Loading

என்னுள் நீ காதலாய் 💞 

அத்தியாயம் 41

வேணி அவளின் அப்பாவிற்கு போன் செய்து தகவலைச் சொல்ல, ஹாஸ்பிடலுக்கு வந்தவர் தலையில் அடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தார். அவர் அழுகை சத்தம் கேட்டு செந்தமிழ் நன்றாக கண்களை திறந்து பார்த்தவள், “அப்பா..” என்றழைத்தாள்.

“என்ன செந்தமிழ்?” அவர் கண்ணீரோடு கேட்க, “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இவ்ளோ நாளா உங்களுக்கு என்மேல பாசம் இல்லையோ அப்படின்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா நான் செத்தா அழ நீங்க ஒருத்தராச்சும் இருக்கீங்கன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு ப்பா” என்றாள் வேதனையோடு.

“அய்யோ இப்படி எல்லாம் நடக்கும்னு எனக்கு தெரியலையே?” அவர் மனம் தாங்காமல் இன்னும் சத்தமாக கதறி அழ, “ஆமா உன் பொண்டாட்டி வீட்டுக்கு வந்ததுல இருந்து, இவளை அடிச்சப்போ சூடு வச்சப்போ சும்மா இருந்துட்டு இப்போ தெரியலைன்னு சொல்லுற” என்று ஆவேசமாகப் பேசிய வேணி,

“உங்க அப்பன் பேரையும் சேர்த்து தான் கேஸ் குடுத்திருக்கேன். புருஷன் பொண்டாட்டி போய் ஜெயில்ல இருக்கட்டும். அப்போதான் எனக்கு மனசு ஆறும்” கோபத்தில் மூச்சு வாங்கப் பேசினார்.

செந்தமிழ் அவள் அப்பாவின் போனை வாங்கி ரேவதிக்கு போன் செய்து நடந்ததை சொல்லி வர சொன்னாள். அவளும் இரவு அங்கு வந்து சேர, வேணியிடம் சொல்ல முடியாத அத்தனையும் ரேவதியிடம் சொல்லி அழுதாள். ரேவதியும் வேணியும் செந்தமிழை பார்த்துக் கொள்ள, செந்தமிழின் அப்பா வீட்டிற்குச் சென்றார்.

அவருக்கு மனைவியை அடித்தே கொல்லும் அளவுக்கு கோபம் இருந்தாலும், அந்த கோபமும் மறுபடியும் செந்தமிழை தான் பாதிக்கும் என்று உணர்ந்தவர் அமைதியுடன் இருந்து விட்டார். அது மட்டுமல்லாமல் போலீஸ் ஸ்டேஷன் அழைத்தாலும் சென்றிடலாம் என்ற முடிவோடு தான் இருந்தார்.

மறுநாள் பெண் போலீஸ் ஒருவர் ஹாஸ்பிடலுக்கு செந்தமிழை விசாரிக்க வந்திட, அவரிடம் அவள் நடந்த அத்தனையும் சொல்லி அழுதாள். ஆனால் சித்தி, அப்பா மீது இருக்கும் கம்பிளையன்டை வாபஸ் வாங்கிக் கொள்வதாக சொன்னாள்.

‘இப்போது அப்பாவும் சித்தியும் அருகில் இல்லாது போனால், அவளுடைய தங்கைகளுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை’ என யோசித்தவள், ‘எனக்கு நடந்ததைப்  போல அவர்களுக்கு நடந்திடக் கூடாது. நான் அந்த வீட்டிற்கு இனிமேல் செல்ல போவதில்லை. ஏதாவது ஹோமில் மட்டும் தன்னை விட்டு விடும்படி’ கேட்டுக் கொண்டாள்.

அந்த பெண் போலீஸோ மனம் தாங்காமல் செந்தமிழ் வீட்டிற்குச் சென்று, அவள் அப்பாவிடமும் சித்தியிடமும், ‘இனி அவர்களால் அவளுக்கு எந்த ஆபத்தும் வராது’ என்று எழுதி வாங்கிச் சென்றிட,

“உன் பொண்ணு இனிமேல் இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்க கூடாது. இல்ல என் அண்ணன் வீட்டுக்கு போயிடுவேன்” என்று செந்தமிழின் சித்தி அவள் அப்பாவை மிரட்டினார்.

செந்தமிழின் அப்பாவும் அந்த சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு சித்தியின் அண்ணன் வீட்டில் பாதுகாப்பில்லை என்று உணர்ந்து மனைவியிடம் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

ஹாஸ்பிடலில் இருந்த செந்தமிழுக்கு காயங்கள் கொஞ்சம் குணமாகியிருக்க, “நீ போய் கொஞ்ச நாள் ரேவதி வீட்ல இரு. நான் உனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்துட்டு உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன். நீ அங்க போயாச்சும் சந்தோஷமா இருக்கணும். என்னை நம்பு” என்று, அவளுடைய அப்பா ஹாஸ்பிடலில் இருந்து அழைத்துச் சென்று, அவளை ரேவதி வீட்டில் விட்டு வந்தார்.

பகலெல்லாம் பாத்ரூமிற்குக் கூட செல்ல முடியாமல் அங்கிருக்கும் காயங்களில் இருந்த வலி ஒருபுறம், இரவெல்லாம் அவன் வன்மையாய் தீண்டியது நினைவில் வந்து பயம் மறுபுறம் என்று செந்தமிழின் நாட்கள் கொடூரமாக தான் நகர்ந்து கொண்டிருந்தன.

தினமும் ரேவதி அவர்களுக்கு சமைத்து வைத்து வேலைக்குச் சென்றிட, செந்தமிழும் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டு வேலைகள் செய்ய, ரேவதி அம்மாவை கவனித்துக் கொள்ள ஆரம்பித்தாள். ரேவதியும் அப்போது தான் அவளுடைய அப்பா தந்த கொடிய வலியில் இருந்து மீண்டு வந்திருந்தாள்.

“சரவணன் அண்ணன் ஊர்ல இருந்து வந்ததும் அவர் கிட்ட சொல்லி, உன் சித்தியை, அவங்க அண்ணனை ஏதாவது பண்ண சொல்லலாமா?” ரேவதி கேட்க செந்தமிழ் மறுத்து விட்டாள்.

சில நாட்களில் இரவுகளில் செந்தமிழ் அன்று அவன் தீண்டிய போது கத்த முடியாமல், தன்னை பாதுகாத்து கொள்ள முடியாமல் இருந்த அழுத்தத்தை உணர்ந்து, அவளுக்கு மீண்டும் அதே மாதிரி நடப்பது போல் பயந்து, “காப்பாத்துங்க.. காப்பாத்துங்க..” என்று தூக்கத்தில் கதற ஆரம்பித்தாள். ரேவதி தான் அப்போதெல்லாம் அவளுக்கு எழுப்பி தண்ணீர் தந்து தைரியம் சொல்லி அவளைத் தேற்றினாள்.

ரேவதிக்கும் இப்படி தான் நடந்தது. லாட்ஜில் அந்த கொடிய மிருகம் அவள் உடலில் எங்கெங்கோ தொட்டிருக்க, ரேவதியும் அவளுக்கு நடந்த கொடுமையான நிகழ்வுக்கு பிறகு, யாரோ இரவில் அவளை அதே மாதிரி தொடுவது போல நினைவு வந்து கதறி அழுதாள். அப்போதெல்லாம் அவளுக்கு ஆதரவாக இருந்தது தீபா தான்.

இப்போதும் எப்போதாவது ரேவதிக்கும் இரவில் அந்த நினைவுகள் வர, அவள் கதறும் போது செந்தமிழ் அவளுக்கு ஆறுதல் தந்தாள். இப்படியே நாட்கள் கடந்து செல்ல… அப்போது தான் ரேவதியும் செந்தமிழும், இனியனையும் இளமாறனையும் ஹாஸ்பிடலில் முதல்முறை பார்த்தார்கள்.

‘தன்னைப் போல் இனியனுக்கும் யாரும் இல்லையே, அவனுக்கு நான் இருக்கிறேன்’ என்று ரேவதி நினைக்க,

இனியனை அடித்த அண்ணன் மாமனாரை இளமாறன் அடித்ததை பார்த்து, ‘இனியனுக்கு ஒண்ணுனா நான் தான்டா கேட்பேன் என்று இளமாறன் சொன்ன மாதிரி, செந்தமிழுக்கு ஒண்ணுனா நான் தான்டா கேட்பேன் என்று இளமாறன் சொன்னால் எப்படி இருக்கும். தன்னை காயப்படுத்தியவனை இளமாறன் அடித்தால் எப்படி இருக்கும்’ என்றெல்லாம் கற்பனையில் நினைத்து பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டாள் செந்தமிழ்.

கற்பனை மட்டுமே.. நிஜத்தில் அப்படி நடக்க வேண்டும் என அவள் நினைக்கவில்லை. ‘சினிமாக்களில் தவறுகளை எதிர்த்து கேட்கும் ஹீரோக்களை பார்த்தால், அந்த ஹீரோ மாதிரி யாராவது நம்மையும் காப்பாற்றுவார்கள்’ என்று நினைத்துக் கொள்வதை போலத்தான் இதுவும்.

எப்படியோ ஆண்கள் இருவரின் நினைவில் பெண்கள் இருவரும் தங்கள் கடந்த கால வலிகளை, காயங்களை, வேதனைகளை, அழுத்தங்களை எல்லாம் மறந்து போயிருந்தனர்.

இதனால் தான், இளமாறன் முதல் முறை செந்தமிழுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் தரும் போது அவளுக்கு அந்த பழைய சம்பவம் நினைவுக்கு வந்து அவள் அழுதாள், கஷ்டப்பட்டாள். அவளுக்கு காய்ச்சல் வந்தது. கணவன் தான் என்றாலும் காதலை தராமல், அவனுக்கு பிடிக்காமல், கோபத்தோடு அவளை முத்தமிட்டதால் வேதனையில் துடித்தாள்.

‘இளமாறன் தன்னைப் பாதுகாப்பான்’ என அவள் நினைத்திருக்க, அன்று அவளைத் தவறாகப் புரிந்துகொண்டு “குழந்தை தான தருகிறேன்..” என இளமாறன் கோபமாக செந்தமிழை நெருங்கிட, அவள் மொத்தமாய் உடைந்து போனாள். ஒருவேளை பொறுமையாக அவன் கேட்டிருந்தால் அவனுக்கு அவள் மேல் காதல் இல்லையென்றாலும் கூட, அவள் சம்மதம் சொல்லியிருப்பாள்.

இளமாறன் வார்த்தைகளால் அவளை வதைத்து, சில சமயம் அவளிடம் அத்துமீறி அவள் பழைய வலிகளை எல்லாம் மீண்டும் அவளுக்கு ஞாபகப்படுத்தி இன்னும் சில புதிய வலிகளை சேர்த்தே தந்து விட்டான். அதைச் செந்தமிழால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

‘அப்போ செந்தமிழ் மட்டும் அவனுக்குத் தெரியாமல் மருந்து தந்தது தவறில்லையா?’ என்று கேட்டால் அதுவும் தவறு தான். ஆனால் அவளுக்கு ‘புனிதாம்மாக்காக குழந்தை பெற்று தர வேண்டும்’ என்ற ஒரு நியாயமான காரணம் இருந்தது. இளமாறன் அவளிடம் அத்து மீறும் போதெல்லாம் அவனுக்கு என்ன நியாயமான காரணம் இருந்தது.

அவள் மேல் அவனுக்கு இருந்த ஈர்ப்பை காதலை மறைக்க நினைத்து, அதை கோபமாக மாற்றி, அவளுக்கு வேதனையை அல்லவா தந்தான். செந்தமிழ் அவனிடம் காதலை கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவனிடம் இருந்த மிருகத்தனத்தைக் கண்டு தான், சில சமயம் அவனை பார்க்கும் போதெல்லாம் நடுங்கினாள். பயந்தாள்.

செந்தமிழ் பீச்சில் அவள் அப்பா சித்தியோடு அந்த அண்ணன் குடும்பத்தை பார்த்திட, அவள் அப்பாவும் எதுவும் நடக்காதது போல் சித்தியின் அண்ணனிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்திட, அவளுக்கு அதிகமாக வலித்தது.

பெற்றவர்கள் உறவுகள் வேண்டும் என்று தவறானவர்களை மன்னித்து விடுகிறார்கள். ஆனால் அவர்களால் காயம்பட்ட செந்தமிழுக்கு இதை எல்லாம் பார்ப்பது கஷ்டம் தான். அந்த கஷ்டத்தில் தான் அழுதாள், இரவில் தூக்கத்தில் பயந்து நடுங்கினாள்.

செந்தமிழ் மொத்தக் கதைகளையும் கண்ணீரோடு டாக்டரிடம் சொல்லி முடித்தாள். இதை நீங்க உங்க கணவர் கிட்ட சொல்லலாமே என்று டாக்டர் கேட்க, “இல்..ல .. வே..ணாம்…” அவள் பேச தடுமாறினாள்.

“ரிலாக்ஸ் செந்தமிழ் உங்க கணவர் உங்களை சந்தேகப்படுறாரா?”

“இளா என்னை சந்தேகப்படல. ஆனா அவர் கிட்ட இதை சொன்னா, இன்னும் அவன் வேற என்னெல்லாம் என்னை பண்ணியிருப்பானோனு, அவர் நினைப்பாரோ அப்படின்னு எனக்கு பயமா இருக்கு. நானும் அதுக்கு ஒத்துழைச்சிருப்பேனு நினைப்பாரோ அப்படின்னு பயமா இருக்கு. வே…ற ஒரு… த்தன் குழந்…தையை கூட இவ என் குழந்…தை அப்படின்னு சொல்வான்னு சொன்னாரு. அது உண்மைன்னு நினைச்சுடுவாரோ அப்படின்னு ரொம்ப பயமா இருக்கு.

“இதுநாள் வரை அவர் கோபத்துல தெரியாம தான் என்னை திட்டினார். இதெல்லாம் தெரிஞ்ச பிறகு அவர் கோபத்துல தெரியாம ஏதாவது திட்டுனா கூட என்னால தாங்க முடியாது. நான் செத்து போயிடுவேன். எனக்கு தெரியும் நான் அவருக்கு கொஞ்சம் கூட தகுதியானவ இல்ல. என்னால அவருக்கு எந்த சந்தோஷமும் இல்ல, நானும் என் குழந்தையும் செத்து கூட போயிடுறோம்.

“எனக்கு பயமா இருக்கு, எனக்கு யாரும் வேணாம். நான் தப்பு பண்ணிட்டேன், எனக்கு வாழ கூட தகுதி இல்ல. ஆனா என்னோட குழந்தை பாவம். அதை எதுவும் பண்ண மனசே வரல. குழந்தை பிறந்ததும் நான் புனிதாம்மா கிட்ட கொடுத்துட்டு அவங்களை விட்டுட்டு போயிடுவேன். அப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்” இவ்வளவு நாட்களாய் ஆழ் மனதில் புதைத்த ரகசியங்களை எல்லாம் சொல்லி அதிகமாய் ஏங்கி அழுதாள்.

“குழந்தையை அவர்களிடம் விட்டுச் சென்றுவிடுவேன்” என்று செந்தமிழ் இவ்வளவு நாட்களாகச் சொல்லி வந்தது, ‘அவர்களை விட்டுச் செத்து விடுவேன்’ என்ற எண்ணத்தில் தான்.

“ரிலாக்ஸ் செந்தமிழ்.. மரணம் எதுக்கும் தீர்வு இல்ல. இவ்வளவு கஷ்டங்களை கடந்து வந்துட்டீங்க. உங்களால இதை தாண்டி எந்த கஷ்டம் வந்தாலும் அதை சமாளிக்க முடியும். நீங்க எந்த தப்பும் பண்ணல, அப்போ உங்க வீட்ல நடந்த எந்த தவறுக்கும் நீங்க காரணம் இல்ல. அதை மறந்துட்டு உங்க குழந்தையை பத்தி யோசிங்க.

“உங்களுக்கு அன்பான கணவர், மாமியார், குழந்தை எல்லாரும் இருக்காங்க. அவங்களை பத்தி யோசிங்க. உங்களுக்கு ஏதாவது ஆகிட்டா அவங்க மனசு கஷ்டப்படுவாங்க. அதை ஞாபகத்துல வச்சுக்கோங்க” டாக்டர் அவளுக்கு அறிவுரைகள் வழங்கிட, மெதுவாக, “ஹ்ம்ம்..” என்றாள்.

காதலாய் வருவாள் 💞 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. பிறந்த வீட்டினில் அடைந்த வேதனைகளுக்கு வடிகாலாக அமையாமல் இன்னும் வேதனைகளை கொண்டு வந்து சேர்த்துள்ளது புகுந்த இடம்.

    வேதனைகள் மட்டுமே மிச்சம் என்ற சுய கழிவிரக்கம். தனக்கு உண்மையான அன்பு கிடைக்காது, நல்வாழ்வு கிட்டாது என்ற தாழ்வுமனப்பான்மை.

    மனதளவில் மிகவும் அடிபட்டுவிட்டால் தமிழ். சூழ்நிலை சரி ஆனாலும் கூட அதன் நிலையான தன்மை மீது நம்பிக்கை கொள்ள இயலாமல் தவிக்கின்றாள்.

    1. Author

      நடந்த விஷயங்கள் அப்படி. பாவம் செந்தமிழ். தொடர் கருத்துகளுக்கு நன்றி சகி