Loading

சில்லென வீசிய காற்று தேகத்தைத் தழுவ, கயிற்றுக் கட்டிலில் கையை முட்டுக்கு வைத்து, படுத்திருந்தான் பாரிவேந்தன். அவன் மனதை முழுவதுமாய் மலர்விழி ஆக்கிரமித்திருக்க, “மாமா!” என்றவாறே அவன் அருகில் வந்தாள் யாழினி.

அவளைக் கண்டவன், எழுந்து அமரஇந்தாங்க டீ, அத்தை கொடுக்கச் சொன்னாங்கஎனத் தேநீர் டம்பளரை நீட்ட, அதனை வாங்கிக் கொண்டவன் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான்.

இன்னும் கல்யாணத்துக்கு இரண்டு வாரம் தான் இருக்கு மாமா…” என அவள் தயங்கியவண்ணமே கூற, ‘அதற்கு என்ன இப்போ?’ என்ற பார்வைப் பார்த்தான் பாரிவேந்தன்.

இல்ல, அதுவந்து…” என இழுக்க, “என்ன சொல்ல வர்றியோ அத முழுசா சொல்லு!” என்றான் அவன் சற்று கடுப்பாக.

வெளிய எங்கயாவது போகலாம்னுஎனத் தயக்கத்தோடு வெட்கமும் போட்டியிட்டதால் வார்த்தைகளை மென்று முழுங்கியவண்ணம் கூறினாள் அவள்.

எனக்கு வேலை இருக்குஎன எழுந்தவன், டம்பளரை அவள் கரங்களில் திணித்துவிட்டு அங்கிருந்து கிளம்ப, அவள் முகத்தில் ஏமாற்றத்தின் சாயல் வெளிப்பட்டது.

யாழு, இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என்றவாறே வந்தான் சண்முகம். “மாமாக்கு டீ கொண்டாந்தேன் ண்ணா!” என்றவள், அங்கிருந்து நகர, “ஏய் நில்லு, ஏன் முகம் வாடிப் போய் கெடக்கு?” என்றான்.

நொடிப்பொழுதில் புன்னகையை ஒட்டவைத்துக் கொண்டவள், “ச்சே, ச்சே. அப்டிலாம் ஏதும் இல்லயே!” என்றாள் யாழினி.

ஏமா மாப்பிள்ளை ஏதும் சொல்லிப்புட்டாரா?” என்றான் சண்முகம். தன் தங்கையின் முகவாடலைக் கண்டு கவலையுடன் அவன் வினவ,

அப்டிலாம் ஒன்னுமில்ல ண்ணா!” என்றவள், அங்கிருந்து விறுவிறுவென வீட்டிற்குள் நுழைந்தாள். வேகமாகச் செல்லும் தன் தங்கையைச் சிந்தனையோடு பார்த்தான்.

யாழுக்கும், மாப்பிள்ளைக்கும் ஏதும் சண்டையா! என்னனு தெரியலயே, ரெண்டு பேர் முகத்துலயும் கல்யாணம் பண்ணிக்கப் போற சந்தோசத்தயே காணோம்!” எனப் புலம்பியவனை, சுந்தரபாண்டியன் அழைத்தார்.

தோ, வரேன் ப்பா!” என்றவன் அவன் முன் சென்று நிற்க, “இதுல இருக்கிற பத்திரிக்கைய நம்ம கிழக்கியூர்ல கொண்டு போய்க் கொடுத்துரு, என்னால இன்னிக்கு போக முடியல, கொஞ்சம் வேலை இருக்கு. அங்க யார்யார் சொந்தம்னு தெரியும்ல?” என்றார் ஒரு மஞ்சள் பையை நீட்டியபடி.

தெரியும் ப்பாஎன்றவன், மனதினுள்மக வந்தோனே நம்ம வீட்டு கல்யாண பத்திரிக்கைய கொண்டுபோய் வைக்கக் கூட நேரமில்லயாக்கும்!’ என மனதினுள் தன் தந்தையை சாடிக் கொண்டவன், கிழக்கியூர் செல்லத் தயாரானான்.

சண்முகம்பொறியியல் பட்டதாரி. சிறிது நாட்கள், சென்னையில் வேலைப் பார்த்தவன், அவ்வேலைப் பிடிக்காமல் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பி விட்டான். தற்பொழுது தன் தந்தையுடன் தங்களின் நிலத்தைத் தான் பராமரித்துக் கொண்டு வருகிறான்.

யாழினி, கடந்த மாதம் தான் தனது முதுகலைப் படிப்பை முடித்தாள். பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தான் இளங்கலை, முதுகலை கணிதம் முடித்தாள். படிப்பால் தான்

திருமணம்பற்றிய பேச்சுகள் எழாமல் இருக்க, தற்போது படிப்பு முடிவடைவதால் பாரிவேந்தனுக்கும், யாழினிக்கும் திருமணம் நிச்சயமானது.

யாழினியை நினைத்து மனம் வருந்தினாலும், ஒருபுறம் அவள்மேல் கோபமும் எழுந்தது. தான் மலர்விழியை விரும்புவது தெரிந்திருந்தும் இத்திருமணத்தை அவள் நடத்த நினைக்கிறாள் என்பதே கோபம் எழக் காரணம்.

அதே கோபம் அவன் முகத்திலும் பிரதிபலிக்க, தன்னறைக்குள் சென்று சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே கிளம்ப எத்தனித்தவனை, “பாரி!” என்ற அழைப்பு தடைசெய்தது.

சமையலறைக்குள் இருந்து வெளியே வந்த ரேவதி, “ஒரு வாய் சாப்ட்டு போகலாம்ல யா!” என்றார் வாஞ்சையுடன்.

இல்ல வேண்டாம் ம்மா, வெளிய கொஞ்சம் வேலை இருக்கு, வரத் தாமதமாகும். எனக்காகக் காத்திருக்க வேண்டாம்எனப் பதலளித்தவன், விறுவிறுவென வெளியே கிளம்ப, திண்ணையில் பாக்கு தட்டிக் கொண்டிருந்த, ராமாயி பாட்டி தன் பேரனைத் தடுத்து நிறுத்தினார்

ஏன்டா பாரி, ஒரு வாய் துன்னுட்டுப் போறதுல என்ன ஆகிடப் போகுது? உன் ஆத்தா மூஞ்சத் தொங்கப்போட்டுட்டு சுத்திட்டுக் கெடப்பா! போய், ஒரு வாய் சோறு துன்னுட்டுப் போ!” என்றார்.

அவர் அருகில் அமர்ந்தவன், “எனக்கு வெளிய சோலி இருக்கு அப்பாயி, எனக்கும் சேத்து நீயே துன்னுக்கோ!” என அவர் கன்னம் கிள்ளி, எழுந்து செல்ல, “இவன் எங்க சொல்ற பேச்ச கேட்கறான், நாளைக்கு என் பேத்தி வந்து சொன்னாலாவது ஒழுங்கா கேட்பானா!” என்றவாறே பாக்கைத் தட்டிக் கொண்டிருக்க, தன் மாமியார்முன் வந்து எதிர் திண்ணையில் அமர்ந்தார் ரேவதி.

அவரின் முகத்தை வைத்தே ஏதோ விசயம் என யூகித்தறிந்த ராமாயி, “ஏன் டி இப்படி சடைஞ்சு கெடக்கற? என் பேரன் இந்த ஜில்லாவயே ஆளப் பொறந்தவன். ஒருவாய் சாப்டாததால ஒன்னும் ஆகிடாதுஎனத் தன் பேரனின் பெருமைப் பேசினார் தன் மருமகளை சமாதானப்படுத்தும் பொருட்டு.

அதெல்லாம் இல்ல அத்தை, இந்தப் பய கல்யாணப் பேச்ச எடுத்ததுல இருந்தே சரியில்ல, கலகலப்பா இருந்தவன் இப்போலாம் மருந்துக்குக் கூட சிரிக்க மாட்டேங்கிறான்! இன்னும் ரெண்டே வாரம்தான் இருக்கு, ஆனா அவன் முகத்துல களையே இல்ல!” என வருத்தத்தோடு தன் கவலையைத் தன் மாமியாரிடம் கொட்டினார் ரேவதி.

அட கூறுகெட்ட சிறுக்கி, அவன் ஏதோ சோலியா இருப்பான் போல, ஆம்பளைப் பய அவன் என்ன சிங்காரிச்சுக்கிட்டா அலைய முடியும். வெளியே அங்க, இங்க போறவன் கொஞ்சம் அலுப்புல அப்படி இருப்பான், இதுக்குப் போய் மூக்க உறிஞ்சுக்கிட்டு. போய், ஏதாவது வேலை இருந்தா செய்!” எனத் தன் மருமகளை விரட்டினார்.

என் பேச்ச யாரு தான் கேட்கறா!” எனப் பெருமூச்சு விட்டவாறே, முந்தானையை உதறி இடுப்பில் சொருகி கொண்டே, அடுப்பறைக்குள் சென்றார் ரேவதி.

இன்று ரேவதிக்கு வந்த கவலை ராமாயி அப்பாயிக்கு என்றோ வந்திருந்தது. தனது கணவனின் மறுபதிப்பு தன் பேரன் என்பதால் அவன்மேல் கொள்ளைப்பிரியம் வைத்துள்ளவர். அப்படிப்பட்ட பேரன் சமீபகாலமாகக் கவலைத் தேய்ந்த முகத்தோடு சுற்றினால் அவர் கண்ணில் படாமலா போய்விடும்.

கத்திரிக்கா முத்தினா சந்தைக்கு வந்து தான ஆகணும், அப்ப வச்சுக்கறேன் இந்தப் பயல!” என்றவர், பக்கத்து வீட்டில் இருந்த கமலத்தைப் பார்த்து, “ஏன் டி கமலம், ஊருக்குள்ள ஏதோ பேசிக்கறாங்க! உண்மையா?” என வம்பிழுத்தார்.

அவரோ முகத்தைச் சிலுப்பிக்கொண்டு, “ஊருல ஆயிரத்த பேசுவாக, அதுல நீ என்னத்த கேட்கற பெரியம்மா?” என்றாள்.

நம்ம வீட்டு சமாச்சாரத்த பத்தி தான்!” என இவர் பாக்கை நொட்டு நொட்டு எனத் தட்டிக் கொண்டே வாயில் வைத்திருந்த வெற்றிலையை மெல்வதுபோல் குடும்ப விசயத்தை மெல்லத் தொடங்கினார்.

நம்ம வீட்டுல என்ன சமாச்சாரம் ஓடுது, பேத்திக்கும் பேரனுக்கும் கல்யாணத்த வச்சுக்கிட்டு இப்படி பேசலாமா பெரியம்மா?” என்றார் கமலம்.

நான் என்னத்த டி பெருசா கேட்டுப்புட்டேன், ஏதோ அந்த மலரு புள்ள வந்துருக்கிறதா காதுக்குச் சேதி வந்துச்சு. அதான், உனக்கும் தெரியுமானு கேட்கத் தான் அப்படி கேட்டேன்!” என நீட்டி முழக்கினார் ராமாயி.

எவ வந்தா எனக்கென்ன, என் வீட்டுல அடுப்பெரியுதானு பாக்கவே எனக்கு நேரமில்ல, இதுல கண்டவ வீட்டு அடுப்பெரிதானு பாக்கத் தான் நேரம் கெடக்குது பாரு. சும்மா இருக்க முடியலனு, என்னைப் பதம் பாக்காத பெரியம்மாஎன இறுதியில் சற்று கண்டிப்புடன் கூறினார் கமலம்.

உன் வீட்டு அடுப்ப ஒழுங்கா பாத்திருந்தா இப்போ அடுத்தவ வீட்டு அடுப்ப எட்டி பாக்க வேண்டியதா இருந்திருக்காது, அப்போ விட்டுட்டு இப்போ சவடால் பேசறா!” என ஜாடையாக அவளின் தவறை உணர்த்தினார் ராமாயி.

புருஷன முந்தானைல முடிஞ்சு வைக்கிற கம்பசூத்திரம்லாம் தெரிஞ்சிருந்தா நான் ஏன் அடுத்தவளுக்கு தாரைவார்க்கப் போறேன்! என் தலையெழுத்து, இதெல்லாம் கேட்கணும்னு!” எனப் புலம்பியவாறே தொழுவத்தில் கட்டியிருந்த மாட்டிற்கு தண்ணி காட்ட சென்றார்.

அப்பொழுது அங்குவந்த பழனியப்பன், தனது தாய், கமலத்திடம் ஏதோ வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருப்பதைக் கண்டு, “செத்த நேரம் அமைதியா இருக்க மாட்டியா ஆத்தா? அங்க என்ன வம்பு பண்ணிக்கிட்டு கெடக்க?” என்றார்.

வா டா மவனே! நான் என்னத்த கேட்டுப்புட்டேன், உண்மைய கேட்டேன், அவ சிலுப்பிக்கிட்டு போறா! பத்திரிக்கை வைக்கப் போனியே, எல்லா இடத்துக்கும் வச்சாச்சா?” என்றவாறே உள்ளே சென்று ஒரு சொம்பு நிறைய மோர் கொண்டு வந்து தன் மகனிடம் நீட்டினார்.

அதனை வாங்கிக் குடித்தவாறே திண்ணையில் அமர்ந்து, “சொந்தபந்தம் எல்லாத்துக்கும் வச்சாச்சு ஆத்தா, நானும் மச்சானும் சேர்ந்து வைக்க வேண்டிய இடத்துல எல்லாம் வச்சுட்டோம், இன்னும் கொஞ்சம் இடம் தான் பாக்கி. அத, ஆளுக்கொரு இடமா வச்சுக்கலாம்னு இருக்கோம்என்றார் பழனியப்பன்.

ஒரு சொந்தம்கூட விட்டுப் போகக் கூடாது டா மவனே! நாளைக்கு ராமாயி பேரன் கல்யாணத்துக்கு எங்கள அழைக்கலனு யாரும் சொல்லிடக் கூடாதுஎன்றார்.

அதெல்லாம் பேச்சு வராது ஆத்தா, சுத்துப்பட்டு எட்டூர்காரங்களுக்கும் பத்திரிக்கை வச்சுருக்கோம், நம்மூர் மாரியம்மன் கோவில்லயே கல்யாணத்த வச்சுருக்கிறதால எல்லாரும் கட்டாயம் வந்துருவாக!” என்றார் பழனியப்பன்.

அதெல்லாம் சரி தான் டா மவனே! உன் மவன கேட்டுத் தான இந்தக் கல்யாண பேச்ச ஆரம்பிச்ச?” எனக் கிசுகிசுப்பாக வினவினார். பின்னே, அவர் கேட்பது யார் காதிலாவது விழுந்தால் ஒன்றை நாலாக்கி, நாலை பதினாறாக்கி விடுவார்களே. அழகான ஒரு கதை புனையப்பட்டு, அது எட்டூருக்கும் காட்டுத் தீப் போல் பரவிவிடும்.

ஏன் ஆத்தா இப்படி கேட்கற? அவனுக்குச் சம்மதம் இல்லாமலயா நான் கல்யாண பேச்ச எடுப்பேன், அதுவும் இல்லாம அவன் மாமன் மகள தான கட்டிக்கப் போறான்! இதுல என்ன விருப்பமில்லாம கெடக்கு?” என்றார்.

 

மாமன் மவள தான் கட்டிக்க ஆசைப் படறான், சரி! ஆனா, அது மாமனோட எந்த மவ னு தெரியலயே!’ எனத் தன் மனதினுள்ளே கூறிக் கொண்டவர், “சரி, சரி. போய் வேலையப் பாரு, கல்யாண வேலை தலைக்குமேல கெடக்குஎன்றவர், மீண்டும் பாக்கு தட்ட ஆரம்பித்தார்.

சுந்தரபாண்டியனின் தங்கை தான் ரேவதி. இருவரின் இல்லமும் அருகருகே தான். பழனியப்பனின் குடும்பமும் பெரிய தலைக்கட்டு தான். சுந்தரபாண்டியனின் மதிப்பும் மரியாதைக்கும் சற்றும் குறைவு இல்லாமல் மதிக்கப்படக் கூடியவர் பழனியப்பன்.

அதனால் தான் தனது தங்கையை அவருக்கு மணமுடித்து வைத்தார் சுந்தரபாண்டியன். அருகருகே வீடு என்பதால் தனது தங்கைக்கும் ஒரு பாதுகாப்பு இருக்கும் என்பது அவரது எண்ணம்.

வேலாயுதம்ராமாயி தம்பதினரின் ஒரே தவப்புதல்வன் தான் பழனியப்பன். ஒற்றை மகன் என்பதால், தங்களுக்கு மருமகளாய் வந்த ரேவதியை மகளாய் பாவித்துக் கொண்டனர் அந்த தம்பதியினர்.

பக்கத்து வீடு தான் தன் தாய்வீடு என்றாலும் ஏதாவது ஒன்று என்றால் உடனே தன் மாமியாரிடம் தான் சென்று நிற்பார் ரேவதி. தாயின் மேல் கொண்ட அன்பில் சிறிதும் குறைவு இல்லாமல் மாமியார்மேலும் அன்பு கொண்டவர் ரேவதி.

பழனியப்பன், ரேவதி தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள். பாரிவேந்தனுக்கு இளையவள், பாரிஜாதம். அவளைப் பக்கத்து ஊரில் தான் மணமுடித்துக் கொடுத்துள்ளார்கள்.

மனம் சோர்வாக இருக்க, பம்பு செட் அருகே இருந்த தென்னம் மரத்தின் அடியே அமர்ந்திருந்தான் பாரிவேந்தன்.

அப்பொழுது தான் தண்ணீர் இறைக்க வந்த சுந்தரபாண்டியன், அவனைக் கண்டுஎன்ன பா பாரி, இங்க வந்து உக்காந்துருக்க?” என்றார்.

சும்மா தான் மாமா, காத்தாட உக்காரலாம்னு இங்க வந்தேன்என்றவன், எழுந்து நிற்கஉட்காரு பாஎன்றவர் அவன் அருகில் தானும் அமர்ந்தார்.

சிறிது நேரம் மௌனமே கடக்க, “என்னை மன்னிச்சுரு பா பாரி!” என்றார் சுந்தரபாண்டியன்.

அதில் பதறியவன், “என்ன மாமா இது, பெரிய பெரிய வார்த்தைலாம்!” என்றான். “நான் பண்ண ஒரு தப்பு என் வாழ்க்கைய சூறாவளி மாதிரி சொழன்டு சொழன்டு அடிக்குது. காதல மறக்க முடியாதுனு தெரிஞ்சும் உன்கிட்ட காதல மறந்து என் மவளுக்கு வாழ்க்கை கொடுனு கேட்க வேண்டியதா என்னை ஆளாக்கிட்டான் அந்தக் கடவுள்என்றவரின் முகம் கவலை தோய்ந்திருந்தது.

உங்களோட நிலைமை எனக்குப் புரியுது மாமா, இந்த இக்கட்டான சூழ்நிலைல இதத் தவிர வேற எந்த முடிவும் எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளிட்டா யாழு!” என்றான் பாரிவேந்தன்.

என் ஒரு மவ வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு இன்னொரு மவ வாழ்க்கைய அழிக்கப் போறேன், என் குலசாமி என் மலரு. என் சாமி என்னை மன்னிச்சு ஏத்துக்கும்னு தான் நான் இந்த முடிவ எடுத்தேன்!” என்றவரின் கண்கள் குளமாகி இருந்தன.

ஊரிலே பெரிய மனிதர். கதர் வேஷ்டி சட்டையில், கழுத்தில் துண்டைப் போட்டுக் கொண்டு ஊருக்குள் நடந்தால் அனைவரும் பணிவாக அவரைப் பார்ப்பார்கள். அவரின் பேச்சுக்கு மறுபேச்சு என்றே இராத நிலையில், இன்று தனது இரு மகளின் வாழ்வில் நடக்கும் போராட்டத்தில் ஒரு மகளே மற்றொரு மகளுக்கு எதிரியாய் நிற்கும் நிலைக் கண்டு அவர் நிலைக்குலைந்தார்.

இந்தக் கல்யாணம் நல்ல படியா நடக்கும் மாமா, நீங்கத் தைரியமா போங்கஎன நம்பிக்கையூட்ட, கையெடுத்து கும்பிட்டார் சுந்தரபாண்டியன்.

கும்பிட்ட அவர் கரங்களைப் பதறிப் போய் விலக்கி விட்டவன், “யாருக்கு யாருனு அந்த ஆண்டவன் ஏற்கெனவே எழுதி வச்சத நம்ம ஆசைகளால மாத்த முடியாது மாமா, நல்லதே நடக்கும்என்றான் பாரிவேந்தன்.

அவர், அங்கிருந்த செல்ல இடிந்து போய் அமர்ந்தான் பாரிவேந்தன். மனம் முழுக்க மலர்விழி நிறைந்திருக்க, இன்னும் ரிரு வாரங்களில் வேறொருத்திக்கு தான் மணாளனாகப் போவது நெஞ்சில் ரணத்தை ஏற்படுத்தியது.

சூழ்நிலை கைதியாய் நிற்கும் தன் அவல நிலையை எண்ணி நொந்தவன், “இந்தச் சூழ்நிலைல கூட நீ ஒத்த வார்த்தை பேச மாட்டல்ல புள்ள, உன் ஒத்த வார்த்தைக்காகத் தான் நான் இன்னமும் காத்திருக்கேன். அந்த ஒத்த வார்த்தைலயே உயிர் வாழ்வேன் புள்ள! உன் மாமுவ இன்னொருத்திக்கு விட்டுக் கொடுக்கப் போற தான!” எனத் தன்னந்தனியே புலம்பிக்கொண்டிருந்தான் பாரிவேந்தன்.

அப்பொழுது தான் தோட்டத்திற்கு வந்திருந்த மலர்விழியின் காதில் விழுந்தன அவனின் வார்த்தைகள். அங்கிருந்த மரத்தின் பின்னே மறைந்து கொண்டவள், அவனைப் பார்க்க அவனது கரத்தில் தங்கச் சங்கிலி ஒன்று இருந்தது.

அவன் கழுத்தில் போட்டிருந்த தங்கச் சங்கிலியைத் தான் கையில் வைத்திருந்தான். அவனின் விரல்கள் ‘M’ எனப் பொறிக்கப்பட்டிருந்த அந்த டாலரை தடவி விட, அவன் மனம் தன் மனக்குமறல்களைக் கொட்டிக் கொண்டிருந்தது.

உன்னை என் மனசுல சுமந்துட்டு யாழு கூட வாழ முடியுமானு தெரியல. தீக்குளிக்கிறத விட இந்த வலி ரொம்ப வலிக்குது புள்ள, ஆனா இதான வாழ்க்கை. நம்ம ஆசைப்பட்டதெல்லாம் எப்பவுமே கிடைக்காது தான! மனுஷங்க எல்லாரும் ஏதோ ஒரு சூழ்நிலைல பிணைக் கைதியாகி மனசளவுல செத்து உடலளவுல தான வாழ்க்கைய ஓட்றாங்க! அதுல நான் மட்டும் விதிவிலக்கா என்ன? இந்த வாழ்க்கை ஓடம் என்னை எங்க கூட்டிட்டு போனாலும் நான் மூழ்கிப் போய்ருவேன் புள்ள, என் மூச்சா நீ இருக்கும்போது இப்போகூட என் பத்திரிக்கைல இன்னொருத்தி பேர போட வேண்டிய சூழ்நிலைக்கு என்னைக் காலமும் நீயும் தள்ளிட்டீங்கல்ல!” என்றான்.

இதனைக் கேட்டவளின் உள்ளம் தடுமாற ஆரம்பித்தாலும், தன் கண்களை இறுக மூடிக் கொண்டு மனதை சமநிலைப்படுத்தியவள், அங்கிருந்து கிளம்பினாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
9
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. பாரி பாவம்.யாழு டூ மச்.மலர் விட்டு கொடுத்து விட்டாள்.மலர் அப்பாவும் பாவம்.

    2. பாரி பாவம் மலரும் பாவம் தான்🤨🤨🤨மலர் அப்பா 🤫🤫🤫