Loading

மீனு மாமி!  மீனு மாமியை பற்றி பேசுவதென்றால் பேசிக்கொண்டே போகலாம். மாமி பரங்கிப் பழம் போல நல்ல  நிறம்.  கொஞ்சம் தாட்டியான உடல்வாகு ஆனால் அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாத  மனப்பாங்கு .

வாழ்க்கை வாழ்வதற்கே என்பதில் அவளுக்கு ரொம்ப நம்பிக்கை. ” நான் பசிக்கும்போது சாப்பிடுவேன். தூக்கம் வரும்போது தூங்குவேன் . அதனால் வேற மாத்திரை மருந்து எதுவும்  எனக்கு தேவையில்லாமல் இருக்கிறது”  என்ற சொல்லும்  மீனு  மாமி நிஜமாகவே மாத்திரை மருந்து எதுவும் எடுத்து கொள்வதில்லை.

70 வயதில் சுகர் பிபி என்ற எந்த நோய் அறிகுறியும் இல்லாமல் எந்த நேரமும் மகிழ்ச்சியுடன் இருப்பவள்மீனு மாமி.

பணவிஷயத்தில் மிகவும் கெட்டி  மீனு மாமி. ஒரு முறை நான் மாமியுடன் ஆட்டோவில் செல்ல வேண்டி வந்தது . போகும் இடத்தை கூறியவுடன் ஆட்டோகாரர் 100 ரூபாய் கேட்க,  மாமி முகத்தைக் கடுமையாக வைத்துக்  கொண்டு “என்னப்பா 2 ரோடு திரும்பினா மால்.  அதுக்கு போய் நூறு ரூபாயா?  50 ரூபாய்க்கு மேல  கொடுக்க மாட்டேன்” என்று கண்டிப்பாக சொல்லி விட்டாள்.

ஆட்டோக்காரரும்  மாமியும் பத்து நிமிடம் போல்  பேரம் பேசி  கடைசியில் 75 ரூபாய் என்று முடிவுக்கு வந்தார்கள் . மால்  வந்து கீழே இறங்கியதும் மாமி ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து ஆட்டோகாரரிடம் கொடுத்தார்.  ஆட்டோகாரர் “அம்மா சில்லறை  இல்லையே”  என்று சொல்ல , நான் என் பர்சை எடுத்தேன் . அதற்குள் மாமி என்னை கை அமர்த்திவிட்டு , ஆட்டோகாரரிடம

“அந்த 25 ரூபாய்க்கு வீட்டுக்கு ஏதாவது பழம் பிஸ்கட் வாங்கிட்டு போ.     அதை உன்னோட குடிக்கு உபயோகப்படுத்தாதே”

என்று சொல்லி கீழே இறங்கி விடுவிடுவென்று  மாலின் வாயிலுக்கு  நடக்கத் தொடங்கிவிட்டாள்.  நானும் மாமியின் கூடவே நடந்து கொண்டு,

” என்ன மாமி !  எதுக்கு இவ்வளவு பேரம் பேசி விட்டு, பிறகு அவன் கேட்ட 100 நூறு ரூபாயை கொடுக்கணும்?” என்று கேட்க, மீனு மாமி,

” யோசித்துப் பாரு ! நான் பேரம் பேசாமல் அவன் கேட்ட நூறு ரூபாய்க்கு ஒத்துக்கொண்டு இருந்தால் அவனுக்கு தான் குறைத்து கேட்டு விட்டோமோ என்று தோன்றலாம் இல்லை ? பேரம் பேசாமல் நான் ஒத்துக் கொண்டிருந்தால், அவன் எல்லோரிடமும் இன்னும் அதிகம் கேட்கவ் ஆரம்பிக்கலாம்.

இப்ப பாரு! நான் 25 ரூபாய் கூட கொடுத்ததில் அவனுக்கு போனஸ் கிடைத்த சந்தோஷம் . எனக்கும் அவனுக்கு ரொம்ப குறைத்து கொடுக்கவில்லை என்ற சந்தோஷம் .அதனால்தான் எப்போதுமே நான் பேரம் பேசிததான் ஆட்டோவில் ஏறுவது வழக்கம்.  அதே மாதிரி ஆட்டோக்காரர் முதலில்  கேட்ட கட்டணத்தையும் அவருக்கு கொடுத்து விடுவதும் வழக்கம் தான்”  என்று என்னிடம் சொல்லி சிரிக்க,  எனக்கு,

” இந்த மீனு மாமி ரொம்ப வித்தியாசமான மாமி”  என்ற நினைப்பு தான் வந்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. அருமையான பதிவு சகோ.

  2. மிகவும் அருமை. வாழ்த்துகள்

  3. நிஜமாவே விசித்தரமாமிதான்..பேரம் பேசுறதுல இப்படி ஒரு விஷயம் இருக்குனு தெரிஞ்சிகிட்டேன்.. அருமையான படைப்பு.. வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐