Loading

கனவு – 1

“ஆனவஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ்செழுத்துளே அடங்கலாவலுற்றதே

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…”

என்ற பாடலை கைபேசியில் ஒலிக்கவிட்டு கண்மூடி சமையலறை மேடையில் சாய்ந்தவண்ணம் பாடலில் லயித்திருந்தார் அகிலாண்டநாயகி.

“அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
செம்பொன்  அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே..”

“அக்கா…” என்றவாறே பாடலை நிறுத்திய அபிராமி அவர் தோளை தொடவும் “எப்போ வந்தீங்க அபி?” என்றார்.

“இப்போ தான்க்கா வந்து பத்து நிமிஷமாகுது.. என்ன எல்லாரும் தூங்காம இருக்கீங்க?”

“விசேஷம் நல்லபடியா முடிஞ்சதா..?”

“எல்லாம் நல்லபடியா ஆச்சுக்கா ஆனா ஏன்…” என்றபோதே “அபி” என்று திருவேங்கடத்தின் குரல் அவர்களிடையே நுழைந்திட “இதோ வந்துட்டேன் மாமா..” என்று வெளியில் சென்றார்.

அங்கே ஹாலில் நடுநாயகமாக அமர்ந்திருந்த திருவேங்கடத்தின் அருகே அபிராமியின் கணவரும் திருவின் தம்பியுமான பசுபதி அமர்ந்திருந்தார். எதிரே சர்வஜித்தும் ப்ரணவும்  இருப்பதை கண்டு, “மணி என்னாச்சு இன்னும் நீங்க ரெண்டு பேரும் தூங்காம என்ன பண்றீங்க?”

பிரணவ் பதில் சொல்லும் முன்னமே “எல்லாருக்கும் டீ கொண்டு வாம்மா..” என்றார் திருவேங்கடம்.

“டீயா இந்நேரத்துக்கா?!” என்று மணியை பார்க்க அது இரவு ஒன்பதே முக்கால் என்று காட்டியது.

“சரி மாமா..” என்றவர் உள்ளே  நாயகியிடம், “என்னக்கா இது இந்நேரத்துக்கு டீ கேட்கிறார்..”

“ப்ச் அது ஆச்சுடி இதோட மூணாவது…”

“ஏதே?”

“ஆமா அபி யாரோ அவர் ஃப்ரெண்டோட ஃப்ரெண்ட் பெண்ணாம் அழகு, படிப்பு அந்தஸ்த்துனு நம்ம தகுதிக்கு ஏத்தவங்களாம் அந்த பெண்ணை தம்புக்கு பார்க்கணும் சொன்னவர் அவனை உடனே வர சொல்றார்..”

“நாளைக்கு வரணுமேக்கா..”

“உனக்கு தெரியாதா இவர் எந்த திசையோ அதுக்கு நேரெதிரா அவன் நிற்பான் எனக்கென்னமோ தம்பு இன்னைக்கு வரமாட்டான்னு உள்மனசு சொல்லுதுடி அப்படி இருந்தும் இன்னைக்கு பேசி முடிக்காம தூங்க போறதில்லைன்னு உட்காந்திருக்கார் மனுஷன்..” என்றவர் கரம் தன் போக்கில் டீ தயாரிக்க தொடங்கியிருந்தது.

“நீ கால் பண்ணி கேட்க வேண்டியது தானேக்கா?!”

“பண்ணிட்டேன் அபி நாட் ரீச்சபிள்” என்ற அதேநேரம் வெளியில் ‘என்ன பசுபதி நான் சொல்றது’ என்று திரு கேட்கவும்,

“நீங்க சொன்னா சரியாதாண்ணா இருக்கும் இதை எதுக்கு என்கிட்ட கேட்டுகிட்டு” என்றார் பசுபதி

அவர்களெதிரே அமர்ந்திருந்த ப்ரணவ் மெல்ல தமையனின் காதில் “ப்ரோ என்றா பசுபதி நாஞ் சொல்றதுன்னு நாட்டாமை ஆரம்பிச்சுட்டாரே இந்நேரத்துக்கு என்ன பஞ்சாயத்து?”

“உன்னை போல தான் நானும் பெரிப்பா கூப்பிட்டதால வந்திருக்கேன். எனக்கு மட்டும் என்னடா தெரியும்?”

“ண்ணா நான்தான் அம்மாகூட வெளில போயிருந்தேன் நீ  இங்கதானே இருந்த உனக்கு தெரியாதா?”

“தெரியாது ப்ரணவ் டின்னர் முடிச்சிட்டு நான் ரூம்க்கு போயிட்டேன். அப்பா திடீர்னு முக்கியமான விஷயம் பேசணும் வான்னு சொல்லவும் வந்துட்டேன்.. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமா இப்படி தான் இருக்காங்க அவங்களுக்குள்ள ஏதேதோ  பேசிக்கிறாங்களே தவிர என்னன்னு ஒன்னும் புரியலை”

“அப்போ ப்ராது இன்னைக்கு உன்மேல தானா..?”

“ப்ச் நானில்லடா அப்படி நானா இருந்தா இப்படி உட்கார விட்டிருப்பாரா பெரிப்பா?!” என்றபோதே அபி டீயை கொண்டுவர அனைவரும் எடுத்துகொள்ள ப்ரணவ் “வேண்டாம்” என்றான்.

“ஏன் வேண்டாம்?”

“டீ குடிச்சா தூக்கம் போயிடும் திருப்பா..”

“அதுக்குதான் குடிக்க சொல்றேன் குடிடா” என்றார் அதட்டலாக..

திருவேங்கடம் அவ்வீட்டின் தலைவர்.

அண்ணனும் தம்பியும் அக்காள் தங்கைகளை மணந்து திருமணமான நாளில் இருந்து இன்றுவரை ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

ஏர்ஃபோர்ஸில் பணியாற்றிய திருவேங்கடம் பின் முப்பதுகளில் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார். திருமணமான புதிதில் நாயகி அவருடன் வெவ்வேறு மாநிலங்களுக்கு சென்றவர் அதன்பின் பிள்ளையின் படிப்பிற்காக ஊரோடு தங்கிவிட்டார்.

“டேய் அண்ணா என்னடா இது..” என்று ஜித்துவை முறைக்க,

“உனக்காவது இது ஃப்ரஸ்ட் எனக்கு இது மூணாவது டீடா கண்ணை மூடிட்டு ஒரே கல்ப்பா அடிச்சிடு வேற வழியில்லை…” எனவும் தம்பியும் வேறு வழியின்றி குடித்து முடித்தவன் நாட்டமைகளை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

“அக்கா மாமா இவ்ளோ பிடிவாதமா இருந்தா நிச்சயம் இந்த சம்பந்தமும் டவுட் தான்..”

“ஏன்டி நானே இந்த வீட்ல ஒரு கொலுசுசத்தம் கேட்டுடாதான்னு ஏங்கி போயிருக்கேன்.. நீ வேற வயித்துல புளியை கரைக்கிற சும்மா இருடி” என்றவர் மீண்டும் மகனுக்கு அழைக்க அது சுவிட்ச் ஆஃப் செய்யபட்டிருந்தது.

“அக்கா தம்பு இதுவரை லிவிங்ன்னு வரலையேன்னு சந்தோஷப்படு..”

“என்னடி சொல்ற..?”

“இன்னைக்கு நிச்சயத்துக்கு போயிருந்தேன்ல அதுல என் பிரெண்டை பார்த்தேன் அவ  பையன் மூணு வருஷமா ஒரு பொண்ணுகூட தனியா பெங்களூர்ல பிளாட் எடுத்து வாழ்ந்துட்டு இருக்கானாம் கேட்டா இதுதான் வசதி பிரியும்போது எந்த பிக்கல் பிடுங்கல் இல்லை எந்த கோர்ட்க்கும் போக வேண்டியது இல்லைன்னு என்னென்னமோ பேசுறானாம் பாவம் அவ!!”

“தம்புவும் அப்படி சொல்லிடுவானாடி..” என்று பதைபதைத்து போனார் நாயகி.

“அது மாமா கையில தான்க்கா இருக்கு..” என்றவர் நிலவரம் அறிய வெளியில் சென்றார்.

இரவு மணி பதினொன்று ஆனபோதும் அண்ணன் தம்பியின் நிலையில் மாற்றமில்லை இளையவர்களும் வீட்டு பெண்களும் அவர்கள் முகத்தை பார்த்தவாறு இருந்தனர்.

“ப்பா நாளைக்கு எர்லி மீட்டிங் இருக்கு என்ன விஷயம்னு சொல்லுங்கபா தூக்கம் கண்ணை சுழட்டுது..”

“ஃப்ரோ அப்பாவை கேட்டா அவர் எப்படி சொல்லுவார் திருப்பாவை கேளு..” என்ற அதேநேரம் “அண்ணா இன்னும் எவ்ளோ நேரம் முழிச்சிருப்பீங்க டைமாச்சு நீங்க போய் படுங்க கரண் வந்ததும் நான் பேசிட்டு சொல்றேன்” என்றார் பசுபதி.

“இல்ல பசுபதி  இருக்கட்டும் இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரியாம நகரமாட்டேன்..” என்றவர் “அபி எல்லாருக்கும் டீ போட்டுட்டுவா..” என்றார்.

“ஏதே மறுபடியுமா?! ண்ணாஆஆஆ அப்போ இன்னைக்கு நமக்கு சிவராத்திரி தானா…?” என்று அலறினான் ப்ரணவ்.

“தெரியலையேடா அப்படிதான் நினைக்கிறேன் ஆனா எதுக்கு கூப்பிட்டாங்கன்னு சொல்லாமலே அண்ணனும் தம்பியும் நம்மள வச்சு செய்றாங்களே, இரு என்ன விஷயம்னு பெரிம்மாவை கேட்போம்..” என்றவன் நைசாக நழுவி நாயகியின் அருகே செல்லவும்,

“எங்க போற ஜித்து?”

“அது பா.. பாத்.. பாத்ரூம் போயிட்டு வரேன் பெரிப்பா” என்றவன் அப்படியே யூ டர்ன் அடித்து  தன் அறைக்கு சென்றான்.

மெல்ல  “திருப்பா..” என்று பிரணவ் அழைக்கவும் என்ன என்பதாக அவர் புருவம் உயர்ந்தது.

“பசிக்குது திருப்பா…”

“ஏன் ஃபங்க்ஷன்ல சாப்பிடலையா?” என்றிட இங்கு அபிராமி  “என்னக்கா இது பார்த்தால் பசி தீரும்னு சொல்லுவாங்க இவனுக்கு பசி எடுக்குதாம்” என்று நாயகியின் காதை கடிக்க..,

‘ஆமாடி  உன் வீட்டுகாரரும் என் வீட்டுக்காரரும் ரம்பையும் ஊர்வசியும் பாரு பசங்க ஆசையா பார்க்கவும் பார்த்ததும் பசி தீர்ந்து போக” என்றவர் திருவின் முன்சென்று.,

“என்ன கேள்விங்க இது! கல்லையும் தின்னு ஜீரணம் பண்ற வயசு எப்பவோ சாப்ட்ட சாப்பாடு குழந்தைக்கு எப்படி போதும்? நீ வா ராஜா” என்று அவனை கையோடு அழைத்து சென்றார்.

“ஹப்பாடா காப்பாத்திட்டீங்க தேங்க்ஸ் அம்மும்மா..” என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டவன்  இன்னைக்கு என்ன தான் பஞ்சாயத்துன்னு நீங்களாவது சொல்லுங்களேன்..”

“வேறென்ன எல்லாம் கல்யாண விஷயம்தான்..”

“கல்யாணமா..?”

“ஆமா ராஜா.. தம்பு இந்த மூணு வருஷத்துல வேண்டாம்னு சொன்ன பொண்ணுங்க மட்டும் நூர்த்தி இருபத்திநாலு. இப்போ இன்னொரு பெண் பார்க்க போகலாம் சொல்லி இன்னைக்கு அவன் முடிவு தெரியாம தூங்கறது இல்லைன்னு உன் பெரிப்பா பண்ற அலம்பல் இருக்கே தாங்க முடியலைடா..”

“கொஞ்சநாள் அமைதியா இருந்தவர் திரும்ப ஆரம்பிச்சுட்டாரா..? போச்சு அவர் கொண்டுவர சம்பந்தம்னு தெரிஞ்சாலே அண்ணா கண்டிப்பா ஒத்துக்க மாட்டங்களே! அப்படிதானே நூர்த்து இருபத்திநாலு அண்ணிகளை நான் மிஸ் பண்ணேன்..”

“ப்ச் அது நமக்கு தெரியும் அவருக்கு தெரியணுமே..”

“போங்கம்மா நம்ம நாட்டோட சிஸ்டமே சரியில்லை..”

“என்னடா சொல்ற..?”

“நான் வயசுக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?”

“ப்ரணவ் உதை வாங்கபோற நீ என்கிட்டே..”

“ஏன்? ஏன்  பொண்ணுங்க வயசுக்கு வந்தா மட்டும் ஊரையே கூட்டி விசேஷமா செய்றீங்க ஆனா பையன் எப்ப வயசுக்கு வந்தான்னு கூட தெரியாம இருக்கீங்க நீங்க எல்லாம் என்ன அம்மா..” என்று கேட்க அபிராமி பூரிக்கட்டையை எடுத்தார்.

“ப்ச் அபி குழந்தை அவன்…” என்றவர் வெங்காயத்தை நறுக்கி முட்டையோடு சேர்த்து கலக்க தொடங்கினார்.

“யார் இவனா? எந்த நேரத்துல பெத்தேன்னு தெரியலக்கா எப்பபாரு எடக்கு மடக்காவே பேசிட்டு திரியிறான்.. இவனால ஸ்கூல காலேஜ்ல…” என்றவரை இடைமறித்து,

“ப்ச் அதெல்லாம் நானே தீர்த்துட்டேன் நீ சும்மா குழந்தையை திட்டாதே..! ராஜா இன்னையோட நீ வயசுக்கு வந்து ஏழு வருஷம் மூணு மாசமாச்சு போதுமா..?” என்றார் நாயகி.

“அம்மும்மான்னா அம்மும்மா தான்!” என்று கட்டிக்கொண்டவன் முதன்முதலில் மீசை முளைக்கவும் எப்படி வெளியில் செல்வது என்று கூச்சப்பட்டு நாயகியிடம் பகிர அவனை தேற்றியதே அவர்தான்.

“டேய் இப்போ நீ வயசுக்கு வந்ததுல என்ன பிரச்சனை..?”

“ஏம்மா வயசு பையனை எவ்ளோ நாள் தான் வீட்டோட வச்சிருப்பீங்க? காலாகாலத்துல கல்யாணம் பண்ணனும்னு பொறுப்பு இருக்கா?”

“இன்னும் காலேஜே முடிக்கலை உனக்கு கல்யாணம் கேட்குதா?”

“ஏன் கேட்ககூடாது..? நான் என்ன எனக்காகவா கேட்கிறேன்?!”

“வேற யாருக்காக..?”

“இதென்ன கேள்வி? நான் தான் சொல்வேனே அபி விளையாட்டு பிள்ளையா இருந்தாலும் ப்ரணவ்க்கு எப்பவும் பாசம் அதிகம்னு” என்று நாயகி சொல்லவும் அபிராமிக்கும் அண்ணன்கள் மீதான மகனின் பாசத்தில் நெக்குருகி போனது..

நாயகி போட்டு கொடுத்த ஆம்லெட்டை வாயில் போட்டுக்கொண்டே, “எல்லாம் என் பேரன் பேத்திகளுக்காக தான்!!” என்றானே பார்க்கலாம்.

“ஏதே..?” என்ற அபிராமியின் கையில் இருந்த கரண்டி நழுவவும் மேடையில் இருந்து இறங்கி, “ப்ச் உங்களுக்கு என் பீலிங்க்ஸ் புரியாது நகருங்க” என்று நாயகியிடம் சென்றவன்,

“அம்மும்மா நம்ம நாட்டோட சிஸ்டமே சரியில்லை முதல்ல அதை மாத்தணும்..”

“என்னதுடா?” என்ற அபி பல்லைகடிக்க,

“அது ஏன் எப்பவும் அசெண்டிங் ஆர்டர்லயே எல்லா விஷயத்தையும் செய்ய நினைக்கறீங்க டிசெண்டிங் ஆர்டர்னு ஒன்னு இருக்கிறது தெரியாதா நாம ஏன் அப்படி போககூடாது..”

“அக்கா எல்லாம் நீ கொடுக்குற செல்லம்” என்று நாயகியை பார்க்க,

“புரியற மாதிரி சொல்லு ராஜா..”

“அம்மும்மா அது ஏன் எப்பவும் முதல்ல பிறந்தவங்களுக்கு தான் முதல்ல கல்யாணம் பண்ணனும்னு நினைக்கறீங்க.. கடைசில பிறந்த எனக்கு முதல்ல கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் ஜித்து கடைசியா அண்ணனுக்கு பண்ணலாமே?”

“உனக்கு என்னடா அவசரம்?”

“அவசரம் இல்லம்மா அவசியம்!”

“அப்படியென்ன அவசியம் உனக்கு?”

“நான் தான் சொன்னேனேம்மா எல்லாமே என் பேரபசங்களுக்காக தான்! அண்ணனை மாதிரி முப்பதுக்கு மேல  கல்யாணம் பண்ணினா என் பையனுக்கு நான் கல்யாணம் பண்ணும்போது எப்படியும் அறுபதுக்கு மேல ஆகிடும் அதுக்கு அப்புறம் என் பேரபசங்ககூட  நான் ஆக்டிவா அவங்க கூட ஓடியாடி விளையாட முடியுமா சொல்லுங்க…” என்று சிரிப்புடன் கேட்க அபிராமி கொதித்து போனார்.

“ப்ரணவ் கல்யாணம் ஒன்னும் விளையாட்டில்லை இதேமாதிரி பேசிட்டு இருந்த என்கிட்ட நிச்சயம் அடிவாங்குவ ஒழுங்கா போய் படிக்கிற வழியை பாரு” என்றிட

“ம்மா ஐடியல் மகனா புருஷனா அப்பாவா இருந்தா மட்டும் போதுமா ஐடியல் தாத்தவாவும் இருக்கணும்” என்று இன்னுமே வெறுப்பேற்ற அதற்குள் அங்கே வந்த ஜித்து திரு அழைப்பதாக கூறவும் அனைவரும் வெளியில் வந்தனர்.

நள்ளிரவு தாண்டியும் குடும்பமே அவன் வரவிற்காக  தூக்கம் கெட்டு காத்திருக்க  அதைபற்றிய கவலையே இல்லாத  நம் நாயகனோ தன் குழுவினருடன் ‘சிவாய நமஹ’ என்ற கோஷத்தோடு தென்கைலாயத்தின் மீது ஏறிக்கொண்டு இருந்தான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அசத்தலானதொரு ஆரம்பம்.
    என்னடா எல்லோரும் குடும்பமா உட்கார்ந்து midnight tea குடிக்கிறீங்க. நானும் வரேன் எனக்கும் சூடா ஸ்ட்ராங்கா ஒரு டீ அம்மும்மா.
    மீசை முளைச்சா வயசுக்கு வந்ததா அர்த்தமா? 🤣🤣
    நாட்டோட system சரி இல்லை தான்.
    மூணு வருடத்துல 124 பொண்ணு rejected daa?! 😳 கட்டம் தான்.
    இங்க எல்லோரும் midnight tea party கொண்டாட நாயகனோ தென்கைலாயத்தை நோக்கி பார்வதிய சந்திக்க போறாரோ? பொருத்திருந்து பார்ப்போம்.
    படைப்பாளருக்கு வாழ்த்துகள்.