Loading

அத்தியாயம்- 26

 

 

         அமீரா அமைதியாக அருளுடன் செல்ல, ஹோட்டலின் இரண்டாம் தளத்திற்குச் சென்ற அருள் சிந்தனையாகத் தயங்கி நிற்க, அமீரா பயந்துத் தயங்கி “அருள் வேணாம்… நாம போய்டலாம்…” என்றாள். 

 

      அவளை முறைத்த அருள் ஆழமூச்செடுத்துத் தன் கோபத்தை சமன் செய்தவன் தணிவானக் குரலில் “இங்க பாரு அமீரா…. மொதல்ல இப்டி பயப்பட்றத நிறுத்து… அப்றம் உன் பயம் அவனுக்கு பலமாயிடும்… வந்த கோவத்துக்கு அவன நாலு அரை விடலான்னு தான் வந்தேன்… பட் அவன வேற மாறி தான் டீல் பண்ணனும்… நீ எனக்கு அவனையும் அந்த பொறுக்கியையும் அடையாளம் மட்டும் காமி…. மத்தத கீழ போய் பேசிக்கலாம்….” என்றான். ஏடாகூடமாக ஏதும் நடந்து விடக்கூடாதென்று பயந்துக் கொண்டிருந்த அமீராவிற்கு அதன் பின்பே சற்று சீராக மூச்சு விட முடிந்தது. 

 

       அவளது முகம் தெளிந்திருந்தாலும் உள்ளூர சிறு பயம் இருப்பதை, அவள் இறுகப் பற்றிய அவனதுக் கரத்தின் வழியே அவளது கை நடுக்கத்தை உணர்ந்த அருள், இமை மூடித் திறந்து மற்றொருக் கரத்தால் அவளது தலை வருடி தான் இருப்பதாக உணர்த்த, அமீரா ஒருவித தவிப்போடுத் தலையசைத்தாள். பின் அவளை அழைத்துக் கொண்டு அருள் அந்தத் தளத்திலிருந்த டிஸ்கோ ஹாலுக்கு வர, முன் நின்ற பவுன்ஸர்கள் அமீராவை முன்னே உள்ளேச் செல்லும்போது பார்த்திருந்தால் எக்கேள்வியுமின்றி இருவரையும் உள்ளே அனுமதித்தனர். 

 

           உள்ளேச் சென்றவுடன் அமீரா இன்னும் இறுக்கமாக அருளின் கையைப் பற்றிக் கொள்ள, அருள் திரும்பி அவள் பார்வைச் சென்றத் திசைப் பார்த்தான். அங்கு பணக்காரத் தோரணை உடல்மொழியில் தெறிக்க இரு இளைஞர்கள் கையில் மதுக்கோப்பையோடு ஏதோ உரையாடிக் கொண்டிருந்தனர். அவ்வளவு இரைச்சலிலும் இருவரும் தீவிரமாக ஏதோ உரையாடிக் கொண்டிருந்தனர். 

 

      அருள் திரும்பி அமீராவை காண, அமீரா மருண்ட விழிகளோடு “ப்ளாக் ஷர்ட் போட்ருக்காற்ல அவர் தான் என் பியான்ஸி… அப்றம் அவன்கூட பேலேஸர் போட்ருக்கவன் தான்….” என்று அதற்குமேல் கூற முடியாமல் அமீரா அழ, அருள் அவ்விருவரையும் தீயென முறைத்து விட்டு, அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான். 

 

      இருவரும் மின்தூக்கிக்குள் வந்து நின்றும் அமீராவின் அழுகைக் குறையவில்லை, அருள் எரிச்சலாகி “அமீரா அழறத நிறுத்த போறியா இல்லயா…” என்று கடுமையாகக் கேட்க, அமீரா விழி நீரோடு அவனை மிரட்சியாகப் பார்த்தாள். 

 

      அருள் அப்போதும் கோபம் தணியாமல் “எதுக்கு இப்ப அழர…. அங்கயே அவன நாலு அறை விட்றத விட்டுட்டு இப்ப வந்து அழு…. அவன் பண்ண வேலைக்கு அவந்தான் அசிங்கப்படனும்…. நீ ஏன் இப்டி அழர…. இதுக்கு நீ கோவம் தான் படனும்… மொதல்ல உன் அழுகையெல்லாம் கோவமா மாத்து…” என்றான். 

 

            அமீரா கண்களைத் துடைத்துக் கொண்டு “இல்ல அருள்…. திடீர்னு இப்டி நடக்கவும் எனக்கு எப்டி ரியாக்ட் பண்றதுன்னு தெரில… அவன் தொட்டத நினச்சா அப்டியே அருவெறுப்பாயிருக்கு…. அவன் மட்டும் ஹசனோட ப்ரண்டா நிக்கலனா அரைஞ்சுருப்பேன்…. கோவம் வருது… அத எப்டி எக்ஸ்ப்ரஸ் பண்றதுன்னு தெரியாம தான் அழுக வருது…” என்று அந்நிகழ்வை எண்ணி அருவெறுப்பும் ஆத்திரமும் அதன் வெளிப்பாடாய் அழுகையுமாய்க் கூறினாள்.

 

       அவள் உணர்வை சரியாய்ப் புரிந்துக் கொண்ட அருள் ஆதரவாய் அவளதுத் தலை வருட, அமீரா அவனை அணைத்துக் கொண்டாள். அருளிற்கு அவளின் நிலைப் புரிந்தாலும் அவளது திடீர் அணைப்பு அவனை சங்கடத்தில் ஆழ்த்த, அதற்குள் தரைத் தளம் வந்து மின்தூக்கித் திறக்கவும் அருள் “அமீரா…” என்றழைத்தான். அவனது அழைப்பில் நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவன் விழியால் கீழே வந்ததை உணர்த்தவும் தான் அவளுக்கு அவள் அவனை அணைத்திருப்பதுப் புரிய, சட்டென்று அவனை விட்டு விலகி மின்தூக்கியிலிருந்து வெளியேற, அருள் பெருமூச்சோடு அவளைப் பின் தொடர்ந்தான். 

 

      ஹோட்டலை விட்டு வெளி வந்த அமீரா அவனிடம் ஏதோ கூற விழைந்து அவனைப் பார்க்க முடியாமல் தயங்கி நிற்க, அருள் “எனக்கு புரியுது அமீரா… நா எதுவும் தப்பா எடுத்துக்கல… ஃபீல் ஃபீரி… என்னை உன் பிரண்டா நினச்சுக்கோ உனக்கு எப்போ என்கிட்ட என்ன பேசனுனு தோனுனாலும் பேசலாம்…” என்றான். 

 

                அமீரா தன் தயக்கம் கொண்டே தான் சொல்ல வந்ததைப் புரிந்துக் கொண்டதோடு மட்டுமன்றி அவனிடம் எப்போது வேண்டுமென்றாலும் மனம் திறந்துப் பேசலாம் என்கின்றானே என்று நிமிர்ந்து அவனை ஆச்சர்யமாக விழி விரித்துப் பார்த்தாள். 

 

      அவளின் எண்ணம் புரிந்த அருள் சிறிதாக இதழ் விரித்து “இவ்ளோலா ஆச்சர்யப்பட வேணாம்… நீ கொஞ்சம் தைரியமா இருந்தா போதும்…” என்று கூற, 

 

      அமீராவும் இதழ் விரித்து “அது… பயத்துல… இனி எப்டி தைரியமா இருக்கேன்னு பாக்கத் தானே போற…” என்றாள். 

 

     அருள் மென்னகைப் புரிந்து முன் செல்ல, அமீரா மென்னகையோடும் சிறிது தெளிவோடும் அவனைப் பின் தொடர்ந்தாள். 

 

        பார்க்கிங்கில் அவர்களுக்காகக் காத்திருந்த செந்தில், இருவரையும் கண்டுவிட்டு என்ன நடந்ததென்று விசாரிக்க, அருள் “ஒன்னும் பண்ணல மாப்ள… அடையாளம் மட்டும் பாத்துட்டு வந்துருக்கேன்… இவனுங்கள வேற மாறி டீல் பண்ணுவோம்….” என்று கூற, செந்தில் பயத்தில் சென்ற அமீரா தெளிவாகத் திரும்பியிருப்பதுக் கண்டு நிம்மதியுற்று சரி என்றான். 

 

       அதற்குள் தேவாவும் தேன்மலரும் அங்கு வந்துச் சேர்ந்தனர். தேன்மலர் “அருளு…. என்னடா ஆச்சு… எதுக்கு அவசரமா வர சொன்ன… ஆமா மீரா நீ இங்க என்ன பண்ற…. அவ அப்பாவையும் ஏன்டா வர சொன்ன…” என்று கேட்டாள். 

 

               தேவாவும் அவனையும் அமீராவையும் கேள்வியாகப் பார்க்க, அருள் “அது ஹனிமலர்…. நானும் செந்திலும் பார்ட்டி முடிச்சுட்டு லிப்ட்ல கீழ வந்துட்ருந்தோம்… அப்ப அமீரா அழுதுட்டே பயந்துப் போய் லிப்ட்ல வந்து ஏறவும்… என்னன்னு விசாரிச்சோம்… அப்ப தான் சொல்றா… அவ பியான்ஸி வெளில கூப்ட்ருக்கான்… மொதல்ல அமீரா வரல வேலயிருக்குன்னு சொல்லிற்கா… அவன் மறுபடி மறுபடி அவளுக்கு ஃபோன் பண்ணி கேக்கவும் இவ அவ அப்பாகிட்ட பர்மிஷன் கேக்கனும்னு சொல்லீற்கா… அதுக்கு அவன் அத நா பாத்துக்கறேன்… உனக்கு என்கூட வர இஷ்டமான்னு கேட்ருக்கான்…. இவ குழப்பாமவே தலையாட்டி வச்சுருக்கா… அவன் பேசி முடிச்ச கொஞ்ச நேரத்துல இவ அப்பா ஃபோன் பண்ணி மாப்ள வெளில கூப்ட்டா போக வேண்டியது தானே மான்னு கேட்ருக்காரு… அதுக்கு இவ இல்ல அத்தா எனக்கு வேலயிருக்கு…. அதுவுமில்லாம உங்களுக்கு இதெல்லாம் புடிக்காதேன்னு சொல்லீற்கா…. அதுக்கு அவ அப்பா இப்ப நா சொல்றேன் நீ மாப்ளகூட போய்ட்டு வான்னு சொல்லவும் இவளும் வேற வழியில்லாம சரினுட்டா… ஹாஸ்பிட்டலேர்ந்து அவந்தான் இவள பிக் அப் பண்ணிருக்கான்… இவகிட்ட எங்க போறோம் ஏது போறோம்னு எதுவும் சொல்லாம என் க்ளோஸ் ப்ரண்ட பாக்க போறோம்னு கூட்டிட்டு இங்க வந்துருக்கான்…” என்றான்.

 

                  அமீரா “அருள் இனி நானே சொல்றேன்…” என்கவும் தேவாவும் தேன்மலரும் அவளைப் பார்த்தனர். 

 

       அமீரா “ஹோட்டல பாத்தவொடனே சரி சாப்ட்டுட்டே பேசுவாங்க போலன்னு நானும் நார்மலா தான் வந்தேன்… ஆனா நேரா டிஸ்கோ ஹாலுக்கு கூட்டிட்டு போகவும் நா வரலன்னு சொன்னேன்… ஆனா ஹசன் ப்ரண்ட பாத்துட்டு வந்தற்லாம் அமீ… நாளை பின்ன நீயும் என்கூட இது மாறி எடத்துக்கலாம் வரனும் அதுக்கு இப்பவே பழகிக்கோ… ஏன்னா நா பார்ட்டி டைப்… பார்ட்டி பண்றது எனக்கு ரொம்ப புடிக்கும்… ஆனா உன்னை ட்ரிங்ஸ் பண்ணுன்னு கம்பல் பண்ண மாட்டேன்…. இப்ப உள்ள வந்து எப்டியிருக்கும்னு பாரு… அப்றம் உனக்கே அது புடிச்சுரும்னாரு… சரி அவர் கூட இருக்காரே என்ன பயம்னு நானும் உள்ள போனேன்…. உள்ள போனோன எனக்கு அந்த அட்மாஸ்பியர் புடிக்கல தான்… ஆனாலும் நா அத வெளில காமிச்சுக்கல…. அப்போ அங்க ஒருத்தன அவர் ப்ரண்டுன்னு இன்ட்ரொடியூஸ் பண்ணி வச்சாரு… அவர் ப்ரண்ட எனக்கு எங்கயோ பாத்த மாறியிருந்துச்சு… நானும் யோசனையா ஹாய் சொன்னேன்…. அப்ப அவனே என்ன அமீரா என்னை தெரிலயா… இன்டர் காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல ஒரு அரை விட்டீயே… மறந்துட்டியான்னு சிரிச்சுட்டே கேட்டான்… எனக்கு அப்ப தான் ஞாபகம் வந்துச்சு… ஒருதடவ இன்டர்காலேஜ் கல்ச்சுரல்ஸ் அப்ப இவன் அவங்க காலேஜ்லேர்ந்து எங்க காலேஜ்க்கு வந்துருந்தான்…. அங்க இவனுக்கு பொண்ணுங்கள வம்புழுக்றது சீண்டறதுதான் வேல…. நா அப்போ கல்ச்சுரல்ஸ்ல பேக் ஸ்டேஜ் ஆர்கனைஸிங்ல அடுத்து யாரு போகனும்னு பாத்து அவங்க ரெடியாயிட்டாங்களான்னு பாத்து அவங்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷ்ன்ஸ் குடுத்துட்ருந்தேன்… இவன் மேக் அப் ரூம்ல ரெடியாட்றந்தப்போ அடுத்து இவன் ப்ரோக்ராம்னு சொல்ல போனா அவன் என்கிட்ட அசிங்க அசிங்கமா பேச ஆரமிச்சான்… வந்த கோவத்துக்கு ஒரு அரை விட்டு திட்டிட்டு வந்துட்டேன்… அப்றம் அவன மறந்துட்டேன்… ஆனா இன்னிக்கு அவனே சொல்லவும் எனக்கு ஷாக்… அப்ப ஹசன் தான் சொன்னாரு வினித்கிட்ட நா உன் போட்டோ காட்னப்ப எல்லாம் சொல்லி உன்கிட்ட சாரி கேக்கனுன்னு சொன்னான்… அதான் உன்னை கூட்டிட்டு வந்தேன்னாரு… வினித்தும் சாரி அமீரா அன்னிக்கு உன்கிட்ட அப்டி நட்ந்துக்கிட்டுதுக்குன்னு சாரி கேட்டான்… எனக்கு கோவம் தாங்கல ஏன்னா அவன் சாரிக்கும் அவன் பார்வைக்கும் ரொம்ப வித்தியாசம் இருந்துச்சு… சரி ஹசன் முன்னாடி எதுவும் காட்டிக்க வேணானு பரவால்ல வினித் அத நா எப்பவோ மறந்துட்டேன்னேன்… அவன் பதிலுக்கு சிரிச்சுட்டு சரி இன்னிக்கு என் ட்ரீட்… ரெண்டு பேரும் என்ன சாப்ட்றீங்கன்னு கேட்டான்… நா ஹசன்கிட்ட எனக்கு வேலயிருக்கு நா கெளம்பறேன்னேன் ஆனா ஹசன் ஏய் என்னதிது… அதெல்லாம் முடியாது… டின்னர் முடிச்சுட்டு உன்னை வீட்ல ட்ராப் பண்றதா மாமாட்ட சொல்லிட்டேன்னு சொல்லவும் நானும் வேற வழியில்லாம எனக்கு எதுவும் வேணானு சொல்லிட்டு ஓரமா போய் உக்காந்துட்டேன்… ரெண்டு பேரும் டிர்ங்ஸ் எடுத்துட்டே ஏதோ பேசிட்ருந்தாங்க…. அப்ப அந்த வினித் என்னை பாத்த பார்வை… அச்சோ நினச்சாலே கோவம் வருது… ஹசனும் அவன் பாக்றத பாத்துட்டாரு… ஆனாலும் எதும் சொல்லல… கொஞ்ச நேரம் கழிச்சு ஹசன் என்னை டான்ஸ் பண்ண கூப்டாரு…நா எவ்ளோ சொல்லியும் கப்பல் பண்ணி இழுத்துட்டு போனாரு… கூட அந்த வினித்தும் வந்தான்… ஹசனும் நானும் டான்ஸ் பண்ணோம்… அப்பவும் அவன் ஒரு மாறி பாத்தான்‌… ஹசன் இதோ வந்தர்றேன்னு ஃபோன எடுத்துட்டு போனாரு… அப்போ அவன்… வினித் வா நாம டான்ஸ் பண்ணலாம்னு கைய புடிச்சுட்டு விடவேயில்ல… நானும் அவன முறைச்சு நீ இன்னும் திருந்தலயாடான்னு கேட்டேன்… அவன் சிரிச்சுட்டே அது எப்பவுமே நடக்காதுன்னு சொல்லி வலுக்கட்டாயமா என் கைய புடிச்சு இழுத்து கண்ட எடத்துல கைய வச்சான்… அப்ப அங்க வந்த ஹசன் ஹே ஏன் அமீ… வினித் நல்லா டான்ஸ் ஆடுவான்… அவன்கூட ஆடுன்னு கைய கட்டிட்டு வேடிக்க பாக்க ஆரமிச்சுட்டாரு… என்னால முடில… நா அவன தள்ளி விட்டுட்டு ஹசன்கிட்ட நா கெளம்பறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்….” என்றாள். 

 

            அதைக் கேட்ட தேவா, தேன்மலர் இருவருக்குமே அடக்க முடியாக் கோபம். 

 

      தேன்மலர் “ஏன் மீரா… அவன தள்ளி விட்டதுக்கு பதிலா நாலு அரை குடுத்துட்டு வர வேண்டியது தானே… ஆமா ஹசன நீ கல்யாணம் பண்ணியே ஆகனுமா…” என்று கேட்க, அமீரா அதிர்ந்து அவளை நோக்க, மற்றவர்களோ தேன்மலர் பேசியதற்கு ஆமோதிப்பான மனநிலையுடன் அவளைப் பார்த்திருந்தனர். 

 

       அமீரா “ஏன் மலர் இப்டி கேக்ற…” என்று வினவ, 

 

        தேன்மலர் வந்த ஆத்திரத்திற்கு அவளை அறைய கை ஓங்கி விட்டு அவள் முகத்தில் தெரிந்த மருட்சியைக் கண்டு கையை இறக்கி பல்லைக் கடித்துக் கொண்டு “என்னடி கேக்ற… அறிவிருக்காடி உனக்கு… ப்ரண்டுனாலும் எந்த ஆம்பளையும் தான் கட்டிக்க போற பொண்ண ஒருத்தன் கண்ட எடத்துலயும் தொட்றதை பாத்துட்டு சும்மாயிருக்க மாட்டான்… அதுவும் நீ சொல்றத பாத்தா அந்த வினித் ஹசன் மூலமா உன்னை பழி வாங்க பாக்றான்… சரி இதுக்கு பதில் சொல்லு… உன்னை அவனுக்கு உண்மையாவே புடிச்சுருந்தா நீ கெளம்புறேன்னு சொன்னப்ப ஒன்னு உன்னை தடுத்துருக்கனும் இல்ல அவனே உன்னை கொண்டு போய் வீட்ல விட்ருக்கனும்…. ஏன் பண்ணல…” என்று கேட்டாள். 

 

      அதைக் கேட்ட அமீரா அதிர்ந்து “என்ன சொல்ற மலர்…” என்று கேட்க, 

 

      தேன்மலர் “இவ ஏன் இப்டியிருக்கா….” என்ற கோபத்தின் உச்சத்தில் “தேவா… இவகிட்ட என்னால பேச முடியாது… இவ்ளோ அப்பாவியா இருந்தா இவ வாழ்க்க இவ கைல இல்லன்னு நீங்களே உங்க ப்ரண்டுக்கு சொல்லி புரிய வைங்க….” என்றுவிட்டு திரும்பி நின்று கொண்டாள். 

 

               தேவா “மீரா… உனக்கு இன்னுமா புரியல… நீ ஹசன கல்யாணம் பண்ணிகிட்டா வினித்க்கு உன்னை பழி வாங்கறது ரொம்ப ஈஸி… ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸுங்றப்ப…. ஹசன் ஏன் வினித்க்கு ஹெல்ப் பண்ண கூடாது… இதுல ஹசன் கண்டுக்காம இருந்தான்னு சொன்னத கேட்டா வினித் சைட்தான்றது நல்லாவே தெரியுது… கண்டிப்பா வினித்தும் ஹசனும் இதுல கூட்டு தான்… இவனுங்க பண்றத பாத்தா ரொம்ப நாளா ப்ளான் பண்ணிற்கானுங்க…. கரக்ட்டா உனக்கு மாப்ள பாக்க ஆரம்பிச்சதும் அத அவங்களுக்கு சாதகமா யூஸ் பண்ணி அங்கிள நல்லா ஏமாத்தி நம்ப வச்சுருக்கானுங்க… ஹசன் உனக்கு வேணாம் மீரா…. அங்கிள் நீ சொன்னாலும் நா சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாரு… இப்ப அவரு வருவாரு அப்ப நா சொல்ற மாறி செய்…” என்று அவளிடம் ஒன்று கூறினான். 

 

        அமீரா அதைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சத்தில் உணர்வுகளற்று உறைந்து நிற்க, அவளை அந்நிலையில் கண்ட தேன்மலர் தன் கோபம் விடுத்து “மீரா…” என்று அவள் தோள் மீது கைவைக்க, அமீரா அவளைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

 

        தேன்மலர் அவளது முதுகைத் தடிவி ஆறுதல் கூற, அமீரா “ஏன் மலர்… இத்தன வருஷம் கழிச்சு…” என்று வலியோடுக் கேட்க, 

 

        தேன்மலர் கண்களில் அனல் தெறிக்க “அடிபட்ட நாய் கடிக்க வரதான் செய்யும் மீரா… அதுக்கு பயந்து நாம ஓடுனா ஓடிட்டே தான் இருக்கணும்…. தைரியமா எதிர்த்து நில்லு மீரா… உன்கூட நாங்க எல்லாரும் இருக்கோம்….” என்று கூற, 

 

      அமீரா உறுதியோடு கண்களைத் துடைத்துக் கொண்டு “தேங்க்ஸ் மலர்…” என்றாள். 

 

                 அப்போது அமீராவின் தந்தையும் அங்கு வந்து சேர, அவர் “ஏன் என்னை வர சொன்ன தேவா…” என்று வேண்டா வெறுப்பாய் தேவாவிடம் கேட்டவர் “அமீ… நீ மாப்ளகூட வெளில போறேன்னு தானே சொன்ன… இங்க இவங்ககூட என்ன பண்ற…” என்று கேட்டார்.

 

       அமீரா “அத்தா… நா அவர்கூட தான் இங்க வந்தேன்…” என்றுவிட்டு அருளை பார்க்க, அருள் “சொல்லு…” என்று கண்களால் கூற, அமீரா தைரியத்தை வரவழைத்து, ஆழமூச்செடுத்து அங்கு நடந்ததைச் கூறி முடித்தாள். 

 

        அதைக் கேட்ட அமீராவின் தந்தை “என்ன அமீ… மாப்ளய பத்தி இப்டிலாம் சொல்ற… அவரு குடிப்பாரு தான்…. ஆனா நீ சொல்ற மாறியில்ல… நா விசாரிச்சதுல அவரு தங்கம் தான்…” என்றவர், அமீராவையும் தேவாவையும் சந்தேகமாகப் பார்த்து “என்ன அமீ… பழச புதுப்பிக்கலான்னு ப்ளான் பண்றீங்களா ரெண்டு பேரும்… நீ சொல்றத நா நம்ப மாட்டேன்… எதாவது ரெண்டு பேரும் சேந்து தில்லு முல்லு வேல பண்ணீங்க…” என்று உறுமினார். 

 

        அதைக் கேட்டு மற்ற அனைவருக்குமே கோபம் வர, அமீராவோ கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் நின்றுக் கொண்டிருந்தாள். 

 

        தேவா “அங்கிள்…. இங்க யாரும் எந்த ப்ளானும் பண்ணல…. பழசு இருந்தாதானே புதுப்பிக்க முடியும்… அத தான் நீங்க என்னிக்கோ தீ வச்சு கொளுத்திட்டீங்களே… இப்ப சாம்பல் கூடயில்ல… மலர் இங்க வா…” என்றழைக்க, தேன்மலர் அவனருகில் வந்து நிற்க, அவளைத் தோளோடு சேர்த்தணைத்தவன் “நல்லா பாத்துக்கோங்க அங்கிள்… இவ தான் நா கட்டிக்க போறவ… இவ அப்பா யூஎஸ் லேர்ந்து வந்ததும் எங்களுக்கு கல்யாணம்… ஸோ நீங்க நினைக்கிற மாறி இங்க யாரும் எந்த ப்ளானும் போடல… அதுக்கு அவசியமுமில்ல… உங்க பொண்ண நம்புங்க மொதல்ல… அவ உங்க சொல்ல என்னிக்கும் மீற மாட்டா…” என்றான். 

 

                அமீரா தேவாவையும் தேன்மலரையும் ஜோடியாய் கண்டு விழிகளில் மெய்யான மகிழ்ச்சி மின்ன நின்றிருந்தாள். அமீராவின் தந்தைக்கு அவனதுப் பேச்சில் நம்பிக்கை வந்தாலும், குழப்பமாகவே நின்றிருக்க, அமீரா “அத்தா… உங்களுக்கு நம்பிக்க வரலல… இருங்க…” என்றுவிட்டு கைப்பேசியிலிருந்து ஹசனிற்கு அழைத்தாள். 

 

       ஹசன் அழைப்பை ஏற்க, “அமீரா எங்கயிருக்கீங்க…” என்று கேட்டாள். 

 

       அதற்கு அவன் “நா இன்னும் வினித்தோட தான் இருக்கேன் அமீ… நீ தான் பாதிலயே கெளம்பி போய்ட்ட…. நீ எங்கயிருக்க….” என்று கேட்க, 

 

      அமீரா “நா வீட்டுக்கு வந்துட்டேன்… இனி என்ன இந்த மாறி எடத்துக்கலாம் கூப்டாதீங்க ஹசன்… எனக்கு புடிக்கல…” என்றாள். 

 

       ஹசன் “ஹேய் அமீ… நாந்தான் சொன்னேன்ல ஸ்டார்ட்டிங்ல அப்டிதான் இருக்கும்… அப்றம் உனக்கே பழிகிரும்…” என்றான். 

 

        அமீரா “சரி ஹசன்… ஆனா உங்க ப்ரண்ட பாக்க இனிமேல் என்னை கூப்டாதீங்க… அதெப்டி ஹசன் நீங்க கட்டிக் போற பொண்ண இன்னொருத்தன் கூட டான்ஸ்… சரி அதுவாது பரவால்ல… அவன் கண்ட எடத்துல கை வைக்கிறான் நீங்களும் பாத்துட்டு சும்மா நிக்கிறீங்க… நா கெளம்பறேன்னு வரேன்… நீங்க என்னை சமாதானப் படுத்தாம போன்னு விட்டுட்டீங்க…” என்று கோபமாகக் கேட்டாள். 

 

                  ஹசன் “இங்க பாரு அமீ… வினித்க்கு கேர்ள் ப்ரண்ட்ஸ் ஜாஸ்தி ஸோ அவன் அப்டிதான் பழகுவான்…. ஏன் எனக்கு கூடதான் கேர்ள் ப்ரண்ட்ஸ் இருக்காங்க… அப்றம் டான்ஸ்னா அங்க இங்க கைப்பட தான் செய்யும் இதெல்லாமா பெருசா எடுத்துபப்பாங்க… அப்றம் நீ போறேன்னு சொன்னது உன் விருப்பம் அதுல நா வந்து சமாதானப் படுத்த என்னயிருக்கு… அண்ட் இன்னொரு விஷயம் என் ப்ரண்ட் தான் எனக்கு முக்கியம்…. அவன பத்தி இனி என்ட்ட கம்ப்ளைன்ட் பண்ற வேல வச்சுக்காத…” என்றான். 

 

        அமீரா “அப்டியா.. அப்பன்னா உங்களுக்கும் எனக்கும் ஒத்து வராது.. இந்த கல்யாணம் வேணாம் ஹசன்…” என்று கூற, 

 

        ஹசன் சிரித்து “நீ முடிவெடுத்து ஒன்னுமாகாது பேபி… உங்க அத்தா முடிவெடுக்கனும்… அவர எப்டி சரிகட்டனுனு எனக்கு தெரியும்… ஸோ கல்யாணத்த நிறுத்றத பத்தி கனவுலகூட நினக்காத…. நீ இப்ப கோவமாயிருக்க… நாம அப்றம் பேசுவோம்… அப்பதான் உனக்கு நா சொல்றது புரியும்… பை பேபி… குட் நைட்….” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான். 

 

       அமீரா அவள் தந்தையைப் பார்க்க, அவரோ ஹசன் பேசியதை நம்பவும் முடியாமல் நம்பாமலிருக்கவும் முடியாமல் அதிர்ந்துக் குழம்பி நின்றிருக்க, அமீரா அவரைத் தீர்க்கமாகப் பார்த்து “அத்தா இப்ப நம்புறீங்களா….” என்று கேட்டாள். 

 

                  அவர் குழப்பம் தெளியாமல் “நாம இப்ப வீட்டுக்கு போகலாம்… அவன பத்தி இன்னும் விசாரிக்கனும்…” என்றுவிட்டு அவர் முன் செல்ல, தேவா, தேன்மலர், அருள், செந்தில் நால்வரும் இப்போதைக்கு அவரை அவர் போக்கிலே விட்டு பிடிப்போம் என்றும் தாங்கள் அவளுடன் இருப்பதாகவும் அமீராவிற்கு தைரியம் கூறி அவளைச் செல்லச் சொல்ல, அமீரா சரியென்று கிளம்பினாள். 

 

     அமீரா செல்லும் முன் அருளை தவிப்பும் சொல்லொனா உணர்வுடனும் பார்க்க, அருள் புன்னகையோடு இமைமூடித் திறக்கவும் அவள் சிறு புன்னகையோடு தன் தந்தையோடுச் சென்று இணைந்துக் கொண்டாள். இதை மற்ற மூவரும் கவனித்தாலும் அமைதியாக ஏதும் அறியாதது போல் நின்று கொண்டனர். 

 

        அமீராவும் அவளது தந்தையும் கிளம்பிச் சென்றதும், தேவா “மாமா… அவனுங்க யாரு…” என்று கேட்க, அதேநேரம் ஹசனும் வினித்தும் பார்க்கிங் இடத்திற்கு வரவும் அருள் அவர்கள் இருவரையும் தேவாவிற்கும் மற்ற இருவருக்கும் அடையாளம் காட்டினான். 

 

        வினித்தை கண்ட தேவா அதிர்ந்து “இவனா…” என்க, 

 

     தேன்மலர் கேள்வியாய்ப் பார்த்து “ஏன் தேவா இவன உங்களுக்கு தெரியுமா…” என்று கேட்க, அப்போது அவ்விருவரும் இவர்களை கடக்க, அனைவரும் அமைதியாக நின்றனர். 

 

                அவ்விருவரும் இவர்களைக் கடந்து அவரவர் காரில் புறப்பட்டுச் செல்லவும் தேவா “வினித்… நாராயணசாமியோட ரெண்டாவது மகன்….” என்று கூறவும் தேன்மலர், அருள், செந்தில் மூவருமே அதிர்ந்தனர். 

 

       செந்தில் “அவனா… இந்த வினித்… நேர்ல இப்ப தான் பாக்றேன்… அய்யோ இவன் அவன் அப்பனவிட ரொம்ப மோசமானவனாச்சே….” என்று கூற, 

 

     தேவா “அவன் புள்ள அப்டியில்லனாதான் ஆச்சர்யம் மச்சான்…” என்றான். 

 

        அருளும் தேன்மலரும் அமைதியாக சிந்தனையில் ஆழ்ந்து பின் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, அவர்களது விழிகள் பரிமாறிக் கொண்ட செய்தியில் இருவரது இதழ்களுமே புன்னகைச் சூடி நின்றது.

 

         தேவாவும் செந்திலும் அவ்விருவரின் புன்னகைக் கண்டு “என்ன ரெண்டு பேரும் ஏதோ ப்ளான் போட்டீங்க போல…” என்று கேட்க, அருளும் தேன்மலரும் அர்த்தமாகப் புன்னகைத்தனர். 

 

      பின் நால்வரும் கிளம்பி வீட்டிற்கு வர, தேன்மலரும் அருளும் தங்களதுத் திட்டத்தைக் கூற, தேவாவும் செந்திலும் யோசனையில் ஆழ்ந்தனர். 

 

       செந்தில் அருளிடம் “மாமா… ப்ளான் நல்லாதான் இருக்கு… ஆனா அத எக்ஸிக்யூட் பண்ணனுனா அமீரா பேம்லி கிட்ட தேன்மலர் பத்தி, நாராயணசாமி பத்திலாம் சொல்ல வேண்டி வருமே…” என்றான்.

 

                    அருள் மர்ம புன்னகைப் புரிந்து “சொல்ல வேண்டி வரும் தான்… ஆனா எல்லார்க்கிட்டயும் இல்ல… அமீராகிட்ட மட்டும் சொன்னா போதும்… அவ அவங்க அப்பா அம்மாவ சமாளிச்சுப்பா…” என்றான். 

 

        தேவா அர்த்தப் புன்னகையுடன் “ம்ம் சரிதான்… ஆனா இதுல அமீரா எடுக்கப் போற ரிஸ்க்க நினச்சா தான் கொஞ்சம் கவலயா இருக்கு…” என்றான். 

 

       தேன்மலர் “தேவா… ஏன் கவலபட்றீங்க…. இந்த ரிஸ்க்குகப்றம் மீராவுக்கு இன்னும் தைரியம் அதிகமாகும்… மீராவ அதுக்கு தயார் பண்ண வேண்டியது என் பொறுப்பு… மீரா கிட்ட யாரும் பேச வேண்டாம் நானே பேசறேன்…” என்றாள். 

 

      மற்றவர்களுக்கும் அது சரியெனப்படவே திட்டத்தை எவ்வாறு பிசிறில்லாமல் கச்சிதமாகச் செய்து முடிப்பதென்று ஆலோசித்தனர். 

 

       அனைத்தும் பேசி முடித்தப் பின் அருள் “ஹனிமலர் நாளைக்கு பெங்களூர் போகனும்ல… நீயும் மாப்ளயும் மட்டும் போய்ட்டு வாங்க… நீங்க வர்றதுக்குள்ள நானும் செந்திலும் இங்க செஞ்சு முடிக்க வேண்டியத செஞ்சு முடிக்றோம்… அந்த வினித்க்கு நானும் சிலது குடுக்கனும்…” என்று தீவிரமானத் தோரணையோடு முகம் இறுகி எங்கோ வெறித்தபடிக் கூறினான்.

 

       அவனின் நிலைக் கண்ட தேன்மலர் அர்த்தப் புன்னகையோடு தேவாவை காண, தேவாவும் அவளைப் பார்த்து அர்த்தமாக சிரித்து விழியால் தன்னவளுடன் காதல் கதைப்பில் இறங்க, அவனவளும் தன்னவனின் விழி மொழிப் புரிந்துத் கனிமொழி விடுத்து அலர் விழியால் தகுந்தப் பதிலுரைத்துக் கொண்டிருந்தாள். 

 

                  செந்தில் தான் அருளின் கோபம் கண்டு சிந்தனையில் உழன்று, பின் அவனிடமே கேட்கலாமென்று அவனை அழைக்க, அவனோ எங்கோ நிலைக் குத்தியப் பார்வையோடு உடல் விரைக்க நின்றிருந்தான். செந்தில் அவனை அழைத்து அலுத்துப் போய் தேவாவை பார்க்க, தேவா அவனை நமட்டுச் சிரிப்போடுப் பார்த்திருப்பதுக் கண்டு, அவனது மண்டையில் விளக்கொன்று சுடர்விட, கண்களால் அப்படியா என்று கேட்க, தேவாவும் ஆமென்று தலையசைக்கவும் அருள் சிறு சிரிப்போடு தன் ஆருயிர் நண்பனைப் பார்த்திருந்தான்.

 

        மறுநாள் காலையில் தேன்மலர் மட்டும் அமீரா வீட்டிற்குச் செல்ல, அமீராவின் தந்தை அவளை ஒருப் பார்வை மட்டும் பார்த்துவிட்டு அமீரா அறையை அவளுக்குக் காட்டினார். தேன்மலர் அறைக்குள் நுழைய, முகம் நிறையப் புன்னகையோடு அவளை வரவேற்ற அமீரா, அவளைத் தன்னருகில் இருத்திக் கொண்டாள். அமீராவின் தாய் இருவருக்கும் காபி கொடுத்துவிட்டு தேன்மலரிடம் ஓரிரு வார்த்தைப் பேசிவிட்டு தேவாவும் அவளும் திருமணம் செய்துக் கொள்ளப் போகும் விடயம் கேள்விப்பட்டு மகிழ்ந்ததாகக் கூறி தேவாவை நன்றாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு தன் வேலையைக் கவனிக்கச் சென்றார்.

 

                     அமீராவின் தந்தை ஹசனை பற்றி இன்னும் அவரிடம் தெரிவிக்காததால் அவர் சாதாரணமாகவே வலம் வந்தார். 

 

       அமீரா தேன்மலரின் வருகைப் பற்றி வினவ, எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கிய தேன்மலர் அமீராவின் “மலர்… என்கிட்ட என்ன தயக்கம்… எதாயிருந்தாலும் சொல்லு…” என்றப் பேச்சில் பெருமூச்செடுத்து தன்னைப் பற்றியும் தன்னை சூழ்ந்துள்ள ஆபத்துப் பற்றியும் கூறியவள் நாராயணசாமி பற்றி கூறி, அம்முவின் இறப்பும் அதன்பின் தேவா மேற்கொண்ட முயற்சிகளும் கூறி, தங்களது திட்டத்தையும் கூறி அதற்கு அவள் உதவுமாறுக் கேட்டாள். 

 

        தேன்மலர் கூறியதைக் கேட்ட அமீராவிற்கு அதிர்ச்சியைக் காட்டிலும் எப்படி இவ்வளவு பிரச்சனைகளையும் தேன்மலரும் சரி தேவாவும் சரி கலங்காமல் தைரியமாக எதிர்க்கொள்கின்றனர் என்ற ஆச்சர்யமே மேலோங்க, விழி விரித்து அவளது முகத்தையேப் பார்த்திருந்தாள்‌. 

 

       தேன்மலர் அவளை உலுக்கவும், அவளை சில நிமிடங்கள் இறுக அணைத்து விடுவித்த அமீரா “நா ரெடி மலர்… எப்போன்னு சொல்லு…” என்று கூறவும் 

 

        தேன்மலர் புன்னகைத்து “நீ வீட்ல அப்பா அம்மாட்ட என்னை பத்தி எதுவும் சொல்லாம ஹசன பத்தி ப்ரூவ் பண்ணனு மட்டும் சொல்லி என் மாமியார் வீட்டுக்கு கூட்டிட்டு வா… அப்றம் நம்ம ப்ளான் படி எல்லாம் நடக்கும்…” என்று கூற, அமீரா சரியென்றாள். 

 

                        பின் தேன்மலர் அமீராவிடம் விடைபெற்று வந்து தேவா மற்றும் அருளிடம் அமீரா சம்மதம் தெரிவித்ததைக் கூற, இருவருமே மகிழ்ந்தனர். செந்திலுக்கும் அழைத்து விடயம் கூறிவிட்டு மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கச் சொல்லிவிட்டு தேவாவும் தேன்மலரும் கிளம்பி பெங்களூர் செல்ல, அருள் அமீராவிற்கு அழைத்து மேலும் சில விடயங்கள் கூறினான். 

 

         இருள் கவிழும் வேளை தேவாவும் தேன்மலரும் பெங்களூர் வீட்டை அடைந்தனர். வீட்டைத் திறந்து உள்ளேச் செல்ல, வீடே பொருட்கள் அனைத்தும் சிதறி ரணகளமாகக் காட்சியளித்தது. அதிலேயே ஆர்யன் ஆட்களை வைத்து வீட்டைச் சோதனையிட்டு இருக்கிறானென்று புரிந்துக் கொண்ட தேவாவும் தேன்மலரும் புன்னகையோடு உள்ளேச் சென்றவர்கள், தாங்கள் வாங்கி வந்திருந்த உணவை உண்டுவிட்டு பயணக் களைப்பில் உறங்கிவிட்டனர். மறுநாள் காலை தேவாவும் தேன்மலரும் காலை உணவை முடித்துக் கொண்டு வீட்டை ஒழுங்குச் செய்துக் கொண்டே தாங்கள் வந்த நோக்கமானத் தேடலில் ஈடுபட, அதே நேரம் தேவா வீட்டிலிருந்து அமீரா தன் கைப்பேசி மூலம் ஹசனுக்கு அழைத்தாள்.

 

அத்தியாயம்- 27

 

 

         தேவாவும் தேன்மலரும் உடைந்தவற்றை அப்புறப்படுத்தி மற்றவற்றை அதற்குரிய இடங்களில் வைத்துக் கொண்டே பென்ட்ரைவ் போல ஏதேனும் தென்படுகிறதா என்று கவனமாகத் தேடினர். ஆனால் பாதி வீட்டை சுத்தம் செய்தும் அவர்களுக்கு எதுவுமே கிடைக்காமல் போக, தேன்மலர் சோர்ந்துப் போய்க் கலக்கமாக அமர்ந்துவிட்டாள். 

 

       தன்னவளின் கலக்கம் போக்க அவளருகில் அமர்ந்துக் கைக்கோர்த்து “மலர் மா… இதுக்கே கலங்குனா எப்டி… நாம அன்னிக்கு பேசுனப் பேச்சுக்கு ஆர்யனும் ரகுவும் செம காண்ட்ல இருப்பானுங்க… அவனுங்கள சமாளிக்கனும்…. அதோட மாமா பத்தின வீடியோ வேற இருக்கு… அத வேற டெலிட் பண்ணனும்… நீ இப்டி உக்காந்துட்டா மாமாவோட லட்சியம் கனவு, இத்தன வருஷ உழைப்பு, சம்பாரிச்ச பேரு, புகழ் எல்லாம் வீணா போய்டும் மலர் மா… அந்த வீணாப் போனவனுங்களால மாமாவோட பேருக்கு கலங்கம் வந்தா பரவால்லயா உனக்கு… மாமா உன் மேல வச்ச நம்பிக்கய, மாமாவுக்கு நீங்க முடிக்கனுனு நினச்சத நா முடிப்பேன்னு சொன்ன வாக்கை நீ காப்பத்துனுமா இல்லயா… அதனால நம்பிக்கய விட்றாம தேடு… கெடைச்சாலும் கெடைக்கலனாலும் பாத்துக்கலாம் நா உன்கூட இருக்கேன்….” என்றான் தேவா. 

 

      அவனவள் அவனையே விழி அகலாமல் பார்த்திருந்தாள். தன் கலக்கம் தீர்த்தத் தன்னவன் மீது காதல் பிரவாகமாய்ப் பொங்கி விழி நீராய் வெளி வர, இதழ் விரித்து தன்னவனை இறுக அணைத்து அவன் மார்பில் முகம் புதைத்தவள் “இவ்ளோ நாளா ஏன் தேவா நா உங்கள பாக்கல….” என்றாள்.

 

               அவளவனோ அவளது வினாவில் நெஞ்சம் நெகிழ, அதரங்கள் புன்னகை சிந்த, தன்னவளை இறுக அணைத்தவன் நாடிப் பிடித்து தன்னவளின் முகம் நிமிர்த்த, அவளது விழிகள் சிந்தும் உவர் நீரில் அவளின் காதலின் ஆழத்தை உணர்ந்து, விழியில் காதல் தேக்கி, தன்னவளின் விழியோடு விழிக் கோர்த்தான். அவனது விழியில் தெரிந்த காதலெனும் ஆழியில் மூழ்கித் திளைத்து தன்னைத் தொலைத்து அவனுள் கரைந்தாள். அவளவனோ அவளின் விழியில் முழுதுமாய்த் தன்னை மறந்தான். அவளும் தானும் வேறல்ல என்ற எண்ணம் ஆழமாய் மனதில் வேர்விட, காதல் வழிந்தோடும் அவளது விழிகளில் மென்மையாய் இதழொற்றி எடுத்தான். 

 

      “ம்ம்… நா இங்க தான் இருந்தேன்…. நீ வர தான் லேட்டாயிடுச்சு…” என்று கூற, அவனவள் முகத்தில் அப்படி ஒரு புன்னகை. 

 

          தேன்மலர் தன்னவனை மேலும் இறுக்கி அணைத்துக் கொள்ள, அந்த அணைப்பில் உருகிய தேவா தன்னிதழால் அவளது செவிமடல் தீண்டி, கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் சட்டென்று அவளை விலக்கினான். அவனது விலகல் அவனவளுக்குக் குழப்பத்தைத் தர, தன்னவனை குழப்பமும் கேள்வியுமாய்க் கண்டவள் அவளவன் தலைக்கோதி அவளைக் காணாது விழி மூடி ஆழமூச்செடுத்து அலைப்புறுவதுக் கண்டு வெட்கம் மேலேறி சங்கடமாக “சரி தேவா நாம வேலய பாப்போம்…” என்றாள். 

 

        அவளைப் பார்த்து தேவா புன்னகைக்க, அவளும் புன்னகைத்து “சாரி தேவா… நா… ஏதோ…” என்று திணற, 

 

      தேவா அவளை நெருங்கி உச்சியில் இதழ் பதித்து “ஒன்னுமில்ல மலர் மா… வா நாம வேலய பாக்கலாம்…” என்று அவளதுக் கைப் பிடிக்க, தேன்மலர் புன்னகைத்த வண்ணம் அவனோடுச் சேர்ந்து ஏதேனும் கிடைத்து விடாதா என்ற எதிர்ப்பார்ப்பில் தேட ஆரம்பித்தாள். 

 

 சென்னையில்… 

           அமீரா ஹசனுக்கு அழைத்து அவனையும் வினித்தையும் முக்கியமாகப் பேச வேண்டுமென்று கூறி தேவாவின் வீட்டு விலாசத்தைக் கொடுத்துவிட்டு அவர்களது வருகைக்காக தேவாவின் இல்லத்தில் காத்திருந்தாள். ஒருமணி நேரத்தில் இருவரும் அங்கு வந்து சேர, இருவரையும் கூடத்தில் அமர வைத்து அவர்களுக்கு நீர் கொடுத்துவிட்டு தானும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள். நேரம் மௌனமாய்க் கரைய, வினித்தின் விழிகளோ வந்ததிலிருந்து அவளது அங்கமெங்கும் ஊர்வலம் சென்றுக் கொண்டிருக்க, ஹசனோ கையைப் பிசைந்துக் கொண்டு அமர்ந்திருக்கும் அவளது முகத்தையே வெறித்திருந்தான். ஹசன் எரிச்சலாக “என்ன அமீ… வரசொல்லிட்டு கைய பிசைஞ்சுட்ருக்க…” என்றான். 

 

            வந்ததிலிருந்து வினித்தின் பார்வையில் ஏகக் கோபத்திலிருந்த அமீரா, எங்கே வாயைத் திறந்துத் தேவையற்றதைப் பேசித் திட்டத்தைக் கெடுத்து விடுவோமோ என்ற அச்சத்தில் தன் கோபம் குறைக்கப் பேசாமல் அமர்ந்திருந்தவள் ஹசனின் பேச்சில் ஆழமூச்செடுத்து “ஹசன்… நா இப்போ சிலது கேக்க போறேன்… அதுக்கு பதிலா உண்மை மட்டும் தான் வேணும்…. ஏன்னா இந்த கல்யாணத்துல உங்க வாழ்க்க மட்டுமில்ல… என் வாழ்க்கயுமிருக்கு… ஸோ என் வாழ்க்க எப்டியிருக்கப் போகுதுன்னு நா தெரிஞ்சுக்கணும்…” என்றாள். ஹசன் வினித்தை பார்க்க, இருவரது விழிகளும் என்ன பகர்ந்ததோ இருவரது இதழ்களிலும் ஏளனப் புன்னகை இழையோடியது. அதேப் புன்னகையுடன் ஹசன் “ம்ம்… கேளு…” என்றான். 

 

       உள்ளுக்குள் ஆத்திரம் மூண்டாலும் அமைதியாகவே “உங்களுக்கு நிஜமாவே என்ன புடிச்சு தான் கல்யாணத்துக்கு ஓகே சொன்னீங்களா… இல்ல யாராவது கட்டாயப் படுத்துனதுனால சொன்னீங்களா…” என்று வினித்தையும் ஒருப் பார்வைப் பார்த்துக் கேட்டாள். 

 

            ஹசன் “ஹ்ம்ம்… அதுக்கு முன்னாடி இது யார் வீடு… இங்க ஏன் வர சொன்னனு சொல்லு…” என்றான். 

 

       “இது என் ப்ரண்ட் வீடு… நா உங்ககூட பேசணும்… கல்யாணத்துக்கு முன்னாடி சில விஷயம் க்ளியர் பண்ணிக்கனும்… வீட்ல அம்மா இருப்பாங்க… வெளில பேசுறது சரி வராது… அதான் இங்க வர சொன்னேன்… அப்றம் உங்க ப்ரண்ட்டையும் ஏன் வர சொன்னேன்னு கேக்காதீங்க… அது ஏன்னு நேத்து நமக்குள்ள நடந்த விவாதத்துலயே புரிஞ்சுருந்துருப்பீங்க… சரி நா கேட்டதுக்கு பதில் சொல்லுங்க…” என்றாள். 

 

      ஹசன் “ம்ம்… ப்ரண்ட் வீடா… உன்னோட பர்ஸ்ட் லவ்வோட வீடுன்னு சொல்லு…” என்று கூற, 

 

         அமீரா கோணல் சிரிப்போடு “பர்ஸ்ட் லவ் உணரும் முன்னாடி, சொல்லும் முன்னாடியே செத்துப் போனது… உங்களுக்கு தேவா பத்தி தெரிஞ்சதுல ஆச்சர்யம் ஒன்னுமில்ல… ஏன்னா உங்ககூட இருக்றவங்க அப்டி… ஸோ தேவயில்லாத வெட்டி பேச்சு பேசாம ஸ்ட்ரைட்டா பதில் சொல்லுங்க…” என்றாள்.

 

        வினித் ஒரு புருவம் உயர்த்தி “ம்ம்… பரவால்ல… நாங்க நினச்ச அளவு முட்டாள் இல்ல நீ…” என்றான். 

 

           அமீரா அவன் பேசியதை சட்டை செய்யாது ஹசனை மட்டும் தீர்க்கமாகப் பார்த்திருக்க, ஹசன் “ஆல்ரைட்… நா ஒரு பொண்ண லவ் பண்ணும்போது உன்னை எப்டி புடிச்சு கல்யாணத்துக்கு ஓகே சொல்வேன்…” என்று அமீராவை பார்க்க, அவள் முகம் எவ்வுணர்வுமின்றி அமைதியாய்ப் பளிங்காய் இருப்பதுக் கண்டு எரிச்சலுற்றான். பின் புன்னகைத்து “எங்க வீட்ல எங்க லவ்க்கு ஒத்துக்கல… உன் போட்டோ காமிச்சு உன்னை தான் கல்யாணம் பண்ணனும்னு கம்பல் பண்ணாங்க… நா வினித்ட்ட உன் போட்டோ காமிச்சு இஷ்டமில்லன்னு சொன்னேன்… அவன் உனக்கு இஷ்டமில்லன்னா என்ன எனக்கு ரொம்ப இஷ்டம் அதோட அவளுக்கும் எனக்கும் தீக்க வேண்டிய கணக்கிருக்குன்னான்…. ஸோ அவன் ஒரு ப்ளான் சொன்னான் அது அவனுக்கும் உன்னை பழி தீத்துகிட்ட மாறி ஆச்சு எனக்கும் என் லவ்ரோட சேந்த மாறியும் ஆச்சுன்னு… உன்னை கட்டிக்க சரின்னு சொல்லிட்டேன்….” என்றான். 

 

          அப்போதும் அமீரா அமைதியாய் “என்ன ப்ளான்னு நா தெரிஞ்சுக்கலாமா…” என்று வினவினாள். 

 

             வினித் சிரித்து “அத ஏன் பேபி அவன்கிட்ட கேக்ற… நா சொல்றேன்… உன்னை கல்யாணம் பண்ணி பாரின் கூட்டிட்டு போற மாறி ரெண்டு வீட்லயும் நம்ப வச்சு… உன்னை என்கிட்ட விட்டுட்டு அவன் அவன் லவ்வர கட்டிக்கிட்டு பாரின் போய் செட்டிலாயிடுவான்… நீ என்கிட்ட வாழ்நாள் பூரா அடிமையாயிருப்ப… இதுவரைக்கும் என் வீட்ல கூட யாரும் என்னை அடிச்சதில்ல… ஆனா நீ… அன்னிக்கு நீ அடிச்சது இன்னும் என் ஞாபகத்துல உறுத்திட்டேயிருந்துச்சு… அத மறக்க அஞ்சு வருஷம் ஊர் பக்கம் வராம பாரின்லயே அனாத மாறி இருந்தேன்… நாளுக்கு நாள் கோபத்த அடக்கறத விட அத உன்மேல் இறக்குனா என்னுன்னு தோனுச்சு… திரும்ப சென்னை வந்தேன்… அப்பதான் ஹசன் உன் போட்டோ காமிச்சான்… சரின்னு உன்னை பழி வாங்குற சான்ஸ் தானா தேடி வரும்போது ஏன் மிஸ் பண்ணனும்னு யூஸ் பண்ணிக்கிட்டேன்…” என்று கூறி அவளைக் கொடூரமாக முறைத்தான். 

 

           அமீரா அவனைத் தீர்க்கமாகப் பார்க்க, “ஏன்டா என்னை அறைஞ்சோம்னு.. நீ சாகுற வர தினம் தினம் நொந்து சாகனும்டி… எத பேசுனேன்னு அன்னிக்கு நீ என்னை அடிச்சியோ… அத டெய்லி உன்கிட்ட அனுபவிப்பேன்… நீ குடுத்த அரைய தினம் தினம் உனக்கு குடுக்கனும்… நா பண்ற சித்ரவதைல ப்ளீஸ் என்னை கொன்னுடுன்னு என் கால புடிச்சுக் கெஞ்சி நீ அழணும்…. அப்போ தான் என் கோவம் தீரும்… உன்னால என்கிட்டேருந்து தப்பிக்கவே முடியாது…” என்றுவிட்டு இடிஇடியென சிரிக்க, ஹசனும் ஏளனப் புன்னகையோடு அவளைப் பார்த்திருந்தான். 

 

        நிமிர்வோடு மிடுக்கானப் புன்னகை உதிர்த்த அமீரா தெளிவாகக் கம்பீரமாக “இதுதான் நீங்க ரெண்டு பேரும் மனசாற சிரிக்ற கடைசி சிரிப்பு… ஸோ நல்லா சிரிச்சுக்கோங்க… நா தினம் தினம் நொந்து சாவனா… நீங்க தான்டா சாகப்போறீங்க…” என்றுவிட்டு அடங்காக் கோபத்தோடு அரக்கனை வதம் செய்யும் பத்ரகாளியாய் நின்றிருந்தாள். 

 

             வினித்தும் ஹசனும் சிரிப்பதை நிறுத்தி “என்னடி ஒளர்ற…” என்று கேட்க, 

 

      “ஒளர்றனா… நானா… ஏன்டா… நேத்து கோவமா பேசிட்டு இன்னிக்கு ஃபோன் பண்ணி பேசணும் கெளம்பி வா அதுவும் உன் ப்ரண்டயும் கூட கூட்டிட்டு ஏதோ ஒரு அட்ரஸ குடுத்து வான்னு ஒருத்தி கூப்ட்றாளே… ஏன் எதுக்குன்னு யோசிக்காம இப்டிதான் வந்துருவீங்களா… நீங்க இவ்ளோ தத்தியா இருப்பீங்கன்னு நினக்கலடா…” என்றாள். 

 

        அதைக் கேட்ட வினித் பல்லைக் கடித்து “என்னடி சொல்ற…” என்று கேட்க, 

 

         சத்தமிடாமல் ஷோக்கேஸின் பின்னே மறைந்திருந்த அருள் “அத நா சொல்றேன் பங்காளி…” என்று வெளி வர, அம்முவின் அறையைத் திறந்துக் கொண்டு செந்திலும் வர, அடுக்களையிலிருந்து அமீராவின் அப்பாவும் அம்மாவும் வெளி வர, வினித்தும் ஹசனும் அதிர்ந்து உறைந்தனர். அவர்களது அதிர்ச்சியைப் பயன்படுத்திய அருளும் செந்திலும் இருவரது கைகளையும் பின்னால் வளைத்துக் கயிற்றால் பிணைத்து ஃஸோபாவில் தள்ளினர். 

 

            ஆத்திரமும் அழுகையுமாய் நின்றிருந்த அமீராவின் அன்னை வேகமாக வந்து ஹசன் கன்னத்தில் மாறி மாறி அறைந்து “ஏன்டா நல்லவன் மாறி நடிச்சு என் பொண்ணு வாழ்க்கய கெடுக்க பாத்தியே… பாவி… உன்னை போய் இந்த மனுஷன் நல்லவன்னு நம்பி என் பொண்ண கட்டிக் குடுக்க நினச்சாரே….” என்று அமீராவின் தந்தையையும் திட்டி அவனை ஆத்திரம் தீர அடித்தார். 

 

        பின் வினித்தை அடித்து “என் பொண்ண சித்ரவதை பண்ணுவியா நீ…” என்று கோபமாகக் கேட்டவர், அழுதுக் கொண்டே “ஏன்டா இப்டியிருக்கீங்க…. நாங்க பொத்தி பொத்தி பொண்ண வளத்து உலகம் தெரியட்டும் தைரியம் வரட்டும்னு படிக்க, வேலைக்குன்னு அனுப்புனா… அங்க உங்கள மாறி பசங்க அவங்கள தைரியமா வரவிடாம கூட்டுக்குள்ளயே சுருக்கீர்றீங்களே டா…. இல்ல என் மக மாறி எதித்து நின்னா ஆசிட் அடிக்றது, இப்டி பழி வாங்றதுன்னு அவங்கள நிம்மதியா வாழ விடாம பண்ணுவீங்களா… உன் வீட்டு பொம்பளைங்க தான் உங்களுக்கெல்லாம் மனுஷியா தெரிவாங்களா… மத்தவங்கெல்லாம் உங்களுக்கு உங்க ஆசைய தீத்துக்ற போகப் பொருளாதான் தெரிவாங்களா… அதெப்டிடா கூச்சமேயில்லாம யாரு என்னனுன்னு தெரியாத பொண்ணுகிட்ட அசிங்கமா பேச தோனுது படுக்கக் கூப்ட தோனுது… செத்தா புழுபுழுத்து நாறிப் போற உடம்புடா இது… அது மேல உங்களுக்கு ஏன்டா அவ்ளோ மோகம் அவ்ளோ வெறி…. அஞ்சு மாச குழந்தைலேர்ந்து எழுவது வயசு பாட்டி வரைக்கும் உங்க வக்ரத்த காட்றீங்க… அஞ்சு மாச குழந்தயகூட எப்டிறா உங்களால அப்டி பாக்க தோனுது… ச்சீ… மிருகங்கக்கூட தான் துணைய தவிர வேற ஒன்ன நாடாது… ஆனா நீங்க… உங்களால உங்கள பெத்தவளும் சேந்து அசிங்கபட்றா… சாபம் வாங்குறா… அதென்னடா பொண்ணுங்கன்னா அவ்ளோ இளக்காரம் உங்களுக்கு… உங்கள சொல்லி என்ன பண்ண… இந்த சமூகம் பொண்ணுன்னா இப்டி தான் இருக்கணும்னு ஆயிரம் வரைமுறைகள வகுத்து வச்சுருக்கு… பசங்க பொண்ணுங்கள எப்டி பாக்கணும் அவங்ககிட்ட எப்டி நடந்துக்கணுனு சொல்லி தருதா…. இப்போ பொண்ண பெத்தவள விட பையன பெத்தவ தான் பொறுப்போட இருக்கணும்… இங்க ஒருத்தன திட்றத்துக்குகூட ஒரு பொண்ண அசிங்கபடுத்தற சொல் தானே தேவப்படுது…” என்றவர் ஹசனிடம் “உன்னை பெத்தவ என்கிட்ட அப்பவே சொன்னா டா… நீ யாரையோ லவ் பண்ற அங்க தான் ஒத்து வராதுன்னு என் பொண்ண பேசி முடிச்சதா… நீயும் என் பொண்ணு கிட்ட நல்லா பேசி பழகவும் பையன் அந்த பொண்ண மறந்துட்டான்னு நினச்சு நானும் இது சகஜம் தானேன்னு அசால்ட்டா இருந்துட்டேன்… அப்பவே இத அமீ அப்பா காதுல போட்ருந்தா என் பொண்ணு வாழ்க்க இப்டி அயிருக்காதே… தப்பு பண்ணிட்டேனே… அமீ அப்பா என்ன மன்னிச்சுருங்க… நம்ம பொண்ணு வாழ்க்கய ஒரு கெட்டவன் கைல குடுக்க நினச்சேனே…” என்று அழுதார்.

 

           அமீராவிற்கும் அவளின் அப்பாவிற்கும் இந்த செய்தி அதிர்ச்சியே… அமீராவின் தந்தை “விடு மா இப்ப புலம்பி என்ன பண்ண… இதுல உன் தப்பு என்னயிருக்கு… நாந்தானே இவன பத்தி விசாரிச்சு கட்னா நம்ம பொண்ணுக்கு இவனதான் கட்டணும்னு அடம்பிடிச்சேன்… அமீ ஆசைய குழி தோண்டி பொதச்ச பாவத்துக்கு இப்போ அனுபவிக்கிறேன்… அமீ அத்தாவ மன்னிச்சுருடா…” என்று அமீராவின் கைகள் பற்றிக் கண் கலங்கினார்.

 

          “அத்தா… பழச பேசி பிரியோஜனமில்ல… அத நா மறந்து ரொம்ப நாளாச்சு… இப்போ தேவாவுக்கும் ஒரு வாழ்க்க ஆரம்பிக்க போற நேரத்துல இத பத்தி பேசுறது நல்லாயில்ல…. உங்க மேல என்ன தப்பு… நா நல்லார்க்கனும்னு நினச்சு தானே எல்லாம் பண்ணீங்க… இத பத்தி நாம அப்றம் பேசலாம்… இப்போ இவனுங்கள கவனிப்போம்…” என்ற அமீரா வினித் மற்றும் ஹசனை தீயாய் முறைத்து நிற்க, அவளின் தந்தையும் அவர்களை எரிக்கும் பார்வைப் பார்த்தார். 

 

            தன் கோபத்தை அறைகளாக வினித்திடமும் ஹசனிடமும் இறக்கிய அமீராவின் அப்பா, அருளிடம் “தம்பி ரொம்ப நன்றி பா… கௌரவம் மதத்தவிட என் பொண்ணோட விருப்பமும் அவ வாழ்க்கயும் தான் முக்கியம்னு ரொம்ப லேட்டா புரிஞ்சுகிட்டேன்…. நம்பிக்கயில்லாம அரை மனசாதான் வந்தேன்… ஆனா இப்போ என் மக வாழ்க்க தப்பிச்சதுன்ற சந்தோஷத்தோட திரும்பி போறேன்… இனி நீங்களே இவனுங்கள என்ன பண்ணனுமோ பண்ணிக்கோங்க…” என்றுவிட்டு அழுதுக் கொண்டிருந்த தன் மனைவியை அழைத்துக் கொண்டு தன்னில்லம் சென்று விட்டார். 

 

         அருள் வினித்தை முறைக்க, வினித் “டேய் நா யாருனு தெரியாம என்கிட்ட விளையாட்றீங்க டா… ஏன்டி திமிரு புடிச்சவளே… நைஸா பேசி வரவச்சு அடிக்கவா செய்ற… இவனுங்க இருக்ற தைரியமா உனக்கு… ஆமா யாரு இவனுங்க… யாரா வேணா இருந்துட்டு போட்டும்… என் அப்பாவுக்கு மட்டும் நீங்க பண்றது தெரிஞ்சது எல்லாரும் மொத்தமா காலி டி…” என்று கத்தினான். 

 

            அருள் அவனை ஓங்கி அறைந்து “நேத்தே உன்னை பொளக்குற ஐடியால தான் வந்தேன்… அப்றம் தான் உனக்கு இதெல்லாம் சரி வராதுன்னு வேற ப்ளான் போட்டோம்…. ஆமா யாருன்னு தெரியாதா… டேய் நீ யாருன்னு தெரிஞ்சதால தான்டா தூக்குனோம்…. உங்கப்பனுக்கு எப்புட்றா வலை விரிக்றதுன்னு யோசிச்சுட்ருந்தோம் தெரிஞ்சோ தெரியாமலோ நீயா அமீரா விஷயத்துல மூக்க நுழச்ச… சரி சின்ன மீனை போட்டு பெரிய மீனை புடிக்கலாம்னு உன்னை தூக்கிட்டோம்… அந்த கேடு கெட்டது பெத்தது அதவிட கேடு கெட்டதாயிருக்கு…. நீ லாம் பேசுனா திருந்தற ஜென்மம் கெடையாது…. உனக்குலா புரிய வக்கிற மாறி புரிய விக்கனும்….” என்றான். 

 

         வினித் “என்னடா சொல்ற… டேய் எங்கப்பாவுக்கு இருக்ற செல்வாக்கு பத்தி உனக்குத் தெரியாது… யாருடா நீங்க.. என்னை வச்சு அவர புடிக்றதெல்லாம் நடக்காத காரியம்…” என்று கூற,

 

        “ஆஹான்… அதையும் பாத்துருவோம் உன் அப்பன் செல்வாக்க வச்சு என்ன பண்றான்னு… நாங்க யாரா… அத தெரிஞ்சு நீ என்ன பண்ண போற…. உன்கிட்ட என்னடா வெளக்கெண்ண பேச்சு… செந்திலு…” என்று செந்திலை பார்த்தான். 

 

             செந்திலும் அவன் பங்கிற்கு ஒரு அறை விட்டு மயக்க ஊசியைப் போட்டு விட்டான். 

 

        நடப்பது எதுவும் புரியாமல் பயத்தில் வெளிரி வியர்த்து விறுவிறுத்துப் போயிருந்த ஹசனை வெறித்த அமீரா “ஆமா நீ லவ் பண்ற பொண்ணுக்கு நீ இப்டி தான்னு தெரியுமா…” என்று கேட்க, 

 

        அவன் இல்லையென்று தலையாட்ட, “ம்ம்… தெரிஞ்சா என்னாகும்…” என்று கேட்க, 

 

       ஹசன் தலைக் குனிந்து “தாங்க மாட்டா… செத்துருவா…” என்றான். 

 

       “ம்ம்… தெரியுதுல்ல… அப்றம் ஏன்டா இப்டியிருக்க…. அவளோட காதலுக்கு நீயெல்லாம் தகுதியே இல்லாதவன்… நீ இனி அவளோட சேந்து வாழுவனு மட்டும் நினக்காத… ஏன்னா இவனோட கூட்டு வச்சதுக்கு களிதான் தின்ன போற… உன் லவ்வர பத்தி கவலப்படாத அவளுக்கு உன்னை பத்தி சொல்லி புரிய வச்சு அவள ஒரு நல்ல வாழ்க்க வாழ வைக்க வேண்டியது எங்க பொறுப்பு…” என்றாள். 

 

         அதைக் கேட்ட ஹசன் பயத்தில் அமீரா “ப்ளீஸ் அமீரா… சாரி அமீரா… போலீஸ்லா வேணாம் அமீரா… அப்பா, அம்மா ஒடைஞ்சு போய்டுவாங்க… மித்ரா தாங்க மாட்டா அமீரா…” என்று கெஞ்ச,

 

       அமீரா “உன்னை பெத்த பாவத்துக்கும் உன்னை காதலிச்ச பாவத்துக்கும் அவங்க அனுபவிச்சு தான் ஆகணும்…” என்றவள் அவளே அவனுக்கு மயக்க ஊசி செலுத்தினாள். 

 

            இருவரும் ஐந்து நிமிடத்தில் மயங்கி விட, இருவரது கால்களையும் கட்டி, அவர்களை ஒரு அறையில் கிடத்தி மற்ற மூவரும் பூட்டினர். பின் கூடத்திற்கு வந்த மூவரும் சற்று நேரம் அமைதியாகயிருக்க, அமீரா அருளை விழி கலங்கப் பார்க்க, அருளும் அவளையேப் பார்த்திருக்க, இருவருக்கும் தனிமை தர விரும்பி செந்தில் “நா தேவா கிட்ட சொல்லிட்டு வரேன்…” என்று தோட்டத்திற்குச் சென்று விட்டான். 

 

        அவன் சென்றதும் அமீரா அழுதுவாறு “தேங்க்ஸ் அருள்… நீங்கல்லாம் இல்லன்னா…” என்று கூற,

 

       அருள் அவளருகில் சென்று அவளது கைப்பற்றி “அதான் ஒன்னும் ஆகலல… அழாத அமீரா…” என்று கூற, அவள் சட்டென்று அவனை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். 

 

       அவளின் வேதனைப் புரிந்த அருள் அவள் அழுதுத் தீர்க்கட்டும் என்று அவளது தலையை வருடிக் கொடுத்தான். தன் துக்கம் வெளியேறும் வரை அழுத அமீரா அவனை விட்டு விலகி அவனை நன்றியோடுப் பார்க்க, அருள் புன்னகைத்து “இப்போ சரியாயிட்டல்ல… அப்றம் இந்த தேங்க்ஸ் சொல்லி இப்டி அப்பாவி மாறி பாக்ற வேல வச்சுக்காத… அந்நிய படுத்துற மாறி இருக்கு…” என்றான். 

 

       அமீரா அழகாக சிரித்து “அப்போ இனி தேங்க்ஸ், சாரிலாம் கட்… சொல்ல மாட்டேன்…” என்று கூற, அவனும் புன்னகைக்க, செந்திலும் தேவாவிடம் பேசிவிட்டு வர, அருள் அமீராவை அவளது வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டு இருவரும் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி பேசினர். செந்தில் அவனது ஆளிற்கு அழைத்து நாராயணசாமியின் லேப்டாப் போலவே டூப்ளிகேட் தயார் சொன்ன விடயம் பற்றிக் கேட்க, அவன் தயார் என்கவும் அதை தேவாவிற்கு தெரிவித்தான்.

 

                  மதிய உணவு வாங்க வெளியே வந்திருந்த தேவா செந்திலிடம் “ம்ம் ஓகே… நாராயணசாமி பிங்கர் ப்ரிண்ட் தான் பாஸ்வேர்டா வச்சுருக்கான்… ஸோ அவனோட ரேகைய ஹாட் க்ளூல பதியற மாறி எதாவது பண்ணச் சொல்லி அத யூஸ் பண்ணி அவனோட ஒரிஜினல் லேப்டாப்ல இருக்ற டேட்டாஸ டூப்ளிகேட் லேப்டாப்க்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டு அத வச்சுட்டு ஒரிஜினல எடுத்துட்டு வரச்சொல்லு….” என்றான்.

 

          ஆனா “எப்டி மாப்ள… இதெல்லாம் அவனுக்கு தெரியாம பண்ணனும்…. எப்டி பண்றது… மாட்னா நம்மாள உயிரோடவே விட மாட்டான்…” என்று செந்தில் கேட்க, 

 

        தேவா சிரித்து “மச்சான்… ஒன்னும் பயப்பட வேண்டாம் இன்னும் மூனு மணி நேரத்துல அவன் ஆபிஸ் வீடுன்னு இன்கம் டாக்ஸ் ரைடுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்…. ஸோ அவனே லேப்டாப்ப யார்கிட்டயாவது குடுத்து பத்ரமா வச்சுக்க சொல்லுவான் அத மட்டும் உன் ஆள் கைக்கு வர்ற மாறி பாத்துக்க சொல்லு போதும்…” என்றான். 

 

       செந்தில் சிரித்து “பரவால்ல என் மாப்ளைக்கும் அறிவிருக்கு…” என்க, தேவா “மச்சான்….” என்க, இருவரும் சிரித்துவிட்டு மேலும் சில விடயங்கள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தனர்.

 

             செந்தில் தேவா சொன்ன விடயங்களை எல்லாம் தன்னாளிடம் கூற, அவன் வேலையை முடித்து விட்டு அழைப்பதாகக் கூறவும் அருளும் செந்திலும் அடைத்து வைந்திருந்தவர்களைப் போய்ப் பார்க்க, அவர்கள் மயக்கத்திலேயே இருக்கவும் இருவரும் சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சென்றனர்.

 

          தேவாவும் தேன்மலரும் மாலை வரை தேடியும் வீட்டை ஒழுங்குப் படுத்தியது தான் மிச்சம், அவர்களுக்கு வேண்டியது எதுவும் கிடைக்கவில்லை. அதனால் தேன்மலர் வீட்டின் பின்புறத் தோட்டத்தில் இறுக்கமாக அமர்ந்திருக்க, தேவா அவளுக்கு எவ்வளவு ஆறுதல் கூறியும் அவள் இறுக்கமாகவேயிருக்க, அச்சமயம் டி தேன்மலருக்கு அழைத்து நாளை ஏ ஆர் பார்மச்சுட்டிக்கல்ஸிற்கு ஆய்விற்கு வருவதாகக் கூறி சிறிது நேரம் அவளிடம் பேசியிருந்துவிட்டு அழைப்பைத் துண்டித்தார். 

 

        அதை தேவாவிடம் தெரிவிக்க, தேவா தன் நண்பன் ஒருவனுக்கு அழைத்து “ஆர்யனோட நம்பர் கேட்டேனே என்னாச்சு டா…” என்று கேட்க, 

 

        அவன் “இன்னும் ஒன் ஹார்ல கெடச்சுரும் டா…” என்கவும் “ம்ம்… கெடச்சவொடனே எனக்கு வாட்ஸ் அப் பண்ணி விடு…” என்று அழைப்பைத் துண்டித்தான். 

 

              தேன்மலர் தன் தந்தை பரிசளித்த கருப்பு வைரம் பதித்த கைச்செயினை பிடித்துத் திருகிக் கொண்டே மனதில் “அப்பா… எங்க தான் ப்பா க்ளூ வச்சுருக்க… ப்ளீஸ் ப்பா எதாவது ஒரு வழி சொல்லு ப்பா…” என்று மானசீகமாக தன் தந்தையிடம் பேசிக் கொண்டிருக்க, அப்போது சிதம்பரத்தின் குரல் திடீரென்று ஒலிக்கவும் அவள் திடுக்கிட்டு பதட்டமாகச் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

 

       தேவாவும் திடுக்கிட்டவன் உன்னிப்பாக அக்குரலைக் கேட்க, அந்தக் குரல் அவளதுக் கைச்செயினிலிருந்து வருவதையறிந்து அதை தன்னவளுக்கும் உணர்த்தினான். தேன்மலர் விழிகள் கலங்க அக்குரலைக் கேட்க ஆரம்பித்தாள். 

 

       “ஹனி… உனக்கு இந்த கிஃப்ட் புடிக்கும்னு எனக்கு தெரியும்… இந்த ப்ளாக் டைமண்ட் எப்டி ரேர் அண்ட் ப்ரஷியஸானதோ… அதுமாதிரி தான் நீயும்…. கடைசியா ஒரே ஒரு ப்ராஜக்ட் மட்டும் கைல எடுத்ருக்கேன்… அத சக்ஸஸ் புல்லா முடிச்சுட்டு இன்னும் ரெண்டு மாசத்துல அப்பா ஹனிகூடவே நிரந்தரமா தங்க போறேன்…. அப்றம் என் ஹனி சின்ன வயசுல ஆசை பட்ட வீடு ஹனிக்கே வாங்கியாச்சு… இனி எனக்காக உன் மனசுல பூட்டி வச்சுருக்ற ஆசையெல்லாம் ஒன்னொன்னா நடத்திக் காட்றதுதான் என் வேலயே…. என்னதான் அப்பாயிகூட இருந்தாலும் நீ உன் அம்மாவ மிஸ் பண்றன்னு எனக்கு தெரியும்… அதான் நம்ம மூனு பேரோட ஹேப்பியான மெமரீஸ் நிறஞ்ச அந்த வீட்ட வாங்கிட்டேன்… அந்த வீட்ட எப்போல்லாம் திறக்குறியோ… அப்போல்லாம் நாம ஹேப்பியா இருந்த நாட்கள நீ மறுபடியும் வாழ்வ…. அப்போ உன் அம்மாவும் உன்கூடவே இருப்பா… சிதம்பரம் சீக்ரமே ஹனிகிட்ட வரேன்… லவ் யூ ஹனி…” என்று சிதம்பரத்தின் குரலில் உருக்கமாகப் பதிவு செய்யப்பட்ட அந்த பதிவு முடிந்ததும் தேன்மலர் தன் தந்தையை நினைத்து நெகிழ்ச்சியிலும் கவலையிலும் அழ, தேவா தன்னவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டான். 

 

          ஏதோ நினைவு வந்தவளாக தன்னவனிடமிருந்து விலகி மறுபடியும் கைச்செயினில் வைரத்தின் அருகே சிறு குமிழ் போலிருந்ததைத் திருகி அந்த பதிவுக் குரலை ஓடவிட்டு கேட்ட தேன்மலர் மகிழ்ச்சியில் முகம் மலர “அச்சோ தேவா…” என்று அவனது கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு வேகமாக உள்ளேச் சென்றாள். 

 

         தேவா அவளது திடீர் முத்தத்தில் உறைந்திருந்தவன் கன்னம் தடவி சிறுப் புன்னகையோடு அமர்ந்திருந்தான். அவளது மகிழ்ச்சியிலேயே தன்னவள் ஏதோ கண்டுக் கொண்டாளென்று அறிந்தவன் அவளின் வரவுக்காக அவள் இட்ட முத்தத்தின் இனிமையை அனுபவித்தவாறுக் காத்திருந்தான். 

 

         லேப்டாப்பும் கையில் ஒரு பென் ட்ரைவுமாக வந்த தேன்மலர், அதை தன்னவனிடம் கொடுக்க, அதை வாங்கி பென் ட்ரைவ்வை லேப் டாப்பில் இணைத்தான். இருவரும் அதில் சிதம்பரம் ஏ ஆர் பார்மச்சுட்டிக்கல்ஸிற்கு எதிராக சேகரித்த ஆதாரத்தைக் கண்டு மகிழ்ந்து அருளுக்கு அழைத்துத் தாங்கள் வந்த வேலை வெற்றிகரமாக முடிந்ததாகக் கூறி, உடனே சென்னைக்குப் புறப்பட ஆயத்தமாயினர்.

 

அத்தியாயம்- 28

 

  அருள் “செந்திலு… அவனுங்க கார என்னடா பண்றது…” என்று வினவ, 

 

     செந்தில் சிறிது நேர யோசனைக்குப் பின் “ம்ம்… ஒன்னு பண்ணலாம்… ஆளுக்கொருக் கார எடுத்துட்டுப் போய் இந்த வினித் பய அடிக்கடி போற இடம் ஒன்னு தெரியும் அங்க நிப்பாட்டிருவோம்…” என்றான். 

 

        அருளுக்கும் அதுவே சரியென்று பட, அவன் சென்று இருவரது கார் சாவியையும் எடுத்து வந்தான். அவர்கள் இருவரும் காருக்கருகே போக, அப்போது ஏதோ சத்தம் வரவும், இருவரும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு சத்தம் எங்கியிருந்து வருகிறதென்று ஆராய அது வினித்தின் காரிலிருந்து வரவும், இருவரும் வேகமாகச் சென்று கார் டிக்கியைத் திறந்தனர். 

 

       அவர்கள் பார்த்தக் காட்சியில் இருவருமே அதிர்ச்சியாகப் பின் வேகமாகக் கை கால்கள் கட்டப்பட்டு வாயில் ப்ளாஸ்தர் ஒட்டப்பட்ட நிலையிலிருந்த அப்பெண்ணை வேகமாக அதிலிருந்து இறக்கி, அவளது கட்டுக்களை விடுவித்தனர்.

 

        அப்பெண்ணோ அழ ஆரம்பிக்க, அருள் “யாரு மா நீ… நீ எப்டி காருக்குள்ள…. அழாம சொல்லுமா….” என்றான். அப்பெண் இருவரையும் சந்தேகமாகப் பார்க்க, “இங்க பாரு மா… நாங்க உன்னை கடத்தல…. எங்க மேல நம்பிக்கயிருந்தா சொல்லு… இல்லன்னா ஒரு ஆட்டோ புடிச்சு தரோம்… உன் வீட்டுக்கு போ….” என்றான். 

 

            அதன்பின் தான் அப்பெண் வாய்திறந்து “நா பஸ் ஸ்டாப்ல இறங்கி ஆபிஸ்க்கு நடந்து போய்ட்ருந்தேன்… அப்ப யாரோ பின்னாலயிருந்து துணிய வச்சு முகத்தை மூட்னாங்க…. ஏதோ ஸ்மெல் நல்லாவேயில்ல… நா மூச்ச இழுத்துப் புடுச்சுக்கிட்டேன்…. அப்றம் எனக்கு தலை சுத்துச்சு… யாரோ என்னை கார்ல தூக்கி போட்டாங்க…. அப்றம் நா மயங்கிட்டேன்… அப்றம் லேசா மயக்கம் தெளிஞ்சப்ப ஏதோ பெரிய வீடு முன்னாடி கார் நிக்றது தெரிஞ்சது…. அவனுக்கு அப்ப ஏதோ ஃபோன் வந்தது… அப்றம் சுத்தமா மயங்கிட்டேன்…. முழிச்சு பாத்தா நா கார் டிக்கிக்குள்ள இருக்கேன்…. திறக்கலான்னு ட்ரை பண்ணா கை கால்லா கட்டிருந்துது… அதான் எப்டியாவது தப்பிக்கனுனு இடிச்சேன்… நீங்க சவுன்ட் கேட்டு திறந்துட்டீங்க….” என்றாள். 

 

        அருளும் செந்திலும் ஒருவரையொருவர் பார்த்து விட்டு “அப்போ யார் உன்னை கடத்துனாங்கன்னு உனக்கு தெரியாதா…” என்று கேட்க, அவள் இல்லையென்று பாவமாகத் தலையாட்ட, அருள் அமீராவிற்கு அழைத்து உடனே வருமாறு கூறிவிட்டு அப்பெண்ணை வினித் மற்றும் ஹசனை அடைத்து வைத்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றான். 

 

              செந்தில் அவ்விருவரையும் காட்டி “இதுல யாரையாவது உனக்கு அடையாளம் தெரியுதா மா…” என்று கேட்க, ஏற்கனவே பயந்துப் போயிருந்த அப்பெண் என்ன நடக்கிறதென்று தெரியாமல் குழம்பித் தவித்தவாறு அவர்களோடு வந்தவள் வினித்தை கண்டு மேலும் பயந்து உடல் நடுங்க “அவன தெரியும்… கொஞ்ச நாளா என்னை ஃபாலோ பண்ணி ரொம்ப டார்ச்சர் பண்ணிட்ருக்கான்… நேத்து டார்ச்சர் தாங்காம அவன திட்டிட்டேன்….” என்று திக்கித் திணறி கூறி முடித்தாள். 

 

        அருளும் செந்திலும் அவளைப் பார்க்க, அவள் “அப்போ… என்னை கடத்துனது… ஆனா இவன ஏன் நீங்க அடைச்சு வச்சுருக்கீங்க….” என்று கேட்டாள். 

 

       செந்தில் “வாமா சொல்றேன்…” என்று அவளை வெளியே அழைத்துச் செல்ல, அருள் அந்த அறையைப் பூட்டிவிட்டு வந்தான்.

 

       “உன்கிட்ட வால் ஆட்ன மாறியே அந்த நாய் எங்க வீட்டு பொண்ணு கிட்ட ஆட்டுச்சு… அதான்…” என்று செந்தில் கூற, 

 

        அப்பெண் நிம்மதி பெருமூச்சு விட்டு “தேங்க்ஸ் ண்ணா… அவன சும்மா விடாதீங்கண்ணா… ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டாண்ணா… போலீஸ்ல புடிச்சு குடுங்க ண்ணா அவன…” என்றாள்.

 

              அருள் “அப்டிலா பண்ணா ரெண்டு நாள்ல ஜாமின்ல வந்துருவான் மா… இவன வகையா சிக்க வைக்க வேற வழி ஒன்னு இருக்கு… அப்றம் இந்த மாறி நாயெல்லாம் பின்னாடி சுத்தி டார்ச்சர் பண்ணா சைலன்ட்டா போறதோ இல்ல அவன திட்றதோ சரிபட்டு வராது மா… தைரியமா பப்ளிக் ப்ளேஸ்ல மானம் போகும்ன்லா பாக்காம சத்தமா அவன மிரட்டி பக்கத்துல இருக்ற பப்ளிக்ட்ட இவன் என்ட்ட வம்பு பண்றான்னு சொல்லி டின்னு கட்டிரனும்… அப்டியில்லனா வீட்ல தைரியமா சொல்லுங்க இது மாறி எனக்கு பிரச்சன இருக்குன்னு… அவங்க பாத்துப்பாங்க…. எதுக்கும் பயப்படாதீங்க… உங்க பயம் தான் இந்த மாறி ஆளுங்களுக்கு தைரியம்… புரிஞ்சுதா மா…” என்று கேட்க, அப்பெண் விழிகள் கலங்க புன்னகைத்து நன்றியுரைத்தாள். 

 

        அமீரா அங்கு வர, அவளுக்கும் அப்பெண்ணை பற்றிய தகவல்கள் கூறிய அருளும் செந்திலும் அப்பெண்ணிற்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்துவிட்டு அவளை அவளது வீட்டில் பத்திரமாக விட்டு வருமாறு கூறினர். 

 

                அருள் “இங்க பாரு மா… இத உன் வீட்ல யாருட்டயும் சொல்லாத… பயந்துருவாங்க… இனிமே அவன் தொல்ல உனக்கு இருக்காது அதுக்கு நா கியாரண்ட்டி… அப்றம் இங்க அவன பாத்தத…” என்னும் போதே அப்பெண் “யார்கிட்டயும் சொல்ல மாட்டேண்ணா… நீங்க என்னை எவ்ளோ பெரிய ஆபத்துலேர்ந்து காப்பாத்திருக்கீங்க… இது கூட உங்களுக்கு செய்யாம இருப்பனா…. தேங்க்ஸ் ண்ணா…” என்றாள். 

 

       அருள் புன்னகைத்து விட்டு அமீராவிடம் கண்களால் அவளைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு செந்திலை அழைத்துக் கொண்டு வெளியேக் கிளம்பினான். அருளும் செந்திலும் இரு கார்களையும் வினித்தும் ஹசனும் வழக்கமாகச் செல்லும் டி நகரிலுள்ள ஒரு பப்பின் முன் நிறுத்தினர். 

 

        செந்தில் “ஏன் மாப்ள… அந்த பொண்ணு ஏதோ வீடுன்னு சொன்னுச்சே… அங்க நமக்கு எதுவும் ஆதாரம் கெடைக்குமா…” என்று வினவ,

 

      அருளும் “அத தான் மாப்ள நானும் யோசிக்றேன்…” என்றான். 

 

    பின் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். 

 

      செந்தில் யாருக்கோ அழைத்து ஏதோ விசாரிக்கக் கூறிவிட்டு “மாப்ள… ஈவ்னிங்குள்ள தகவல் வந்துரும்… அப்றம் பாத்துக்கலாம்… இப்ப வீட்டுக்கு போலாம்…” என்க, இருவரும் கேப் புக் செய்து வீட்டிற்கு வந்து சேர, அமீராவும் அப்பெண்ணை அவளது வீட்டில் விட்டுவிட்டு அவர்களுக்காக அங்குக் காத்திருந்தாள். 

 

                  அவர்கள் வந்ததும் அமீரா அவர்களைப் பார்க்க, அருள் “வீட்ல விட்டுட்டியா மா…” என்று கேட்க,

 

       “ம்ம்.. விட்டுட்டேன் அருள்… கொஞ்சம் பயந்து போயிருந்தா… நா அவ கொலீக்னு சொல்லி அவளுக்கு உடம்பு சரியில்லன்னு சொல்லி அவங்க வீட்ல அவள பத்ராமா பாத்துக்க சொல்லிட்டு வந்துருக்கேன்… ஆமா உங்கள யாரும் பாக்கலல…” என்று வினவினாள். 

 

        இருவரும் இல்லை என்றனர். அச்சமயம் செந்திலுக்கு ஏதோ அழைப்பு வரவும் அவன் தனியே செல்ல, அமீரா அருளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள். 

 

        அருள் இதழ் விரிய “என்ன அமீரா… எதாவது கேக்கணுமா…” என்று வினவ, அவள் இல்லை என்று தலையாட்ட, அருள் புன்னகைத்து “ம்ம்… நம்பிட்டேன்… அப்றம் மாப்ள ஃபோன் பண்ணான்… அவங்க போன காரியம் சக்ஸஸாம்… உடனே கெளம்பி வர்றாங்களாம்…” என்றான். 

 

        அதைக் கேட்ட அவள் முகம் மெய்யான மகிழ்ச்சியில் மலர, அவனோ அவளது மலர்ந்த முகம் தனை விட்டு விழி அகற்றாதிருக்க, அவனது விழிகளைக் கண்டவளுக்கு அது ஏதோ உணர்த்துவது போல் தோன்ற, அவனது விழி பேசும் மொழியறிய முற்பட்டு அவனது விழி நோக்கியவள் அதில் தொலைய ஆரம்பித்த வேளை செந்தில் வரவும் அருள் விழி திருப்பியதில் அங்கு நிகழவிருந்த விழி மொழியாடல் தடைப்பட்டது. 

 

          பின் இருவரும் செந்திலை பார்க்க, “நம்ம ஆள் தான் மாப்ள… நாராயணசாமியோட லேப்டாப் கைக்கு வந்துருச்சு… கொஞ்ச நேரத்துல கொண்டு வர்றேன்னு சொன்னான்…” என்கவும் இருவரது முகமும் மலர்ந்தது.

 

        அச்செய்தியை உடனே தேவாவிற்கு தெரிவிப்பதற்காக அவனுக்கழைக்க, தேவா கார் ஓட்டிக் கொண்டிருந்ததால் தேன்மலர் அழைப்பை ஏற்று விடயமறிந்து தேவாவிடம் கூறினாள். அதைக் கேட்டு தேவா உடல் விரைக்க, முகம் இறுகியவாறு கார் ஓட்ட, தன்னவன் மனதின் கோபமும் வேதனையுமறிந்த தேன்மலர் ஆறுதலாக அவனதுக் கைப்பற்ற, திரும்பி அவளைப் பார்த்தவன் ஆழமூச்செடுத்து தன் கோபத்தனலை உள்ளுக்குள் புகையவிட்டு தன்னவளைப் பார்த்துப் புன்னகைத்தான். 

 

       அருள் அமீராவை வீட்டிற்குச் சென்று வரச்சொல்ல, அமீராவும் வீட்டிற்குச் சென்று கவலையிலிருந்த தன் பெற்றோருக்கு தைரியம் கூறி தேற்றி விட்டு அருளுக்கும் செந்திலுக்கும் இரவு உணவை எடுத்து வந்தாள். அமீரா பரிமாற அருளும் செந்திலும் அமைதியாக உண்டு முடித்தனர். 

 

             செந்தில் வெளியேக் கிளம்பிச் சென்று தன் தந்தையின் கட்சி அலுவலகத்தில் காத்திருந்த தன் ஆளிடமிருந்து லேப்டாப்பை வாங்கி வந்தான். செந்தில் வந்ததும் அமீரா லேப்டாப்பை திறந்துப் பார்க்கலாமா என்று கேட்க, அருளும் செந்திலும் தேவா வந்துவிடட்டும் என்று கூறவும் அமீரா அமைதியானாள்‌. செந்தில் விசாரிக்கக் கூறிய விவரம் கிடைக்கப்பெற அருளும் செந்திலும் தேவாவோடு காலையில் அங்குச் செல்வாதாக முடிவுச் செய்தனர்.

 

       வினித் மற்றும் ஹசனிற்கு மயக்கம் தெளிய காலை ஆகும் என்பதால் மூவரும் தங்களதுத் திட்டத்தைப் பற்றி விவாதித்தனர். 

 

       நள்ளிரவு கடந்து தேவாவும் தேன்மலரும் வர, மூவரும் ஆவலாக அவர்களின் முகம் நோக்கினர். “ஹனிமலர்…. எங்கயிருந்தது பென்ட்ரைவ்… எப்டி கண்டுபுடிச்ச…” என்று ஆர்வமாக வினவினான் அருள். 

 

         தேன்மலரோ மர்மமாகப் புன்னகைக்க, தன்னவளின் புன்னகையைக் கண்ட தேவா “ம்ம்… சாய்ந்தரத்துலேரந்து நா கேட்டுட்ருக்கேன்… எனக்கே சொல்ல மாட்டேங்கிறா…. உனக்கு மட்டும் சொல்லிடுவாளா மாமா…” என்று அலுத்துக் கொண்டான். 

 

       அவனவளோ உதடு சுழித்து “நாந்தான் கெஸ் பண்ணுங்கன்னு சொன்னேன்… நீங்க ஆர்வம் தாங்காம பண்ணல… இங்க வர்ற வர நொய் நொய்னு அதயே கேட்டுட்டு வர்றீங்க… அதவிட்டுட்டு யோசிச்சுருந்தா உங்களுக்கே பதில் கெடைச்சுருக்கும்…” என்றவள் “இப்ப பாருங்க என் நண்பன் எப்டி கண்டுபுடிக்கறான்னு…” என்றுவிட்டு தன் கைச்செயினை திருகி சிதம்பரம் பேசியதை ஒலிக்க விட்டாள். 

 

                  அதை அருளோடு மற்ற இருவரும் கூட கவனமாகக் கேட்டனர். அது முடிந்ததும் அருள் தன் தோழியை ஆச்சர்யமும் அர்த்தமுமாய்ப் பார்க்க, அவள் ஆமென்று இமை மூடித் திறந்து வீட்டுச் சாவியைக் காண்பிக்க, அருள் அவளிடமிருந்து அதை வாங்கித் தடவிப் பார்த்தான். 

 

       தேவா யோசனையாக நிற்க, அமீராவும் செந்திலும் சிறிது நேர யோசனைக்குப் பின் அருளின் கையிலிருந்த சாவியைப் புன்னகையோடுப் பார்த்திருந்தனர். 

 

       யோசனையாக நின்ற தேவாவின் தோள் மீது கைப்போட்ட அருள் “மாப்ள… க்யூரியாஸிட்டிய ஒதுக்கி வச்சுட்டு அப்பா கடைசியா பேசுன ரெண்டு வரிய யோசிச்சு பாரு அதுல தான் க்ளூ இருக்கு…” என்கவும் தேவா நிதானமாக யோசிக்க, அவனது முகம் பிரகாசமானது. 

 

       தன்னவனின் முக மாற்றத்தைக் கண்டு “அப்பாடா… அருளு ஒருவழியா பல்ப எரிய வச்சுட்ட…” என்று கூறிய தேன்மலரை முறைத்த தேவா “போடி… இத அப்பவே சொல்லிருந்தா கண்டுபுடிச்சுருப்பேன்ல…” என்றான். 

 

        அவனவளோ திரும்பி அவனை முறைத்து “எது நா சொல்லல… எவ்ளோ தடவ அப்பா பேசுனத நல்லா ஞாபகப்படுத்தி பாருங்கன்னு சொல்லீற்பேன்…” என்க,

 

       தேவா ஈஈஈ என்று பல்லைக் காட்டி “சொன்னதான்… சரி விடு அதான் இப்ப கண்டுபுடிச்சுட்டேன்ல…” என்றான். 

 

      “ஆமா நல்லா கண்டுபுடிச்சீங்க… நீங்கள்லாம் ஒரு ஹேக்கர்…” என்று தேன்மலர் சடைந்துக் கொள்ள, 

 

       “மலர் மா… பட்டுன்னு மாமாவ அசிங்கபடுத்திட்ட…” என்று வினவ, தேன்மலர் அவனைப் பார்த்தப் பார்வையில் தேவா வாயை மூடிக் கொண்டு அருளை பாவமாகப் பார்த்தான். 

 

              செந்தில் “என்ன மாப்ள… கல்யாணத்துக்கு முன்னாடியே என் தங்கச்சி பார்வைக்கு சைலன்ட் ஆயிட்ட… அவ்ளோ பயமா…” என்று கிண்டல் செய்ய, 

 

      தேவா “ஆமா… உன் தங்கச்சி சும்மா சும்மா இந்த பச்ச புள்ளய முழிய உருட்டி பாத்துட்டேயிருந்தா… பயம் வாராதா…” என்க, 

 

       தேன்மலர் “யாரு நா சும்மா சும்மா மொறைக்கறனா…” என்று அவனையும் செந்திலையும் முறைத்தாள். 

 

        தேவா “இப்ப சந்தோசமா… என் வாய புடுங்கி அவளுக்கு ஏத்தி விட்ட… ரொம்ப குளுகுளுன்னு இருக்குமே இப்ப உனக்கு…” என்று செந்திலை முறைக்க, 

 

        செந்தில் நமட்டுச் சிரிப்போடு “ஏதோ என்னால முடிஞ்சது…” என்க, 

அவர்கள் மூவரையும் அருளும் அமீராவும் நமட்டுச் சிரிப்போடுப் பார்த்திருந்தனர். 

 

      அருள் “சரி போதும்… அடுத்து ஆக வேண்டியத பாக்கலாம்…” என்க, 

 

      “எல்லாம் உன்னால வந்தது… பெரிய ஜேம்ஸ் பாண்டு உடனே கண்டுபுடிக்றாரு… உன்னை யாருடா கண்டுபுடிக்க சொன்னது…” என்று தேவா முறுக்கிக் கொள்ள, 

 

      அருள் “அடவிடு மாப்ள… கூடிய சீக்ரம் சம்சாரி ஆகபோற அதுல இதெல்லாம் சகஜம்… அதுக்கான ட்ரையல்னு நினச்சுக்க…” என்றான். 

 

      அமீரா “ஆமா அருள்… சம்சாரி வாழ்க்கய பத்திலாம் சொல்ற… எக்ஸ்பீரியன்ஸோ…” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி ஒருவிதக் கோபம் கலந்தக் குரலில் கேட்க, அருள் திருதிருவென்று முழிக்க, மற்றவர்கள் அவனை நமட்டுச் சிரிப்போடுப் பார்த்திருந்தனர். 

 

              அருள் “என்ன பாத்தா எக்ஸ்பீரியன்ஸ் ஆனவன் மாறியா தெரியுது… அதெல்லாம் கேள்வி ஞானம் தான் மா…” என்று கூற,

 

      அமீரா அவனை மேலும் கீழும் பார்த்து “ம்ம்… நம்புறேன்… கேள்வி ஞானமா இருக்ற வர உடம்புக்கு நல்லது…” என்றுவிட்டு “சரி மலர்… நீ சொல்லு உனக்கு என்ன தோனுச்சு கரக்ட்டா பென்ட்ரைவ்வ கண்டுபுடிச்சட்ட்…” என்று வினவினாள்.

 

      அருள் “அப்பாடா…” என்று பெருமூச்சு விட,

 

       தேவா “மாமா… மலர் மா தேவலாம்… அமீரா பாக்க தான் சைலன்ட்… ஆனா அவக்கூட பழகுனா தான் தெரியும் அவ எவ்வளவு பெரிய வாயாடி, கோவக்காரி, ஊமை குசும்பின்னு… போக போக நீயே தெரிஞ்சுப்ப… பாத்து நடந்துக்க… உன் ப்யூச்சருக்கு நல்லது…” என்று கிசுகிசுத்தான். 

 

      அருள் உறைந்து சிலையாக தேவாவை பார்க்க, “அட வா மாமா… இதுக்கெல்லாம் ஷாக் ஆயிட்டு…” என்றுவிட்டு அவனது தோள் மீது கைப் போட்டு அழைத்துச் சென்று ஃஸோபில் அமர்ந்தான். 

 

      நமட்டுச் சிரிப்போடு அவனருகில் வந்தமரந்த செந்திலும் “ஐ டூ நோ மச்சான்…” என்க, அருள் அதிர்ந்து அவனைப் பார்க்க,

 

      “போதும் மாப்ள முழிக்ற முழில முழி வெளிய வந்துரப்போவுது…” என்கவும் அருள் முகத்தை இயல்பாக்கிக் கொண்டு அமைதியாக அமர்ந்தான். 

 

               தேன்மலர் அமீரா கேட்ட கேள்விக்கு பதலளிக்க ஆரம்பித்தாள். “அப்பா என்ன சொல்லீர்ந்தாரு எப்பலாம் அந்த வீட்டை நா திறக்கறனோ அப்போலாம் அந்த ஹேப்பி மெமரீஸான நாட்கள்ல நா வாழ்வேன்னு சொன்னது… அதோட அவரு வீட்டு பத்தரத்தையும் சாவியையும் என்கிட்ட குடுத்து யாருக்கும் தெரியாம வச்சுக்க சொன்னது… ரெண்டையும் கனெக்ட் பண்ணதுல தான் எனக்கு ஸ்டரைக்காச்சு…. அதான் வீட்டு சாவிய எடுத்துப் பாத்தேன்…. ரெண்டு சாவியிருந்தது… ஒன்னு ஸ்பேர் கீன்னு நின்ச்சுட்ருந்தேன் இத்தன நாளா… ஆனா அதுதான் கடைசில பென்ட்ரைவ்…” என்றவள் அந்த சாவியை எடுத்து கதவின் துவாரத்திற்குள் நுழைக்கும் நுனியை இழுக்க, அதில் ஒருபாதி மூடி போல் திறந்துக் கொள்ள, உள்ளே பென்ட்ரைவ் இருந்தது. 

 

      அதைக் கண்ட அருள், அமீரா, செந்தில் மூவரும் ஆச்சர்யத்தில் விழி விரித்தனர். தேன்மலர் அதை தேவாவிடம் கொடுக்க, தேவா அதை லேப்டாப்பில் பொருத்தி சிதம்பரம் சேகரித்த ஆதாரங்களை மூவருக்கும் காட்டினான். மூவரும் அதைக் கவனமாகப் பார்த்து முடிக்க, அமீரா அதை முதன்முதலில் பார்ப்பதால் அவள் முகத்தில் அதிர்ச்சி, கோபம், கவலை என்று விதவிதமான உணர்வுகள் ஓடின.

 

              பின் செந்தில் தேவாவிடம் நாராயணசாமியின் லேப்டாப்பை கொடுக்க, ஹாட் க்ளூவில் பதிந்திருந்த நாராயணசாமியின் ஆள்காட்டி விரலின் ரேகைக் கொண்டு அதனுள் நுழைந்த தேவா, அதிலுள்ள ஒரு ஒரு பைலாகத் திறுந்துப் பார்த்தான். மற்றவர்களும் அதைப் பார்த்தனர். அதிலிருந்த தகவல்கள் பல அனைவருக்கும் பெரும் கோபத்தையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்த, தேவா தன் கோபத்தை உள்ளடக்கி இறுகி அமர்ந்திருந்தான். 

 

       தன்னவனின் மனம் இப்போது எவ்வாறிருக்கும் என்று அவனது முகத்தை வைத்தேக் கண்டறிந்த தேன்மலர் தன்னவனின் வேதனைக்கும் இழப்பிற்கும் காரணமான நாராயணசாமியை ஒருவழியாக்காமல் விட மாட்டேன் என்று சூளுரைத்துக் கொண்டு தன்னவனைக் கவலையாகப் பார்த்திருந்தாள். மற்றவர்களும் அதிலிருந்த விடயங்களைப் பார்த்து அதிர்ந்து கோபமும் யோசனையுமாய் அமர்ந்திருந்தனர். அனைவரின் மனதிலும் ஒரே ஒரு விடயம் ஒன்றுப் போல் தோன்றியது. அது என்னவென்றால் அந்த லேப்டாப் மூலம் பல பெரும் புள்ளிகளின் முகமூடி கழன்டு விழுந்து உண்மை முகம் வெளிவரும் என்பதே. 

 

               அதோடு அப்படிப்பட்ட ஆதாரம் தங்களிடம் இருப்பது தெரிந்தால் தாங்கள் எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டுமென்று எண்ணி, அதற்காகத் தங்கள் மனதைத் தயார் படுத்திக் கொண்டனர். 

 

      சிறிது நேரத்தில் இயல்பான தேவா “இத பாத்தாவே தெரிஞ்சுருக்கும்… இப்ப வரைக்கும் நாம பாத்ததெல்லாம் ஒன்னுமேயில்ல… இனிமே நாம பேஸ் பண்ண வேண்டியது நிறைய இருக்கு… ஸோ அதுக்கு தகுந்த மாறி நாம ப்ளான் பண்ணனும்…” என்றான். 

 

     அனைவருமே அதை தான் நினைத்திருந்தனர் என்பதால் அவனின் கூற்றை ஆமோதிப்பது போல் அவனது முகத்தையேப் பார்த்திருந்தனர். பின் அவரவர் அவரவருக்குத் தோன்றிய யோசனைகள் கூற, தேவா அதையெல்லாம் கவனமாகக் கேட்டான். தேன்மலரும் அதைக் கவனமாகக் கேட்டவள், நேரமேதும் பார்க்காது ஸாமிற்கு அழைத்து அமெரிக்காவிலிருந்து கிளம்பும் போது தாங்கள் கூறிய வேலை என்னவாயிற்று என்று கேட்க, ஸாம் அது நல்லபடியாக நடந்துக் கொண்டிருப்பதாகக் கூறவும் தேன்மலர் சரி என்று அழைப்பைத் துண்டித்து ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தாள். தேவா டி இன்ஸ்பெக்ஷன் வரப்போகும் விடயம் கூற, அருளும் செந்திலும் யோசனையில் ஆழ்ந்தனர். பின் அருள் செந்திலை பார்க்க, செந்தில் தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு தனியேச் சென்றான். 

 

              தேவா என்னவென்று கேட்க, அருள் சொன்ன விடயம் கேட்டு அவனை மெச்சும் பார்வைப் பார்க்க, தேன்மலர் தன் நண்பனை நினைத்து பெருமிதத்திலிருக்க, அமீரா அவனை என்னவென்று அறியாப் பார்வையோடு இதழ் விரித்துப் பார்த்திருக்க, அருள் அவளின் பார்வைக் கண்டு மந்தகாசப் புன்னகை சிந்தி தலைக் கோதினான். 

 

     தேவா “ஆமா நாராயணசாமி மகன் எங்க…” என்று கேட்க, 

 

    அருள் நடந்தைக் கூறி அடைத்து வைத்திருப்பதாகக் கூற, தேவா “மயக்கம் தெளியட்டும் பாத்துக்கலாம்…” என்றான். 

 

      தேன்மலர் ஒருவித இறுக்கத்துடனும் கோபத்துடனும் எங்கோ வெறித்து உறுதியானக் குரலில் “ம்ம்… ஆமா மாப்ள ரெஸ்ட் எடுக்கட்டும்… அப்றம் அவனுக்கிருக்கு…” என்றாள். 

 

      அருள் அவளைத் தீர்க்கமாகப் பார்த்து பெருமூச்சு விட்டு அவனது காரில் ஒரு பெண்ணைக் கண்டதும் அதன்பின் நடந்ததும் கூறி அப்பெண் சொன்ன வீட்டையும் கண்டுபிடித்து விட்டதாகக் கூறினான். 

 

     அதைக் கவனமாகக் கேட்ட தேவா “சரி நாளைக்கு அங்க போகலாம்…” என்று கூற, 

 

     தேன்மலர் “நானும் உங்ககூட வரேன்…” என்க, தேவா சரியென்றான். 

 

     தேன்மலர் தேவாவிடம் ஆர்யனின் கைப்பேசியிலிருக்கும் வீடியோவை அழிக்க வேண்டாமென்று கூற தேவா, அருளை தவிர மற்ற இருவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்க்க, “காரணமா தான் சொல்றேன்…” என்று சில விடயங்கள் கூற, தேவாவும் அருளும் அர்த்தமாகப் புன்னகைக்க, அமீராவும் செந்திலும் பெருமிதத்தோடு முகம் மலர்ந்திருந்தனர். பின் அனைவரும் அனைவர் கூறியதிலிருந்து சரியான விடயங்களைத் தேர்ந்தெடுத்து அதை ஒரு திட்டமாகத் தீட்டினர். 

 

                ஆர்யனும் ரகுவும் மறுமுறை தங்கள் கம்பெனிக்கு எப் டி ஏ விலிருந்து இன்ஸ்பெக்ஷன் வரவிருக்கும் தகவலறிந்து தங்கள் கம்பெனியில் சில விடயங்களை சரி செய்தும் அப்புறப் புடுத்தியும் மறைத்து வைத்தும் அந்த நள்ளிரவு நேரத்திலும் பரபரப்பாகச் சுற்றிக் கொண்டிருந்தனர். 

 

     அந்நேரத்திற்கு ஜே ரகுவிற்கு அழைத்து எப் டி ஏ வில் யாரோ தேன்மலரிடம் தொடர்பிலிருப்பதாகக் கூறவும், ஏற்கனவே இன்ஸ்பெக்ஷனுக்கும் அவளுக்கும் சம்மந்தம் இருக்குமோ என்ற சந்தேகத்தோடிருந்தவன் இது முற்றிலும் அவள் வேலைதான் என்று முடிவு செய்தான். 

 

     ஜேவிடம் பேசிவிட்டு ரகு ஆர்யனிடம் ஜே கூறியதையும் தன் சந்தேகத்தையும் கூற, ஆர்யன் அடங்காக் கோபம் கொண்டு தன் கைப்பேசியை விசிறியடித்தவன் “எனக்கும் அவ மேல டவுட் இருந்துச்சு மச்சான்….” என்றான்.

 

      மேலும் ரகு தான் தேவாவை பற்றி விசாரித்து அவனைப் பற்றி அறிந்த தகவல்களையும் அதோடு அவன் எதிக்கல் ஹேக்கர் என்பதையும் நாராயணசாமி வீடு மற்றும் அலுவலகங்களில் நடக்கும் வருமான வரி சோதனையையும் கூறினான். 

 

      யோசனையில் ஆழ்ந்த ஆர்யன் நாராயணசாமிக்கு அழைக்க, அவனது வீட்டில் சோதனை முடிவடையாதலால் அவன் அழைப்பை ஏற்கவில்லை. ஆர்யனும் ரகுவும் என்ன செய்வதென்று யோசிக்க, தேன்மலர் தேவாவை திருமண செய்துக் கொள்ளப் போவதாகக் கூறியது நினைவில் வர, அவளை அழ வைத்தால் தேவாவும் வேதனைக் கொள்வான் என்று சிந்தித்து சிதம்பரத்தை பற்றிய வீடியோவை ஸோஷியல் மீடியாவில் வெளியிட்டனர். நாராயணசாமியை தொடர்புக் கொண்டு பிறகு தேவாவை பார்த்துக் கொள்ளலாமென்று முடிவு செய்தனர். ஆர்யனும் ரகுவும் வீடியோவை பரவ விட்ட மகிழ்ச்சியில் இன்ஸ்பெக்ஷன் வேலைகளில் கவனம் செலுத்தினர். 

 

                    காலையில் அந்த வீடியோ வைரலாகி அன்றைய முக்கியச் செய்தியாக மாறிவிட, அதைத் தொலைக்காட்சியில் பார்த்த ராகவியும் சுரேஷும் அதிர, ஊருக்குள் சிதம்பரத்தை பற்றியும் வேலாயி மற்றும் தேன்மலர் பற்றியும் பலரும் நல்லவைகள் சிலவாகவும் கெட்டவைகள் சிலவாகவும் புறணி பேசவதைக் கேட்டு அதிர்ச்சியும் கோபமும் கொண்டனர்.

 

        இருவரும் கவலையோடும் கோபத்தோடும் அருளை தொடர்புக் கொண்டு அதுபற்றி வினவ, அருளிடமிருந்து கைப்பேசியை வாங்கிப் பேசிய தேன்மலரை “எங்க இருக்க? என்ன நடக்குது? ஏன் ஃபோன் பண்ணல? அப்பா எங்க? அப்பாயி எங்க?” என்ற கேள்விகளால் அவர்கள் துளைத்தெடுக்க, அதற்கு அவள் “இன்னும் ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு இதே கேள்வியெல்லாம் கேளுங்க பதில் சொல்றேன்…” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள். 

 

    அப்போது வெளியேச் சென்றிருந்த செந்தில் திரும்பி வீடு வர, அவனை தேவா மற்றும் தேன்மலரோடு அமீராவும் அருளும் ஆவலாகப் பார்க்க, அவன் கட்டை விரலை உயர்த்திக் காட்டவும் நால்வரது இதழ்களிலும் மென்னகைத் துளிர்த்தது.

தொடரும்….

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்