Loading

டைனிங் டேபிளில் பெரிய பஞ்சாயத்தே ஓடிக் கொண்டிருந்தது.

” எப்படியும் கடை நம்ம பையனுக்கு தான். அப்புறம் என்ன ? அவன் பெயரையே வைக்கலாமே.” என்றார் லட்சுமி.

” இல்ல என் பொண்ணு பெயர் தான் வைப்பேன்.” என்றார் ரவி.

” ரோஜாக்கு நம்ம துணிக் கடையை பார்த்துக்க தெரியாது. அவ பொம்பளை பிள்ளை அவளுக்கும் கடைக்கும் சம்பந்தம் இல்லை.”என்றார் லட்சுமி.

” இதை நீயா முடிவு பண்ணக்கூடாது லட்சு. நான் படிச்சிட்டு கடைய தான் பார்த்துப்பேன். இன்னும் பொண்ணுனு என்ன மட்டந்தட்டுறத நீ விடவே இல்லையா? உன் பிள்ளைய விட நான் திறமையா கடைய நடத்துவேன். அதை நீயே பார்க்கத் தானே போற.” என்றுக் கூறிய ரோஜா, காலேஜுற்கு ரெடியாகி சாப்பிட வந்தாள்.

” அது நடக்காது . என் பிள்ளைக்கு தான் கடை . கடைக்கு அவன் பெயர் தான் வைக்கணும்.” என்று பிடிவாதமாக நின்றார் லட்சுமி.

‘என்னைக்கும் நான் இந்த வீட்டில் யாரோ தான். எனக்கு அந்த கடை தேவை இல்லை. ஆனால் எனக்கு இந்த வீட்டில் உரிமை இல்லையே.’ என்று நினைத்தவள் கோபமாக சாப்பிடாமல் பைக் கீயை எடுத்துக் கொண்டு ரவியிடம்,”அப்பா காலேஜ் போயிட்டு வரேன்.”என்றவள் வெளியே செல்ல.

” சாப்பிட்டு போமா. ” என்ற ரவி அவள் பின்னாலே வர.

” இல்ல பா வேண்டாம். பசிக்கலை.”

” இந்தா…” என்ற ரவி அவளுக்கு பணம் தந்தார்.

“வேண்டாம் பா.”

” ப்ச் வாங்கிக்க மா. பார்த்து பொறுமையா போயிட்டு வா டா.” என்ற ரவி உள்ளே வந்தார்.

” உடம்பு முழுக்க திமிர். எல்லாம் நீங்க குடுக்குற செல்லம் தான். ஒரு நாள் பட்டினியா இருந்தா தான் சாப்பாட்டோட அருமை புரியும். நீங்க தான் பணத்த நீட்டிடுறீங்க. அவ கேண்டீன்ல நல்லா கொட்டிப்பா.” என்றார் லட்சுமி கோபமாக.

‘ கடையில் ரோஜாவிற்கு இருக்கும் ஆர்வம் துளிக் கூட உன் பையன் ஆகாஷுக்கு இல்லை. அது உனக்கு தான் புரியலை. லீவ்ல ரோஜா வந்து பொறுப்பா கடைய பார்த்துக்குறா. உன் பிள்ளை என் கட்டாயத்தாலஇரண்டு மணி நேரம் இருந்துட்டு ஊர் சுத்த போயிடுவான். என் பொண்ணு எவ்வளவு திறமைசாலி தெரியுமா?’ என்று மனதில் மட்டுமே நினைத்தார் ரவி. வெளியே சொல்லி காலையிலே சண்டை போட அவர் விரும்பவில்லை.

கிட்சன் சென்ற லட்சுமி ,” பொம்பள பிள்ள டெய்லியும் வெளிய சாப்பிட்டா உடம்புக்கு என்ன ஆவுறது. சத்து வேண்டாமா. பொண்ணும், அப்பாவும் என் பேச்சை கேக்குறதே இல்லை.

பையனுக்கு பைக்கு வாங்க சொன்னது ஒரு தப்பா. அடுத்த நாளே பைக் ஓட்ட கத்துக்கிட்டா . உடனே அவங்க அப்பா பொம்பள பிள்ளைக்கு பைக் வாங்கி தந்துட்டாரு. இவ காலேஜுக்கு அந்த பைக்ல போயிட்டு வரதுக்குள்ளாற நான் படுற பாடு இவங்களுக்கு எப்பப் புரியும்? ” என்று புலம்பியவரின் தாய் பாசத்தை அப்பாவும், மகளும் புரிந்துக்கொள்ளவில்லை‌.

“அம்மா…” என்ற ஆகாஷ் லட்சுமியை பின்னால் அணைத்தான்.

” சொல்லு டா கண்ணா…”

” காலைலே என்ன புலம்பல்?” என்றான் ஆகாஷ்.

“எல்லாம் உன் தங்கச்சியால் தான் . உங்க அப்பாவும் அவளை என்ன ஏதுன்னு கேட்காம அவளுக்கு சப்போட் பண்றார்.”

‘ ரோஜாவிடம் இன்னைக்காவது பேசணும். அவ என் கிட்ட பேச மாட்டேங்குறா. அம்மா எனக்காக பேசுறதுனால ரோஜாவுக்கு என்ன பிடிக்கவே மாட்டேங்குது. அவ என் கூட ஃப்ரெண்ட்லியா பேசவே மாட்டாளா?’ என்று நினைத்தவன்.

“விடுங்கமா . நான் வெளிய போயிட்டு வரேன்.” என்ற ஆகாஷ் சென்றது அவனுக்குப் பிடித்த ஓவிய கண்காட்சி தான்.

ஆகாஷின் கனவெல்லாம் ஓவியம் தான். அதில் அவனுக்கு திறமையும் உண்டு . ஆனால், லட்சுமிக்கு அது பிடிக்காத ஒரே காரணத்திற்காக அவன் வேண்டா வெறுப்பாக கடைக்கு சென்றுக் கொண்டிருக்கிறான்.

*****

காலேஜ் உள்ளே வந்து , அமைதியாக நண்பர்களோடு உட்கார்ந்துக் கொண்டாள் ரோஜா. அவளுக்கு ரோஷம் அதிகம். நாள் முழுக்க சாப்பிடாமல் இருப்பாளே தவிர, ரவி குடுத்த பணத்தில் சாப்பிடமாட்டாள்.

” நேத்து , நீங்க போனதும். எனக்கும் கவினுக்கும் பைக் ரேஸ் தெரியுமா? இந்த மாதிரியெல்லாம் பசங்களால மட்டும் தான் த்ரில்லர் ரேஸ் வெச்சு என்ஜாய் பண்ண முடியும். பாவம் உங்களால அப்படியெல்லாம் என்ஜாய் பண்ண முடியாது. ஏன்னா நீங்க பொண்ணுங்க.” என்றான் அஸ்வின்.ரோஜாவின் நண்பன்.

“இன்னைக்கு ஈவ்னிங் ரேஸ் . உனக்கும் எனக்கும். ரேஸ்ல இன்னும் த்ரில் சேர்க்கலாம். ட்ரிபிள் ரேஸ் வெச்சுக்லாம். ” என்றாள் ரோஜா.

“ரோஜா உன்னால முடியாது. சும்மா என்கிட்ட பெட் கட்டி தோத்து போயிடாதே.” என்றான் அஸ்வின்.

“டேய் ஒழுங்கா ரேஸ்ஸுக்கு வா டா . என்ன ரோஜாவைப் பார்த்து பயப்பிடுறீயா?”என்று ரோஜாவை ஏத்திவிட்டாள் அவளின் தொழி சங்கரி.

“ரோஜா, எதோ விளையாட்டா நான் பசங்களோடு ரேஸ் போனத பத்தி சொன்னேன் . நீ உடனே நம்ம ரேஸ் வெச்சுக்கலாம்ணு சொல்ற. அதுவும் ட்ரிபிள்ஸ் ரேஸ்ணு சொல்ற. ரொம்ப ரிஸ்க்கானது. கொஞ்சம் மிஸ்ஸான உயிரே போயிடும். ப்ளீஸ் இந்த விபரீத விளையாட்டு வேண்டாம்.” என்றான் அஸ்வின்.

எல்லா செயல்களிலும் தான் ஆண்களுக்கு நிகர் இல்லை அவர்களை விட ஒரு படி உயர்ந்தவள் என்று நிரூபிப்பவள் தான் ரோஜா.

காரணம் அவளின் தாய் லட்சுமி. எப்போதும் ரோஜாவின் வீட்டில் அவளின் அண்ணனுக்கு தான் முன்னுரிமை தரும் அவளின்
அம்மா. அதனால் சின்ன சின்ன விஷயத்தில் தொடங்கிய பிடிவாதம் . அவள் வளர, வளர எல்லா விஷயத்திலும் தான் எந்த ஆணுக்கும் குறைவானவள் இல்லை என்று நிரூபிக்க தொடங்கிவிட்டாள்.

“கம் ஆன் அஸ்வின். இதுல ஒரு ரிஸ்க்கும் இல்லை‌. நம்ம என்ன ஹைவேலையா ரேஸ் வெச்சுக்க போறோம். ஜஸ்ட் ஒன் கிலோமீட்டர் நம்ம காலேஜிலிருந்து சங்கரி வீடு வரைக்கும் தான் ரேஸ் . நம்ம போற வழி எல்லாம் சின்ன சின்ன தெரு தான் வரும்.”என்றாள் ரோஜா.

“நீ இவ்வளவு சொல்லறதுனால நான் வரேன்.”

அரட்டையெல்லாம் முடிய ரோஜாவின் கேங் கிளாஸிற்கு சென்றனர். எப்போது காலேஜ் முடியும் என்று காத்துக் கொண்டிருந்தாள் ரோஜா.

சங்கரியும், ரோஜாவும் பைக்கில் தான் காலேஜ் செல்வது வருவதெல்லாம் . அதனால் இரண்டு ஹெல்மெட் இருக்க . ஒன்றை சங்கரி போட்டுக்கொள்ள மற்றொன்றை திவ்யாவிடம் நீட்டினாள் ரோஜா.

அஸ்வினோடு அவனின் இரண்டு நண்பர்கள் பைக்கில் உட்கார்ந்திருக்க . ரோஜாவும் சங்கரி , திவ்யாவோடு தன்னோட பல்சர் பைக்கில் ரெடியாக நின்றாள்.

ரேஸ் ஆரம்பிக்க , வேகமாக பைக்கை ஓட்டினாள் ரோஜா.

அவ்வளவு வேகத்திலும் கவனமாக தான் ஓட்டினாள். ஆனால், ஒரு தெருவில் திரும்பிம் போது டெம்ப்போ வர .

ரோஜா வந்த வேகத்தில் அதில் மோதி தூக்கி வீசப்பட்டாள்.

மீதி இருவரும் ஹெல்மெட் போட்டிருந்ததால் பெரிதாக தலையில் அடிப்படாமல் கைக் காலில் மட்டும் அடிப்பட்டிருக்க.

ரோஜாவிற்கு தலையில் அடிப்பட்டு இரத்தம் வெள்ளமாக வர , அவளின் வெள்ளை துப்பட்டா முழுவதும் சிவப்பாக மாறியது.

பதறடித்து ஓடி வந்த அஸ்வின் ரோஜாவை தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு . ஆம்புலன்ஸிற்கு ஃபோன் பண்ணான்.

ரோஜா கஷ்டப்பட்டு ,” அஸ்வின் லைஃப் இஸ் டர் ஆர் டெத் கேம். இது நான் எடுத்த முடிவு. நீ வருத்தப்பட வேண்டாம். எங்க அம்மா கிட்ட சாரி சொன்னதா சொல்லிடு. அப்பா கிட்ட ஐ வில் மிஸ் ஹிம்ணு சொல்லிடு.”

“ரோஜா, உனக்கு எதுவும் ஆகாது. நீயே இத உங்க அப்பா, அம்மா கிட்ட சொல்லுவ.” என்ற அஸ்வின் அவளை ஹாஸ்பிடல் அழைத்துச் சென்றான்.

ஐசியு வார்டுக்கு வெளியே ஓடி வந்த லட்சுமி கண்ணீரோடு ,” அச்சோ என் மக காலைலே என் கூட சண்ட போட்டுட்டு பேசாம காலேஜ் போனா. போயிட்டு வரேன் கூட சொல்லாம போனது இதுக்காக தானா? என் கூட இனி பேசமாட்டாளா?” என்று கத்தினார்.

” அவளுக்கு ஒன்னும் ஆகாது நீ சும்மா இரு லட்சுமி.” என்று ரவி பாவமாகக் கூறியவர், அஸ்வினிடம் வந்து ,”என்னாச்சு பா. அவ நல்லா தான் பைக் ஓட்டுவா. எப்படி இப்படி ஆனது?”

“அங்கிள்…” என்றவனால் அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை. ரவி என்றால் ரோஜாவிற்கு எவ்வளவு பிடித்தம் என்பதை தெரிந்து வைத்திருந்தான் அஸ்வின்.

ரோஜாவிற்கு எல்லாமே ரவி தான்‌. லட்சுமியிடம் கிடைக்காத அன்பும், பாசமும் ரவியிடம் கிடைக்க… ரோஜா, அப்பாவின் செல்லமாக மாறிவிட்டாள்.

அவரிடம் நடந்ததை சொல்ல ஏனோ அஸ்வின் விரும்பவில்லை.

மீண்டும் ரவி,”என்ன தான் சொல்றாங்க?”

” தலைல அடி. ரொம்ப கஷ்டம்ணு சொல்றாங்க.” என்றான் அஸ்வின்.

” அச்சோ ரோஜா…” என்று கதறினார் லட்சுமி.

ஐசியு வார்டிலிருந்து வெளியே வந்த டாக்டர் ,”சாரி. எங்களால ஒன்னும் பண்ண முடியலை.”

” கடைசி வரைக்கும் என்னோட அன்பை புரிஞ்சுக்காம போயிட்டியே ரோஜா.” என்று கத்தி அழுதார் லட்சுமி.

அவரை சமாதானம் செய்வதே ரவிக்கு பெரிய வேலையாக இருக்க.

யாருக்கும் தெரியாமல் போனது ரோஜாவின் நட்பிற்காக ஏங்கிய ஆகாஷின் மனம்.

மீதி வேலைகளை பார்த்துக் கொண்டனர் ஆகாஷும் , அஸ்வினும்.

” அப்பா …” என்றான் ஆகாஷ்.

” என்ன பா?” என்றவர் குரலே உடைந்திருந்தது.

” நம்ம ரோஜா உறுப்பை டொனேட் பண்ணுறீங்களாணு ஹாஸ்பிட்டல கேக்குறாங்க பா. அதனால பல உயிரை காப்பாற்ற முடியும். அது மட்டுமில்ல பா நம்ம ரோஜா, பல உருவத்துல வாழ்ந்துட்டிருப்பா.” என்றான் ஆகாஷ்.

” அவளோட ஆசையும் அதான் பா. பார்த்து பண்ணுங்க. ” என்றவர் ஓரமாக லட்சுமி பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டார்.

அவரின் நிலையை உணர்ந்திருந்தான் ஆகாஷ். ரவிக்கு எல்லாமே ரோஜா தான். வீட்டிற்கு வந்ததும் அவர் அழைக்கும் முதல் பெயர் ரோஜா தான். ‘இனி இவரை எப்படி தேற்றுவது? ‘ என்று நினைத்து பெருமூச்சு விட்டான் ஆகாஷ்.

லட்சுமியும், ஓயாமல் ரோஜாவோடு சண்டை போட்டுக் கொண்டே அவளோடே தான் இருப்பார். ஆனால் லட்சுமி அவரின் அன்பை வெளிகாட்டியதே இல்லை‌.

அஸ்வின் குற்ற உணர்ச்சியிலே சுற்றிக் கொண்டிருந்தான்.

சங்கரியும், திவ்யாவும் ஹெல்மெட் போட்டிருந்ததால் உயிர் தப்பினார்கள்.

விளையாட்டாய் ஆரம்பித்தது ஒரு உயிருக்கு முற்று புள்ளி வைத்துவிட்டது.

அவளின் உடல் வீட்டின் நடுவில் இருக்க. விளக்கு ஏற்றி, ஊதுபத்தி வாசம் எங்கும் வீச, அவளுக்கு மாலை போட்டு வணங்க உறவினர்கள் வர.

துணியில் கட்டிப் போட்டிருந்த ரோஜா வேகமாக கஷ்டப்பட்டு எழுந்திருக்க.

ஏசி அறையையும் மீறி பயத்தில் வியர்வை வர .

” கனவா… எல்லாமே நிஜமா நடந்த மாதிரியே இருந்தது. எனக்கு ஒன்னும் இல்ல . நான் நல்லா இருக்கேன்.” என்ற ரோஜா ஃபோனை எடுத்தாள் . மணி மூன்று என்று காட்டியது.

“நைட்டு அம்மா கூட சண்டை போட்டது‌. காலேஜ்ல அஸ்வின் ரேஸ் பத்தி பேசிட்டே இருந்தது, எல்லாம் சேர்ந்து இப்படி கனவா வந்துடுச்சோ? ஆனா, முழிக்குற வரை நிஜம்ணு நினைச்சி பயந்தே போயிட்டேன்.” என்று சத்தமாக புலம்பினாள் ரோஜா.

தூக்கம் வராமல் இருக்க , எழுந்து தண்ணீர் குடித்தவள். அவள் அறையின் பால்கனிக்கு சென்றாள்.

அந்த இருட்டும், அமைதியும் தூரத்தில் தெரியும் நிலாவும் ரோஜாவிற்கு பதட்டத்தை குறைக்க. அவள் யோசிக்க ஆரம்பித்தாள். வாழ்க்கை இவ்வளவு தான் என்பது புரிந்தது.

‘ இருக்கறது ஒரு லைஃப் . எவ்வளவு நாள் உயிரோட இருப்போம்ணு தெரியலை. இருக்க வரைக்கும் நம்மளும் சந்தோஷமா இருக்கணும்,நம்மள சுத்தி உள்ளவங்களையும் சந்தோஷமா வெச்சுக்கணும். நாளைக்கு நான் உயிரோட இருப்பனானே தெரியலை. ஏன் எதுக்கு இந்த ஈகோ , கோபம், போட்டி, பொறாமை எல்லாம். ‘ என்று நீண்ட நேரம் யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருந்தாள் ரோஜா.

மணி ஐந்து என்று காட்ட. படுக்க சென்றாள் ரோஜா.

எட்டு மணிக்கு குளித்து ரெடியாகி கீழே வந்த ரோஜா கிச்சன் உள்ளே சென்றாள்.

அதை வாய் பிளந்து பார்த்தனர் சோபாவில் உட்கார்ந்திருந்த ரவியும் ஆகாஷும்.

“பொம்பள பிள்ளை எல்லா வேலையும் தெரிஞ்சிக்கணும்.” என்று லட்சுமி எவ்வளவு திட்டியும் கிச்சன் உள்ளேக் கூட சென்றதில்லை ரோஜா.

ஆனால் யாரும் சொல்லாமல் ரோஜா இன்று கிச்சன் உள்ளே சென்றது தான் அவர்களின் ஆச்சரியத்திற்கு காரணம்.

கிச்சன் உள்ளே வந்த ரோஜாவை அதிர்ந்து பார்த்த லட்சுமியை தாண்டி சென்றவள், டிஃபனுக்கு செய்து வைத்திருந்த உணவுகளை டைனிங் டேபிளில் எடுத்து வைத்தாள்.

ரவியிடம் ,” அப்பா காஃபி குடிக்கிறீங்களா?” என்று கேட்டாள்.

“இல்ல மா . நான் குடிச்சிட்டேன்.”

“அண்ணா நீ குடிச்சிட்டியா?”

ஆகாஷால் நம்பவே முடியவில்லை. அவனை ஒரு பொருட்டாகக் கூட நினைக்க மாட்டாள் ரோஜா . ஆனால் இன்று அவளாக இப்படி கேட்கவும் அவன் வானில் பறக்க,” குடிச்சிட்டேன் . நீ போய் காஃபி குடி ரோஜா.” என்றான்.

ரோஜா என்ன செய்கிறாள் என்று அவள் பின்னால் வந்து பார்த்துக் கொண்டிருந்த லட்சுமி வழக்கம் போல்,” மணி எட்டாகுது இன்னுமா காஃபி குடிக்காம இருப்பாங்க? அவ்வளவு அக்கறை இருந்திருந்தா முன்னாடியே வந்து கேட்டிருக்கணும்.” என்றார்.

‘ரோஜாவே மாறினாலும் இவ மாறவிடமாட்டா.’ என்று மானசிகமாக தலையில் அடித்துக் கொண்டார் ரவி.

‘இப்போ தான் அவளே என்கிட்ட பேசுறா . அது உனக்கு பொறுக்கலையா?’ என்று நினைத்தான் ஆகாஷ்.

“சாரி மா . நைட் சரியா தூங்கலை. இனிமே சீக்கிரமா எழுந்திருக்கிறேன்.” என்ற ரோஜா கிச்சன் உள்ளே செல்ல.

‘இவ நல்ல விதமாக பேசுகிறாளா?? இல்லை என்ன கிண்டல் பண்ணிட்டு போறாளா??? ஒன்னும் புரியலையே.’ என்று லட்சுமி யோசித்துக் கொண்டிருக்க.

ரோஜா சென்றதும் ரவியும் ஆகாஷும் சிரித்துவிட . அவர்களை முறைத்த லட்சுமி, மீண்டும் ரோஜாவை பின் தொடர்ந்து கிச்சன் சென்றார்.

ரோஜா தனக்கான காஃபியை போட்டுக் கொண்டிருந்தாள்‌.

‘ என் பொண்ணுக்கு என்ன ஆச்சுணு தெரியலையே?’ என்று மனதில் புலம்பினர் லட்சுமி.

சாப்பிட்டு முடித்ததும் ஆகாஷிடம் ரோஜா ,” அண்ணா வெளிய போலாமா?” என்றுக் கேட்க.

“போலாம்.” என்ற ஆகாஷ் பைக் கீயை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.

தன் பைக் கீயை எடுக்க சென்றவளின் நினைவு நேற்று கனவில் நடந்த விபத்தை நினைக்க. அவளின் கைகள் நடுங்க பைக் கீயை எடுக்காமலே வெளியே வந்தாள்.

ஆகாஷ் பைக்கில் நின்றுக் கொண்டிருக்க. அவன் வண்டியில் ஏறினாள் ரோஜா.

கேள்வியாக அவளின் பைக்கை பார்த்தவன் ரோஜாவிடம்,” எங்க போறோம் ரோஜா?” என்றுக் கேட்டான்.

” நுங்கம்பாக்கத்துல நடக்குற ஓவிய கண்காட்சிக்கு போ.” என்றாள் ரோஜா.

ரோஜாவை கண்ணாடி வழியாக ஆழ்ந்துப் பார்த்தான்.

ரோஜாவும் கண்ணாடி வழியாக ஆகாஷை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வேறு எதுவும் பேசாமல் பைக்கை எடுத்தான் ஆகாஷ்.

‘எதுவும் பேசாமல் அமைதியாக ஓவியங்களை பார்த்துவிட்டு வரணும்.’ என்று முடிவெடுத்து உள்ளேநுழைந்தான் ஆகாஷ் .

ஆனால் அவனின் ஆழ்மன
ஆசை அவனின் எண்ணத்தை வென்றது.

ஒவ்வொரு ஓவியத்தையும், பார்த்து ரசித்தவனால் அதன் அழகை வர்ணிக்காமல் இருக்க முடியவில்லை. ரோஜாவிடம் எல்லா ஓவியத்தையும் எப்படி வரைந்திருப்பார்கள் . அதன் நுனுக்கம் மற்றும் அதன் அர்த்தத்தை சொல்லிக் கொண்டே வந்தான்.

எல்லாத்தையும் கவனித்துக் கொண்டே வந்தாள் ரோஜா.

ஞாயிற்று கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருக்க. பொறுமையாக எல்லா ஓவியத்தையும் பார்த்தவர்கள். வெளியே வர.

” ரோஜா உன்ன வீட்டுல விட்டுடவா?”

” இல்ல ணா. கடைக்கு போகலாம்.”

கடைக்குள் சென்ற ஆகாஷ் அமைதியாக ரவி பக்கத்தில் உட்கார்ந்து ஃபோனை பார்க்க ஆரம்பித்தான்.

எல்லாத்தையும் கவனித்துக் கொண்டிருந்தாள் ரோஜா.

ரோஜா வழக்கம் போல் கடைக்கு வந்ததும் எல்லா ப்ளோருக்கும் சென்று பார்த்தாள். கஸ்டமர்ஸ் கேட்பதை ஒழுங்க எடுத்து தராங்களா என்று பார்த்தவள்.

பின் கீழே வந்து எவ்வளவு வியாபாரம் ஆனது என்று கணக்கு பார்த்தவள்.

சிஸ்டத்தில் ஒரு வார கணக்கை பார்த்தாள். ஆம் ரோஜா காலேஜ் போவதால் ஞாயிறு தான் கடைக்கு வருவாள். வரும் போது எல்லா கணக்கையும் பார்ப்பவள். ஸ்டாக்கையும் சரி பார்த்து, எந்த துணி வகை அதிகமாக விற்று இருக்கு. எது விற்கவில்லை. இனி எந்த வகை துணி வாங்கணும் என்று பார்த்து ரவியிடம் சொல்லுவாள்.

எல்லா வேலைகளையும் செய்து முடித்தவள் உட்கார. ஆகாஷ் ஃபோன் தான் பார்த்துக் கொண்டிருக்க.

‘ஏன் இவன் இப்படி இருக்கிறான்?’ என்பது போல் அவனை பார்த்துக் கொண்டிருந்தார் ரவி.

” அப்பா…” என்றாள் ரோஜா.

” என்ன டா …”

“ஏன் அண்ணனை அப்படி பார்க்குறீங்க?”

“நீ வந்ததும் என்ன பண்ண? உங்க அண்ணன் என்ன பண்ணிட்டிருக்கான்?” என்றார் ரவி.

” அப்பா, அவனுக்கு நம்ம துணி கடையில் இன்ட்ரஸ்ட் இல்ல. அவனுக்கு….” என்று ரோஜா சொல்லி முடிக்கும் முன்

“வேண்டாம் ரோஜா.” என்றான் ஆகாஷ்.

ரவியின் கவனத்திற்கு வராதளவு பார்த்துக் கொண்டார் லட்சுமி‌. அதனால் , ரவிக்கு தெரியாமலே போனது ஆகாஷின் ஓவியத்திறமை.

ரவி கேள்வியாக பார்க்க.

“அப்பா அவனுக்கு ஓவியத்துல தான் பா இன்ட்ரெஸ்ட். அப்படி இருக்கப்ப, அவனால எப்படி நம்ம கடைய பார்த்துக்க முடியும்?”

“என்னமா சொல்ற?” என்றானர் ரவி.

ஆகாஷின் ஃபோனை பிடுங்கிய ரோஜா‌. அவன் யாருக்கும் தெரியாமல் வரைந்து வைத்திருந்த ஓவியத்தின் போட்டோவை காண்பித்தாள்.

ஆகாஷ் ஃபோனை வாங்க நினைக்க . அவனை தடுத்த ரவி. எல்லா ஃபோட்டோவையும் பார்த்தார்.

“ஏன் டா கண்ணா இவ்வளவு நாளா சொல்லல?” என்றுக் கேட்டார் ரவி.

“அப்பா … அம்மாக்கு பிடிக்கல.” என்று தயங்கிக் கொண்டே சொல்ல.

” உங்க அம்மாக்கு வேற வேலையே இல்லை. பிஸினஸ் பிடிக்காத உன்ன கடைய பார்த்துக்க சொல்லி கட்டாயப்படுத்துறதும், கடைல ஆர்வமா இருக்க உன் தங்கச்சிய கடைக்கு போகதணு சொல்றதும் தான் அவளுக்கு வேலையே.”

“அப்பா , அவங்க பண்ணுறத விடுங்க. இப்போ என்ன பண்ண போறீங்க?” என்றுக் கேட்டாள் ரோஜா.

“உங்க அண்ணன் கைக் கால உடைச்சாவது கடைய பார்த்துக்க வைப்பேன்.” என்றவர் ஓரக்கண்ணால் ஆகாஷை பார்க்க.

கடைசி நம்பிக்கையும் உடைந்து போக . கண்களில் அடிப்பட்ட வலி தெரிய அமைதியாக உட்கார்ந்திருந்தான் ஆகாஷ்.

“டேய் கண்ணா. சும்மா சொன்னேன் டா. நீ ஓவியத்துல உன் திறமைய வெளிப்படுத்து. உனக்கு துணையா நான் இருப்பேன்.”

“ரொம்ப தேங்க்ஸ் பா.” என்ற ஆகாஷ் ரவியை அணைத்துக் கொள்ள.

ரோஜாவின் முகத்திலும் சிரிப்பு தெரிய,” அப்பா, அம்மாவ எப்படி சமாளிக்குறது?”

” ஆகாஷ், உங்க அம்மா வெளியிலிருந்து பார்க்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா தெரிஞ்சாலும். அவ செய்றது எல்லாம் உங்க நல்லதுக்கு தான் . நீ போய் பொறுமையா அம்மா கிட்ட உன் விருப்பத்தை சொல்லி அவளுக்கு புரிய வை. கண்டிப்பா அவ புரிஞ்சிப்பா. அது வரைக்கும் நீ பொறுமையா இரு. எப்பவும் அப்பா உனக்கு தான் சப்போர்ட்டா இருப்பேன்‌. அது மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ.” என்றார் ரவி.

” ஓகே பா.” என்ற ஆகாஷின் முகத்தில் நம்பிக்கையும் தெளிவும் தெரிந்தது.

‘இது நாள் வரை ரோஜாவை புரிந்துக் கொண்ட அளவு ஆகாஷை புரிந்துக் கொள்ளாமல் தப்பு பண்ணிட்டேனே.’ என்று வருந்தினார் ரவி.

” திடீர்னு என் தங்கச்சிக்கு எங்கிருந்து அறிவு வந்தது. இந்த அண்ணன் கிட்ட ஈகோ இல்லாம பேச? என்னோட பைக்குல வர? அண்ணன்னோட விருப்பத்திற்காக அப்பா கிட்ட பேச? ” என்று கேட்டான் ஆகாஷ்.

“நேத்து நைட் கனவுல.” என்றாள் ரோஜா.

“அப்படியா?”

” உண்மையா ணா.”

“ரோஜா , நீ இன்னைக்கு அம்மா கூட சண்டை போட மறந்துட்ட.”

” இனிமே இப்படி தானா.”

அவளின் பதிலில் பயந்த ஆகாஷ்,” ரோஜா , ஏதாவது பிரச்சனையா?”

“இல்ல ணா. நாளைக்கு என்ன நடக்கும்ணே தெரியாத லைஃப். அப்படிருக்க எதுக்கு இந்த கோபம் , ஈகோ எல்லாம்ணு தோணுச்சு. அதான் இந்த மாற்றம்.”

“நீ சொல்வதும் உண்மை தான்.”

****
இரவு உணவு முடித்து தூங்க செல்லும் முன் ரோஜா,” அம்மா நேத்து நைட் கடைக்கு யார் பெயர் வைக்கணும்னு நாம சண்டை போட்டோம்ல. இப்போ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை அண்ணன் பெயரே வெச்சிடுங்க.” என்ற ரோஜா ரூமிற்கு சென்றுவிட்டாள்.

” ஏங்க, நம்ம ரோஜாக்கு என்னமோ ஆகிடுச்சு. அவளை நாளைக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும். காலைலிருந்து ஆளே சரியில்லை. எனக்கு பயமா இருக்கு. நேத்து என் பெயர் தான் வைக்கணும்னு போட்ட சண்டை என்ன ? இன்னைக்கு இவ்வுளவு ஈஸியா விட்டுக்குடுத்துட்டு போயிட்டா?” என்றார் லட்சுமி.

“உனக்கு வேற வேலையே இல்லையா? என் பொண்ணு என்ன செஞ்சாலும் அத குறை சொல்லிட்டே இருப்பியா? அவ சண்டை போட்டாலும் தப்பு . சமாதானமா போனாலும் தப்பு.” என்றார் ரவி.

” நான் உங்க பொண்ண இனி ஒன்னும் சொல்லலை .” என்றார் லட்சுமி .

நிறைவாக உணர்ந்தாள் ரோஜா.

‘இதுவும் நல்லா தான் இருக்கு. ஆனால் , எவ்வளவு நாள் இதே மாதிரி இருப்பேனு தெரியலையே. என்னால் முடிந்தளவு இப்படியே கோபப்படாம எந்த ஈகோவும் இல்லாம இருக்கணும்.’ என்று முடிவெடுத்தாள் ரோஜா.

மறுநாள் காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து தயாராக கீழே வந்த ரோஜா லட்சுமிக்கு உதவி செய்துவிட்டு சாப்பிட்டு காலேஜிக்கு ரெடியானவள்.

பைக் கீயை எடுத்துக் கொண்டு வண்டியில் ஏறியவளின் வெள்ளை நிற துப்பட்டா பைக் வீல் பக்கத்தில் சிக்குவது போல் இருப்பது தெரியாமல் பைக் ஓட்டினாள் ரோஜா. விதியின் சதியோ???

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

7 Comments

  1. மிக நேர்த்தியான படைப்பு. நயத்துடன் ஈர்க்கும் எழுத்து. கதை நகர்வை கூற வார்த்தைகளே இல்லை. மனதிற்கு நெருக்கமாக மாறி விட்டனர் கதை மாந்தர்கள் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  2. நிரந்தரம் இல்லா வாழ்வில் ஈகோ,கோவம் எதுக்கு என உணர்த்தியது அருமை சிஸ்..ரோஜாவின் அம்மாவை போல் இல்லாமல் அன்பை வெளிப்படையாய் காட்டுவதே சிறந்தது எனத் தோன்றுகிறது…ரோஜா இறந்தது கனவுனு சொல்லி நிம்மதி அடைய வைச்சிட்டு கடைசில இப்படி பண்ணது நியாயமா???..ஆகாஷ்,ரவி கேரக்டர்ஸ் செம்ம..நல்ல படைப்பு..பைக் ரேஜ் பத்தின ஒரு awareness கொடுத்திருக்கீங்கனு தோணுது இதை வாசிக்கும்போது.. வாழ்த்துக்கள் 💐💐💐