
அத்தியாயம் -22
அரண்டு விழித்து அமர்ந்திருந்த ஜான்வியின் மௌனத்தைக் கலைக்க அங்கு அவளை சூழ்ந்திருந்த ஒருவருக்கும் தைரியமே இல்லை. அவள் கண்களில் இருப்பது வலியா? பயமா? கோபமா? என்று யாருக்கும் தெரியவில்லை.
தலையைத் தாங்கியபடி அவள் அமர்ந்திருக்க,
தன் தோழனிடம் பேசிவிட்டு வந்த துருவன், “ஜான்” என்றான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “எங்கடா போச்சு? இதுக்கு தான் பயந்தேன். அவன் உடம்பை திரும்ப வீட்டுக்கு கொண்டு போய் பத்திரமா வெச்சுக்கலாம்னு பார்த்தா அதுக்குள்ள இப்படி” என்று ஆத்திரமும் கண்ணீரும் கண்களில் முட்டிக் கொண்டு நிற்கும்வண்ணம் கூறினாள்.
“நம்ம மதி மட்டும் இல்லை ஜான். வேற யாரோ ஒருத்தரோட பாடியும் மிஸ் ஆயிருக்காம். அவங்க போலீஸ் கம்ப்ளைன் பண்ணப் போறதா சொல்லி பேசிட்டு இருக்காங்க. கிடைச்சிடும் ஜான்” என்று துரு கூற,
மீண்டும் சோகத்துடன் தலையை தொங்க போட்டுக் கொண்டவளது இறுக மூடிய விழிகளிலிருந்து நீர் வழிந்தது.
மண்டியிட்டு அமர்ந்து அவள் தோள் தொட்ட அகா, “ஜான் ரிலாக்ஸ்.. நம்மாளதான் கம்ப்ளைன்ட் கொடுக்க முடியாது. வேற ஒருத்தங்க கொடுக்கும் பட்சத்தில் நம்ம மதியும் கிடைச்சா சொந்தகாரங்க ஃபாரின்ல இருந்து வரும்வரை இருக்கட்டும்னு கொடுத்து வச்சதா சொல்லி வாங்கிடலாம்” என்று கூற,
அவளை இறுக அணைத்துக் கொண்டவள் பல்லைக் கடித்தபடி “பயமா இருக்கு அகா” என்றாள்.
அவளது அழுத்தமான பேச்சும் இறுக்கமான அணைப்பும் அவளது மனவேதனையை உணர்த்த, கண்கள் பனிய விஷ் மற்றும் துருவைப் பார்த்த அகா,
“என்னடா எதும் சொல்றாங்களா?” என்று வினவினாள்.
“பேசிருக்கேன் அகா” என்று துரு கூற,
சுற்றி முற்றிப் பார்த்த விஷ் “மதி எங்க?” என்று வினவினான்.
நிமிர்ந்து சுற்றி பார்த்த ஜான், “என்கூட தான் இருந்தான். தெரியலை” என்க,
“சரி நீ முதல்ல வீட்டுக்கு வா” என்று விஷ் கூறினான்.
“இல்ல விஷ். நம்ம இங்கயே இருப்போம். என் மகி எனக்கு வேணும்” என்று அவள் கூற,
“ஜான் ஜஸ்ட் ரிலாக்ஸ். யாரும் வேணும்னு பண்ணதா இல்லை தெரியாம மாத்தி கொடுத்து அனுப்பிட்டாங்களானு இன்னும் சரியா தெரியலை. எப்படியா இருந்தாலும் கிடைச்சிடும். நீ முதல்ல வீட்டுக்கு வா. துரு ஃப்ரண்ட், அந்த பையன் ஃபோன் பண்றதா சொல்லிருக்கான்” என்று விஷ் கூறினான்.
“எவ்வளவு சந்தோஷமா வந்தேன் தெரியுமா வீட்டுக்கு? ஏன்டா இப்படிலாம் ஆகுது? ச்சை” என்று வருத்தமும் கோபமுமாக கூறியவள் எழ,
அவளை அமைதிப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
உள்ளே நுழைந்ததும் ஜான்விகா விறுவிறுவென தன்னறைக்குச் சென்று கதவை படாரென்று அடித்துச் சாற்றிக் கொள்ள, அவளது தாயும் தந்தையும் பதறி வந்தனர்.
“என்னாச்சுடா இவளுக்கு?” என்று ஆத்விகா வினவ,
“அ..அது ஆஃபிஸ் டென்ஷன் அத்தை” என்று விஷ் கூறினான்.
“அதுக்கா இவ்வளவு கோவம்? என்னமோ ஏதோனு பயந்தே போயிட்டோம்” என்று ஆத்விகா பொறிய,
“கொஞ்சம் திட்டிட்டாங்க அத்தை. அவளே ஓகே ஆயிடுவா. நீங்க எதும் கேட்டுக்காதீங்க” என்றுவிட்டுச் சென்றனர்.
உள்ளே சென்றவளுக்கு பலவகையான உணர்வுகள். அப்படியே கட்டிலில் பொத்தென அமர்ந்தவளுக்கு சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் அவர்களது புகைப்படம் கண்ணில் பட்டது. மெல்ல எழுந்து சென்று அதனருகே நின்றவள், தன் நுனிவிரல் கொண்டு அதனை ஸ்பரிசிக்க, அவளுள் அப்படியொரு சிலிர்ப்பு!
அவளது எண்ணம் இரண்டு வருடங்கள் முன்பு பயணம் செய்தது.
அவர்கள் வேலைக்குச் சேர்ந்த புதிது அது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் அகநகை அகர்ணனைக் கண்டுகொண்ட நாள் அது!
அதற்காக யாவருக்கும் அகா ‘ட்ரீட்’ கொடுப்பதாகக் கூறி வெதுப்பகம் (பேக்கரி) ஒன்றுக்கு தோழர்கள் மூவரையும் அழைத்துச் சென்றிருந்தாள். அவள் முகத்தில் அப்படியொரு பொழிவு!
“என் பேங்க் பேலன்ஸயே நீங்க காலி பண்ணாலும் கோவமே படமாட்டேன்டா. அவ்வளவு சந்தோஷமா இருக்கேன்” என்று அகா கூற,
“அவசரப்பட்டு அப்படியெல்லாம் சொல்லிடாதடி குழந்தை.. உன் தற்போதைய பேங்க் பேலென்ஸ்ல ஒன்னும் கோடி கணக்குல இல்லை” என்று கூறிய ஜான் வாய்விட்டு சிரித்தாள்.
“ஏ போடி” என்றவள் “யார் யாருக்கு என்ன வேணும்?” என்று வினவ,
யாவரும் அவரவருக்கு வேண்டியதைக் கூறவும் வாங்கி வரச் சென்றாள்.
மூவரும் அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, வாங்கியவற்றைக் கொண்டு வந்து அமர்ந்தவளும் அவர்களுடன் பேச்சில் ஈடுபட்டாள்.
“ஓய் ஜுஸ் எங்க கேர்ள்?” என்று விஷ் வினவ,
“ஏ வாங்கிட்டு வர மறந்துட்டேன்டா” என்று எழவிருந்த அகாவை நிறுத்தி,
“இரு இரு. நான் வாங்கிட்டு வரேன்” என்று ஜான் சென்றாள்.
அங்கு தனக்கான பானத்தை ஆடர் செய்துவிட்டு மதிமகிழன் காத்திருக்க, அருகே வந்த ஜான் அவர்களுக்கான பழச்சாறைக் கேட்டுவிட்டுக் காத்திருந்தாள்.
மதிமகிழனுக்கான பானம் வரவழைக்கப்பட்டு அங்குள்ள மேஜையில் வைக்க, அதை தனக்கானது என்று நினைத்துக் கொண்டு எடுத்து ஒரு மிடறு பருகிவிட்டு மேஜையில் வைத்த ஜானுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அப்போதே அலைபேசியிலிருந்து நிமிர்ந்த மதி அவள் பருகிவிட்டு வைத்த பானத்தை எடுத்துப் பருக, பேசிவிட்டு திரும்பியவள் மூக்கு விடைக்க, “ஹலோ மிஸ்டர்” என்றாள்.
அதில் பழச்சாறைப் பருகியபடி திரும்பியவன், ‘என்ன?’ என்பது போல் அவளைப் பார்க்க,
“அது என்னோடது” என்றாள்.
அதில் அவளையும் அதையும் புரியாமல் பார்த்தவன், “இது நான் ஆர்டர் பண்ணதுதான்” என்க,
கடை ஊழியர் அவளுக்கான நாலு பழச்சாறையும் கொண்டு வந்து வைத்தார்.
அதை விழிகள் விரிய பார்த்தவள், “ச..சாரி.. அது எனக்குனு நினைச்சு.. கு..குடிச்சுட்டேன்” என்று அவள் கூற,
சட்டென அவனுக்குப் புரையேறியது.
அதில் முகத்தை சுருக்கி தனது தோழர்கள் புறம் அவள் பார்வையைத் திருப்ப, “ஏதோ ஏழறைய கூட்டிட்டாடா” என்றபடி விஷ் எழுந்து சென்றான்.
“சாரி.. நான் கவனிக்கவிலை. வேணும்னா என்னோடதை எடுத்துக்கோங்க” என அவள் தன் மன்னிப்பைக் கோர,
“இட்ஸ் ஓகே” என்றான்.
தனது பழச்சாறை பெண்ணவள் அவனுக்குக் கொடுக்க, “இல்ல இருக்கட்டும். நானும் இதை குடிச்சுட்டேன்” என்று அவன் கூற,
“நான் வேற வாங்கித் தரவா?” என்றாள்.
“இட்ஸ் ஓகேமா. பரவாயில்லை” என்றவன் அருகில் ஒரு சின்னப்பெண் ஓடி வந்து “அண்ணா..” என்க,
பேசிக் கொண்டிருந்தவன் அக்குழந்தையின் புறம் திரும்பினான்.
ஜான் அருகே வந்த விஷ் என்னவென்று கண்களால் வினவ, அவன் காதருகே எம்பி நடந்தவற்றைக் கிசுகிசுத்தாள்.
அக்குழந்தையோ அவனின் வெள்ளை அங்கியைக் கொடுத்து, “உங்க கோர்ட்” என்க,
“தேங்ஸ் பேபி டால். உங்க அம்மா அப்பா எங்க?” என்று வினவ,
“அதோ” என்று கைகாட்டினாள்.
அங்கு வந்த அப்பெண்ணின் பெற்றோர், “லாஸ்ட் செஷன் இன்னிக்கு தான் முடிஞ்சது சார். இன்னிக்கு வேற டாக்டர் இருந்தாங்க. உங்களைப் பார்த்துட்டு தான் போகணும்னு அடம் பண்ணா. நீங்க எங்கனு கேட்டப்ப பக்கத்துல பேக்கரிலனு சொன்னாங்க. டேபில்ல உள்ள கோர்டைப் பார்த்ததும் தூக்கிட்டு ஓடி வந்துட்டா” என்று கூற,
“இட்ஸ் ஓகே” என்றவன் குழந்தை உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்து, “பேபி டால் ஓகே?” என்க, அவள் பெற்றோரின் முகம் நொடி நேரம் கசந்து போனது.
“பெர்பெக்ட்லி ஆல்ரைட். இனி அழவேமாட்டேன். யாராச்சும் டச் பண்ணா நீங்க பேட் டச் பண்றீங்கனு சொல்லுவேன். அழவே மாட்டேன். எனக்கு டாய்ஸ் தருவீங்க தானே?” என்று அக்குழந்தைக் கூற,
ஜான் விஷ் இருவரும் அக்குழந்தைப் புறம் திரும்பினர்.
“வெரி குட் குட்டிமா. எதுனாலும் அம்மா அப்பாகிட்ட முதல்ல சொல்லிடணும்” என்று அவன் கூற,
“கண்டிப்பா அண்ணா” என்று அவனை கட்டியணைத்துக் கொண்டு “டாட்டா” என்றாள்.
“பாய்டா” என்றவன் அவள் பெற்றோரிடமும் கூறி அனுப்பி வைத்துவிட்டு அவர்கள் புறம் திரும்ப, இருவரும் மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றனர்.
‘அய்யோ டாக்டர் போலயே.. அடியே ஜானு.. அசிங்கமா போச்சேடி’ என்று அவள் சங்கோஜப்பட,
அவளைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தவன், “டோன்ட் ஃபீல் எம்பாரைஸ்ட். நான் எதுவும் நினைக்கலை” என்றுவிட்டுச் சென்றான்.
“ச்ச.. நைஸ் டைப்டா. இதே வேற யாராவதா இருந்தா என்னை கைமா பண்ணிருப்பாங்க” என்று ஜான் கூற,
“எங்கயாவது ஏழரைய இழுத்துவிட்டுகிட்டே இருக்காதடி. உனக்கு பஞ்சாயத்து பண்றதே எனக்கு வேலையா இருக்கு” என்றபடி விஷ் அவளை இழுத்து வந்தான்.
அந்த முதல் சந்திப்பில் அவளுக்கு ஸ்பார்க்கெல்லாம் இல்லை. அவன் மீது ஒரு நன்மதிப்பு மட்டும் இருந்தது. சொல்லிக் கொள்ளும்படி அவன் பேரழகன் இல்லை என்றாலும் ஆறடி உயரம், உடலுக்கு ஏற்ற உடல்வாகு, செந்நிறம் என்று பார்க்க நச்சென்று தான் இருந்தான்.
அந்த முதல் சந்திப்பில் எந்த மாயமும் நிகழவில்லை என்றாலும் அவர்களது இரண்டாம் சந்திப்பு அத்தனை சாதாரணமாக அமையவில்லை.
ஜகனை மருத்துவமனை அழைத்துச் சென்றிருந்தவள் அவருக்கான சிகிச்சை முடிந்து மருந்துகளை வாங்கிக் கொண்டு வர, அவளது வண்டி பெரும் சதி செய்தது.
தந்தையை அவள் பாவம்போல் பார்க்க, “சிவனேனு என் வண்டிய எடுத்துட்டு நானே வந்திருப்பேன் தானே? உன்னை கூட்டிட்டுவானு நான் கேட்டேனா?” என்றார்.
“ப்பா.. என்னப்பா இப்டி சொல்லிட்ட? உன்மேல உள்ள பாசத்துல தான நான் கூட்டிட்டு வரேன்னு சொன்னேன்” என்று மகள் கேட்டதில்,
“பாசத்தின் வெள்ளம் நம்மல எங்க அடிச்சுட்டு வந்து நிறுத்திருக்குனு பாரு மகளே” என்றவர், “வண்டி சரியில்லைனு நாலு நாளா சொல்றியே சர்வீஸ் பண்ணாம தான் இப்ப கூட்டிட்டு வந்தியா?” என்றார்.
“ஈஈ..” என இளித்தவள், “கவலையேபடாத நைனா.. நான் சொல்லி வச்சா வர்றதுக்கு ஒரு அடிமை இருக்காப்டி” என்றபடி அலைபேசியை எடுத்தவள் அழைத்தது துருவனுக்குத் தான்.
வெளியே சென்றிருந்தவன் அழைப்பை ஏற்று அவள் கூறிய செய்திகளில் வாய்க்கு வந்த நாலு நல்ல வார்த்தைகளில் பாராட்டிவிட்டு வந்து சேர்ந்தான்.
“டேய் டூ வீலர்? நான் பிறகு எப்படி வர்றது?” என்று ஜான் அவன் இருசக்கர வாகனத்தில் வந்திருப்பதை குறித்து வினவ,
“நடந்து வா” என்றவன் ஜகனை அழைத்துக் கொண்டு சென்றான்.
சில நொடிகளில் ‘மாமாவ விட்டுட்டு வரேன்’ என்ற குறுஞ்செய்தி வரவே சிரித்தபடி திரும்பியவள் கண்ணில் அவன் பட்டான்.
அவனை மறவாது நினைவு வைத்திருந்தவளின் ‘ஜாலி-டைப்’ மனம் சட்டென்று தயக்கமின்றி அவனிடம் பேச உந்த, அவனை நோக்கி சில அடி வைத்த பின்பே உடன் ஒரு இளம் பெண் இருப்பதைக் கண்டாள்.
‘டப்’ என்று அருகில் ஏதோ சத்தம் கேட்க, நெஞ்சை தொட்டுக் கொண்டவள் மண்டையில் நங்கென்ற கொட்டி வைத்த மனசாட்சி, ‘பக்குத்துல பலூன் வெடிச்ச சத்தம் லூசே’ என்று அறிவுறுத்தியது.
அருகே பலூன் உடைந்ததில் அழும் குட்டிப் பையனைப் பார்த்துவிட்டு அவனைப் பார்க்க, அப்பெண் அவனுடன் நன்கு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்.
பார்ப்பதற்கு ஜானைவிட அழகாகத்தான் இருந்தாள் என்பது அவள் கண்களில் பதிய, லேசாக பொறாமை எட்டிப் பார்த்தது அவளுக்கு.
பின்பே தன் உணர்வு உரைத்தவள், ‘எனக்கு ஏன் கோவம் வருது?’ என்று யோசிக்க அவளுக்குள் ஒரு வித்தியாசமான உணர்வு.
‘லவ்வா? அதென்ன பார்த்ததும்?’ என்று எண்ணியவள், ‘ஏன் இருக்கக் கூடாதா? பொண்ணு பார்க்க பத்து நிமிஷம் பார்த்ததும் ஓகே பண்ணி கல்யாணம் பண்ணி வாழ்றாங்க தானே?’ என்று கூறிக் கொண்டவள் அவனிடம் நெருங்க,
“தேங்கியூ டாக்டர்” என்று அவனுடன் பேசிய பெண்மணி விலகினாள்.
தானும் விடைபெற்று திரும்பியவன் முன் பாவை நின்றிருக்க, அவள் தன்னையே பார்ப்பதில் புரியாது விழித்தான்.
‘பார்க்க நல்லா தான் இருக்கான். எப்படியும் என் வயசு இருக்கும். அந்த குட்டி பொண்ணுகூட அன்னிக்கு பேசினதை வச்சு பார்த்தா நல்ல விதமா தான் படுது’ என்று எண்ணியவள்,
“உங்க நேம் என்ன டாக்டர்?” என்றாள்.
“மதிமகிழன். நீங்க?” என்றவன், “ஏ நீங்க அன்னிக்கு பேக்கரில பார்த்தேனே” என்று நினைவு பெற்றவனாய் கூறினான்.
“ம்ம்.. ஜான்விகா. வி.ஐ.பி.. ச்ச! வேலை கிடைச்சிடுச்சு. இன்ஜினியர்” என்று அவள் கூற,
லேசாக சிரித்தவன் தன் கரம் நீட்டி, “மதிமகிழன். சைகேட்ரிஸ்ட்” என்றான்.
“ம்ம்.. நினைச்சேன்” என்றவள், “அப்பாவ கூட்டிட்டு வந்தேன். வண்டி ஸ்டார்ட் ஆகலை. சோ ஃப்ரண்ட் வந்து அப்பாவ பிக் பண்ணிட்டு போனான். சடென்னா உங்களைப் பார்த்தேன்” என்று பேசிக் கொண்டிருக்கும்போதே அவனுக்கு அலைபேசியில் அழைப்பு வர,
‘அம்மா’ என்று திரையில் மின்னியது.
“வன் செக்” என்றவன் தாமதியாமல் அழைப்பை ஏற்று சுருக்காக பேசிவிட்டு வைக்க,
அவனையே ஆராயும் பார்வை பார்த்தவள், “கல்யாணம் ஆகலையோ?” என்றாள்.
அவளை புருவம் சுருங்க பார்த்தவன், “வாட்?” என்க,
“உங்க அம்மா நம்பர் கிடைக்குமா?” என்றாள்.
“எங்கம்மா நம்பரா? எதுக்கு?” என்று அவன் வினவ,
“சும்மா பேசிப்பார்க்க” என்றாள்.
“புரியலையே” என்றவன் சந்தேகப் பார்வையைக் கண்டு சிரித்துக் கொண்டவள், “லவ் பண்ணலாமானு யோசிக்குறேன்” என்க,
“அதுக்கு?” என்றான்.
“நீங்க ஃப்ரீயா இருந்தா உங்களையே லவ் பண்ணி கல்யாணம் பண்ணி கியூட்டா ரெண்டு பிள்ளை பெத்துக்கலாம்னு ஒரு எண்ணம்” என்றாளே பார்க்கலாம்.
ஆடவன் அவளை விழிகள் தெறிக்க பார்க்க, “இங்க தானே வர்க் பண்றீங்க? ஒன்னும் அவசரமில்லை. யோசிச்சு இந்த வீக்கெண்ட்ல சொல்லுங்க. நான் வரேன். பேரு (பெயர்) ஜான்விகா. அப்பா ஜகன் அம்மா ஆத்விகா. சாரி உங்களுக்கு மச்சான் மச்சினிலாம் கிடையாது. பட் டோன்ட் வொரி எங்க ஃபேமிலி பெருசு. என் கூட மூனு ஜீவன்கள் தோழர்கள் என்ற உயரிய பதிவில பக்கத்து பக்கத்து வீட்டுலயே இருக்காங்க. நான் இப்படிதான் கொஞ்சம்.. இல்ல இல்ல ரொம்பவே வாயாடி. ஆனா பாயிண்டா பேசுவேன்” என்று அவனை மேலும் அதிரவைத்தாள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

ஜான் மகி முதல் சந்திப்பு அழகா இருக்கு. 😍😍✨
பாச வெள்ளம் எங்க அடிச்சிட்டு வந்து தள்ளியிருக்கு இருக்கு பாரு. 🤣🤣
தோழர்கள் என்ற உயரிய பதவியில் இருக்காங்களா?
பாயிண்ட் டா பேசுவேன். தன்னை தானே பாராட்டுகிறா.
பார்ட் டைம் டெட் பாடி எங்க போச்சுது. 🤔 இந்த மகி எங்க போனான். பாடி பின்னாடியே போய்ட்டானா?