
16
காலை நேரம்.. ரம்மியமான, இதமான குளிரில் துவங்கும் காலைப் பொழுதாக, அன்றையக் காலைப் பொழுது இல்லை.
அத்தனைப் பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தது, அந்த காலை நேரம்.
“வாட் தி ஹெல் இஸ் ஹாப்பனிங் தேர்?” என்று மேலதிகாரி அலைபேசியில் கத்திக் கொண்டிருக்க,
“இதோ வந்துட்டேன் சார்” என்று கருப்பசாமி கூறிக் கொண்டிருந்தான்.
இரவெல்லாம் காட்டில் ரோந்துப் பணி முடித்து, வைகறைப் பொழுதில் வீடு வந்து சேர்ந்திருந்த ராஜசிம்மன், கருப்பசாமியின் பரபரப்பில் துயில் கலைந்து எழ, கருப்பசாமி, தயாராவதும் அலைபேசியில் அழைப்போருக்கு பதில் சொல்வதுமாய் இருந்தான். அந்த அதிகப்படியான பரபரப்பு, அவனுக்கு உச்சக்கட்ட எரிச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அது அவன் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்த போதும், பொறுமையை இழுத்துப் பிடித்தவனாக, அனைவருக்கும் அமைதியாய் பதில் கூறிக் கொண்டிருந்தான்.
ராஜசிம்மனுக்கு அவனது முகம் காட்டிய உணர்வும், அதற்கு முரணாகக் குரல் காட்டும் உணர்வும் ஆச்சரியமாக இருந்தது. அவனளவு தனக்குப் பொறுமை எப்போது வரும்? என்று எப்போதும்போல் நண்பனைக் கண்டு வியந்தவனுக்கு, அழையா விருந்தாளியாய், ‘சிடுமூஞ்சி’ என்ற பட்டைப் பெயரும், பிரம்மவதனியின் முகமும் மனதில் வந்துபோனது.
ஏனென்று காரணம் தெரியாத ஒரு சிரிப்பு அவன் இதழில். பேசிவிட்டுத் திரும்பிய கருப்பசாமி, “ராஜ்” என்று அழைக்க,
தன் சித்தப்பிரமையிலிருந்து சுயம் பெற்றவன், “என்னாச்சு கருப்பு?” என்று கேட்டான்.
“சீக்கிரம் வா. கிளம்பனும்” என்று கருப்பசாமி கூற, ஏன் எதற்கென்ற கேள்வியின்றி கிளம்பி புறப்பட்டு வந்தான்.
அவனோடு தனது ஜீப்பில் புறப்பட்டவன், காட்டுப் பாதைக்குள் வண்டி நுழையவும், “தடைசெய்யப்பட்டக் காட்டுப் பகுதிக்குப் பக்கத்திலிருக்கும் சாலையில் நிறைய பிணங்கள் கிடப்பதாக தகவல் வந்திருக்கு” என்று கூற,
ராஜசிம்மன் அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தான்.
அவன் மனதில் ஏதோ ஒரு படபடப்பானக் குழப்பம். இரவெல்லாம் காட்டில்தானே அலைந்து திரிந்தேன்? தன் பார்வைக்கு ஏதும் சிக்கவில்லையே? என்று யோசித்தான்.
அமைதியானப் பயணம் அவ்விடத்தில் முடிய, அங்கு சாலையில் பாதையை மறைக்கும்படி கிட்டத்தட்ட பத்து பிணங்கள் கிடந்தது. அதில் மூன்று பெண் பிணங்கள், ஏழு ஆண் பிணங்கள். சிலவை காட்டு யானையின் தாக்குதலில் சிக்கியதைப் போலிருந்தது, சிலது புதைகுழிக்குள் மூச்சுத் திணறி இறந்ததன் அடையாளமாய், சேற்றில் மூழ்கியிருந்தது. அவற்றை யாரோ குழிக்குள்ளிருந்து குத்தி, வெளியே எடுத்து இங்குக் கொண்டுவந்து போட்டிருப்பது அதனைப் பார்க்கும்போது புரிந்தது.
“என்னடா இது?” என்று ராஜசிம்மன் கேட்கும் நேரம், அங்கு மற்ற உயர் காவல் அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் வரத் துவங்கினர்.
“என்ன கருப்பு இது?” என்று வனத்துறை அதிகாரி அவனிடம் கேட்க,
“எனக்கும் புரியல சார்..” என்று தடுமாறினான்.
தடயவியல் துறையினரும் அங்குக் கூடி, அவற்றைப் பரிசோதிக்கத் துவங்கிட, பிணங்களின் நாற்றம் குடலைப் பிரட்டத் துவங்கியது. அதுவே அவை இறந்து வெகு நாட்களானவை என்பதை உணர்த்தியது.
நேரம் கடக்கக் கடக்க, மேலதிகாரிகளின் கலந்துரையாடல், பத்திரிக்கையாளர்களைக் கட்டுப்படுத்துவதென்று, பெரும் போராட்டமாக இருந்தது.
தடயவியல் துறையினர் சேகரித்தத் தகவலோடு அவர்களை நெருங்க, ராஜசிம்மன், கருப்பசாமியோடு இன்னும் சில மேலதிகாரிகளும் வந்தனர்.
“இட்ஸ் வெரி ப்ரூட்டல்” என்று பெருமூச்சுவிட்ட, தடையவியல் துறையைச் சேர்ந்த லீஸா, “மொத்தம் பத்துப் பிணம். மூன்று பெண். ஏழு ஆண். ஆண் பிணங்களில் மூன்று மட்டும் யானை அடித்துக் கொல்லப்பட்டதைப் போல இருக்கு. மூன்று பெண் பிணங்களும், மீதி நான்கு ஆண் பிணங்களும் புதைகுழியில் விழுந்து இறந்த பிணங்கள். பட் எல்லாமே மர்டர் தான். எல்லாமே மூன்று மாதங்களுக்குள்ள நடந்த டெத்தா தான் இருக்கும் சார். புதைகுழிக்குள் இருந்ததுல அடிப்போக்ரி (சேற்றில் மூழ்கியிருப்பதால் உருவாகும் அடர்ந்த, பழுப்பு நிறத் தோல்) லேயர் இப்பத்தான் ஃபார்ம் ஆயிருக்கு. அதனால இரண்டுலருந்து மூன்று மாசம் தான் ஆயிருக்கும். மத்த டெஸ்டெல்லாம் லேப்கு எடுத்துட்டுப் போனாத்தான் தெரியும்” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் நேரம், அங்கு ஒரு வாகனம் வந்து நின்றது.
நண்பர்கள் அதைத் திரும்பிப் பார்க்க, உள்ளிருந்து ஒரு வனத்துறை அதிகாரி, சுடரொளிவானன், ப்ரீத்தி, பிரம்மவதனி, சுபிக்ஷா, ராமராஜன் மற்றும் பிரபா வந்திருந்தனர்.
அவ்விடம் வந்து முதன்மை அதிகாரிக்கு வணக்கம் வைத்த அதிகாரி, “சார் தான் இவங்களை அழைச்சுட்டு வரச் சொன்னாங்க சார்” என்று கருப்பிடம் கூற,
மிரட்சியுடன் வந்து நின்ற அனைவரையும் அதிகாரிகளின் பார்வை அளவிட்டது.
அங்கு அப்புறப்படுத்தி வைத்திருந்த மூன்று பெண் சடலங்களிடம் அவர்களை அழைத்துச் செல்ல, ராஜசிம்மன் மற்றும் கருப்பசாமியைப் பணித்த அதிகாரிகள், மற்ற விவரங்களைப் பேச ஒதுங்கிவிட, அவர்கள் முன் இருவரும் வந்து நின்றனர்.
சோர்ந்து போனப் பார்வையோடு, “ஆக எங்க புள்ளைய உசுரோட தரமாட்டோம்னு சொல்ற விதமா, ஒவ்வொரு முறையும் பிணத்தை அடையாளம் பாக்கத்தான் கூப்பிடுவீங்களா சார்?” என்று ராமராஜன் கேட்க,
அவரது முற்றும் உடைந்தத் தோற்றம், அனைவரையுமே அதிகம் பாதித்தது.
“எங்களால முடிஞ்ச அளவு எஃபோர்ட் போடுறோம் சார்.. நம்பிக்கையோட இருங்க” என்று கருப்பசாமி கூற,
“வந்துப் பாருங்க” என்று ராஜசிம்மன் அழைத்தான்.
கண்கள் சிவந்து, கண்ணீர் தேங்கி நின்ற நிலையில், அவனை முறைத்துப் பார்த்தாள் பிரம்மவதனி.
“நீங்க சொல்றதை வச்சுத்தான் சார் நாங்க அடுத்தடுத்து வேலையைத் துரிதமா துவங்க முடியும். காணாமல் போனவங்களைப் போல இனி யாரும் காணாமப் போகக் கூடாதுனு நினைக்குறோம். கோ-ஆப்ரேட் வித் அஸ்” என்று பொறுமையாகக் கூற முயன்றும், கொஞ்சம் காட்டமாகத்தான் ராஜசிம்மனின் வார்த்தைகள் வந்து விழுந்தது.
“சார்.. அவன் அவன் வீட்ல விழுந்தா தான் அது எழவு.. இல்லைனு சொல்லலை.. எம்பதி காட்ட முடியாட்டியும் கொஞ்சம் சிம்பதியாவது காட்டுங்க. உயிரைத் தொலைச்சுட்டு நிக்குறது நாங்கதான். நீங்க இல்ல.. எங்க வலியை உதாசீனப்படுத்தாதீங்க” என்று பிரம்மா கத்தி சண்டையிடும் குரலில் கூற,
“பிரம்மா..” என்று பிரபா அவளைத் தடுக்க முயன்றார்.
“என்னம்மா? என்னவாம்? அவருக்கு உணர்ச்சிகள் இல்லைனா அதுபோலத்தான் எல்லாருக்கும் இருக்குமா?” என்று பிரம்மா கத்த,
‘உணர்ச்சிகள் இல்லைனா’ என்ற வார்த்தையில் அதிகம் தூண்டப்பட்டவனாய், “ஸ்டாப் டேமிட்” என்று கத்தினான்.
அதில் சுற்றியிருந்தோர் சிலரும் அவர்களைத் திரும்பிப் பார்க்க,
“ராஜ்.. மீடியா இருக்காங்க.. ப்ளீஸ் மெயின்டெயின் யுவர் பேஷன்ஸ்” என்று அவனிடம் கருப்பசாமி பொறுமையாய்க் கூறினான்.
பிரம்மவதனிக்கு உச்சக்கட்டக் கோபத்தைக் கொடுத்தது, அவனது கோபம்.
“சாரி.. ப்ளீஸ் வாங்க..” என்று கருப்பசாமி அழைக்க,
அவர்கள் அவ்விடம் நோக்கி நகர்ந்தனர்.
புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்டு, சேற்றில் ஊறி, நிறம் மாறிக் கிடந்த மூன்று உடல்கள்.. பார்த்தவுடன், அனைவருக்கும் அத்தனை வருத்தத்தைக் கொடுத்தது. தங்கள் வீட்டுப் பிள்ளைக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்குமோ? என்பதை யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
அந்த மூன்றிலும் தங்கள் வீட்டுப் பெண் இல்லை என்பதை உறுதி செய்த பிறகும் கூட, அவர்களுக்கு ஆசுவாசம் இல்லை.
“அய்யோ.. எம்பொண்ணு எங்க எப்படியிருக்காளோ தெரியலையே” என்று ராமராஜன் வெடித்து அழ, சுடர் அவரைத் தாங்கிக் கொண்டு, மௌனமாய்க் கண்ணீர் வடித்தான்.
இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்ட ப்ரீத்திக்கு, அந்த சூழலும், வாடையும் என்னவோ செய்ய, தலை கிறுகிறுத்து மயங்கி சரிந்தாள்.
“ஹே..” என்று கருப்பசாமி அவளைத் தாங்க,
“ப்ரீத்தி” என்று சுபிக்ஷாவும் அவளைப் பதறித் தாங்கினாள்.
“அய்யோ ப்ரீத்தி” என்று பிரபா மகளிடம் பதறிவர,
ராஜசிம்மன் இவற்றைக் கண்டு நிலை புரிந்துகொண்டவனாய், மருத்துவர்களை அழைத்து அவளைத் தூக்கிச் சென்று சிகிச்சைத் தரப் பணித்தான்.
பிரபாவும் சுபிக்ஷாவும், அவர்களோடு செல்ல, கருப்பசாமி அவர்களுக்குத் துணையாய் நின்றான்.
“அய்யோ எம்பொண்ணுக்கு என்னாச்சு?” என்று பிரபா பதற,
“ஒன்னுமில்ல பயப்படாதீங்க.. சிசுவேஷனைப் பார்த்துப் பேனிக் ஆயிருப்பாங்க” என்று கருப்பசாமி கூறினான்.
“இதுக்குத்தான் இதெல்லாம் வேணாம் வாடினு அடிச்சுக்கிட்டேன்.. பொண்ணு மாதிரி பாத்துக்கிட்டவளைத் தொலைச்சதையே என்னாலத் தாளமுடியல.. இதுல எம்பொண்ணயும் இழந்துடுவேனோனு பயமாருக்கே” என்று பிரபா கதற,
சுபிக்ஷாவிற்கு என்ன பதில் கூறுவதென்றே புரியாமல் போனது. யாருக்காக பார்ப்பது? அனைவருக்கும் அவரவர் உயிர் பெரிது தானே?
கதறியபடி மனம் தாளாமல் ஓரமாய்க் கல் ஒன்றில் அவள் அமர்ந்துவிட, மனம் அத்தனை பலவீனமானதைப் போல் உணர்ந்தாள்.
அங்கே ராஜசிம்மனிடம், சுடர் அதில் யாரும் விஷ்ணு இல்லையென்று உறுதி கூற, அவற்றைக் குறித்துக் கொண்டு, அவர்களது உடல்மொழிகளையும் கருத்தில் கொண்டவனாய் ஆராய்ந்தபடி தன் விசாரணையைத் தொடர்ந்தான்.
“எம்புள்ளைய கண்டுபிடிச்சுத்தாங்க சார்.. அவளுக்காகத்தான் இந்த உயிரையே வச்சுருந்தேன்.. பொண்டாட்டியை இழந்து, ஒரு புள்ளையை இழந்து, இப்ப இன்னொரு பொண்ணையும் இழந்து நிக்குறேன்.. அய்யோ” என்று அவர் வெடித்து அழ,
கல் போல் நின்றுகொண்டு, “கண்டுபிடிக்க முயற்சி எடுக்கிறோம். மற்றதெல்லாம் விதியின் கையில்..” என்று ராஜ் சிம்மன் கூறினான்.
“என்னய்யா இப்பாடி சொல்றீங்க?” என்று கதறலாய் அவர் கேட்க,
“பொய்யான உறுதி கொடுக்க என்னால முடியாது சார். என் முழு முயற்சியைப் போட்டு உங்க பெண்ணை ஒப்படைக்க முயற்சிக்குறேன்” என்றான்.
என்ன முயன்றும் அவனால் இளகலான வார்த்தைகளை உபயோகிக்க இயலவில்லை.
வேதனையில் கதறும் பெரியவரை அதற்குமேல் அங்கு பிடித்துவைக்க இயலாது, சுடரொளிவானன், அழைத்துச் செல்ல, அங்கு ப்ரீத்தியும் கண் விழித்து, அன்னையை அணைத்துக் கொண்டு, கதறிக் கொண்டிருந்தாள்.
கல்லில் அமர்ந்து, கரங்களில் தலையைத் தாங்கிக் கொண்டிருந்த சுபிக்ஷாவிடம் வந்த கருப்பசாமி, “சுபி..” என்க,
கண்ணீரோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ப்ளீஸ்.. அவளைக் கண்டுபிடிச்சுக் குடுத்துடுங்க.. முதல் முறை அவளைத் தொலைச்சப்பவும், இரண்டாம் முறை அவ தொலைஞ்சப்பவும், நீங்கதான் அவளை எங்களுக்குக் கண்டுபிடிச்சுத் தந்தீங்க.. இந்த ஒருமுறையும் மீட்டுக் குடுத்துடுங்க சார்.. கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துக்குறோம்” என்று வெடித்து அழுதாள்.
அவள் தோளில் ஆறுதலாய்க் கரமிட்ட கருப்பசாமி, “நம்பிக்கையோட இரு சுபி. கண்டிப்பா கண்டுபிடிச்சுடலாம். இந்தக் காட்டில் எனக்குத் தெரிஞ்சு, பகலிலும் இரவிலும் இந்தப் பகுதிக்கு வந்து உயிரோட திரும்பினது விஷ்ணுதான். அவ சாகனும்னு இருந்தா தேட வழியில்லாமக் கிடந்த முதலிரண்டு முறையுமே இறந்து போயிருக்கனும். நமக்குக் கிடைச்சாதானே? இந்த முறை இத்தனைப் பேரோட தேடலை மீறியா அவளுக்கு ஏதாவது ஆகப்போகுது? கண்டிப்பா கிடைச்சிடுவா. நீ நம்பிக்கையோடு இரு. நான் இருக்கேன்” என்று தன்னாலான ஆறுதலைக் கூற,
கண்ணீரோடு அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு, அது சொல்ல முடியாத ஆறுதலைக் கொடுத்தது.
அங்கு முற்றுமாய், கண்களின் வெள்ளைநிறப் பகுதிக்கு, சிவப்புச் சாயம் தீட்டியதைப் போலிருந்தது, பிரம்மவதனியின் விழிகள். “சத்தியமா தெரியாமத்தான் கேட்குறேன்.. நீங்க மனுஷன்தானா?” என்று கோபத்தின் உச்சக்கட்டத்தில் அவள் கேட்க,
“அதுல உனக்கெதும் சந்தேகமா?” என்றான்.
“ஆமா.. மனுஷனா பொறந்தா, கொஞ்சமாவது உணர்ச்சிகள் வேணும். மிருகத்துக்குக் கூட இருக்கும். உங்களுக்கு இல்லைனா, அப்ப அந்த சந்தேகம் வரும் தானே? உணர்ச்சிங்குறதை எங்கேயும் விலைக்கு வித்துட்டு வந்துட்டீங்களா?” என்று அவள் உக்கிரமாய்க் கேட்க,
“கத்துறதால எதுவும் நடக்காது.. பிராக்டிகலா யோசி” என்றான்.
“எஸ்.. நீங்க எங்கக்கிட்ட ஆறுதல் சொல்றதால பிராக்டிகலா எதுவுமே நடக்காது. ஆனா எமோஷனலா ஒரு ஸ்டிரெந்த் கிடைக்கும். ஆறுதல் வேணாம், உதாசீனப்படுத்தாம இருக்கலாம் தானே? ஜடமாய்யா நீ? ஆங்?” என்று அவள் கத்த,
அவள் சப்தத்தில் அனைவருமே திரும்பிவிட்டனர்.
அவள் வார்த்தைகளில் மனமும் முகமும் இறுகிப் போய் கரங்களைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான், ராஜசிம்மன்.
அவள் வார்த்தைகளில் பதறிப்போய் அங்குவந்த கருப்பசாமி, “பிரம்மா..” என்க,
“இந்தாளைப் பார்த்தாலே பத்திக்கிட்டு வருது சார் எனக்கு.. கண்டுபிடிக்குற மனசில்லைனா போகச் சொல்லுங்க. எங்க எமோஷன்ஸோட விளையாடிட்டு இருக்காரு. ஜடம் போல எதையும் காட்டிக்காம அவரால இருக்க முடியும்னா ஓகே ஃபைன் இருக்கட்டும்.. மத்தவங்க எமோஷன்ஸ ஏன் ப்ளேம் பண்ணனும்? உங்க வீட்ல யாராவது சாகக் கிடக்கும்போதோ, இல்லாமப் போகும்போதும் கூட இப்படித்தான் கல்லுபோல நின்னு எல்லாம் விதிவசம்னு சொல்வீங்களா சார்? காவலதிகாரியில்ல, முதல்ல மனுஷனா இருக்கப் பாருங்க.. பிறகு வழிநடத்தலாம்” என்று அதீத கோபத்துடன் கத்திவிட்டுத், தன் கண்ணீர் துடைத்தவள் விறுவிறுவென்று நடந்து சென்றாள்.
பிரபா அவளைச் சப்தம் போட, அவரிடமும் ஏதோ கத்திவிட்டு அவள் வண்டியில் ஏறுவதைக் கண்டனர்.
அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த கருப்பசாமியின் பார்வை சுபிக்ஷா பக்கம் செல்ல, ‘சாரி’ என்று கண்ணீரோடு இதழசைத்துச் சென்றாள்.
கண்கள் மூடித் திறந்து பெருமூச்சு விட்டவன், நண்பனை நோக்க, பல வருடங்களாக அவனிடம் இல்லாத கண்ணீர், அவன் கண்களில் மின்னியது.
“ராஜ்?!” என்று கருப்பசாமி அதிர்வாய் அழைக்க,
அவன் இதழில் மெல்லிய, மிக மெல்லியக் கோணல் புன்னகை.
அவனது வலது கண்ணிலிருந்து, கோடாய் ஒரு துளிக் கண்ணீர் குதித்து ஓட, “டேய்.. ராஜ்..” என்று கருப்பசாமி அழைத்தான்.
நொடியில் அதைத் துடைத்துக் கொண்டவன், “ஃபாரென்ஸிக் ரிப்போர்ட்டோட வா. நான் கிளம்புறேன்” என்று கூறி கருப்பனின் வண்டியில் புறப்பட்டுச் செல்ல, கருப்பசாமி வருத்தமும் குழப்பமுமாய் நின்றிருந்தான்.

