Loading

மாப்பிள்ளை வீட்டில் சடங்கு, சம்பிரதாயங்கள் முடிய அடுத்து பெண் வீட்டிற்கு மணமக்களை அழைத்துச் செல்ல வேண்டும். அதனையடுத்து, ஹரிஹரனும் யாழினியும் சுந்தரபாண்டியனின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட, இதுவரை கோவிலில் இருந்த குணவதி, தான் திருமணமாகி வந்ததிலிருந்து அவர்களின் வீட்டுப் பக்கமே எட்டி பார்த்திராதவர், தனது மகளுக்காக பாரிவேந்தனின் இல்லத்திற்குள் காலடி எடுத்து வைத்தார்.

வாங்க அண்ணிஎன ரேவதி புன்னகை முகமாய் வரவேற்க, பழனியப்பனும், “வா மாஎன வரவேற்றார். சிறு புன்னகையோடு, “அண்ணா எனக்கும் இந்த விசயம் தெரியாதுமலரு…” என அவர் முடிப்பதற்குள்,

முடிஞ்சத பேசி என்னாகப் போகுது மா, இனி ஆக வேண்டியத பேசுவோம். எங்கள பொறுத்தவரை யாழினியும் மலர்விழியும் ஒன்னு தான். மலர் எங்க வீட்டுக்கு மருமகளா வர்றதுல எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்ல மா. என்ன ஒன்னு, இந்தப் பய முன்கூட்டியே சொல்லி இருந்தா இப்போ இவ்ளோ பிரச்சினை ஆகிருக்காதுஎன்றவர், “அட நான் வேற, மொதமொத வீட்டுக்கு வந்துருக்க. நிக்க வச்சு பேசிக்கிட்டே இருக்கேன், ரேவதி உள்ளாற கூட்டிட்டு போஎன்றார் தன் மனைவியிடம்.

உள்ள வாங்க அண்ணிஎன குணவதியை உள்ளே அழைத்துச் செல்ல, அங்குத் தன் தோழிகளுடன் நடு கூடத்தில் அமர்ந்திருந்த மலர்விழி தன் தாயைக் கண்டு எழுந்தாள்.

தன் மகள் தன்னிடமே தன் திருமணத்தை மறைத்துவிட்டாளே என்ற கோபம் உள்ளுக்குள் இருக்கத் தான் செய்தது. அதேநேரம் இந்தத் திடீர் திருமணத்தால் அவள் மனம் எந்தளவு வாடியதோ என ஒருபுறம் மனம் வாடவும் செய்தது.

உறவுக்காரர்கள் அனைவரும் ஒவ்வொருவராகக் கிளம்ப ஆரம்பித்தனர். ரேவதியிடம் கூறிவிட்டு செல்ல வந்தவர்களில் சிலர் குணவதியை கண்டு, “இத்தன நாள் பிரிஞ்சு இருந்த சொந்தம் இந்தக் கண்ணாலத்தால ஒன்னு கூடிருச்சு, சந்தோசம்என்றாலும் சிலர்,

தன் மவள விட்டு அந்தப் பையனைவும் வளைச்சுப் போட்டுட்டா அந்த குணவதி, கைகாரி தான்என்றும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

தாயைப் போலப் பிள்ளை நூலப் போலச் சேலைனு சும்மாவா சொன்னாங்க. அப்படியே ஆய மாதிரி இவளும் பாரிய வளைச்சுப் போட்டுட்டா. பாவம் கமலம், அவ வாழ்க்கையும் நல்லா இல்ல, அவ பொண்ணு வாழ்க்கையும் இப்படி போச்சுஎன்று உச்சுக் கொட்டினர் ஒருசிலர்.

அந்த மலரு புள்ளயோட சுத்திட்டு இருந்த பய தான் யாழினிய கட்டிக்கிறேன்னு சொல்லுதுன்னா ஊர் பெரியவங்களாவது இதெல்லாம் சரிப்பட்டு வராதுனு எடுத்துச் சொல்லிப் புரிய வச்சுருக்க வேண்டாமா! அந்தப் பய என்ன சாதியோ, என்ன குலம் கோத்திரமோ. காலம் கெட்டுப் போச்சு டி சுந்தரிஎன ஒரு பெண்மணி உச்சுக் கொட்டினாள்.

அட நீ வேற க்கா. அந்தப் பையன் இந்த மலரு புள்ள கூடயே நெருக்கமா தான் இருந்தானாம். யாரு கண்டா, அந்தப் புள்ளையே கூட யாழினிய கட்டி கொடுமைப்படுத்துனு சொல்லுச்சோ என்னமோஎன்க,

ஆமா டி சுந்தரி. அப்படியும் இருக்கு, அந்தப் பையன் டவுன்ல எப்படிப் பட்டவனோ. அவுக குடும்பம் எப்படிப் பட்டதோ, அதெல்லாம் சரியா விசாரிக்காம இப்படி அந்த யாழினி புள்ளையும் அவசரப்பட்டு இருக்கக் கூடாது. கட்டுனா இப்பவே கட்டணும்னுல ஒத்த கால்ல நின்னுச்சுஎன்றாள்.

அப்படியா சங்கதி, நான் வேற கூட்டத்துக்கு வராம போய்ட்டேன் க்கா. இந்தப் பய என்னைப் படாதபாடு படுத்தவும் தான் இவன தூக்கிட்டு வூட்டுக்குப் போய்ட்டேன். அவன தூங்க வச்சுட்டு வர்றதுக்குள்ள கண்ணாலத்தயே முடிச்சுப்புட்டாகஎனக் கைக்குழந்தைக்காரி ஒருத்தி கூற, அந்தப் பேச்சுவார்த்தை நீண்டுகொண்டே சென்றது.

இவை அனைத்தும் சம்பந்தப்பட்ட குடும்பத்தார் அனைவரின் காதிலும் விழத் தான் செய்தது. மலர்விழிக்கோ இவர்கள்மேல் கோபம் வந்தாலும், அவையனைத்தும் இதற்குக் காரணமாகப் பேசப்படுபவன் மேல் திரும்பியது.

தன் தோழியோட வாழ்க்கை இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய அழிச்சுட்டு ஆரம்பிக்கக் கூடாதாம். பெரிய இவன் இவன், எனக்காக அவன் வாழ்க்கைய பணயம் வைக்கிறான். யாழினியோட குணம் தெரியாம தன் வாழ்க்கைய தானே அழிச்சுக்க பாக்கிறான். இவனலாம் என்ன பண்ண!” எனப் புலம்பிக் கொண்டிருக்க,

அவள்முன் அலைப்பேசியை நீட்டினாள் சிலம்பு. “என்ன சிலம்பு?” என அவள் வினவ, “பத்மா ஆன்ட்டி லைன்ல இருக்காங்க டிஎன்றவள், அலைப்பேசியின் ஸ்பீக்கரை தனது கைகளால் மூடியவள், “விசயம் அங்க வரைக்கும் போய்ருச்சு டி. இந்த ஹரி பய தான் தாலி கட்டும்போது எடுத்த போட்டோவ அனுப்பி வச்சுருக்கான். உன் ஃபோனுக்கு ட்ரை பண்ணாங்களாம், கால் போகலனு சொல்லி எனக்குக் கூப்புட்டாங்க. என்னால சமாளிக்க முடியல டி, நீ தான் சமாளிக்கணும்எனக் கிசுகிசுக்க இருக்கின்ற குழப்பத்தில் அவரை எப்படி மறந்தேன் எனத் தலையில் கை வைத்த மலர், அலைப்பேசியை வாங்கி காதில் வைத்தாள்.

ஹலோ டார்லிங்!” என மெதுவாக இவள் அழைக்க, “அங்க என்ன தான் நடக்குது மா, அவன் என்னமோ மாலையும் கழுத்துமா ஒரு பொண்ணுகூட நிக்கிற மாதிரி போட்டோ அனுப்புறான். உனக்கு ஃபோன் பண்ணா கால் போகவே மாட்டேங்கிது, சிலம்பு என்னடான்னா என்ன என்னமோ சொல்றா. எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்கிது, நான் உடனே அங்க கிளம்பி வர்றேன் மலர்என ஒரு தாயாய் அவர் பரிதவிக்க,

நீங்க அங்கிள கூட்டிட்டு இங்க வாங்க டார்லிங். நேர்ல பேசிக்கலாம், அட்ரஸ்ஸ உங்களுக்கு வாட்சப்ல அனுப்புறேன் டார்லிங்என்றவள் அலைப்பேசியை வைக்க, அவள் அருகில் வந்தார் குணவதி.

அம்மா…” என அவள் தயங்க, “இங்க எதுவும் பேச வேண்டாம் மலருஎன்றவர் அவள் தலையை வருடிக் கொடுத்தவாறே,

இந்தக் கண்ணாலத்துல உனக்குச் சம்மதமா கண்ணு?” என்றார் பரிதவிப்புடன். தன் தாயின் முகத்தைப் பார்த்தவள், அவரை இறுக அணைத்துக் கொள்ள, அவளுக்கு ஆதரவாக முதுகை தட்டிக் கொடுத்தார்.

பின் ரேவதியிடம், “பசங்கள அங்க நம்ம வூட்டுக்கு அழைச்சுட்டுப் போகணும். நீங்களும் வந்தா நல்லா இருக்கும் ரேவதிஎன்க, “நாங்க அங்க வர்றதுல எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல அண்ணி. ஆனா பெரிய அண்ணி சங்கடப்படுவாங்க, ஏற்கெனவே இங்க நடந்த குழப்பத்துல வருத்தமா இருக்காங்க. இந்த நேரத்துல நாங்க அங்க வர்றது இரண்டு குடும்பத்துக்கும் தேவையில்லாத மனகசப்புகள தான் உண்டாக்கும் அண்ணி. நீங்க தம்பியவும், மலரையும் கூட்டிட்டு போங்க. மூணா நாள் நாளன்னிக்கு இங்க அனுப்புங்க, அப்புறம் எல்லாரும் ஒருதடவை நம்ம குலதெய்வம் கோவிலுக்குப் போய்ட்டு வந்தறலாம்என அவர் கரம்பற்றி, எங்கே தங்களை அவர் தவறாக எடுத்துக் கொள்வாரோ என்ற பதட்டத்திலே பேசினார் ரேவதி.

பரவாயில்லை ரேவதி, நீ இவ்ளோ விளக்கம் கொடுக்கணும்னு அவசியமில்ல. நான் தம்பியவும், பாப்பாவையும் அழைச்சுட்டுப் போறேன்என்றார் குணவதி.

நீங்க இனி மலர பத்தி கவலப்பட வேண்டாம் அண்ணி, அவ எங்களுக்கு மக மாதிரி. நீங்க நிம்மதியா இருங்கஎன ஆறுதல் அளிக்க, தன் மகளின் புகுந்த வீட்டு உறவுகள் அவளுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் புன்னகைத்தார் குணவதி.

ஆனால், அவள் மனதில் என்ன நினைக்கின்றாள் என்பது மட்டும் மர்மமாகவே இருந்தது.

பாரிவேந்தனையும் மலர்விழியையும் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போது தன் கணவன் தன்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற அவரின் எண்ணத்தைப் படித்தவர்போல பக்கத்து வீட்டிலிருந்து பாரியின் வீட்டிற்கு வந்தார் சுந்தரபாண்டியன்.

நம்ம வீட்டுக்கு மாப்பிள்ளையவும் பாப்பாவையும் அழைச்சுட்டுப் போகலாமா குணா?” என்றவாறே அவர்முன் வந்து நிற்க, “இப்போ தாங்க உங்கள நினைச்சேன். நீங்களும் இங்க இருந்தா நல்லா இருக்கும்னுஎன்றவர், “வாங்க, நம்ம மாப்பிள்ளைய போய்க் கூப்பிடலாம்என அவர் வெளியே வர, திண்ணையில் அமர்ந்திருந்த ராமாயி பாட்டி, “யாரு நம்ம குணவதியாஎன அவரை அண்ணாந்துப் பார்க்க,

ஆமா ம்மாஎன்றவர், அவர் அருகில் அமர்ந்தார். “இங்க உக்காருஎன்றவர், அவரின் கரத்தைப் பற்றி, “எப்படி இருக்க மா?” என்றார் ராமாயி.

இருக்கேன் ம்மா. நீங்க எப்படி இருக்கீங்க?” என அவர் விசாரிக்க, “க்கும், இங்கன இருக்கிற தோட்டத்து வூட்டுல இருந்துட்டு இந்தப் பக்கம் எட்டிப் பாக்காம வைராக்கியமா இருக்க. இந்தப் பக்கம் ஒரு எட்டு வந்துட்டுப் போனா தான் என்ன, இப்போ தான் இந்தப் பக்கம் வர்ற வழி தெரிஞ்சுதா?” என அவர் நீட்டி முழக்க,

அப்படிலாம் இல்ல ம்மா. எனக்கும் பொழுதன்னிக்கும் வேல சரியா இருக்கும். அதான் இந்தப் பக்கம் வர முடியலஎனச் சமாளித்தவர், “அம்மா நீங்க தான் பாரி தம்பிக்கும் மலருக்கும் கண்ணாலம் பண்ணி வச்சதா சொல்லிக்கிறாங்க. உண்மையா ம்மா?” என்றார் தழுதழுத்தக் குரலில்.

உன் மவ நல்லா வாழுவா மா. என் பேரன் அவள தாங்கு தாங்குனு தாங்குவான், நீ போய் ஆக வேண்டிய வேலய பாருஎன அவர் கழுவுற மீனில் நழுவுற மீனாகத் தப்பிக்கப் பார்க்க, அதற்குமேல் குணவதியும் எதையும் கேட்கவில்லை.

முன்பக்க வாசலில் இருந்த வேப்ப மரத்தடியில் தன் நண்பர்களுடன் பாரிவேந்தன் அமர்ந்திருக்க, அவன் அருகில் சென்றார் குணவதி.

அவரைக் கண்டவன் சங்கடத்துடன் எழுந்து, “வாங்க அத்தைஎன்றான். “தம்பி, நம்ம வீட்டுக்கு நல்ல நேரத்துல உங்களையும் மலரையும் கூட்டிட்டுப் போகணும்எனத் தயங்கியவாறே கூற,

சரிங்க அத்தை. போகலாம்என்றவன், தன் நண்பர்களிடம் ஏதோ கூற வர, அதற்குள்புது மாப்பிள்ளை நீங்க ஜமாய்ங்கஎனக் கோரஸாக அவர்கள் கத்த, சிறு வெட்கம் உண்டானதோ அவனுக்கு.

அதன்பின் இருவரையும் சுந்தரபாண்டியன்குணவதி தம்பதியினர் தோட்டத்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

சிலம்புவும் இந்திராவும் மலருடனே இருக்க, செந்தில் ஹரிஹரனுடன் இருந்தான். இருவரும் வலது கால் எடுத்து வைத்து உள்ளே நுழைய, பால் பழம் கொடுத்து, அதன்பின் பூஜையறையில் விளக்கேற்றச் சொல்ல, அனைத்தையும் கடமைக்கென அவள் செய்ய, அதனைக் கண்டும் காணாமலும் இருந்தான் பாரிவேந்தன்.

அவசர அவசரமாக மதிய உணவு தயாராக, தன் அறைக்குச் சென்றவள், கட்டிய புடவையோடே கட்டிலில் விழுந்தாள். அவள் மார்பில் சரிந்து கட்டிலில் படர்ந்தது மஞ்சள் நாணுடன் கோர்க்கப்பட்ட பொன் தாலி.

அதனைப் பார்த்தவளின் மனம் அனலில் இட்ட புழுவாய் துடித்தது. அதனைக் கையில் ஏந்தியவளின் கண்களில் ஈரம் கசிய, அதனை நெஞ்சோடு சேர்த்தணைக்கத் துடித்த கரங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

இங்கு பாரிவேந்தனோ, அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நடுகூடத்தில் தன்னந்தனியாக அமர்ந்திருக்க, அதனைக் கண்ட இந்திரா அவனருகில் வந்தாள்.

அப்பொழுது சுந்தரபாண்டியனும் அங்குவர, ஏதோ அவனிடம் கேட்க வந்தவள் அமைதியாக, வந்தவரோ அவன் அருகில் அமர்ந்தார்.

அவன் சங்கடத்துடன் தலை குனிந்தவாறே, “என்னை மன்னிச்சுருங்க மாமாஎன்றான் மெல்லிய குரலில்.

நான்தான் மாப்பிள்ளை உங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும். யாழுக்கு தான் புத்தி பேதலிச்சுப் போய் அன்னிக்கு என்கிட்ட அப்படியொரு சத்தியம் வாங்கிட்டான்னா எனக்கு எங்க போச்சு புத்தி. உங்க மனசு தெரிஞ்சும் என் சின்னப் பொண்ண கட்டிக்கச் சொல்லி உங்கள வற்புறுத்துனது எவ்ளோ தப்புனு இப்போ புரியுது. இது அப்பவே புரிஞ்சு இருந்தா இன்னிக்கு இந்தளவுக்கு வந்துருக்காதுஎன்றார் வருத்தத்துடன்.

மாமா ஹரி…” என அவன் ஏதோ கூறவர, “அந்த பையன் மட்டும் யாழுவ கட்டிக்க சம்மதம் சொல்லலனா இன்னிக்கு ஒரு உசுரு போய்ருக்கும் மாப்பிள்ளை. கடவுள் மாதிரி வந்தாரு அந்த தம்பிஎன்றவர், “சாமி இன்னும் உங்கமேல கோபமா தான் இருக்காளா மாப்பிள்ளை?” என்றார்.

அவ ஏதாவது சொன்னா தான மாமா தெரியும். இந்த நிமிஷம் வரை உணர்வுகள கட்டுப்படுத்தி பொம்மை மாதிரி நிக்கிறா மாமா. அவ சம்மதம் இல்லாம நான் தாலி கட்டுனது தப்போனு இருக்கு, அவள இப்படி பார்க்க முடியல மாமாஎன்றவனின் கண்களில் வருத்தம் தெரிய,

அண்ணா நீங்க கவலப்படாதீங்க, உங்களுக்கு மலர பத்தி நான் எதுவும் புதுசா சொல்லணும்னு அவசியமில்லைனு நினைக்கிறேன். அவ மனசுல நீங்க தான் இருக்கீங்க, நீங்க மட்டும் தான் இருக்கீங்க ண்ணா. ஆனா, அத வெளிப்படுத்த விடாம ஏதோ ஒன்னு அவள தடுக்குது. இன்னிக்கு அவளோட பிகேவியர்ஸ் எல்லாம் மொத்தமா மாறி இருந்துச்சு, உங்கமேல அவ வச்சுருக்க நம்பிக்கை அதிகம் ண்ணா. ஆனா, அதேநேரம் அதே அளவு கோபமும் அவக்கிட்ட இருக்கு. கொஞ்சம் நாள்ள சரியாகிருவா ண்ணா, நீங்கப் பொறுமையா இருந்தா போதும்என்றாள் இந்திரா.

அவ மேல என்னிக்கும் எனக்குக் கோபம் வராது மா. உங்க தோழிய பத்திரமா பார்த்துக்கிறது இனி என் பொறுப்புஎன்க, “தட்ஸ் மை பாரி அண்ணாஎன்றவள், புன்னகைத்தாள்.

குணவதி சமையல் முடித்திருக்க, “ஏங்க, சாப்பிட வாங்க சாப்பாடு எல்லாம் தயார்என்றவர், “தம்பி நீங்களும் மலரும் ஒன்னா உக்காந்து சாப்பிடணும். வாங்கஎன்றார்.

எங்க மா மலருஎன இந்திராவிடம் கேட்டவாறே கண்களால் அவளைத் துழாவினார் குணவதி. “அவ ரூம்ல இருக்கா ம்மா, நான் போய்க் கூட்டிட்டு வரேன்என்றவள், அவள் அறைக்குள் செல்ல, அவளோ இன்னும் அந்தப் பொன்தாலியை பார்த்தவண்ணம் தான் படுத்திருந்தாள்.

மலருஎன அவள் அருகில் செல்ல, “வா இந்துஎன்றவள், எழுந்தமர்ந்தாள். “அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க டி, வா சாப்பிடலாம்என அழைக்க,

எனக்குப் பசியில்ல டி. நீ போய் சாப்பிடுஎன மறுக்க, “கல்யாணத்துக்கு அப்புறம் முத தடவை இந்த வீட்ல அண்ணா சாப்ட போறாரு. அப்போ நீயும் கூட இருக்கணும்ல மலர்என்றாள் இந்திரா.

சரி, போ நான் வரேன்என அவள் உடனே ஒத்துக் கொண்டது இந்திராவிற்கு ஆச்சரியத்தை வரவழைத்தது. “சரி, சீக்கிரம் வாஎன்றவள் வெளியேற, கண்ணாடிமுன் நின்றவள் தன் மார்பில் தழைய தொங்கிய தாலியை மீண்டும் பார்த்தாள்.

இந்த வாழ்க்கைப் பயணம் எத்தனை சுவாரசியங்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது. இனி அடுத்த நொடி என்னாகுமோ என்ன பதபதைப்பிலேயே ஒவ்வொரு நொடியும் மனித மனம் கடக்க, அடுத்தடுத்து எத்தனை திருப்பங்கள். அதில் நல்லவை பல, கெட்டவை சில.

தன் வாழ்க்கையை நினைத்துக் கொண்டவள், வெளியே வர, அவளுக்காக அங்கு அனைவரும் காத்திருந்தனர். வழக்கம்போல், “கரிச்சட்டிஎன அவன் அறையைப் பார்த்து உணவுண்ண அழைக்க முற்பட்டவள், நொடிப்பொழுதில் நிதர்சனத்தை உணர்ந்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள்.

அவளின் செயலை அங்கிருந்த அனைவருமே உணர்ந்தாலும், எதுவும் நடவாததுபோல் சாப்பிட ஆரம்பித்தனர்.

ஆனால் அவள் மனம் மட்டும் இன்னும் ஏற்க மறுத்தது. தன் நண்பன் இன்று வேறொருத்திக்கு சொந்தமானவன், அதுவும் தன் வாழ்க்கையை பணயம் வைத்திருக்கிறான் என்ற மன உளைச்சலிலேயே உணவுண்ணாமல் தட்டை வெறித்துக் கொண்டிருக்க, “சாப்பாட எடுத்துச் சாப்பிடு மலர்என்றார் குணவதி.

ம்…” என்றவள், ஒவ்வொரு பருக்கையாய் வாயில் எடுத்துப் போட்டாலும் நினைவெங்கும் ஹரிஹரன் தான் ஆக்கிரமித்திருந்தான். அவளின் இடது கரத்தின் மேல் தன் கரத்தை வைத்து ஒரு அழுத்தம் கொடுத்தான் பாரிவேந்தன்.

அவளின் மனநிலையை கண்ணாடி பிம்பம்போல் உணர்ந்திருந்தான் அவன். அவள் அவன் முகத்தைப் பார்க்க, “சாப்பிடு புள்ளஎன்றான் பாரிவேந்தன். அவள் கண்களில் தெரிந்த வலி அவன் மனதை சுக்கு நூறாக்கியது. இத்தனைக்கும் காரணம் நீ தானே என்றது அவள் விழிகள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
8
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்