அத்தை பெத்த பூங்குயிலே நிறைவு

Loading

அத்தியாயம் – 41

 

அண்ணி அண்ணா கிளம்பியாச்சா லேட் ஆச்சு அம்மா திட்டுறாங்க இன்னும் என்ன பண்ணிட்டு இருக்கிங்க ரெண்டு பேரும்” என கேட்டுக் கொண்டு இல்லை இல்லை கத்திக் கொண்டு வந்தது சாட்சாத் நம் சந்துவே தான்.

 

“நான் ரெடி ஆய்ட்டேன் சந்து உன் அண்ணி தான் புடவை கட்டத் தெரியாம அப்படியே சுத்திக்கிட்டு காமெடி பண்ணிகிட்டு இருக்கா நான் கட்டி விடுறேன்னு சொன்னாலும் என்னையும் வெளிய தொறத்தி விட்டுட்டா ..அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன் நீயே சொல்லு சந்து” என ஹரி அவன் அறையின் வாயிலில் நின்று வம்பு பண்ண,

 

உள்ளே இருந்த ஸ்ரீக்கு மானம் போனது ,’இவன் அலும்புக்கு ஒரு அளவில்லாம போய்கிட்டு இருக்கு தங்கச்சி கிட்ட பேசுற பேச்சைப் பாரு’ என திட்டிக் கொண்டே அந்த சேலையை போட்டு பாடாய் படுத்திக் கொண்டிருந்தாள்.

 

வெளியில் இருந்த சந்துவும் ,”அண்ணா எப்போ பாரு விளையாட்டா, தள்ளுங்க ஆயிரெத்தெட்டு வேலை கெடக்கு, பாட்டி வேற என்னை படுத்தி எடுக்குறாங்க, ஷப்பா உங்களுக்கே எனக்கு இப்படி கண்ணை கட்டுதே அடுத்து கார்த்திக் அண்ணா என்னென்ன என்னை வச்சு செய்யப் போறாங்களோ” என புலம்பிக் கொண்டே ஸ்ரீக்கு உதவி செய்ய உள்ளே சென்றாள்.

 

சந்துவின் இந்த புதிய வெர்ஷனை அவளின் தமையன் மனம் நிறைந்த புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

ஆம் சந்து இப்போது குணமாகியிருந்தாள். ஆனால் வேறு மாதிரி , அவளிற்கு பழைய நினைவுகள் எதுவும் நியாபகம் வரவில்லை, ஆனால் இந்த புது வாழ்க்கைக்கு பழகியிருந்தாள்.

 

சுருக்கமாக சொன்னால் புதிதாய் பிறந்திருந்தாள். வீட்டினரின் அன்பும், ஸ்ரீயின் பாசமும், முக்கியமாக சித்துவின் அக்கறை கலந்த காதலும் சில மாதங்களிலே அவளை மாற்றியிருந்தது.

 

போன முறை போல் இல்லாமல் இந்த முறை அவளை மிகவும் தைரியமான, கலகலப்பான பெண்ணாக வளர்த்தனர்.

 

அதன் பலனாகத் தான் இப்போது ஸ்ரீ , வர்ஷூவையே மிஞ்சும் அளவிற்கு வாயாடியாக வந்திருந்தாள்.

 

அவளிற்கு குணமானதற்கு குலசாமிக்கு பொங்கல் வைக்கிறேன் என பாட்டி வேண்டியிருந்ததால் இப்போது அதை நிறைவேற்ற மொத்த வானரப்படையும் பாட்டி வீட்டில் குழுமியிருந்தது.

 

கல்லூரி முடிந்திருந்தாலும் பஞ்ச பாண்டவிகளின் நட்பு இன்னும் அதே ஆழத்துடனும் குறும்புடனும் தொடர்ந்து கொண்டிருந்தது.

 

அதனால் அந்த கொரில்லா படையும் இப்போது இங்கே குழுமியிருக்க , தினமும் ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.

 

ஸ்ரீயின் அறைக்குள் நுழைந்த சந்து அவள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்து அதிர்ந்து விட்டாள், பாதி சேலையை தலை மேல் போட்டுக் கொண்டு உடலில் பாதியைச் சுற்றிக் கொண்டு இன்னொரு சுற்று சுற்ற முயற்சித்தவள் ஒரு காலை அதற்குள் விட்டு இன்னொன்றை வெளியே விட்டு எப்படி அதிலிருந்து வெளியேற எனத் தெரியாமல் பாவமாக முழித்துக் கொண்டிருக்க,சந்து பக்கென்று சிரித்து விட்டாள்.

 

“என்ன கோலம் இது அண்ணி ஹாஹாஹா” என அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க,

 

அவளை முறைக்க முயன்று தோற்றுப்போன ஸ்ரீ ,”ச்சு சிரிச்சது போதும் சந்து வந்து இந்த மேஸ்(maze)ல இருந்து எப்படி வெளிய வரதுன்னு சொல்லு, எப்படி இதெல்லாம் கட்டுறாங்க இந்தபாட்டி வேற இதைத்தான் கட்டனும்னு உயிரை வாங்குது ” என ஸ்ரீ அலுத்துக் கொண்டாள்.

 

அவள் அருகில் வந்த சந்து அந்த புடவையை கழட்டி முதலில் அவள் குப்பைக்காடாய் கசக்கி வைத்திருந்ததை அயர்ன் செய்தவள் , பின் ஐந்தே நிமிடங்களில் அழகாக அவளுக்கு கட்டிவிட்டிருந்தாள்.

 

அந்த மெருன் கலர் அவள் நிறத்திற்கு எடுப்பாக இருக்க, அவளை மேலிருந்து கீழாக இரசித்தவள் ,”அண்ணா இன்னைக்கு அவுட் தான்” என்று கிண்டல் செய்தவள், ஸ்ரீ அதை இரசித்தாலும் வெளியே சிணுங்குவதைப் போல் நடிப்பதை மேலும் கிடல் செய்துகொண்டே அவளுக்கு தலை வாரி பூ வைத்து நகைகளலெல்லாம் போட்டு விட்டவள், கண்ணாடியில் தெரிந்த அவள் பிம்பத்தைப் பார்த்து திருப்தியாக புன்னகைத்தாள்.

 

“ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணி ” என அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தம் வைக்க, ” இன்னுமா கிளம்புறீங்க” என அங்கே வந்த ஹரி இவர்களின் கோலத்தைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டான்.

 

“கர்மம் கர்மம் நான் பண்ண வேண்டியதெல்லாம் என் தங்கச்சி பண்றா, அதுவும் ஈஈஈன்னு இழிச்சுட்டு உட்கார்ந்திருக்கு” என அவன் சப்தமாகவே புலம்ப,

 

அவன் ஒருவன் அங்கிருக்கிறான் என்றே கண்டுகொள்ளாதவர்கள் தங்களுக்குள் பேசிச் சிரித்தனர்.

 

ஹரியும் ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் ஹரிஷ் கிருஷ்ணா’ என்பது போல் அவர்களின் அன்பை மெல்லிய புன்னகையுடன் இரசித்துக் கொண்டிருந்தான்.

 

 

 

“சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க” என அங்கு புடவை கட்டி ரெடியாகிக் கொண்டிருந்த மனைவியை கண்களால் பருகிக் கொண்டே பாட்டுப் பாடிக் கொண்டிருந்தான் கார்த்திக்.

 

அவனை முறைத்த வர்ஷூ , “பக்கி பாடுறதை விட்டுட்டு வந்து இந்த மடிப்பை சரி பண்ணு டா வரவே மாட்டேங்குது ..இதைக் கட்டிக்கிட்டு இன்னைக்கு ஃபுல்லா எப்படி ஓட்டப் போறேனோ??” என அவள் புலம்பினாள்.

 

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என அவன் மனசாட்சி துள்ளிக் குதிக்க வேகமாக அவள் அருகில் வந்தவன் மடிப்பை சரி செய்கிறேன் பேர்வழி அவள் பாதத்தை தடவிக் கொண்டிருக்க,

 

“நல்லா தீர்க்க சுமங்கலியா இரு.. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க,” என அவனை வாழ்த்துவது போல் வர்ஷூ இருகைகளையும் தூக்கி ஆசி வழங்க, முதலில் குழம்பியவன் பின்பே அவள் தன்னைக் கிண்டல் செய்கிறாள் என்றுணர்ந்து ,” ஹாஹா இங்க ஒன்னுக்கே வழி இல்லை இதுல பதினாறுக்கு நான் எங்க போக, அம்மா மகமாயி என் பொண்டாட்டி என்னையே சுத்தி சுத்தி வரதுக்கு ஏதாவது ஐடியா குடுங்க” என அவளிடமே அவளை மடக்க ஐடியா கேட்டான் நம் ஐடியா மணி.

 

“நீ அப்போ வேப்பமரம் இல்லை அரசமரம் ஆய்ரு , உன் பொண்டாட்டி என்ன ஊர்ல இருக்க எல்லாரு பொண்டாட்டிகளும் உன்னையே சுத்தி சுத்தி வருவாங்க மகனே” என மீண்டும் அவள் கிண்டல் செய்ய,

 

மடிப்பை ஓரளவிற்கு சரி செய்து முடித்தவன் ,”அடிங்க் என்ன லொல்லா சீரியசா கேக்குறேன் டி அதான் நம்ம ரெண்டு பேருக்கும் லவ்ஸ் ஆய்ருச்சுல, இன்னும் ஏன் டி எனக்கு கன்னி கழிக்காமையே வச்சுருக்க .. இந்த பாவம் உன்னை சும்மா விடாது பார்த்துக்கோ அப்பறம் அடுத்த ஜென்மத்துல அந்த காளிதாசன் தான் புருஷனா வருவான்” என கார்த்திக் சீரியசாக ஆரம்பித்து எப்போதும் போல் கிண்டலில் முடித்தான்.

 

அவன் கீழே அமர்ந்திருந்ததால் அவன் முதுகிலே ஓங்கி ஒரு அடி போட்டவள் ,”இன்னும் ஸ்ரீக்கே அது நடக்கலை, அதுக்குள்ள நம்ம எப்படி , அப்பறம் நம்ம குழந்தை பெரியம்மா பசங்களை தம்பின்னு கூப்பிடும் அது நல்லா இருக்காதுல்ல அதுனால வெய்ட் பண்ணு” என அறிவுப்பூர்வமாக அவள் யோசித்ததைக் கூற,

 

அதைக் கண்டு நொந்து போன கார்த்திக் ,” அடியே உன்னோட தொலைநோக்குப் பார்வையைக் கண்டு புல்லரிச்சுப் போச்சு போ.. ஆமா அவங்களுக்கு அது நடக்கலைன்னு உனக்கு யாரு சொன்னா இதெல்லாமா பேசிக்குவீங்க அடிக் கள்ளி அப்போ மாமனைப் பத்தியும் என் அத்தை பெத்த ரத்தினத்துக்கிட்ட சொல்லிகிட்டு இருக்கியா?? ” என சுவாரசியமாக வினவ,

 

முகத்தை சுழித்த வர்ஷூ ,”கர்மம் கர்மம் , புத்தி எங்க போகுது பாரு.. இதெல்லாமா போய் சொல்லுவாங்க..எல்லாம் நானே கண்டுபிடிச்சது தான்” என அவள் இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு பெருமை பீத்திக்கொள்ள,

 

அவளை சந்தேகமாக பார்த்த கார்த்திக் ,”எப்படி கண்டுபிடிச்சன்னு எங்களுக்கும் கொஞ்சம் சொல்றது.. நாங்களும் அறிவை வளர்த்துகுவோம்ல ” என போட்டு வாங்க,

 

அந்த லூசும் அவன் தன்னை பாராட்டப் போகிறான் என்று நினைத்து பெருமையாக ,” ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சா என்னாகும் ஸ்ரீ வெளிய வரப்போ குங்குமம் கலைஞ்சு, பூவெல்லாம் உதிர்ந்து வெட்கப்பட்டுக்கிட்டே தான வெளிய வருவாங்க ஆனா ஸ்ரீ டெய்லி பல்லு விளக்காத பிச்சைக்காரி மாதிரி தான வெளிய வரா அதான் எப்படி என்னோட அறிவு” என அவள் புருவத்தை உயர்த்திக் கேட்க,

 

கொலைவெறியுடன் அவளை பார்த்திருந்த கார்த்திக் அவள் மூக்கை பிடித்து ஆட்டிக்கொண்டே ,”மூக்கு புடைப்பா இருந்தா இப்படித் தான் யோசிக்கத் தோணும்” என்று கடுப்புடன் கூறியவன் அவல் மண்டையில் ஒரு கொட்டு வைத்து ,” நீ அவ அப்படி வருவான்னு பார்த்துட்டு இருந்தா பல்லு போன பின்னாடி கூட நமக்கு ஃபர்ஸ்ட் நைட் நடக்காது ..பக்கி பக்கி எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு பாரு .. அவ என்ன ராதிகா வா அப்படியே ஒரு ரூபாய் காயின் அளவு குங்குமம் வச்சுட்டு போய் “அத்தான் பொத்தான்னு” ஹரியை கொஞ்ச, அவ எந்த காலத்துல டி குங்குமமும் பூவும் வச்சா பைத்தியம் பைத்தியம் , நல்லா வந்துரும் என் வாய்ல” என்று அவளை திட்டியவன் பின்

“டேய் கார்த்திக் கன்னி பையனாவே காலம் ஓடிரும் போலயே..” என தனக்குத் தானே புலம்பிக் கொண்டான்.

 

அவன் செய்கையைப் பார்த்து பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவள் அவன் எதிர்பாரா சமயம் அவன் கன்னத்தில் நச்சென்று ஒரு இச்சைப் பதித்தவள் , அவன் பிடிப்பதற்கு முன் அறையிலிருந்து ஓடியிருந்தாள்.

 

கதவின் அருகில் போய் நின்றவள் அங்கு அதிர்ந்து தன் கன்னத்தை பிடித்துக் கொண்டு நின்ற தன் கணவனைப் பார்த்து ,”ஓய் இன்னைக்கு நைட் ரெடியா இரு பேஷா கழிப்பை(கன்னி) கழிச்சுடலாம்” என கண்ணடித்துக் கூறியவள் வெட்கத்துடன் ஓடிச் சென்று விட்டாள்.

 

அவன் தன் காதில் கேட்டதை நம்ப முடியாமல் ,” அய்யய்யோ எனக்கு இப்போவே என்னென்னமோ பண்ணுதே பகவானே” என கட்டிலில் உருண்டு புரண்டு கனவு கண்டு கொண்டிருந்தான்…

 

 

 

“ஆரு ஆரு.. ஆருக்குட்டி” என அங்கு பூஜைக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த ஆதிராவின் பின்னாலே சுற்றிக் கொண்டிருந்த விஜயை இலட்சியம் செய்யாமல் அவள் தன் பாட்டில் வேலையில் ஈடுபட்டிருக்க,

 

“அடியே காலையில இருந்து ஒரு மனுஷன் கெஞ்சிகிட்டு இருக்கான் கொஞ்சமாச்சும் கண்டுக்கிறியா இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்” என விஜய் கொஞ்சம் குரல் உயர்த்த,

 

“என்ன வாய்ஸ் ரைஸ் ஆகுது ” என ஆதிரா புருவத்தை உயர்த்த ,”ஹிஹி தொண்டையில கொஞ்சம் ப்ராப்ளம் மா சூப் குடிச்சா சரி ஆய்ரும்” என விஜய் படாரென்று பின்வாங்க,

 

“தொண்டையில் கிச் கிச்சா விக்ஸ் மாத்ரை சாப்டுங்க கிச் கிச்சை போக்குங்க” என்று கிண்டலடித்துக் கொண்டே அங்கு வந்து சேர்ந்தார்கள் மற்ற மூன்று தம்பதிகளும்.

 

‘வந்துட்டானுங்க டா வெளங்காதவனுங்க என் பொண்டாட்டி கிட்ட பேசுனாலே இவனுங்களுக்கு மூக்கு வேர்த்துருமே’ என வாய்க்குள்ளே விஜய் புலம்ப,

 

“என்ன மாப்ளை எங்களை ஏதோ பாராட்டுற மாதிரி இருக்கு ” என ஹரி நக்கலாக கேட்க,

 

அவன் என்ன கூறியிருப்பான் என்று புரிந்த ஆதிரா அவனை முறைத்துக் கொண்டே ,”இவரை விடுங்கண்ணா லூசு மாதிரி ஏதாவது உளறிகிட்டே இருப்பாரு.. நீங்க எல்லாரும் ரெடியா கிளம்பலாமா” என பேச்சை மாற்றினாள்.

 

கார்த்திக் நம்பாமல் ,”ஏண்டா மாப்ளை என்னமோ என் தங்கச்சிகிட்ட காலையில இருந்து கெஞ்சுறதா காத்துவாக்குல காதுல விழுந்துச்சு..என்னான்னு சொன்னா நாங்க ஹெல்ப் பண்ணுவோம்ல” என கூற,

 

‘உங்களை நினைச்சா தான் டா பயமா இருக்கு’ என மனதில் நினைத்துக் கொண்ட விஜய் எதுவும் பேசாமல் சிரித்து வைக்க, கார்த்திக்கா சும்மா விடுவான் ஒருவழியாக ஆதிராவின் வாயில் இருந்து விஷயத்தைக் கரந்தான்.

 

“காலம் போன கடைசில இந்த லூசுக்கு ஆசையை பாருங்கண்ணா ஹனி மூன் போகனுமாம் அதுக்குத்தான் காலையில இருந்து என் உயிரை வாங்குறாரு” என ஆதிரா அவனை முறைக்க,

 

அவனோ ,”அடிப்பாவி கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கூட ஆகலை டி அதுக்குள்ள காலம் போன கடைசின்னு சொல்ற கடவுளே இந்த கொடுமையைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா” என விஜய் புலம்ப,

 

“நான் இருக்கேன் மாப்ளை .. மாப்ளை கேக்குறதுல என்ன தப்பு பாசமலரே எனக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆகப் போகுது இன்னும் நானே போகலை அட்லீஸ்ட் நீங்களாச்சும் போய்ட்டு வாங்க” என கண்ணைத் துடைத்துக் கொண்டு பக்கத்து இலைக்கு பாயசம் கேட்பது போல் கார்த்திக் கூற,

 

வர்ஷூ அவனை வெளிப்படையாகவே முறைத்தாள்.

 

ஹரி ,” என்ன ஆதி மாப்ளை சொல்றதும் சரி தான இதுல என்ன தப்பு இருக்கு ஹனிமூன்லாம் கண்டிப்பா போகணும்” என விஜய்க்கு ஆதரவாக பேச, விஜய்க்கு ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது ,”தேங்க்ஸ் டா மச்சான் என் ஃபீலிங்க்ஸ் உனக்காச்சும் புரிஞ்சுதே ” என அவனைக் கட்டிக்கொள்ள,

 

“இரு மாப்ளை நான் இன்னும் முடிக்கலை.. நம்ம வீட்ல நாலு கல்யாணம் முடிஞ்சிருச்சு ஆனா யாருமே இன்னும் ஹனிமூன் போகலை அதுனால நாம நாலு ஜோடியும் ஒன்னா டார்ஜிலிங்க் போய்ட்டு வரலாம்” என அவன் தலையில் அணுகுண்டை தூக்கிப் போட்டான்.

 

விஜய் அதிர்ந்து நிற்க , மற்ற அனைவரும் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றனர்.

 

ஸ்ரீயோ சும்மா இருக்காமல் ,” என்ன ஹரி நம்ம மட்டும் தானா.. பெரியவங்க இவ்வளவு நாளா நமக்காகவே வாழ்ந்து அவங்க வாழ்க்கையை என்ஜாய் பண்ணாமயே விட்டுட்டாங்க..சோ அவங்க எல்லாரையும் கூட்டிட்டு போனா அவங்க செகன்ட் ஹனிமூன் கொண்டாடட்டும் எப்படி என் ஐடியா” என உற்சாகமாக கேட்க,

 

“நீ என் அறிவுக் குட்டி டி” என ஹரி அவளை கட்டிக் கொண்டான்.

 

“அப்போ அஷ்வின் மட்டும் என்ன பாவம் பண்ணான் அவனையும் கூப்பிட்டும் போவோம் பாவம் என் குட்டி” என சந்து தன் பங்கிற்கு வெடியைக் கொழுத்திப் போட,

 

வர்ஷூ உங்களுக்கு நான் சளைத்தவள் அல்ல என்பது போல், “அஷ்வின் அங்க தனியா என்ன பண்ணுவான் அதுனால அவனுக்கு கம்பெனிக்கு நந்து, நிஷா, மது அவங்களையும் கூட்டிட்டுப் போவோம்” என மொத்தமாக விஜய்க்கு சமாதி கட்டிவிட்டாள்.

 

“நல்ல குடும்பத்துல வந்து வாக்கப்பட்டுருக்க டா விஜய் , இப்போ என்ன நான் ஹனிமூன் போகக் கூடாது அவ்வளவு தான இனிமேல் கனவுல கூட அப்படி நினைக்க மாட்டேன் என்னை ஆளை விடுங்க தெய்வங்களா” என கையெடுத்துக் கும்பிட்டவன் ,”குடும்பமா இது கொலைகார கூட்டம்” என கடுப்புடன் கூறிவிட்டு முன்னே நடக்க, அவர்களின் சிரிப்பொலி அந்த வீட்டை நிறைத்தது.

 

அனைவரும் கிளம்பி வாசலுக்கு வர, தம்பதி சகிதமாக புன்னகை முகத்துடன் நடந்து வந்த தங்கள் வீட்டின் வாரிசுகளைப் பார்த்து பெரியவர்களுக்கு மனம் நிறைந்து போனது.

 

‘இன்று போல் என்றும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இவர்களனைவரும் இருக்க வேண்டும் ‘ என மனதில் அனைவரும் நினைத்துக் கொண்டு வந்தவர்கள் நிறுத்தி அழகு பார்த்தனர்.

 

அவர்களுக்கு திருஷ்டி கழித்த பாட்டி ,”நைட் வந்து மறக்காம திருஷ்டி சுத்திப் போடணும் ஊர்ப்பய கண்ணு பூராம் நம்ம குடும்பத்து மேல தான் இருக்கும் ” என பெருமையுடன் சலித்துக் கொண்டார்,

“ஏன் கிழவி அப்போ நம்ம ஊர்ல எல்லாரும் குருடோ அச்சோ பாவம், கண்ணெல்லாம் நம்ம கிட்ட கொடுத்து பார்வை இல்லாமல் அவதி படுறாங்க” என கார்த்திக் வம்பு பண்ண ,

 

“வேணாண்டா கோவிலுக்கு கிளம்புறப்போ என் கிட்ட நல்லா வாங்கிக் கட்டிக்காத பேசாம வந்து கார்ல ஏறு” என்று அவர் மிரட்ட, அனைவரும் இவர்களைக் கண்டு சிரிக்க, அந்த அழகிய தருணத்தை அழகாக படம்பிடித்து வைத்துக் கொண்டான் அஷ்வின்.

 

பின் அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து செல்ஃபி எடுத்துத் தள்ள, நந்து மட்டும் கஷ்டப்பட்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.

 

அது அனைவருக்கும் தெரிந்தாலும் ,இன்று இவளிடம் கேட்காமல் விடக்கூடாது என நினைத்த விஜய்யின் தாய் ,”ஏம்மா நந்தினி உன் கூட்டாளிங்கலாம் இப்படி கலகலன்னு இருக்கும் போது நீ மட்டும் ஏன் இப்படி சோகமா கஷ்டப்பட்டு சிரிச்சுகிட்டு இருக்க எதுவும் உடம்பு சரியில்லையா” என எப்போதும் போல் அக்கறையைக் கூட அதிரடியாக வினவ, பயத்தில் என்ன சொல்வதென்று தெரியாமல் நந்து திரு திருவென முழித்தாள்.

 

ஸ்ரீ அவள் தவிப்பை ரசித்துக் கொண்டே ,”இல்லை பெரியம்மா அவளுக்கு காதல் வைரஸ் வந்திருக்கு, அதுக்கு அமெரிக்கால வருணானந்த ஸ்வாமிகள்னு ஒருத்தர் இருக்காரு அவர்கிட்ட போனா சரி ஆய்ரும்..அப்படித்தான நந்துகுட்டி” என ஸ்ரீ அவளைப் பார்த்து கிண்டலுடன் கேட்க,

 

நந்துவின் முகம் ஆடு திருடி மாட்டிக்கொண்டவனைப் போல் ஆனது ,’அய்யோ இவளுக்கு எப்படித் தெரியும்’ என்பது போல் இருக்க,

 

பெரியவர்கள் அவர்களுக்கு தனிமை கொடுத்து சிரித்துக் கொண்டே தங்கள் காரில் கிளம்பி முன்னே சென்றுவிட்டனர்.

 

 

“என்ன மேடம் நீங்க சொல்லலைன்னா எங்களுக்குத் தெரியாதா” என மது ஆரம்பிக்க,

 

“அதான க்ளாஸ் அவனை நீங்க யாருக்கும் தெரியாம சைட் அடிக்கிறதெல்லாம் எங்களால கண்டுபிடிக்க முடியாத அளவு கூமுட்டைன்னு நினைச்சியா நந்து குட்டி” என வர்ஷூ தொடர,

 

“நீ அன்னைக்கு ஸ்ரீயை திட்டும் போதே லவ்வை பத்தி அவ்வளவு லெக்சர் அடிச்சியே அப்பவே எனக்கு கன்ஃப்ர்ம் ஆய்ருச்சு , இவ்வளவு நாளா முட்டையை முட்டை பஃப்ஸ்க்குள்ள ஒளிச்சு வச்சிருக்க மாதிரி உன் காதலை மனசுக்கூள்ளே ஒளிச்சு வச்சிருந்தா நாங்க கண்டுபிடிக்க மாட்டோமா” என நிஷா அவள் பாணியிலே வெளுத்து வாங்க,

 

” நந்து உன்னை எனக்கு பிறந்ததுல இருந்து தெரியும் , என் கிட்ட கூட மறைக்கனும்னு நினைக்க பார்த்தியா?? உன்னை எனக்கு தெரியாத?? அவனை நீ தேர்ட் இயர்ல இருந்து லவ் பண்ற கரெக்டா?? ஆனா என்ன ஃப்ரெண்டை லவ் பண்ற ஒருத்தனை போய் நாமளும் லவ் பண்றோமேன்னு உன்னைப் பத்தி நீயே தப்பா நினைச்சு உன்னையும் உன் மனசையும் ஏமாத்திகிட்டு இருந்த.. உன் வாயாலையே வருண் மேல உள்ள காதலை வெளிக்கொண்டு வரத்தான் ஒவ்வொரு முறையும் உன்னை அருணோட கேலி பேசுனோம், வருணை கரிச்சு கொட்டுனோம் , எதுக்குமே அசையாம ஸ்டாரங்கா தான் நின்ன, ஆனா அவன் ஃபீல் பண்ண அன்னைக்கு அவனை விட நீ ஃபீல் பண்ணி உன் லவ்வை எங்க எல்லாருக்கும் சொல்லாம சொல்லிட்டியே பேபி ஹாஹா.. இன்னும் ஏன் டி மனசுக்குள்ளேயே வச்சுகிட்டு புழுங்குற.. இப்படியே இருந்தா மூச்சு முட்டி செத்துருவ .. போ வாரணம் ஆயிரம் சூர்யா மாதிரி உன் லவ்வைத் தேடி அமெரிக்காக்கு கிளம்பு .. வீட்டுல அம்மா அப்பாகிட்ட நாங்க பேசிட்டோம் அவங்களும் ஓகே சொல்லிட்டாங்க.. சோ சீக்கிரம் போய் அந்த வருணானந்த சாமியார் மடத்துல சேர்ந்துரு ஓகே வா” என ஸ்ரீ ஒரு பெரிய உரையை பேசி முடிக்க,

 

அவளை ஓடிவந்து நந்து கட்டிக் கொண்டவளுக்கு பேச நா எழவில்லை.. தனக்கு கிடைத்த பொக்கிஷமான நட்புக்களை எண்ணி நந்துவிற்கு கண்ணீர் தான் வந்தது. அதைத் துடைத்துவிட்ட ஸ்ரீ ,”என்ன நந்து செல்லம் நம்ம அழுகலாமா நம்மை அஞ்சு பேர் சேர்ந்து தான் மத்தவங்களை அழுக வைக்கனும்” என கிண்டல் பண்ண,

 

‘அதான’, எனக் கூறிக்கொண்டு மற்ற மூவரும் வந்து அவர்களைக் கட்டிக்கொள்ள, மற்றவர்கள் பஞ்சபாண்டவிகளின் நட்பைப் பார்த்து என்றும் போல் இன்றும் வியந்தனர்.

 

விட்டால் ஐவரும் இங்கேயே கட்டிக்கொண்டு பாச மழையை பொழிவர் என உணர்ந்த கார்த்திக் ,”அடச்சி நவுருங்க விட்டா ரிங்கா ரிங்கா ரோசஸ்ன்னு சுத்தி பாட்டி பாடிட்டு ஆடுவிங்க போல, கிளம்பி போய் வேன்ல ஏறுங்க காத்து வரட்டும்” என அவர்களை பிரித்து விட்டான்.

 

“நாங்க ஒன்னு சேர்ந்தா உனக்கு மூக்கு வேர்த்துருமே , இருடா நைட் உன் பொண்டாட்டி கையால முருங்கைக்காய் பாயாசம் வச்சுத் தர சொல்றேன்” என அவனைத் திட்டிய ஸ்ரீ அவர்களை அழைத்துக் கொண்டு அந்த வேனுக்குள் ஏறினாள்.

 

அனைவரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், கேலி கிண்டல் என அந்த பயணத்தைக் கழித்து , கோவிலுக்குச் சென்றபின்னும் அவர்கள் லூட்டி தொடர்ந்தது.

 

கல்யாணமான நான்கு பெண்களும் அவர்களின் மாமியாரின் உதவியுடன் பொங்கல் வைக்க, சித்து தான் சந்துவை அடுப்புப் புகை ஒத்துக்கொள்ளாது என அலும்பு பண்ணிக் கொண்டிருந்தான்.

 

அவனின் காதலில் முன்பே தன்னைத் தொலைத்திருந்த சந்து , அவளுக்காக அவனும் சேர்த்து அந்த அடுப்புப் புகையில் இருந்து பொங்கல் வைப்பதைக் கண்டு, அவன் மேல் உள்ள காதல் இன்னும் அதிகமானது.

 

 

“ஐ லவ் யூ சித்து” என திடீரென்று காதில் ஒலித்த சந்துவின் குரலில் இனிமையாக அதிர்ந்த சித்து ,”லவ் யூ டூ சது மா” என அவள் மென்கரங்களில் மிக மென்மையாக முத்தம் வைக்க,

 

“சகலை உங்களை பொங்கல் வைக்க சொன்னாங்க, என் கொழுந்தியா கையை கடிக்க சொல்லை” என விஜய் தன் மனைவி தன்னை விரட்டி விட்ட கடுப்பில் கொழுத்திப் போட,

 

“போங்க மாமா” என சந்து சிணுங்கிக் கொண்டு தன் அத்தையிடம் ஓடிவிட்டாள்.

 

“பார்த்து போ சது மெதுவா நட ஓடாத” என்ற அந்த தாயுமானவனின்(சித்து) குரல் அவளை பின் தொடர்ந்தது.

 

அதன் பின் அனைத்து பொங்கல்களும் சரியான திசையில் அழகாக பொங்கி விட, அனைவருக்கும் திருப்தியாக இருந்தது.

 

அதை எடுத்து சாமிக்கு படையல் போட்டவர்கள் பின் இப்படி ஓர் குடும்பத்தை தங்களுக்கு அளித்ததற்கு மிக்க நன்றி என கடவுளிடம் நன்றி தெரிவித்தனர்.

 

அங்கிருந்த யாருமே அவர்களுக்காக வேண்டிக் கொள்ளவில்லை, ஏனெனில் தங்களின் நலனுக்காக மற்றவர்கள் வேண்டிக்கொள்ளும் போது அவர்களுக்கு என்ன கவலை.

 

இப்படி ஓர் உறவுகளும் நட்புக்களும் தங்களுக்குக் கிடைத்ததால் தான் அனைத்து துன்பங்களையும் கடந்து இன்று இன்பத்தில் திழைக்கிறோம் , இந்த ஜென்மம் மட்டுமல்லாமல் இனி வரும் அனைத்து ஜென்மங்களிலும் இந்த குடும்பத்தில் தான் பிறக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்ப தயாராகினர்.

 

மற்றவர்களோடு சேர்த்து ஸ்ரீயும் வேனில் ஏறப்போக, அவள் கையை ஒரு வலிய கரம் பற்றித் தடுத்தது,வேறு யாரு அது நம் ஹரியே தான்.

 

“என்ன” என அவள் ஹரியிடம் புருவத்தைத் தூக்கிக் கேட்க,

 

“இங்க வா” என கண்களை மூடித் திறந்தான் , அவளும் அவனுடன் செல்ல,

 

கார்த்திக் அவனைப் பார்த்து ‘நடத்து டா’ என கிண்டல் செய்தான்.

 

அவளை அழைத்துக் கொண்டு வந்த ஹரி அவள் கையில் ஒரு கவரைக் குடுத்து அங்கிருந்த ஓர் அறையில் போய் உடை மாற்றி வரச் சொன்னான்.

 

எதற்கென்று புரியாவிட்டாலும் இந்த சேலையை கழற்றினால் போதும் என நினைத்தவள் அவன் தந்த உடையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.

 

அதில் லெகின்ஸும் முட்டி வரை இருக்கும் காட்டன் குர்தியும் இருக்க, சந்தோஷத்துடன் அவள் அதை அணிந்து கொண்டு வெளியே வர, ஹரியும் அதற்குள் வேஷ்டி சட்டையை களைந்து வொய்ட் ஷர்ட் ப்ளூ ஜீன்ஸுக்கு மாறியிருந்தான்.

 

முட்டி வரை கைகளை மடித்துவிட்டுக் கொண்டே நிமிர்ந்தவனின் அழகில் சொக்கிப் போனவள் அவனையே சைட் அடித்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்து தன் வெண்பற்கள் தெரிய சிரித்தவன் அவள் அருகில் வந்து தாலியைத் தவிர மற்ற நகைகளைக் கழட்டி அதை அந்த கவரில் போட்டு கார்த்திக்கிடம் கொடுத்து விட்டு வந்தான்.

 

அவன் செய்கைகளை புரியாமல் அவள் பார்த்துக் கொண்டு நிற்க, அவளை அங்கு அவளுக்குப் பிடித்த கருப்பு நிற ராயல் என்ஃபீல்ட் வண்டியின் அருகில் அழைத்துக் கொண்டு செல்ல, ஆச்சரியத்திக் கண்களை விரித்தவள் ஹரியை நம்ப மாட்டாமல் பார்த்தாள்.

 

அவனோ அவளைப் பார்த்துக் கண்ணடித்துக் கொண்டு வண்டியை ஸ்டார்ட்

செய்து அவளை பின்னால் அமரச் சொன்னான்.

 

இப்போது அவளுக்கு உடைமாற்றத்திற்கான காரணம் புரிய ரகசிய சிரிப்புடன் வண்டியின் இருபக்கமும் கால்களைப் போட்டு அமர்ந்தவள் அவன் முதுகில் ஒட்டிக் கொண்டாள்.

 

அவன் இப்போது உற்சாகத்துடன் வண்டியை கிளப்ப, அவளுக்கு திடீரென அந்த சந்தேகம் வந்தது ,”ஹேய் ரூல்ஸ் ராமசாமி ஹெல்மெட் இல்லாமல் நீ வண்டி ஓட்ட மாட்டியே எனக்கும் சேர்த்து கண்டிப்பா போட சொல்லிருப்ப எங்க அது” என கிண்டல் செய்ய,

 

“இன்னைக்கு அதுக்கெல்லாம் லீவ் சோ பேசாம இந்த நிமிஷத்தை என்ஜாய் பண்ணிட்டு வா லட்டு” என ஹரி சப்தமாக கூறினான்.

 

அவளும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவனைக் கட்டிக்கொண்டு அந்த பயணத்தை ரசிக்க ஆரம்பித்தாள்.

 

அன்று பார்த்து வானிலை கூட அவர்களின் காதலுக்கு ஆதரவாக இருந்தது, மேகமூட்டத்துடன் எப்போது வேண்டுமென்றாலும் மழைக் காதலி நிலத்தை அலங்கரிக்க வந்து விடுவாள் என்பது போலிருந்த அந்த க்ளைமேட்டில், யாருமற்ற சாலையில், மரங்களின் பச்சை வாசம் மட்டும் இதமாக நாசியில் நுழைய, அந்த தென்றல் காற்று அவர்களின் கேசத்தை இதமாக வருடிச் சென்றது.

 

இவை அனைத்தும் அவள் மனதில் பல நாள் கண்ட கனவு, அது இன்று நனவானதை அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை.

 

அந்த பயணத்தின் ஒவ்வொரு மணித்துளியும் இவர்கள் வாழ்வில் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியவை.

 

இருவரின் மனமும் மகிழ்ச்சியைத் தாண்டி ஒரு வித நிம்மதியில் நிறைந்திருந்தது.

 

சரியாக ஒரு மணி நேர பயணத்திற்குப் பின் ஒரு காடு போல் இருந்த இடத்தில் வண்டியை நிறுத்தியவன் ,”இறங்கு லட்டு ” எனக்கூற, அவள் இருந்த அந்த ஏகாந்த நிலையில் எந்த கேள்வியும் கேட்காமல் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்து அங்கிருந்த மலையில் ஏறினாள்.

 

இருவரும் அங்கிருந்த மலையில் மெதுவாக ஏறியபின் திடிரென தன் அவள் கண்களை தான் வைத்திருந்த துணியைக் கொண்டு அவன் மூட,

 

“ஹரி என்ன பண்ற” என அவள் அலறினாள்,

 

“ஷ்!!! கொஞ்ச நேரம் என் கையை பிடிட்ச்சுட்டு என்னை நம்பி வா , உன்னை எப்போதும் தனியா கைவிடமாட்டேன்” என அவன் இருபொருள்படக் கூற,

 

அவளும் “உன்னை நம்பி எங்க வேணும்னாலும் நான் வருவேன் வா போகலாம்” என புன்னகையுடன் பதிலளிக்க, அவனும் அவளை பத்திரமாக பிடித்துக் கொண்டு முன்னேறினான்.

 

மலை உச்சிக்கு வந்துவிட்டோம் என அவளுக்கு புரிய, அடுத்து அவள் பாதம் மலர்களின் மேல் நடப்பது போல் தோன்ற,”ஹேய் ஹரி ஃப்ளவர்ஸ் கார்பெட்டா எனக்கு ஒரு எக்ஸைட்மென்ட்டா இருக்கு சீக்கிரம் கண்ணை திறந்து விடு” என அவள் குதித்தாள்.

 

அவளிற்கு பதிலேதும் கூறாமல் அவளை அங்கு அழகு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடை அருகில் கூட்டிச் சென்றவன் அவள் காதில் மெதுவாக ,”இன்னைக்கு என்ன டே ன்னு நியாபகம் இருக்கா” எனக் கேட்க,

 

அவளும் மூளையைக் கசக்கி யோசித்துப் பார்த்தும் பதில் கிடைக்காததால் உதட்டைப் பிதுக்கினாள்.

 

அதை ரசனையுடன் பார்த்த ஹரி ,”இன்னைக்குத் தான் நீ எட்டு வருஷத்துக்கு முன்னாடி வயசுக்கு வந்த, ஹாப்பி எய்த் இயர் அன்னிவெர்சரி பொண்டாட்டி” என குறும்பு கொப்பளிக்கக் கூற,

 

“ச்சி பக்கி நான் கூட என்னமோன்னு நினைச்சேன் கடைசில என்னையை கிண்டல் பண்றியா” என அவன் கையில் ஒரு போடு போட்டாள்.

 

“ஹேய் ஹேய் கூல், முழுசா சொல்ல வந்ததைக் கேளு, எய்த் இயர் அன்னிவெர்சரி நீ வயசுக்கு வந்ததுக்கு மட்டும் இல்லை என்னோட …ம்ஹூம் நம்மளோட லவ்வுக்கும் தான்.. அன்னைக்கு நீ கால் பண்ணி நீ பெரிய மனுஷியாகிட்டேன் என் கிட்ட முதல்ல சொன்ன நிமிஷம் தான் உன் மேல எனக்கிருந்த காதலை நான் உணர்ந்த நிமிஷம் ஆனா அப்போ அதை உன் கிட்ட சொல்லலை இப்போ அதே நிமிஷம் (மதியம் 2.37) என் காதலை உன் கிட்ட சொல்லனும்னு நினைக்கிறேன்” என்று தன் காதலை குரலில் தேக்கிக் கூறியவன் மெதுவாக அவள் கண்கட்டை அவிழ்த்தான்.

 

அவன் பேசியதிலே கரைந்து போய் உருகி நின்றவள் , அங்கு கண்ட காட்சியில் மொத்தமாக அவன் காதலில் சரணடைந்தாள்.

 

அங்கே அந்த மேடையில் வண்ண வண்ண மலர்களைக் கொண்டே இவள் உருவத்தை உருவாக்கி அதன் கீழ் ‘ஐ லவ் யூ’ என்று வெள்ளைப் பூக்களால் அலங்கரித்திருந்தனர்.

 

அந்த ரம்மியமான சூழலில் , இலைகளின் வாசத்தோடு அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த மலர்களின் வாசனையும் மனதை மயக்க, தூவானமும் லேசான தூரலைச் சிந்தி அந்த தருணத்திற்கு மேலும் அழகூட்டியது.

 

அவள் கண்கள் விரிய அதை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் முன் மண்டியிட்ட ஹரி அவள் கண்களை ஆழ்ந்து நோக்கி ,” நீ பிறந்தப்போவே எனக்கான தேவதைன்னு கடவுள் முடிவு பண்ணி தான் என் கையில உன்னை கொடுத்திருக்காரு ஸ்ரீ , அந்த தேவதையை இத்தனை வருஷமும் அழுக வச்சு , சிரிக்க வச்சு, ரசிக்க வச்சு என்னால முடிஞ்ச அளவு உன்னை நான் பார்த்துக்கிட்டேன்.. இத்தனை வருஷத்துல உன்னை உன் உணர்வுகளை எங்கயாச்சும் புரிஞ்சுக்காம உன்னை நான் காயப்படுத்திருந்தா என்னை மன்னிச்சிரு லட்டு.. ஆனால் இனிமேல் உன்னை எந்த சூழ்நிலையிலும் எங்கேயும் யார்கிட்டயும் எப்போவும் விட்டுத்தர மாட்டேன்.. நீயே தப்பு பண்ணிருந்தாலும் உன் கூட சேர்ந்து அந்த தப்பை சரி பண்ணுவேன்.. காதலிச்சப்போ பண்ண தப்பெல்லாம் இப்போ சரி பண்ண போறேன் , கடைசி வரை என் காதலால உன்னை பொத்திப் பாதுகாக்கப் போறேன்.. .. இனி ஒரு புது உலகத்தை காதலாலும் பாசத்தாலும் உருவான உலகத்துல உன்னை குடிவைக்க போறேன்.. நீ சிரிக்கும் போது உன் இதழா ,நீ அழும் போது உன் கண்ணீரா, நீ எங்கே போனாலும் உன்னைத் தொடரும் நிழலா மாறப்போறேன் கண்மனி.. இந்த காதல் கிறுக்கனோட சேர்ந்து இந்த வாழ்க்கையைத் தொடங்க உனக்கு விருப்பமா??? அப்பறம் முக்கியமா உன் கிட்ட ஒன்னு சொல்லணும் .. இன்றும் என்றும் என்றென்றும் ‘ ஐ லவ் யூ டி பொண்டாட்டி'” என்று அழுத்தமாகவும் அழகாகவும் தன் காதலை உரைத்துவிட்ட ஹரி, கடைசி வரிகளை மட்டும் எட்டுத்திக்கும் எட்டும் அளவு கத்தி சொல்ல, அது அந்த மலை முழுக்க பட்டு எதிரொலித்துக் கொண்டிருந்தது.

 

 

ஸ்ரீக்கு வார்த்தைகள் வரவில்லை, நொடிக்கு நூறு வார்த்தை பேசுபவள் இன்று அவன் காதலில் திக்கு முக்காடிப் போய் அப்படியே சிலை போல் நின்றிருந்தாள்.

 

‘என்ன தவம் செய்தேன் இப்படி ஒரு காதலன் கிடைக்க’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டவளுக்கு கடவுளுக்கு நன்றி சொல்வதைத் தவிர வேறு வார்த்தை தெரியவில்லை.

 

அவளின் நிலையை உணர்ந்து கொண்ட ஹரி எழுந்து தன் பேண்ட்டில் வைத்திருந்த அந்த செயினை எடுத்தான் , அது பார்ப்பதற்கு நார்மல் செயின் போல் இருந்தாலும் அதை உற்றுப்பார்த்தால் அந்த செயின் முழுக்க ‘ஐ லவ் யூ ஸ்ரீ’ என்று சின்ன சின்ன எழுத்துக்களால் பொரிக்கப்பட்டிருப்பது தெரியும்.

 

சிறிய இதய வடிவிலான டாலரில் இருவரின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்க, அதைக் காதலுடன் அவள் கழுத்தில் அணிவித்து அவள் நெற்றியில் தன் இதழைப் பதித்தான்.

 

“இந்த இதயம்(டாலர்) உன் நெஞ்சை உரசிக்கிட்டே இருக்கும் போதெல்லாம் என் இதயத்துல நீதான் நீ மட்டும் தான் இருக்கன்னு உன் கிட்ட அது சொல்லிட்டே இருக்கும் லட்டு” என அவள் காதில் மென்மையாகக் கூற,

 

அவ்வளவு நேரம் சிலை போல் நின்றவள், பட்டென்று காற்றுகூட இடைபுக முடியாத அளவிற்கு அவனை அணைத்து தன் காதலை கண்ணீரால் உணர்த்தினாள்.

 

ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத காதலை அவன் மார்பை நனைத்த அவளின் கண்ணீர் துளிகள் அவனுக்கு சொல்லியது, அதை புரிந்து கொண்டவனும் அவளை மேலும் தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.

 

மெல்ல நிமிர்ந்தவள் “ஹரி ஒரு பாட்டு பாடேன் ப்ளீஸ்” என ஆசையாக வினவ,

 

அவளை தன் கையணைப்பில் வைத்துக்கொண்டே தன் மனதில் இருக்கும் காதலைச் சொல்லும் வகையில்

 

“கண்ணே கனியே

உன்னை கைவிடமாட்டேன்

சத்தியம் சத்தியம்

இது சத்தியமே !

மாலை சூடிய காலைக்

கதிரின் மேலே

சத்தியம் சத்தியம்

இது சத்தியமே !

ஒரு குழந்தை போலே

ஒரு வைரம் போலே

தூய்மையான என்

சத்தியம் புனிதமானது…

இப்பிறவியில் இன்னொரு பெண்ணை

சிந்தையிலும் தொடேன் !

பிறிதோர் பக்கம் மனம்

சாயா பிரியம் காப்பேன் !

செல்லக் கொலுசின் சிணுங்கல் அறிந்து

சேவை செய்வேன் !

நெற்றிப்பொட்டில் முத்தம் பதித்து

நித்தம் எழுவேன் !

 

கைப்பொருள் யாவையும் கரைத்தாலும்

கணக்கு கேளேன்…

ஒவ்வொரு வாதம் முடியும் போது

உன்னிடம் தோற்பேன் !

கண்ணே கனியே…

அர்த்த ஜாம திருடன் போல

அதிர்ந்து பேசேன் !

காமம் தீரும் பொழுதிலும் எந்தன்

காதல் தீரேன் !

மாத மலர்ச்சி மலரும் வயதில்

மார்பு கொடுப்பேன் !

நோய்நொடியுடன் நீ விழுந்தால்

தாய்மடியாவேன் !

சுவாசம் போல அருகில் இருந்து

சுகப்பட வைப்பேன் !

உந்தன் உறவை எந்தன் உறவாய்

நெஞ்சில் சுமப்பேன் !

உன் கனவுகள் நிஜமாக

எனையே தருவேன் !

உன் வாழ்வு மண்ணில் நீல

என்னுயிர் தருவேன் !

கண்ணே கனியே….

தூய்மையான என் சத்தியம்

புனிதமானது…”

 

என்று ஒவ்வொரு வரிகளையும் உணர்ந்து பாடி முடித்தான்.

 

அவன் காதலில் திக்குமுக்காடிப் போனவள் மெல்ல எழும்பி அவன் இதழ்களைச் சிறைபிடிக்க, அவனும் விரும்பியே அதில் வாழ்நாள் முழுக்க கைதியாக கிடக்க ஆசைப்பட்டான்.

 

அங்கே தங்கள் இதழ்களைக் கொண்டு கவிபாடி முடித்த காதல் பறவைகள் தங்கள் இணையின் காதலை உணர்ந்து கொண்ட களிப்பில் காதல் வானில் சிறகடித்துப் பறந்தனர்.

 

அதன் பின் இருவரும் அங்கே வாங்கி வைத்திருந்த ரெட் வெல்வட் கேக்கை வெட்டி தங்கள் காதல் அன்னிவெர்சரியை கொண்டாடிவிட்டு சிறிது நேரம் அந்த இயற்கையின் அழகை ரசித்தனர்.

 

பின் ஒரு நான்கு மணி போல் அங்கிருந்து அவளை அழைத்துக் கொண்டு செல்ல, இப்போதும் வீட்டிற்கு போவதற்கான பாதையில் செல்லாமல் வேறு வழியில் வண்டி செல்வதை உணர்ந்தாலும் எதுவும் பேசாமல் அந்த பயணத்தை இரசித்துக் கொண்டு வந்தாள் ஸ்ரீ.

 

ஒன்றரை மணிநேர பயணத்திற்குப் பிறகு ஒரு ஹால் போல் இருந்த இடத்தில் வந்து வண்டியை நிறுத்தியவன் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைய, அங்கே அவளுக்கு அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது.

 

மொத்த குடும்பமும் அங்கு வாசலிலே நின்று அவர்களை வரவேற்க ‘இங்கு என்ன நடக்கிறதென்று’ புரியாமல் ஸ்ரீ முழிக்க, அனைவரும் அவள் குழப்பத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர்.

 

உள்ளே சென்றவளுக்கு அந்த நாளில் இரண்டாம் சர்ப்ரைஸ் , அதுவும் ஸ்வீட் சர்ப்ரைஸ்.

 

அந்த ஹால் முழுக்க அவள் வரைந்து மறைத்து வைத்திருந்த ஓவியங்களை காட்சிபடுத்தி ஒரு பெயின்டிங்க் எக்ஸிபிஷனை அவளுக்காக ஏற்பாடு செய்திருந்தான் ஹரி, பலவகையான ரசிகர்களும் ஏன் சிறந்த ஓவியர்களுமே அவளின் ஓவியத்தை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

அவளுக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாகவும் இன்னொரு புறம் அவனிற்கு எப்படி இது தெரிந்தது என குழப்பமாகவும் இருக்க, அவள் மனதைப் படித்தவன் போல், ” சந்து சொன்னா.. உனக்குள்ள இருக்க திறமைக்கு தடையா நான் மட்டும் இல்லை நம்ம குடும்பமும் இருக்கக் கூடாது லட்டு.. உனக்கு பிடிச்சதுல நீ சாதிக்கணும் லட்டு அதுக்கு பின்னாடி என்றும் உனக்கு துணையா நான் இருப்பேன்.. இது வெறும் ஆரம்பம் தான்.. இன்னும் நீ அடைய வேண்டிய இலக்குகள் நிறையா இருக்கு..” என தனக்கு உண்மை தெரியும் என்று கூறி அவளை சங்கடப்படுத்த விரும்பாமல் சந்து கூறினால் என பொய்யுரைத்தான்..

 

அவனை நினைத்து அவளால் வியாக்காமல் இருக்க முடியவில்லை.

 

அவளுக்கு ஓவியத்தின் மீதுள்ள காதலை மீண்டும் மீட்டெடுத்துக் கொடுத்த மன்னவனை காதல் பொங்க பார்த்தவள் “ஐ லவ் யூ சோ மச் க்ரிஷ்” என்று பல மாதங்களுக்குப் பின் அவனை க்ரிஷ் என்று அழைத்து அவளின் மகிழ்ச்சியின் அளவை அவனுக்கு தெரியப்படுத்தினாள்.

 

அதன் பின்பு அனைவரும் அதை ரசித்து, அவளை பாராட்டிவிட்டு செல்ல, இரவு பத்து மணிக்கு அனைவரும் நிறைந்த மனதுடன் வீடு திரும்பினர்.

 

அனைவரும் அங்கேயே உணவருந்திவிட்டதால் பாட்டி திருஷ்டி சுற்றி போட்ட பின் நேராக தங்கள் அறைக்குள் நுழையப் போக, அஷ்வின் அனைவரிடமும் ,”இன்னைக்கு எல்லாரும் மொட்டை மாடில படுக்கலாமா??” என ஏக்கமாக வினவ,

 

கார்த்திக்கும் ஹரியும் இன்று தான் தங்கள் வாழ்க்கையை தொடங்கலாம் என நினைத்திருந்தாலும் அதற்கு இன்னும் தங்களுக்கு நீண்ட வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது என உணர்ந்தவர்கள் தங்கள் மனைவிமார்களைத் திரும்பிப் பார்க்க அவர்கள் அதை விட குஷியாக ‘ஓகே’ என கட்டை விரலைத் தூக்கிக் காட்ட, சந்தோஷமாகவே தத்தம் அறைக்குச் சென்று இரவு உடைக்கு மாறியவர்கள் ஃப்ரெஷ் ஆகிவிட்டு மொட்டைமாடிக்கு கிளம்பினர்.

 

மொட்டை மாடியில் மொத்த குடும்பமும் கூடியிருக்க, அங்கே ஆட்டமும் பாட்டமும் கேட்கவா வேண்டும்.

 

என்னதான் இலவம்பஞ்சு அடைத்த தலையணை அங்கு கிடந்தாலும் சொந்தங்களின் மடியில் படுத்து உறங்கும் சுகம் வருமோ?? சிறியவர்கள் யாவரும் பெரியவர்களின் மடியில் படுத்துக் கொண்டு செல்லம் கொஞ்சிக் கொண்டும், அவர்களின் பழங்கதைகளை கேட்டு ரசித்து விளையாடிக்கொண்டும் இருந்தனர்.

 

பல பல கதைகள், நடுநடுவே கார்த்திக்கின் கலாட்டா, விஜயின் புலம்பல், ஹரியின் பாடல், ஆதிராவின் ஊடல், சித்து-சந்துவின் காதல், பஞ்சபாண்டவிகளின் நடனம், அஷ்வினின் புகைப்படம் எடுக்கும் படலம் என அனைத்தும் முடிய இரவு இரண்டு மணிக்கு மேலாக அப்படியே ஒருவர் மேல் ஒருவர் படுத்து உறங்கிப் போயினர்…

 

அனைவரின் மனமும் நிறைந்திருக்க, அதன் விளைவால் ஓர் மென்னகையுடனே நித்திரையில் ஆழ்ந்திருக்க, அங்கு கடந்து செல்லும் காற்று கூட இவர்களின் அன்பைப் பார்த்து பொறாமைப்பட்டு ஒரு பெருமூச்சுடன் கடந்து சென்றது.

 

” சுற்றமும் முற்றமும் யாருமே இன்றி வாழ்ந்திடும் வீட்டினில் தெய்வம் இல்லை

 

பாசங்கள் நேசங்கள் ஏதுமே இன்றி வாழ்ந்திடும் வாழ்க்கையோ வாழ்க்கையில்லை

 

பிரிந்தே நாம் வாழ்கின்ற போதிலும் நினைவுகள் நம்மைச் சேர்ந்திடுமே

 

அழகாய் பூப்பூத்திட வேண்டியே வேர்கள் நீர் ஈர்த்திடுமே

 

இன்னோர் ஓர் ஜென்மம் அது கிடைத்தாலும் கூட

 

இது போல் ஓரு சொந்தம் கிடைத்திட ஓர் வரம் வேண்டும்”

 

 

 

சில வருடங்களுக்குப் பிறகு…..

 

“ஜுன்னு, பாப்பா என்ன பண்றானு போய் பார்த்துட்டு வா.. கிளம்பலைன்னா இங்க தூக்கிட்டு வா வர்ஷூவால கார்த்திக்கோட சேர்ந்து மூணு வாலுங்கலையும் சமாளிக்க முடியாது” என தன் நான்கு வயது மகனிடம் பேசிக் கொண்டே ஹரியின் போனுக்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

 

“மாதாஜி பொறுமை பொறுமை.. அப்பா பூ வாங்க தான போய்ருக்காங்க ஏதோ பூளூட்டோவுக்கு போய்ருக்க மாதிரி இன்னும் வரலியான்னு இத்தனை டைம் கால் பண்ணி அவரை டென்ஷன் பண்ணாதிங்க போய் ஒழுங்கா சந்து அத்தையை கூப்பிட்டு உங்க சாரியை கட்டுங்க , நான் பாப்பாவை பார்த்துக்குறேன்” என்று பெரிய மனிதன் போல் பேசிய ஜுன்னு என்றழைக்கப்படும் அர்ஜுன் தான் ஹரியின் வாரிசு என்பதை நிரூபித்தான்.

 

 

“அப்பாவுக்குப் பிள்ளை தப்பாம பிறந்துருக்க டா மகனே ” என பெருமையோடு சலித்துக் கொண்டவள், தன் மகன் சொன்னது போல் புடவையைத் தூக்கிக் கொண்டு சந்துவைத் தேடிப் போனாள்.

 

இங்கு கார்த்திக் அறையில் ,

 

“வர்ஷூ ஒன்னே ஒன்னு ப்ளீஸ் டி.. வர்ஷூ மாமன் பாவம்ல நாலு மாசமா என்னை தனியா தவிக்க விட்டுட்டு போய்ட்டு இப்போ தான் டி வந்துருக்க ஒன்னே ஒன்னு டி ப்ளீஸ்” என கார்த்திக் வர்ஷூவிடம் கெஞ்சிக் கொண்டிருக்க,

 

அப்போது பார்த்து உள்ளே வந்த அர்ஜூன் ,”தகப்பா என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என கார்த்திக்கை வம்பிழுக்க,

 

தந்தையை முந்திக்கொண்டு பதிலளித்தாள் கார்த்திக்கின் மூத்த மகள் ரித்து என்னும் ப்ரீத்திகா.

 

“ஜுன்னு அப்பாக்கு கிஸ் வேண்டுமாம் ..மம்மி பேட் மம்மி கொடுக்கவே மாட்றாங்க பாவம் பிதாஜி” என மழலை மொழியில் மிழற்ற,

 

வர்ஷூ கார்த்திக்கை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தாள்.

 

‘குழந்தைங்க முன்னாடி பார்த்து பேசுன்னு எத்தனை டைம் சொல்றது’ என்ற கேள்வி அந்த பார்வையில் பொதிந்திருந்ததை அறிந்த கார்த்திக் , ‘போச்சு போச்சு அப்போ இன்னைக்கு நைட்டும் பாக்யராஜ் சாங்க் கட்டா .. இந்த ரித்துக்கு வயசு தான் ரெண்டு ஆனா மூளையை பாரு நான் கிஸ்னு கூட சொல்லலை ஆனா அதைத்தான் கேட்குறேன்னு கண்டுபிடிச்சு போட்டுகுடுத்துருச்சு..சமாளி டா கார்த்திக்’ என தனக்குள் கூறிக்கொண்டவன் அவர்களைப் பார்த்து இழித்துக்கொண்டே ,

 

“ரித்து பேபி அப்பா கிஸ் கேட்கலை டா.. அப்பாக்கு உங்கம்மா கையால குலாப்ஜாமுன் சாப்பிடனும் போல இருந்துச்சு அதான் அம்மாகிட்ட கேட்டேன்” என கேவலமாக சமாளிக்க,

 

அவனை ரித்து நம்பாமல் பார்த்து வைக்க, வர்ஷூ அவளை சமாளிக்கும் பொருட்டு ,”ரித்து உங்க அப்பாவுக்கு சுகர் இருக்கு டா.. குலோப்ஜாமுன் சாப்பிட கூடாதுல்ல அதான் அம்மா தரலை நீங்க அண்ணா கூட போய் விளையாடுங்க ..ஜுன்னு ரித்துவை கூட்டிட்டு போ செல்லம்” என ரித்துவிடம் ஆரம்பித்து அர்ஜுனிடம் முடித்தாள்.

 

அர்ஜூனும் சமத்தாக ரித்துவைக் கூப்பிட்டுக் கொண்டு வெளியேற, வர்ஷூ கார்த்திக்கை பிலு பிலுவென பிடித்துக் கொண்டாள்.

 

“குழந்தைங்க முன்னாடி பார்த்து பேசுன்னு எத்தனை டைம் சொல்றது கார்த்திக்.. கொஞ்சம் கூட அறிவே இல்லையா இன்னும் பொறுப்பில்லாமையே சுத்திகிட்டு இரு.. மூனு குழந்தைக்கு(அர்ஜூனையும் சேர்த்து) அப்பா மாதிரியா நீ நடந்துக்குற… க்ரோ அப் கார்த்திக்” என அவள் கத்திக்கொண்டே போக,

 

கார்த்திக்கோ பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு ,”அதான் எல்லாத்துக்கும் சேர்த்து எனக்கு சுகர்ன்னு பெரிய பிட்டைப் போட்டு என்னை க்ளோஸ் பண்ணிட்டல்ல அப்பறம் என்ன?” என அப்பாவி போல் வினவ,

 

அவன் முகத்தைக் கண்டு எப்போதும் போல் கோபம் மறந்து சிரித்து விட்டாள் அவன் மனையாள்.

 

“இப்படி நடிச்சு நடிச்சு என்னை சிரிக்க வச்சே கவுத்துட்ட டா கேடி” என அவன் கன்னத்தைப் பிடித்துச் செல்லம் கொஞ்சியவள் அவன் கேட்டதையும் தாரளமாக வழங்கினாள்.

 

அப்போது திடீரென உள்ளே வந்த அர்ஜூன் அவர்களைக் கண்டுகொள்ளாமல் அங்கு தூங்கிக் கொண்டிருந்த தன் மூன்று மாத தங்கையைத்(கார்த்திக் மகள்) தூக்கிக் கொண்டு வெளியே சென்றவன், போகும் முன் “கதவை சாத்திக்கோங்க மா” என வர்ஷூவிடம் சொல்லவும் மறக்கவில்லை.

 

“ச்சை கதவே மூடலையா அய்யோ பிள்ளை முன்னாடி மானமே போச்சு” என வர்ஷூ புலம்ப, “விடுடி நமக்கு சூப்பர் மகன் கிடைச்சிருக்கான்னு சந்தோஷப்படு, எங்க பாப்பா அழுது நம்மை டிஸ்டர்ப் பண்ணிருவாளோன்னு அவன் எம்புட்டு விவரமா தூக்கிட்டு போய்ட்டான்.. என் செல்லக் குட்டி..சரி நீ வா விட்டதுல இருந்து ஸ்டார்ட் பண்ணலாம் ” என எப்போதும் போல் தனக்குச் சாதகமானதை தேடிக் கூற,

 

“நானே பிள்ளை முன்னாடி மானம் போச்சேன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன்..உனக்கு இன்னும் கேட்குதா பக்கி பக்கி இந்தா வாங்கிக்கோ” என கையில் சிக்குவதை அவன் மேல் தூக்கி எறிய ஆரம்பித்தாள் வர்ஷூ.

 

அதன் பின் அவர்கள் செல்ல சண்டைகள் அந்த வீடு முழுக்க எதிரொலிக்க, ‘இதுங்க மாறவே மாறாது’ என மற்றவர்கள் சந்தோஷமாக சலித்துக் கொண்டனர்.

 

 

இன்று கார்த்திக்கின் இரண்டாம் மகளுக்கு பெயர் சூட்டும் விழா, அதற்குத் தான் அனைவரும் இன்று பரபரப்புடன் ஒவ்வொரு வேலையாக கவனித்துக் கொண்டிருந்தனர்.

 

அன்று நாம் விட்டுச் சென்றபின் இந்த ஜோடிகளின் வாழ்வில் வந்த மாற்றங்கள் ஒன்றே ஒன்று தான் அது அவர்களின் குழந்தைகள், மற்றபடி அன்று போல் இன்றும் அதே காதல், பாசம், ஒற்றுமையுடன் கலகலப்பாக தங்கள் வாழ்க்கையை குழந்தைகளுடன் குழந்தைகளாக மாறி தங்கள் வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.

 

ஹனிமூன் போகவேண்டும் போகவேண்டும் என அடம்பிடித்து ஒருவழியாக அவர்கள் வீட்டிற்கு முதல் வாரிசை வழங்கிய பெருமை நம் விஜய்யயே சேரும்.

 

விஜய் ஆதிராவிற்கு நேர்மாறாக நாராயணசாமி தாத்தாவின் குணத்தைக் கொண்டு பிறந்திருந்தான் அவர்களின் நான்கரை வயது புதல்வன் லக்ஷமன் கிஷோர்.

 

லக்ஷமனுக்கு அப்படியே எதிராக ஸ்ரீ, கார்த்திக் குறும்போடும், ஹரியின் பொறுப்போடும் ஐந்து மாதங்கள் கழித்து இந்த பூமியில் வந்து ஜனித்தான் அர்ஜுன்.

 

பிரசவத்தின் போது ஸ்ரீ பட்ட கஷ்டத்தை உடனிருந்து பார்த்த ஹரி, அவளுக்கு மேல் துடித்துப் போனவன் ஒரு குழந்தையோடு போதும் என முடிவாக கூறிவிட்டான்.

 

அடுத்த ஒருவருடத்தில், சந்துவின் மேல் வைத்த ஆத்மார்த்தமான சித்துவின் காதலுக்கு பரிசாக டபுள் டமாக்காவாக வந்து பிறந்தவர்கள் தான் விஷ்ணு, விஷ்ரினுதா சுருக்கமாக வினு, ரினு.

 

அனைவருக்கும் முன் திருமணம் முடித்தாலும் அவன் கிரகம் கடைசியாகத் தான் கார்த்திக்கிற்கு கன்னி கழித்து அவனை தந்தையாக்கினாள் வர்ஷூ.

 

இரண்டு வயதில் முதலில் ப்ரீத்திகாவை ரிலீஸ் செய்த கார்த்திக், அடுத்து தீயாய் வேலை செய்து இப்போது மூன்று மாதத்திற்கு முன் அடுத்த பெண் குழந்தையை ரிலீஸ் செய்திருந்தான் கார்த்திக்.

 

பஞ்ச பாண்டவிகளில் நிஷாவிற்கும், மதுவிற்கும் இப்போது திருமணம் ஆகி, ஒரு வயதில் இருவருக்கும் ஆண் குழந்தை பெண் குழந்தைகள் இருந்தது. அவர்களின் கணவன்மார்களும் , குழந்தைகளும் இந்த வானரப்படைகளோடு ஐக்கியம் ஆகிவிட்டதால் அவர்களின் அலும்பலைக் கேட்கவா வேண்டும்.

 

சரி சரி வாங்க எல்லாரும் அங்க குழந்தையை தொட்டில்ல போட்டுட்டாங்க என்ன பேர் வைக்கப் போறாங்கன்னு போய் பார்க்கலாம்.

 

 

“மாப்பிள்ளை உன்ற மருமவளுக்கு போய் பேர் வைங்க சீக்கிரம்” என பாட்டி குழந்தையின் தாய்மாமன் முறைவந்த விஜய்யிடம் பணிக்க,

 

(போன முறை ப்ரீத்திகாவிற்கு சித்து பெயர் வைத்ததால் இந்த முறை விஜய் தான் வைக்க வேண்டுமென சந்து கூறிவிட, அதை மீறும் தைரியம் சித்து மற்றுமல்லாமல் யாருக்குமே கிடையாததால் அனைவரும் மகிழ்ச்சியாகவே இதற்கு சம்மதித்தனர்.)

 

விஜயும் மகிழ்ச்சியுடன் தொட்டிலில் தேவதை போல் தன் பொக்கை வாயைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்த தன் மருமகளிடம் சென்றவன் அவளை தன் கைகளில் அள்ளி அணைத்து ,சக்கரைத் தண்ணீரை அவள் வாயில் விட்டவன் அவள் காதில் குனிந்து அனைவராலும் தேர்வு செய்யப்பட்ட பெயரை கூறினான்.

 

“மகிழினி , மகிழினி ,மகிழினி” என மூன்று முறை அவள் காதில் கூறி குழந்தைக்கு பெயர் சூட்ட, குழந்தை அவனுக்கு பரிசாய் அவன் மேல் சிறுநீர் அபிஷேகம் பொழிந்தது.

 

அதைக் கண்டு அனைவரும் கொல்லென சிரிக்க, விஜய் பாவமாய் முழித்தான்.

 

“அசிங்கப்பட்டான் ஆதிரா புருஷன்” என கார்த்திக் கிண்டலில் இறங்க,

 

அவனைத் தொடர்ந்து ஹரியும் ,”இதெல்லாம் அவனுக்கு புதுசா என்ன அப்படித் தான மாப்பிள்ளை” என கேலி பண்ண,

 

சிலிர்த்தெழுந்த விஜய் ,”ரொம்ப பேசாதீங்க டா.. இதுக்காகவே அடுத்து ஒரு பிள்ளையை பெத்து அதுக்கு பேர் வைக்க ஊரை கூட்டி என் மருமக பண்ண மாதிரி உங்களையும் என் மகளை வச்சு அசிங்கப்படுத்தலை என் பேர் விஜய் இல்லை” என சவால் விட,

 

ஆதிரா அவனை முறைக்க, கார்த்திக் சிரிப்பை அடக்கிக் கொண்டே ,”அப்போ மாப்ளை அடுத்த ஹனிமூனை ரெடி பண்ணிற வேண்டி தான்” என கூற, விஜய்க்கு ஐந்து வருடங்களுக்கு முன் மொத்த குடும்பத்தையும் ஒரு பஸ்ஸில் அள்ளிப் போட்டுக்கொண்டு ஹனிமூன் என்ற பெயரில், குடும்பச் சுற்றுலா சென்று வந்தது கண்முன் நிழலாட, அரண்டு போய் தலையை குலுக்கியவன் ,

 

“பாவிகளா அதுக்கு பேர் ஹனிமூனா குரங்குக் கூட்டத்தை கூட்டிட்டு குடும்பச் சுற்றுலா போய்ட்டு வந்தோம்னு வேணும்னா சொல்லு” என புலம்ப,

 

“நீ அதுலயே லக்ஷ்மனை ரிலீஸ் பண்ண கில்லாடியாச்சே” என ஹரி அவர்களுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவனை வார,

 

“விளையாட்டை நிறுத்திட்டு வேலையை பாருங்க” என்று வந்த தாத்தாவின் கண்டிப்பான குரலில் அனைவரும் வாயை கப்சிப் என மூடிக் கொண்டனர்.

 

அவனைத் தொடர்ந்து மற்றவர்கள் பெயரை அவள் காதுக்குள் சொல்லி தங்கள் வாழ்த்தை குழந்தைக்கு தெரிவிக்க,

 

அதன் பின் குழந்தைகள் ஒரு புறம் விளையாடச் செல்ல, பெரியவர்கள் தங்கள் வேலையை கவனிக்கச் செல்ல, நம் வானரக்கூட்டம் ஒன்றாக அமர்ந்து ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டு பொழுதைக் கழித்தனர்.

 

 

 

அன்று இரவு , குழந்தைகள் அனைவரும் பெரியவர்களுடன் படுக்கச் சென்று விட, சிறியவர்கள் தத்தமது அறைக்குச் சென்று மறைந்தனர்.

 

கார்த்திக்கின் அறையில்,

 

மகிழினியை தூங்க வைத்துவிட்டு கட்டிலில் வந்து விழுந்த மனைவியை ஆசையாக அணைத்துக் கொண்ட கார்த்திக் அவள் கழுத்து வலைவில் முகம் புதைத்து , ” என்ன டார்லிங் சோப்பை மாத்திட்ட போல இருக்கு” என அவள் வாசத்தை நாசியில் நிரப்பிக் கொண்டே கேட்க,

 

அவன் தலையில் கொட்டிய வர்ஷூ ,”பக்கி பக்கி ரொமான்டிக்கா என்னைக்காச்சும் பேசுதா பாரு.. சோப்பை மாத்திட்டியா சொம்பை மாத்திட்டியான்னு” என அழுத்துக் கொண்டாள்.

 

“நமக்கு வராததை ட்ரை பண்ணி பன்னு வாங்க கூடாது தங்கம் சரி அதை விடு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் எழுந்திரி” என அவளை தள்ளி விட்டுக்கொண்டு எழுந்தவன் கப்போர்டில் இருந்து ஒரு கவரை எடுத்துக் கொண்டு வந்து அவள் கைகளில் திணித்தான்.

 

அவளும் ‘ஏதோ பொண்டாட்டியை பிரிஞ்சு இருந்த ஏக்கத்துல புத்தி வந்துருச்சு போல கிஃப்ட் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கு’ என அவனைப் பற்றி தெரியாமல் ஆசையாக அந்த கவரைப் பிரிக்க, உள்ளே இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனாள்.

 

அதில் வெற்றிக்கொடிகட்டு படத்தில் துபாய் சென்று வந்த நம் வடிவேலு அணியும் அந்த பஞ்சு மிட்டாய் கலர் உடை இருக்க, ஒருவேளை கடையில் உடை மாறிவிட்டதோ என சந்தேகப்பட்டு , “ஏய் லூசு நாளைக்கு போய் அந்த கடைக்காரங்க கிட்ட இதை குடுத்துட்டு நீ வாங்குனதை வாங்கிட்டு வா.. ஒழுங்கா என்ன வாங்குனோம்னு கூட பார்த்து வாங்கிட்டு வரத் தெரியலை உன்னையெல்லாம் வச்சுகிட்டு ” என அவனைத் திட்ட,

 

அவனோ கூலாக, “பேப்ஸ் இது தான் நான் வாங்குன ட்ரஸ் அவன் கரெக்டா தான் குடுத்துருக்கான் நீ போய் இந்த ட்ரெஸ்ஸை போட்டுட்டு வா கஷ்டப்பட்டு பல கடை ஏறி இறங்கி வாங்கிருக்கேன்” என கார்த்திக் ஆவலாக கூற,

 

அந்த துணியை அவன் மேலே தூக்கி எறிந்த வர்ஷூ ,”மென்டல் பொண்டாட்டிக்கு எவனாச்சும் இந்த மாதிரி டிரஸ்ஸை கிஃப்ட் பண்ணுவானா?? எனக்குன்னு வந்து வாய்க்குது பாரு தத்தி தத்தி” என திட்ட,

 

“ஹேய் பேப்ஸ் கூல், எனக்கு இந்த டிரஸ்ல உன்னை பார்க்கணும்னு எவ்ளோ நாள் கனவு தெரியுமா..ப்ளீஸ் பேபி போய் மாத்திட்டு வா..அப்பறம் நம்ம பாக்யராஜ் சாங்க் போட்டுட்டு ஜல்சா பண்ணலாம் ப்ளீஸ் பேப்ஸ்” என கெஞ்ச,

 

முதலில் மறுத்தவள் பின் அவனின் அலம்பலை ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் அந்த அபூர்வமான உடையை அணிந்து வர, அதன் பின் என்ன,

 

“கண்ணை தொறக்கனும் சாமி,

 

கையை பிடிக்கனும் சாமி”ன்னு பாட்டை போட்டு லைட்டை ஆஃப் பண்ணிட்டாங்க.. சோ நாமளும் எஸ்கேப் ஆகி ஹரி ரூமுக்கு போகலாம் வாங்க..

 

 

 

ஹரியின் அறையில்,

 

பால்கனியில் போட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து தன் மடியில் தன் மனையாளைத் தாங்கியிருந்த ஹரி அவளைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

 

ஸ்ரீ அந்த நிலவை இரசித்துக் கொண்டிருக்க, அவனோ தன் நிலவை இரசித்துக் கொண்டிருந்தான்.

 

“என் லட்டுக்குட்டி மூளையில என்ன விஷயம் போட்டு குடைஞ்சிட்டு இருக்கு ” என அவள் மனதைப் படித்துக் கேட்க,

 

எதுவும் சொல்லாமலே தன் மனதைப் புரிந்து காதலோடு தன்னைத் தாங்குபவனை என்றும் போல் இன்றும் வியப்புடன் நோக்கியவள் அவன் புறம் திரும்பி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

 

“இந்த உலகத்துல நான் தான் ஹரி ரொம்ப ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சவ .. இந்த மாதிரி என்னை புரிஞ்சுக்கிற நட்பு, பாசமான சொந்தம், அழகான குழந்தைகள் எல்லாத்துக்கும் மேல என்னை போதும் போதும்னு சொல்லூற அளவுக்கு உன் காதலாக என்னை மூழ்கடிக்குற புருஷன் .. இதெல்லாம் யாருக்கு கிடைக்கும்.. எனக்கு கிடைச்சிருக்கு.. ஐ அம் தி ஹேப்பியஸ்ட் கேர்ள் இன் தி வோர்ல்ட் ” எனச் சொல்லி அவன் நெற்றியில் முத்தமிட,

 

அவள் உணர்ச்சிவசப்படுகிறாள் என உணர்ந்த ஹரி பேச்சை மாற்ற எண்ணி ,”லட்டு ஒரு சின்ன கரெக்ஷன் ..யூ ஆர் நாட் எ கேர்ள் நவ்.. மூனு குழந்தைக்கு (கார்த்திக் குழந்தைகளையும் சேர்த்து) மம்மி நீ.. சோ ஆன்ட்டின்னு வேணா சொல்லலாம்” என சிரியாமல் கூற,

 

ஸ்ரீக்கு வந்ததே ஆத்திரம் , “நானா டா ஆன்ட்டி நீ தான் கிழவன் பன்னி பிசாசு” என கூறிக்கொண்டு அவனை அடிக்கத் தொடங்க, அவன் அவளிடம் இருந்து தப்பித்து அறைக்குள் ஓடினான்.

 

அவளும் அவன் பின்னாலே துரத்திக் கொண்டு ஓட, பிள்ளையாரைச் சுற்றுவது போல் இருவரும் கட்டிலைச் சுற்றிக் கொண்டே ஓடி விளையாடியவர்கள் பின் மூச்சு வாங்க கட்டிலில் விழுந்தார்கள்.

 

தன் அருகில் படுத்து மூச்சு வாங்கிக் கொண்டிருந்தவளை இழுத்து தன் மார்போடு சேர்த்து அணைத்தவன் அவள் நெற்றியில் முத்தம் பதித்து ,” நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரவே இல்லையே லட்டு” என ஆரம்பிக்க,

 

அவனைப் பற்றித் தெரிந்தவள் ,”உனக்கே என்னான்னு தெரிஞ்சுருக்கும் இருந்தும் என் வாயால கேட்கலைனா விட மாட்ட கேடி.. எனக்கு இருக்க ஒரே கவலை நந்து தான்னு உனக்கு தெரியாத க்ரிஷ்.. அஞ்சு வருஷம் ஆச்சு அந்த பாழாய்போன அமெரிக்காவுக்குப் போய் ஆனா இன்னும் அந்த வருண் அவளை அலைய விட்டுட்டு இருக்கான் பாவம் என் நந்துக்குட்டி” என நந்துவை நினைத்து வருந்த,

 

“நினைச்சேன்.. ஆனா நீ இதைப்பத்தி நினைச்சு கவலைப்படாத லட்டு.. வருணையும் நந்துவையும் சேர்த்து வைக்க வேண்டியது இந்த இத்துப்போன ஆத்தரோட கவலை.. அவங்க சேருறதை இன்னொரு கதையில அவங்க சொல்லுவாங்க இப்போ நீ அதை விட்டுட்டு வந்து இந்த மாமனை கவனி செல்லம்” என மன்மத லீலைகளைத் துவங்க,

 

அவளும் தன்னவனின் அணைப்பில் மற்றதை மறந்து அவன் கைகளில் தன்னை ஒப்படைத்தாள்.

 

சரியாக அவர்களுக்கு வேலை வைக்கக் கூடாதென்று கரென்ட்டும் போய் விட, இருட்டில் நமக்கு ஒன்றும் தெரியாது வாங்க வாங்க நடையைக் கட்டுங்க.. கதை முடிஞ்சு போச்சு..

 

 

இன்று போல் என்றும் இவர்கள் குடும்பம் போல் வாழ வேண்டும் என அடுத்தவர்களை ஏங்க வைக்கும் அளவு என்றும் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் அவர்கள் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த அழகிய கூட்டிலிருந்து அவர்களை வாழ்த்தி விடைபெறுவோம்.

 

*****சுபம்*****

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment