Loading

அகம்-42

அஞ்சனக் கருப்பை ஆசையாய் அள்ளிப் பூசிக்கொண்டிருந்த, அர்த்த சாம வேளை.
நட்சத்திரக் கூட்டத்தோடு ஒய்யாரமாய் உலாப் போய்க் கொண்டிருந்தாள் நிலாப்பெண்.

 

அதே நேரம், உடலோடு, அணிந்திருந்த உடையும் வியர்வையில் குளித்திருக்க, மூச்சுக் காற்றுக்குத் தவித்து, அதிவேகமாய் ஏறியிறங்கும் மார்போடு, திகில் படிந்த முகத்துடன் எழுந்து படுக்கையில் அமர்ந்தாள் கருவிழி. கையில் வைத்துக் காய்ந்துப் போன மருதாணியின் வாசம் அவள் நாசியை நிமிண்டியது.

 

“மீண்டும் அதே கனவு!” அவளின் செவ்விதழ்கள் நடுக்கத்துடன் உச்சரித்தது. அச்சம் மட்டுமே  அவள் உச்சி முதல் பாதம் வரை ஆக்கிரமிருந்தது.

 

நாளை திருமணம் என்ற நிலையில் மீண்டும் அதே கனவு வருவதை அவளால் சாதாரணமாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை. பயத்தில் முதுகுத் தண்டு சில்லிட்டுப் போக, அவளையும் அறியாமல் உடல் வெளிப்படையாய் நடுங்கியது.

 

மீண்டும் மீண்டும் அதே காட்சிகள், அழகர் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்துக் கிடப்பதும், இவள் தலைவிரி கோலமாய் அமர்ந்திருப்பதும் மீண்டும் மீண்டும் கண்களுக்குள் வந்து போனது. கண்களை இறுக மூடிக் கொண்டு, கண்ணுக்குள் வந்தக் காட்சிகளை விரட்ட முயன்றவளின் கரம், அழுத்தமாய் தன்னை மூடியிருந்தப் போர்வையைப் பற்றியது. கரத்தில் அவள் வைத்திருந்த காய்ந்திருந்த மருதாணியின் மிச்சங்கள், போர்வையில் துகள் துகளாய் சிதறி விழுந்தது. கண்களை மூடினாலும், திறந்தாலும், மீண்டும் மீண்டும் வந்து போன காட்சிகளின் வீரியத்தில், பயத்துடன் எழுந்து நின்றாள் பெண்.

 

“அழகரு!”

 

நடுக்கத்துடன், உச்சரித்தவள், குளியலறையின் அருகிலிருந்த வாஷ் பேசனில் தன் மருதாணிக் கரங்களைக் கழுவினாள். மருதாணி கெட்டியான அடர் சிவப்பில் சிவந்திருந்தது, அழகர் அவள் மீது வைத்திருக்கும் நேசத்தைப் போலவே.! கரத்தினில் சிவந்திருந்த மருதாணியைக் கூடப் பார்க்காது, அழகரின் அறையை நோக்கி ஓடினாள் கருவிழி.

 

“தட்! தட்! தட்!” அர்த்த ராத்திரியில் விடாமல் கதவு தட்டப்படும் ஓசையில், எழுந்து விடி விளக்கைப் போட்டுவிட்டு, அந்நேரத்திலும் சுவாதீனமாய் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டவன், கதவை நோக்கி நகர்ந்தான் அழகர்.

 

“இவளாத்தான் இருக்கும்! ராத்திரியே நேரஞ்செண்டுதேன் படுத்தேன். நிம்மதியா உறங்க விடமாட்டா கிறுக்கச்சி!” வைதபடியே கதவைத் திறந்தவனின் மார்பில் பூப்பந்தாய் மோதினாள் பெண்.

 

“ஏய் என்னத்துக்குடி இந்நேரத்தில் உசுப்புற?” அவன் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் அவளிடமிருந்து வரவே இல்லை. நடுக்கத்துடன் அவனை இறுக அணைத்து, அவனின் பரந்த மார்பில் முகம் புதைத்திருந்தாள். அவளின் வலக்கரம், சரியாக பட்டன் போடப்படாத சட்டையை இறுகப் பற்றியிருந்தது. அவள் அணைத்ததுமே, அவள் கரங்களில் வைத்திருந்த மருதாணியின் வாசம் அவனையும் ஆட்கொண்டது.

 

“என்னடி? என்ன ஆச்சு?” அவளிடம் எதுவோ சரியில்லை, இது விளையாட்டும் இல்லை என உணர்ந்தவனின் குரலில் பதற்றம் தெரிந்தது.

“ஏய் கரு கரு! எதையாச்சும் பார்த்து பயந்துட்டியா?” என அவன் கேட்டதற்கு, அவள் தலை, ஆம் என்றும் இல்லையென்றும் வேகமாய் ஆடியது.

 

“பேய் பிசாசெல்லாம் ஒண்ணும் இல்லை! சின்னக் குழந்தையாடி நீ?” மென்மையாய் அவள் முகம் தாங்கினான் அவன்.

 

“அ.. அ..ழ..க..ரு! ப.. பயமா இருக்கு!” என அவள் சொன்ன மாத்திரத்தில், அவள் கண்களிலிருந்து வழிந்தக் கண்ணீர், அவள் கன்னம் கடந்தது, அவள் முகம் தாங்கியிருந்த, அவன் கரங்களை ஸ்பரிசித்தது.

 

“நான் இருக்கும் போது, உனக்கென்னடி பயம்? இங்கே வா!” தோள் வளைவில் தாங்கியபடியே, அவளை அறைக்குள் அழைத்து வந்தவன், கட்டிலில் அமர வைத்து, விடிவிளக்கின் வெளிச்சத்திலேயே, கண்ணாடி தம்ளரில் நீரை நிரப்பி அவளிடம் நீட்டினான்.

 

“முதலில் தண்ணியைக் குடி! அப்பறம் பொறுமையாய் சொல்லு!” தன்னை அண்ணாந்து பார்த்துக் கொண்டே,  நீரருந்துபவளைப் பார்த்துப் புன்னகையுடன் நின்றான் அழகர்.

 

“நான் எங்கேயும் ஓடிப் போய்ட மாட்டேன் டி! என்னத்துக்கு இந்தப் பார்வை? அதுவும் கண்ணைக் கூட சிமிட்டாமல் பார்க்கிறவ?”

 

“கண்ணை சிமிட்டினால் கூட, நீ காணாமல் போயிருவியோன்னு பயமா இருக்கு அழகரு!” என்ற அவளின் பதிலில் அவன் புருவங்கள் யோசனையாய் இடுங்கியது.

 

“என்னடி உளறிக்கிட்டு திரியுற?”

 

“அந்தக் க.. கனவு.! பயமா இருக்கு அழகரு!” திக்கலும் திணறலுமாய் சொன்னாள் கருவிழி.

 

“என்னக் கனவு டி? அது வெறும் கனவுன்னு நீயே சொல்லிட்டியே? பிறகு என்னடி?”

 

“வெறும் கனவுன்னு கடந்துப் போக முடியலையே.. அதுவும் திரும்பத் திரும்ப அதே கனவு! நிஜம் போலவே.. என் கண்ணு முன்னே நடக்கறது போலவே..!” என்றவள் முதன்முறையாய் தான் கண்ட கனவை அச்சுப் பிசகாமல் அவனிடம் சொன்னாள் கருவிழி.

 

அவள் சொன்ன கனவைக் கேட்டவனின், முகம் யோசனையைத் தத்தெடுத்தது.

 

“நெசமாவே, ஒரே கனவு மறுபடியும், மறுபடியும் வருதா டி?”வார்த்தைகளில் அழுத்தம் தந்தான் அழகர்.

 

‘ஆம்’ எனும் விதமாய் தலையசைத்தவள்,

 

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு அழகரு!” என்றவள் எழுந்து நின்று அவனை நெருங்கி நின்றவள், தன் நுனி விரலில் எம்பி, அவன் நெற்றி மறைத்திருந்த கேசம் ஒதுக்கி, நெற்றியின் இடப்பக்கத்தில், அவன் முடிக்குள் மறைந்திருந்த தழும்பை மென்மையாய் வருடினாள்.

 

“இதைப் போலவே நடந்துருச்சுன்னா?” எனக் கேட்டவளின் குரல் நடுங்கியது. அவனுக்கு அவள் நடுக்கமும், அவள் சொல்ல வரும் செய்தியும் மெல்லப் புரிந்தது. மனதிற்குள் மையமிட்டக் குழப்பத்தை அவளிடம் காட்டிக் கொள்ளப் பிரியப்படாதவன்,

 

“ஏய் லூசு! இது ஏதேச்சையா நடந்தது டி! அதுக்காக எப்போ கனா கண்டாலும் நடக்கணும்ன்னு இருக்கா என்ன? நாளை விடியலில் கல்யாணத்தை வச்சிக்கிட்டு கண்டதையும் யோசிச்சு குழப்பிக்கிட்டு கிடக்காத டி!” அவள் மனதைச் சமாதானப் படுத்தும் முயற்சியைக் கையிலெடுத்தான் அழகர்.

 

“இல்லை அழகரு! உள்ளுக்குள்ளே என்னமோ உறுத்துது! அப்போவும் நான் உன்கிட்டே சொன்னேன். நீ நெத்தியில் இரத்தம் வழிய நின்னது என் கனவில் வந்துச்சு. ரொம்ப சின்ன வயசில் வந்தக் கனவா இருந்ததால், இத்தனை நாள் என் சிந்தையில் அந்தக் கனவு வந்த நெனைப்பே இல்லை. இப்போ திடீர்ன்னு மின்னல் வெட்டின மாதிரி அந்தக் கனவு என் கண்ணுக்குள்ளே வந்துட்டுப் போகுது அழகரு! யாரோ எதுவோ, நாம்மை எச்சரிக்கிறாங்கன்னு தோணுது.!” சில்லிட்டுப் போன தன் கரத்தினை அவன் விரல்களோடு கோர்த்துக் கொண்டாள் பெண்.

 

அவள் விரல்களில் ஓடிய நடுக்கத்தை தன் கரத்தினில் உணர்ந்தான் அழகர்.

 

“ஏய்! இந்தாரு டி! அதெல்லாம் ஒண்ணும் நடக்காது! நீ பயப்படாமல் இரு. அந்தக் கனவு வந்தப்போ நீ ஒன்பதாவது படிச்சிட்டு இருந்த ஞாபகம். அப்போ நான் காலேஜ் முடிச்சுட்டு, தாத்தா கூட சேர்ந்து வேலையைக் கத்துட்டு இருந்த நேரம். நீ கனா கண்டு சொல்லி, கொஞ்சம் மாசம் கழிச்சு தான் எனக்கு அடிபட்டுச்சு. அதுவும் எங்கிருந்தோ வந்த கல்லு பட்டுன்னு நெத்தியில் பட்டுடுச்சு. அதுக்குன்னு நீ கனா கண்டதால் தான் நடந்துச்சுன்னு சொல்றது முட்டாள்தனமா இருக்குடி!”

 

“என் கனவில் வந்த மாதிரியே உனக்கு இடப்பக்கம் தான் அடிபட்டுச்சு. அது ஏன் என் கனவில் வரணும்.? அதுவும் உனக்கு நடக்கறது மட்டும் எனக்கு ஏன் கனவா வருது? எனக்கு பயத்தில் உயிரே போயிரும் போல இருக்கே! எனக்கு நீ வேணும் மாமா! என் ஆயுசுக்கும் வேணும்! நீ இல்லாத உலகத்தில் ஒருநொடி கூட நான் இருக்க மாட்டேன் தெரிஞ்சுக்கோ! இப்போ வந்த கனவு கொடூரமா இருக்கு! கனவில் நீ உ.. உயிரோட இருக்கியான்னு கூட எனக்குத் தெரியலை! கனவில் வர்ர இடம், எதுன்னு கூடத் தெரியலை. என் கண்ணுக்கு சுத்தியும் இருட்டு.. இருட்டு மட்டும் தான் தெரியுது.!”

 

“ஏய் கரு கரு! நீ ரொம்ப பயந்து போயிருக்க, அதனால் தான் உனக்கு ஏடாகூடமாய் எதாவது தோணுது. நிம்மதியாய் தூங்கி எந்திரி எல்லாம் சரியாப் போவும்!”

 

“லூசா அழகரு நீ..? எனக்கு பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கு. நீ கூட சொல்லுவியே கிறுக்கச்சின்னு.. நெசமாவே கிறுக்கச்சியா அலையப் போறேன் பாரு. இது வெறும் கனவுன்னு என்னால் கடக்க முடியலை அழகரு! நீ இல்லாத வாழ்க்கையை யோசிக்கவே ஈரக்குலையெல்லாம் நடுங்குது!” அவன் மார்பில் புதைந்து கதறுபவளை, சமாதானப்படுத்தும் வழி தெரியாது பார்த்திருந்தான் அழகர்.

 

“ம்ப்ச்! என்னடி? என்னத்துக்கு இந்த அழுகை? உன் அழுகை உசுரைக் குடையுது டி! நான் உம் மேல வச்சிருக்கிற நேசம், அம்புட்டு லேசுப்பட்டது இல்லைடி! என் ஆயுசு முழுக்க உன்னோட வாழணும்ன்னு எம் மனசு முழுக்க ஆசை நிறைஞ்சு கிடக்கு! என் ஆசையும், நேசமும் என்னை அம்புட்டு சீக்கிரம் சாக விடாது டி! அப்படி நான் சாகப் போறேன்னு ஒரு நிலை வந்துச்சுன்னா, யோசிக்காமல் என்னோட வந்துருடி!” குரல் தழுதழுக்கச் சொன்னான் அழகர்.

 

அவன் குரலில், சட்டென நிமிர்ந்து, கலங்கியக் கண்களுடன் அவனை அண்ணாந்து நோக்கினாள் கருவிழி.

 

“மாட்டேன்.. குடு குடு கிழவியாகிற வரை நான் உன் கூட வாழணும்! எனக்கு சத்தியம் பண்ணு அழகரு! எந்தச் சூழ்நிலையிலும், அது மரணமா இருந்தாலும், என்னைப் பிரிய மாட்டேன்னு சத்தியம் பண்ணு!” அவன் வன்மையான கரத்தினை, தன் கரத்திலிருந்து பிரித்தெடுத்து, தன் உச்சந்தலை மீது வைத்துக் கொண்டு, அவன் முகம் பார்த்தாள் அவள்.

 

“உன் தலையில் சத்தியம் பண்ண மாட்டேன் டி!” தன் கரத்தினை இழுக்க முயன்றான் அவன்.

 

“எனக்காக! என் நிம்மதிக்காக பண்ணு அழகரு! உன்னை விட்டுப் போக மாட்டேன்டின்னு ஒத்தை வார்த்தை சொல்லு! எனக்காக சொல்லு!” கண்களில் தழும்பிய நீருடன் நின்றவளைப் பார்த்து, ஆயிரம் சுத்தியலால் ஒரே நேரத்தில் தாக்கியதைப் போல் உள்ளம் வலித்தது அவனுக்கு.

 

“என் உசிரு உன்னை விட்டு ஒருநாளும் போவாது டி! இது உம் மேல சத்தியம்!”

 

கை நடுங்கச் சத்தியம் வைத்தவன், இனி விடவே மாட்டேன் என்பதைப் போல் அவளை இழுத்து இறுக்கமாய் அணைத்திருந்தான். தன்னவள் கண்ட கனவு ஒருநாளும் பலித்துவிடவே கூடாதென்று அவன் மனம் விடாமல் வேண்டுதல் வைத்துக் கொண்டே இருந்தது. நொடிக்கு நொடி அவன் அணைப்பின் இறுக்கம் கூடியதே ஒழிய குறையவே இல்லை.

 

விவரம் தெரிந்த நாள் முதலாய், அவளை உயிரில் சுமந்துக் கொண்டு அவன் ஒருபக்கமென்றால், நெடுநாளைய நேசத்தை பாசமென நினைத்துக் கொண்டு, தாமதமாய் தன் மனம் கொண்ட நேசத்தை உணர்ந்தாலும், தன் உயிரை விட மேலாய் அவனை நேசிக்கும் அவளொருபக்கம். சொக்கேசன் செய்த வினை, ஏதுமறியா இளஞ்சிட்டுகளை சுழற்றி அடித்தாலும், அவர்களைப் படைத்த இறைவனும், அவர்கள் கொண்ட நிகரில்லா நேசமும் அவர்களைக் காக்குமோ? என்னவோ? காலம் யாருக்கு என்ன வைத்திருக்கிறதோ?

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
23
+1
3
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. கல்யாண கனவுகளோடு பூரிப்புடன் விடிய வேண்டிய விடியல் இப்படி கலவரம் தாங்கிய படபடப்புடனும் பயத்துடனும் விடிந்திருக்கின்றது விழி மற்றும் அழகருக்கு.

    மனதிற்கு நெருக்கமான அன்பானவர்களுக்கு நேரவிருக்கும் விடயங்கள் சில நேரங்களில் உள்ளுணர்வு மூலமாகவோ கனவுகள் மூலமாகவோ நமக்கு உணர்த்தப்படும்.

    கரு கருவிற்கு முன்னமே இது போன்று கனவு வந்து அது நிஜமாகவும் நடந்தேறியுள்ளது.

    “அப்படி என் உயிர் போகும் நிலை வந்தால் யோசிக்காமல் நீயும் என்னுடன் வந்து விடு” 💫

    அழகர் கரு கரு காதல் நேசம் மிகுந்த ஒன்றாக உள்ளது.

    1. Author

      நெஞ்சார்ந்த நன்றிகள் டா 💙💜