
“வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்கா…
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்…
உன் தயவால்தானே…
ஏங்குகிறேன் தேங்குகிறேன்…
உன் நினைவால் நானே நான்…”
என்று இழையாளின் கைபேசி ஒலிக்க அப்போது தான் குளித்து முடித்து நீர்சொட்ட பூத்துவாலையை தலையில் கட்டிக்கொண்டே பாத்ரோபோடு வந்தவள் அங்கே அன்னை அவளுக்காக எடுத்து வைத்திருந்த உடையை எடுத்து அணிய துவங்கினாள்.
மீண்டும் அழைப்பேசி வசீகரா.. என்று தொடரவும் உடைமாற்றி வந்தவள் அழைப்பை ஏற்க மறுபுறம் “மச்சிஇஈ ரெடியா?” என்று ஆர்பாட்டமாய் ஒலித்தது ஜீவிகாவின் குரல்.
“எதுக்குடி இப்படி கத்தற என்ன விஷயம்னு மெல்ல சொல்லு..” என்ற இழையாள் ஃபோனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு தலைதுவட்ட துவங்கினாள்.
“ஏதே? ஏன்டி எல்லாரும் கெட் டூக்கு என்ன காம்பினேஷன்ல ட்ரெஸ் என்னென்ன ஈவென்ட்ஸ், ஃபூட்ன்னு வாட்ஸப்பை தெறிக்க விட்டுட்டுருக்காங்க நீ அந்த பக்கம்தான் வரலைன்னு பார்த்தா எதுக்குன்னு கேட்கிற? மச்சி பசங்க எல்லாம் ஆன் ஃபையர் அண்ட் போர்ட் நீ இப்படி கேட்டா எப்படிடி?”
“ஜீவி அம்மா இன்னும் பெர்மிஷன் கொடுக்கலை..”
“ப்ச் அதெல்லாம் நான் நேத்து நைட்டே ஆன்டிகிட்ட பேசி சரிகட்டி வச்சுட்டேன் நீ கிளம்பு மதியம் நாங்க உன் வீட்டுக்கே வந்து பிக் பண்ணிக்கிறோம்..”
“என்னது அம்மா ஒத்துகிட்டங்களா.. எப்படி?”
“அதெல்லாம் சொல்ற விதத்துல சொல்லி இருக்கேன் நீ எதுவும் குழப்பாம ஒழுங்கா வந்து சேரு..”
“ஏய் என்னடி சொல்லி வச்ச..? ஏதாவது ஏடாகூடமா இருந்தது அப்புறம் அவ்ளோதான் சும்மா விடமாட்டேன் பார்த்துக்கோ..” என்று முகத்திற்கு ஒப்பனை செய்தவாறே தோழியை எச்சரித்தாள்.
“அம்மா தாயே நாம தங்கபோற கெஸ்ட் ஹவுஸ் எங்க தூரத்து மாமாவுடையதுன்னு சொல்லி வச்சிருக்கேன் மத்தபடி நம்ம ப்ரோக்ராம் டீடெயில்ஸ் மொத்தமும் அவங்க கையில! அதுல எந்த ஃபோர்ஜரியும் பண்ணலை.. உண்மை விளிம்பியே நீ டிலே பண்ணாம பேக்கிங் பண்ணு..”
“ஏய் எதுக்குடி உங்க மாமாவோடதுன்னு சொன்ன?”
“இழை இது கேர்ள்ஸ் மட்டும் போற கெட்டூ ட்ரிப்ன்னு சொல்லவும் தான் நான் பேசுறதையே உங்கம்மா ஆரம்பிச்சாங்க அவங்ககிட்ட நம்ம ஸ்கூல்மெட் ஜெகனோட கெஸ்ட் ஹவுஸ்ன்னு சொன்னா ஏத்துப்பாங்களா நீயே சொல்லு..”
“மாட்டாங்கதான் அதுக்காக பொய் சொல்லனுமா?”
“மச்சி என்னடி பேசுற உங்க அம்மா நம்ம கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸ்ஸோட பிரெண்ட்ஷிப்பை புரிஞ்சிக்குறது கஷ்டம் ஜெகன் நம்ம ஸ்கூல்மெட் மட்டுமில்லை ரூபி கசினோட ஹஸ்பண்ட்!”
“ஏலகிரில நமக்கு தெரிஞ்ச ரொம்ப பாதுகாப்பான இடம் அது மட்டும்தான்… ரொம்ப யோசிச்சு ப்ளான் பண்ணி இருக்கோம் எல்லாரும் எந்த கேள்வியும் கேட்காம ஒத்துகிட்டாங்க ஆனா உங்க அம்மா மட்டும் எவ்ளோ கேள்வி என்னமோ நீ நாலு வயசு குழந்தை மாதிரியும் நீ தனியா வெளியூர் போனா உனக்கு மிட்டாய் கொடுத்து தூக்கிட்டு ஓடிடுவாங்கன்னு ரொம்பதான்டி பயப்படுறாங்க…”
“எங்கம்மா அப்படிதான் ஜீவி உனக்கு தெரியாதா..?”
“ஏன் தெரியாது சின்ன வயசுல இருந்து பார்க்கிறேனே உன்னை ஸ்கூல் கூட்டிட்டு வந்து போறதுல இருந்து எல்லாமே பார்த்து பார்த்து செய்யறவங்க கோ-எட்ல உன்னை சேர்த்ததே அது உங்க வீட்டு பக்கத்துல இருக்குங்கிற காரணத்தாலதானே!”
“அதோட ஸ்கூல் எக்ஸ்கர்ஷன் காலேஜ் ட்ரிப் எதுக்குமே அனுப்பாம இருபத்து அஞ்சு வயசுலயும் உன்னை முந்தானையில தூளி கட்டி ஆட்டிட்டு இருக்கிறவங்களை பத்தி நீ சொல்லித்தான் எனக்கு தெரியனுமா என்ன.!!”
“ஜீவி எங்க அம்மா அப்படிதான் அவங்களுக்கு நான் ஒரே பொண்ணு.. அவங்க எனக்காக பார்க்கிறது தப்பா..?”
“தப்பில்லைடி ஆனா படிப்பு முடிஞ்சு வேலை பார்க்கிற உன்னை இப்பவும் தனியா அனுப்பமாட்டேன் சொன்னா எப்படிடி அதான் என் ரிலேடிவ்னு சொன்னா உடனே ஒத்துப்பாங்கன்னு சொல்லிவச்சேன் ப்ளீஸ் புரிஞ்சிக்கோடி.. எதுவும் போட்டு கொடுத்துடாத அப்புறம் என்னை உலுக்கிடுவாங்க..”
தீவிர யோசனைக்கு பிறகு “சரிடி எத்தனை மணிக்கு கிளம்புறோம்?”
“எல்லாரையும் நம்ம ஸ்கூல் பக்கத்துல மதியம் அசெம்பிள் ஆக சொல்லி இருக்கேன். உங்க வீட்டுக்கு வர எப்படியும் அரவுண்ட் டூ இல்ல டூ தர்ட்டி ஆகிடும்..”
“ஜீவி என்ன பேசுற இன்னைக்கு இரண்டு பேஷன்ட்ஸ்க்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருக்கேன் நிச்சயம் கேன்சல் பண்ண முடியாது அதுவும் ஒருத்தங்க வயசானவங்க மோலார் டூத்ங்கிறதால ஏற்கனவே சரியா எலிவேஷன் கிடைக்காம நேரம் எடுத்ததுல பயந்து போயிட்டாங்க..”
“ஸோ பெயின்கில்லர் மட்டும் போட்டு அனுப்பினேன். அவங்க நாளைக்கு வெளில கிளம்பறாங்களாம் இன்னைக்கு பண்ணிக்கலாம் சொல்லி நைட்டே போன் பண்ணி இருந்தாங்க..” என்றவளை இடையிட்டவள்,
“ஏய் என்னடி பெரிய சர்ஜரி வரவங்களோட நாலு பல்லை பிடுங்கி எடுக்க எவ்ளோ நேரம் ஆகபோகுது.. என்கிட்டே அனுப்பு இரண்டே நிமிஷத்துல தட்டி கொடுத்துடுறேன்..” என்று சிரித்தாள் ஜீவி.
“ப்ச் வாயை மூடு ஜீவி..”
“சரி சொல்லு எப்போ சர்ஜரி?”
“காலையில் பதினோரு மணிக்கு..”
“எவ்ளோ நேரம் ஆகும்?”
“எப்படியும் ஒன்றரை மணி நேரத்துக்குள்ள முடிஞ்சுடும்..”
“அப்புறம் என்ன மச்சி நாங்க ரெண்டு மணிக்கு மேலதான் வரோம் ஈவினிங் ஏலகிரி ரீச் பண்ற மாதிரிதான் ப்ளான்.., அதுக்குள்ள உன் வேலையை முடிச்சிட்டு ரெடியா இரு பிக்கப் பண்ணிக்கிறோம்..”
“சரிடி நீங்க வாங்க நானும் க்ரூப்ல ஒரு மெசேஜ் போட்டுடுறேன்..” என்றவள் கைபேசியை எடுத்து மெசேஜ் அனுப்பிட அடுத்தடுத்து மெசேஜ் வந்தவாறு இருக்கவும் “பை கைஸ் மதியம் பார்க்கலாம்..” என்று செல்ஃபோனை அணைத்து வைத்த இழையாள் அவர்கள் பள்ளியில் அத்தனை பிரபலம். நன்கு படிக்க கூடிய மாணவி என்பதோடு ஆசியர்களுக்கு எல்லாம் செல்லபிள்ளை.
பாட்டு, நடனம், விளையாட்டு என்று எதையும் விட்டுவைக்காமல் இருப்பவள் ஸ்கூல் பியுப்பல் லீடராகவும் இருந்தவள். இப்போது பள்ளி தோழிகள் அனைவரும் பலவருடங்களுக்கு பின் ஒன்றுகூடி ஏலகிரி மலைக்கு செல்கின்றனர்.
நேற்று அன்னையுடன் நடந்த உரையாடலை அசைபோட்டவாறே இழை தலைவாரி முடிக்கவும், “பிங்கி பூ வச்சிருந்தேனே எடுத்துக்கிட்டியா?” என்றவாறு உள்ளே நுழைந்த பார்கவி தேவதையாய் ஜொலித்த இழையாளை நெட்டி முறித்து கண்ணாடியின் முன் அமர்த்தி பின்னலிட்டிருந்த அவள் ஜாடையில் பூவை வைத்து அழகு பார்த்தார்.
“தேங்க்ஸ்மா..” என்றவள் தாயின் பார்வையில் “எவ்ளோ நேரம் பார்ப்பீங்க எனக்கு நேரமாச்சும்மா டிஃபன் ரெடியா?”
“ஆச்சு பிங்கி. இன்னைக்கு உனக்கு பிடிச்ச பூரி சென்னா செய்திருக்கேன்… மதியத்துக்கு மஷ்ரூம் பிரியாணி செய்ய போறேன் ஏலகிரிக் கொண்டு போக ஸ்டஃப்ட் பன்னீர்..” என்று அவர் அடுக்கிகொண்டே செல்ல…
“ம்மாஆ போதும் போதும் கொஞ்சம் மூச்சு எடுங்க..” என்றவள் மேஜையில் இருந்து தண்ணீரை எடுத்து கொடுக்க..
“வழியில சாப்பிட்டுட்டு போக ஸ்நாக்ஸ் ரெடி பண்ணிட்டு இருக்கேன்.. ஜீவிக்கு பிடிச்ச கோலா உருண்டை பண்ண போறேன் வேற என்ன வேணும் சொல்லு..”
“இதுவே ஜாஸ்திம்மா எல்லாரும் ஹோட்டல்ல நைட் டின்னர் பிளான் பண்ணி இருக்காங்களாம் அதெல்லாம் நாங்க பார்த்துப்போம் நீங்க முதல்ல டிஃபன் எடுத்து வைங்க” என்றவாறே வெளியில் வந்தாள் கைலாசம் பார்கவி தம்பதியரின் ஒரே செல்ல மகள் இழையாள்.
வெளிநாட்டில் பெற்ற பலவருட சம்பாத்தியத்தை முதலீடாக கொண்டு சென்னையில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் கைலாசத்திற்கும் பார்கவிக்கும் மகள் மட்டுமே உலகம்!
அவள் மகிழ்வை மட்டுமே அஸ்திவாரமாக கொண்டு இயங்கும் குடும்பம் அவள் பிடிஎஸ் முடித்து வந்ததும் தனியார் மருத்துவமனையில் அதிக சம்பளம் கிடைத்தபோதும் மகளின் பாதுகாப்பை கருதி தங்கள் வீட்டிற்கு அருகிலேயே சொந்தமாக கிளினிக் வைத்து கொடுத்துவிட்டனர் பெற்றோர்.
இதுகூட பார்கவியின் யோசனை தான்.. நகரின் மையத்தில் இடம் பார்த்து கொண்டிருந்த கணவரிடம் அருகே மருத்துவமனை வைப்பதென்றால் மகள் வேலை செய்யட்டும் இல்லை வீட்டோடு இருக்கட்டும் என்று விட்டார்.
கடந்த மூன்று வருடங்களாக மருத்துவமனை நடத்தி கொண்டிருப்பவளுக்கு வரன்களும் குவிந்தவண்ணம் இருக்க பார்கவி முதல் நிலையிலேயே ஐம்பதுக்கும் மேற்பட்ட மாப்பிளைகளை வடிகட்டி இருந்தார்..
அதன்பின் வீட்டிற்கு வந்தவர்களில் முப்பதுக்கு மேற்பட்டோரை பல்வேறு காரணங்களால் நிராகரித்து இருக்கிறார். இதோ இப்போதும் சிலரின் ஜாதகம் பொருந்தி இருந்தது.
உணவு மேஜையில் அமர்ந்திருந்த கைலாசம் “இங்க வாடா தங்கம்” என்று அழைக்கவும் “சொல்லுங்கப்பா..” என்றவாறே அவரருகே அமர பார்கவி இருவருக்கும் உணவு பரிமாற தொடங்கினார்.
“ஒரு நாலு வரனோட ஜாதகம் உனக்கு பொருந்தி இருக்குடா பசங்க போட்டோவை பார்த்துட்டு உனக்கு ஓகேன்னா சொல்லு விசாரிச்சிட்டு மாப்பிள்ளை வீட்டாரை வர சொல்லலாம்”
“ப்பா நீங்களும் அம்மாவும் பார்த்துட்டீங்களா? உங்களுக்கு ஓகேவா?”
“உங்க அம்மா ஓகே சொன்னதால தான்டா உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்..”
“அம்மாக்கு ஓகேதானே அப்புறம் ஏன் என்னை கேட்குறீங்க..?”
“கட்டிக்க போறது நீ தானே?”
“ஆமாப்பா. ஆனா நான் பிறந்ததுல இருந்து எனக்காக தேடி தேடி பெஸ்ட் கொடுத்தது நீங்க ரெண்டு பேரும் தானே! என் வாழ்க்கையின் அடுத்த கட்டம் இதுல எனக்கு எது பெஸ்ட்ன்னு என்னைவிட உங்க ரெண்டு பேருக்கும் நல்லா தெரியும்ப்பா.. நான் என்ன புதுசா சொல்ல போறேன்?!”
“தங்கம் ஒவ்வொருத்தருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்குமேடா..”
“அப்பா ஒன்னு புரிஞ்சுக்கோங்க எப்பவும் அதிக எதிர்பார்ப்பு தான் ஏமாற்றத்துக்கான முதல் படி! எந்த எதிர்பார்ப்பும் இல்லாம வாழ்க்கையை அதன் போக்கில் வாழும் போதுதான் சுவாரசியம் கூடும்…”
“எப்பவும் இது இப்படிதான் இருக்கணும் அப்படி தான் நடக்கணும், நடக்கும்னு நாமளா ஒரு கற்பனை வச்சிட்டு அது நடக்காம போனா நம்மோட சேர்ந்து அதுக்கு காரணமானவங்க நிம்மதியும் போகும்.”
“எனக்கு அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லைப்பா ஜாதகம் பொருந்தி இருக்கா நீங்க விசாரிச்சிட்டு வரசொல்லுங்க எனக்கு பிடிச்சிருந்தா ஓகே சொல்றேன் சிம்பிள்” என்றவள் உணவை முடித்துகொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினாள்.
மதியம் ஒன்றரை மணியளவில் இழையாள் வீட்டிற்கு வர அங்கு அவளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் பார்கவி தயார் நிலையில் வைத்திருந்தார் .
வெளியில் வண்டி வந்து நிற்கவும் அதுவரைகூட திடமாக நின்றிருந்த பார்கவி கணவனின் தோள்சாய அவர் கன்னத்தில் கண்ணீர் துளிகள் உருண்டோடியது அதை கண்டதும் பெட்டியை ஜீவிகாவிடம் கொடுத்து தாயிடம் வந்தவள்…,
“ம்மா உங்களுக்கு ஓகேதானே! அதிகமா இல்ல ரெண்டே நாள் தான்மா அங்க ஸ்டே சீக்கிரம் வந்துடுறேன் நீங்க இருந்துப்பீங்க தானே.. ஒருவேளை உங்களுக்கு வேண்டாம்னா சொல்லுங்க நான் போகலை..” என்று அவர் முகம் பார்க்க,
“அதான் அப்பா என்கூட இருக்காரே நான் இருந்துப்பேன் நீ பத்திரமா போயிட்டு வா. அப்பாப்போ கால் பண்ணு.. நேரத்துக்கு சாப்பிடனும் மேலே ஸ்வெட்டர் வச்சிருக்கேன் பாரு அங்க அதிகமா குளிருமாம், பஸ்விட்டு இறங்கும் முன்னாடியே போட்டுட்டு இறங்க மறந்துடாத” என்றிட ஹார்ன் பலமாக ஒலித்தது.
“சரி சரி நேரமாச்சு கிளம்பு” என்றதும் இழை வாகனத்தில் ஏறி அமரவும் “பை ஆன்ட்டி” என்று அனைவரும் ஆர்ப்பாட்டத்தோடு விடைபெற்றனர்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நாயகியின் அறிமுகம் அருமை. எளிமையான அன்பான குடும்பம்.
இழையாள் அழகான பெயர். பெற்றோரால் அன்பெனும் கூண்டுக்குள் வளர்க்கப்பட்ட பெண். எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ்வின் போக்கில் வாழும் பொழுது தான் வாழ்வு இனிக்கும். 👏🏼
ஏலகிரிக்கு நண்பர்களுடன் செல்ல போகும் இந்த பயணம் எவ்வாறு அமைய போகின்றது என்று பொருத்திருந்து பார்ப்போம்.
டூர் போக போற இடத்துல என்ன நடக்க போகுதோ 🤔