Loading

பாட்டியும் பேரனும் கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில், பாரிவேந்தனின் முகம் பல்வேறு குழப்பங்களைத் தத்தெடுத்திருந்தது. ஊரின் நடுவே உள்ள கோவில் என்பதால் இருவரும் நடந்தே தான் சென்றிருக்க, தன் அப்பாயின் நடைக்கு ஏற்றவாறு மெதுவாக நடந்து வந்துக் கொண்டிருந்தான்.

இது சரியா வருமா ப்பாயி? எனக்கென்னமோ நம்ம அவசரப்பட்டுட்டமோனு தோணுதுஎன உள்ளே சென்ற குரலில் அவன் கூற, அவனை முறைத்த ராமாயி,

நான் சொல்றத மட்டும் செய் டா பேராண்டி. யார் என்ன சொன்னாலும் நான் பார்த்துக்கிறேன்எனத் தெம்பூட்ட, ‘நீ இருக்கிறது தான் எனக்குப் பயமே!’ என அவன் மனதினுள் கூறிக் கொண்டான்.

என்ன டா பேராண்டி சிந்தனை?” என அவர் சற்று குரலை உயர்த்த, “ஒன்னுமில்ல அப்பாயிஎன அவசர அவசரமாகத் தலையை ஆட்டினான்.

உன் மாமன நினைச்சு வெசனப்படறியாக்கும்?” என்க, “அவரு பாவம் அப்பாயி, ரெண்டு கண்ணாலத்த பண்ணியும் ஒருநேர சோறு கூட நிம்மதியா சாப்பிட முடியாத அளவுக்கு நொந்துப் போய் இருக்கிறாருஎனத் தன் மாமனுக்கு அவன் வக்காலத்து வாங்க,

உன் மாமனுக்கு வக்காலத்து வாங்குனதெல்லாம் போதும் டா. அவன் அவன், ஒன்ன கட்டிக்கிட்டே சீப்பட்டுப் போறானுக. இதுல உன் மாமனுக்கு ரெண்டு கேட்குது. அப்போ கொஞ்சமாவா அடிவிழும்!” என்றார் ராமாயி.

அப்பாயி, நீ யாருக்கு தான் ஆதரவா இருக்க? யார சொன்னாலும் ஒரு குறை சொல்ற? உன் வாய்ல இருந்து நல்ல வார்த்தை வாங்கிறதுக்குள்ள இந்த ஜென்மம் முடிஞ்சுரும் போலஎன அவன் கடுப்படிக்க,

அட பேராண்டி, நான் வாழ்ந்து முடிச்சவ டா. உன் வயசோட ரெட்டை அனுபவம் எனக்கு. இங்க எவனும் யோக்கியமானவனும் கிடையாது, கெட்டவனும் கிடையாது. சூழ்நிலை ஒவ்வொருத்தரையும் மாத்திருது. ஏன் இப்போ உன் சூழ்நிலை உன்னை மாத்தலயா?” என்றார்.

அவரின் திட்டத்தை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவரின் பேச்சும் கூட சில நேரங்களில் தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கும் நிலையில் தான் இருக்கும், இப்போது போல.

அவன் எதுவும் பதில் பேசாமல் இருக்க, “என்னடா பாரி அமைதியாகிட்ட?” என்றார் ராமாயி.

நீ என்ன என்னமோ சொல்ற அப்பாயி, ஆனால் எனக்கு என்னமோ நாளன்னிக்கு நடக்கப் போற விசயத்தை நினைச்சா தான்…” என்றவனின் முகத்தைப் பார்த்தவர்,

கண்டதையும் யோசிக்காம போய் கொஞ்சம் நேரம் கண்ணசரு. நேத்து ராத்திரி தான் தூங்காம அலைஞ்ச. இன்னிக்காவது கொஞ்சம் தூங்கு டா, நாளைக்கு நலுங்கு, அது இதுனு தூங்க விடமாட்டாங்கஎன்றவர், அதற்குள் வீடு வந்திருக்க தன்னுடைய இடமான திண்ணையில் எப்பொழுதும் போல் அமர்ந்து வெத்தலையை மெல்லத் தொடங்கினார்.

இரவு உணவைத் தவிர்த்தவன், வீட்டிற்கு உறவுமுறைகள் வந்திருந்ததால் அனைவரும் உறங்க ஏற்பாடு செய்துவிட்டு, வாசலில் கயிற்றுக் கட்டிலிலை எடுத்துப் போட்டவன் வானத்தைப் பார்த்துப் படுத்தான்.

கருநீல வானில் நிலா தன் கதிர்களை நிலமகளின் மீது பரப்பிக் கொண்டிருக்க, வானத்தில் மின்னிய நட்சத்திரங்களை வெறித்தவண்ணம் படுத்திருந்தான்.

கண்களை மூடினாலும் உறக்கம் வராமல் தவிக்க, ஏனோ அந்நேரம் உலகமே இருண்டதுபோல் தோன்றியது அவனுக்கு. ‘எங்கே செல்லும் இந்தப் பாதை…’ என்ற பாடல் தான் தன் வாழ்க்கைக்கு பொருத்தமோ என அவன் எண்ணுமளவிற்கு வெறுமையை சுமந்திருந்தான் பாரிவேந்தன்.

மலர்விழி, யாழினி. இந்த இரு பெண்களின் கரங்களில் அவனது வாழ்வு பந்துபோல் கைமாறிக் கொண்டிருக்க, ஆனால் காலமோ அவன் வாழ்க்கையில் விளையாடக் காத்திருந்தது.

மலர்விழியின் இல்லத்திலோ ஹரிஹரன் நெடுநேரமாக யாரையோ தேடிக் கொண்டிருக்க, அதனைக் கண்ட இந்திரா, “என்னடா தேடுற, ஏதாவது வேணுமா?” என்றாள்.

ஃபிளவர் எங்க இந்து? ரொம்ப நேரமா ஆளயே காணோம். இந்த நைட் நேரத்துல எங்க போனா?” என்றவாறே குணவதியிடம் செல்ல, “அவ கொஞ்சம் மைண்ட் அப்செட்டா இருக்கு, கொஞ்சம் நேரம் தனியா நடந்துட்டு வரேன்னு போனா டா. சொல்லிட்டுத் தான் போனா, ஏன் அவள தேடற?” என்றாள் இந்திரா.

அப்பொழுது குணவதியும் அங்குவர, இந்திராவின் பதிலைக் கேட்டவர், “ஆமா பா தம்பி, அவ அடிக்கடி இந்தமாதிரி பண்ணுவா. மனசு சரியில்லனா கால் வலிக்கிற வரை நடப்பா, அப்போதான் நைட்டு தூக்கம் வரும்னு சொல்லுவா. எவ்ளோ தான் சொன்னாலும் அத கேட்கவே மாட்டேங்கிறா. இந்த ராத்திரி நேரத்துல இவ இப்படி தனியா நடக்கிறது நல்லா இருக்கா!” எனத் தன் மனக்குமறலைக் கொட்ட,

நான் அவள வீட்டுக்குக் கூட்டிட்டு வரேன் ஆன்ட்டிஎன்றவன் வெளியே கிளம்பினான். அவன் வாசலைத் தாண்ட, மலரும் அங்கு வந்து சேர்ந்தாள்.

எங்க ஃபிளவர் போன, வாக்கிங் போக இந்த ராத்திரி நேரம் தான் கிடைச்சுதா?” என அவன் கோபப்பட, அவள் முகம் ஏனோ பொலிவிழந்து காணப்பட்டது.

எதுவும் பேசாமல் தன்னறைக்குச் செல்ல, ‘என்னாச்சு இவளுக்கு? எதுவும் பேசாம உள்ள போறா!’ என நினைத்தவன்,

ஃபிளவர் நில்லு. கேட்டுக்கிட்டே இருக்கேன்ல, பதில் சொல்லிட்டுப் போஎன அவன் பின்னாலே செல்ல, அவளோ அறைக்குள் நுழைந்து கதவை படாரெனச் சாற்ற, உள்ளே நுழைய இருந்தவனின் முகத்தின் முன் கதவு சாற்றப்பட்டது.

அதில் இரண்டடி பின்னால் எடுத்து வைத்தவன், தலையை ஒரு கரத்தால் பிடித்தவண்ணம், “கடவுளே! இப்போ என்ன நடந்துச்சோ!” என வாய்விட்டே புலம்ப, இந்திராவும் சிலம்புவும் அவன் அருகில் வந்தனர்.

என்னாச்சு ஹரி, மலர் எங்க போனா? என்னாச்சு?” என்றாள் சிலம்பு. “தெரியல சிலம்பு, வந்தா, நான் கேட்ட கேள்விக்குக் கூட பதில் சொல்லாம பட்டுனு கதவ சாத்திட்டு உள்ளப் போய்ட்டாஎன்றான் கம்மிய குரலில்.

சரி விடு டா. அவளே கொஞ்சம் நேரம் கழிச்சு வந்து பேசுவா, அவ அடிக்கடி இப்படி பண்றது தான. நமக்கு இதெல்லாம் புதுசா என்ன!” என இந்திரா கூற,

இல்ல இந்து, அவ ரொம்ப டிஸ்டர்ப்ட்டா இருந்தா மட்டும் தான் இப்படி பண்ணுவா. ஆனா இன்னிக்கு முழுக்க நம்ம கூடத் தான இருந்தா, அப்படி அவ மனசு கஷ்டப்படற மாதிரி எதுவும் நடக்கலயேஎன்றான் தன் தோழியைப் புரிந்துகொள்ள முடியாமல் சற்று குழப்பத்துடன்.

நேத்து நைட் நடந்தத ஏதும் நினைச்சுருப்பா டா, அதான். வேற எதுவும் இருக்காது, நீ கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுஎன அவனைச் சமாதானப்படுத்திய இந்திரா, “வா சிலம்பு. நம்ம ரூம்க்குப் போகலாம்என்க, இருவரும் தங்கள் அறைக்குச் சென்றனர்.

தன் அறைக்குச் சென்ற ஹரிஹரன், அறையினுள்ளேயே குறுக்கும் நெடுக்குமாய் அறையைத் தனது நடையால் அளந்துக் கொண்டிருக்க, அவனையே நெடுநேரமாகக் கவனித்துக் கொண்டிருந்த செந்தில், “என்ன டா மச்சான், ஏன் இப்படி குட்டி போட்ட பூனையாட்டம் ரூம அளந்துக்கிட்டு இருக்க?” என்றான்.

ஒன்னுமில்ல டாஎன்றாலும் அவன் மனம் குழப்பமாகத் தான் இருந்தது. “சரி, நான் தூங்கப் போறேன். நீயும் வந்து படுஎன்றவன், செந்தில் உறங்கிவிட உறக்கம் வராமல் சிந்தனையிலேயே உழன்று கொண்டிருந்தான் ஹரிஹரன்.

தன் அறையிலோ உறங்காமல் விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தாள் மலர்விழி. ஆளுக்கொரு சிந்தனையில் உழன்றுக் கொண்டிருக்க, இரவுப் பொழுது மென்மையாய் கடந்து போனது.

அடுத்த இரு நாட்களும் அருகில் உள்ள கிராமமொன்றில் மருத்துவ முகாம் இருக்க, ஐவர் படையும் முகாமிற்குச் சென்றனர்.

காலையில் இருந்தே ஊர் மக்கள் முகாமிற்கு வந்து தங்களை பரிசோதனைக்குட்படுத்திக் கொண்டிருக்க, நண்பர்கள் பேசுவதற்கான சந்தர்ப்பம் கிட்டாமல் போனது.

மலர்விழியும் முகாமில் கவனத்தை செலுத்தி இருந்ததால், அவளைத் தொந்தரவு செய்ய மனமின்றி ஹரிஹரனும் தன் பணியைத் தொடர்ந்தான்.

அன்று மருத்துவமனையில் நடந்த விசயங்கள் காற்றுவாக்கில் சுற்றுப் பத்து ஊர்களுக்கும் பரவி இருந்தது. சிலர் மலர்விழியை குறைக் கூறினாலும் ஒருசிலர் அவளைப் பாராட்டவும் செய்தனர்.

பாராட்டினாலும் சரி, இகழ்ந்தாலும் சரி அவளின் பதில் சிறு புன்னகையாய் மட்டுமே இருக்க அதனைக் கண்ட நண்பர்களுக்குச் சற்று நிம்மதியானது. எங்கே அவள் மீண்டும் பழைய ஞாபகத்தில் மனம் வாடி விடுவாளோ என்ற பயம் உள்ளுக்குள் இருக்கத் தான் செய்தது.

ஆனால் இதற்கு நேரெதிராக பாரிவேந்தன்யாழினி திருமணத்திற்கான ஏற்பாடுகள் படுஜோராக நடந்துக் கொண்டிருந்தது.

ஊர் விழாக்கோலம் பூண்டிருக்க, ஊரின் மத்தியில் இருந்த மாரியம்மன் கோவில் முன் தென்னை பட்டையால் பந்தல் வேயப்பட்டிருந்தது.

கோவில் முன்பாக சிறு அலங்கார தோரணைகளுடன் மேடை அமைக்கப்பட்டிருக்க, கோவிலின் இடப்புறம் இருந்த காலி இடத்தில் சமையல் வேலைகள் நடந்துக் கொண்டிருந்தது. அதன் அருகிலேயே உண்பதற்காகப் பெரிய பந்தல் வேயப்பட்டிருக்க, அங்கு நாற்காலிகளும் உணவு மேஜைகளும் வீற்றிருக்க ஆரம்பித்தன.

பெண்ணின் வீட்டில் இரவு நலுங்குகான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, வந்திருந்த உறவுகளைக் கவனிக்கவே ரேவதிக்கும் கமலத்திற்கும் சரியாக இருந்தது.

பழனியப்பனும் சுந்தரபாண்டியனும் விடுபட்ட சொந்தங்களுக்கு அலைப்பேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆக மொத்தம் ஊரே சந்தோசத்தில் மூழ்கி இருக்க, இதற்கெல்லாம் நாயகனாக இருப்பவனோ மனதினுள் வெம்பிக்கொண்டிருந்தான்.

மனம் எதிலும் ஒன்றாமல் கடமைக்கென வந்தோரை வரவேற்றுக் கொண்டிருக்க, இதில் மாமன், மச்சான்களின் கேலி கிண்டல்கள் வேறு கடுப்பை கிளப்பிக் கொண்டிருந்தது.

சண்முகமும் தன் தங்கையின் திருமணத்தை எண்ணி சந்தோசத்துடன் அனைத்திலும் கலந்து கொண்டாலும் அவனின் மனம் மலர்விழியையும் நினைத்தது.

யாழினி போல் அவளும் அவனுக்கு தங்கை தானே. ஆனால் வெளிப்படையாக உரிமை கொண்டாட முடியாத நிலை. அவளின் அன்னையை மனதார ஏற்க முடியவில்லை எனினும் மலரை அவன் மனம் சட்டென்று உரிமைக் கொண்டாடத் தொடங்கியது.

அந்த நினைவுடனே வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தான். அன்றையபொழுது சாய, தங்கள் வேலைகளை முடித்து விட்டு ஐவர் படையினர் வீடு திரும்பி இருந்தனர்.

ஊரில் மைக் செட்டில் ஓடும் திரைப்பட பாடல்கள் அங்கும் கேட்டுக்கொண்டு தான் இருந்தது. குணவதி தன் மகளை பார்க்க, அவளோ அதனை எல்லாம் கண்டு கொள்ளாமல், “அம்மா பசிக்குது, சாப்பாடு எடுத்து வைஎனக் கேட்க, அப்பொழுது நேரத்தைப் பார்த்த ஹரிஹரன்,

ஆறரை தான் ஆகுது, அதுக்குள்ள டின்னரா ஃபிளவர்?” என்றான். “நீங்க அப்புறம் சாப்ட்டுக்கோங்க டா. நான் சாப்ட்டு கொஞ்சம் நேரம் தூங்கறேன்என்றவள், உணவை முடித்துவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் தங்களை தவிர்ப்பதை உணர்ந்துதான் இருந்தான் ஹரிஹரன். முகாமில் கூட யாரும் இல்லாத நேரத்தில் அவளிடம் அவன் பேச முயன்றும், அவளோ அதனை லாவகமாகத் திசை மாற்றி இருந்தாள்.

மற்ற மூவரும் ஹரிஹரனை பார்க்க, “இவ மனசுல என்னத்த பூட்டி வச்சுருக்கானே தெரிய மாட்டேங்கிது. வாயத் திறந்தும் பேச மாட்டேங்கிறா, ஊருக்குள்ள பாரி பிரதரோட கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடு நடந்துக்கிட்டு இருக்கு. இவ இப்படி இருந்தா நம்ம என்னதான் பண்றது!” என நொந்தவாறே கூறியவன், அப்படியே முற்றத்தில் அமர்ந்தான்.

பேசாம மாப்பிள்ளைய கடத்திறலாமா டா?” என சிலம்பு கூற, மற்ற மூவரும் அவளைப் பார்வையாலே எரித்தனர். செந்திலோ, “பேபி மா, இது அவங்க ஊர். ஊரே திருவிழா மாதிரி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காங்க. மத்த நாளாவது தெரு விளக்கு மட்டும் தான் எரியும், ஆனா இன்னிக்கு பாரு. இந்த ஊர்ல இருந்து அடுத்த ஊரு வரைக்கும் டியூப் லைட்டா ரோட்டுல ரெண்டு பக்கமும் கட்சி கொடி மாதிரி நட்டு வச்சுருக்காங்க. இதுல நம்ம உள்ளப் போனாலே எல்லாரும் நம்மள தான் பாப்பாங்க. எங்க போய் இதுல மாப்பிள்ளைய தூக்குறது?” என்றான்.

அவன் சொன்னதும் உண்மையே. ஊரே திருவிழா கோலம் பூண்டதோடு மட்டுமல்லாமல், பக்கத்து ஊர்வரைக்கும் மின்வெளிச்சம் ஆறுபோல் பரவிக் கிடந்தது.

பட் இதெல்லாம் செமயா இருக்குல்ல. லைட் செட்டிங், மைக் செட்ல பாட்டு. கோவில் முழுக்க தோரணங்களும், பந்தலும். பண்ணா இப்படி கல்யாணம் பண்ணனும்என இந்திரா கூற, அவள் தலையில் நங்கெனக் கொட்டு வைத்த ஹரிஹரன்,

அவன் அவன் என்ன பண்றதுனு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கோம். இவ என்னடான்னா கல்யாண கனவு காண்றா. ஒன்னு பண்ணு இந்த ஊர் பையனா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோ. உனக்கும் இதே மாதிரி நடக்கும்என்றான்.

ச்சீ ச்சீநானா இங்கயா? நெவர், என் ரேன்ஜ்க்கு…” என அவள் தொடரும்முன், “வாய்ல ஏதாவது வந்தற போகுது. அதுக்குள்ள ஓடிருஎன்றான் அவளை முறைத்துக் கொண்டே ஹரிஹரன்.

அவள் கப்சிப் என அமைதியாக, “மொதல்ல ஃபிளவர் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்கணும். அப்புறம்தான் எதுவா இருந்தாலும் பிளான் பண்ண முடியும், ஆனா அவ எதுக்கும் பிடி கொடுக்க மாட்டேங்கிறாளேஎன அவன் புலம்பினான்.

நாளைக்கு காலைல பத்தரை டூ பதினொன்றை தான் முகூர்த்தம் டா. அந்த முகூர்த்தம் தான் ஏதோ ஸ்பெஷல்னு சொன்னாங்க ஊர்குள்ள, அதுனால நாம இப்போ சாப்ட்டு நைட் நல்லா தூங்கிட்டு காலைல எந்திரிச்சு என்ன பண்ணலாம்னு பிளான் பண்ணுவோமா?” என இந்திரா கூற,

இப்போ என்ன, உனக்கு சோறு வேணுமா?” என்றான் தீப்பார்வையுடன். “ம்எனத் தலையாட்டியவள், “வயிறு கத்துது டாஎன வயிற்றைப் பிடித்தவாறே உதட்டைப் பிதுக்க,

அதனைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டவன், “உன்னைலாம் பிரண்டா வச்சுக்கிட்டு, போ. போய் கொட்டிக்கோஎன்றான். அடுத்த நொடி அவள் அங்கிருந்து மாயமாகிருக்க, செந்திலும் சிலும்புவும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தான்.

நீங்க மட்டும் ஏன் டா இங்க நின்னுட்டு இருக்கீங்க? நீங்களும் போய் கொட்டிக்கோங்கஎன்க, செந்தில் ஏதோ கூற வர, கை எடுத்துக் கும்பிட்டவன், “போ டாஎன்றான் ஹரிஹரன்.

இங்கு இவ்வாறு இருக்க, அங்குத் திருமண வீட்டிலோ நலுங்குக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகிக் கொண்டிருந்தது.

தன்னை சுற்றி உள்ளவர்கள் ஏதேஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருக்க, அவர்கள் நடுவே போலி புன்னகையை சுமந்தவண்ணம் அமர்ந்திருந்தான் பாரிவேந்தன்.

யாழினிக்கு பாரிஜாதமும் மற்ற பெண்களும் சேர்ந்து அலங்காரம் செய்து கொண்டிருக்க, அப்பொழுது பெரியவர் ஒருத்தர், “ஏப்பா நலுங்குக்கு நேரமாச்சு. பொண்ண அழைச்சுட்டு வாங்கஎனக் குரல் கொடுத்தார்.

அடுத்த சில நிமிடங்களில் நடுகூடத்தில் யாழினியை அழைத்துக் கொண்டு வந்து நிறுத்த, காஞ்சிப் பட்டில் தங்க ஆபரணங்கள் ஜொலிக்க தங்கத்தை மிஞ்சும் அளவிற்கு அவள் முகம் ஜொலித்தது.

யாழினியும் அழகில் மலர்விழியை சளைத்தவள் அல்ல. இயற்கையிலேயே எழிலூட்டும் அழகைப் பெற்றிருந்தவள், இன்று செயற்கை ஒப்பனையுடன் அழகியாகத் தான் இருந்தாள்.

ஆனால் அதனை ரசிக்கும் மனநிலையில் இல்லை அவளை மணக்கப் போகும் மணாளன். நலுங்கு வைக்கப்பட, அடுத்தடுத்த சம்பிரதாயங்கள் விரைவாக நடந்தேறியது.

பெண்ணின் வீட்டில் சடங்குகள் முடிய, அதன்பின் பெண்ணை அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டிற்கு செல்வது வழக்கம். ஆனால் இங்கு அருகருகே வீடு என்பதால், உடனே மாப்பிள்ளைக்கும் நலுங்கு வைக்கும் நிகழ்வு நடந்தேறத் தொடங்கியது.

வேஷ்டியில், உள் பனியனுடன் பாரிவேந்தன் அமர்த்தப்பட, மாமன், மச்சான்கள் நலுங்கு வைக்க ஆரம்பித்தனர். அடுத்து பரிசம் போடுதலும் நடந்தேற, சிலர் உறங்கச் சென்றிருந்தனர்.

இன்னும் சிலர் ஆங்காங்கு அமர்ந்து அரட்டை அடிக்கத் துவங்கி இருந்தனர். புகைப்படக்காரர் இருவரையும் சேர்த்து வைத்துப் புகைப்படம் எடுக்க பாரிவேந்தனை அழைக்க, அவனோகாலைல பாத்துக்கலாம் ண்ணா. இப்போ வேண்டாம்என்க, யாழினியின் முகம் வாடத் தொடங்கியது.

சண்முகம் பாரிவேந்தனின் அருகில் வந்து, “என்னாச்சு மாப்பிள்ளை? காலைல போட்டோ எடுக்க நேரம்கூட இருக்காது மாப்பிள்ளை, இப்பன்னா சாகவாசமா போட்டோ எடுத்துக்கலாம்லஎன்றான் தன்மையாய்.

இல்ல மச்சான். பரவால்ல, எனக்குக் கொஞ்சம் தலைவலிக்கிற மாதிரி இருக்கு. என்னால போட்டோ எடுக்க நிக்க முடியாது, அதான்என அவன் சமாளிக்க, அதற்குமேல் அவனை வற்புறுத்த முடியாமல் தன் தங்கையைப் பார்த்தான் சண்முகம்.

அவள் விழிகளில் நீர் திரள ஆரம்பித்திருக்க, அவள் அருகில் வந்தவன், “மாப்பிள்ளைக்குத் தலைவலியாம் யாழு. இப்போ கொஞ்சம் நேரம் தான் ஓய்வெடுக்க முடியும். நாளைக்கு பொறுமையா போட்டோ எடுத்துக்கலாம், என்ன!” என அவள் முகம்பற்றி கூற,

அரைமனதுடன் அவள் தலையாட்டினாள். இதெல்லாம் இவர்களே பார்த்துக் கொள்வார்கள் எனப் பெரியவர்கள் தங்கள் வேலையைக் கவனிக்க சென்றிருந்ததால் இது பெரிதாக்கப்படாமல் அமைதியானது.

யாழினியை சமாதானப்படுத்திய பாரிஜாதம், தன் அண்ணனைத் தேடி வந்தாள். அவனோ பின்பக்கம் உள்ள மாட்டுக் கொட்டகையில் தனியே அமர்ந்திருக்க, அவன் அருகில் சென்று மற்றொரு நாற்காலியைப் போட்டு அமர்ந்தாள்.

என்னண்ணா இப்படி பண்ணிட்ட? பாவம் யாழு, அழற மாதிரி போய்ட்டா. ரெண்டு மூணு போட்டாவாவது எடுத்துருக்கலாம்லஎன்றாள் பாரிஜாதம்.

அவளா விருப்பப்பட்டு தான இந்தக் கண்ணாலத்த ஏத்துக்கிட்டா. இனி அனுபவிச்சு தான் ஆகணும்என்றவனின் வார்த்தைகளில் அதிர்ந்தாள் பாரிஜாதம்.

உனக்கு யாழுவ கட்டிக்க விருப்பம் இல்லயா ண்ணா?” என்றாள் மெதுவாக. “இருக்கோ இல்லயோ. காலைல கண்ணாலத்த வச்சுட்டு இப்போ என்ன செய்ய முடியும் மா?” என்றவனின் வார்த்தைகளில் தெரிந்த விரக்தி அவளை அதிர்வடைய செய்தது.

யாழினி மாமன் மகள் என்பதையும் தாண்டி, அவளுக்கு நல்ல தோழியவள். சகோதரிபோல் தான் இருவரும் ஒட்டி உறவாடுவர். அண்ணனுக்கும் அவளுக்கும் மணம்பேசி முடிக்கும்போது சந்தோசப்பட்டவள் அவள் தான் என்றாலும், மனதினோரம் மலர்விழியையும் நினைத்து ஏங்கியது. தன் அண்ணனுக்கும் அவள்மேல் விருப்பம் உள்ளதோ என்ற சந்தேகமும் இருந்தது.

ஆனால், யாழினியை திருமணம் செய்துகொள்ள அவன் சம்மதம் கூற, அதன்பின் மலர்விழியை பற்றி அவனிடம் கேட்பது முறையல்ல என்றெண்ணி தான் அவள் கேட்காமல் இருந்தாள். தற்போது தன் அண்ணனின் விரக்தியான வார்த்தைகளில் சந்தேகம் துளிர்த்தெழ,

இன்னும் உன் மனசுல மலர் தான் இருக்காளா ண்ணா?” என்றாள் பாரிஜாதம். அவனோ பதிலளிக்காமல் கண்களை இறுக மூடி நாற்காலியில் சாய்ந்தமர,

அண்ணா!” என்றாள் அவன் தோள்தொட்டு. அவனின் மௌனம் அவளின் இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
9
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்