Loading

அத்தியாயம்- 32

 

         தேன்மலர் தன்னவனைப் பார்க்க, தேவா அவளை ஃஸோபாவில் அமர வைத்து அவனும் அருகில் அமர்ந்துக் கொண்டான். 

 

      “செல்லம்மா… சொல்லு என்ன மனசுல போட்டு உருட்டிட்டு இருக்க… அப்பாவ பத்தியா அப்பாயிய பத்தியா…” என்று கேட்டான். 

 

      தன் முகத்தில் தோன்றிய சிறு கலக்கம் கொண்டேத் தன் மனதைப் படித்து விட்டானே என்று தன்னவனின் அன்பையும் காதலையும் நினைத்து நெகிழ்ந்த தேன்மலர் “அது தேவா…. இன்னும் அப்பா பத்தி அப்பாயிகிட்ட சொல்லல… யாரையும் சொல்ல வேணானு சொல்லி வச்சுருக்கேன்… அதான் எப்டி சொல்றதுன்னு தெரில… சொல்லும் போது அப்பாயி கண்டிப்பா கோவப்படும்…. அத நினச்சா தான் கொஞ்சம் கலக்கமாயிருக்கு…” என்றாள். 

 

       தீர்க்கமாக அவளை ஊடுருவிய தேவா “செல்லம்மா… அம்மாச்ச்சி கோவப்படும்னு தெரிஞ்சு தானே மறச்சோம்… இப்போ நாம தான் அத சமாதானப்படுத்தனும்… தான் மகனுக்கு உடம்பு சரியில்லன்னு மறச்சாட்டாங்களேன்னு அதுக்கு வர்ற கோவமும் நியாயமானது தானே… கவலய உள்ளேயே வச்சுட்ருக்றதுக்கு இப்போ அங்க பகல் தானே… இப்பவே அம்மாச்சிக்கு ஃபோன் பண்ணி விஷயத்த சொல்லி சமாதானப்படுத்து…” என்றான். 

 

       தேன்மலர் “ஆனா தேவா…பயமாயிருக்கே…” என்று கூற, 

 

     தேவா “கூட நாயிருக்கேன்… ரெண்டு பேருமே அம்மாச்சிக்கு சொல்லி புரிய வைப்போம்… இப்ப நீ ஃபோன் மட்டும் பண்ணு…” என்றான். 

 

     தன்னவன் கொடுத்தத் தைரியத்தில் ஆழமூச்செடுத்த தேன்மலர் தன் கைப்பேசியிலிருந்து வீடியோ கால் மூலம் ராஜேஷிற்கு அழைத்தாள். 

 

               ராஜேஷ் அழைப்பை ஏற்றதும் “தேன்மலர்…. என்னாச்சு நீங்க ரெண்டு நாளா சரியாவே பேசல… நைட்கூட ஏதோ நல்லார்கீங்களா என்னன்னு கேட்டுட்டு வச்சுட்டீங்க… எதாவது பிரச்சனையா…” என்று கேட்டான். 

 

      தேன்மலர் மென்னகையோடு “அதெல்லாம் ஒன்னுமில்ல ராஜேஷ்… நா ஃபோன் பண்ணும்போதொல்லாம் அப்பாயியும் உங்ககூட இருந்துச்சு… அப்போ இத பத்தி எப்டி பேசறது… அதான் பேசல… பிரச்சனைலா இல்ல கொஞ்சம் வருத்தமா அப்செட்டா இருந்துச்சு… இப்போ சரியாயிடுச்சு… இப்போ எங்க இருக்கீங்க ராஜேஷ்….” என்று கேட்டாள்.

 

       ராஜேஷ் புன்னகைத்து “ஓஓ சரி… இங்க தான் வீட்டுக்கு வெளில…. ஹாஸ்ப்பிட்டல்ல ஸாம் இருக்கான்…” என்று கூறவும் 

 

      “ரொம்ப நல்லது ராஜேஷ்… நாம அப்றமா மத்த விஷயம் பேசலாம் இப்ப அப்பாயிகிட்ட கொண்டு போய் குடுங்க… நா பேசணும்..” என்கவும்‌ ராஜேஷ் சரியென்று வீட்டிற்குச் சென்று வேலாயியிடம் தேன்மலர் பேசுவதாகக் கூறி கைப்பேசியைக் கொடுத்தான். 

 

                   வேலாயி முகங்கொள்ளாப் புன்னகையுடன் “தேனு நல்லார்க்கியா த்தா…” என்று கேட்க, 

 

    அவள் “நல்லார்க்கேன் அப்பாயி… நீ நல்லார்க்கியா….” என்று கேட்க, 

 

      வேலாயி “எனக்கென்ன த்தா… நா நல்லாருக்கேன்… என் பேராண்டி ராசாவெல்லாம் நல்லார்க்காவளா…” என்று கேட்டார். 

 

       தேன்மலர் “எல்லாரும் நல்லார்க்காங்க அப்பாயி… உன் பேராண்டி தூங்க போயிட்டான்… உன் ராசா தான் பக்கத்துல இருக்காரு…” என்று தேவாவை அருகே அழைத்தாள். 

 

      தேவாவை பார்த்த வேலாயி முகம் பிரகாசமாக “எய்யா ராசா…” என்று வாய் நிறைய அழைத்து அவனின் நலம் விசாரிக்க, தேவாவும் மலர்ந்தப் புன்னகையோடு தன் அம்மாச்சியிடம் நலன் கூறியவன் “அம்மாச்சி… செல்லம்மா உன்கிட்ட ஏதோ பேசணுமாம்… என்னன்னு கேளு…” என்றான். 

 

       வேலாயி தேன்மலரை பார்க்க, தேன்மலர் எச்சிலைக் கூட்டி விழுங்கி தயங்கி “அப்பாயி அது… அது அப்பா நாங்க சொன்ன மாறி வேலை விஷயமா வெளில போகல… அப்பாவுக்கு உடம்பு சரியில்ல… ஹாஸ்பிட்டல்ல இருக்காரு…” என்றுவிட்டு அவர் என்ன கூறுவாரோ என்று பயந்தபடிப் பார்த்திருந்தாள். ஆனால் வேலாயி சிறிதும் பதறாமல் அதிர்ச்சியின்றி “தெரியும்…” என்று கூற, அதிர்வது தேன்மலர் மற்றும் தேவாவின் செயலாயிற்று. 

 

                      தேன்மலர் திக்கி திணறி “உனக்கு எப்டி தெரியும்…” என்று கேட்க, 

 

      வேலாயி “என்னை சீமைக்கு வான்னு கூப்ட்டுட்ருந்த என் மகன் நா வந்தும்… அதுவும் நினைவில்லாம கெடக்கும் போது… என்னை விட்டுட்டு வேலை விஷயமா வெளிநாடு போயிருக்கான்னு சொன்னியே அப்பவே எனக்கு தோனுச்சு… அதோட இந்த ராசேசும் துர்காவும் அடிக்கடி தனியா குசுகுசுன்னு ஏதேதோ ரிப்போர்ட்டு மருந்துன்னு பேசிக்குங்க… அதுலதான் எனக்கு என் சந்தேகம் உறுதியாச்சு… என்னை உட்டுட்டு தங்காதவளும் ஊருக்கு போயே ஆகணுனு கெளம்புனியே… கூட என் பேராண்டியும் சால்றா உனக்கு… அதுலயே ஏதோ பிரச்சனைன்னு தோனுச்சு… சொல்லு என்ன பிரச்சனை…” என்று கேட்டார். 

 

         தேன்மலர் தேவாவை பார்க்க, தேவா “சொல்லு…” என்கவும் வேலாயிக்கு இவ்வளவு தெரிந்தப் பின்பும் எதையும் மறைக்கக் கூடாதென்று முடிவெடுத்த தேன்மலர் ஆதி முதல் அந்தமாக தற்போதைய நிலவரம் வரை அனைத்தும் கூறி முடித்து “அப்பாயி… நீ வேற அப்ப தான் கோமாலேர்ந்து எழுந்த… அதான் உடனே உன்கிட்ட சொன்னா எதாவது ஆயிடுமோன்னு பயந்து சொல்லாம இருந்தேன்… என் மேல கோவமிருந்தா நேர்ல பாக்கும்போது நாலு அடி வேணா அடிச்சுக்கோ அப்பாயி… பேசாம மட்டும் இருந்துராத…” என்று விழிகளில் நீர் திரையிடக் கூறினாள். 

 

              அவளைத் தீர்க்கமாகப் பார்த்த வேலாயி “என் மகனுக்கு மருந்துக் குடுத்து படுக்க வச்சவன பொட்ட புள்ளயா இருந்தும் தைரியமா எதிர்த்து நின்னு… நாங்க இல்லாம ஒத்தையில கஷ்டப்பட்டு அவனுங்கள போலீஸ்ல புடுச்சுக் குடுத்துருக்க… எம்புட்டு பெரிய காரியம் பண்ணிருக்க த்தா நீ… என் வளர்ப்புன்னு நிரூபிச்சுட்டியே… என் குலசாமி மேல நா எப்டி த்தா கோவப் படுவேன்…” என்று கடினமாக ஆரம்பித்துக் குரல் உடைந்து கண்ணீர் வழிய கூறி முடித்தார். 

 

       அதைக் கண்ட தேன்மலர் கண்களும் கண்ணீர் சிந்த, தேவாவும் விழிகள் கலங்கினான். 

 

      வேலாயி “ஏத்தா ரொம்ப கஷ்டப்பட்டியா தாயி…” என்று கேட்டுவிட்டு குலுங்கி அழ, ஓரமாக வேலாயி பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ராஜேஷும் துர்காவும் அவரைத் தாங்கிப் பிடித்து அமைதிப் படுத்த, தேவா தன்னவளின் தோளனைத்து ஆறுதல் கூறினான். இருவரும் தங்களது கண்ணீரை கட்டுப்படுத்த, வேலாயி “ராசா… நீங்கள்லாம் கூடயில்லன்னா என் தாயி என்னென்ன கஷ்டப்பட்ருக்குமோ… ராசா அய்யா…” என்று கேவ, 

 

      தேவா “அம்மாச்சி போதும்… வேற ஒரு நல்ல விஷயம் சொல்லலான்னு நினைக்கிறேன்… சொல்லவா…” என்று கேட்டான்.

 

                வேலாயி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு என்னவென்று கேட்க, தேவாவும் தேன்மலரும் புன்னகையோடு அமீரா, அருள் விடயத்தைக் கூற, வேலாயி மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். 

 

      பின் வேறு விடயங்களை பேசி முடித்து, வேலாயி “தேனு… இந்தா துர்காட்ட பேசு… அவதான் ரெண்டு நாளா அக்கா சரியா பேசலன்னு பொலம்பிட்டு இருந்தா…” என்று துர்காவிடம் கொடுக்க, 

 

     துர்கா “அக்கா… தூள் கெளப்பிட்டீங்க போங்க… நியூஸ்ல பாத்தேன்… அப்பா எப்டி க்கா அவ்ளோ கேள்விக்கும் அசராம பதில் சொல்றீங்க…” என்று விழி விரித்து சிறு குழந்தைப் போல் பேசினாள். 

 

     தேன்மலர் சிரித்து “அதெல்லாம் ஒன்னுமில்ல துர்கா…. நா நார்மலா தான் பேசுனேன்… சரி நீ எப்டியிருக்க…” என்று பேச்சை மாற்ற, துர்கா அவளிடம் வளவக்க ஆரம்பிக்க, தேன்மலரும் தேவாவும் புன்னகையோடு அவள் பேசுவதைக் கேட்டிருந்தனர். பின் ராஜேஷ் பேச, அவனிடம் தற்போதைய நிலவரம் கூறி சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு அழைப்பைத் துண்டித்தனர். 

 

               பின் தேன்மலர் ஸாமிற்கு அழைத்துப் பேச, ஸாம் மருத்துவமனையில் இருந்ததால் சிதம்பரத்தையும் தேன்மலரிடம் பேச வைத்தான்.

 

      சிதம்பரம் “ஹனி… இப்போ நார்மலா இருக்கல்ல…” என்று கேட்க, 

 

       தேன்மலர் “ஹான் நார்மலா இருக்கேன் ப்பா… அப்றம் ஹென்றி ஜோன்ஸ் பத்தி உன்கிட்ட விசாரிச்சா ப்ரண்டுன்ற பாசத்துல அவனுக்கு தண்டனை குறைக்க ரெக்கமன்ட் பண்ணாத… ஆர்யன், ரகு கூட எதிர்த்து நின்னானுங்க, அவன் கூடயிருந்தே துரோகம் பண்ணவன்… அவனுக்கு பாவம் கீவம் பாத்த…” என்று எச்சரிக்க, 

 

      சிதம்பரம் சிரித்து “சரி ஹனி பாக்கல… அப்றம் மாப்ள எப்டியிருக்காரு…” என்று கேட்க, 

 

      தேன்மலர் “உங்க மாப்ளகிட்டயே பேசுங்க…” என்று தேவாவை பேச வைக்க, மாமனாரும் மருமகனும் பாச மழையில் நனைந்த பின் தேன்மலர் வேலாயியிடம் அனைத்து உண்மையும் கூறியதைக் கூறினாள். 

 

     சிறிது நேரம் மௌனம் காத்த சிதம்பரம் “ஹனி மா… அப்போ நா வீட்டுக்கு போலால…. இப்போ எனக்கும் பரவால்ல… கொஞ்சம் நல்லா பேசறேன்… வாக்கிங் ஸ்டிக் புடிச்சு ஒரு ரெண்டு அடி எடுத்து வைக்கிறேன்… எனக்கும் அம்மாவ பாக்கணும் போல இருக்கு…” என்று கூற, தேன்மலர் சிரித்து “சரி ப்பா போ…” என்றாள். 

 

               பின் சிதம்பரம் தன்னை டி என்கிற டேவிட் வில்லியம்ஸ் பார்க்க வந்ததும் அவர் தன்னிடம் ஏ ஆர் பார்மச்சுட்டிகல்ஸில் நடந்ததும் அவளிடம் பேசியதையும் கூறியவர் “கடைசியா என்ன சொன்னாரு தெரியுமா ஹனி… நீ ப்ரேவ் அண்ட் இன்டலிஜன்ட் கேர்ளாம்… டி யாரையும் அவ்ளோ சீக்ரம் பாராட்ட மாட்டாரு…. அவரு வாயால உன்னை பாராட்னத கேட்டதும் எனக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா… ஐ அம் ஸோ ப்ரௌட் ஆஃப் யூ ஹனி… லவ் யூ ஹனி…” என்று கூற, தேன்மலர் புன்னகைத்து “லவ் யூ ப்பா…” என்றாள். 

 

      பின் ஸாமிடம் பேச, அந்நேரம் கின்ஸியும் அங்கு வர, தேவாவும் தேன்மலரும் அவர்களிடம் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கின்ஸி “ஸ்வீட்டி பை… நீ இண்டியால மட்டுமில்ல இங்கயும் டாக் ஆஃப் தி டவுன் நீ தான்… வி ஆர் ஸோ ப்ரௌட் ஸ்வீட்டி பை…” என்க, 

 

      ஸாமும் “நீ தைரியம்னு தெரியும்… ஆனா உன்னோட உண்மையான தைரியத்த இப்ப தான் பாத்தேன் ஸ்வீட்டி பை… நைஸ்லி ஹேண்ட்ல்ட தி ப்ரஸ் ஆல்சோ…” என்று கூற, 

 

      தேன்மலர் “ஏய் போதும்… நீங்க இப்டி பேசுனா… என் பேட் மேனும் ஜேம்ஸ் பாண்டும் தானான்னு டவுட்டா இருக்கு…” என்று கூற, ஸாமும் கின்ஸியும் சிரித்தனர்.

 

       தேவா “சிரிக்றது இருக்கட்டும் ரெண்டு பேரும் எப்போ கல்யாணம் பண்ணிக்க போறீங்க…” என்று கேட்க,

 

       தேன்மலர் “நானே கேக்கணும்னு இருந்தேன் தேவா… இப்ப சொல்லுங்க ரெண்டு பேரும்…” என்றாள்.

 

       கின்ஸி புன்னகைத்து ஸாமை பார்க்க ஸாமும் புன்னகைக்க, பின் இருவரும் புன்னகையோடு “இன்னும் த்ரீ மன்த்ஸ்ல… ஜனவரி 10” என்று கூற, தேவாவும் தேன்மலரும் மகிழ்ந்து இருவருக்கும் வாழ்த்துக் கூறி சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு அழைப்பைத் துண்டித்தனர். 

 

          தேவா தன்னவளைப் பார்த்து மென்னகையோடு “இப்போ உன் கவலையெல்லாம் போச்சா…” என்று கேட்க, 

 

       தேன்மலர் முதலில் முகம் மலர புன்னகைத்தவள் பின் கண்கள் கலங்க “தேங்க்ஸ் தேவா…” என்று அவனை அணைத்துக் கொண்டு அவனது மார்பில் முகம் புதைத்தாள். 

 

       அவளது கண்ணீர் அழுகையாக வெடிக்க, தேவாவும் அழட்டுமென்று அவளது முதுகை ஆதுரமாகத் தடவியவாறு அவளை ஒருக் கையால் அணைத்திருந்தான். இத்தனை நாள் தன்னுள் தேக்கி வைத்த இறுக்கம் அழுகையெல்லாம் தன்னவனின் மார்பில் சாய்ந்து இறக்கி வைத்துக் கொண்டிருந்தாள். 

 

       அவளது அழுகை தேம்பலாக மாறும் வரை அமைதி காத்த தேவா, அவளது முகம் நிமிர்த்தி “போதும் செல்லம்மா… அழாத…” என்க, அப்போதும் அவள் தேம்ப, தேவா “ஏய் இங்க பாருடி… இப்ப நிறுத்த போறியா இல்லயா… இப்டியே அழுதனா காய்ச்சல் வரும் செல்லம்மா… நிறுத்து மா…” என்று மிரட்டலில் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்தான். 

 

               தேன்மலரோ ஆசிரியரிடம் எப்படி எழுதுவதென்று தெரியவில்லை என்று கூறும் மழலையின் பாவத்தோடு “நானும் நிறுத்த தான் தேவா ட்ரை பண்றேன்… ஆனா நிக்க மாட்டேங்குது…” என்று தேம்பலோடுக் கூற, தேவா அவளை ரசித்து காதலோடு கள்ளப் புன்னகைப் புரிந்து “எப்டி நிறுத்துறதுன்னு எனக்கு தெரியும்…” என்று கூற, தேன்மலர் அவனைப் பார்த்து விழித்தாள். 

 

       தேவா இருக்கையால் அவளது முகம் தாங்கியவன் காதலாடு அவளது விழி நோக்கியவன் அவளது இதழ் மீது பார்வையைப் படர விட, அவனதுப் பார்வையின் அர்த்தம் புரிந்தவளோ முதலில் அதிர்ந்து பின் நாணப் புன்னகையோடு கன்னம் சிவந்து அவனைக் காதாலாகப் பார்த்த அடுத்தக் கணம் அவன் தன் அதரங்கள் கொண்டு அவளது அதரங்கள் மூடினான். 

 

        மென்மையாய் அவன் அவளது இதழ் சுவைக்க, பெண்ணவளோ விழி மூடி மின் அதிர்வில் சிக்கியதுபோல் அவளது உடல் அதிர, சொல்லொனா உணர்வில் ஆழ்ந்தவள் அவனுள் தொலைந்து அவனது சட்டை இறுகப் பற்ற, அவளது முகம் தாங்கிய அவனது கரங்கள் சட்டென்று அவளது இடைவளைத்து அவனோடு அவளை சேர்த்தணைத்து அவளது இடை வருட, ஏற்கனவே அவனது இதழ் தீண்டலில் அவனுள் தொலைந்தவள் இப்போது அவனது இடைத் தீண்டலில் முற்றிலும் தன்னையே மறந்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள். 

 

            சில நிமிடங்கள் அவளது இதழில் தன்னிதழால் ஓவியம் தீட்டிய தேவா, மெல்ல அவளிதழை விடுவித்து விழி மூடி நிற்கும் தன்னவளைப் புன்னகையோடுப் பார்த்தவன் அவளது விழிகளில் இதழ் பதிக்க, அதில் விழி திறந்துக் காதலும் வெட்கமுமாய்த் தன்னவனின் விழி பார்த்த தேன்மலர் நாணப் புன்னகைச் சிந்த, விழிகளில் காதல் தேக்கி அவளது விழியோடு விழிக் கோர்த்தவன் மந்தகாசப் புன்னகையோடு அவளது நெற்றியில் இதழ் பதிக்க, அவள் இமை மூடி அதைத் தன்னுள் வாங்கி உயிரினுள் அவனது இதழ் தீண்டலை சேமித்தாள். பின் இருவரும் காதல் நிறைத்து விழிக் கோர்த்தவர்கள், நேரம் கரைவதுத் தெரியாமல் நின்றிருக்க, சாளரம் வழியே வந்த நிலவின் ஒளியில் தன்னிலை உணர்ந்து சட்டென்று விலகி நின்று இருவரும் நாணத்தோடு ஒருவரையொருவர் நோக்கிக் கொண்டு அந்த அழகிய தருணம் தந்த சுகந்தமான நினைவுகளில் இதழ்களில் புன்னகை உறைய அவரவர் அறைக்கு உறங்கச் சென்றனர்.

 

               ஸாமும் கின்ஸியும் மருத்துவரிடம் பேசிவிட்டு சிதம்பரத்தை மருத்துவமணையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வேலாயி ஆலம் கரைத்து தன் மகனுக்காக பாசமும் ஏக்கமுமாய்க் காத்திருந்தவர் சிதம்பரம் ஒரு பக்கம் சிறிது வாய்க் கோணி வாங்கிங் ஸ்டிக்கோடு ஒரு காலை இழுத்து இழுத்து நடந்து வருவதுக் கண்டு உடைந்துப் போனவர் “அய்யா என் சாமி…” என்று கண்ணீர் மல்க ஓடிப் போய் தன் மகனை அணைத்துக் கொள்ள, சிதம்பரமும் விழி நீர் கசிய தன் தாயை அணைத்துக் கொண்டார். 

 

       சிதம்பரம் “அம்மா… எனக்கு ஒன்னுமில்ல மா… நா நல்லார்க்கேன்…” என்று கூறி புன்னகைக்க, வேலாயி வலியோடு அவரைப் பார்த்தவர் கைத் தாங்கலாய் அவரை அழைத்து வந்தார்.

 

        அக்காட்சிக் கண்டு ராஜேஷ், துர்காவோடு ஸாமும் கின்ஸியும் கூட கண்கலங்கினர். துர்கா ஆலம் சுற்ற வேலாயி தன் மகனை கரம் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார். வேலாயி அழுதுக் கரைய சிதம்பரம் அவரை தேற்றுவதற்குள் ஒரு வழியாகிப் போனார். பின் வேலாயி தன் மகனை ஒருக் கணமும் பிரியாமல் அவருக்கு வேண்டியவற்றை அவரேப் பார்த்துப் பார்த்து செய்து, அவருக்குப் பிடித்த உணவுகளை சமைத்து அவரதுக் கையால் ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.

 

               ஜே விற்கு தன் வீட்டில் போதை மருந்து எப்படி வந்ததென்றப் பெருங்குழப்பம் அவனது மண்டையைக் குடைய எவ்வளவு யோசித்தும் அவனால் விடைக் காண முடியவில்லை. எப் பி ஐ அதிகாரிகள் அதுபற்றி கேட்கும்போது அவன் தனக்குத் தெரியாதென்றேக் கூற, அவர்கள் அதுபற்றி விசாரணையைத் தங்கள் பக்கம் ஆரம்பிக்க, ஒருவன் தானாகவே முன்வந்து தான் தான் ஜேவிற்கு போதை மருந்தை விற்றவன் என்று கூறினான். ஜே முன் அவனை நிறுத்தி அவனைத் தெரியுமா என்று அதிகாரிகள் வினவ, அவனிடம் தான் வழக்கமாக வைன் வாங்குவதென்பதால் ஜே தெரியும் என்று கூற, அதுவே ஜே விற்கும் அவனுக்கும் தண்டனைப் பெற்றுத் தர அதிகாரிகளுக்குப் போதுமானதாக இருந்தது. எப் டி ஏ வும் தனி விசாரணையை ஜேவிடம் நடத்தி, அவனுக்கு சிதம்பரத்தின் மேலிருந்த வன்மத்தை உறுதி செய்தனர். சிதம்பரத்திடமும் எப் டி ஏ குழுவும் எப் பி ஐ அதிகாரிகளும் விசாரிக்க, சிதம்பரம் நடந்த அனைத்தும் ஒன்று விடாமல் கூறினார். பின் இரண்டு வாரங்களில் அனைத்து வாக்குமூலங்களும் ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட, ஜேவிற்கு சிதம்பரத்தின் உடல் நலனை கெடுத்ததற்கும் மன உளைச்சல் கொடுத்ததற்கும் அவரைக் கொலை செய்ய முயற்சித்ததற்கும் சேர்த்து குறிப்பட்ட இழப்பீட்டுத் தொகையும் எப் டி ஏ விற்கு செலுத்தக் கூறி குறிப்பிட்டத் தொகையும் கோர்ட்டிற்கு செலுத்த வேண்டிய தொகையுமாய் சேர்த்து அவனது சொத்து முழுதும் விற்குமளவிற்கு அபராதம் விதித்து அவனது வாழ்நாளின் மீதி உள்ள நாட்களை சிறையில் கழிக்கும்படி நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துத் தீர்ப்பளித்தது. அதோடு எப் டி ஏ வும் நீதிமன்றமும் ஏ ஆர் பார்மச்சுட்டிகலுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து அவர்களது மருந்துகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்தது. எப் டி ஏ வும் தங்களின் கவனக் குறைவு என்று கூறி சிதம்பரத்திற்கு ஒரு குறிப்பிட்டத் தொகையைக் கொடுத்து அவரது மருத்துவச் செலவுக்கானத் தொகையையும் கொடுத்தது. பின் சிதம்பரம் எப் டி ஏ அதிகாரி ஆதலால் அமெரிக்க அரசாங்கம் இந்திய அரங்காங்கத்திற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பி நெருக்கடித் தர ஆரம்பித்தது.

 

             விஸ்வநாதனும் ஆர்யனின் தந்தையும் தங்களது செல்வாக்கைப் பயன் படுத்தி ஆர்யனையும் ரகுவையும் cdsco, fda, icmr போன்றவற்றிற்கு விசாரணைக்கு அனுப்பியதோடு நிறுத்தி அவர்களைக் கைது செய்யாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அமெரிக்க அரசின் நெருக்கடியால் அவர்களது வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆர்யனையும் ரகுவையும் சிபிஐ அதிகாரிகள் தங்கள் பாதுகாப்பில் எடுத்து விசாரிக்க அழைத்துப் போக வந்தனர். 

 

       அதுவரை ஆர்யனிடம் முகம் கொடுத்துக் கூட பேசாமலிருந்த சாருமதி தன்னவனை கைது செய்யப் போகிறார்கள் என்று அறிந்ததும் அவனைக் கட்டிக் கொண்டு அழ, ஆர்யனும் அவளை அணைத்துக் கண்ணீர் வடித்தவன் “சாரு… நா உன் லவ்வுக்கு தகுதியேயில்லாதவன்…. ஆனா உன் அன்பும் காதலும் கோவமும் என்னை என்னமோ பண்ணுது… உன்னை எங்கயும் போக விடாம என் கைக்குள்ளயே வச்சுக்கணுனு நினக்க வைக்குது… சாரு நா மாறிட்டனா இல்லயான்னு தெரில…. ஆனா இப்போ நா செஞ்ச எல்லா தப்பையும் ஒத்துக்க போறேன்…. தண்டனை எவ்ளோ வருஷம்னு தெரில… ஆனா திரும்ப வரும்போது உன் ஆர்யனா உனக்கானவனா உனக்கு புடிச்ச மாறி மாறி வருவேன்னு மட்டும் சொல்றேன்… அப்றம் இந்த கம்பெனி நானும் ரகுவும் ரொம்ப கனவோட ஆரம்பிச்சது… அத அழியவிட்ராத…. நா எப்டி அத நடத்தீற்கனுனு நினக்கிறியோ இனி அது மாறி நீ தான் அத நடத்தணும்… இனி கம்பெனி உன் பொறுப்பு… இது அதுக்கான பேப்பர்ஸ்…” என்று அவள் கைகளில் சில தாள்களைத் தினித்தவன் அவளது நெற்றியில் இதழ் பதித்து “லவ் யூ சாரு… எனக்காக வெயிட் பண்ணு…” என்று காதாலும் வலியுமாய் அவளைப் பார்த்துவிட்டு சிபிஐ அதிகாரிகளோடுச் சென்றான். 

 

                அவனது கண்ணில் முதன் முதலாய்த் தனக்கானக் காதலைக் கண்ட சாரு இனி அவன் திருந்தி தன் ஆர்யனாக வந்துவிடுவான் என்ற நம்பிக்கையோடு கண்களைத் துடைத்தவள் தன்னவன் சொன்ன வேலைகளைச் செய்யத் தன்னை ஆயத்தப் படுத்திக் கொண்டாள். 

 

      ரகுவின் வீட்டிலோ அவனதுப் பெற்றோர் அழுதுப் புலம்ப, ரகு தான் திரும்பி வரும்போது நிச்சயம் திருந்தி வருவதாக அவர்களிடம் சத்தியம் செய்துவிட்டுப் புறப்பட்டான். 

 

        ஆர்யனும் ரகுவும் சிபிஐ அதிகாரிகளிடம் தாங்கள் செய்தக் குற்றங்கள் அனைத்தையும் ஒப்புக் கொண்டனர். அவர்கள் நாராயணசாமி பற்றியும் கூற, நாராயணசாமியின் வழக்கும் சிபிஐ வசம் வந்தது. 

 

        சர்வதேச அளவில் இப்பிரச்சனைப் பூதாகரமானதால் அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்ட மறுநாளே வழக்கு நீதிமன்றத்திற்கு வர, அங்கும் ஆர்யனும் ரகுவும் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொள்ள, சிதம்பரத்திற்கு இழப்பீட்டுத் தொகையும் அவர்களால் க்ளினிக்கல் ட்ரையலிற்கு உட்படுத்தப்பட்டோர்களை மீட்டு அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையும் நீதிமன்றத்திற்கு அபராதமும் செலுத்தச் சொல்லி தீர்ப்பளித்தவர்கள் இருவரும் குற்றங்களை ஒப்புக் கொண்டதால் இருவருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

 

        அதோடு நாராயணசாமியின் குடோன்களிலும் அவன் சப்ளை செய்யும் மருந்துக் கடைகள், மருத்துவமனைகள் என்று அனைத்திலும் சேமித்து வைக்கப் பட்டிருக்கும் காலாவதியான மருந்துகளைப் பறிமுதல் செய்து உடனடியாக அதைத் தகுந்த வழிமுறைகளோடு அப்புறப்படுத்தமாறு உத்தரவிட்ட நீதிமன்றம் நாராயணசாமியின் சொத்து விபரம் குறித்தும் அவனுடன் தொடர்பிலிருந்தப் பெரும் புள்ளிகள் பற்றியும் அவர்களின் சொத்து விபரம் பற்றியும் அவர்களுக்குள் நடந்த வேறு பரிவர்த்தனைகள் பற்றியும் நாராயணசாமியின் மடிக்கணினியை ஆதாரமாகக் கொண்டு விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்யுமாறு சிபிஐ க்கு உத்தரவிட்டது. அதனால் சிங்கப்பூரில் தொழில் நடத்திக் கொண்டிருந்த நாராயணசாமியின் மூத்த மகன் விசாரணைக்காவும் நாராயணசாமியின் தொழிலைக் கவனிப்பதற்காகவேம் இந்தியா வர வேண்டியதாகப் போயிற்று. சிபிஐ அதிகாரிகள் அவனிடமிருந்து விசாரணை ஆரம்பித்தனர். நீதிமன்ற உத்தரவுப் படி தமிழகம் முழுவதும் காலாவதியான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப் படுத்தப் பட்டது. 

 

             சாருமதியும் நீதிமன்ற உத்தரவுப்படி சிதம்பரம் முதற்கொண்டு ஆர்யனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகையை சரியாக வழங்கினாள். விஸ்வநாதனும் ஆர்யனின் தந்தையும் அதைக் கண்டு “இப்டியே குடுத்துட்ருந்தீனா… நஷ்டத்துல தான் போகும் தொழில்…” என்று அவளை எச்சரிக்க, 

 

      சாருமதி “இங்க பாருங்க… என் புருஷன் என் பொறுப்புல இந்த கம்பெனிய விட்டுட்டு போயிருக்காரு… அத எப்டி நடத்தனுனு எனக்கு தெரியும்… அதுல நீங்க தலையிடாதீங்க…” என்று அவர்களை ஒரே வார்த்தையில் அடக்கினாள். 

 

      நீதிமன்றத்தில் தேன்மலர் ஏ ஆர் பார்மச்சுட்டிக்கலால் மாற்றி தயாரிக்கப்பட்ட மருந்துகளில் குறிப்பிட்ட நோய்க்கான சில மருந்துகள் புழக்கத்திலிருக்கும் பழைய மருந்துகளை விட வீரியமாகவும் நோயை விரைவில் குணப்படுத்துவதாகவும் இருப்பதால் அவற்றிற்கான காப்புரிமை மற்றும் தயாரிப்பை ஏ ஆர் பார்மச்சுட்டிகலுக்கு வழங்கும்படி பரிந்துரைத்ததால் ஆர்யனின் கம்பெனி பெயர் முழுதும் கெடாமல் ஓரளவு தூக்கி நிறுத்தப் பட்டது. 

 

               சாரு நீதிமன்ற வளாகதித்திலேயே தேன்மலரிடம் தீங்கிழைத்தோருக்கு ஏன் உதவிப் புரிந்தாள் என்று கேட்க, தேன்மலர் “எங்கப்பா எனக்கு சொன்னது தான் நானும் சொல்றேன்… இங்க எல்லாருமே கெட்டதும் நல்லதும் கலந்த கலவைங்க தான்… என்ன விகிதம் தான் மாறும்… தப்பு பண்ணவன் தான் பண்ண தப்ப உணர்ந்தான்னா அவன் திருந்த ஒரு வாய்ப்பு கொடுக்கனுனு சொல்வாரு… அத தான் நா செஞ்சேன்… அவன் தப்பு பண்ணான்னு உலகத்துக்கு சொன்ன நா… அவன் பண்ண நல்லதையும் சொன்னேன் அவ்ளோ தான்… ஆர்யனும் ரகுவும் குற்றத்த ஒத்துக்கிட்டப்பவே அவங்க மனமாற்றத்த உணர முடிஞ்சது… அதான் அவங்க திருந்த ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி குடுத்துருக்கேன்… என் அப்பா என்ன செஞ்சுருப்பாரோ அததான் நான் செஞ்சேன்… ஆனா எனக்கு அவங்க மேல இன்னும் கொஞ்சம் கோபமிருக்கு… பாக்கலாம் காலம் தான் எல்லாத்தையும் மாத்தும்….” என்றாள். 

 

       அவளின் பேச்சைக் கேட்ட சாரு அவளை அணைத்துக் கொண்டு நன்றயுரைத்து “ப்ரண்ட்ஸ்…” என்று கை நீட்ட, தேன்மலர் புன்னகைத்து அவளதுக் கைப் பற்றிக் குலுக்கினாள். 

 

      இதைப் பார்த்துக் கொண்டிருந்த தேவா, அருள், செந்தில், சங்கவி, அமீரா அனைவரது இதழ்களிலும் பெருமிதப் புன்னகைத் தவழ, ஆர்யனும் ரகுவும் குற்றயுணர்வில் தலைக் குனிய, விஸ்வநாதனும் ஆர்யன் மற்றும் ரகுவின் பெற்றோரும் அங்கிருந்தும் சென்று விட்டனர். 

 

         தேவாவிடம் வந்த ஆர்யனும் ரகுவும் “தேன்மலர்கிட்ட நேரா மன்னிப்பு கேக்ற தகுதி எங்களுக்கில்ல…. அதனால உங்ககிட்ட மன்னிப்பு கேக்றோம்…” என்று மன்னிப்பு வேண்ட, 

 

     தேவா “நீங்க திருந்தினதே எங்களுக்கு போதும்…” என்று கூற, 

 

      ரகு “தேவா நீங்க ரொம்ப லக்கி தேன்மலர் உங்களுக்கு கெடைச்சதுக்கு…. நா ஜெயில்லேர்ந்து திரும்பி வந்தா தேன்மலர் மாறி ஒரு பொண்ண பாத்து தான் கல்யாணம் பண்ணிப்பேன்….” என்று கூற, தேவா மென்னகைப் புரிந்தான்.ஆர்யனும் ரகுவும் சிறைச் சென்றனர். 

 

       இரண்டு வாரங்கள் விசாரணை நீதிமன்றம் என்று கழிந்ததில் அனைவரும் களைத்துப் போயினர். தேன்மலருக்கும் அருளுக்கும் தங்கள் தோழி ராகவியையும் தமையன் சுரேஷையும் கோபம் தணித்து சமாதானப்படுத்தும் பெரும் பொறுப்பிருக்க, அதனால் மறுநாள் அவர்கள் ஊருக்குப் போவதுப் பற்றி பேச, தேவா அவர்களுடன் வருவேன் என்று பிடிவாதமாக இருந்ததால் சங்கிவியை அமீராவின் வீட்டில் விட்டுவிட்டு தேவா, தேன்மலர், அருள் மூவரும் தேவாவின் காரில் திருச்சி நோக்கியத் தங்களின் பயணத்தை இரவுத் தொடங்கினர்.

 

அத்தியாயம்- 33

 

 

        சராலாய் மழைப் பெய்துக் குளுமைப் பரப்பிய அதிகாலை வேளைதனில் சென்னையிலிருந்துப் புறப்பட்ட கார் திருச்சி மாநகரின் எல்லைக்குள் நுழைந்தது.

 

     “அருளு.. நீ வீட்டுக்கு போய்ட்டு அம்மா, அப்பாவ பாரு… அப்றம் நாம எல்லாரும் கெளம்பி ராகவிய பாக்க போகலாம்…” என்றவாறே தேன்மலர் அருளின் இல்லத்திற்குச் செல்லும் சாலையில் காரை செலுத்தினாள்‌. 

 

     “நானும் உங்ககூட வரேன் ஹனிமலர்… மாப்ளைக்கு ஊர் புதுசு தானே… நா கூடயிருந்து அவனுக்கு கம்பனி தரேன்… ப்ளீஸ் மா…” என்று அருள் குழந்தையாய்க் கெஞ்சினான். 

 

     “இது ஒன்னும் வேற்று கிரகமில்ல மாமா… நம்ம ஊர் தானே… அதெல்லாம் நா பாத்துக்றேன்… நீ வீட்டுக்கு கெளம்பு…” என்று தேவா கூறவும் அருள் அவனை முறைக்க, 

 

    “அருளு… இத்தன நாள் எனக்காக என்கூட இருந்த ரைட்டு… இப்ப நடந்த விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சுருச்சு… ஏற்கனவே அம்மா ஃபோன்ல பேசும்போது பயந்த மாறி பேசுனாங்க… உன்னை பாக்காம அவங்க எவ்ளோ கஷ்டப்பட்ருப்பாங்க…. நீ பர்ஸ்ட் வீட்டுக்கு போறதுதான் சரி… நீ போற…” என்று கண்டிப்புடன் தேன்மலர் கூறவும் அருளுக்கும் தன் தாயை நேரில் காண வேண்டும் போல் இருந்ததால் சரி என்றான். 

 

          “தேங்க்ஸ் மாமா… நானே என் செல்லம்மா கூட இப்ப தான் பிரச்சன, டென்ஷன் எதுவுமில்லாம தனியா இருக்க நேரம் கெடச்சுருக்குன்னு சந்தோஷப்பட்டுட்ருக்கேன்… எங்க நீயும் கூட வருவேன்னு அடம்புடிப்பியோன்னு நினச்சேன்… நல்ல வேளை அப்டி எதுவும் பண்ணல….” என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு தேவா கிசுகிசுக்க, 

 

      அருள் முதலில் அவனை முறைத்து பின் “பரவால்ல மாப்ள… எனக்கு தான் குடுத்து வைக்கல… நீயாவது சந்தோசமாயிரு… மீரு மேட்டர வீட்ல சொன்னா பட்டாசு வெடிக்குமா இல்ல பச்சை கொடி காட்டுவாங்களான்னு தெரில…” என்று புலம்பினான். 

 

     “அதெல்லாம் பச்சை கொடி காட்டுவாங்க… நாங்க எதுக்கு இருக்கோம்… காட்ட வைக்க மாட்டோம்… நீ கவல படாம இரு மாமா…” என்று தேவா அவனுக்கு ஆறுதல் கூறி முடித்த வேளை, காரை அருளின் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தாள் தேன்மலர். 

 

      வாசல் தெளிக்க வந்த அருளின் அன்னை காரிலிருந்து அருள் இறங்குவதைக் கண்டு “அருளு…” என்று விளக்குமாரை அப்படியே போட்டுவிட்டு வந்து தன் மகனின் கையைப் பற்றிக் கொள்ள அருளும் “அம்மா…” என்று முகம் மலர்ந்து அவரை தோளோடு அணைத்துக் கொண்டான். 

 

     தேன்மலரை கண்ட அருளின் அன்னை “தேனு… உள்ள வாமா… ஏன் வந்துட்டு கார்லயே உக்காந்துருக்க… என்று கேட்டதற்கு, 

 

     அவள் “இல்ல ம்மா… ரொம்ப நாள் வீட்ல இல்ல… போய் என்ன ஏதுன்னு பாக்கணும்… பாத்துட்டு காலைல டிபனுக்கு இங்க வந்துட்றோம்… அம்மா இவரு தேவா… நா கட்டிக்க போறவரு…” என்று தேவாவை அறிமுகம் செய்து வைக்க, 

 

     அவர் மிக மகிழ்ந்து தேவாவை நலம் விசாரித்து “சரி ம்மா… சீக்ரம் வாங்க…” என்றுவிட்டு அருளை அழைத்துக் கொண்டு வீட்டினுள் செல்ல, தேன்மலர் காரைத் திருப்பி தன் இல்லம் நோக்கி செலுத்தினாள். 

 

           வீட்டை அடையும்போது அவள் வீடிருக்கும் வீதி முழுதும் பெண்கள் வாசல் தெளித்துக் கோலமிட்டுக் கொண்டிருக்க, தேன்மலர் வீட்டின் முன்பு காரை நிறுத்தியதும் தயாராய் வீட்டுச் சாவியோடு நின்றிருந்த சுமதி அக்கா அவளைப் புன்னகையோடு வரவேற்று நலம் விசாரித்து தேவாவிடமும் ஒன்றிரண்டு வார்த்தைப் பேசினார். 

 

     “அக்கா… அண்ணே எங்க…” என்ற தேன்மலரின் கேள்விக்கு “இப்ப தான் தேனு வீட்டுக்குப் போச்சு… பாவம் அப்பாயிய சென்னைல கொண்டு வந்து விட்டப்ப உங்கள பாத்தோட சரி… அப்றம் உன்ட்ட பேச முடில போன் போட்டா போக மாட்டேங்குதுன்னு ஒரே கவலையும் பொலம்பலுமா திரிஞ்சுச்சு சுரேஷு… டிவில செய்தி பாத்து தான் அதுக்கும் விஷயம் தெரிஞ்சுச்சு… உன்மேல ரொம்ப கோவமா வேற கெடக்கு… நீ வேற கெளம்பிட்டு போன் பண்ணியா… அதான் நீ வர்ர நேரத்த கரக்ட்டா கணக்கு பண்ணி எந்திரிச்சு போயிருச்சு… நீயும் எங்ககிட்ட ஒரு வார்த்த சொல்லிற்கலாம்ல தேனு…. என்னமோ போ யாரும் இல்லாதவளாட்டம் எம்புட்டு கஷ்டப்பட்ருக்க… என்ன தான் கோவமா இருந்தாலும் நீ அண்ணேன்னு கூப்ட்டா அப்டியே கரஞ்சுரும்… அம்புட்டு பாசம் உன்மேல சுரேஷுக்கு… நா வேற அவ்ளோ தூரம் பிராயணம் பண்ணி வந்தவங்கள நிக்க வச்சு பேசிட்ருக்கேன்… சரி தேனு நீ தம்பிய கூட்டிட்டு உள்ள போ… நா காப்பி போட்டு எடுத்தாரேன்… மாட்ட தேடாத அது எங்கூட்டு கொல்லையில தான் நிக்குது… என்னால இங்கயும் அங்கயும் அலைய முடியல அதான் என் வீட்ல கொண்டு போய் கட்டிட்டேன்… சரி தேனு நீங்க உள்ள போங்க….” என்று சுமதி நாலைந்து வீடு தள்ளிருக்கும் தன் வீட்டை நோக்கி எட்டு வைத்தாள். 

 

      தேன்மலர் புன்னகைத்து விட்டு தேவாவை அழைத்து விட்டு வீட்டை திறந்து உள்ளேச் சென்றாள். தேவாவும் புன்னகையோடு தங்களின் பெட்டிகளை எடுத்துக் கொண்டு உள்ளேச் சென்றான். 

 

      உள்ளே நுழைந்ததும் வீட்டைப் பார்த்த தேன்மலர் என்னதான் சுமதி வீட்டை கூட்டி பெருக்கி சுத்தமாக வைத்திருந்தாலும் ஆங்காங்கே ஓட்டடைகளும் சில பொருட்களின் மீது தூசியும் படிந்திருப்பதைக் கண்டவள் அதையெல்லாம் சுத்தம் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். 

 

      அவளைத் தொடர்ந்து உள்ளே வந்த தேவா பெட்டிகளை ஒரு ஓரமாக வைத்து விட்டு “வாவ் செல்லம்மா… பழைய வீடா இருந்தாலும்… ரொம்ப நல்லார்க்கு… அப்றம் சுமதி அண்ணி கூட ரொம்ப ஸ்வீட்… எவ்ளோ நல்லா பேசுறாங்க…” என்றான். 

 

      “ஆமா தேவா… அக்கா ஒரு வெள்ளந்தி ரொம்ப பாசமா இருக்கும்…. நா காலேஜ் போய்ட்டனா அப்பாயிக்கு அதுதான் பேச்சு துணை…” என்று மென்னகையோடுக் கூறிய தேன்மலர் “சரி தேவா… பாத்ரூம் அந்த பக்கம் இருக்கு… போய் ப்ரஷ் ஆகிட்டு வாங்க… நா அதுக்குள்ள அடுப்படி எப்டியிருக்குன்னு பாத்துட்டு வரேன்… நாலு மாசமா யாருமில்ல… என்னன்னத்துல பூச்சி புடுச்சுருக்குன்னு தெரில…” என்றபடி அவன் பதிலுக்குக் கூட காத்திராமல் அவள் அடுக்களை நோக்கிச் செல்ல, தன்னவளை புன்னகையோடுப் பார்த்த தேவா குளியலறை நோக்கி நகர்ந்தான். 

 

              தேவா தன் வேலையை முடித்துவிட்டு வர, அதற்குள் அடுக்களையில் அப்புறப்படுத்தப்பட வேண்டியவற்றை தனியே எடுத்து வைத்த தேன்மலர் அவளும் சென்று தன் காலை வேலைகளை முடித்து வர, சுமதியும் காபியோடு வந்தாள். மூவரும் பேசியவாறு காபி அருந்தி முடித்து சுமதி தன் வீட்டிற்கு கிளம்ப, தேன்மலரும் தேவாவும் முதலில் அடுக்களையை சுத்தம் செய்யலாம் என்று அந்த வேலைகளில் இறங்கினர். இரண்டு மணித்தியாலத்தில் வேலை முடிந்துவிட, முதலில் தேன்மலர் குளித்து வர, பின் தேவா குளிக்கச் சென்றான். 

 

            தேவா குளித்து தாயாராகி வந்தவன் தேன்மலரை கண்டு அவளை விட்டுப் பார்வையை விலக்க முடியாமல் சிலையாகி நின்றான். 

 

       இளம்பச்சை நிற காட்டன் புடவையில், புடவை படிப்பை சரி செய்தவாறு “தேவா… வாங்க சுரேஷ் அண்ணன பாத்துட்டு அப்றம் அருள் வீட்டுக்கு போய்ட்டு அப்றம் கவிய பாக்க போலாம்… கெளம்புங்க…” என்றவள் நிமிர்ந்து தன்னவனின் ரசனையானப் பார்வையைக் கண்டு கன்னம் சிவந்து நாணப் புன்னகையோடு “தேவா… பாத்தது போதும் வாங்க கெளம்பலாம்…” என்றாள்.

 

       “கெளம்பிக்கலாம்…. நானே இப்பதான் என் செல்லம்மாவ மொத தடவயா சேலையில நேர்ல பாக்றேன்… நிதானமா ரசிச்சுக்றேன்… அதுக்குள்ள என்னடி அவசரம்…” என்று புருவம் உயர்த்தி அவளை மேலும் கீழும் பார்வையால் அளக்க, பாவையவள் அவனின் பார்வை வீச்சுத் தாளாது விழித் தாழ்த்தினாள். 

 

       தன்னவளின் வெட்கம்தனை ரசித்த தேவா, அவளை மெல்ல நெருங்க, அவன் அருகே வர வர அவனவள் நிலையில்லாமல் தவித்தாள். மூச்சுக்காற்று உரசுமளவு அவனவள் அருகே நெருங்கி நின்ற தேவா அவளது உச்சியில் அழுத்தமாக இதழ் பதித்து “சேலையில இன்னும் அழகா இருக்கடி செல்லம்மா…” என்று கூற, விழி நிமிர்த்தி அவனைக் காதல் ததும்பப் பார்த்துப் புன்னகைத்தாள். “சரி வா கெளம்பலாம்…” என்று அவளதுக் கரம் பற்றி அவன் முன் செல்ல, அவனைக் காதாலாகப் பார்த்து புன்னகைத்தவாறே அவள் பின் சென்றாள். தேன்மலர் வழிக்கூற இருவரும் அடுத்தத் தெருவிலிருக்கும் சுரேஷின் வீட்டை வந்தடைந்தனர். 

 

               “அண்ணே…” என்று வாசலிலிருந்து தேன்மலர் குரல் கொடுக்க, வெளியே எட்டிப் பார்த்த சுரேஷின் மனைவி தெய்வானை முகம் மலர்ந்து “தேனு வா… உள்ள வா… தம்பி வாங்க…” என்று இருவரையும் வரவேற்று வீட்டினுள் அழைத்துச் சென்றாள். 

 

      தேன்மலர் சுரேஷை கேட்க, அவன் குளித்துக் கொண்டிருப்பதாக தெய்வானை கூறவும் இருவரும் கூடத்தில் அமர்ந்தனர். 

 

      தேன்மலரை நலம் விசாரித்த தெய்வானை தேவாவை சரியாக அடையாளம் கண்டு “தேனு… உங்க அண்ணே சொல்லுச்சு… மாப்ள தானே இவரு…” என்று கேட்க, தேன்மலர் ஆமென்று கூறவும் தேவாவிடமும் நலம் விசாரித்த தெய்வானை இருவருக்கும் காபி எடுத்து வருவதாகக் கூறி அடுக்களைச் செல்லவும் சுரேஷ் குளித்துவிட்டு வரவும் சரியாக இருந்தது. 

 

      இருவரையும் கண்ட சுரேஷ் ஒரு நொடி திகைத்து பின் இயல்பாகி தேவாவை மட்டும் “வாங்க மாப்ள…” என்று வரவேற்க, தன்னைத் தவிர்ப்பதை உணர்ந்த தேன்மலர் “அண்ணே…” என்றழைக்கவும் சுரேஷ் அவளைத் தீயாக முறைத்தான்.

 

       “நீ பேசாத தேனு…. என்கிட்ட எல்லாத்தையும் மறச்சுட்டல்ல… அப்ப நீ என்ன மூனாவது மனுசனா தானே பாத்துருக்க…” என்று கேட்க, 

 

      தேன்மலருக்கு கண்கள் கரித்துக் கொண்டு வர, நா தழுதழுக்க “அண்ணே… என்ன ண்ணே இப்டி பேசுற… நா போய் எப்டி ண்ணே உன்னை அப்டி நினப்பேன்… உன்மேல பாசம் இருந்ததால தான் ண்ணே சொல்லாம இருந்தேன்…” என்றாள். 

 

     “என்ன மச்சான் சட்டுன்னு இப்டி ஒரு வார்த்த சொல்லீட்டீங்க…” என்ற தேவா தாங்கள் சந்தித்த அத்தனையையும் விளக்கிக் கூறினான். 

 

      சுரேஷ் அவசரப்பட்டு வார்த்தையை விட்டுவிட்டோமோ என்று வருந்தி தேன்மலரின் கைகளைப் பிடித்துக் கொண்டு “ஆயி… அண்ணே ஏதோ கோவத்துல சொல்லிட்டேன் ஆயி… மனசுல எதுவும் வச்சுக்காத ஆயி…” என்று மெய்யான வருத்தத்தோடுப் பேச, 

 

    “பரவால்ல ண்ணே…. நீ தானே சொன்ன… நீ பேசிட்டியே அதுவே போதும்… உன்னை சமாளிச்சாச்சு… கவிய நினச்சாதான்… என்ன செய்ய காத்துருக்காளோ….” என்று தேன்மலர் புன்னகைத்தாள். 

 

        “கொஞ்சம் கஷ்டம் தான் ஆயி… உன்மேல செம கோவத்துல இருக்கு… அதோட அருள் மேல தான் கொலவெறில இருக்கு…” என்று சிரித்தான் சுரேஷ். 

 

      தேவாவும் சிரிக்க, காபி எடுத்து வந்த தெய்வானையும் தங்களின் ஒரு வயது மகன் ராகுலை இடுப்பில் இடுக்கிக் கொண்டே “அப்பாடா… அண்ணனும் தங்கச்சியும் சாமாதானம் ஆயாச்சா… நா தப்பிச்சேன்… தேனு உங்க அண்ணே நெதம் என் தங்கச்சி என்ட்ட பேசல ஏதாவது பிரச்சனையா? சாப்டுச்சான்னு தெரியல, தூங்குச்சான்னு தெரிலனு ஒரே பொலம்பல்…” என்று கூறவும் அங்கு சிரிப்பலை எழுந்தது. 

 

      தேன்மலரும் தேவாவும் ராகுலை கொஞ்சிக் கொண்டே சிறிது நேரம் பேசியிருந்துது விட்டு கிளம்ப, சுரேஷும் தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டு அவர்களோடுக் கிளம்பினான். 

 

       மூவரும் நேராக அருள் வீட்டிற்கு வந்து காலை உணவை முடித்துவிட்டு அருளையும் அழைத்துக் கொண்டு ராகவியை காணச் சென்றனர். 

 

      செல்லும் வழியில் சுரேஷ் “அருளு… நீ கூட சொல்லல…” என்று கோபித்துக் கொள்ள,

 

       அருள் “என்ன ண்ணே பண்றது உன் தங்கச்சி தான் யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு உத்தரவு போட்ருச்சு…” என்று தேன்மலரை கோர்த்து விட, 

 

     சுரேஷ் சிரித்து “நல்ல ஆளுதான்டா நீ… எவ்ளோ அழகா தேன கோத்து விட்ற…” என்று கூற, தேன்மலர் அருளை அடிக்க என்று கேலியும் கிண்டலுமாய் ராகவியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். 

 

         கல்லூரிக்கு கிளம்பி வெளியில் வந்த ராகவி அருளையும் தேன்மலரையும் கண்டுவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு மீண்டும் வீட்டினுள் செல்ல, அருளும் தேன்மலரும் ஒருவரையொருவர்ப் பார்த்து “ரொம்ப சூடா இருக்கா போலயே…” என்க, சுரேஷும் தேவாவும் சிறு புன்னகையோடு வீட்டினுள் சென்றனர். 

 

       நால்வரையும் வரவேற்று அமர வைத்த ராகவியின் பெற்றோர் கோபமாக ஒரு ஓரத்தில் நின்றிருந்த ராகவியிடம் “ஏம்மா… பிரச்சன என்னன்னு தான் நியூஸ்ல பாத்தல்ல அப்றம் இன்னும் உன் ப்ரண்ட்ஸ் மேல கோவத்துல இருந்தா என்னமா அர்த்தம்… பேசு மா…” என்றவர்கள் “பேசி சமாதானம் ஆகுங்க…” என்றுவிட்டு அவர்கள் வீட்டின் பின்புறம் சென்றனர். 

 

       ராகவி தன் நண்பர்கள் இருவரையும் முறைத்துக் கொண்டு நிற்க, தேன்மலர் ஒரு பெருமூச்சோடு அவளிடம் எழுந்து சென்று அவளதுக் கைப் பற்ற, அவளது கையை உதறிய ராகவி ஓங்கி அவளை அறைந்துவிட்டு அழுக, தேன்மலர் விழி நீர் திரள மென்னகையோடு அவளை அணைத்துக் கொள்ள, ராகவியும் அவளை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். 

 

       அருள் தேன்மலருக்கு விழுந்த அறையைப் பார்த்து பயந்துக் கொண்டே அவளருகில் சென்று “கவி…” என்றழைக்க, நிமிர்ந்து அவனை முறைத்த ராகவி தன் கைப்பையை கொண்டு அவனை அடிக்க ஆரம்பிக்க “அய்யோ வலிக்குது டி ராட்சஸி… இத்தன நாளா எங்களவிட்டுட்டு நல்லா தின்னு தின்னு ஸ்ட்ராங் ஆயிட்டியா… இந்த அடி அடிக்ற…” என்ற அருளின் கூற்றில் தேன்மலரோடு சேர்ந்து தேவாவும் சுரேஷும் கூட சிரித்தனர். 

 

       கை ஓய மட்டும் அவனை அடித்த ராகவி “இன்னொரு தடவ ரெண்டு பேரும் என்கிட்டேருந்து எதாவது மறைச்சீங்க…” என்று விரல் நீட்டி எச்சரித்து “அடுத்த தடவ எங்க போனாலும் என்னையும் கூட்டிட்டு போகணும்…” என்று கூற,

 

      “அதுக்கு சந்தோஷ் ஒத்துக்குவாரா…” என்று தேன்மலர் கேட்டதற்கு ராகவி வெட்கத்தில் நெளிந்து “அதெல்லாம் ஒத்துக்குவாரு…” என்க,

 

      “ஆஹான்… வெக்கமா கவி…” என்று அருள் கிண்டல் செய்ய, 

 

     “அய்யோ போடா… பாரு தேனு…” என்று சினுங்கிக் கொண்டே அவள் தேன்மலரை அணைத்துக் கொண்டாள். 

 

        நண்பர்கள் மூவரும் ஒன்றாக சிரித்து நிற்பதுக் கண்டு மற்ற இருவரின் இதழ்களும் புன்னகையில் விரிந்தது. 

 

       ராகவி “ச்ச போ தேனு… நீயும் அருளும் என் நிச்சயத்துக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்… சந்தோஷ் கூட கேட்டாரு… சரி பரவால்ல… அவர ஒரு நாள் உங்களுக்கு இன்ட்ரோ தரேன்…” என்றாள். 

 

      அருளும் தேன்மலரும் அதற்கு வருந்தி “கல்யாணத்தப்ப கலக்கீறளாம்…” என்று சிரிக்க, ராகவியும் சிரித்தாள். 

 

       பின் ராகவி என்ன தான் நடந்தது என்று கேட்க, தேன்மலர் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் கூறி முடிக்க, ராகவி ஆச்சர்யப்பட்டு “தேனு… எப்டி தான் இவ்ளோவும் சமாளிச்சியோ… ஆனா சத்தியமா உன் தைரியம் எனக்கு வராது…” என்றதற்கு மென்னகைப் புரிந்தாள் தேன்மலர். 

 

      பின் ராகவி தேவாவிடம் “சாரி ண்ணா… உங்கள கவனிக்க மறந்துட்டேன்… இந்த ராட்சஸிட்டயா சீக்குவீங்க… உங்கள நினச்சு நா வருத்தப்பட்றேன்…” என்று கூற, 

 

      “பரவால்ல மா… ப்ரண்ட்ஸ் நீங்க ரொம்ப நாள் கழிச்சு பாக்குறீங்க… ஆமா ராட்சஸி ஆனா என் செல்ல ராட்சஸி…” என்று தேவா தேன்மலரை காதலோடுப் பார்த்து பதிலுரைக்க, அவனவளும் வெட்கப் புன்னகையோடு காதலாக அவனைப் பார்க்க, ராகவி இருவரையும் பார்த்து மனம் நிறைந்து பூரித்திருந்தாள். 

 

     பின் சுரேஷிடமும் பேசியவள், “அருளு… உன்னை புடிச்சுருக்குன்னு சொன்ன அந்த அப்பாவி ஜீவன் யாருடா…” என்று கேட்க, அருள் முகத்தில் அப்படி ஒரு புன்னகை. 

 

        அருள் அவளிற்கு அமீராவின் புகைப்படத்தைக் காட்டி அவளுக்கு அழைத்து ராகவியை பேச வைக்கும் சாக்கில் அவனும் பேச, அதை மற்றவர்கள் கிண்டல் செய்து சிரித்தனர். அதன்பின் ராகவி பின்புறம் சென்று தன் பெற்றோரை அழைத்து வர, அவர்கள் இருவரும் வந்தவர்களை உபசரித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின் அவர்களிடம் விடைபெற்று ராகவியையும் அழைத்துக் கொண்டு மற்ற நால்வரும் கல்லூரிக்குச் சென்றனர்.

 

             கல்லூரியில் அருளையும் தேன்மலரையும் கண்ட மாணவர்கள் அவர்களை சூழ்ந்துக் கொண்டு வாழ்த்துகள் கூறியபடியும் என்ன நடந்தது? எப்படி பிரச்சனைகளை எதிர்கொண்டார்கள்? என்று கேட்டபடியும் இருக்க, மற்ற மூவரும் விலகி நின்று அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அம்மாணவர்களில் சிலர் தேவாவையும் அடையாளம் கண்டு கொண்டு அவனிடமும் பேச, அனைவருக்கும் பதிலிளித்து அவர்களை அனுப்பி வைப்பதற்குள் மூவருக்கும் போதும் போதுமென்றானது. பின் அனைவரும் உயிரிமருந்தியல் துறைக்குச் செல்ல, அங்கு அவர்கள் வந்தது ஏற்கனவே தெரிந்தபடியால் துறை தலைவர் சீதாராமன் முதற்கொண்டு மாணவர்கள் வரை அனைவரும் அவர்களை எதிர்ப்பாத்துக் காத்திருந்தனர். 

 

       அவர்கள் ஐவரும் அங்கு சென்றதும் முதலில் சீதாராமன் அனைவரின் நலனும் விசாரித்து அருளையும் தேன்மலரையும் நினைத்துப் பெருமைப் படுவதாகக் கூற, இருவரும் புன்னகையோடு அதை ஏற்றுக் கொண்டனர். தேவாவிடமும் அவர் பேச, பின் அவரும் என்ன நடந்ததென்று கேட்க, அனைவர் முன்னிலையிலும் அருளும் தேன்மலரும் நடந்ததை விவரித்தனர். 

 

      தேன்மலர் மாணவர்களைப் பார்த்து “இது உங்களுக்கு எல்லாம் ஒரு லெசன்… ப்யூச்சர்ல நீங்க பார்மா கம்பெனில வொர்க் பண்ணலாம் இல்ல பார்மா கம்பெனியே ஆரம்பிக்கலாம்… அப்போ என்னென்ன செய்யக் கூடாது நமக்கு எவ்ளோ பெரிய பொறுப்பிருக்குன்னு இதுலயே கொஞ்சம் உங்களுக்கு புரிஞ்சுருக்கும்…. கேள்வி கேட்க எப்பவும் தயங்காதீங்க… விசுவாசம், பணம் சம்பாதிக்றதெல்லாம் ரெண்டாவது இடத்துல வச்சுக்கோங்க…. எப்பவும் பர்ஸ்ட்ல அடுத்தவங்க, நம்மள நம்பறவங்க நலன் தான் இருக்கணும்… ப்யூச்சர்ல இவன்/ இவள் என் ஸ்டூடென்டன்னு நாங்க பெருமையா சொல்லணும்… அந்த மாறி வளருனும் நீங்க…. இத எங்க எல்லாரோட ரெக்வஸ்ட்டா எடுத்துக்கோங்க…” என்று கூற, மாணவர்கள் அனைவரும் கைத்தட்டி ஒருமித்தக் குரலில் “கண்டிப்பா செய்வோம் மேம்…” என்றனர். 

 

      பின் உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் அனைவரும் அருள் மற்றும் தேன்மலரிடம் பேசிவிட்டுச் செல்ல, அடுத்து மாணவர்கள் அவர்களை சூழ்ந்துக் கொண்டனர். 

 

           அவர்களது அன்பில் சிக்கி திளைத்த அருளும் தேன்மலரும் மீள வெகு நேரமாகியது. பின் தேவாவை அவர்கள் அனைவருக்கும் தான் திருமணம் செய்துக் கொள்ள போகிறவர் என்று தேன்மலர் அறிமுகம் செய்து வைக்க, அனைவரும் இருவருக்கும் வாழ்த்துக் கூறி தேவாவிடம் “சார்… எங்க மேம் அப்டி இப்டி என்று கூறி நீங்க ரொம்ப லக்கி சார்…” என்றனர். 

 

       தேவா அனைத்தையும் புன்னகையோடு கேட்டுக் கொண்டு “உண்மையாவே நா லக்கி தான்…” என்று தன்னவளைப் பெருமைப் பொங்கப் பார்த்துக் கூற, தேன்மலர் புன்னகைத்தாள். 

 

       பின் அருள் அனைவரையும் வகுப்பிற்குப் போகச் சொல்ல, அவர்களோ “ரொம்ப நாள் கழிச்சு உங்களையும் மேமையும் பாக்றோம் சார்… கொஞ்ச நேரம் பேசிட்டு போறோம் சார்…” என்க, 

 

      அருள் “க்ளாஸ் கட் அடிக்க… இப்டி ஒரு பிட்டா…” என்க, 

 

      தேன்மலர் சிரித்து “விடு அருளு… ஒரு நாள் தானே சந்தோஷமா இருந்துட்டு போகட்டும்…” என்று கூற, மாணவர்கள் ஹே என்று கத்தினர். 

 

      பின் அனைவரும் அருள், தேவா, தேன்மலர், ராகவி, சுரேஷ் ஐவரோடும் சிறிது நேரம் பேசியிருந்துது விட்டுச் செல்ல, அருளும் தேன்மலரும் சென்று தலைமையாசிரியரைப் பார்த்து விட்டு வந்தனர். 

 

          அன்று முழுவதும் ஐவரும் கல்லூரியிலேயே மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்க, தேன்மலர் தேவாவிற்கு தங்களின் ஆய்வுக்கூடங்களை சுற்றிக் காண்பித்தாள்‌. அன்று முழுதும் தேவாவின் விழிகள் தேன்மலரை காதலாகத் தீண்டிக் கொண்டேயிருக்க, தேன்மலரும் அவனதுப் பார்வைக்குப் பதில் பார்வைப் பார்த்து வைத்தாள். இதை உடனிருந்த மற்றவர்கள் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டனர். அன்றையப் பொழுது மகிழ்ச்சியாகக் கழிய, மாலை ராகவி வீட்டில் சிறிது நேரம் இருந்துவிட்டு ராகவியை வேலாயியிடமும் சிதம்பரத்திடமும் பேச வைத்தாள் தேன்மலர். பின் அனைவரும் இரவு உணவை அவள் வீட்டிலேயே முடித்துவிட்டு அவரவர் இல்லத்திற்குச் சென்றனர்.

 

            தேவாவும் தேன்மலரும் வீட்டிற்கு வந்ததும் அசதியில் உறங்கிவிட, மறுநாள் காலை எழுந்ததும் வீட்டை சுத்தப் படுத்தும் வேலையில் இறங்கினர். சுமதி தான் அவர்களுக்கு காலை உணவைக் கொண்டு வந்து தந்தாள். இருவரும் உண்டு விட்டு தங்கள் வேலையைத் தொடர, தேன்மலர் உயர்த்திக் கட்டியக் கொண்டையும், ஏற்றிச் சொரிகிய சேலையுமாய் வியர்வையில் குளித்து வேலைச் செய்துக் கொண்டிருந்தாள். வியர்வை வழிந்து அவளை இன்னும் மினுமினுப்பாய் அழகாக ஆக்க, அவளை ரசித்திருந்த தேவா “அய்யோ சும்மாவே அழகாயிருப்பா… இப்ப கொல்றாளே…” என்று எண்ணியவன் மெல்ல அவளை நெருங்கி பின்னிருந்து அணைத்துக் கொண்டு அவளதுக் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். 

 

      அவனது திடீர் அணைப்பில் திடுக்கிட்ட தேன்மலர், கழுத்துரசிய அவனது சூடான மூச்சுக்காற்றும் மீசை முடியும் அவளை குறுகுறுக்கச் செய்து நிலையில்லாமல் தவிக்கச் செய்ய, அவனது அணைப்பிலிருந்து விடுபட முயன்றாள். 

 

       அவளவனோ அவளது வயிற்றைப் பற்றி மேலும் தன்னோடு சேர்த்து இறுக்கி “செல்லம்மா…” என்று அவளது காதில் கிறக்கமாய் அழைக்க, ஏற்கனவே தவித்திருந்தவள் அவனது அழைப்பிலும் அணைப்பிலும் இளகி உருகி தனது இடையைப் பற்றியிருந்த அவனது கரங்களின் மீது தன் கரம் பதித்தவள் நாணப் புன்னகை இதழ்களில் தவழ விழி மூடி “ம்ம்…” என்றாள். 

 

        அவளது ம்ம் யிலேயே அவள் நிலை உணர்ந்தவன் அவளதுக் கன்னத்தில் அவனது மீசை வைத்திழைத்து “செல்லம்மா… அள்றடி… அதனால ஒரே ஒரு முத்தம்…” என்றிழுக்க, அவனது அணைப்பிலேயே அவனை நோக்கித் திரும்பிய தேன்மலர் காதல் நிறைந்த விழிகளால் தன் சம்மதத்தை உறைக்க, அவளவனோ காதலாக அவளை ஏறிட்டவன் மெல்ல குனிந்து அவளது இதழில் தன்னிதழைப் பொருத்தினான். 

 

        முதலில் மென்மையாக ஆரம்பித்த இதழ் முத்தத்தில் நேரம் செல்ல செல்ல வன்மைக் கூட, பெண்ணவள் விழி மூடி அவனது ஒவ்வொரு ஆக்கிரமிப்பையும் ரசித்திருந்தாள். அவனது இதழ் அவள் இதழில் போர்த் தொடுத்துக் கொண்டிருக்க, அவனது கரங்களோ இறுக்கமாய் அவளது இடைப் பற்றி, அவளது வெற்றிடையில் ஊர்வலம் சென்றுக் கொண்டிருந்தன. 

 

       ஒருக்கட்டதிற்கு மேல் அவனது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத தேன்மலர் திமிர, தேவா அவளது இடையை மேலும் இறுக்கமாக வளைத்து இதழை மென்மையாக சுவைக்க ஆரம்பிக்க, தேன்மலர் அவனிடம் தோற்று அவனுக்கு இயைந்து அவளும் அவனை இறுக அணைத்துக் கொண்டாள். நெடு நேரம் நீடித்த இதழ் யுத்தம் முடிவை எட்ட, தேன்மலர் அவனைச் செல்லமாக அடித்து சினுங்கியவாறே அவனது மார்பில் சாய்ந்துக் கொள்ள, தேவா புன்னகைத்து அவளை அணைத்து அவளது நெற்றியில் இதழ் பதித்தான்.

 

              பின் இருவரும் விலகித் தங்கள் வேலையை காதலும் கொஞ்சலுமாய்த் தொடர்ந்தனர். அன்றிரவு இருவரும் வேலைகளை முடித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது அருள் அழைத்து வீட்டில் அமீரா பற்றி கூறிவிட்டதாகவும் தன் பெற்றோர் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதாகவும் கூறினான். அவனிடம் காலையில் தாங்கள் வந்துப் பேசுவதாகக் கூறிவிட்டு இருவரும் யோசனையில் ஆழ்ந்தனர். பின் இருவரும் வேலாயி தான் இதற்கு சரியானவர் என்று அவருக்கு அழைத்து விடயம் கூறி நாளை தாங்கள் அழைக்கும் போது சிரமம் பார்க்காமல் உறக்கத்திலிருந்து எழுந்து அருளின் பெற்றோரிடம் பேசுமாறுக் கேட்டுக் கொண்டு அவரிடம் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு உறங்கச் சென்றனர்.

 

             மறுநாள் காலையில் முதல் வேலையாக தயாராகி அருளின் வீட்டிற்குச் சென்றனர். தேன்மலரும் தேவாவும் அருளின் பெற்றோரிடம் அமீரா பற்றியும் அவளின் குடும்பம் பற்றியும் எடுத்துக் கூற இருவரும் யோசிக்க ஆரம்பித்தனர். அருள் அவர்களைப் பார்க்க, தேவாவும் தேன்மலரும் அவர்களை யோசிக்க விடக் கூடாதென்று வேலாயிக்கு அழைத்து அவரை அவர்களிடம் பேச வைத்தனர். வேலாயி பேசியதும் அருளின் அன்னை உடனே சம்மதம் கூற, அவனின் தந்தை மட்டும் யோசிக்க, அவரையும் தேவா அமீராவிடமும் அவளின் பெற்றோரிடம் பேச வைக்க, அதன்பின் அவரும் அருளின் விருப்பத்தை நிறைவேற்றுவதென்று முடிவு செய்தார். அருளின் அன்னை அமீராவிடம் பேசிக் கொண்டிருக்க, தேன்மலர் உடனே சென்று இனிப்பு செய்து எடுத்து வந்து அனைவருக்கும் கொடுத்தாள். பின் தேன்மலரும் தேவாவும் அன்றைய நாளை அருள் வீட்டில் மகிழ்ச்சியாகக் கழித்தனர்.

 

             அன்றிரவு தேவா வேலைக்குச் செல்லாமல் தன்னுடனே இருப்பதைப் பற்றி தேன்மலர் கேட்க “செல்லம்மா… அன்னிக்கு உடம்பு சரியில்லாம ரெண்டு நாள் கழிச்சு ஆபிஸ்லேர்ந்து வந்தேனே… அப்போவே வேலைய ரிசைன் பண்ணிட்டேன்…. உன்கூடவேயிருந்து பிரச்சனைய முடிக்கனுனு நினச்சேன்… அதான்…” என்றான். 

 

       தேன்மலர் “எனக்காக ஏன் தேவா…” என்று வருந்தி கோபித்துக் கொள்ள, அவளை அணைத்துக் கொண்ட தேவா “அடி மக்கு செல்லம்மா… நா சாப்ட்வேர் வேலைய தான் விட்டேன்… ஆனா இன்னும் எதிக்கல் ஹேக்கர் தான்… அப்றம் உன்னை கல்யாணம் பண்ணிட்டு அம்மாச்சி, மாமான்னு அவங்ககூட இங்கயே இருக்கணும்னு ஆசை… அதான் முடிவு பண்ணிட்டேன்… இங்க பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்றதுக்கான வேலையும் போய்ட்ருக்கு…” என்று கூற, தேன்மலர் தனக்காக யோசிக்கும் தன்னவனின் காதலில் கரைந்து அன்பில் நெகிழ்ந்து அவனைக் கண்ணீரோடு இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

 

              மேலும் இரண்டு நாட்கள் திருச்சியிலிருந்த தேவாவும் தேன்மலரும் அருளின் குடும்பத்தாரையும் அமீராவை பெண் பார்க்க உடன் அழைத்துக் கொண்டு சென்னை புறப்பட்டனர். சென்னையில் அருள் மற்றும் அமீராவின் பெற்றோர் கலந்துப் பேசி மூன்று மாதம் கழித்து திருமண தேதியை முடிவுச் செய்தனர். 

 

       பின் அருள் அவன் குடும்பத்தோடு திருச்சி திரும்ப, தேவாவும் தேன்மலரும் அமெரிக்கா சென்று வேலாயி, சிதம்பரம், துர்கா, ராஜேஷ் நால்வரையும் சென்னை அழைத்து வந்தனர். 

 

        சிதம்பரம் இம்முறை தன் வேலையைத் துறந்து இந்தியாவிலேயே தன் மகளோடும் அன்னையோடும் இருப்பதென்ற முடிவில் வந்திருந்தார். வந்ததும் செந்தில், ராஜேஷ் குடும்பத்தை கொடைக்காணலிலிருந்து வரவழைத்து ராஜேஷிடம் சேர்ப்பித்தான். 

 

        ராஜேஷும் அவனது குடும்பத்தை பல மாதங்கள் கழித்துப் பார்த்ததில் மகிழ்ந்து அவர்கள் காட்டிய அன்பில் நெகிழ்ந்திருந்தான். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக வேலாயி ராஜேஷ் குடும்பத்தாரிடம் ராஜேஷ் மற்றும் துர்காவின் திருமணம் பற்றி பேச, அனைவருமே ஒரு நொடி அதிர்ந்தனர். தேன்மலர் மட்டும் புன்னகையோடு தன் அப்பாயியை பார்த்திருந்தாள்.

 

          ராஜேஷ் குடும்பத்தார் முதலில் அதிர்ந்தாலும் பின் வேலாயி, துர்கா பற்றி கூறியதிலும் துர்காவிடம் பேசியதிலும் அவர்கள் சம்மதிக்க, அதிர்ச்சியிலிருந்து மீளாத ராஜேஷையும் துர்காவையும் தேவா தனியே பேச வைக்க, இருவரும் பேசி ஒருவரையொருவர் இந்த மூன்று மாதக் காலத்தில் நன்கு அறிந்திருந்ததாலும் மறுதலிக்க காரணம் ஏதுமில்லாததாலும் திருமணத்திற்கு சம்மதித்தனர். பின் ராஜேஷோடு அவனது குடும்பத்தாரும் விடைபெற்று கிளம்பினர். 

 

            நீதிமன்றம் ஆர்யன் மற்றும் ரகுவிற்கு உதவிய டெல்லி மற்றும் சென்னை மருத்துவமனைகளுக்கு அபராதமும் மருத்துவர்களுக்கு ஆறு மாத கால சிறை தண்டனையும் விதித்திருந்தது. 

 

       அதனால் தேன்மலருக்கு ராஜேஷ் உதவியக் காரணத்தால் அவனது வேலை பறிபோயிருக்க, தேன்மலர் தன் மாமா மோகனிடம் பேசி அவரது மருத்துவமனையிலேயே வேலைக்கு ஏற்பாடுச் செய்திருந்ததால், அவனதுக் குடும்பம் மொத்தமும் திருச்சிக்கு இடம்பெயர்ந்தது. 

 

       இரண்டு நாட்கள் சென்னையிலிருந்த தேன்மலர், தேவா, வேவாயி, சிதம்பரம், சங்கவி, துர்கா அறுவரும் திருச்சிக்கு கிளம்பி வந்தனர். வேலாயி மற்றும் சிதம்பரம் வந்ததை அறிந்து ஒரு வாரம் சொந்தங்களும் தெரிந்தவர்களும் ஊர்க்காரர்களும் நலம் விசாரிக்க வீட்டிற்கு வந்துப் போய்க் கொண்டிருந்தனர். 

 

        பின் ஒரு நன்நாளில் வேலாயி, சிதம்பரம், தேவா மூவரும் மதுரை சென்று தேவாவின் மாமா வீட்டாரையும் சித்தப்பா வீட்டாரையும் சந்தித்து தேவா- தேன்மலரின் திருமணம் பற்றி பேசினர். தேவா ஏற்கனவே தேன்மலர் பற்றி அவர்களிடம் பேசியிருந்ததால் இருவீட்டாரும் மனப்பூர்வமாக சம்மதித்தனர். தேவா தங்கள் வீட்டின் மூத்த ஆண் வாரிசென்பதால் அவனது திருமணத்தை மதுரையே வியக்கும் வண்ணம் அனைத்து சொந்த பந்தங்களையும் அழைத்து விமரிசையாகச் செய்ய வேண்டும் என்று கூறி திருமணத்தை ஆறு மாதங்கள் கழித்து வைத்துக் கொள்ளலாம் என்று கூற வேலாயியும் சிதம்பரமும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டனர். 

 

           நாட்கள் செல்ல, இழப்பீடாக வந்தத் தொகையை வைத்து திருச்சியிலேயே தேன்மலர் க்ளினக்கல் ட்ரையிலில் பாதிக்கப்பட்டோருக்கும், மருத்துவ செலவுகள் செய்ய முடியாதவர்களுக்கும் உதவும் பொருட்டு ட்ரஸ்ட் ஆரம்பித்ததோடு ஆதரவற்றவர்களுக்காக ஒரு இல்லமும் ஆரம்பித்து அதன் பொருப்பு முழுவதையும் சங்கவியிடம் கொடுத்தாள். 

 

       முதலில் சங்கவி தயங்கி எப்படி தன்னால் முடியும் என்று மறுக்க, தேன்மலர், தேவா, வேலாயி, சிதம்பரம் நால்வரும் அவளுக்குத் தைரியம் கூறி அவளை பொறுப்பேற்க வைத்தனர்.  

 

       தேன்மலர் கல்லூரிக்கும் துர்கா மருத்துவமனைக்கும் சென்றுக் கொண்டிருக்க, தேவாவும் தன் தொழில் தொடங்கும் வேலையில் முழுமூச்சில் இறங்கி ஒரு மாதத்தில் தொழிலையும் தொடங்கி இருந்தான். என்னதான் சங்கவி தனியே டரஸ்ட்டையும் இல்லத்தையும் பார்த்துக் கொண்டாலும் அவ்வப்போது தேவா, தேன்மலர், அருள் என்று மூவரும் மாறி மாறி அவளுக்கு உதவி செய்தனர்.

 

             நாட்கள் இவ்வாறு உருண்டோட செந்திலும் ஒரு நாள் தனக்கு திருமணம் என்று குடும்பத்தோடு வந்து அனைவரையும் அழைத்து விட்டுச் சென்றான். 

 

        இதற்கிடையே ராகவி- சந்தோஷின் திருமணம் நடக்க, அதற்கு தேன்மலர், தேவா, அருள், வேலாயி, சங்கவி, சிதம்பரம், அருளின் பெற்றோர், அமீராவும் அவளின் குடும்பமும் சென்று வந்தனர்.

 

      பின் ஹசனுக்கு அவனது குற்றத்திற்கு ஆறு மாத காலம் சிறை தண்டனைக் கிடைத்ததை அறிந்து அனைவரும் மகிழ்ச்சியாக தங்கள் வேலைகளோடு துர்கா- ராஜேஷ் மற்றும் அருள்- அமீரா திருமண வேலைகளிலும் பம்பரமாய்ச் சுழன்றனர். இரு ஜோடிகளின் திருமணமும் நன்முறையில் நடந்து முடிய, அமீராவின் தந்தை தன் ஒற்றை மகளைப் பிரிந்திருக்க முடியாமல் திருச்சிக்கே தன் தொழிலை மாற்றிக் கொண்டு திருச்சியில் தனியே வீடு வாங்கித் தன் மனைவியோடுக் குடியேறினார். அதன்பின் அனைவரும் சென்னையில் நடந்த செந்தில்- மிருதுளா திருமணத்திற்கு குடும்பமாகச் சென்று வந்தனர்.

 

                 ஜனவரி மாதம் வர, புதுமணத் தம்பதியரான துர்கா- ராஜேஷ் மற்றும் அருள்- அமீராவோடு தேவா- தேன்மலர் ஜோடியும் ஸாம்- கின்ஸி திருமணத்தில் கலந்துக் கொள்ள அமெரிக்கா விரைந்தனர். 

 

       வேலாயி மற்றும் சிதம்பரம் இருவரும் தேவா- தேன்மலரின் திருமண வேலைகள் இருந்ததாலும் தங்கள் உடல் நலனையும் பார்த்து அமெரிக்கா செல்லாமல் இருந்துக் கொண்டனர். 

 

        ஸாம்- கின்ஸி திருமணம் கோலாகலமாய் நடந்து முடிய, மூன்று ஜோடிகளும் புதுமணத் தம்பதியரை கேலிக் கிண்டல் செய்து வெட்கப் பட வைத்தனர். அவர்களின் திருமணம் முடிந்த மறுநாள் தேன்மலர் கூறியது போலவே இருவரையும் தன் சொந்த செலவில் தேனிலவிற்கு அனுப்பி வைத்தாள். தேவாவும் தேன்மலரும் புதுமண ஜோடிகளான துர்கா- ராஜேஷிற்கும் அருள்- அமீராவிற்கும் அவர்களுக்கேத் தெரியாமல் நியூயார்க்கில் தேனிலவிற்கு ஏற்பாடு செய்து இன்ப அதிர்ச்சி தந்தனர். இரு ஜோடிகளும் தேனிலவைக் கொண்டாட தேவாவும் தேன்மலரும் அமெரிக்காவிலிருந்துக் கிளம்பும் முன் பிக் பியை சந்தித்து தங்களது திருமணம் பற்றிக் கூறி அவரிடம் ஆசி பெற்று இந்தியா வந்தடைந்தனர்.

 

               அவர்கள் இந்தியா வந்த பத்து நாட்கள் கழித்து இரு ஜோடிகளும் இந்தியா வந்து சேர, தேவா- தேன்மலரின் திருமண ஏற்பாடுகள் களைக்கட்ட ஆரம்பித்தது. தேவாவும் தேன்மலரும் காதலில் திளைத்திருக்க, மற்றவர்கள் அவர்களது திருமண வேலைகளைப் பார்த்தனர்.

 

        வேலாயி தன் பெயர்த்தி திருமணமென்று பூரிப்போடு அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய, சிதம்பரம் தன் மகளோடு நீண்ட நாட்கள் கழித்து ஒன்றாகயிருந்ததில் அவளது சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருந்தார். 

 

      திருமண நாள் நெருங்க, திருமணம் மதுரையில் என்பதால் தேவா ஒரு வாரம் முன்பே திருமணச் சடங்குகள் இருப்பதால் மதுரை சென்றிருக்க, தேன்மலரின் குடும்பத்தார் இரண்டு நாட்கள் முன் தன் சொந்த பந்தங்களோடு மதுரைக்குச் சென்றனர். 

 

      திருமணத்தன்று ராகவியின் குடும்பம், அருள் குடும்பம், அமீராவின் பெற்றோர், ராஜேஷ் குடும்பம், சங்கவி, இல்லத்தில் இருப்பவர்கள் டரஸ்ட்டில் வேலை செய்பவர்கள், தேன்மலரோடு வேலை செய்பவர்கள், மாணவர்கள், நண்பர்கள், தேவாவின் சொந்த பந்தங்கள், நண்பர்களென பெரிய கூட்டமே அப்பெரிய திருமண மண்டபத்தில் திரண்டிருந்தது. தேவா- தேன்மலரின் திருமணத்தைக் காண தேனிலவு முடித்து நேரே மதுரை வந்த ஸாம்- கின்ஸி தம்பதியருக்கு திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றும் ஆச்சரியமளித்தன. சங்கவியும் சுரேஷும் காலில் பம்பரம் கட்டிக் கொண்டு திருமண வேலைகளில் சுழன்றுக் கொண்டிருந்தனர். 

 

       முகூர்த்த நேரம் நெருங்க, தேவாவும் அம்முவும் ஆசையாக தங்களின் பெற்றோரின் திருமண நாளிற்கு தருவதற்காக வாங்கி வைத்திருந்த, பட்டு வேட்டி சட்டையை தேவா உடுத்தி கம்பீரமாக அதே நேரம் வசீகரமாக வீற்றிருக்க, அவனுக்கருகே சிவப்பு நிற பட்டுப் புடவையில் எளிய அலங்காரங்களோடு அழகியாக வெட்கமும் பூரிப்புமாய் தேன்மலர் வீற்றிருக்க, அதைக் கண்குளிர கண்டு பூரித்துப் போயினர் வேலாயியும் சிதம்பரமும். நல்ல நேரத்தில் தேவா தேன்மலரின் கழுத்தில் பொன் தாலி முடிந்து அவளது நெற்றியில் குங்குமமிட்டு மகிழ்ச்சியில் காதலும் கண்ணீரும் நிறைந்து அவனைப் பார்த்திருந்தத் தன் மனையாளின் நெற்றியில் அனைவர் முன்னிலையிலும் தேவா இதழ் பதிக்க, நண்பர்கள் செய்த கிண்டலில் தேன்மலர் நாணமேறி சிவந்திருந்தாள்.

 

          மதுரையே கதையாய் பேசுமளவிற்கு தேவா வீட்டினர் திருமணத்தை ஏற்பாடு செய்திருக்க, பந்தியில் கறி விருந்து தூள் கிளப்பிக் கொண்டிருந்தது. மற்ற சடங்குகள் பரம்பரை வீட்டில்தான் நடக்க வேண்டுமென்று கூறியதால், மதுரையிலிருந்த தேவாவின் வீட்டிலேயே சாந்தி மூகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

 

         தேன்மலரை தேவாவின் அறைக்கு அனுப்பு முன் வேலாயி சில அறிவுரைகள் கூறினார். தேன்மலர் அறைக்கு வந்ததும் அவளைத் தன்னருகே அமர்த்திக் கொண்ட தேவா அவளுடன் திருமண நிகழ்வுகள் பற்றி சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு அவளது நெற்றியிலிருந்து முத்த யுத்தத்தைத் தொடங்கி கட்டில் யுத்தத்திற்குத் தாவ தேன்மலரும் மனதார தன்னவனிடம் கட்டில் யுத்தத்தில் தோற்றுக் கொண்டிருந்தாள்‌. இருவரும் இனிதாய் தங்கள் இல்லறத்தைத் தொடங்கினர். விருந்தெல்லாம் முடித்து அனைவரும் தேவா- தேன்மலரோடு ஒரு வாரம் கழித்து திருச்சிக்கு வந்து தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

 

இரண்டு வருடம் கழித்து,

              வேலாயி தனக்கு கொள்ளுப் பெயரனோ பெயர்த்தியோ வரப்போகும் மகிழ்ச்சியில் நின்றிருக்க, சிதம்பரம் தன் மகள் தாய்மை அடைந்த நாளிலிருந்து அவளிடம் ஏற்படும் மாற்றத்தைக் கண்டு மகிழ்ந்திருந்தவர் இப்போது அவளை தாய்மையின் பூரிப்பில் முகம் மிளிர வருபவளைக் காண ஆவலாக நின்றிருந்தார். இப்போதெல்லாம் சிதம்பரம் வாக்கிங் ஸ்டிக் இல்லாமல் தனியாக நடக்குமளவு நன்கு தேறி, பேச்சும் குழரள் இல்லாமல் பேசிகிறார். தேவா, கண்ணாடி முன் நின்று பச்சை நிற பட்டுப் புடவையில் தாய்மையின் பூரிப்பில் மேடிட்ட தன் வயிற்றைப் புன்னகையோடுத் தடவிப் பார்க்கும் தன் மனையாளை பின்னிருந்து அணைத்து அவளதுக் கன்னத்தில் முத்தமிட்டு “செல்லம்மா… எல்லாரும் வெயிட் பண்றாங்க போலாமா…” என்று கேட்க, அவள் புன்னகைத்து “போலாம் தேவா…” என்று திரும்பி அவனதுக் கன்னத்தில் இதழ் பதித்தாள். பின் இருவரும் காதலாகக் கண்கள் கோர்த்து பின் கரமும் கோர்த்து அறையிலிருந்து வெளியேறி அலங்கரிக்கப்பட்ட மேடை நோக்கிச் சென்றனர். 

 

          இருவரையும் ஜோடியாகப் பார்த்தப் பெரியவர்களும் நண்பர்களும் கண் நிறைந்துப் போயினர். முதலில் தேவா தன்னவளுக்கு சந்தனம் பூசி வளையலிட பின் தேன்மலரும் தேவாவும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதற்கிணங்க வேலாயி தன் பெயர்த்திக்கு வளையலிட, பின் ஒவ்வொருவராக வந்து வளையலிட தேன்மலரின் வளைகாப்பு இனிதே நிறைவுற்றது. வளைகாப்பிற்கு ராகவி- சந்தோஷ் ஜோடி தங்களின் ஒரு வயது மகனுடனும் ராஜேஷ்- துர்கா ஜோடி தங்களின் பத்து மாத மகளுடனும் அருள்- அமீரா ஜோடி தங்களின் ஆறு மாத மகனுடனும் செந்தில்- மிருதுளா ஜோடி தங்களின் எட்டு மாத மகளுடனும் வந்திருக்க, நண்பர்கள் அனைவரும் நெடு நாட்கள் கழித்து ஒன்றாக கூடியதால் சிறிது நேரம் பேசியிருந்து விட்டுச் சென்றனர். 

 

      அன்றிரவு மொட்டை மாடியில் நிலா வெளிச்சத்தில் தேன்மலர் கால் நீட்டி அமர்ந்து தன் காலைப் பிடித்துவிடும் தேவாவை காதலோடு உதட்டில் புன்னகை உறையப் பார்த்திருக்க, தேவா தன்னவளைப் பார்த்து என்ன என்று புருவம் உயர்த்த, அவள் இருகைகளையும் விரித்து அவனை அழைக்க தேவா புன்னகையோடுச் சென்று அவளருகில் அமர்ந்து அவளை அணைத்துக் கொள்ள, தேன்மலர் அவன் தோளில் சாய்ந்தவாறு அவனை அணைத்துக் கொண்டாள். 

 

வானில் தெரிந்த நிலவை இரசத்திபடி,

 

          “செல்லம்மா நா ஒன்னு கேக்கவா.” என்றான் தேவா.

 

          “இதென்ன புதுசா பர்மிஷன்லா கேக்குறீங்க. கேளுங்க தேவா. எங்கிட்ட என்ன வேணா கேக்குற உரிமை உங்கள தவிர யாருக்கு இருக்கு.” என்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்து கூறினாள் தேன்மலர்.

 

        அதற்கு சிறு புன்னகையை பதிலாக தந்தவன், “இல்ல இது இன்னிக்கு தான் எனக்கு தோனுச்சு. கேட்டா நீ சங்கடப்படுவியோனு ஒரு தயக்கம். நீயே சொன்னப்றம் நா ஓபனாவே கேக்குறேன்.” என்றான் தேவா. தேன்மலர் அவன் என்ன கேக்கப் போகிறானென்று அவன் முகம் பார்த்திருந்தாள்.

 

         “துர்கா பத்தி யோசிச்ச நீ சங்கவி பத்தி யோசிக்கலயா? நானுமே அத பத்தி யோசிக்கவேயில்ல. இன்னிக்கு எல்லாம் ஜோடியா குழந்தையோட நிக்கும்போது அவ மட்டும் தனியா நின்னா. அது கஷ்டமா இருந்தது. நாம ஏன் இத யோசிக்கல செல்லம்மா கூட யோசிக்கலயேனு தோனுச்சு.” என்றான்.

 

         நன்கு நிமிர்ந்து அவன் விழி நோக்கியவள், “சங்கவி பத்தி யோசிச்சனால தான் பெரிய பொறுப்ப அவக்கிட்ட ஒப்படைச்சுருக்கேன். அவ அனுபவிச்சது சீக்கிரம் மறக்கக் கூடிய ஒன்னில்ல. அவ அதுலேர்ந்து மீண்டு வர்றது மட்டுமில்ல தைரியமா இந்த உலகத்த ஃபேஸ் பண்ணனும். அவ வாழ்க்கைய அவ தான் முடிவெடுக்கணும். நாம ஒரு முடிவெடுத்து அத அவமேல திணிக்க கூடாது. இப்போ தான் அவ கொஞ்சம் அதுலேர்ந்து வெளில வந்துருக்கா. அவள முழுசா தெரிஞ்சு புரிஞ்சு அவள அவளாவே ஏத்துக்கற காதல் அவளுக்கு கிடைக்கும். அவளுக்கும் கல்யாணம் செஞ்சுக்கணும் தோள் சாய ஒரு துணை வேணுனு தோனும் அது எப்ப தோனுனாலும் அவ எந்த உறுத்தலுமில்லாம அந்த வாழ்க்கைக்குள்ள நுழைவா. இப்போ நாம எடுத்து சொல்லி புரிய வச்சு கல்யாணம் பண்ணி வச்சாலும் வர்ற புருஷன் அவள தங்கமாவே தாங்குனாலும் கசந்த நிகழ்வுகளோட நினைவுளோட சுவடு அவளுக்குள்ள இருக்கும். அது அவள மட்டுமில்லாம அவ புருஷனையும் பாதிக்கும். அவ உடல விட அவ மனசு தான் இப்ப கல்யாண வாழ்க்கைக்கு தயாராகணும் அதுக்கு வேண்டிய காலம் தான் இது. ஏன் அவ கல்யாணமே வேணானு முடிவெடுத்தா கூட அவ பக்கம் நாம உறுதுணையா உறுதியா நிப்போம். ஏன்னா அது அவ வாழ்க்கை அவ தான் முடிவெடுக்கணும். துர்காக்கு நா கல்யாணம் பண்ணி வச்சேன்னா அவளுக்கு சங்கவி மாறி எந்த பாதிப்புமில்ல அதோட ராஜேஷ பத்தி அவளுக்கும் அவள பத்தி ராஜேஷூக்கும் நல்லா தெரியும் ரெண்டு பேரும் புரிதலோட வாழ்வாங்கனு நினைச்சு கல்யாணம் பண்ணி வச்சேன். இப்ப அவங்களும் என் நினைப்ப பொய்யாக்காம சந்தோஷமா காதலோட வாழ்ந்துட்டு இருக்கறத நா சொல்லி உங்களுக்கு தெரியணுனு இல்ல தேவா. முன்ன விட இப்போ சங்கவி கொஞ்சம் தேறி தைரியமாயிருந்தாலும் இன்னும் அவ முழுசா அத கடந்துடல. இன்னும் அவ உடலளவுல அனுபவிச்ச கொடுமை அவ மனசுல வலியா தான் இருக்கு. சங்கவிக்கு எப்போ கல்யாணம் பண்ணிக்கனுனு தோணுதோ அப்ப அவளுக்கு நாமளே முன்ன நின்னு சந்தோஷமா கல்யாணம் பண்ணி வைப்போம்.” என்று புன்னகைத்தவளின் கன்னம் வருடி புன்னகைத்தான் தேவா.

 

         “சங்கவி இடத்துலேர்ந்தும் யோசிக்கிறடி செல்லம்மா. எனக்கு இது தோனவேயில்ல. சங்கவி தான் முடிவெடுக்கணும். நாம அவக்கூட நிப்போம்.” என்ற தேவாவை பார்த்து புன்னகைத்து விட்டு மீண்டும் அவன் தோள் மீது சாய்ந்துக் கொண்டாள் தேன்மலர்.

 

        தேவா ஆதுரமாய் அவளது தலை வருடி “என்னடி செல்லம்மா…” என்று கேட்க, 

 

      தேன்மலர் “மனசு நிறைஞ்சுருக்கு தேவா…. உங்கள பாத்ததுக்ப்றம் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா… இப்டியே சந்தோஷமா கடைசி வரைக்கும் காதலிச்சுக்கிட்டே இருக்கணும்..‌. அதான் தேவா என் ஆசை…” என்றாள். 

 

        தேவா புன்னகைத்து “எனக்கும் தான்டி… உன்னை பாத்தப்றம் என் குடும்பமே திரும்ப கெடச்ச மாறி இருந்துச்சு… உன்னை நல்லா பாத்துக்கணும்… காதலிச்சுட்டே‌… இதோ அப்பப்போ இது மாறி கட்டிப் புடிச்சுட்டே வாழ்க்க போகணும்…. எனக்கு பிரசவத்த நினச்சா தாண்டி செல்லம்மா பயமாயிருக்கு…. ரொம்ப வலிக்கும்ல…” என்று கேட்டான். 

 

       அவனை நிமிர்ந்துப் பார்த்துப் புன்னகைத்த தேன்மலர் “தேவா… என்னதிது செல்லம்மா புருஷனா இருந்துட்டு இதுகெல்லாமா பயப்படுவாங்க… வலிக்கும் தான் ஆனா நம்ம குழந்தை வர போறத நினச்சு எனக்கு சந்தோஷமாயிருக்கு…” என்றாள். 

 

        தேவா “இருந்தாலும் செல்லம்மா… ரொம்ப நேரம் வலி எப்டி தாங்குவ….” என்று சிறு பிள்ளை போல் கேட்க, 

 

      புன்னகைத்த தேன்மலர் “ஆஹான்‌… அப்போ உங்க புள்ளகிட்ட நீங்களே சொல்லுங்க… அம்மாவுக்கு வலி தராம வெளி வாடான்னு…” என்று விளையாட்டாய்க் கூற, 

 

       தேவா அவளது புடவை விலக்கி அவளது நிறைமாத வயிற்றின் மீது கை வைத்து “செல்லம்… அப்பா சொல்றத கவனமா கேளுடா… அம்மா பாவம் டா… அம்மாவுக்கு வலிச்சா அப்பாவால தாங்க முடியாது… அதனால நீங்க அம்மாவுக்கு வலிக்காம வெளில அப்பாகிட்ட வாங்க… சரியா தங்கம்…” என்று பேச,

 

       குழந்தையும் தன் தந்தையின் பேச்சுக்கு செவி சாய்த்தது போல் வயிற்றில் அசைய தேன்மலர் விழி விரித்து புன்னகையோடு “தேவா… உங்க புள்ள உங்க பேச்சக் கேட்டு அசையுறான் தேவா…” என்று கூற, குழந்தையின் அசைவை உணர்ந்த தேவாவும் புன்னகையோடுத் தன்னவளைப் பார்த்தவன் குனிந்து அவளது வயிற்றில் இதழ் பதிக்க, அதற்கும் குழந்தை அசைய, தேவாவும் தேன்மலரும் பூரித்து போய் தங்கள் வாரிசின் அசைவுகளை ரசித்திருந்தனர். 

 

       நிலவும் அவர்களின் மகிழ்ச்சிக் கண்டு தண்ணொளி வீசி அவர்களை குளிர்வித்துக் கொண்டிருந்தது‌. 

 

      அவளின் வழிகாட்டியாய் அவனும் அவனின் வழிகாட்டியாய் அவளும் கரம் கோர்த்து வாழ்க்கை கடலை காதலென்னும் உறுதிக் கொண்டு வெற்றிகரமாக நீந்திக் கடப்பர்.

 

– சுபம் –

 

           தேன்மலருக்கும் தேவாவிற்கும் என்ன செய்து ஏது செய்தென்று தவித்திருந்த நேரத்தில், சரியான நேரத்தில் சரியான உதவியை செய்த அனைவரும் வழிகாட்டிகளே!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்