இருப்போம் நம்ம புது  வாழ்க்கையில… பழைய வாழ்க்கை நினைச்சி கண்ணீர் வேண்டாம்… இனி ஒரு புது வாழ்க்கை ஸ்டார்ட் பண்ணலாம் எனக்கு நீ வேணும் ஜெஸி,  ஐ லவ் யூ ஜெஸி” என அவள் உள்ளத்தில் இருந்தத்தை கொட்டி தீர்க்க , அவளோ அதைக் அவ்விடத்திலே உறைந்து ஊமை சிலையென ஆனாள்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்