
அடுத்த சில நிமிடங்களில் அமைதியாக உணவை முடித்த சாரதி கைபேசியை எடுத்துகொண்டு வெளியில் செல்ல… வசீகரன் நாயகி தன் அறையில் இல்லாததை கண்டு “அபிம்மா அம்மா ரூம்ல இல்லையே..” என்றான்.
“தம்பு காலைலயே அக்காக்கும் மாமாக்கும் சின்ன பிரச்சனை ஆகிடுச்சு..”
“என்னாச்சு..?” என்றதும் காலை நிகழ்வுகளை விவரித்தவர் “மாமா அப்படி சொல்லவும் அக்கா ரொம்ப மனசொடிஞ்சு போயிட்டாங்க. மாமா எத்தனை சமாதானம் செய்தும் கேட்கவேயில்லை. மாமா கிளம்பின பிறகு ஜோசியரை பார்த்து பரிகாரம் கேட்டுட்டு வரேன்னு தனியாவே கிளம்பினவங்க ஜோசியரை பார்க்க போன இடத்துல படியில கவனக்குறைவா கால் வச்சதுல ஸ்லிப் ஆகி கீழ விழுந்துட்டாங்க..”
“என்ன சொல்றீங்க..? அம்மாக்கு ஒன்னுமில்லையே..”
“இல்லை தம்பு பெருசா அடிபடல. தகவல் கிடைக்கவும் மாமாவும் ஜித்துவும் ஸ்பாட்க்கு போய் அவங்களை கூட்டிட்டு ஹாஸ்பிட்டல் போயிருக்காங்க இப்பதான் பேசினேன் இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவாங்க..”
“என்ன அபிம்மா எனக்கு ஒரு வார்த்தை சொல்லலை.. இப்போ பரிகாரத்துக்கு என்ன அவசியம்? எந்த ஹாஸ்பிட்டல் சொல்லுங்க..”
“நீ எல்லா பெண்ணையும் வேண்டாம் சொல்லவும் ஒருவேளை உனக்கு கிரக நிலையில ஏதாவது கோளாறு இருக்குமோன்னு அக்கா பயந்துட்டாங்க.. போதாததுக்கு மாமா இப்படி சொல்லவும் எங்க உனக்கு கல்யாணமே ஆகாம போயிடுமோன்னு ரொம்ப நேரம் பூஜை ரூம்ல இருந்தவங்க அப்புறம் நான் என்ன சொல்லியும் கேட்காம கிளம்பிட்டாங்க..”
“நீங்க ஏன் அபிம்மா கூட போகலை” என்றவாறே ஜித்துவின் எண்ணிற்கு அழைத்தவன்..,
“எங்கடா இருக்கீங்க..? அம்மாகிட்ட கொடு” என்றான்.
“கிட்ட வந்துட்டோம் ண்ணா ரெண்டே நிமிஷம்” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வசீ வாசலுக்கு செல்ல எதிர்பட்ட ப்ரணவ்,
“அண்ணா எப்போ வந்தீங்க?” என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தவன் கார் சத்தம் கேட்டு வாசலுக்கு செல்ல அங்கே கையில் போடபட்டிருந்த கட்டோடு அகிலாண்டநாயகியை உள்ளே அழைத்து வந்தான் வசீகரன்.
“அம்மூம்மா என்னாச்சு..?” என்று ப்ரணவ் கேட்க ‘அம்மாக்கு என்னடா ஆச்சு’ என்றவாறே சாரதியும்..
“இன்னும் என்ன ஆகணும்?” என்ற திரு மகனை முறைக்க..,
நாயகியை வசதியாக அமர்த்திய வசீ., “என்னம்மா செய்துட்டு இருக்கீங்க நீங்க? பரிகாரம் அது இதுன்னு எதுக்கு தேவையில்லாத வேலை உங்களுக்கு? வலி அதிகமா இருக்கா?” என்று கட்டுபோடபட்டிருந்த அவர் கையை வருட..,
“வலி எல்லாம் இல்ல தம்பு.. எதிர்பாராம விழுந்ததுல சின்ன அதிர்ச்சி. அடி எதுவும் படல சுளுக்குன்னு சொன்னாலும் கேட்காம உன் அப்பா இவ்ளோ பெரிய கட்டு போட்டு கூட்டிட்டு வந்துட்டார்‘ என்றவரிடம் மாத்திரையை நீட்டிய திரு ‘இதை குடிச்சிட்டு பேசு’ என்று தண்ணீரையும் அவரிடம் கொடுக்க…
முறைத்துகொண்டே வாங்கிய நாயகி ஒருபுறம் மகன் அமர்ந்திருந்ததால் அவருக்கு மறுபுறம் வந்து அமர்ந்த திருவிடம், “இதுதான் சாக்குன்னு நீங்க ஒன்னும் என்கூட பேச வேண்டாம் முதல்ல தள்ளி உட்காருங்க” என்றார்.
“சரி பேசலை..” என்றவாறே மற்றவர் கண்களை உறுத்தாதவாறு நாயகியை மேலும் ஒட்டி அமர்ந்து, “அவ வேற என்ன செய்யணும்னு நீ எதிர்பார்க்கிற?” என்று மகனை கேட்டார்.
உடனே நாயகி “நீங்க ஒன்னும் பேச வேண்டாம் நானே என் பையன் கிட்ட பேசிக்கிறேன்” என்றிட அங்கே வந்த பசுபதி,
“அண்ணி பயப்படற மாதிரி ஒன்னுமில்லையே… டாக்டர் என்ன சொன்னார்?” என்றவாறே எதிரில் அமர்ந்தார்.
“வலி எதுவும் இல்ல தம்பி. சரி நீ சொல்லு தம்பு நிஜமாவே உனக்கு கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இருக்கா இல்ல வேற ஏதாவது..” என்றவர் அபியிடம்,
“உன் ஃபிரென்ட் பையன் கல்யாணம் பண்ணாம சேர்ந்து இருக்கிறதுக்கு ஏதோ பேர் சொன்னியே என்ன அபி அது..?”
“லிவிங் ரிலேஷன்ஷிப்க்கா..”
“ம்ம் சொல்லு தம்பு ஒருவேளை உனக்கு அப்படி ஏதாவது விருப்பமா அதான் கல்யாணத்தை வேண்டாம் சொல்ல முடியாம தள்ளி போடுறியா?” என்று நேரடியாக கேட்க, “ம்மா..” என்ற சீற்றம் வசீகரனிடம்..
“அம்மா என்ன பேசுறீங்க வசீ அப்படி இல்லை” என்றான் சாரதியும்.
“வேற எப்படின்னு நீயாவது சொல்லுப்பா.. என் பையன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியலை.. அவனும் உடைச்சு சொல்ல மாட்டேங்கிறான்..” என்று கண்ணீரோடு மகனை பார்த்தார்.
“ம்மா நீங்க அழறதுக்காக ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு காலம் முழுக்க நான் அழ முடியாது புரியுதா?” என்று வசீகரன் சற்று உரத்த குரலில் கூறவும்..,
“வசீ!!” என்ற அதட்டல் திருவிடம்.
“கரண் என்ன பேசுற?” என்று பசுபதியும் பதறிப்போனார்.
“நான் ஒன்னும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலையே அப்புறம் எதுக்கு நீங்க கவலைபடுறீங்க? எனக்குன்னு சில எதிர்பார்ப்பு இருக்கு அதுக்கு ஏத்த மாதிரி பொண்ணு கிடைச்சா உடனே கல்யாணம் பண்ணிக்க போறேன்.. நீங்க ஏன் காம்ப்ளிகேட் பண்ணிக்கறீங்க? ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்க” என்றவன் அருகே வந்த விஜய் நண்பனை தோளோடு அணைத்து “மச்சான் பொறுமையா பேசுடா..” என்றான்.
நெற்றியை நீவி விட்டவன் அப்படியே நாற்காலியில் கண்களை மூடிக்கொண்டு அமர அபிராமி அவனுக்கு தண்ணீர் கொடுத்து “தம்பு இப்படியே ஒவ்வொரு பெண்ணா தட்டி கழிச்சிட்டு இருந்தா எப்படி?! வயசு போனா திரும்ப வராது காலாகாலத்துல நடந்தா தான் எதுவும் அழகு. புரிஞ்சிக்கோ..”
“வாழ்க்கை போனாலும் திரும்ப வராது அபிம்மா.. வாழ்க்கை துணைங்கிறது நீங்க நினைக்கிற மாதிரி இல்லன்னு நானும் எத்தனைமுறை தான் சொல்றது. ஏன் என்னை புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க?” என்ற மகனையே பார்த்திருந்த நாயகி எங்கே மகன் குடும்ப பாரம் சுமக்க அஞ்சுகிறானோ என்ற எண்ணத்தில்.,
“பிரச்சனை இல்லாம வாழ்க்கை இல்ல தம்பு… பிரச்சனையை பார்த்து பயந்தா எப்படி வாழ முடியும்?”
“நிச்சயமா ம்மா நான் அதை மறுக்கவே இல்ல.. பிரச்னையை பார்த்து பயந்து ஓடுறதால அதுல இருந்து தப்பிச்சட்டதா அர்த்தம் ஆகிடாது.. சொல்லபோனா நமக்கு வரக்கூடிய பிரச்சனைகளை நாம் எப்படி சந்திக்கிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கே தவிர பிரச்சனைகள் நம்மோட வெற்றியை தீர்மானிக்கறதில்லை..” என்றான் தெளிவான குரலில்.
“சரி கரண் உன் மனசுல என்னதான் இருக்கு தெளிவா சொல்லு.. அதை விட்டுட்டு ஒவ்வொருமுறை ஒவ்வொரு காரணம் சொல்லி இப்படி தட்டிகழிச்சிட்டு இருந்தா இதுக்கு முடிவு தான் என்ன..?” என்று பசுபதி கேட்க,
“நான் ஏற்கனவே சொன்னதுதான் சித்தப்பா..” என்றவன் பொதுவாக அனைவரையும் பார்த்து,
“என்னை எனக்காக விரும்புற பொண்ணு தான் வேணும்! நம்ம அந்தஸ்த்து, வேலை, வசதி, ஆஸ்தி நான் என்ன சமாதிக்கிறேன் எவ்ளோ பேலன்ஸ் வச்சிருக்கேன் எங்கெங்க சொத்து இருக்கு இதெல்லாம் பார்த்து வர கூடிய பொண்ணு எனக்கு வேண்டாம்… வரப்போறவ என்னை நம்பனும்.. அதாவது என்னை முழுசா நம்பனும் என்னை மட்டுமே நம்பி தன்னை ஒப்படைக்கணும் அப்படி ஒரு பொண்ணுதான் வேணும்…”
“அதுக்கு அவளுக்கு உன்னை பத்தி தெரிஞ்சிருக்கணுமே தம்பு? நீதான் லவ் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டியே அப்புறம் அந்த பொண்ணுக்கு உன்னை எப்படி புரியும் அதோட உன்னை உனக்காக விரும்பனும்னா ஒன்னு நீ அரவிந்த்சாமியா இருக்கணும் இல்ல கமல், சச்சினா இருக்கணும்..” என்றார் அபி.
“என்னம்மா இது இன்னும் அப்டேட் ஆகாம அரவிந்தசாமியை மாதிரின்னு சொல்றீங்க?!”
“டேய் அவருக்கு பொண்ணுங்க மத்தியில் இருக்க கிரேஸ் தெரியாம பேசாத..”
“ம்மா அவருக்கு வயசாகிடுச்சு… என் அண்ணன் என்ன அப்படியா இருக்கார்?!”
“ம்ப்ச் பிரணவ் நான் சொல்ல வந்தது எல்லாருக்கும் தெரிஞ்ச முகமா அதாவது செலிப்ரிட்டியா இருக்கனும்னு சொன்னேன்.. நம்ப தம்புவை எத்தனை பொண்ணுங்களுக்கு தெரியும் எப்படி அவனுக்காகவே அவனை கட்டிப்பாங்க?!”
கண்ணீரை துடைத்த நாயகி, “நான்தான் அப்பவே சொன்னேனே நீ பேசுற அரைமணி நேரத்துல ஒருத்தங்களை புரிஞ்சுக்குறது கஷ்டம்னு…”
“நான் எப்போம்மா அந்த பெண்ணை புரிஞ்சிக்கிறதுக்காக பேசனும்னு சொன்னேன்” என்று வசீகரன் கேட்க நாயகிக்கு என்ன பதில் சொல்வதென தெரியவில்லை.
“புரிஞ்சுக்காம எப்படி தம்பு சந்தோஷமா வாழமுடியும்..?”
“சந்தோஷமா வாழ ஒருத்தரை புரிஞ்சிக்கனும்னு என்ன அவசியம்?” என்று கேட்க சத்தியமாக நாயகிக்கு மகன் சொல்ல வருவது புரியவில்லை.
“ம்மா ஒருத்தரை புரிஞ்சுகிறது ரொம்ப கஷ்டமான வேலைம்மா.. ஒவ்வொரு முறையும் அவங்களை புரிஞ்சிக்க நாம அவங்களோட இடத்துல இருந்து பார்க்கணும். அதாவது கெட்டிங் இண்டூ ஒன்ஸ் ஷூன்னு சொல்லுவாங்க ஆனா எனக்கு அதுக்கான நேரமில்லை..”
‘ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல புரிதல் இருந்தாதானே வாழ்க்கை நல்லா இருக்கும்..” என்று குழப்பத்தோடு மகனை பார்க்க,
“அப்படின்னு யார் சொன்னா..?” என்று வசீகரன் கேட்டதில் நாயகிக்கும் அபிக்கும் மயக்கம் வராத குறைதான்..
“தம்பு!!” என்று அதிர்வோடு பார்க்க,
“நான் எதுக்கு அந்த பெண்ணை புரிஞ்சுக்கணும்..?”
“அந்த பெண்ணை சொல்லல தம்பு உனக்கு வரப்போற மனைவியை சொல்றோம்…”
“எனக்கு மனைவியா வரபோறவளும் ஒரு பொண்ணுதானே! அதுல ஏதாவது மாற்றம் இருக்கா?” என்று கேட்க பதிலில்லை அன்னையரிடம்….
“இங்க பாருங்க அபிம்மா ஒருத்தங்களை புரிஞ்சிக்கிட்டா நாம நமக்கான வாழ்க்கையை வாழமாட்டோம் அவங்களுக்காக தான் வாழுவோம்.. ஆணும் பெண்ணும் இருவேறு துருவங்கள் விருப்பு வெறுப்பு, சிரிப்பு, பேச்சு, பழக்கம்னு எல்லாமே மாறுபடும் அப்புறம் அவங்களை புரிஞ்சுக்க முயற்சி பண்ணினா காலம் முழுக்க புரிஞ்சிக்கிறதுலயே வாழ்க்கை வீணா போயிடும்.. அப்புறம் எங்கிருந்து நாங்க சந்தோஷமா வாழ?”
“எனக்கான வாழ்க்கையை எனக்காக தான் நான் வாழனும் அடுத்தவங்களுக்காக வாழ முடியாது! நீங்க சொல்ற மாதிரி பொண்டாட்டிய புரிஞ்சிட்டு எந்த நேரமும் அவளை பத்தியே யோசிச்சு அவளுக்காக என்னோட நேரத்தை வீணாக்கி சந்தோஷத்தை தியாகம் பண்ண முடியாது..”
“இருக்கிறது ஒரு வாழ்க்கைம்மா அதுல பொண்டாட்டி இஷ்டத்தை பார்த்தா நான் எப்படி சந்தோஷமா வாழ?’ என்றவனின் பேச்சு புரிந்தும் புரியாத நிலை அவர்களிடம்.
நாயகியின் கலங்கிய முகத்தை கண்ட அபி “நீ பிறந்ததுல இருந்து உன்னை சுத்தி மட்டும்தான் அக்கா மாமாவோட உலகமே இயங்குது தம்பு கொஞ்சம் அக்காவை புரிஞ்சுக்க ட்ரை பண்ணு..”
“அபிம்மா.. அபிம்மா !” என்று மூச்சை இழுத்துவிட்டவன் தண்ணீரை எடுத்து ஒரே மூச்சாக வாயில் சரித்து கொண்டு தன் எதிரே இருந்த திருவையும் நாயகியையும் ஒரு பார்வை பார்த்தபடி,
“சரி உங்க எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்றேன் கேட்டுக்கோங்க..” என்றதுமே ‘என்றுமில்லாத வகையில் இன்று புதிதாக வேறென்ன சொல்ல போகிறானோ’ என்று அனைவரும் வசீகரனை பார்த்தனர்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


வசி வீட்டில் இருக்கவங்க எல்லாம் எதுக்காக அர்த்தராத்திரியல தேநீர் குடிக்கிறாங்கனு இப்போ தான் புரியுது.
வசி பேசுவதை கேட்டால், கவுண்டமணி ஒரு படத்தில் கூறும் வசனமான “உங்களுக்கெல்லாம் ஒரே குழப்பமா இருக்குல” தான் ஞாபகம் வந்தது. 🤣
தனக்காக தன்னை விரும்பர ஒரு பொண்ணு வேணும். ஆனா நா அந்த பொண்ணை புரிஞ்சு நடந்துக்க மாட்டேன்.
நா தனியா என் வாழ்க்கைய வாழ்வேன் சொல்றான் ஆனா வர போற பொண்ணு இவன புரிஞ்சு வாழணும் சொல்றான். 😇
எப்பா வசீகரா முடியல பா … நீயும் உன்னோட கல்யாணம் பத்தின லாஜிக் கும் … நீ என்ன தான் சொல்ல வர்ற