Loading

அத்தியாயம்- 10

 

              லிங்கம் ரகுவிற்கு அழைத்து விடயம் கூற, உறங்கச் சென்ற ரகு அதை உடனே ஆர்யனுக்கு தெரிவிக்க அவனைத் தொடர்புகொள்ள ஆர்யனோ அவனது அழைப்பை ஏற்காமல் அவனது பொறுமையைச் சோதித்துக் கொண்டிருந்தான். இரவு ஒன்பது மணியிலிருந்து ஆர்யனுக்கு முயற்சித்தவன் அவன் அழைப்பை ஏற்காமல் போகவும் பதினோரு மணியளவில் அவனது அறையின் பால்கனியில் அமர்ந்தவாறே உறங்கிப் போனான். 

 

         நடுநிசி ஒன்றரை மணியளவில் கைப்பேசியின் சத்தத்தில் பதறியடித்து எழுந்த ரகு, எழுந்த வேகத்தில் கைப்பேசியைக் கீழே தவற விட, திரையில் தெரிந்த பெயரைக் கண்டதும் வேகமாக கைப்பேசியை எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்து அழைப்பை ஏற்ற மறுநொடி “ஏன்டா பரதேசி… ரெண்டு மணி நேரமா ஒருத்தன் ஃபோன் பண்றானே… அவன் ஏன் பண்றான் எதுக்கு பண்றான்னு ஒருதடவ எடுத்து கேக்க மாட்டியா… அப்டி அங்க என்னத்தடா கழட்டிட்ருக்க…” என்று தூக்கம் கெட்ட எரிச்சலிலும் அவன் அழைப்பை ஏற்கா கோபத்திலும் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான். 

 

         ஆர்யனோ சிறிதும் பதறாமல் சிறு சிரிப்போடு “ஹப்பா என் மச்சான கடுப்பேத்திட்டேன்… என்ன டா கேட்ட… கழட்டிட்டு வேல பாத்ததால தான்டா உன் ஃபோன எடுக்கல… உனக்கு தெரியாதாடா நா அந்த நேரத்துல இடியே விழுநாதாலும் டிஸ்ட்ராக்ட் ஆக மாட்டேன்னு…” என்றான்.

 

          ரகு தலையில் அடித்துக் கொண்டு “கருமம் புடிச்சவனே… ச்சை உனக்கு எத்தன தடவ சொல்றது… யாரு அன்னிக்கு பீச்ல உன்னை உரசுச்சே அந்த வெள்ளக்காரியா…” என்று கேட்க, ஆர்யன் “ஹ்ம்ம் ஆமா மச்சான்…” என்று ஒருவிதமாக சிரிக்க, 

 

         ரகு எரிச்சலொடு “ச்சை… என்னமோ பண்ணி தொல… சரி நா ஏன் கால் பண்ணேன்னா… லிங்கம் குடுத்த வேலய முடிச்சுட்டான்… நீ ஃபோன் எடுக்காததால… நா நம்ம குடோனுக்கு கொண்டு போக சொல்லிட்டேன்…” என்றான். 

 

        அதுவரை ரகுவிடம் இலகுவாகப் பேசிக் கொண்டிருந்த ஆர்யன் குரலில் கடுமையேற “ஓகே ரகு… நல்லதுதான்… நீ ப்ளைட் புக் பண்ணு… நாம விடியும் நேரம் அங்க இருக்கணும்…” என்றான். 

 

                  ரகு “சரி ஆர்யா… ஆனா உன் கோவத்த கொறச்சுக்க… நமக்கு இப்ப அவ சிதம்பரத்த எங்க அனுப்பி வச்சுருக்கான்னு தெரியணும்… ஜேவும் அவன் ஆளுங்கள விட்டு விசாரிச்சுட்டான்… அவ அவங்கள அமெரிக்கா அனுப்பி வச்சுருக்கா… ஆனா அங்க எங்க வச்சுருக்கான்னு கண்டுபுடிக்க முடியல… ஸோ பொறுமையா இரு…” என்று கூற, 

 

        ஆர்யன் தீவிரமானக் குரலில் “சரிடா… நீ சொல்றத கேக்றேன்… ஆனா அவ முரண்டு புடிச்சா…” என்று பல்லைக் கடிக்க, 

 

        ரகு சிறிது மௌனத்திற்குப் பிறகு “அப்டி எதாவது நடந்தா… நீ உன் ஸ்டைல்ல விசாரிக்கலாம்…” என்று கூற, 

 

       ஆர்யன் சிறிது இளகி “ம்ம்… அதான் என் மச்சான்… என் மனசுல உள்ளத அப்டியே கேட்ச் பண்ணிக்ற… சரி டா… நீ டிக்கெட் போட்டுட்டு எனக்கு மெசேஜ் பண்ணு…” என்றுவிட்டு “பேபி லெட்ஸ் கேவ் ஏன் அனதர் ஸெஷன்…” என்று அழைப்பைக் கூட துண்டிக்காது அவன் வேலையைத் தொடங்க, 

 

        ரகு தலையில் அடித்துக் கொண்டு “கருமம்… கருமம்… இவனுக்கு இதே வேலயா போச்சு… எப்ப பாரு லைன கட் பண்ணாமயே அவன் வேலல பிஸியாயிட்றான்…” என்றவாறே அழைப்பைத் துண்டித்தப் பின்பும் “நாந்தான் இந்த கருமத்தக் கேக்க வேண்டியிருக்கு… இந்த பரதேசிக்கு பலதடவ பாடமா படிச்சாலும் மண்டைல ஏற மாட்டேன்ங்குது… என்னை கடுப்பேத்றத்துக்குனே பண்ணுவான் போல…” என்று தன் புலம்பலை நிறுத்தாது தன் கைப்பேசியில் கூகுள் ஆண்டவர் உதவியோடு விமானங்களின் பட்டியலைப் பார்க்க ஆரம்பித்தான். பத்து நிமிடத்தில் தங்களுக்கான விமானத்தைத் தேர்ந்தெடுத்து பயணச்சீட்டை முன்பதிவு செய்து தன் நண்பனுக்கும் குறுந்தகவல் அனுப்பிவிட்டு பயணத்திற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருப்பதால் விட்ட இடத்திலிருந்துத் தன் தூக்கத்தைத் தொடர ஆரம்பித்தான்.

 

                   இவனுங்க அவனுங்க வேலய முடிச்சுட்டு கெளம்பட்டும்… நாம தேன்மலருக்கு என்னாச்சுன்னு பாத்துட்டு வருவோம்.

 

                     தேன்மலருக்கு தன்னை யாரோ பின்தொடர்வது போன்று தோன்றும்போதே அனைத்திற்கும் தயாராயிருந்தவள், தன்னை திடீரென்று இருவர் பின்னிருந்துப பிடிக்கவும் சற்று நிலைத் தடுமாற, அந்த கணத்தில் அவர்கள் அடித்த மயக்க மருந்தை இரண்டு முறை உள்ளிழுத்து விட்டாள். அதையுணர்ந்த மறுகணம் தன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு திமிறினாள். அவள் திமிறும் போதே அவளைக் காரில் ஏற்றிக் காரைக் கிளம்பியதால், சிறிது நேரம் அவர்களின் பிடியில் அவள் திமிற, அதிலொருவன் அவள் கத்தாமலிருக்க அவள் வாயைப் ப்ளாஸ்திரிக் கொண்டு மூடினான். 

 

        அவளைப் பிடிக்க முடியாமல் அவர்கள் திணற, லிங்கம் “போங்கடா தடிமாடுங்களா… முதல்ல அவள கட்டுங்கடா…” என்று கத்தினான். அதனால் அவளைப் பிடித்திருந்தவர்கள் அவளைக் கட்ட கீழேக் கிடந்த கயிறை எடுக்க முயற்சிக்க, அதில் ஒருவன் தேன்மலரை பிடித்திருந்தப் பிடியை நழுவ விடவும், லிங்கம் முன்னிருக்கையிலிருந்து சட்டென்று தேன்மலர் கையைப் பற்றியவன் அவனை நோக்கி இனிமையான வசவு மொழிகள் பொழிந்துக் கொண்டே, தேன்மலர் போட்டிருந்தத் துப்பட்டாவை உருவி “இந்தாங்கடா… இத வச்சு கட்டுங்க…” என்றான். 

 

           ஒருவன் அந்தத் துப்பட்டாவை வாங்கி அவள் கைகளைப் பின்னே வளைத்து ஒன்றாக வைத்து இறுக்கமாகக் கட்டினான். தேன்மலர் சிறிதளவு மயக்க மருந்தை சுவாசித்திருந்ததால் அவளுக்கு கண்களை சுழற்றிக் கொண்டு வர, மெல்ல தளர்ந்து இமைமூடி சீட்டில் சாய்ந்து விட்டாள். கார் ஓட்டுபவன் தவிர லிங்கத்தோடு சேர்த்து ஆறு பேர் அந்த காரிலிருந்தனர். 

 

         அனைவரும் வடச்சென்னையை சேர்ந்தவர்கள், அனைவரும் ஒழுங்காகத் திருத்தப்பட்ட முடியுடன், உடற்பயிற்சி மூலம் உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தனர். ஒவ்வொருவரும் இரண்டு பேரை ஒரே நேரத்தில் பந்தாடக் கூடிய வலிமையுடையவர்கள். அவர்களின் வெளிப்புற தோற்றம் பார்த்தால் யாரும் அவர்கள் ரவுடிகள் என்று நம்ப மாட்டார்கள். அவர்கள் வாயைத் திறந்துப் பேசினாள் தான் அவர்கள் வடச்சென்னையை சேர்ந்தவர்கள் என்றேக் கண்டுக்கொள்ள முடியும். லிங்கம் முன்னிருக்கையில் அமர்ந்திருக்க, இருவர் தேன்மலரோடு அவன் பின்னே அமர்ந்திருக்க, அவர்களுக்குப் பின்னிருந்த இருக்கையில் மூவர் அமர்ந்திருந்தனர்.

 

         அவள் முழுதாக மயங்கி விட்டதாக நினைத்து தேன்மலர் அருகில் அமர்ந்திருந்த ஒருவன் “அண்ணாத்த… இது பாக்க தான் கம்பியாக்கீது… ஆனா ஸ்ட்ரென்த் ஏகமாக்கீது… நாங்க ரெண்டு பேரு பின்னாடி ரெண்டு பேரு புச்சி அழுத்தாறானுங்கோ…. அந்த துள்ளு துள்ளுது…” என்று மூச்சு வாங்கியவாறுக் கூற, 

 

        லிங்கம் கடுப்பாக “போடா…” என்று காதில் கேட்க முடியா வார்த்தைகள் சில கூறியவன் “பொம்பள புள்ளய புயிக்க வக்கில்ல… வாய் மட்டும் நல்லா… ம்ம்ம்… நல்லா கறி, மீனுன்னு துன்றல்ல… ஊர் போய் சேர்ர வர வாய தொறக்க கூடாது நீ…” என்று திட்ட, பின்னாலிருந்த மற்ற நால்வரும் அவனைப் பார்த்து நக்கலாக சிரித்தனர். அவன் பதிலுக்கு அவர்களை முறைத்து விட்டு, இருள் வழியே சாலையை ஊடுருவ ஆரம்பித்தான். 

 

         தேன்மலருக்கு யார் இவர்கள்? தன்னை எங்கே அழைத்து போகிறார்கள்? என்ற கேள்விகள் மண்டையைக் குடைந்தாலும், அவர்கள் சாதாரண கடத்தல் கும்பல் அல்ல என்று மனதில் பட்டதால் அமைதியாக அசையாதிருந்தாள். அவர்கள் யாரோ ஒருவரின் கட்டளையின் பேரில் தன்னைக் கடத்தியிருப்பார்களென்று தன்னைக் காரில் ஏற்றும் போதே லிங்கம் யாருக்கோ அழைத்து விடயம் கூறியபோதேக் கண்டுக் கொண்டவள் யார் தன்னைக் கடத்தச் சொன்னதென்று தான் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். அவள் சிறிதாக சுவாசித்த மயக்க மருந்து தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்க, சிறிது சிறிதாக மயக்க நிலைக்குச் சென்றாள்.

 

                       ஒரு நான்கு மணி நேரம் கழித்து மயக்கம் தெளிய, “அந்தான்ட கார நெறுத்துடா… டேய் பிஸ்ஸடிக்றவங்க அடிச்சுக்கோங்க… மத்தவங்க வாங்கடா டீ அடிச்சுட்டு வருவோம்….” என்று ஒரு குரல் கூற, அதற்கு ஒரு குரல் “அண்ணாத்த… இத்த தனியா உட்டு எப்டி போறது…” என்று கேட்க, முதலில் பேசியக் குரல் “அது இன்னும் எட்டு மணி நேரத்துக்கு எந்திரிக்காது… மருந்து அவ்ளோ பவர்புல்லு… புது ஐயிட்டம்… இவ பெரிய மூளக்காரியாம்… அதான் சாரே குடுத்துட்டாரு…” என்று கூறியது. 

 

           இவையனைத்தும் தேன்மலருக்கு ஏதோ கிணற்றுக்குள்ளிருந்து கேட்பதுபோல் இருந்தாலும் அந்த குரல்கள் பேசிய விடயங்களை மட்டும் நன்றாக உள்வாங்கித் தன் மூளையில் பதிய வைத்துக் கொண்டாள். மயக்க மருந்தைப் பற்றி பேசிய போதே அவர்கள் என்ன மருந்து உபயோகித்திருப்பார்களென்று ஊகித்து விட்டாள். 

 

        காரிலிருந்து மற்றவர்கள் இறங்கிச் சென்றுவிட, தேன்மலர் மெல்ல மயக்கம் தெளிந்துக் கண் விழித்தமர்ந்து தான் எங்கிருக்கிறோமென்று அறிந்துக் கொள்ள சாலையில் தன் கவனம் பதித்தாள். சுற்றிலும் இருளும் கண்ணை பறிக்கும் ஒளியுடன் வாகனங்கள் சத்தத்தோடு போவதும் வருவதுமாக இருந்த நெடுஞ்சாலையைத் தவிர வேறெதுவும் அவள் கண்களுக்குப் புலப்படவில்லை. தூரமாகத் தெரிந்த தேநீர்க் கடையிலும் பெயர் பலகை ஏதுமில்லாததாலும், சாலையில் செல்லும் பேருந்துகள் பெரும்பாலும் தனியார் பேருந்துகளாகவே இருந்ததாலும் அவளால் தான் இருக்குமிடம் அறிய முடியவில்லை. 

 

         சரியென்று அவளை எங்கோ அழைத்துப் போகிறார்களே போகும் வழியில் அறிந்துக் கொள்ளலாமென்று முடிவெடுத்தவளை ஒரு அரசாங்கப் பேருந்து எதிர் திசையில் சென்னை-பெங்களூர் என்ற தமிழ் பெயர் பலகையோடுக் கடக்க, அதைக் கவனித்த தேன்மலர் தன்னை சென்னைக்கு அழைத்துக் கொண்டுப் போகிறார்களென்று ஊகித்துக் கொண்டு சற்று நிமிர்ந்தமர்ந்தாள். பின்னே ஏதோ குத்துவது போலிருக்கவும் பின்னே கட்டப்பட்டிருந்தக் கைகளால் துழாவினாள். அவள் கையில் ஏதோத் தட்டுப்பட, அதைத் தடவிப் பார்த்தவள் கண்கள் பிரகாசமாகிய மறுகணம் கலங்கியது. தேன்மலர் மனம் கையில் கிடைத்தப் பொருளால் சற்று நிம்மதியடைய, காரை நோக்கி தேநீர் அருந்தச் சென்றவர்கள் வரவும் கையில் அதை அவர்கள் அறியாமல் பத்திரப் படுத்திக் கொண்டவள், பழையபடி மயங்கியவாறு சீட்டில் சாய்ந்தமர்ந்துக் கொண்டாள். காரில் அவர்கள் அனைவரும் ஏற, கார் தன் பயணத்தைத் தொடர்ந்தது.

 

                     தேன்மலரைக் கடத்தியபோது அவள் கையிலிருந்த பர்ஸ், பை என்று அனைத்தும் விழுந்துவிட வீட்டுச் சாவி மட்டும் அவளது கைச்செயினில் சிக்கிக் கொண்டது. அவளது கையை அவர்கள் வளைத்துப் பிடித்துக் கட்டிய போது அச்சாவி சீட்டில் விழுந்துவிட, அதன்மேலேயே அவள் அமர்ந்து விடவும் நல்லவேளை சாவி காருக்குள் கீழே விழாமல் தப்பித்தது. தேன்மலர் கையிலிருந்த வீட்டுச் சாவியினை ஒருமுறை தடவிப் பார்த்தவள் மனதுள் “அப்பா… நீ என்கூட தான் இருக்கியா…” என்று கேள்விக் கேட்டு மனம் நிறைந்தாள். 

 

      அதற்குள் தன் பின்னே ஊசித் துளைக்கும் பார்வையை உணர்ந்தவள், பின்னே அமர்ந்திருந்தவர்கள் சன்னமானக் குரலில் ஏதோ கிசுகிசுக்கத் தன் காதைக் கூர்த்தீட்டினாள். 

 

        பின்னிருந்த ஒருவன் “டேய் என்னடா… அண்ணாத்தைக்கு இதெல்லாம் புடிக்காது தெரியும்ல…” என்று அடிக்குரலில் சீற,

 

       மற்றொருவன் “டேய் நீ வேற… அந்தாளும் அனுபிவிக்க மாட்டாரு… நம்மளையும் விட மாட்டாரு… பிகரு செமயா இருக்குடா… மார்டனான நாட்டுக்கட்டை டா… இப்டி ஒன்ன பாத்துக்கினு சும்மா கெடன்னு சொன்னா… எப்டி டா…” என்று ஒருவிதமானக் குரலில் கூறினான். 

 

         அதைக் கேட்ட தேன்மலர் அவனை அப்போதே அடித்துத் துவம்சம் செய்துவிடுமளவு கோபம் வந்தாலும், தன் அனலையெல்லாம் உள்ளேயே அடக்கி நிலைமையுணர்ந்து அமைதியாகயிருந்தாள். 

 

        அவன் அப்படிக் கூறியதும் முதலில் பேசியவன் “டோமரு… மூடிக்கினு பேசாம வா… இல்ல காலைல ஒருத்தன அனுப்பிவச்சியே அவனுக்கு தொனையா நீயும் போவ…” என்று எச்சரிக்க, 

 

         தேன்மலரை தப்பானக் கண்ணோட்டத்தில் பார்த்தவன் முகம் பயத்தில் வெளுத்தாலும் நக்கலாக “அய்யோ பயந்துட்டேன்… போங்கடா…” என்றவன் பின் தனிந்தக் குரலில் “சரி டா… ஒன்னும் பண்ண தானே கூடாது… பாக்கலால…” என்று தேன்மலரை பார்வையாலே அளந்தான். 

 

         அமைதியாக இவர்களது உரையாடலைக் கேட்டுக் கொண்டு வந்த மற்றொருவன் “நீ இப்டியே பாரு பச்சக்கிளி… உன் கண்ண அண்ணாத்த புடுங்குறாரா இல்லயானு பாரு…” என்று கூற, பச்சைக்கிளி அவனை முறைக்க, 

 

        லிங்கம் “அங்க இண்ணாடா… குசுகுசுன்னு…” என்று கேட்க, 

 

         பச்சைக்கிளியை முதலில் எச்சரித்தவன் “ஒன்னுல்ல அண்ணாத்த… பச்சக்கிளி காலைல ஒரு மட்ட பண்ணான்ல… அத்த பத்தி சொல்லிக்கினு வந்தான்…” என்றான். 

 

          லிங்கம் “வாய மூடிக்கினு பேசாம வாங்கடா…” என்றுவிட்டு காரில் பாட்டை சத்தமாக ஒலிக்க விட, 

 

       அவனிடம் பதில் கூறியவன் “டேய் டோமரு… உன் வால சுருட்டிகினு பேசாம வா… எதாவது பண்ணி ஏழரைய கூட்ண… நானே உன்னை மட்ட பண்ணிருவேன்…” என்று மிரட்ட, பச்சக்கிளி கோபமாக அவனை முறைத்துவிட்டு தன் கைப்பேசியில் தலையை நுழைத்துக் கொண்டான். தேன்மலர் அவர்களின் உரையாடல் கேட்டு உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தாள். 

 

                            நடுசாமம் மூன்றரை மணி, கோவா டபோலிம் விமான நிலையம் ஆர்யனும் ரகுவும் தாங்கள் சென்னை செல்ல வேண்டிய விமானத்தில் ஏறி அமர்ந்தனர். ரகு முகத்தில் கோபத்தின் சாயல் தெரிய, ஆர்யன் சிறு சிரிப்போடு “என்ன மச்சான்… கோவமாயிருக்கியா…” என்று கேட்க, 

 

        ரகு “ஆமா… அதுக்கென்ன இப்ப…” என்று எரிந்து விழ, 

 

         ஆர்யன் “சரி விடு மச்சான்… என்னமோ புதுசா பண்ண மாறி கோச்சுக்குற…” என்று அவன் முகம் திருப்ப, 

 

        ரகு அவன் கையைத் தட்டிவிட்டு “எத்தன தடவ சொல்லிற்கேன்… என்ன கருமம் வேணாலும் பண்ணு அத கால கட் பண்ணிட்டு பண்ணுன்னு… அப்றம் ஏன்டா அப்டியே பண்ற….” என்று பொங்கினான். 

 

        ஆர்யன் “அப்டியாச்சும் நீ எதாவது ஒரு பொண்ண பாக்க மாட்டியான்னு தான்…” என்று கூற, ரகு திரும்பி அவனை முறைக்க, 

 

        ஆர்யன் வெக்கமேயில்லாமல் ஈஈஈ என்று இளித்து வைக்க, ரகு தலையில் அடித்துக் கொண்டு “கொரங்கு கூட சகவாசம் வச்சுகிட்டு…” என்று முணுமுணுத்துவிட்டு சிரித்தபடி “பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மச்சான்…” என்று கூற, இப்போது ஆர்யன் முகம் கோபத்தின் சாயல் பூசிக் கொண்டது. 

 

        ஆர்யன் “போடா சாமியாரு… உனக்கெல்லாம் கல்யாணமாகி… என் தங்கச்சி தான் பாவம்… அந்த பாவப்பட்ட ஜீவன் எங்கயிருக்கோ…” என்று புலம்ப, ரகு சிரிக்க ஆர்யனும் சிரித்து விட்டான். 

 

       விமானம் புறப்படவும் அவர்களின் பேச்சு தடைபட, இந்தப் பயணம் ஏனென்ற நினைவு வர அதுவரை சிரித்த படி இருந்த ரகு எவ்வித உணர்வுமின்றி அமைதியாகிவிட, ஆர்யனின் முகமோ கோபத்தைத் தத்தெடுத்தது. ரகு அப்படி தான் அவன் தன் இயல்பு மாறாமல் இருப்பது ஆர்யன் ஒருவனிடமே, மற்றவர்களுக்கு ரகு அமைதியானவன். ரகு எதையும் யோசித்து பதறாமல் தெளிவாக யோசித்து செய்து முடிப்பவன். ஆனால் ஆர்யன் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவன், கோபக்காரன். 

 

                              நான்கு மணியளவில் தேன்மலரைக் கடத்தி வந்த கார் போரூரில் இருந்த ஒரு குடோன் முன்பு நின்றது. தேன்மலரை காரிலிருந்து இருவர் குடோனுக்குள் தூக்கிச் சென்றனர். செல்லும் வழியில் தேன்மலர் சிறிதாகக் கண் திறந்து அச்சுற்றுப்புறத்தைப் பார்த்தாள். குடியிருப்புகள் அனைத்தும் அந்த குடோனிலிருந்து அரைக்கிலோ மீட்டர் தூரத்திலிருந்தது. குடோனைச் சுற்றிலும் மரங்களும் புதர்களும் அடர்ந்து வளர்ந்திருந்தது. அவற்றைப் பார்த்தால் கவனிப்பாரற்று வளரந்ததுபோலில்லை வேண்டுமென்றே வளர விட்டதுப் போலிருந்தது. ஏனெனில் குடோன் உள்ளே நன்குப் பராமரிக்கப் பட்டு அடிக்கடி உபயோகப் படுத்துவதற்கான அடையாளங்களோடிருந்தது. அந்நேரத்தில் அங்கு இருவர் அவர்களுக்காகக் காத்திருந்நதனர். பின் அந்த இருவர் குடோனைத் திறந்து விட, லிங்கமும் அவன் ஆட்களும் தேன்மலரை உள்ளுக்குள் தூக்கிச் சென்றனர். தேன்மலர் தன் கையிலிருந்தச் சாவியை இறுகப் பற்றிக் கொண்டாள். 

 

         தேன்மலரை ஆபிஸ் ரூம் போன்ற அறைக்குள்ளிருந்த ஒரு சிறிய அறையின் கதவைத் திறந்து அவ்வறையினுள் ஒரு இடத்தில் கிடத்தினர். லிங்கம் அவள் காலையும் கட்டச் சொல்ல, ஒருவன் அவள் காலை கயிறு கொண்டுச் கட்டினான். பின் அனைவரும் அறையிலிருந்து வெளியேறினர். அவர்கள் சென்றதை உறுதிப் படுத்திய தேன்மலர், மெல்ல கண் விழித்து அந்த அறையை தன் விழியால் அளந்தாள். அவ்வறை ஒரு சிறிய வீடு போல் அனைத்து வசதிகளையும் கொண்டிருப்பதையும் அதோடு ஒரு பெரிய உயர்தர படுக்கையையும் கொண்டிருந்ததால், தேன்மலர் அங்கு யாரோ அவ்வபோது வந்து தங்கிச் செல்வார்கள் என்று ஊகித்துக் கொண்டாள். அதோடு அவளை உள்ளேத் தூக்கி வருகையில் அவள் நாசியைத் தீண்டிய மருந்துகளின் வாடையைக் கொண்டே, அதுவொரு மருந்து குடோனென்று அறிந்துக் கொண்டாள். பின் சிறிதும் தாமதியாது, தன் கையிலிருந்து சாவியால் தன் கையைக் கட்டியிருந்த தன் துப்பட்டாவை அறுக்க ஆரம்பித்தாள். அது சிஃபான் துப்பட்டாவாகையால் சாவி மூலம் அதைக் கிழித்தெறிய பெரிதான மெனக்கெடலில்லாமல் பத்து நிமிடத்தில் அதை அறுத்தெறிந்தாள். பின் காலைக் கட்டியிருந்தக் கயிற்றை அவள் அவிழ்த்துக் முடிக்க, அச்சமயம் அவ்வறைக் கதவை யாரோத் திறப்பதுப் போலிருக்கவும் மீண்டும் தன் காலில் கயிற்றை சுற்றிக் கொண்டு, கையையும் துப்படாவால் சுற்றிக் கொண்டுக் கட்டியது போல் பின்னே வைத்துக் கொண்டு அவர்கள் எப்படி படுக்க வைத்தார்களோ அப்படி அறைக்கண் மூடிப் படுத்துக் கொண்டாள். 

 

                        அறைக்குள் அவளை வேறு கண்ணோட்டத்தோடுப் பார்த்த பச்சைக்கிளி அவளை ஒருமாதிரி பார்த்துக் கொண்டே மெல்ல உள்ளே வந்தான். வந்தவன் அவளருகில் அமர்ந்து அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் இதழ்களில் ஒரு குரூரப் புன்னகைப் படரவிட்டு அவளின் முகத்தருகேத் தன் முகத்தைக் கொண்டுச் சென்றான். அவன் எதிர்பாரா நேரம் தேன்மலர் திடீரென கண் விழித்து முழியை உருட்டி முழிக்க, அதில் அவன் பயந்துப் பின்வாங்கி அலறப் போகும் வேளை, நொடிப் பொழுதில் தேன்மலர் பின்னிருந்து தன் கையை உருவி துப்பட்டாவைத் தூக்கி எறிந்து விட்டு அவன் வாயில் தன் கைமூட்டியால் ஓங்கி குத்த, அவன் வலியில் அன்னிச்சையாய்த் தன் வாயை மூடியத் தன் கையை எடுத்துப் பார்க்க அதில் அவன் முன் பல்லொன்று ரத்தத்தோடுக் கிடந்தது. அவளின் எதிர்பாராத் தாக்குதலில் மிரண்டு நின்ற பச்சைக்கிளி அவன் கையில் உடைந்தத் தன் பல்லைப் பார்த்ததும் ஆத்திரம் கொண்டு அவளை நெருங்க, தேன்மலர் நொடியில் காலைச் சுற்றியிருந்தக் கயிறை உதறிவிட்டு எழும் போதேத் தன் கால் மூட்டால் அவன் தாவாங்கட்டையைத் தாக்க, மீண்டும் அவன் வாயிலிருந்து ரத்தம் வந்தது. எழுந்து நின்ற தேன்மலர் அனலென அவனை முறைத்து ஒருகையால் அவன் முடியைக் கொத்தாகப் பிடித்து மறுகை முட்டியால் அவன் முதுகில் தாக்க ஆரம்பித்தாள். அவன் சத்தமிடாமிலிருக்க அவ்வப்போது அவன் வாயில் சிலபல குத்துகளை விட்டாள். அவன் அவளை எதிர்த் தாக்குதல் செய்யப் போராட, தேன்மலர் அதற்கெல்லாம் இடம் தராமல் காரில் அவன் பேசியப் பேச்சில் கொலைவெறியில் இருந்தவள் அவனைத் தூக்கி நிறுத்தி அவனைக் கண்களால் எரித்து விடுவது போல் முறைத்தவள் ஓங்கித் தன் கால் முட்டியால் அவனது மர்ம இடத்தில் அடி ஒன்றை இறக்க, அவன் சத்தமிடக் கூட முடியாமல் அய்யோ அம்மாவென்று முனகிக் கொண்டே தரையில் விழுந்தான். தேன்மலர் “இனி எதாவது ஒரு பொண்ண தப்பா பாத்த…” என்று நாக்கை மடிக்கி விரல் நீட்டி எச்சரித்தவள், யாரோ வரும் அரவம் கேட்டு அங்கிருந்த பூ ஜாடியைக் கையில் எடுத்துக் கொண்டு கதவினருகில் சென்று நின்றாள். 

 

         ஏதோ சத்தம் கேட்கிறதே என்று பச்சைக்கிளியை காரில் எச்சரித்தவன் அறைக் கதவைத் திறந்துப் பார்க்க, அங்கு பச்சைக்கிளி தரையில் வலியில் முனகிப் புரள்வதைக் கண்டு “டேய் என்னடா ஆச்சு…” என்று பதற்றமாக உள்ளே வர, தேன்மலர் சிறிதும் தாமதியாது பூ ஜாடியால் அவன் பின் மண்டையில் அடிக்க, அவன் பின்னந்தலையைப் பிடித்துக் கொண்டு திரும்ப, தேன்மலர் நிற்பதைப் பார்த்து “ஏய் நீ எப்டி…” என்றவன் “அண்ணாத்த…” என்று கத்த, தேன்மலர் பூ ஜாடியை அவன் தலை மீது உடைக்க, அவன் தலையை அதுக் கிழித்து ரத்தம் வரச் செய்ய, தலையைப் பிடித்துக் கொண்டே அவன் மயங்கிச் சரிந்தான். 

 

          பின் நொடியும் தாமதியாது தேன்மலர் அவ்வறை விட்டு வெளியேறி, ஆபிஸ் அறையிலிருந்து வெளிவர, இரண்டாமவன் போட்ட சத்தத்தில் வெளியில் பேசிக் கொண்டிருந்த மற்றவர்கள் அங்கு ஓடி வருவது தெரிந்ததும், தேன்மலர் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தப் பெட்டிகளுக்குப் பின்னே ஒளிந்துக் கொண்டாள். அவர்களோடு லிங்கமும் ஆபிஸ் அறைக்குள் ஓட, தேன்மலர் சத்தமிடாது விரைவாக பெட்டிகளுக்குப் பின்னிருந்து வெளி வந்து அங்கிருந்து வெளியேச் செல்லும் பாதையில் ஓடத் தொடங்கினாள். அவள் குடோனை விட்டு வெளியேறும் நேரம் எதிரே ஒருவன் ஓடி வர, அவனைத் தன் காலால் இடறிவிட்டு குடோனை விட்டு வெளியேறியவள் குடியிருப்புப் பகுதியை நோக்கி ஓடத் தொடங்கினாள். 

 

        அதற்குள் உள்ளிருந்த பச்சைக்கிளி விடயம் கூற, லிங்கம் அவனை ஓங்கி அறைந்துவிட்டு மற்றவர்களோடு விரைந்து வெளியே வந்து ஓடிக் கொண்டிருந்த தேன்மலரை துரத்த ஆரம்பித்தான். அதைப் பார்த்த தேன்மலர் ஓட்டத்தின் வேகம் கூட்டி பத்து நிமிடத்தில் குடியிருப்புப் பகுதியை நெருங்கியவள், ஒருத் தெருவைத் தாண்டி மறுத் தெருவின் வளைவிலிருந்தப் புதர் மண்டிய இடத்தில் ஒரு புதரின் பின் நன்றாகத் தன்னை மறைத்து ஒளிந்துக் கொண்டாள். 

 

        அதுவரை தெரியாத நடுக்கம் அவள் உடல் முழுதும் அப்போது அவளுக்குத் தெரிய, அவளின் இதயம் துடிக்கும் சத்தம் அவளைப் பயமுறுத்தும் அளவுக்கு அவளுக்கேக் கேட்டது. பின்தங்கி வந்த லிங்கமும் அவனின் ஆட்களும் அவள் சென்ற திசையறியாது ஆளுக்கொரு திசையில் சென்று தேட, தேன்மலர் படபடக்கும் இதயத்தோடு அதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். 

 

        ஒருவன் இவளிருக்கும் புதர் பகுதியின் பக்கம் தேட, அவளின் விழிகள் விரிந்து இதயம் வெகு வேகமாகத் துடிக்க ஆரம்பிக்க, அப்போது பின்னிருந்து ஒரு கை அவளின் வாய்ப் பொத்த, முதல் நாள் மதியத்திலிருந்து சாப்பிடாததும், மயக்க மருந்தை நுகர்ந்ததும், சற்றுமுன் ஓடி வந்தக் களைப்பும், பயந்திருந்த அவளை யாரோத் திடீரென்று தொட்டதால் வந்த அதிர்ச்சியிலும் அவளுக்குக் கண்களை சுழற்றிக் கொண்டு வர, அப்படியேத் திரும்பி மங்கலாகத் தெரிந்த உருவத்தைப் பார்த்தவள் நெஞ்சம் அதுவரைக் கொண்டிருந்த பயம் மறந்து ஏனென்றே அறியாமல் நிம்மதிக் கொள்ள, அப்படியே அவ்வுருவத்தின் மீது மயங்கி சரிந்தாள்.

தொடரும்….

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்