Loading

மோதும் மேகங்கள்-9   
       
            இசை தனக்கு பணியாரம் சாப்பிட்டதே வயிறு நிரம்பி விட்டது எனக் கூறிவிட்டு சோர்வாக உள்ளது என சீக்கிரமாக தனது அறைக்கு சென்று விட்டாள். அவள் தூங்க முயற்சிக்க தூக்கம் தான் வருவேனோ என்றிருந்தது. அவள் இன்று மாலை ஆதி வீட்டில் நடந்தததையே சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவள்  இன்று நடந்த சம்பவங்களை மறந்து உறங்கலாம் என நினைத்த போதும் அவளால் அது இயலவில்லை. நாம் மறக்க வேண்டும் என நினைக்கும் விஷயங்களை தான் அதிகம் ஞாபகம் வைத்திருப்போம். அது போலவே இப்பொழுது இசைக்கும் மறக்க வேண்டும் என நினைக்கும் விஷயங்களை எல்லாம் தான்  ஞாபகம் வந்து கொண்டு இருந்தது. ஆதி வீட்டின் காவலாளி சண்முகம் அவளை ஆதி அழைத்தான் என உள்ளே அனுமதித்து போதே அவள் ஆதியை நன்றாக அவனுக்கு உரைக்கும் படி திட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு தான் சென்றாள். இரண்டு மூன்று முறை அவளை சந்தித்து அவளுடன் சண்டை போட்டு விட்டு இன்று நாள் முழுவதும் அவள் அவனுக்கு அசிஸ்டெண்ட் ஆக வேலை செய்த பிறகும் அவன் தன்னை யாரென தெரியாதது போல் காட்டிக் கொண்டது இசையால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அவனை திட்டி விட்டு வேலையை விட்டு விடலாம் என நினைத்துக் கொண்டு சென்ற இசை ஆதியை கண்டதும்  அவளுக்கு ஏனோ ஸ்வேதாவின் முகம் தான்  ஞாபகம் வந்தது. தான் ஏதாவது செய்து அதனால் ஸ்வேதாவிற்கு மூணு மாத சம்பளமும், வேலையும் போய் விடக்கூடாதே என கருதிய  தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அவனிடம் தான் கூற வந்ததை சண்டையிடாமல் வேறு ஒரு முறையில்  கூறிவிட்டு வந்தாள்.

          ‘மனசாட்சி இல்லாத மனித குரங்கு. எப்படி அவனால இப்படி எல்லாம் நடந்துக்க முடியுது? பேரு, புகழ், பணம் எல்லாம் இருந்தா இப்படித்தான் திமிறா இருப்பாங்க போல. ஸ்வேதா முகத்துக்காக பார்த்தேன். இல்லனா அவன அங்கே நாலு வார்த்தை கேட்டுட்டு வந்திருப்பேன்’ என அவனிடம் நேரில் சண்டையிடாமல் இப்போது மனதில் அவனை திட்டிக் கொண்டிருந்தாள். மறுநாள் காலையில் வெய்யோன் தன்  செங்கதிர்களை இப்பாரினுள் பரப்ப எப்பொழுதும் சீக்கிரமாக எழுந்து கொள்ளும் இசை நேற்று ஆதி திட்டிக் கொண்டு இருந்ததில் தாமதமாகவே எழுந்தாள்.
        
           எட்டரை மணிக்கு இரவு உடையுடனே வெளியே வந்த இசையை பார்த்து முகிலன் அதிர்ச்சியாகி  “ஹே இசை.நீ இன்னும் கிளம்பலையா?ஷூட்டிங்க்கு டைமாக போகுது. நீ மொதல்ல கெளம்பு” என அவள் அவனுக்குப் பிடித்தமான நடிகர் ஆதியிடம் வேலை செய்வதால் அவளை வேலைக்கு துரத்துவதிலியே குறியாக இருந்தான்.

          இசை என்ன சொல்லுவது என தெரியாமல் முழித்துக்  கொண்டிருக்க, முகிலன் “என்ன இசை முழிக்கிற? சீக்கிரம் கெளம்பு” எனக் கூறினான் முகிலன்.

        “டேய்!அவளுக்கு தெரியாதா?அவ லேட்டா எழுந்திருக்கானா இன்னிக்கு அவளுக்கு லீவ்னு அர்த்தம். என் பொண்ணுலாம் பொறுப்பா இருப்பா. உன்ன மாதிரி ஒன்னும் இல்ல”  என அவனுக்கு சுட்ட தோசையை வைத்துவிட்டு மீண்டும் தோசை சுட சமையலறையுனுள் சென்று விட்டார் கவிதா.

          “எனக்கு எப்படிமா தெரியும்?  நேத்து நல்லா பணியாரத்தை மட்டும் கொட்டிகிட்டாளே. ஒரு வார்த்தை சொன்னாலா இவ,இன்னிக்கு அவளுக்கு லீவுனு. என் தலைவருக்கு இவளால லேட் ஆகிட போதுனு தான் நான் சொன்னேன். அதுக்குள்ள நீ உன் அருமை பொண்ணோட என்ன ஒப்பிடுற. உனக்கு இதே வேலையா போச்சு” என முகிலன் சலித்துக் கொண்டான்.

      முகிலன் கேட்ட கேள்வியில் என்ன சொல்லி சமாளிப்பது என யோசித்துக் கொண்டிருந்த இசைக்கு அவரது தாயாரே நல்ல யோசனை அளித்து விட்டார். அதை பயன்படுத்திக் கொண்டு “ஆமா அவனுக்கு இன்னிக்கு ஷுட்டிங் இல்ல. சோ  எனக்கு லீவு”  என வேலையை விட்டது தெரிந்தால் முகிலன் தன்னை திட்டுவான் என எண்ணி பொய் உரைத்தாள்.

        “ஹா சரி சரி . நீ என் கூட சேர்ந்து இனிமே படம் பார்க்க ஆரம்பி. அப்ப தான் உனக்கு இந்த ஃபீல்ட பத்தி நல்ல புரியும்” என இசைக்கு அறிவுரை வழங்கினான் முகிலன். இசைக்கு கேட்க கடுப்பாக இருந்தாலும் வேறு வழி இல்லாமல் சரி  என்றவாறு மண்டையை ஆட்டினாள்.

         “அதெல்லாம் என் பொண்ணு நல்லா புரிஞ்சு வேலை செய்வா. நீ ஒழுங்கா படிக்கிற வேலையை பாரு” எனக் கூறிவிட்டு வழக்கம் போல இசைக்கு ஊட்டி விட ஆரம்பித்தார் கவிதா.

          “வார்த்தைக்கு வார்த்தை, என் பொண்ணு என் பொண்ணுனு சொல்றது. அப்ப நான் யாரு அம்மா?” என வருத்தப்படுவது போல் நெஞ்சில் கை வைத்து டயலாக் பேசியவனை பார்த்து “இந்த மாதிரி கேவலமா நடிக்கறத விட்டுட்டு ஒழுங்கா படிச்ச உன்னையும் என் புள்ளனு சொல்லுவேன்” எனக் கூறினார் கவிதா.

         ‘டேய் முகிலா. உன் அசிங்கப்படுத்த முடிவு எடுத்துத்து இருக்காங்க. ஓடிரு’  என மனதில் நினைத்துக் கொண்டே  “மா எனக்கு காலேஜ் டைமாச்சு பாய்”  எனக் கூறி தப்பித்து விட்டான் முகிலன்.

         இசை அமர்ந்து  “எங்காவது வேலை கிடைக்குமா?” என தேடிக் கொண்டிருக்க, அவளுக்கு கிடைத்த வேலையை தக்க வைத்துக் கொள்ளவில்லையோ என அவளது மூளை சிந்திக்க தொடங்கியது. “அவன மாதிரி திமிருபுடிச்சவன் கிட்ட  வேல செய்யறத விட, நம்ம வீட்ல சும்மாவே இருக்கலாம். நடிகனா இருந்தா அவ்ளோ திமிர் இருக்கனுமா? அபி கூட தான்  நடிகன். அவன் மத்தவங்க கிட்ட எவ்ளோ நல்லா நடந்துக்கிறான்” என தனக்கு தானே பேசிக் கொண்டிருந்தாள்.  நேற்று அபி ஆதியை பற்றி விசாரித்துக் கூறிய போது  ‘நாளைக்கு சந்திக்கலாம்’ என கூறிவிட்டு அவசர அவசரமாக ஆதியை பார்க்க சென்றது அவளுக்கு ஞாபகம் வந்தது. “ச்சே. நேத்து நம்ம கூட நடிகன்னு பந்தா இல்லாம எவ்ளோ நல்லா பேசுனான். பசிக்குதுன்னு வாய் திறந்து சொல்லாமலே சாப்பாடு வாங்கி கொடுத்தான். ஆதி எதுக்கு கோபப்பட்டு போனான்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தப்ப கூட கேட்காமலே வந்து உதவி செய்தான். ஒரு நன்றி கூட சொல்லலையே. தேங்க்ஸ் சொல்லலாம்னு பார்த்தா அவனோட போன் நம்பரும் இல்ல. நேர்லயே போய் சொல்லிட்டு  வந்துடலாம்”  என நினைத்துக் கொண்டே ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு  வந்தடைந்தாள் இசை.

       அங்கே இசை ஆதியை காணாமல் அபியை நேராக சென்று பார்க்க ஆதிக்கு தான் ஏமாற்றமாக போனது. திடீரென ஆதி கூலர்ஸை கழற்றி எழுந்து நிற்பதை பார்த்த அவனுடன் பேசிக் கொண்டிருந்த அசிஸ்டன்ட் டைரக்டர் அவனை விசித்திரமாக காண, அவரை சமாளிக்க தன் தலையை கோதிவிட்டு அலைபேசி எடுத்து ‘ஒரு நிமிடம்’ என அவரிடம் சைகை காட்டிவிட்டு வராத அழைப்பை பேசுவதுப் போல் நடித்தான்.

           

        
       

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்