Loading

அத்தியாயம்- 29

 

 

        ஆர்யனது கம்பெனியில் ஆர்யனும் ரகுவும் டி கேட்கும் கேள்விகளுக்கு அசராமல் பதில் கூறி கொண்டிருக்க, டி அவர்களின் சாமர்த்தியத்தையும் சாதுர்யத்தையும் உள்ளுக்குள் மெச்சிக் கொண்டார். அச்சமயம் டி யோடு வந்திருந்த ஒருவர் வந்து அவர் காதில் ஏதோ கூற, டி யின் முகத்தில் சிந்தனை ரேகைகள் படர, ஆர்யனும் ரகுவும் ஒருவரையொருவர் அர்த்தமாய்ப் பார்த்துக் கொண்டனர். “வில் பி பேக் இன் டென் மினிட்ஸ்….” என்றுவிட்டு அவ்வறை விட்டு வெளியேற, ஆர்யனும் ரகுவும் சிதம்பரத்தின் வீடியோ பற்றிய செய்தியாக இருக்கும் என்று ஏளனப் புன்னகைப் புரிந்து அமைதியாக அமர்ந்திருந்தனர். 

 

      அரை மணித்தியாலம் கழித்து திரும்பி வந்த டி முகத்தில் இருவரும் எதிர்பார்த்த உணர்ச்சியில்லாததால் அமைதியாக அவரைப் பார்த்திருந்தனர். டி இருவரையும் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அமர, அப்போது அங்கு வந்த அவரது உதவியாளர் அவரின் மடிக்கணினியைக் கொடுத்துச் செல்ல, டி அதை ஆர்யன் மற்றும் ரகு புறம் திருப்பி “இத கொஞ்சம் பாருங்க…” என்றார். ஆர்யனும் ரகுவும் குழப்பமாக ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டு மடிக்கணினியில் விழிப் பதித்தனர்.

 

               அதில் கண்டக் காட்சியில் இருவருக்குமே கோபம் மூல, ரகு கடினக் குரலில் “என்ன சார் இதெல்லாம்… எங்க கம்பெனில எப்டி நீங்க ஸ்பை கேமரா பிக்ஸ் பண்ணலாம்…. என்ன நினச்சு இத பண்ணீங்க… உங்க நாட்டுக்கு மருந்து சப்ளை பண்றோம் அத இன்ஸ்பெக்ஷன் பண்ண வர்றீங்க ரைட்… ஆனா இப்டி கம்பெனில கேமரா பிக்ஸ் பண்றது… இதுக்கு நாங்க எப் டி ஏ மேல கேஸ் போட முடியும் தெரியுமா…” என்று கேட்டான்.

 

       டி நிதானமாகப் புன்னகைத்து “ரிலாக்ஸ் மிஸ்டர். ரகு எங்களுக்கு உங்க கம்பெனிய ஸ்பை பண்ற வேலை அவசியமில்லாததது… அதுவுமில்லாம எங்களுக்கு நிறைய வேல இருக்கு… என்ன சொன்னீங்க கேஸ் போடுவீங்களா…. உங்களால கேஸ் தான் போட முடியும் இப்ப பாத்தீங்களே அத வச்சு எங்க கன்ட்ரிக்கு மெடிசின் எக்ஸ்போர்ட் பண்ற உங்க காண்ட்ராக்ட்ட என்னால க்ளோஸ் பண்ண முடியும்…. அது உங்களுக்கு தான் ப்ளாக் மார்க்… ஸோ பேசும் போது பாத்து பேசுங்க… இந்த வீடியோ உள்ள எஸ் டி கார்ட யாரோ கொண்டு வந்து என் அஸிஸ்டென்ட்ட ரொம்ப முக்கியமான விஷயம் உடனே என்னை பாக்க சொல்லி குடுத்துட்டு போயிருக்காங்க…. உங்க கம்பெனில ஸ்பை கேமரா பிக்ஸ் பண்ற அளவு எங்களுக்கு நேரமில்ல.‌‌… ஸோ அந்த வீடியோல எதெல்லாம் எங்களுக்கு தெரியக்கூடாதுன்னு மறச்சீங்களோ அதெல்லாம் இன்னும் ஹாப் அண்ட் ஹவர்ல நா பாக்கணும்… இல்லனா என்னால என்ன ஆக்ஷன் எடுக்க முடியுமோ அத நா எடுப்பேன்…” என்றுவிட்டு அலட்டிக்கொள்ளாமல் தன் கைப்பேசியில் மூழ்கிப் போனார்.

 

               ஆர்யனும் ரகுவும் எதுவும் பேசவும் முடியாமல் செய்யவும் முடியாமல் கோபத்தை அடக்கிக் கொண்டு தாங்கள் மறைத்து வைத்த ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்குகள், மருந்துகள் என்று அனைத்தையும் எடுத்து வந்து அவர் முன் அரைமணி நேரத்தில் வைத்தனர். 

 

       நிமிர்ந்து, தன்முன் நின்ற ஆர்யனையும் ரகுவையும் கண்ட டி இதழ்களில் புன்னகை கீற்றாய் விரிய “பரவால்லயே… சொன்ன டைம்ல கரக்ட்டா முடிச்சுட்டீங்க… ஐ லைக் யூவர் பன்க்ச்சுவாலிட்டி… ஓகே காய்ஸ், நா எல்லாத்தையும் பாத்து முடிக்ற வர அப்டி ஓரமா உக்காருங்க… டவுட்னா க்ளியர் பண்ணனும்ல…” என்றவர், வெளியே வேறு வேலைகள் பார்த்துக் கொண்டிருந்த தன் குழுவினரை உள்ளே வரச்சொல்லி அவர்களோடு சேர்ந்து அவைகளை ஆராய்வதில் மும்முரமானார். 

 

      ஆர்யனோ தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அவரையே எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டிருக்க, தன் நண்பனை அறிந்த ரகு சன்னக் குரலில் “ஆர்யா… கன்ட்ரோல் யுவர்ஸெல்ப்… இப்ப எவிடன்ஸ் அவன்கிட்ட இருக்கு… அத வச்சு அவனால இப்போதிக்கு வார்னிங் உம், பைனும் தான் பே பண்ண சொல்ல முடியும்… நீ கோவத்துல ஏதாவது ஏடாகூடமா பண்ணி அவன் சொன்ன மாறி காண்ட்ராக்ட்ட க்ளோஸ் பண்ண வச்சுராத…. நம்ம கம்பெனில கேமரா இருக்குன்னா… அப்ப கருப்பாடு ஒன்னு நம்ம கூட்டத்துக்குள்ள பூந்துருக்கு… அத யாருன்னு கண்டுபுடிப்போம் ஆர்யா… இப்ப கொஞ்சம் அமைதியா இரு…” என்றான்.

 

              ஆர்யன் கண்கள் சிவக்க, உடல் விரைக்க, பல்லைக் கடித்துக் கொண்டு “அந்த நாய் மட்டும் சிக்கட்டும்… அப்றம் இருக்கு…இது அவ வேலையா மட்டும் இருந்துச்சு… அவள…” என்றான். ரகு அவன் தோளில் கை வைத்து அழுத்தவும் ஆர்யன் எரிமலை குமுறுமுன் நிலவும் அமைதிக் கொண்டு அமர்ந்தான். 

 

       மூன்று மணித்தியாலத்தில் தனது வேலையை முடித்த டி, இருவரிடமும் “ம்ம்… மேனுபேக்ச்சரிங்ல நடக்ற தப்புக்கு தான் என்னால ஆக்ஷன் எடுக்க முடியும்… இது ரெண்டாவது தடவ ரிப்பீட் பண்றீங்க…. ஸோ வார்னிங் வித் பைனோட இப்போதிக்கு விட்றேன்…. மறுபடியும் இந்த தப்பு ரிப்பீட் ஆச்சுன்னா…. உங்க காண்ட்ராக்ட் க்ளோஸ் தான்…” என்று கூறிவிட்டு புறப்பட்டார். 

 

      ஆர்யன் ரகுவை பார்க்க, ரகு “சார் ஒரு நிமிஷம்… உங்களுக்கு தேவையான எவிடென்ஸ் எடுத்திட்டீங்கள்ல… அப்றம் ஏன் மத்தது… அதெல்லாம் குடுத்துட்டு போங்க…” என்றான். 

 

      திரும்பி பார்த்த டி மென்னகைப் புரிந்து “யங்மேன்… என் கைக்கு வந்த எவிடன்ஸ என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்… என் கைக்கு வந்ததெல்லாம் ரெக்கார்டா நா சம்பிட் பண்ணியாகனும்… அதுக்கப்பறம் அத யார்கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணனுமோ அங்க பண்ணிடுவேன்…” என்று சில அடிகள் எடுத்து வைத்தவர் திரும்பி இருவரையும் தீர்க்கமாகப் பார்த்தார். 

 

      “நா போனப்பறம் ஹென்ரி ஜோன்ஸ… ஓஓ சாரி ஜேன்னு சொன்னா தானே உங்களுக்கு புரியும் ஜே வ கான்டாக்ட் பண்ண ட்ரை பண்ணாதீங்க…” என்று கைக்கடிகாரத்தைப் பார்த்தவர் “அவருக்கு என்கொயரி ஆரம்பிச்சு ஒன் ஹவர் ஆச்சு… அப்றம் நாலஞ்சு மணி நேரமா நீங்க நியூஸே பாக்கலல… பாருங்க… குட் நியூஸ்… ம்ஹும் பேட் நியூஸ் பார் யூ காய்ஸ் இஸ் ப்ளாஷிங் நௌ….” என்று மர்மப் புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு தம் குழுவினரோடு டி கம்பெனியிலிருந்து வெளியேறினார். 

 

                ஆர்யனும் ரகுவும் டி யின் பேச்சில் கோபமும் குழப்பமும் கொண்டு உடனடியாக தங்களது கைப்பேசியில் செய்தி சேனல் ஒன்றை ஒட விட அதில் தேன்மலரும் தேவாவும் அவர்களை சந்தித்தபோது பேசியவை அனைத்தும் ஓடிக் கொண்டிருந்தது.

 

       அதில் ஆர்யன், ரகு, தேன்மலர் மூவர் மட்டுமேயிருப்பதுக் கண்டு, தேவா தான் அந்த வீடியோவை எடுத்திருப்பான் என்று ஊகித்தனர். எப் டி ஏ அதிகாரி சிதம்பரம் போதை மருந்து ஊசிப் போட்டுக் கொள்வது போல் இரவு வெளியான வீடியோ காட்சிக்கு பதில் சொல்லும் விதமாகத் தற்போது அவரின் மகள் தேன்மலரை அந்த வீடியோவை வைத்து ஏ ஆர் பார்மா கம்பெனியினை நடத்தும் ஆர்யன் மற்றும் ரகு பாபு இருவரும் மிரட்டும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு நடந்தது என்ன? ஏ ஆர் பார்மா வில் நடப்பது என்ன? சிதம்பரத்தின் நிலைக்கு ஆர்யனும் ரகு பாபுவும் தான் காரணமா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் நமது செய்தியாளர் சிதம்பரத்தின் மகள் தேன்மலரை தொடர்பு கொண்டபோது சில ஆதரங்களை மத்திய மருந்துகள் நிலையான கட்டுப்பாடு அமைப்பு(cdsco), இந்திய மருத்துவ ஆய்வு மன்றம்(ICMR), எப் டி ஏ ஆகியவற்றிற்கு இன்று அனுப்பப் போவதாகக் கூறியுள்ளார்…. என்று செய்தி வாசிப்பாளர் கூறிக் கொண்டிருக்க, ஆர்யன் வந்த கோபத்தில் கைப்பேசியை தூக்கிப் போட்டுடைத்து ஆஆஆ வென்று அலறி அறையிலுள்ள பொருட்களை எல்லாம் வெறிப் பிடித்தவன் போல் உடைத்துக் கொண்டிருந்தான். ரகு இறுகிப் போய் ஓரிடத்தில் சிந்தனையற்று, செயலற்று அமர்ந்து விட்டான்.

 

            தேவா வீட்டில், வெளியேச் சென்ற செந்தில் வந்ததும் தேன்மலர் பென் ட்ரைவில் இருந்த ஆதாரங்களை cdsco, icmr, fda ஆகியவற்றிற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தாள். பின் தேன்மலர், தேவா, அருள், செந்தில், அமீரா ஐவரும் வினித் கடத்திய பெண் கூறிய வீட்டிற்குச் சென்றனர். அங்கு அவன் மூன்று பெண்களை அடைத்து வைத்து வன்புணர்வில் ஈடுபட்டது தெரிந்து அவர்களை விடுவித்து அவர்களின் பெற்றோருக்கு தகவல் சொல்லி அவர்களை வரவழைத்து அவர்களிடம் பக்குவமாகப் பேசி அப்பெண்களை அழைத்துப் போகக் கூறினர். அதில் இரு பெண்களின் வீட்டில் புரிந்துக் கொண்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி அழைத்துச் சென்றுவிட ஒரு பெண் வீட்டில் மட்டும் அவளை அழைத்துச் செல்ல மறுத்துவிட்டனர். 

 

      அப்பெண் பெற்றோர்கள் கைவிட்டதை நினைத்து அழ, தேன்மலர் “இங்க பாரு சங்கவி… இப்ப அவங்க உன்னை புரிஞ்சுக்காம இருக்கலாம்…. இதோட வாழ்க்க முடிஞ்சுதுன்னு நினக்காத…. உன் வலி என்னன்னு எங்களுக்கு புரியுது… அத கனவா நினச்சு மறக்க சொல்லலா மாட்டேன்… அத நீ கடந்து வந்து தான் ஆகணும்… அது அவ்ளோ ஈஸி இல்ல தான்… ஆனா முயற்சி பண்ணா முடியும்… உன்னை உன் பேரண்ட்ஸ் கைவிட்டா என்ன உனக்கு நாங்க இருக்கோம்… உன் சொந்த கால்ல நின்னு சாதிச்சு காட்டு…” என்று ஆறுதலும் தைரியமும் கூறியவள் “அந்த நாய பாத்தா என்ன செய்வ…” என்று கேட்க, சங்கவி கண்களில் அனல் தெறிக்க, 

 

      கண்ணீரோடு “அவன… என் கையால நாலு அறை விடணும் அக்கா… அவனுக்கு தகுந்த தண்டன வாங்கி தரணும்…. என்னை போல இன்னொரு பொண்ணுக்கு என் நிலைமை வரக்கூடாது… அவனுக்கு தர தண்டனைல அவன மாறி இருக்றவனுங்க பொண்ணுங்கள பாக்கவே பயப்படணும்…” என்றாள். 

 

     தேன்மலர் மென்னகைப் புரிந்து “கண்டிப்பா கெடைக்கும்…. எங்ககூட வா…” என்றாள்.

 

               சங்கவியோடு வீடு வந்த அனைவரும் நேரே வினித் மற்றும் ஹசனை அடைத்து வைத்திருந்த அறைக்குச் சென்றனர். அங்கு இருவரும் மயக்கம் தெளிந்து கட்டுக்களை அவிழ்க்கப் போராடிக் கொண்டிருக்க, கோபமாக உள்ளே நுழைந்த அனைவரையும் கண்டு இருவரும் முறைத்தனர். 

 

     வினித் கோபமாக “டேய் தப்பு பண்றீங்கடா… எங்க அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சா நீங்கள்லாம் அவ்ளோ தான்…” என்றான்.

 

      தேவா ஏளனப் புன்னகை சிந்தி “டேய் உங்கப்பனாலயே அவன காப்பாத்திக்க முடியுமான்னு தெரியாது… இதுல அவன் எங்கள எதாவது பண்ணுவானா….” என்று ஓங்கி அறைந்து “ஏன்டா நாயே… பொண்ணுங்க என்ன உனக்கு விளையாட்டு பொருளா… புடிச்சுருந்தா தூக்கிட்டு போய் உன் வீட்ல வச்சுக்ற…. உன்னை மாறி ஆளுங்களால எல்லா ஆம்பளைங்களுக்கும் கெட்ட பேரு… உங்களால பொண்ணுங்க எல்லா ஆம்பளங்களையும் சந்தேகப் பட்றாங்கடா… சரி அதவிடு… எங்ககிட்ட இருக்ற எவிடென்ஸ் தெரிஞ்சா உன் அப்பனே உன்னை என் புள்ள இல்லன்னு சொல்லீருவான்…” என்றான். 

 

      வினித் புரியாமல் விழிக்க, தேவா மென்னகையோடு “புரிலயா… உன் அப்பனோட பர்ஸ்னல் லேப்டாப் எங்ககிட்ட இருக்கு…” என்கவும் அவனது முகத்தில் அதிர்ச்சியும் பயமும் ஒரு சேர தோன்றியது. 

 

                அதைக் கேட்ட உடனே வினித்திற்கு தேவா “உன் அப்பனே உன்னை என் புள்ள இல்லன்னு சொல்லீர்வான்…” என்று சொல்லியது எவ்வளவு உண்மை என்று விளங்க, அவனது எதிர்காலம் கண் முன்னே பிரகாசமாக விரிய அவனுக்கு பயத்தில் வியர்க்க ஆரம்பித்தது. அச்சமயம் தேன்மலரின் பின்னே மறைந்திருந்த சங்கவி வெளி வந்து அவனது கன்னத்தில் மாற்றி மாற்றி கை ஓயும் வரை அறைந்தாள். 

 

      ஏற்கனவே பயத்திலிருந்தவன் பிரம்மை பிடித்தவன் போலாக, அவனை விடுத்து அனைவரதுப் பார்வையும் ஹசன் மீது பதிந்தது. நடந்ததைப் பார்த்து பயத்தின் உச்சத்திலிருந்த ஹசனை நெருங்கிய தேவா “எவ்ளோ பெரிய வேலை பாக்க துணிஞ்சுருக்க நீ….” என்றவன் அமீராவை பார்க்க, அவனை தீர்க்கமாகப் பார்த்த அமீரா மித்ரா என்றழைத்தாள். 

 

       அறையின் வெளியே நின்றிருந்த ஹசனின் காதலி சங்கமித்ரா விழிகளில் அவமானமும் வேதனையுமாய்க் கண்ணீரோடு உள்ளே வந்தவள் ஹசனை அறைந்து காரி துப்பி “ச்சீ… உன்னை போய் உண்மையா காதலிச்சேனே… ஒரு பொண்ணோட வாழ்க்கய நரகமாக்ற அளவுக்கு கேவலமானவனா டா நீ…” என்றவள் “போ போய் தண்டனைய அனுபவிச்சுட்டு திருந்தி வா… பழா போன மனசு கேக்க மாட்டேங்குது… உனக்காக காத்துருக்கேன்… உன்னை உண்மையா காதலிச்ச பாவத்துக்கு நானும் உன்கூட சேந்து எல்லாம் அனுபிவிச்சு தானே ஆகணும்… வெளில வரும் போது நல்லவனா திருந்தி வந்தா என்னை தேடி வா… இல்லனா என் மூஞ்சிலயே முழிக்காத….” என்றுவிட்டு அமீராவிடம் “அமீரா… இவன் உங்களுக்கு குடுத்த கஷ்டத்துக்கும் மன உளைச்சலுக்கும் நா உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்றேன்… எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க….” என்று கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அங்கிருந்து வெளியே ஓடினாள். 

 

     ஹசன் “மித்ரா சாரி டி… மித்ரா…” என்று அழுது கதற, அவன் கதறல் காற்றோடு மட்டுமே கலக்க, மற்றவர்கள் அறைவிட்டு வெளியேறியிருந்தனர். 

 

              தேன்மலர் தன்னவனிடம் “தேவா… அந்த லேப்டாப்ப என்ன பண்ண போறீங்க…” என்று கேட்க, 

 

      தேவா புருவ முடிச்சுகள் விழ, “போலிஸ்ல தான் ஹேண்ட் ஓவர் பண்ணனும்… ஆனா அதுலயும் யார நம்புறதுன்னு தெரில….” என்றான். 

 

        தேன்மலர் தேவா “நாராயணசாமி மேட்டர என்கிட்ட விட்டுர்றீங்களா… நா பாத்துக்கறேன்…” என்று தீர்க்கமானப் பார்வையோடுக் கேட்டாள். 

 

        அவளது விழிகளை தன் விழிகளால் ஊடுருவிய தேவா “ம்ம்…” என்றான். 

 

       அவனது சம்மதம் கிடைத்த மறுநொடி செந்திலை தனியே கூப்பிட்டு சில விடயங்கள் கூறி அனுப்பிய தேன்மலர், அமீராவிடம் “மீரா… உன்னால வினித் மேலயும் ஹசன் மேலயும் கேஸ் குடுக்க முடியுமா….” என்று கேட்டாள். 

 

      அமீரா சிறிதும் யோசையின்றி “ம்ம் முடியும் மலர்…” என்று கூற,

 

       “நல்லா யோசிச்சுக்கோ மீரா… இதுல உனக்கு நிறைய மிரட்டல்கள் வரும்… தைரியமா இருக்கணும்… என்ன நடந்தாலும் பின் வாங்காம ஸ்ட்ராங்கா இருக்கணும்… அப்பா, அம்மா ரெண்டு பேரையும் ஸேஃபா பாத்துக்கணும்…” என்றாள். 

 

      அமீரா மென்னகையோடு “மலர்…. அதெல்லாம் தெரிஞ்சு தான் தைரியமா ஓகே சொல்றேன்… நீங்கள்லாம் கூடயிருக்றது எனக்கு இன்னும் தைரியம் தான்…” என்று அருளை ஒரு பார்வைப் பார்த்துக் கூற, அருள் மென்னகையோடு அவளை மெச்சும் பார்வைப் பார்த்தான்.

 

       தேன்மலர் புன்னகைத்து “அப்ப ஓகே மீரா… அப்ப உடனே அருள் கூட கெளம்பி கம்ப்ளைன்ட் குடுத்துட்டு வா…” என்க,

 

      இதையெல்லாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த சங்கவி கனீரென்ற குரலில் “அக்கா… நானும் அவன் மேல கம்ப்ளைன்ட் தரேன்…” என்றாள். 

 

        அனைவரும் அவளைத் திரும்பிப் பார்க்க, “நீங்க ஏன் அப்டி பாக்றீங்கன்னு புரியுது… இதுனால என்ன பிரச்சன வரும்… விசாரணை எப்டியிருக்கும் என்னெல்லாம் கேப்பாங்கன்னு தெரியும்… அதுக்கெல்லாம் பதில் சொல்ல நா தயாரா இருக்கேன்… நா அவன் மேல கம்ப்ளைன்ட் தரேன்…” என்று உறுதியாகக் கூற,

 

      தேன்மலர் கர்வப் புன்னகையோடு அவளை கட்டியணைத்து உச்சி முகர்ந்து “போ.. போய்ட்டு வா… என்ன ஆனாலும் உன்கூட நாங்க இருக்கோம்…” என்று கூறி, மூவரையும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தாள். 

 

       தேவவாவும் அவளும் தனித்திருக்க, தேவா அருகில் சென்றவள் அவனது விழியோடு கையும் கோர்த்து அழுத்தம் கொடுத்து, தன் கைப்பேசியிலிருந்து நாராயணசாமிக்கு அழைத்தாள். 

 

         ஏற்கனவே யார் வருமான வரி சோதனைக்கு காரணம் என்று கண்டுபிடிக்க இயலாமல் கோபத்தலிருந்த நாராயணசாமிக்கு தொடர்ந்து பெரும் புள்ளிகளிடமிருந்தும் அரசியல்வாதிகளிடமிருந்தும் அவனது மடிக்கணினி யாரின் கையிலோ அகப்பட்டுக் கொண்டதாமே என்று கேட்டு அழைப்புகள் வந்த வண்ணமிருக்க, தன் கண்முன் இருக்கும் தன் மடிக்கணினியைப் பார்த்து குழப்பத்தில் ஆழ்ந்தான். 

 

       அச்சமயத்தில் தேன்மலர் அவனுக்கு அழைத்துக் கூறிய விடயங்கள் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து சிலையாகிப் போனான். 

 

        அதே சமயத்தில் அங்கு ஆர்யனுக்கும் ரகுவிற்கும் தொடர்ந்து வீடியோ பற்றிக் கேட்டு அழைப்புகள் வர, இருவரும் பதில் கூற முடியாமல் கைப்பேசியை அணைத்து வைத்தனர். அதே நேரத்தில் cdsco மற்றும் icmr இல்லிருந்து மறுநாள் இருவரையும் விசாரணைக்கு வருமாறு கூறி அழைப்பு வர, இருவரும் அதீதக் கோபமாயினர். ஆர்யன் லிங்கத்திற்கு அழைத்து தேன்மலரையும் அவளுடன் இருப்பவர்களையும் தீர்த்துக் கட்ட கூற, ரகுவும் தங்களின் எதிர்காலத்திற்கு அதுவே சரியென்று தன் நண்பனை தடுக்காது அமைதியாயிருந்தான். அதன் பின்பே சிறிது கோபம் தணிந்த இருவரும், தங்கள் முன்னிருக்கும் பிரச்சனையை எப்படி சமாளிப்பதென்று ஆலோசிக்க, அச்சமயம் அவர்களின் அறைக் கதவைப் பெருத்த சத்ததோடு திறந்துக் கொண்டு வந்த நபரைக் கண்டு இருவருமே அதிர்ந்து அன்னிச்சையாய் இருக்கை விட்டு எழுந்து நின்றனர்.

 

                  அமெரிக்காவில், ஜே உறங்கிக் கொண்டிருக்க, திடீரென்று அவனின் இல்லத்திற்குள் நுழைந்த எப் பி ஐ அதிகாரிகள் அவனைப் பேச விடாது அவனது வீட்டை சோதனையிட்டு பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள போதைப் பொருட்களைக் கைப்பற்றியதோடு அவனைக் கைதும் செய்ய, ஜே அதிர்ந்து அது தன்னுடையதல்ல என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவனை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 

 

       அங்கு போதை மருந்தோடு சிதம்பரத்தின் வீடியோ பற்றியும் விசாரணை நடக்க, ஜே அதிர்ந்து என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் விழித்துத் திணறிக் கொண்டிருந்தான். பின் அவர்கள் காட்டிய சில விடயங்களில் தான் கையும் களவுமாக சிக்கியது உணர்ந்து தப்பிக்கும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டதை அறிந்து ஆர்யனும் ரகுவும் தான் தனக்கு பணம் தருவதாக ஆசைக் காட்டி சிதம்பரத்தை அழைத்து வரச்சொல்லி போதை மருந்து தந்தார்கள் என்று கூற, அவனை விசாரித்த அதிகாரிகள் நக்கலாக அவனைப் பார்த்துப் புன்னகைக்க, ஜே அவர்களைக் கேள்வியாக நோக்கினான்.

 

அத்தியாயம்- 30

 

        ஆத்திரத்தில் இருந்த நாராயணசாமி புது எண்ணிலிருந்து அழைப்பு வரவும் லேப்டாப்பை விசாரித்து தான் அழைப்பு வருகிறதோ என்று நினைத்து அழைப்பை ஏற்ற அடுத்தக் கணம் “இங்க பாருங்க… லேப்டாப்லா யார் கைக்கும் போகல…. அது என்கிட்ட என் கண்ணு முன்னாடி தான் இருக்கு….” என்று ஆவேசமாகக் கூறினான். 

 

      தேன்மலர் எகத்தாளப் புன்னகையுடன் “ம்ஹ்ம்… அப்டியா…. அப்போ நீ வீடியோஸ் எடுத்து வச்சு டாக்டர்ஸ் விஐபிஸ் லாம் மிரட்டி பணம் வாங்குவியே… அந்த பைல்ஸ்லாம் அதுல இருக்கான்னு கொஞ்சம் பாரு ராஜா…” என்றாள்.

 

       பெண்ணின் குரலைக் கேட்ட நாராயணசாமி கோபமும் குழப்பமுமாய் “ஏய் யார் டி நீ… நா எதுக்கு நீ சொல்றத பண்ணனும்…” என்று கேட்க, 

 

       தேன்மலர் விட்டேத்தியாய் “பாத்தா உனக்கு நல்லது… இல்ல களி தின்னு தண்டன அனுபவிச்சு போக வேண்டிய உன் உயிரு… ஷாக்ல ஹார்ட் அட்டாக் வந்து போயிடும்…” என்றாள். 

 

      அதைக் கேட்ட நாராயணசாமி “ஏய்ய்ய்… என்னடி… யார் டி நீ…” என்று கத்த, 

 

      அவளோ சிறிதும் பதறாமல் “முதல்ல நா சொன்னத நீ செய்… அப்றம் நா யாருன்றத உனக்கு சொல்றேன்…” என்றாள். 

 

             நாராயணசாமிக்கு கோபம் எகிற “என்னடி இப்ப அந்த பைல்ஸ் இருக்கான்னு பாக்கணும்… அவ்ளோ தானே… பாக்றேன் டி… அது மட்டும் இருக்கட்டும்… அப்றம் இருக்கு டி உனக்கு…” என்றவாறு லேப்டாப்பை உயிர்ப்பித்துப் பார்த்து அதிர்ந்தான்.

 

       நிசப்தம் நிலவ, தேன்மலர் எள்ளலாக “என்ன சத்தத்தையே காணோம்…. இல்லல்ல…. அதுமட்டுமில்ல தம்பி… நீ யார் யாருக்கு பிணாமியா இருக்க… அதோட டீட்டெய்ல்ஸ்… அப்றம் கொடுக்கல் வாங்கல் கணக்குள்ள பைல்ஸும் அதுல இருக்காது…” என்று கூற, 

நாராயணசாமி வேகவேகமாக அதையும் தேடி ஏமாந்து தொப்பென்று ஃஸோபாவில் அமர்ந்தான். 

 

      “ம்ம்… இப்ப நா பேசறத கொஞ்சம் கேக்கறியா நீ…” என்று வினவ, 

 

     நாராயணசாமி கோபமும் பயமுமாய் திக்கி திணறி “ஏய்… யா… யா… யார் நீ….” என்று கேட்டான். 

 

       தேன்மலர் இறுக்கமானக் குரலில் “சொல்றேன்… உன்னால பாதிக்கப்பட்ட குடும்பத்த சேர்ந்த ஒருத்தி…” என்க, அவன் யோசிக்க, 

 

        தேன்மலர் “உன் மூளைய ரொம்ப போட்டு கொடையாத…. லட்சம் குடும்பம் உன்னால பாதிக்கப்பட்ருக்கு… அந்த லட்சத்துல ஒருத்தி தான் நா… சரி அத விடு… உன் லேப்டாப் எப்டி என்கிட்ட வந்துச்சுன்னு தெரியுமா…” என்று கேட்டாள். 

 

                முகத்தில் பூத்திருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துக் கொண்டே பயத்தைக் குரலில் காட்டாது கோபமாக “எப்டி வந்துச்சு….” என்று வினவினான். 

 

      தேன்மலர் “ம்ம்… அதுக்கு முன்னாடி உன் ரெண்டாவது சீமந்த புத்திரன் வீட்ல இருக்கானான்னு பாரு…” என்று கூற, 

 

       நாராயணசாமி “வினித் வினித்” என்று தன் மகனை கூவி அழைக்க, அவனது மனைவி வந்து “ஏங்க கத்துறீங்க… ரெண்டு நாளா அவன் வீட்டுக்கே வரல….” என்கவும் 

 

        கோபமாக “ஏன்டி அம்மாவாடி நீ… பெத்த புள்ள ரெண்டு நாளா வீட்டுக்கு வரல…. கொஞ்சமாவது கவல இருக்கா உனக்கு… என்கிட்ட இத முன்னாடியே சொல்ல வேண்டியது தானே…” என்று கடிந்துக் கொள்ள, 

 

      அவனது மனைவியோ “ஏங்க… நீங்களும் உங்க புள்ளயும் பாதி நாள் வீட்லயே தங்க மாட்டீங்க… கேட்டா ஆம்பளங்க எங்களுக்கு ஆயிரம் வேல இருக்கும் அதெல்லாம் கேள்வி கேப்பியா நீன்னு என்கிட்ட மல்லுக்கு வருவீங்க… இப்ப வந்து கவலயிருக்கா அது இருக்காங்றீங்க…” என்று காட்டமாகக் கேட்டவர்,

 

      “ஏங்க ஏதும் பிரச்சனயா…” என்று ஒரு தாயிற்கு உண்டானப் பயத்துடன் கேட்க, 

 

     தன் மனைவியின் பயந்த முகத்தைக் கண்டு குரலை தணித்து “அதெல்லாம் ஒன்னுமில்ல மா… ஒரு முக்கியமான விஷயம் பேசணும்… ஃபோன் பண்ணா ரிங் போகுது எடுக்கல…. மிஸ்டு கால் பாத்து அவனே பண்ணுவான்… நீ போ மா போய் வேலய பாரு…” என்கவும் அவர் திரும்பிப் பார்த்துக் கொண்டே உள்ளேச் சென்றார். 

 

             தன் மனைவி சென்றதை உறுதிச் செய்துக் கொண்ட நாராயணசாமி கைப்பேசியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவர் கோபமாகப் பல்லைக் கடித்துக் கொண்டு “ஏய் யார்றி நீ… என் புள்ள எங்க…” என்று வினவ, 

 

     தேன்மலர் “புள்ளய காணோனோன பதறுதோ… இப்டி எத்தன குடும்பத்த பதற வச்சு அழ வச்சுருப்ப…. உன் புள்ள இப்போதிக்கு ஸேஃபா தான் இருக்கான்…” என்றாள். 

 

       நாராயணசாமி “ஏய்ய்… என் புள்ளைக்கு மட்டும் எதாவது ஆச்சு…” என்று உறும, 

 

      தேன்மலர் குரல் உயர்த்தி “ஏய் ச்சீ… வாயமூடு… ஒரு தருதலைய பெத்து வளத்துட்டு உனக்கு கோவம் வேற வருதா… நா பேசி முடிக்ற வர நீ குறுக்க பேசவே கூடாது…” என்றவள் “உன்னை எப்டிறா பழி வாங்றதுன்னு யோசிச்சுட்ருந்தோம்… அப்ப தான் உன் புள்ள தானா வந்து எங்ககிட்ட மாட்னான்… உன் புள்ள எங்க வீட்டு பொண்ணு கிட்ட வாலாட்னான்… அவன நாலு சாத்தலாம்னு அவன பத்தி விசாரிச்சப்ப தான்… கெஸ்ட் ஹவுஸ்ல உன் புள்ள மூனு பொண்ணுங்கள அடச்சு வச்சு… ச்சை… அந்த பொண்ணுங்கள அங்கேர்ந்து காப்பாத்தி ஸேஃவ் பண்ணியாச்சு… அந்த வீட்டோட சிசிடிவி புட்டேஜ் எடுத்து உன் புள்ளைக்கு ஃபோன் போட்டு அத வச்சு மிரட்னோம்…. அவன் பயந்துட்டான்… ஸோ அவன் பயத்த யூஸ் பண்ணி உன் லேப்டாப்ப கேட்டோம்… அவனும் டுப்ளிகேட் லேப்டாப் ரெடி பண்ணி உன் ஒரிஜினல் லேப்டாப்போட பிங்கர் ப்ரிண்ட்டும் ஸ்கேன் பண்ணி குடுத்தான்…. லேப்டாப்பையும் வாங்கிட்டு அவனையும் தூக்கிட்டோம்… விசாரிச்சதுல தான் தெரிஞ்சது அவசரத்துல பக்கி பயபுள்ள சில பைல்ஸ காப்பி பண்ண மறந்துருச்சுன்னு…. அதான் இப்ப உனக்கு ஃபோன் பண்ணா நல்லாருக்குமேன்னு பண்ணோம்… அப்றம் காலைலேர்ந்து லேப்டாப் பத்தி கேட்டு ஃபோனா வந்துருக்குமே… இன்கம் டாக்ஸ் ரைடே யார் பண்ணான்னு தெரியாம இதுவேற போட்டு குழப்பிட்ருப்பல அதான் கொஞ்சம் குழப்பத்த போக்கலாம்னு கால் பண்ணோம்…” என்றாள். 

 

                 நாராயணசாமி புரிந்தவனாக “ஏய்ய்… யாருடி நீ… ஏன் இதெல்லாம் பண்ற….” என்று கேட்க, 

 

      தேன்மலர் மிடுக்காக “அதுக்கு பதில் உனக்கு ரொம்ப வேண்டபட்டவரு சொல்லுவாரு…” என்றுவிட்டு தேவாவை பார்த்தாள். 

 

        தேவா கோபத்தில் கண்கள் சிவந்து இறுகி எள்ளலாக “என்ன நாராயணசாமி ரொம்ப நல்லார்க்க போல…. என் பொண்டாட்டி மாறி நா உன்னை யாருன்னு யோசிக்க விட மாட்டேன்… நேராவே நா யாருன்னு சொல்றேன் ஆறு மாசத்துக்கு முன்னாடி இருவத்தி மூனு வயசு பொண்ணு ஒன்னு எக்ஸ்பயரியான மெடிசின் சாப்ட்டு செத்து போச்சு ஞாபகமிருக்கா…. நா அவளோட அண்ணன் தேவாடா…” என்றான். 

 

       அதைக் கேட்ட நாராயணசாமி தன் மூளை அடுக்குகளில் அதைத் தேடி எடுத்து “டேய் உன்னை போலீஸ் விட்டு மிரட்டி ஆள் வச்சு அடிச்சுமா நீ என்கிட்ட வாலாட்ற…” என்று கத்த, 

 

       தேவா “ஷ்ஷ்… இப்ப நீ குரல உயர்த்த கூடாதுடா… பணிவாதான் பேசணும் ஏன்னா உன் புள்ள அப்றம் லேப்டாப் ரெண்டும் எங்ககிட்ட இருக்கு…” என்கவும் நாராயணசாமி அமைதியாக அவன் கூறுவதைக் கேட்க, “உன் புள்ள மேல அவனால பாதிக்கப்பட்ட பொண்ணு ஒன்னு கம்ப்ளைன்ட் குடுத்துருக்கு… ஸோ அவன் இப்ப வழக்கமா போற டி நகர் பப்ல இருக்கான்னு போலீஸ்ட்ட இன்பார்ம் பண்ணியாச்சு… அவங்க அங்க தேடி வர்றதுக்குள்ள உன் பையன அங்க விட்ருவோம் உன் லேப்டாப்போட… போலீஸ் வர்றதுக்குள்ள நீ அங்க போனனா உன் பையனையும் காப்பாத்தலாம் உன்னையும் நீ காப்பாத்திக்கலாம்…. இல்லனா உன் பையனோட சேந்து நீயும் களி தின்ன வேண்டியது தான்… அப்றம் என் பொண்டாட்டி யாருனு நா சொல்லலயே காலைல நியூஸ் பாத்துருப்பியே ஆர்யனையும் ரகுவையும் சிக்க வச்ச தேன்மலர் அவதான்… சரி டா போ… உனக்கு டைம் கம்மியா இருக்கு… போய் உன் பையன காப்பாத்து… பை…” என்று அழைப்பைத் துண்டித்த மறுகணம் நாராயணசாமி கோபமும் பதற்றமுமாய் வேகமாகத் தன் காரைக் கிளப்பிக் கொண்டு டி நகர் நோக்கி விரைந்தான். 

 

          தேவா பேசி முடித்து தன்னவளைப் பார்க்க, அவனவள் அவனது கைப்பற்றி அழுத்தம் கொடுத்து இமை மூடித் திறக்கவும் ஆழமூச்செடுத்துவிட்டு வினித் மற்றும் ஹசனை அடைத்து வைத்திருந்த அறை நோக்கிச் சென்றான். தேவா, தேன்மலர், செந்தில் மூவரும் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு டி நகர் நோக்கி விரைந்தனர். 

 

       வினித்தும் ஹசனும் அடுத்து தங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்ற பயத்திலும் யோசனையிலும் வர, இருவரும் தப்பிக்க முயற்சி செய்யாதவாறு தேன்மலர் காரை இயக்க, தேவாவும் செந்திலும் இருவரின் புறமும் அமர்ந்துக் கொண்டு அவர்களை கண்க்கொத்திப் பாம்பாகக் கண்காணித்தபடி வந்தனர். 

 

      அவர்கள் இருவரும் வழக்கமாகச் செல்லும் பப்பின் முன் காரை நிறுத்திய தேவா வினித்தின் கையில் ஒரு லேப்டாப்பைக் கொடுத்து “இதுல உன் கெஸ்ட் ஹவுஸ் சிசிடிவி புட்டேஜ் புல்லா இருக்கு… இத போலீஸ்ல ஹேண்ட் ஓவர் பண்ணிட்டு ஒழுங்கா எல்லா உண்மையும் ஒத்துகிட்டு ஜெயிலுக்கு போற…. இல்ல நா போ மாட்டேன் எங்க அப்பா பாத்துப் பாரு ஆட்டுக்குட்டி பாத்துப் பாருன்னு எதாவது யோசிச்சு பேசி கோக்கு மாக்கு பண்ணன்னு வச்சுக்க… நீ வெளிய வந்தாலும் உயிரோட இருக்க மாட்ட…” என்று எச்சரிக்க, வினித் அவனை முறைத்தான். 

 

            தேவா ஹசனை பார்க்க, முகத்தில் உண்மையான வருத்தம் தெரிய “இல்ல சார்… எனக்கு தப்பிக்ற ஐடியாலா இல்ல… மித்ராவ எவ்ளோ லவ் பண்றேன்னு எனக்கு தான் தெரியும்… அவ சொன்ன வார்த்தய நா காப்பாத்தனுனு நினக்கிறேன்…. இவன் ப்ரண்டு இவன் எனக்கு பண்ண ஹெல்ப்புக்லா நன்றி கடனா தான் இவன் சொல் படி கேட்டு அமீராக்கு அப்டி ஒரு துரோகத்த பண்ண ஒத்துக்கிட்டேன்… முடிஞ்சா அமீராவ என்னை மன்னிக்க சொல்லுங்க… நா வரேன் சார்…” என்று விட்டு வினித்தை கோபமும் வெறுப்பும் குற்றயுணர்வுமாய் பார்த்துவிட்டு உயிரேயில்லாதது போல் தளர்ந்த நடையோடு பப்புக்குள் சென்றான். 

வினித்தோ மூவரையும் எரிக்கும் பார்வைப் பார்த்துவிட்டு பப்பிற்குள் சென்றான். 

 

       இருவரும் சென்ற பதினைந்து நிமிடத்தில் ஒரு போலீஸ் ஜீப் உள்ளே நுழைய, பின்னேயே அமீராவின் காரும் நுழைந்தது. பத்து நிமிடத்தில் வினித்தும் ஹசனும் கையில் விலங்கோடு காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட, அமீரா, சங்கவி, அருள் மூவரும் காரை விட்டு இறங்கி நின்ற தேவா, தேன்மலர், செந்தில் மூவரையும் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காண்பித்தனர். 

 

                காவல்துறை வாகனம் கிளம்பிய அதே நேரத்தில் நாராயணசாமி கார் அதிவேகமாக பப்பின் முன் நிற்க, அதை அனைவரும் எவ்வித உணர்ச்சியுமின்றிப் பார்த்திருந்தனர். காரை விட்டு இறங்கிய நாராயணசாமி, காவலர்கள் தன் மகனை கைது செய்து அழைத்துச் சென்ற விவரம் அறிந்து ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்றவன் தன் மகனை விட தன் பெயரும் தன்னை நம்பியவர்களின் ரகசியங்களும் முக்கியம் என்று தன் ஆளிற்கு அழைத்து காவல்நிலையம் செல்வதற்குள் தன் மகனின் கதையை முடிக்கக் கூறிவிட்டு காரைக் கிளப்பிய வேளை தேவாவையும் தேன்மலரையும் கண்டவன் தான் வென்றுவிட்டதாக ஏளனப் புன்னகைப் புரிய, தேவாவும் தேன்மலரும் அவனைப் பரிதாபமாகப் பார்த்து நக்கலாகப் புன்னகைத்தனர். நாராயணசாமி அதைப் பார்த்து குழப்பம் யோசனையுமாய் அங்கிருந்துக் கிளம்பிச் சென்றான். 

 

       அவன் சென்றதும் அமீரா, அருள், சங்கவி, தேவா, தேன்மலர், செந்தில் அறுவரும் ஒன்றாக நின்று அடுத்து நாராயணசாமிய சிக்க வைப்பதுப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, அப்போது அவர்களை லிங்கமும் அவனின் ஆட்களும் ஆயுதங்களோடு சூழ்ந்தனர். அறுவரும் ஒரு நொடி அதிர்ந்தாலும் அவர்களை சமாளிக்க ஆயத்தமாக, அமீராவும் சங்கவியும் பயத்தில் தேன்மலரின் கையைப் பற்றிக்கொள்ள, தேன்மலர் இருவருக்கும் பார்வையால் தைரியம் உணர்த்தினாள். லிங்கம் தேன்மலரை கொலை வெறியோடு நோக்க, அவளோ சிறிதும் பயமின்றி மிடுக்கோடும் தைரியத்தோடும் அவனை விழியால் நேருக்கு நேர் ஊடுருவினாள். 

 

             அச்சமயம் லிங்கத்தின் ஆட்களை சுற்றி கருப்பு நிற உடை அணிந்த சிலர் துப்பாக்கியோடு சூழ்ந்து நிற்க, லிங்கத்திற்கும் அவனின் ஆட்களுக்கும் ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் அமீரா மற்றும் சங்கவி தவிர மற்ற நால்வரின் இதழ்கடையோரம் சிறிதாய்ப் புன்னகை அரும்ப, லிங்கம் அவர்களைக் குழப்பமாகப் பார்த்தான். 

 

        அச்சமயம் அவன் கைப்பேசி அலற, அதை எடுத்துப் பேசியவன் தன் ஆட்களிடம் போகலாம் என்று கட்டளையிட்டு விட்டு அறுவரையும் அனல் தெறிக்க ஏமாற்றமும் அவமானமுமாய்ப் பார்த்துவிட்டுச் கிளம்ப, தேன்மலர் “ஒரு நிமிஷம்…” என்கவும் லிங்கம் திரும்பி அவளை முறைத்துவாறு நின்றான். 

 

       அவனிடம் வந்த தேன்மலர் “நா இப்போ பண்றது உங்களுக்கும் உங்க எல்லார் குடும்பத்துக்கும் சேத்து தான்… என்ன பாக்றீங்க… நீங்க அவங்களுக்கு அடிதடில மத்த விஷயத்துல விசுவாசமா இருக்கலாம்… ஆனா மருந்து விஷயத்துல அப்டியிருக்காதீங்க… உங்க வீட்லயும் நாளைக்கு எங்க அப்பாவுக்கும் அம்முவுக்கும் நடந்தது நடக்கலாம்…. ஏன்னா நீங்க எவ்ளோ தான் விசுவாசமா இருந்தாலும் நீங்க பணத்துக்காக வேலை பாக்றவங்கன்னு தான் இந்த மாறி தொழில் மொதலைங்க நம்புவாங்க… ஏன்னா சிட்டில பாதி ஹாஸ்ப்பிட்டல் அவங்களோட லிங்க்ல இருக்காங்க…. நாளைக்கு உங்க வீட்லேர்ந்து உங்க குழந்தையையோ மனைவியையோ நீங்க அங்க கூட்டிட்டு போக வேண்டி வரலாம்… எங்களுக்கு நடந்தது அவங்களுக்கும் நடக்கலாம்… ஸோ இனி விசுவாசம் வைக்கும் போது உங்க விசுவாசத்துக்கு அவங்க தகுதியானவங்களான்னு யோசிங்க ண்ணா… உங்க நல்லதுக்குதான் சொல்றேன்… அப்றம் உங்க இஷ்டம் ண்ணா…” என்றாள். 

 

                 தேன்மலரின் பேச்சைக் கேட்ட லிங்கத்தின் முகத்தில் என்னவென்று கூற முடியாத ஒரு உணர்வு ஆனால் அவன் அவளைப் பார்த்தப் பார்வையில் கோபமும் வெறுப்பும் இல்லை. லிங்கமும் அவன் ஆட்களும் அங்கிருந்து அகல, கருப்பு நிற உடை அணிந்தவர்களின் தலைவன் போல் இருந்தவன் அவர்களை நெருங்க, தேவா “நீங்க கெளம்புங்க பாஸ்… பிக் பிகிட்ட நா பேசிக்றேன்… எங்களுக்கு பாதுகாப்பு நீங்க தந்தா தேவயில்லாம நீங்க யாரு என்னன்ற கேள்வி வரும்…. இப்போ நடந்தத வச்சே நாங்க போலீஸ் ப்ரொடக்ஷனுக்கு ஏற்பாடு பண்ணிக்றோம்…” என்று கூற, 

 

      அவனோ “நீங்க எந்த ப்ரொடக்ஷன் வேணா வச்சுக்கோங்க பாஸ்… நாங்களும் உங்கள நெருங்காம ஃபாலோ பண்ணிட்டு தான் இருப்போம்…” என்று கூறவும் தேவா மென்னகையோடு அவன் தோளில் தட்டிவிட்டு தன்னவளைப் பார்க்க, தேன்மலர் இதழ் விரித்து அவனின் விழியோடு விழிக்கோர்த்து கையும் கோர்க்க, மற்றவர்களும் அவர்களோடு அங்கிருந்துக் கிளம்பி நேரே கமிஷ்னர் அலுவலகம் சென்றனர்.

 

              அங்குச் சென்று தேவா, அம்மு சாப்பிட்ட மாத்திரையின் ஆய்வறிக்கை, உடல் ஆய்வுக்கூறு அறிக்கை, தான் வைத்திருந்த ஆள் மூலம் பெற்ற நாராயணசாமியின் குடோனின் சிசிடிவி காட்சிகள் போன்ற உரிய ஆதாரங்களோடு நாராயணசாமி மீது புகார் அளிக்க, முதலில் தயங்கிய கமிஷ்னர் தேன்மலர் நாராயணசாமியின் லேப்டாப்பிலிருந்தவைகளை சேமித்து வைத்திருந்த பென் ட்ரைவை அவரிடம் கொடுக்க, அதை வாங்கிப் பார்த்த கமிஷனர் முகம் வெளிர “கம்ப்ளைன்ட்ட வாங்குனாலும் பிரச்சனை வாங்கலனாலும் பிரச்சனை… சரி வாங்கி வச்சுட்டு தகவல் சொல்ல வேண்டிய இடத்துக்கு சொல்லுவோம்…. அவங்க பாத்துப்பாங்க…” என்று மனதில் எண்ணமிட்ட வண்ணம் கம்ப்ளைன்ட்டை வாங்கிக் கொள்ள, அவரின் மனவோட்டம் புரிந்ததோ என்னவோ தேவா மர்மப் புன்னகைச் சிந்தி மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தான்.

 

                 வீடு வந்ததும் செந்தில் தொலைக்காட்சியை ஓடவிட, அதில் நேற்று வருமான வரி துறையினர் சோதனையிட்ட நிலையில் இன்று நாராயணசாமி கைது. அவர் பல முக்கிய புள்ளிகளின் பிணாமி என்ற பேச்சு அடிப்பட்ட நிலையில் இன்று அதை நிருபிக்கும் வகையில் ஆதாரம் சிக்கியிருப்பதாகவும் அதோடு தன் தங்கை மதிவதனியின் இறப்பிற்கும் நாராயணசாமிக்கும் சம்மந்தம் இருப்பதாகக் கூறி தகுந்த ஆதாரங்களோடு அவர் மீது தேவரசன் புகார் அளித்திருப்பதாகச் செய்தி வட்டங்கள் கூறுகின்றன. அவரின் இளைய மகன் வினித் என்பவர் பாலியல் குற்றத்தில் கைதாகி காவல் நிலையம் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் வழி மறித்து காவலர்களைத் தாக்கி விட்டு அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். என்று செய்தி ஓட, தேவா அதை அணைக்கக் கூறவும் செந்தில் தொலைக்காட்சியை அணைத்தான். 

 

       ஆர்யன், ரகு, நாராயணசாமி மூவர் செய்தக் குற்றங்களுக்கு எதிராகத் தகுந்த ஆதாரங்களைக் கடினப்பட்டுச் சேகரித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தியப் பின்பும் கூட சட்டத்திலுள்ள ஓட்டைகளால் அவர்களுக்கு தகுந்தத் தண்டனைக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால் அங்கு அனைவருமே மௌனமாய் அவரவர் சிந்தனையில் அமர்ந்திருந்தனர். அச்சமயம் வீட்டிற்கு வந்த நபரைக் கண்டு அதிர்ச்சியும் குழப்பமுமாய் அனைவரும் எழுந்து நின்றனர்.

 

                  ஆர்யனும் ரகுவும் யாரையோக் கண்டு அதிர்ந்து நின்றார்களே அவர் யாரென்று பார்த்துவிடலாம். 

 

       இருவரும் பிரச்சனையிலிருந்து எப்படி தப்பிப்பது என்று ஆலோசித்துக் கொண்டிருந்த சமயம், ஆர்யனின் மாமனார், சாருமதியின் தந்தை விஸ்வநாதன் கண்களில் அனல் தெறிக்கக் கோபாவேசத்தோடு அறைக் கதவைத் திறந்துக் கொண்டு வந்தவர் ஆர்யனது கன்னத்தில் ஒரு அறை விட்டு ரகுவை முறைத்துக் கொண்டே “என்ன வேலை பாத்து வச்சுருக்கீங்க ரெண்டு பேரும்… காலைலேர்ந்து ஃபோன் மேல் ஃபோன் உங்க மருமகனாமே ஆர்யன்… அவர் ஏன் இப்டி பண்ணாரு அப்டி பண்ணாரு கேள்வியா கேட்டு கொடையுறாங்க…. உன்னை பத்தி விசாரிச்சேன்… அப்பவே என் பொண்ண உனக்கு கல்யாணம் பண்ணி குடுக்றதுல விருப்பமில்ல…. என் பொண்ணு ஆசைப்பட்டுட்டாளேன்னு தான் உங்க ரெண்டு பேத்துக்கும் கல்யாணம் பண்ணி வச்சேன்…. ஆனா நீ அதுக்கு எனக்கு ரொம்ப நல்ல பேர் வாங்கிக் குடுத்துட்ட…” என்றவர் ரகுவை பார்த்து “ஒரு ப்ரண்ட்ன்னா கூட இருக்றவன் தப்பு பண்ணும்போது எடுத்து சொல்லி திருத்தனும் அதவிட்டுட்டு தானும் சேந்து தப்பு பண்ணக்கூடாது… ஆல்ரைட் நடந்தது நடந்துருச்சு… பிஸ்னஸ்னு வரும்போது இதெல்லாம் சகஜம் தான் ஆனா தப்பையும் சரியா பண்ணனும் அப்பதான் தப்பு தப்பா தெரியாது… சரி என்ன நடந்துச்சு… ஒன்னு விடாம முழுசா எல்லாத்தையும் சொல்லுங்க…” என்றார்.

 

               ஆர்யனுக்கு அவர் அடித்தது அவ்வளவு அவமானமாக இருக்க, ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் இப்போது கோபத்தின் உச்சத்தில் கண்கள் சிவந்து உடல் விரைத்து முகம் இறுகி விஸ்வநாதனை வெறித்திருக்க, ரகு அவனதுக் கையைச் சுரண்ட, அவன் பக்கம் அவன் திரும்பவும் ரகு கண்களால் “இப்ப இவர விட்டா வேற யாராலயும் நம்மள இந்த பிரச்சனைலேர்ந்து காப்பாத்த முடியாது….” என்று கூறவும் ஆர்யன் ஆழமூச்செடுத்து தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான். 

 

      பின் இருவருமாய் சிதம்பரம் அவர்களின் கம்பெனிக்கு இன்ஸ்பெக்ஷன் வந்ததிலிருந்து தற்போது தேன்மலரை தீர்த்துக் கட்டக் கூறியது வரை அனைத்தையும் கூறி முடித்தனர். 

 

     அதைக் கேட்ட விஸ்வநாதன் மேலும் கோபம் கொண்டு “முட்டாள்… முட்டாளுங்களா… இப்ப அவள கொல்ல சொன்னா… அதுக்கு நீங்க தான் காரணம்னு பச்ச புள்ளக்கூட கண்டுபுடுச்சுரும்…. மொதல்ல ஃபோன் பண்ணி அவள கொல்ல வேணானு சொல்லுங்க…. நா பிரச்சனய முடிக்க நினச்சா நீங்க ரெண்டு பேரும் அத வளக்க நினக்கிறீங்களா….” என்று கூற, ஆர்யன் ஏதோ பேச வர, அவர் “நா சொன்னத மொத செய்ங்க….” என்கவும் ரகு லிங்கத்திற்கு அழைத்து யாரையும் ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கூறவும் தான் லிங்கமும் அவனது ஆட்களும் தேன்மலரையும் அவளை சார்ந்தவர்களையும் ஏதும் செய்யாமல் சென்றது.

 

               ரகு பேசி முடித்ததும் விஸ்வநாதன் “ஸோ… ஜே தான் உங்களுக்கு இந்த ஐடியா குடுத்து ட்ரிகர் பண்ணி விட்டது இல்லயா…” என்று கேட்க, இருவரும் ஆமென்ற தலையாட்ட, சிறிது நேர யோசனைக்குப் பிறகு “ஜே உங்ககிட்ட பேசுன அன்னிக்கு ரெக்கார்ட் ஆன சிசிடிவி புட்டேஜ உடனே எப் டி ஏ வுக்கும் நியூஸ் சேனல்ஸுக்கும் அனுப்பிட்டு ஸோஷியல் மீடியாலயும் போடுங்க…” என்கவும் ஆர்யனும் ரகுவும் அவரது திட்டத்தை ஒரளவு ஊகித்து அவர் கூறியபடி செய்தனர். 

 

      ஆர்யன் “அங்கிள் சாரு…” என்று தயங்க, விஸ்வநாதன் அவனை முறைத்து “நீ தான் வேணும்ன பாவத்துக்கு அவளும் அனுபவிக்கனும்ல…. விஷயம் கேள்விப்பட்டதுலேர்ந்து அழுதுட்டுதான் இருக்கா… ரூமவிட்டு யார் கூப்ட்டும் வெளிய வரல…. அவ இப்பதானே உன் ஒரிஜினல் முகத்த பாக்குறா அதான் தாங்க முடில…” என்றார். 

 

            ஆர்யன் என்னதான் காதலேயில்லாமல் சாருமதியை திருமணம் செய்து அவளுடன் வாழ ஆரம்பித்திருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல, சிறிது நாட்களாய் அவளின் காதலும் அன்பும் அவள் பால் அவனே அறியாமல் அவன் மனதை சாய்த்துவிட்டிருந்தது. அவள் யாரையும் காணாது அழுகிறாள் என்று கேள்விப்பட்டதும் அவனின் இதயத்திறகுள் யாரோ கையைவிட்டு பிசைவது போல் அப்படி ஒரு வலி. 

 

          உடனே அவளைப் பார்க்க வேண்டும் அவளை அணைத்து ஆறுதல் கூற வேண்டுமென்று அவனது மனம் உந்தித் தள்ள, ஆர்யன் விஸ்வநாதன் என்ன சொல்வாரோ என்று தயங்கியவாறே “அங்கிள் நா சாருவ பாக்கணும்…” என்று கூற, 

 

       அவனை ஒருமுறை பார்வையால் ஊடுருவியவர் “சரி என் கூட வா… இந்த நாராயணசாமி வேற அரெஸ்ட் ஆயிருக்கான்… அவன் லேப்டாப் வேற எவிடென்ஸா மாட்டிருக்குன்னு சொல்றாங்க… எல்லாம் ஒரு நேரத்துல பிரச்சன பண்ணி மாட்டுவீங்களாடா… அத வேற பாக்கணும்… “என்றுவிட்டு அவர் முன்னேச் சென்றார். 

 

       ஆர்யனும் ரகுவும் ஒரு நொடி திகைத்தாலும் பின் விஸ்வநாதன் மேலுள்ள நம்பிக்கையில் அமைதியாகினர்.  

 

      ரகுவையும் உடனழைக்க, ரகு “இல்ல ஆர்யா… அம்மா அப்பா ரெண்டும் பேரும் என்மேல பயங்கர கோவத்துல இருப்பாங்க… அவங்கள நா சமாதானப் படுத்தனும்… ஸோ நீ போ… நீ இப்ப தனியா போய் தங்கச்சிய பாத்தா தான் சரியா வரும்…” என்று கூறவும் ஆர்யன் விஸ்வநாதனோடு அவரில்லம் சென்றான். 

 

              அங்கு யார் கூப்பிட்டும் கதவைத் திறக்காத சாருமதி, ஆர்யனின் குரல் கேட்டதுமே கதவைத் திறந்து விட்டு அமைதியாக உள்ளேச் செல்ல, பின்னேச் சென்ற ஆர்யன் விழிகள் கலங்கி “சாரு… அது நா…” என்னும் போதே, 

 

      கண்கள் சிவக்க திரும்பிய சாருமதி அவனைக் கூர்மையாகப் பார்த்து “இதுக்குதான் அன்னிக்கு எங்கப்பா பிஸ்னஸ் விஷயத்துல தலையிட கூடாதுன்னு சொன்னியா… எத்தன பேரு உயிரு… உயிரோட விளையாட்ற உரிமைய உனக்கு யாரு குடுத்தா… நீ பொண்ணுங்க விஷயத்துல அப்டி இப்டின்னு தெரிஞ்சும் உன்னை மாத்திரலான்ற நம்பிக்கையோட அவ்ளோ காதலோட உன்கூட வாழ ஆரம்பிச்சேன்…. அதுக்கப்பறம் பொண்ணுங்க விஷயத்துல ஒழுங்கா தான் இருந்த…. ஆனா இப்போ…” என்று நிறுத்த, ஆர்யன் எதுவும் பேசாமல் அவளது காதலுக்கு தான் தகுதியானவன்தானா என்ற யோசனையோடுத் தலைக் கவிழ்ந்து நிற்க, 

 

     “சரி நடந்தது நடந்துருச்சு… உன்னை காதலிக்ற பாவத்துக்கு எங்கப்பாட்ட சொல்லி உன்னையும் உன் ப்ரண்டையும் இதுலேரந்து காப்பாத்தி விட சொல்றேன்… ஆனா அதுக்கப்பறம் நா சொல்றததான் நீ கேக்கணும்… அவ்ளோதான்…” என்றுவிட்டு “உன்கிட்ட பேசிய வேண்டியத பேசிட்டேன்…” என்பது போல் திரும்பி நின்றுக்கொள்ள, விழி நீர் கோர்க்க ஏக்கமாக முதன்முதலாகக் காதலாக அவளது முதுகை ஊடுருவியவன் ஏதும் பேசாது அறை விட்டு வெளியேறினான். 

 

              பின் விஸ்வநாதனும் சாருமதியும் தேன்மலரை காண தேவா வீட்டிற்கு விரைந்தனர். அவ்விருவரையும் கண்ட தேன்மலரும் மற்றவர்களும் முதலில் அதிர்ந்தாலும் பின் ஒருவாறு விடயத்தை ஊகித்து, இருவரையும் வரவேற்று அமர வைத்தனர். விஸ்வநாதனும் சாருமதியும் தேன்மலரிடம் ஆர்யன் சார்பாக மன்னிப்பு வேண்ட, தேன்மலர் ஏதும் கூறாது அமைதியாக நின்றாள். 

 

        இருவரும் தயங்கியாவாறு ஏ ஆர் பார்மச்சுட்டிக்கல் மேல் கூறிய புகார்களைத் திரும்பப் பெற கூற, தேன்மலர் “அதுமட்டும் கேக்காதீங்க ப்ளீஸ்…. இதுல பாதிக்கப்பட்டது நானும் எங்க அப்பாவும் மட்டுமில்ல அப்பாவி மக்கள் பல பேர் சம்மந்தப்பட்ருக்காங்க… அதென்ன அசால்ட்டா வந்து சொல்றீங்க… நாளைக்கு உங்களுக்கே அப்டி நடந்தா இப்டிதான் மன்னிச்சு விட்ருவீங்களோ… உங்களவு பெரிய மனசெல்லாம் எனக்கில்ல சார்… உங்களுக்கு இருக்ற பவருக்கு நீங்க ஈஸியா இந்த பிரச்சனைய ஒன்னுமில்லாம ஆக்கிருவீங்கன்னு எங்களுக்கு தெரியும்…. அதனால தான் ஸ்டராங்கான எவிடன்ஸ கலக்ட் பண்ணேன்… எப் டி ஏ ஆபிசர்க்கே இந்த நிலமைன்னா அப்ப சாதாரண ஜனங்களுக்கு…. இப்ப இதுனால என்ன ஆகும்னு கேக்கலாம்… கொஞ்ச பேத்துக்காவது விழிப்புணர்வு வந்து டாக்டர்ஸையும் பார்மா கம்பெனிங்களையும் ஒருத்தர் ரெண்டு பேராவது கேள்வி கேக்கப்பாங்கள்ல… அதுபோதும் எங்களுக்கு… எவ்ளோ கஷ்டம் மன உளைச்சல் எங்களுக்கு…. இப்பவும் உங்க மருமகனுக்கு பெருசா தண்டன கெடச்சுராது… மிஞ்சி மிஞ்சி போனா அவன் கம்பெனிக்கு சீல் வைப்பாங்க ஆனா அதையும் நீங்க பண்ண விடமாட்டிங்க ஸோ லட்ச கணக்குல பைனும் பத்து வருஷமோ இல்ல பன்னெண்டு வருஷமோ ஜெயிலும் தான்… ஆனா ஜெயில் தண்டனையும் உங்களால குறைக்க முடியும்… அப்றம் ஏன் சார் என்கிட்ட வந்து வாபஸ் வாங்குன்னு கேட்டுட்ருக்கீங்க…” என்றவள் “ஆனா உங்க பொண்ண நினச்சா தான் பாவமா இருக்கு… என்ன பண்ண காதல் அவ்ளோ சக்தி வாய்ந்ததாயிருக்கு… சாரி மிஸஸ். ஆர்யன் ஐ கான்ட் ஹெல்ப் யூ…” என்று சாருமதியை பார்த்துக் கூறினாள்.

 

             சாருமதி விழிகள் கலங்க “பரவால்ல தேன்மலர்… நீ மன்னிச்சுருந்தா தான் ஆச்சர்யம்…. அப்பாவுக்கு ஒன்னுன்னா பொண்ணுக்கு எப்டி இருக்கும்னு என்னால உணர முடியும்… என் புருஷனும் கொஞ்ச நாள் உள்ள இருக்கட்டும் அப்பதான் புத்தி வரும்… வரேன்…” என்றவள் தேவாவை பார்த்து “மிஸ்டர். தேவா அவள மாறி ஒரு பொண்ணு கெடைக்க குடுத்து வச்சுருக்கனும் நீங்க…” என்றுவிட்டு தன் தந்தையை அழைத்துக் கொண்டுப் புறப்பட்டாள். 

 

       அவர்கள் சென்றதும் தேன்மலர் இறுகிப் போய் அமர்ந்துவிட, தேவாவும் அவளருகே உணர்ச்சிகளற்று அமர, அருளும் செந்திலும் சிந்தனை வயப்பட்டிருக்க, அமீராவும் சங்கவியும் அந்த இறுக்கமான சூழலைக் கலைக்காதவாறு அமைதிக்காத்தனர்.

 

                           ஜே, ஆர்யனும் ரகுவும் தான் சிதம்பரத்திற்கு போதை மருந்துக் கொடுத்தது என்று கூறியதும் எப் பி ஐ அதிகாரிகள் நக்கலாக சிரிக்கவும் ஜே குழப்பமாக அவர்களைப் பார்த்தான். தேன்மலரும் தேவாவும் கூறியதற்கினங்க, ஸாமும் கின்ஸியும் ஜேவின் மூன்று மாதக் கைப்பேசி உரையாடல்கள் அனைத்தையும் சேகரித்து அவனது தற்போதைய கேர்ள்பிரண்ட் யாரென்று அறிந்து அவளிடம் பேசி பணம் கொடுத்து அவனது வீட்டில் அமெரிக்காவில் தடைசெய்யப் பட்ட போதை மருந்தை பிக் பியிடமிருந்து பெற்றுப் பதுக்கச் செய்ததோடல்லாமல் தினமும் அவன் அறியா வண்ணம் அவனை உட்கொள்ளவும் வைத்திருந்தனர். 

 

       அதனால் அந்த அதிகாரிகள் அந்த ரொக்காரடட் உரையாடல்களையும் அவனது ரத்தப் பரிசோதனை அறிக்கையையும் ஏ ஆர் பார்மச்சுட்டிக்கலிலிருந்து எப் டி ஏவிற்கு வந்திருந்த அந்த சிசிடிவி காட்சிகளையும் அவனிடம் காட்டினர். அந்த சிசிடிவி காட்சயில் ஆர்யனும் ரகுவும் சிதம்பரத்திற்கு போதை மருந்துக் கொடுக்க வேண்டாமென்று கூறி மறுத்ததும் சம்மதிக்கவில்லை என்றால் சிதம்பரம் செய்ய நினைத்ததை தானே செய்வேன் என்று அவர்களை மிரட்டி வற்புறுத்தி சம்மதிக்க வைத்ததைக் கண்ட ஜேவின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி. அதன்பின் என்ன நடந்திருக்குமென்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஜே என்கிற ஹென்ரி ஜோன்ஸ் அன்று தான் வெளியுலகைப் பார்த்தக் கடைசி நாளாகிப் போனது.

 

                 அன்று மாலை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தேன்மலரும் தேவாவும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்குத் தகுந்த விடையளித்ததோடு மக்கள் இதன்பிறகாவது விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைத்தனர். 

 

       இதற்கிடையே செந்திலின் தந்தை அவனுக்கு அழைத்து “மகனே… என்னடா இவ்ளோ விஷயம் நடந்துருக்கு என்கிட்ட ஒரு வார்த்த சொல்லல… சரி அதெல்லாம் இருக்கட்டும் அந்த நாராயணசாமியோட லேப்டாப் இருந்தா என்கிட்ட குடேன்… அந்த சுகாதாரத்துறை அமைச்சர் அவன்கூட கூட்டு வச்சுகிட்டு இல்லாத ஆட்டம் போட்டான்… நா வேளாண்துறை அமைச்சர்னு எவ்ளோ தடவ மட்டம் தட்டிருப்பான் தெரியுமா… அவன பழி வாங்கனும்டா… குடேன்…” என்று கேட்க, 

 

          செந்தில் “யோவ்… நீ பெரிய யோக்யனா… நீ பண்ற அயோக்கிய தனம்லா எனக்கு நல்லா தெரியும்… அவன பழிவாங்க லேப்டாப் வேணும்… ஆனா உன்னை பத்தி கிழிக்க நா ஒருத்தனே போதும்… இப்ப ப்ரஸ் என் முன்னாடி தான் நிக்குது… என்ன சொல்லவா…” என்று கேட்க, 

 

      அவர் “அய்யோ வேணாம்டா…. முப்பது வருஷ அரசியல் வாழ்க்கடா ஒரே நிமிஷத்துல முடிச்சுவிட்டு போயிராத டா…” என்க, 

 

        அவன் “நீ இதுல சிக்கலயேன்னு சந்தோச பட்டுக்க… சிக்கிருந்த… ச்சீ மொத ஃபோன் வைய்யா… அவன் அவன் இருக்ற டென்ஷன் தெரியாம…” என்கவும் உடனே அழைப்புத் துண்டிக்கப்பட்டது. 

 

             செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்து அனைவரும் வீட்டிற்கு வந்தமர, அனைவரும் ஒரே நாளில் எவ்வளவு நடந்துவிட்டது என்று ஆச்சர்யமும் சிந்தனையுமாய் இருந்தனர். 

 

          ராகவியும் சுரேஷும் அழைத்துப் பேச, அருள், தேன்மலர் இருவருமே பேசும் மனநிலையில் இல்லை ஆதலால் ஒரே வார்த்தையில் “நேர்ல பாக்கும் போது எல்லாம் சொல்றோம்…” என்றுவிட்டனர். 

 

        தேன்மலர் தன் அப்பாயி மற்றும் அப்பாவிடம் கூட பேசாமல் இறுக்கமாகவே இருந்தாள். பிரச்சனைகள் ஓரளவு முடிந்தாலும் யார் மனதிலும் அதற்கான நிம்மதியோ மகிழ்ச்சியோ இல்லாததால் அனைவரும் உணவை மறந்து தூக்கம் மறந்து அந்த இரவை அமைதியாகக் கழித்தனர். 

 

         மறுநாள் காலை அனைவரும் அவரவர் வேலைகளை முடித்து வயிற்றை சற்று கவனிக்கலாம் என்று உணவு உண்ண அமர்ந்த வேளை நாராயணசாமி மற்றும் ஆர்யன், ரகு வழக்கை சி பி சி ஐ டிக்கு மாற்றி விட்டதாகவும் அதனால் அனைத்து ஆதாரங்களையும் நாராயணசாமியின் பர்ஸனல் லேப்டாப்பையும் அதைக் நகல் ஏதும் எடுத்து வைத்திருந்தால் அதையும் சற்று நேரத்தில் அங்கு வரும் சி பி சி ஐ டி அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூறவும் அனைவரும் இது எதிர்ப்பார்த்து தான் என்றாலும் சிறிது வருத்தம் கொண்டனர். அதேப் போல் சிறிது நேரத்தில் வந்த அதிகாரிகள் மூன்று மணி நேரம் அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு தேவா மற்றும் தேன்மலரிடம் வாக்குமூலமும் அவர்களிடமிருந்து ஆதாரங்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டுக் கிளம்பினர். 

 

             அதன்பின் அனைவருக்கும் உணவு உண்ண விருப்பமில்லை என்றாலும் அங்கு வந்த அமீராவின் அன்னை அனைவரையும் மிரட்டி உணவு உண்ண வைத்தார். அன்று யாரும் யாரிடமும் பெரிதாகப் பேசிக் கொள்ளவில்லை. 

 

       மாலை நாராயணசாமியை விசாரணைக்காக காவல் நிலையத்திலிருந்து சி பி சி ஐ டி அலுவலகம் அழைத்துச் செல்லும் வழியில் அவன் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியதில் நாராயணசாமி சம்பவ இடத்திலேயே இறந்ததாகக் கேள்விப்பட்டவர்கள் அது எப்படி நடந்திருக்கும் என்றறிந்து அவனுக்காவது சரியான தண்டனைக் கிட்டயதே என்று மனதைக் தேற்றிக் கொண்டு சகஜமாக ஆரம்பித்தனர். 

 

       அதன் பின்பே தேன்மலர் தன் அப்பாயியிடமும் அப்பாவிடமும் பேசினாள்‌. சிதம்பரம் தன் மகளை நினைத்து பெருமைப் படுவதாகவும் ஆர்யன், ரகுவிற்குமே விரைவில் தகுந்தத் தண்டனைக் கிட்டும் என்று ஆறுதல் கூறவும் தான் தேன்மலர் இறுக்கம் தளர்த்தி இயல்பானாள். பின் இருவரிடமும் பேசிவிட்டு துர்கா, ராஜேஷ், ஸாம், கின்ஸயிடமும் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்த தேன்மலர் தோட்டத்தில் தனியாக அமர்ந்திருந்த தன்னவனிடம் சென்றாள்.

 

அத்தியாயம்- 31

 

        தோட்டத்தில் கவலைத் தோய்ந்த முகத்தோடு ஏதோ சிந்தனை செய்தபடி அமர்ந்திருந்த தேவா தன்னவளின் அருகாமையுணர்ந்து திரும்பி அவளைப் பார்த்து மெலிதாய் முறுவலித்தான். அவளவனை அறியாதவளா அவள், எப்போதும் புன்னகை வழியேத் தன்னுள் ஊற்றெடுக்கும் உற்சாகத்தை எதிர்படுவோருக்குக் கடத்தும் வசீகரம் அப்புன்னகையில் தொலைந்திருப்பதை உணர்ந்தவள் அவன் அமர்ந்திருந்தக் கல்த் திண்டில் அவனுக்கு நெருக்கமாய் அமர்ந்து அவனது கையோடு கைக்கோர்த்து தேவா என்ற மென்மையான அழைப்போடு அவனது முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பினாள். 

 

      அவனது விழிகளில் வேதனை, ஏமாற்றம், இயலாமை அதனால் தோன்றிய வலுவிழந்தக் கோபம் என்ற உணர்வுகளைக் கண்டவள் மென்மையாய் அவனது உச்சியில் இதழ் ஒற்றியெடுத்து “தேவா… கண்டிப்பா உங்க கவல சீக்ரம் போகும் பாருங்க….” என்றாள். 

 

       தன்னவளின் செயலிலும் பேச்சிலும் சற்று இலகுவான தேவா சிறிதாய் இதழ் விரித்து இறுக்கமாய் அவளதுக் கரம் பற்றி “போகணும் மலர் மா… இவ்ளோ நாள் எது நடக்கணுனு இவ்ளோ கஷ்டப்பட்டோமோ அது நடக்கணும்… எக்ஸ்பையரி மெடிசின்ஸ் இனி எங்கயும் விக்கக் கூடாது… அம்மு மாறி இன்னொரு உயிர் போகக் கூடாது மலர் மா…” என்றான். 

 

       தேன்மலர் மெல்லிதாய் இதழ் வளைத்து “கண்டிப்பா தேவா… அம்முக்கு நியாயம் கண்டிப்பா கெடைக்கும்… ஆர்யன், ரகு ரெண்டு பேரோடயும் நாராயணசாமிக்கும் தொடர்பிருக்குன்னு எவிடன்ஸ் குடுத்துருக்கோம் ஸோ அவங்க கேஸ சிபிஐ எடுத்தா கண்டிப்பா நாராயணசாமி கேஸும் சிபிஐ க்கு மாறும் தேவா… அப்போ இந்த எக்ஸ்பையரி மெடிசின்ஸ்க்கு ஒரு முடிவு வரும்…” என்றாள். 

 

      தேவா மென்னகைப் புரிந்து “தேங்க்ஸ் டி… இப்ப தான் கொஞ்சம் நல்லார்க்கு… மலர் மா நா உன்னை கட்டி புடிச்சுக்கட்டுமா…” என்று தாயின் மடித் தேடும் சேய்யின் பாவனையோடு அவன் கேட்க அவள் வேண்டாம் என்றா சொல்வாள். 

 

        தேன்மலர் சரியென்று தலையாட்டிப் புன்னகையோடு கரங்கள் விரித்த அடுத்தக் கணம் தேவா அவளை இறுக அணைத்திருந்தான். அவளது கழுத்து வளைவில் முகம் புதைந்திருந்த தேவாவின் விழிகளிலிருத்து ஈரம் கசிய, அதை உணர்ந்த அவனவளது விழி நீரும் அணை உடைத்து அவளதுக் கன்னங்களில் உருண்டோடியது. இருவரும் அணைப்பினிலும் கண்ணீரிலும் தங்கள் கவலைகளைக் கரைத்துக் கொண்டிருக்க, நொடிகள் நிமிடங்களாய் கரைந்து நிமிடங்கள் நேரமாய்த் தேய்ந்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் இருவரும் அணைத்தபடி இருந்தனர். 

 

             பின் இருவரும் அணைப்பிலிருந்து விலகி, விழிகள் நோக்க, தேவா அவள் நெற்றியில் முத்தமிட்டு மென்னகைப் புரிய, அவனவள் அவனது கைக்கோர்த்து மெல்லியப் புன்னகை சிந்தி “இனி இப்டி பர்மிஷன்லா கேக்காதீங்க தேவா… உங்களுக்கானவ நா…” என்று கூற, தேவா மென்னகைப் புரிந்து அவளது நெற்றி முட்டி மூக்கோடு மூக்குரசி “ம்ம்… சரி டி செல்லம்மா….” என்றான். 

 

       தேன்மலர் விழி விரித்து “செல்லம்மா….” என்று கேள்வியாய் நோக்க, தேவா மந்தகாசப் புன்னகையோடு “ம்ம்… ஆமா எனக்கு நீ செல்லம்மா தான்… ஏன்னு தெரில நீ இங்க வந்த ரெண்டாவது நாளே உனக்கு செல்லம்மான்னு பேர் வச்சுட்டேன்… மலர் மாவவிட செல்லம்மா தான் நெருக்கமா இருக்கா… அப்போ உன்னை அப்டி கூப்ட தயக்கம்… அத சர்ப்ரைஸா ஒரு ப்யூட்டி புல் மொமன்ட்ல சொல்லனும்னு நினச்சேன் ஆனா இப்போ உன்னை செல்லம்மான்னு கூப்டனுனு தோனுச்சு… கூப்ட்டேன்…” என்று கூறி கண் சிமிட்டினான். 

 

       தன்னவனையே விழி அகலாதுப் பார்த்திருந்த தேன்மலர் முகம் மலரக் காதலாக அவனை விழியால் தீண்டி அவனது மார்பில் சாய்ந்துக் கொள்ள, தேவா புன்னகையோடு அவளை அணைத்தவன் அவளது உச்சியில் இதழ் பதித்து “நேரமாச்சு மா… உள்ள போலாமா…” என்று கேட்க, நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் சரியென்று தலையசைக்கவும் இருவரும் வீட்டிற்குள் சென்றனர்.

 

                சங்கவி அடுக்களையில் இரவு உணவிற்கான ஏற்பாட்டிலிருக்க, தேவா “செல்லம்மா பாவம் மா அவ…. அவளே நொந்திருப்பா… நீயும் அவள வந்ததுலேர்ந்து எதாவது செய்ய சொல்லிட்ருக்க…” என்று கேட்க, 

 

      அவனவளோ மென்னகையோடு “நீங்களே சொல்றீங்க நொந்து போயிருப்பான்னு… அதான் அவள எதுவும் யோசிக்க விடாம தனியா விடாம எதாவது ஒரு வேலை சொல்லிட்டேயிருக்கேன்… வேலை செய்றப்போ அவ மனசு வேலைல தானே நிலச்சு இருக்கும்… அவள இப்டி பிஸியா வச்சுருந்தா தான் அவளுக்கு அவளோட பாஸ்ட் ஒரு விஷயமா ரொம்ப வலி குடுக்காது…” என்கவும் தேவா புன்னகைத்து “சரி தான் செல்லம்மா…” என்றான். 

 

      செந்தில் கைப்பேசியில் யாரோடோப் பேசிக் கொண்டிருக்க, அருள் கவலையாய் நிலைத்தப் பார்வையோடு அமர்ந்திருப்பதைக் கண்ட தேவாவும் தேன்மலரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் அருளின் இருபுறமும் அமர்ந்து அவனை அழைக்க, ஆனால் அவனோக் காதில் விழாதவன்போல் தன் சிந்தனையில் லயித்திருக்க, தேன்மலர் “அருளு…” என்று தோளைப் பற்றி உலுக்கவும் திடுக்கிட்டு அவள் புறம் திரும்பி “ஹான்… கூப்ட்டியா ஹனிமலர்…” என்று சுரத்தே இல்லாமல் கேட்டான்.

 

                  தேவா “சரியா போச்சு… கூப்ட்டியாவா… ஏன் மாமா ரெண்டு பேரும் ரெண்டு காதுலயும் கத்திட்ருக்கோம்… அதுக்கூட தெரியாம அப்டி என்ன சிந்தனை உனக்கு…” என்று கேட்டான். 

 

     அருள் பதட்டமாகி “அது ஒன்னுல்ல…. ஒன்னுல்ல மாப்ள….” என்றான். 

 

      அவனின் பதட்டம் கண்ட தேவாவும் தேன்மலரும் விழியால் ஏதோ பரிமாறிக் கொள்ள, தேவா “மாமா… சும்மா சமாளிக்காம என்னன்னு சொல்லு…” என்றான். 

 

      அருள் கோபமாக “அதான் ஒன்னுல்லன்னு சொல்றேன்ல… விடேன் டா… சரி வாங்க யாரும் நேத்துலேர்ந்து சரியா சாப்ட்ல…. சாப்ட போலாம்…” என்றுவிட்டு எழ, 

 

       தேன்மலர் “அருளு… என்கிட்டவே மறைக்கிறல்ல…” என்றவாறு அவனது கரம் பற்ற, 

 

      அருள் “அதெல்லாம் இல்ல ஹனிமலர்…” என்று அப்போதும் அவன் பிடிக்கொடுக்காமல் பேசினான். 

 

       தேன்மலர் அவனைத் தீர்க்கமாகப் பார்த்து “மீரா தானே உன்னை டிஸ்டர்ப் பண்றது…” என்று கேட்க, அவ்வளவு நேரம் கோபமாகயிருந்தவன் சட்டென்று வடிந்து விழித் தாழ்த்தி உடலிலிருந்த சக்தியெல்லாம் எங்கோ காணாமல் போனது போல் அப்படியே அமர்ந்தான். 

 

              தேன்மலர் அவனது தோளில் கை வைத்து “அருளு… உனக்கு மீராவ புடிச்சுருக்கா….” என்று கேட்க, அருள் விழிகளில் நீர் கோர்க்க திரும்பியவன் ஆமென்று தலையசைக்க, அவள் மென்னகையோடு “ம்ம்… சரிடா அதுக்கு ஏன் சின்ன குழந்தை மாறி கண்ணுல தண்ணி வைக்கிற…” என்று அவனது கண்களைத் துடைத்து விட்டாள். 

 

        தேவா “மாமா… மீரா ஒத்துக்க மாட்டான்னு நினக்கிறியா…” என்று கேட்க, 

 

        அருள் “இல்ல மாப்ள… அவளுக்கும் என்னை புடிச்சுருக்குன்னு அவ என்னை பாக்ற விதம் பேசுற விதத்துலயே தெரியுது… அத நினச்சு கவலப்படல…. அவ அப்பா அம்மாவும் என் அப்பா அம்மாவும் எங்க கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்களா….” என்று அவனதுக் கவலைக் குரலிலும் முகத்திலும் தெரியக் கேட்டான். 

 

       தேவாவும் தேன்மலரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, தேவா “மாமா… இது தான் உன் கவலையா மீரா வீட்ல சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு…” என்று தன்னவளைப் பார்க்க, 

 

     “டேய்… அம்மாட்டயும் அப்பாட்டயும் நா பேறேன்டா… நீ விஷயத்த மட்டும் வீட்ல சொல்லு மத்தத நா பாத்துக்கறேன்… அதுக்கு முன்னாடி மீரா கிட்ட பேசுடா….” என்றாள். 

 

      அதைக் கேட்ட அருள் முகத்தில் அப்படி ஒரு புன்னகை, தலையை அழுந்தக் கோதி முகத்தை அப்படியும் இப்படியும் திருப்பி அவன் சிரிக்க, “தேவா… இங்க பாருங்க அருள் வெக்கப்பட்றான்… செந்தில் இங்க பாருங்களேன்…” என்று தேன்மலர் கூற, கைப்பேசியில் பேசிக் கொண்டே இவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த செந்தில் உடனே அழைப்பைத் துண்டித்து விட்டு வந்து “மாமா..” என்ற கூவலோடு அவனைக் கட்டிக் கொண்டான். 

 

                 தேவா “மாமா… தயவு செஞ்சு வெக்கம் மட்டும் படாத மாமா… ப்ப்பாபா… முடியல…” என்று கூற, அருள் புன்னகையோடு அவன் தலையில் செல்லமாகத் தட்டி அவனை நோக்கிக் கை நீட்ட, தேவா சிரித்தவாறு அருளோடு சேர்த்து செந்திலையும் கட்டிக் கொண்டான். 

 

         மூவரும் கட்டிக் கொண்டு நிற்க, தேன்மலர் மலர்ந்தப் புன்னகையோடு மனம் நிறைய அவர்களைப் பார்த்திருக்க, சங்கவியும் சிரிப்பு சத்தம் கேட்டு மெல்லியப் புன்னகையோடு வந்து தேன்மலரிடம் என்னவென்று வினவ, தேன்மலர் சுருக்கமாய் விடயம் கூறவும் சங்கவியும் மலர்ந்தப் புன்னகையோடு அவர்களைப் பார்த்திருந்தாள். 

 

       மூவரும் கட்டிக் கொண்டே நிற்க, தேன்மலர் “சரி சரி மாப்ள மச்சான்லாம் சாப்ட்டு வந்து கட்டி புடுச்சு கொஞ்சிக்கோங்க…” என்றுவிட்டு சங்கவியோடு சென்று உணவை எடுத்து வைக்கவும் தான் மூவரும் சிரிப்போடு உணவருந்தச் சென்றனர். மூன்று நாட்கள் இருந்த இறுக்கமும் கவலையும் தளர்ந்து பேச்சும் சிரிப்புமாய் அனைவரும் உணவருந்தி முடித்து கூடத்தில் வந்து அமர்ந்தனர்.

 

                   தேன்மலர் “செந்தில்… என்ன சாய்ந்தரத்துலேர்ந்து ஃபோன்ல பேசிட்டேயிருந்தீங்க… ஏதாவது முக்கியமான வேலையா… வேலையிருந்தா போய் பாருங்க…” என்றாள். 

 

      செந்தில் “அட நீ வேற ஏன் மா… வேலைலா இல்ல…. ரொம்ப நாளா எங்கம்மா கல்யாணம் பண்ணிக்க சொல்லி டார்ச்சர் பண்ணிட்ருந்துச்சு… சரின்னு எப்படியும் கல்யாணம் பண்ணிக்க போறோம் அத இப்ப பண்ணா என்னன்னு ரெண்டு மாசம் முன்னாடி சரி பொண்ணு பாருங்க ஆனா பொண்ணு எனக்கு புடிச்சுருந்தா தான் சம்மதம் சொல்வேன்னு சொன்னேன்… இப்போ பொண்ணு ஃபோட்டோ அனுப்பி பாருடா உனக்கும் புடிக்கும்ங்குது… பொண்ணுக்கு என்னை புடிச்சுருக்காம்… எப்போ கல்யாணத்த வச்சுக்கலாம்னு கேக்றாங்களாம்… அதுக்கு என்னை பெத்த தாயி உடனே முடிவு சொல்லுன்னு என் உசுர வாங்குது… எப்டி தேனு உடனே முடிவு சொல்ல முடியும்… அந்த பொண்ண பத்தி கொஞ்சமாச்சும் தெரியனும்ல….” என்றான். 

 

        தேன்மலர் புன்னகைத்து “சரி ஃபோட்டோ பாத்தீங்களா…” என்று கேட்க, அவன் இல்லையென்று கூறவும் “மொதல்ல ஃபோட்டோ பாருங்க…” என்கவும் செந்தில், கைப்பேசிக்குத் தன் அன்னை அனுப்பியிருந்தப் பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தான். பார்த்ததும் அவனது இதழில் சிறு கீற்றாய்ப் புன்னகைத் தோன்ற, தேன்மலரிடமும் மற்ற இருவரிடமும் அப்புகைப்படத்தைக் காண்பித்தான்.

 

                  மூவருக்குமே அதேப் புன்னகைத் தோன்ற, தேன்மலர் “செந்தில்… பொண்ணுக்கு உங்கள புடிச்சுருக்குன்னு சொல்றாங்கள்ல… அப்போ அம்மாகிட்ட பொண்ணோட நம்பர் வாங்கி அவங்ககிட்ட பேசுங்க… நாளைக்கு நேர்ல மீட் பண்ணி மனம் விட்டு பேசிட்டு உங்க முடிவ சொல்லுங்க…” என்று கூற, 

 

       செந்தில் “இதுக்கூட நல்ல யோசனைதான்… தேங்க்ஸ் மா… அப்போ நா வீட்டுக்கு போய் அம்மாகிட்டயும் விஷயத்தை சொல்லி நம்பர் வாங்கிப் பேசிக்றேன்… பை மா… பை மாப்ள… பை டா அருளு…” என்றுவிட்டு வேகமாக எழுந்துச் செல்ல, 

 

     “அண்ணா அண்ணி பேர சொல்லாம போறீங்க…” என்று சங்கவி கேட்க, 

 

      செந்தில் “அவ பேரு மிருதுளா…” என்று கத்திக் கூறியவாறே தன் வண்டியை உயிர்ப்பித்துப் புறப்பட்டான். 

 

      அருள் “மாப்ள… அவன் வேகத்துலயே தெரியுது அவனுக்கும் பொண்ண புடிச்சு போச்சு… பக்கி நாம கிண்டல் பண்ணுவோம்னு அது இதுன்னு சொல்லீர்க்கு… இவன் போற வேகத்த பாத்தா எப்புட்றா பொண்ணு கிட்ட பேசுறதுன்னு இருந்துருப்பான் போல… ஹனிமலர் நீ சொன்னவொடனே பய பறந்துட்டான்…. இவனுக்குள்ளயும் இருந்துருக்கு பாரேன்….” என்று கூற, மற்ற மூவரும் வாய்விட்டு சிரித்தனர். 

 

         தேவா “உனக்குள்ள இருந்ததவிடவா மாமா…” என்று கூற, தேன்மலரும் அதை ஆமோதிக்க, 

 

        அருள் “ஆஹான்… அவன் போய்ட்டான்னவொடனே என்ன வச்சு என்டர்டெய்ன்மென்ட்க்கு ப்ளான் போட்றீங்களா ரெண்டு பேரும்….” என்க, இருவரும் சிரிக்க, 

 

      சங்கவி “பரவால்ல க்கா… பல்பு உடனே எரிஞ்சுருச்சு…” என்று கூற, 

 

     அருள் “சங்கவி மா நீயுமா…” என்க, சங்கவி சிரிக்க, அருளும் சிரித்தான். 

 

                நால்வரும் சிரித்து முடிக்கவும் அமீரா தன் பெற்றோருடன் அங்கு வரவும் சரியாயிருக்க, தேன்மலர் மூவரையும் வரவேற்று அமர வைத்தாள். வந்த மூவரும் பேசாமலிருக்க, மற்ற நால்வரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். 

 

       தேன்மலர் அமீராவை பார்த்துப் புன்னகைக்க, அமீரா மென்னகைப் புரிந்து “அது… அம்மாவும் அப்பாவும் உங்க எல்லார்கிட்டயும் பேசனுனு சொன்னாங்க…” என்று கூறவும் 

 

      தேவா “என்ன அங்கிள்… பேசவந்துட்டு ஏன் அமைதியா இருக்கீங்க… எங்ககிட்ட பேச என்ன தயக்கம்…” என்று கேட்டான்.

 

      அதற்கு அமீராவின் தந்தை “தயங்கி தான்பா ஆகணும்…. நீங்கள்லாம் என் பொண்ண புரிஞ்சுகிட்ட அளவு கூட நா புரிஞ்சுக்கல… என் பொண்ணுக்கு என்னை விட ஏன் என் பொண்டாட்டியால என் பொண்ணாலயே கூட நல்லது நினச்சுற முடியாது பெஸ்ட்ட குடுத்துற முடியாதுன்ற ஆணவத்தோடயும் வெட்டி வீராப்போடயும் சுத்திட்ருந்தேன்…. ஆனா அதெல்லாம் எவ்ளோ பெரிய தப்புன்னு இப்ப புரிஞ்சுருச்சு….” என்றார். 

 

      தேன்மலர் “அங்கிள் அத ஏன் அப்டி நினக்கிறீங்க… எல்லா அப்பாவுக்கும் இருக்ற அதீத அன்பு தான் நீங்க மீரா மேல வச்சது… சரி இப்போ பழச பேசாம என்ன விஷயம்னு சொல்லுங்க…” என்றாள். 

 

                    அவளை ஆதுரமாய்ப் பார்த்தவர் “அம்மாடி உன்னை பாக்கும் போது தான் தோனுது உன்னை மாறி என் பொண்ணையும் தைரியமா வளர்த்துருக்கலான்னு…. அமீய எவ்ளோ பெரிய அயோக்யனுக்கு கல்யாணம் பண்ணி குடுக்க இருந்தேன்… நல்ல வேளை அவன பத்தி முன்னாடியே தெரிஞ்சுருச்சு… இல்லன்னா அவ என்னென்ன கஷ்டம்லா அனுபவிச்சுருப்பாளோ….” என்று எழுந்து அருளிடம் வந்தவர் அவனின் கைப்பற்றிக் கொண்டு “தம்பி நீங்க மட்டும் அன்னிக்கு நா நம்பலன்னு அப்டியே விட்டுட்டு போகாம ஒரு தடவ பாருங்க அவன் வாயாலயே எல்லாம் சொல்ல வைக்கிறோம்னு கம்பல் பண்ணி அவனுங்க பேசுனத பாக்க வைக்கலனா நா நம்பிருக்கவே மாட்டேன் தம்பி… அவன பத்தி எனக்கும் தெரிஞ்சுருக்காது… பல உறவுகளோட உண்மையான முகமும் இதுனால தெரிஞ்சுகிட்டேன் தம்பி… ரொம்ப நன்றி தம்பி…” என்றார். 

 

         அருள் “சார் என்ன சார் நீங்க… பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு…. இப்போ உங்க பொண்ண நம்புறீங்கள்ல…. அதுபோதும்… அமீராவுக்கு அவ அப்பா பாசம் முழுசா வெளிப்படையா கெடைக்குதுல்ல அது தான் சந்தோஷம்…” என்று அமீராவையும் ஒரு பார்வைப் பார்த்துக் கூறினான். 

 

              அமீரா தன் மகிழ்ச்சியைக் கண்ணீராய் வெளிப்படுத்த, அருள் கண் சாடை செய்யவும் அமீரா புன்னகைத்துக் கண்களைத் துடைத்துக் கொள்ள, இதை தேவா மற்றும் தேன்மலரோடு சேர்ந்து பார்த்த அமீராவின் தாய்க்கும் ஏதோ புரிய அமைதியாக அவர்களைப் பார்த்திருந்தார். 

 

       அருளிடம் பேசிவிட்டு தேவாவிடம் வந்தவர் “தேவா… உனக்கு பெரிய தப்பு பண்ணிட்டேன் பா… கௌரவம் மதம்னு பாத்து…” என்னும் போதே, 

 

          தேவா “அங்கிள்… நீங்க பண்ணது தப்புலா இல்ல… மீரா மேல உள்ள பாசத்துனால தானே அப்டி பண்ணீங்க… நீங்க அன்னிக்கு கௌரவம் பாத்தீங்கன்னா… நானும் எங்க அப்பா அம்மா வளர்ப்புல யாரும் தப்பு சொல்லீறக் கூடாதுன்னும் மீரா கஷ்டப்படக் கூடாதுன்னும் பாத்தேன்… எது எப்டியோ அதுல நடந்த நல்லதுன்னா என் செல்லாம்மா எனக்கு கெடைச்சதுதான்…” என்று தன்னவளைக் காதலாகப் பார்த்துக் கூற, அதற்கு மேல் அவரால் என்ன பேசிட முடியும் புன்னகைத்து “நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்…” என்றார். 

 

         தன்னவனைக் காதலாக நோக்கிய தேன்மலர் அவனருகில் வந்து நின்று “அப்போ ஆன்ட்டியோட சேந்து எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க அங்கிள்….” என்றவள் “ஆன்ட்டி வாங்க…” என்று அமீராவின் அன்னை அழைத்தவள், அவர் வந்து தன் கணவன் அருகில் நின்றதும் அவள் தன்னவோனோடு இணைந்து அவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்கினாள். 

 

              அமீராவின் பெற்றோர் மனம் நிறைந்து அவர்களை வாழ்த்த, அருள், அமீரா, சங்கவி மூவரும் புன்னகையோடு நின்றிருந்தனர். அமீராவின் அன்னை தேன்மலரின் தலை வருடி “அமீ நியூஸ் பாத்ததுக்ப்றம் நேத்து தான் மா எல்லாம் சொன்னா… எவ்ளோ கஷ்டம்… ஆனாலும் தைரியத்த விடாம இருந்துருக்கியே மா… அப்பாவும் பாட்டியும் நல்லார்க்காங்களா… பேசுனியா…” என்று வினவ,

 

       தேன்மலர் புன்னகைத்து “நல்லார்ங்காங்க ஆன்ட்டி… இன்னிக்கு தான் பேசுனேன்… பாவம் மிட் நைட்ல அவங்க தூக்கத்த கெடுத்துட்டேன்… பேசனப்றம் தான் கொஞ்சம் நல்லார்க்கு ஆன்ட்டி…” என்றவள் முகத்தில் மெல்லிய கலக்க ரேகைத் தெரிய அதை அவளவனின் கண்கள் தெளிவாய்ப் படம் பிடித்துக் கொண்டது.

 

       ஆமீராவின் அன்னை “ம்ம் சரி மா… அப்றம் நீயும் எனக்கு மகதான்… அதனால இந்த ஆன்ட்டிய கட் பண்ணிட்டு அம்மான்னு கூப்ட்டா நல்லார்க்கும்…” என்று கூற, தேன்மலர் புன்னகைத்து “சரிங்க ம்மா..” என்க, அமீராவின் அன்னை முகத்தில் அப்படி ஒரு புன்னகை.

 

        பின் அவர் சங்கவியின் கைப்பற்றி “நீயும் எங்களுக்கு மக தான்டா… கவலப்படாத டா… இனி உனக்கு நாங்களும் அப்பா அம்மா தான்… என்னங்க நா சொல்றது…” என்று தன் கணவரைப் பார்க்க அவரும் “ஆமா மா… இனி நீ பழச நினைக்கவே கூடாது… உனக்கு நாங்க இருக்கோம்…. எதுனாலும் அப்பா இருக்கேன்ற நினப்பு உனக்கு எப்பவும் இருக்கணும்…” என்று கூற, சங்கவி விழிகள் கலங்க இருவரையும் கட்டிக் கொண்டாள். 

 

                அமீராவின் அன்னை சங்கவியை தன்னருகிலேயே இருத்திக் கொள்ள, தேன்மலர் “அம்மா, அப்பா… நாங்க ஒரு விஷயம் பேசணும்… இத பேசுற அளவு எங்களுக்கு வயசில்ல தான்… ஆனா எங்க பிரண்ட்ஸுக்காக இத நாங்க பேசுறோம்….” என்று தேவாவைப் பார்க்க, 

 

     “அங்கிள் நா ஸ்ட்ரைட்டா விஷயத்துக்கு வரேன்… அமீரா கல்யாணம் விஷயமா தான் பேசணும்…” என்றான்.

 

      அமீராவின் தந்தை “என்ன பா… இப்ப தான் ஒரு பிரச்சனை முடிஞ்சுச்சு… அதுக்குள்ள எடுத்தோம் கவுத்தோம்னு இனி அமீ விஷயத்துல முடிவெடுக்க முடியாது பா என்னால…” என்று கூற, அவளது அன்னை அமைதியாக இருந்தார். 

 

      தேவா “அங்கிள் நீங்க நினைக்கிற மாறி இந்த தடவ எந்த தப்பும் நடக்காது… மாப்ள தங்கம்… உங்களுக்கு நல்லா தெரிஞ்சுவரும் கூட… உங்களுக்கு வேணும்னா நீங்களும் விசாரிங்க…” என்க, 

 

     அவர் குழப்பமும் கேள்வியுமாய் “எனக்கு தெரிஞ்சவரா…. யாரு பா…” என்று கேட்க, 

 

       தேவா வேற யாருமில்ல அங்கிள் “என் மாமா அருள் தான்…” என்று கூற, அவரின் முகத்தில் சிறு அதிர்வு. 

 

      ஆனால் அவரது மனைவியோ எச்சலனுமுமின்றி அமர்ந்திருக்க, அமீரா அங்கு தவிப்பும் பயமுமாய் நின்றிருக்க, அவளைக் கண்ட அருள் “சார்… நா அமீரா கூட கொஞ்சம் தனியா பேசலாமா…” என்று கேட்டான். அவர் சிறிது யோசித்து தன் மனைவியின் சம்மதம் கேட்டு அவரைப் பார்க்க, அவர் விழியால் சரியென்று கூறவும் “சரி பா…” என்றார். அமீரா தன் தாயையும் தந்தையையும் ஒருப் பார்வைப் பார்த்துவிட்டு அருளின் பின் சென்றாள்.

 

           தேன்மலர் “அப்பா… நீங்க யோசிக்றது புரியுது… அருள் வீட்ல நானும் என் அப்பாயியும் பேசுனா ஒத்துப்பாங்க… நாங்க பாத்த வரைக்கும் ரெண்டு பேருக்குமே ஒருத்தர ஒருத்தர் புடிச்சுருக்கு… அருள் என் ப்ரண்ட்… என்கூட தான் ப்ரொபஸரா வேலை பாக்றான்… எந்த கெட்ட பழக்கமும் கெடையாது… ப்ரண்ட்ஸோட பார்ட்டி அது இதுன்னு போனாலும் ஆல்கஹால தொட்டதில்ல… பாக்க அவன் விளையாட்டு தனமா இருக்ற மாறி தெரியும் ஆனா அவன மாறி பொறுப்பானவன பாக்க முடியாது… மீராவ அருளுக்கு கட்டிக் குடுத்தீங்கன்னா சந்தோஷமா இருப்பா… அது மட்டும் நா உறுதியா சொல்ல முடியும்… நா என் ப்ரண்டுங்கறத்துக்காக சொல்லல… நீங்களும் அவன பத்தி அவன் குடும்பத்த பத்தி விசாரிங்க….” என்றவள் அருளின் குடும்பம் பற்றி அனைத்து விவரங்களும் கூறி “நா எல்லாம் சொல்லிட்டேன்… இப்ப நீங்க தான் ப்பா சொல்லணும்…. அம்மா உங்க விருப்பம் என்னன்னு சொல்லுங்க…” என்றுவிட்டு அமைதியாக அமர்ந்து விட்டாள். 

 

       அமீராவின் அப்பாவிற்கு தேன்மலர் கூறியதே திருப்தியாக இருந்தாலும் மீண்டும் தன் மகள் விடயத்தில் தவறிழைக்கக் கூடாதே என்று தன் மனையாளைப் பார்க்க, அவர் இமை மூடித் திறந்து “தேனு நீ இவ்ளோ சொன்னப்றம் நாங்க எப்டி சம்மதம் சொல்லாம இருப்போம்… அதுவும் அருள் தம்பி மாறி மாப்ள தேடுனாலும் கெடைக்காதே…” என்று புன்னகைக்க, 

 

       தேவாவும் தேன்மலரும் அமீராவின் தந்தையை நோக்க, அவர் புன்னகைத்து “எனக்கும் சம்மதம் மா… என்ன என் உறவுல தான் பிரச்சனை பண்ணுவாங்க… அத நான் சமாளிச்சுக்றேன்… நீங்க அருள் வீட்ல பேசி மொறப்படி பொண்ணு கேட்டு வரச்சொல்லுங்க…” என்கவும் தேவா, தேன்மலர், சங்கவி மூவரது முகத்திலும் அப்படி ஒரு புன்னகை.

 

               தோட்டத்தில் அருளும் அமீராவும் எதிர் எதிரே விழிக்கோர்த்து நின்றிருக்க, அருள் “மீரு… என்னை கட்டிக்க உனக்கு சம்மதமா…” என்று கேட்க, அமீரா உதடுத் துடிக்க, விழிகளில் நீர் திரையிட, சிறிதாய் இதழ் விரித்து மேலும் கீழும் தலையாட்டியவள் அவனைக் கட்டிக் கொண்டு அவனது மார்பில் முகம் புதைத்து அவனது சட்டையை ஈரம் செய்ய ஆரம்பித்தாள். 

 

          அருள் விழிகளில் நீர் திரையிட, இதழ்கள் புன்னகை சிந்த, தன்னவளை அணைத்தவன் ஆதுரமாய் அவளது தலைக் கோதியவாறு “மீரு… என்ன மா இது… ஏன் அழற… என்னை புடிக்கலனா கட்டிப் புடிச்சுட்டு நின்னுட்ருக்க மாட்ட… அப்றம் ஏன் அழற…” என்று கேட்டான். 

 

        அமீரா மேலும் அவனது மார்பில் முகம் புதைத்து கேவலாக “தெரில அருள்… அழுக வருது…” என்று கூற, 

 

       அருள் அவளது முகம் நிமிர்த்தி கண்கள் துடைத்து நெற்றியோடு நெற்றி முட்டி “இனி என் மீரு… எதுக்கும் அழக்கூடாது.. சரியா…” என்று கேட்க, அமீரா புன்னகைத்து “அழ மாட்டேன்…” என்றாள். 

 

        அருள் புன்னகைத்து அவளது நெற்றியில் இதழ் பதிக்க, அவனது முத்தம் அவளது உயிரின் அடி ஆழம் வரைத் தீண்ட, அமீரா கண்கள் மூடி அவனது சட்டையை இறுகப் பற்றி அதை ரசித்தாள். மூடிய அவளது இமைகளிலும் அருள் இதழ் பதிக்க, மெல்ல விழிகள் திறந்து காதல் ஊற்றெடுக்கும் அருளின் விழிகளைக் கண்டவள் காதாலாக அவனது விழி நோக்கினாள். 

 

               சற்று முன் அவனின் இதழ் முத்தமும் தன் இடை வளைத்திருந்த அவனது கரமும் பெண்ணவளின் நாணத்தை உயிர்ப்பிக்க, தன்னவனின் காதல் பார்வைத் தாளாது இமைக்குடை தாழ்த்தியவள் கன்னம் சிவந்து அவனது பிடியிலிருந்து விலக, அவளதுக் கன்னச் சிவப்பை ரசித்த அருள் கள்ளப் புன்னகையோடு அவளைப் போகவிடாது அவளது இடைவளைத்துத் தன்புறம் இழுக்க, அவள் அவனது மார்பிலேயே மோதி நின்றாள். 

 

       அமீரா அவனைப் பார்க்க முடியாது நாணப் புன்னகையோடுத் தலைத் தாழ்த்தி நிற்க, அருள் மந்தகாசப் புன்னகையோடு அவளது நாடிப் பிடித்து முகம் நிமிர்த்தி அவளது கன்னத்தில் இதழ் பதிக்க, அமீராவின் விழி அலர்ந்து பெரிதாகக் கூடவே நாணமும் மேலோங்க சட்டென்று அவனது மார்பில் கை வைத்து அவனைத் தள்ளினாள். 

 

       அதில் அருள் புன்னகை சிந்த, அமீரா கன்னம் சிவக்க அவனைப் பொய்க் கோபம் கொண்டு முறைத்து விட்டு அவன் எதிர்பாரா நேரத்தில் அவனது சட்டையைப் பற்றி தன்புறம் இழுத்து அவனதுக் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு நாணம் கொண்டு வீட்டினுள் ஓட, அருள் தன்னவள் ஈரம் செய்த கன்னத்தில் கை வைத்து ஒரு நொடி உறைந்து நின்றவன் பின் புன்னகையோடு அவனும் அவளின் பின்னே “ஹேய் மீரு… இப்டி பட்டும் படாமா குடுத்துட்டு போனா எப்டி…” என்றவாறு ஓடினான். 

 

                 இருவரும் புன்னகையோடுக் கைக்கோர்த்தபடி மலர்ந்த முகத்தோடு உள்ளே வர, அமீராவின் தாயும் தந்தையும் தங்களின் மகளின் வாழ்க்கை இனி நன்றாகவேயிருக்குமென்று மனம் நிறைந்துப் பார்க்க, மற்ற மூவரும் அவர்களைப் புன்னகையோடுப் பார்த்திருந்தனர். 

 

       அருள் “சார்… எனக்கு மீருவ புடிச்சுருக்கு… மீருவுக்கும் என்னை புடிச்சுருக்கு… உங்களுக்கு எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுல சம்மதமா…” என்று கேட்க, 

 

       அமீரா தவிப்போடுத் தன் தந்தையையும் தாயையும் பார்க்க, அமீராவின் தந்தை “மாப்ள… தேன்மலர் எல்லாம் சொன்னுச்சு… எங்களுக்கு சம்மதம்… நீங்க சீக்ரம் உங்க வீட்ல பேசிட்டு மொறைப்படி பொண்ணு கேட்டு வாங்க… உடனே கல்யாணத்த வச்சுக்குவோம்…” என்று கூற, அருளுக்கும் அமீராவிற்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி. 

 

     அமீரா மகிழ்ச்சியில் “அமி…” என்று தன் தாயைக் கட்டிக் கொண்டாள். 

 

     அருள் புன்னகையோடு “ரொம்ப சந்தோஷம் மாமா… அப்போ எங்க ரெண்டு பேரையும் ஆசிர்வாதம் பண்ணுங்க…” என்றான். அருள் அமீராவும் இணைந்து அமீராவின் பெற்றோரிடம் ஆசி வாங்கினர். 

 

        பின் அருள் தேன்மலரையும் தேவாவையும் பார்த்து விழிகள் கலங்கப் புன்னகைக்க, இருவரும் புன்னகைத்து இமை மூடித் திறந்தனர். பின் அனைவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க, அமீராவும் அவளது பெற்றோரும் தங்கள் வீட்டிற்குப் புறப்பட, அருள் தன்னவளுக்கு விழிகளால் விடையளித்தான். 

 

      அவர்கள் சென்றதும் அனைவரும் உறங்கச் செல்லலாம் என்று அருள் கூற, தேவா “நீயும் சங்கவியும் போய் தூங்குங்க மாமா… நா செல்லம்மா கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்கவும் அருளும் சங்கவியும் இருவருக்கும் தனிமையளித்து அவரவர் அறைக்கு உறங்கச் சென்றனர்.

தொடரும்….

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்