Loading

ண்ணா!” என்ற அவளின் மறுஅழைப்பில் தான் அவன் மௌனம் கலைத்தான். “இப்போ இதப் பத்தி பேசிப் பிரயோஜனம் இல்ல மா. நீ போய் தூங்கு, காலைல வெள்ளனே எந்திரிக்கணும்என்க,

நான் வேணும்னா யாழுகிட்ட பேசிப் பார்க்கவா ண்ணா?” என்றாள் பாரிஜாதம். “இல்ல மா, வேண்டாம். இதுநாள் வரை நான் பேசியதுக்கே ஒரு பிரயோஜனமும் இல்லாம போச்சு. எது நடந்தாலும் நடக்கட்டும், பார்த்துக்கலாம்என்றவன், அவளை உள்ளே அனுப்பிவிட்டு சோர்ந்துபோய் அமர்ந்திருந்தான்.

நிலவு மெல்லமெல்ல தன்னை மறைத்து ஆதவனுக்கு வழிவிடக் காத்திருந்த இளங்காலைப் பொழுது. பலரின் வாழ்வையே மாற்றக்கூடிய அந்த காலைப் பொழுதில், ஊரே திருவிழாபோல் இருந்தது.

முகூர்த்தம் பத்து முப்பது மணியிலிருந்து பதினொன்று முப்பது மணிவரை என்பதால் அனைவரும் மற்ற வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

பாரிவேந்தன் தனது அப்பாயிடம் வந்து, “அப்பாயி!” என அழைக்க, “என்னடா பேராண்டிஎன்றார். காலையிலேயே குளித்துப் புது வெள்ளை புடவை அணிந்து, அவர் திருமணத்திற்கு தயார் கோலத்தில் இருக்க,

நானே இங்க குழப்பத்துல சுத்திக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா புதுபொண்ணு கணக்கால்ல கிளம்பி இருக்க ப்பாயி!” எனக் கோபத்துடன் கூறினான் பாரிவேந்தன்.

அதற்குப் புன்னகைத்தவர், “இங்க வா டா…” என அவனை அருகே அழைத்துத் தன்பக்கம் அமர வைத்தவர், “நான் தான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டேன்ல டா பேராண்டி. அப்பாயி இருக்க பயமேன்எனத் தெம்பூட்ட,

வார்த்தை என்னமோ சர்க்கரையாட்டம் தான் இனிக்குது, ஆனா நடந்துக் கிட்டு இருக்க கண்ணாலத்த நினைச்சா தான்…” என அவன் சோகமாகக் கூறி முடிக்க, அவன் தோளைத் தட்டிக் கொடுத்தவர், தனது மருமகளை அழைத்தார்.

சொல்லுங்க அத்தைஎன ரேவதி அவர்முன் நிற்க, “இவனுக்கு பட்டுவேஷ்டி சட்டைய எடுத்துக்கொடு, போ டா ராசா. போய் அத கட்டிக்கிட்டி ராமாயி பேரனா சும்மா ஜம்முனு வாஎன்றார்.

அவரை முறைத்தவன், தன் தாய் கொடுத்த உடைகளை வாங்கிக் கொண்டு தன் அறைக்குச் சென்றான். யாழினியையும் பெண்கள் தயார்படுத்திக் கொண்டிருக்க, பாரிஜாதமோ அவளிடம் பேசும் தருணத்திற்காகக் காத்திருந்தாள். ஆனால் வீடு முழுவதும் உறவுகாரர்கள் சூழ்ந்திருக்க, அவளுடன் தனிமையில் பேசும் வாய்ப்பு கிட்டவில்லை.

ஊரே பாரிவேந்தனின் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்க, இங்கு மலர்விழியோ எப்பொழுதும் போல் மருத்துவ முகாமிற்கு தயாராகிக் கொண்டிருந்தாள்.

அவள் அறைக்கு வந்தவன், “இன்னிக்கு வேணும்னா லீவு போட்டுக்கலாமா ஃபிளவர்?” என எங்கோ பார்த்துக் கொண்டு வினவ, “எதுக்கு டா லீவு? ஏதாவது முக்கியமான வேலை ஏதும் உனக்கு இருக்கா?” என்றவாறே புடவையின் மடிப்பை சரிசெய்துக் கொண்டிருக்க,

உன் மனசுல அப்படி என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்க ஃபிளவர்? இன்னிக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும்என்றவன் அவளைப் பார்க்க, என்றும் இல்லாத திருநாளாய் இன்று அவள் பருத்தி புடவை கட்டி, அழகோவியமாய் கண்ணாடிமுன் நின்று தன்னை சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.

ரெண்டுல ஒன்னா. சரி ஒன்னு, போதுமா? தெரிஞ்சுக்கிட்டியா! இப்போ வந்து இந்த மடிப்ப மட்டும் சரி பண்ணி விடேன்என அவள் புடவை மடிப்பை பிடித்தவண்ணம் அவன் முன் நிற்க, “நான் என்ன பேசிக்கிட்டு இருக்கேன். நீ என்ன பதில் சொல்ற ஃபிளவர்? இப்போ ரொம்ப முக்கியமான வேலை இது?” என்றான் கடுப்பாக.

இந்த மடிப்பு மட்டும் சரியா வரவே இல்ல டா கரிச்சட்டி. இந்த மடிப்ப மட்டும் கொஞ்சம் சரி பண்ணி விடேன்என முன்பக்க மடிப்பை காட்ட, அவனோ முறைத்துக் கொண்டே தரையில் அமர்ந்து, அவளின் புடவை மடிப்பை சரி செய்து விட்டான்.

தேங்க்ஸ் டா கரிச்சட்டிஎன அவள் அந்தப் புடவைக்கேற்ற காதணியை அணிந்துகொண்டே கூற, அப்பொழுது தான் அவளின் மாற்றங்களைக் கண்டான்.

எப்பொழுதும் சாதாரணமாக ஒரு தங்க தோடும், கையில் இரு வளையல்களோடு ஆர்ப்பாட்டமில்லாத ஒரு காட்டன் சல்வாரில் பணிக்குக் கிளம்புபவள், இன்று புதிதாகச் சேலை உடுத்தி, அதற்கு ஏற்ற அணிகலன்களோடு வில்லாய் வளைந்திருந்த புருவங்களுக்கு மத்தியில் புடவையின் வண்ணத்திலே பொட்டிட்டு, கழுத்தில் அதேவண்ண கற்கள் பதிந்த ஆபரணம் ஒன்றையும் அணிந்திருந்தாள்.

இன்னிக்கு என்ன மேடம் புடவைலாம் கட்டி இருக்கீங்க?” என்க, “சும்மா தான்டா. புடவை கட்டி ரொம்ப நாளாச்சுல்ல. அதான்என்றவள், “சரி வா. சாப்பிட்டு கிளம்பலாம், பக்கத்து ஊர்ல தான இன்னிக்கு கேம்ப்?” என்றவாறே அறையை விட்டு வெளியே வர,

கேம்ப் போகத் தான் இவ்ளோ அலங்காரமா ஃபிளவர்?” என்றான் ஹரிஹரன். “ஏன்டா ஓவர் மேக்கப்போ!” என அவள் முகத்தைத் தடவிய வண்ணம் வினவ,

பேச்ச மாத்தத ஃபிளவர், நான் மொதல்ல கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுஎன்றான் ஹரிஹரன். “சரி, உன் கேள்விக்கு எல்லாம் சாயந்திரம் பதில் சொல்றேன், இப்போ கேம்ப்க்கு கிளம்பலாம்என்றவள், “அம்மா, சாப்பாடு எடுத்து வை ம்மா. நேரமாச்சுஎன்றவாறே,

இந்து, சிலம்பு கிளம்பிட்டிங்களா?” என அவர்கள் அறையை நோக்கிக் குரல் கொடுத்தாள். அவர்கள் மூவரும் வந்துவிட, “சரி, சாப்பிட்டு கிளம்பலாம்என்றவள் உணவுண்ண அமர,

அவளின் மாற்றங்களைக் கண்டு நண்பர்கள் நால்வரும் குழம்பிப் போயிருந்தனர். “என்னடா இது? இவ இப்படி பண்றா, இப்போ நம்ம என்ன பண்றது?” என இந்திரா ஹரிஹரனிடம் வினவ,

தெரியல இந்து, இவ தெரிஞ்சு பண்றாளா இல்ல தெரியாம பண்றாளானே புரிய மாட்டேங்கிது. சரி, வந்து சாப்பிடுங்கஎன்றான் ஹரிஹரன்.

ஐவரும் காலை உணவை முடித்துவிட்டு காரில் புறப்பட, ஊருக்குள் மைக் செட்டில் பாடும் பாடல்கள் அவர்களின் காதிலும் விழத் தான் செய்தது.

வழக்கம்போல் முகாமில் தன் வேலைகளைச் செவ்வனே செய்யத் தொடங்கி இருந்தாள் மலர்விழி. ஆனால், மற்ற நால்வரும் தான் மூளை சூடாகி வெளியே வந்துவிடும் அளவிற்கு குழப்பத்தில் இருந்தனர்.

அப்பொழுது ஒரு தாத்தா அந்த வழியே ஆடு ஓட்டிக் கொண்டு சென்றவர், இவர்களைப் பார்த்து அவர்கள் அருகில் வந்தார்.

அவர் அருகில் வந்தபின் தான் தெரிந்தது அன்று ஒருநாள் மருத்துவ முகாமிற்கு வந்து தனது பேரனைப் பற்றிக் கூறியவர் என்று. அவரைக் கண்ட மலர்விழி, “எப்படி தாத்தா இருக்கீங்க? இப்போ உங்க பேரன் எப்படி இருக்கான்?” என்றாள்.

இப்போ கொஞ்சம் அடிக்கிறத காணோம் தாயி, நம்ம பாரி தம்பி தான் அவனை மிரட்டி வச்சுருக்கும்போல. அன்னில இருந்து குடிச்சுட்டு வந்தாலும் அமைதியா படுத்துக்கிறான். இப்போ கொஞ்சம் நாளா அவன்கிட்ட அடிவாங்காம இப்போ தான் என் உடம்புல வலி கொறைஞ்சு இருக்கு தாயி. நீங்கப் பண்ண புண்ணியத்தால தான் இன்னமும் நான் உசுரோட இருக்கேன்என்றவர் கையெடுத்துக் கும்பிட,

இதுல என்ன தாத்தா இருக்கு, சொல்ற இடத்துல சொன்னா தானா அடங்குவான்னு தான் பாரி மாமாகிட்ட சொன்னேன். மொத்தமா திருந்தலனாலும் அடிக்காமயாச்சும் இருக்கானே. அதுபோதும் தாத்தா, ஒழுங்கா நேரநேரத்துக்கு மாத்திரை எடுத்துக்குறீங்களா?” என்றாள் மலர்விழி.

மாத்திரை ஒழுங்கா சாப்பிடறேன் தாயி. நீயும் பாரியும் நல்லா இருக்கணும்என அவர் ஆசிர்வதித்தவர், “அந்த தம்பி கண்ணாலத்துக்கு நீ போகலயா தாயி?” என்றார்.

இதுவரை புன்னகையை சூடி இருந்தவள், அவரின் கேள்வியில் படக்கெனப் புன்னகை மறைய, அவர் என்ன புரிந்து கொண்டாரோ, “சரி தாயி, நான் வரேன். இந்த ஆட்ட விட்டுப்புட்டு ரொம்ப நேரம் நிக்க முடியாது, அப்புறம் வெள்ளாமை காட்ட மேயப் போய்ரும்என்றவர், ஆட்டைத் துரத்திக் கொண்டு செல்ல, மலர்விழியோ கண்களை இறுக மூடி அமர்ந்தாள்.

அங்குக் கோவிலிற்கு மணமக்கள் அழைத்து வரப்பட்டிருக்க, கோவிலினுள் சென்று அங்கு வீற்றிருந்த மாரியம்மனை தரிசனம் செய்துவிட்டு, வெளியே வந்தனர்.

ஐயர் மந்திரங்கள் ஓத, மணவறையில் பாரிவேந்தனை அழைத்துவந்து அமர வைத்தான் சண்முகம். துணை மாப்பிள்ளையாக அவன் அருகில் நிற்க, ஐயர் மந்திரங்களை ஓதிக் கொண்டே மஞ்சள் கயிறுடன் தாலியை இணைத்துக்கொண்டிருந்தார்.

தாய்மாமன் பட்டம் கட்டுதல், மெட்டி போடுதல் என அடுத்தடுத்த சடங்குகள் நடந்தேறத் துவங்கியது. பாரிவேந்தனின் முகம் இறுகிப் போய் இருக்க, அவனின் கருவிழிகள் இரண்டும் வந்திருந்த உறவுக்காரர்களிடையே யாரையோ தேடி அலைந்தது.

அவன் விழிகள் தேடியவற்றிற்கு சொந்தக்காரியான மலர்விழி பக்கத்து ஊரில் தன் மருத்துவ பணியைச் செய்துக் கொண்டிருந்தாள்.

அவளைத் தேடி அலைப்புற்று, களைப்புடன் தனது அப்பாயியை பார்க்க, அவர் முகத்தில் தற்போது வரை இருந்த திடம் போய் சிறு பதட்டம் ஒட்டிக் கொண்டிருந்தது.

அப்பாயிஎன அவன் அவரைப் பார்க்க, அவன் அருகில் வந்தவர் மாலையைச் சரிசெய்வது போல், “கவலப்படாத டா பேராண்டி, நான் பார்த்துக்கிறேன். அவ கண்டிப்பா வருவா, உன்னை விட்டுக் கொடுக்க மாட்டாஎனத் தெம்பூட்ட,

எனக்கு நம்பிக்கையே இல்ல அப்பாயிஎன்றான் கலங்கிய குரலில். “பார்த்துக்கலாம், நீ தைரியமா இருஎன்றவர், அவன் அருகிலேயே நின்றார்.

மணப்பெண்ணும் அழைத்துவரப் பட, அவன் அருகில் தங்க பதுமைபோல் காஞ்சி பட்டு சரசரக்க வந்தமர்ந்தாள் யாழினி. முகம் முழுக்க சந்தோசம் மிகுந்திருக்க, நாணத்துடன் தன் அருகே அமர்ந்திருந்தவனை பார்க்க, அவனோ அக்னி பார்வை பார்த்தான்.

அதில் அவள் முகம் சுணக்கம் கண்டாலும், அதன்பின் அவனைப் பார்க்காமல் ஐயர் கூறிய மந்திரத்தைத் திரும்பக் கூறலானாள். பாரிவேந்தனின் இதயம் இரயில் வண்டியைவிட அதிகம் தடதடத்தது.

ஐயர் மாங்கல்ய தட்டை ஆசிர்வாதம் வாங்க பாரிஜாதத்திடம் கொடுக்க முனையும்போது மணவறையிலிருந்து எழுந்தான் பாரிவேந்தன்.

அதனைக் கண்டு, “என்னாச்சு மாப்பிள்ளை?” என்றான் சண்முகம் சற்று பதட்டத்துடன். அதற்குள் பழனியப்பனும், சுந்தரபாண்டியும் அவர்கள் அருகில் வந்திருந்தனர்.

என்ன டா கண்ணா? ஏன் பாதில எந்திரிச்சுட்ட?” என ரேவதி பதட்டத்துடன் வினவ, “இந்த கண்ணாலம் நடக்காது ம்மாஎன்க, “என்னடா சொல்ற?” எனப் பதட்டமானார் ரேவதி. எனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகிருச்சு ம்மாஎன்றவனின் வார்த்தைகளில் மொத்த சபையும் அதிர்ந்தது.

அவனின் வார்த்தையில் அதிர்ந்த யாழினி எழுந்திரிக்க, “என்ன மாமா சொல்றீங்க? விளையாடதீங்க மாமா. ப்ளீஸ், என்மேல என்ன கோபம் இருந்தாலும் சரி, இப்போ அதக்காட்டற நேரம் இல்ல. தயவுசெஞ்சு உக்காருங்கஎன்றாள் பதட்டத்துடன்.

உன் கூட விளையாட மட்டுமில்ல யாழினி, உன் வாழ்க்கையிலயும் பயணிக்க எனக்கு விருப்பமில்ல. அதையும் தாண்டி நான் ஏற்கெனவே திருமணம் ஆனவன், என் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணிட்டு உன் கழுத்துல எப்படி நான் தாலி கட்டுவேன்னு நீ எதிர்பார்க்கிற?” என்றான்.

அவன் வார்த்தைகளைக் கேட்டு, அதிர்ந்த சுந்தரபாண்டியன், “என்ன மாப்பிள்ளை இது? உங்க சம்மதத்தோட தான இந்தக் கண்ணாலத்த ஏற்பாடு பண்ணோம். இப்போ பொண்டாட்டி அது இதுனு சொல்றீங்க. என்கிட்ட சத்தியம் பண்ணிட்டு இப்போ என் மகள நட்டாத்துல விடுறீங்களே மாப்பிள்ளைஎன அவன் கைகளைப் பற்றியவர்,

ப்ளீஸ் மாப்பிள்ளை, தயவுசெஞ்சு மணவறைல உக்காருங்க. எதுவா இருந்தாலும் நம்ம அப்புறம் பேசிக்கலாம்என்றார். “என்ன மாமா சொல்றீங்க, நான் ஏற்கெனவே கண்ணாலம் ஆனவன்னு சொல்றேன். நீங்கத் திரும்ப உங்க மக கழுத்துல தாலி கட்ட சொல்றீங்க, என் மனைவிக்கு என்னால துரோகம் பண்ண முடியாதுஎன்றான் நிதானமாய்.

யார் அவனு சொல்லு டா பாரி, பெத்தவங்க எங்களுக்கே தெரியாம எப்போ நீயா கண்ணாலத்த முடிச்ச? அப்போ நாங்க எதுக்கு டா இருக்கோம்என பழனியப்பன் கோபப்பட,

எல்லாரும் அமைதியா இருங்க கொஞ்சம் நேரம்என இதுவரை தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ராமாயி நடுசபைக்கு வர,

அவன் தான் என்ன என்னமோ சொல்லிட்டு இருக்கான்னா நீங்க ஏன்ம்மா இப்போ அமைதியா இருக்க சொல்றீங்க?” என்றார் பழனியப்பன்.

அட அமைதியா இரேன் டாஎன் பேரனுக்கு கண்ணாலம் பண்ணி வச்சதே நான்தான்என அவர் மற்றுமொரு குண்டைத் தூக்கிப் போட, சபையே அதிர்ந்தது.

அத்தை!” என ஒருபக்கம் ரேவதியும், “அம்மாஎன பழனியப்பனும், “அம்மாச்சிஎன யாழினியும் அதிர,

ஆமா, என் பேரனுக்கு கண்ணாலம் பண்ணி வச்சது நான் தான். அவன் ஆசைப்பட்ட புள்ளைய அவன்கூட சேர்த்து வைக்கணும்னு நினைச்சேன், அதான் இப்படி பண்ணேன்என்றார் ராமாயி.

நம்ம யாழுவுக்கு பேசி முடிக்கும்போது அவனோட சம்மதம் கேட்டுத் தான ம்மா பண்ணோம். இப்போ வந்து அவன் ஆசைப்பட்ட புள்ளையனு சொல்றீங்க, அவன் யாரத் தான் ஆசப்பட்டான்? இத முன்னாடியே சொல்லி இருந்தா இப்போ யாழினி இப்படி மணவறை வந்து நிக்க வேண்டிய அவசியம் இல்லயே ம்மா. இப்போ அவங்களுக்கு நம்ம என்ன பதில் சொல்ல முடியும்?” என பழனியப்பன் குற்றவுணர்வில் கூற,

அதுக்கு பதில் யாழினி தான் சொல்லணும் டா. ஏன்னா என்னைய விட பாரி யார விரும்புறான்னு அவளுக்கும் அவ அப்பனுக்கும் தான் நல்லா தெரியுமே, இரண்டு பேரையும் தெரியாதுனு சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்என அவர் சவால் விட, சுந்தரபாண்டியன் அவமானத்தில் தலை குனிந்தார்.

யாழினியோ, பாரிவேந்தனின் சட்டையை கொத்தாகப் பிடித்து, “இப்படி என்னைய ஏமாத்திட்டியே மாமா. அவள விட நான் எந்த விதத்துல கொறைஞ்சு போனேன், சொல்லு மாமா நான் எந்த விதத்துல கொறைஞ்சு போனேன்என அவனை உலுக்க,

இப்படியே அவளோட ஒவ்வொரு விசயத்துலயும் போட்டி போடறதால தான் தோத்துப் போய்ட்ட யாழு. இப்பவும் அவ என் புருஷன்னு வந்து உன்கிட்ட சண்டைக்கு வரலயே. ஏன் அவ இந்த இடத்துக்குக் கூட வராம இருக்காளே, ஆனா நீ அவளுக்குச் சொந்தமான என்னைய வலுக்கட்டாயமா அடையணும்னு நினைச்சதால தான் இன்னிக்கு இந்த நிலைல வந்து நிக்கிறோம் யாழு.

உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் யாழு, ஆனா உன்னை என்னிக்குமே நான் என் மனைவியா நினைச்சது இல்ல. அத கட்டாயப்படுத்தி வர வைக்க நீ நினைச்ச, அத விட்டுக் கொடுக்க அவ நினைச்சுத் தான் என்னை விலக்கி வச்சா. ஆனா, நம்ம ஒன்னு சேர்ந்தா நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையும் நல்லா இருக்காது யாழு. அவள மனசுல நினைச்சுட்டு உங்கூட எப்படி நான் வாழ முடியும்?” என்க, அவர்களின் உரையாடலிலே அந்தப் பெண் மலர்விழி தான் என்பது மற்றவர்களுக்குப் புரியத் தொடங்க, தங்களுக்குள் ஏதேதோ பேசத் தொடங்கினர்.

இதனை எல்லாம் கேட்ட கமலமோ, தலையில் அடித்துக் கொண்டு, “என் வாழ்க்கைய அவ அம்மாகாரி தான் பறிச்சானு பார்த்தா இப்போ அவ மவ என் மவ வாழ்க்கையவும் பறிச்சுட்டாளே. பாவி மவ, என் வாழ்க்கை தான் இப்படி போச்சுன்னா என் மவ வாழ்க்கையும் இப்படித் தான் போவணுமாஎனத் தன்னைத்தானே அடித்துக் கொண்டு அழ ஆரம்பிக்க, அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

அப்பொழுது ஊர் பெரியவர் ஒருவர் முன்வந்து, “இப்போ அந்தப் பையன் நான் இன்னொரு பொண்ணு கழுத்துல ஏற்கெனவே தாலி கட்டிட்டேனு சொல்றான். ஆனா அந்தப் புள்ளையோ தன் புருஷன் இன்னொருத்தி கழுத்துல தாலி கட்டப் போறது தெரிஞ்சும் இங்க வராம இருக்கு. இத பேசிதான் முடிவு பண்ணனும் பா. அதுனால எல்லாரும் அரச மரத்தடிக்கு வந்துருங்க, இதுல மூணு பேரோட வாழ்க்கை அடங்கி இருக்கு. என்ன பா பழனி, ஊர் சொல்றதுக்கு நீங்கக் கட்டுப்படுவீங்க தான?” என்றார்.

அவரும் சரியெனக் கூற, கோவிலில் இருந்த மக்கள் அனைவரும் எதிரே இருந்த அரச மரத்தடியில் கூடினர். ஊர் பெரியவர், “அந்தப் புள்ள மலரையும் அது அம்மாவையும் கூட்டத்துக்கு அழைச்சுட்டு வாங்க பாஎன உத்தரவிட்டார்.

தகவல் தெரிந்து குணவதி அங்கு வந்திருக்க, அவரைக் கண்டு மணலை வாரி அவர்மேல் தூற்றிய கமலம், சாபங்களை வாரி இறைக்க, அவரோ தன் கணவனைப் பார்த்தார். அவர் தன்னுடைய சுயநலத்தால் இரு பெண்களின் வாழ்வும் இன்று ஊர் மந்தை வரை இழுத்து வரப்பட்டதை நினைத்துக் குற்றவுணர்வில் கூனி குறுகிப் போயிருந்தார்.

பக்கத்து ஊரில் முகாமில் இருந்த மலர்விழியையும் ஊர் கூட்டத்திற்கு வரச் சொல்லித் தகவல் விடுக்க, அங்கிருந்து ஐவரும் கூட்டத்திற்கு கிளம்பினர்.

அரைகுறையாய் ஏற்கெனவே தகவல் வந்திருக்க, ஊர் மக்களைவிட அதிர்ச்சியில் உறைந்திருந்தனர் நண்பர்கள் நால்வரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
8
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. அருமையான குடும்பம் சார்ந்த காதல் கதை. மேலும் பல படைப்புகளை எழுத வாழ்த்துகள்.

      1. அப்பாடி . மலருக்கும் பாரிக்கும் கல்யாணம் ஆயிடுச்ச?🙂🙂🙂