கருநீல வானமும், செந்நிற கதிரவனும் ஒன்றோடொன்று சங்கமித்த தருணம். அந்தி மாலைப் பொழுதில் சற்று முன் தான் மழை பெய்து ஓய்ந்திருக்க, லேசான தூறல் பூமித் தாயைத் தொட்டுக் கொண்டிருந்தது. இளையராஜாவின் மெல்லிசையை காற்றில் கலக்க விட்டவாறே அந்த மினி பேருந்து நகர்ந்து வந்தது.
“கரிசல் பட்டி, கரிசல் பட்டி” என நடத்துனரால் இரண்டு முறை அவ்வூரின் பெயர் ஏலம் விடப்பட, பேருந்து நின்றவுடன் அதிலிருந்து இறங்கினாள் மலர்விழி.
ஆகாய வண்ண சல்வார் அவளின் மஞ்சள் நிற பொன்மேனியைத் தழுவி இருக்க, வீசிய இளந்தென்றல் அவளின் கார்குழலை காற்றில் அலைய விட்டது.
காதின் இரு ஓரமும் சிறு கற்றையை எடுத்து ஒரு கிளிப்பால் அடக்கி இருக்க, கார்குழல் அவளின் முதுகை தழுவி இருந்தது.
சற்று முன் தான் மழைப் பெய்து ஓய்ந்திருந்ததால் மண் வாசனை நாசி கமலத்தை தூண்டியது.
சிப்பி போன்ற இமைகளை மூடி, மண்வாசனையை நாசியினுள் இழுக்க, அதன் வாசம் அவள் நெஞ்சைத் தொட்டு அடிவயிற்றை அடைந்தது. அவளின் தளிர்மேனி சிலிர்க்க, ஆழ்ந்து அனுபவித்தவள் ஒரு கரத்தால் தன் முகத்தில் மோதிய கற்றை முடியை ஒதுக்கியவாறே மறு கரத்தால் லக்கேஜ் பேக்கை இழுத்துக் கொண்டு நடக்கத் துவங்கினாள்.
ஊரின் எல்லைப் பகுதி அது. வடபுறம் பேருந்து நிழற்குடையும், இடபுறம் ஒரு டீக் கடையும் அமைந்திருக்க, மலர்விழி பேருந்திலிருந்து இறங்கியதிலிருந்து டீக் கடையில் நின்றிருந்தவனின் பார்வை அவள்மேல் தீண்டியது.
அவளோ அவனைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. மண் வாசனையை நுகர்ந்து கொண்டே அந்தத் தார் சாலையில் நடக்கத் துவங்கினாள்.
அவளைப் பார்வையால் பின்தொடர்ந்தவனின், முகத்தில் சந்தோச ரேகைகள் ஓடினாலும் சிந்தனை ரேகைகளும் கலக்கத் துவங்க, கையில் இருந்த டீ டம்பளரை அங்கு வைத்துவிட்டு அதற்கான பணத்தை கடைக்காரரிடம் நீட்ட,
“தம்பி, ஒரு டீ தான… அதுக்குப் போய் காசு தர்றீங்களே” என அந்தக் கடைக்காரர் மண்டையை சொரிந்தார்.
“ஒரு டீயா இருந்தாலும் அதுவும் உங்களுக்கு வருமானம் தான அண்ணா… மறுக்காம வாங்கிக்கோங்க” என அவன் டீக்கான பணத்தை கொடுத்து விட்டு அருகில் நின்றிருந்த புல்லட்டை இயக்கினான்.
என்றும் வெளியில் டீ குடிக்காதவன், இன்று மழையில் நனைந்திருந்ததால் ‘ஒரு டீ குடித்தால் தேவலாம்‘ என்றெண்ணி அங்கு வண்டியை நிறுத்தி, ஒரு டீ குடித்தான்.
அதுவும் ஒரு வகையில் நல்லதாய் போயிற்று என அவன் மனம் எண்ணிக் கொண்டது. ஒருவேளை அங்கு அவன் நிற்கா விட்டால் அவள் இந்தக் கிராமத்தில் காலடி எடுத்து வைத்ததை உடனே அறிந்திருக்க முடியாதல்லவா!…
வண்டியை இயக்கியவன், மெல்ல அதனைச் செலுத்தத் தொடங்க, நடந்து சென்று கொண்டிருந்தவளின் நடை சட்டெனத் தடைப்பட, இவனின் கரத்தின் உபயத்தால் புல்லட்டின் வேகமும் சற்று தடைபட்டது.
ஆளுயரத்திற்கும் சற்று மேல் உள்ள ஒரு வேப்பமரம் அவள் கண்ணில் பட்டிருந்தது. அப்பொழுது தான் வேப்பமரத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கி இருந்த காலம்.
வெள்ளை நிறப் பூக்கள், பச்சை வண்ண இலைகளுக்கிடையே பூத்துக் குலுங்கி இருக்க, லக்கேஜ்ஜை சற்று தள்ளி வைத்தவள் அந்த மரத்தின் அடியில் நின்று கொண்டு மரக்கிளை ஒன்றைப் பிடித்து ஆட்ட, அதிலிருந்த மழைத்துளிகள் அவளின் தளிர்மேனியைத் தழுவி நிலமகளை சென்றடைந்தது.
அவளின் நீல வண்ண ஆடை ஆங்காங்கு நீர்த் துளிகளால் நனைந்திருக்க, அதனால் ஏற்பட்ட குளிர்ச்சியின் தாக்கம் அவள் தேகத்தை சிலிர்ப்படைய செய்ய, தேகம் உதறி சிலிர்த்தது.
அதனைக் கண் மூடி அனுபவிக்க, அந்நேரம் பார்த்து ஒரு கார் அவளை மோதுவது போல் வந்து நின்றது.
அதில் அவள் பதறியதை விட, சற்று தள்ளி நின்று அவளை ரசித்தவன், துடித்துப் போனான். அவன் கோபமாக வண்டியை விட்டுக் கீழிறங்கி கார்க்காரனைத் திட்டுவதற்காக அவன் கால்கள் நகர, அவளின் குரல் அதற்குத் தடைப்போட்டது.
சற்று உதறல் எடுத்து இருந்தாலும், கோபத்துடன் காரைப் பார்த்தவளின் கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தன.
அதிலிருந்து வாட்டசாட்டமான ஒருவன் இறங்க, “டேய், கரிச்சட்டி!” எனக் கூவினாள் மலர்விழி.
அவனோ, “இங்க வந்தும் இத விட மாட்டியா டி” எனச் செல்லமாகக் கோவித்தாலும், “இப்படி தான் மழைத் தண்ணில ஆடறதா… சளி பிடிச்சுக்கும், அதுவும் இப்படி வெயில் காலத்துல வர்ற மழைல நனைஞ்சு இருக்க” என அவள் தலையில் நங்கெனக் கொட்டு வைத்தான்.
அவளோ, இதழைச் சுளித்து “சூ…” எனத் தலையைத் தடவிக் கொண்டவள், “வலிக்குது டா கரிச்சட்டி” என்றாள்.
“ரொம்ப வலிக்குதா டி ஃபிளவர்?” என்றவாறே கொட்டியவனே மருந்தாய் மாறி அவள் தலையைத் தேய்த்து விட, “வெவ் வெவ் வெவ்வே…” என அவள் பழிப்பு காட்டியவாறே, அவனிடமிருந்து ஓடினாள்.
“பண்றதெல்லாம் பண்ணிட்டு குழந்தை மாதிரி ஓடறத பாரு” என அவன் இதழ்கள் புன்னகையில் மலர, இதனை எல்லாம் சற்று தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவன் முகத்தில் சிந்தனை ரேகைகள் ஓடின.
“சரி, சரி… கொட்ட மாட்டேன் ஃபிளவர், வந்து கார்ல ஏறு” என்றவாறே அவன் அவள் அங்கு வைத்திருந்த லக்கேஜ்ஜை கார் டிக்கியில் ஏற்ற, அப்பொழுது தான் அவளுக்கு ஞாபகம் வந்தது போல் “ஆமா… நீ எப்படி டா இங்க வந்த? என் கிட்ட ஏன் நீ வர்றத சொல்லல?” எனக் குழப்பத்துடன் வினவினாள்.
“அம்மா, தாயே! இப்பயாவது என்னைப் பத்தி கேட்கணும்னு நினைச்சியே… ஒருத்தன் கோயம்பத்தூர்ல இருந்து இவள பார்க்க ஓடோடி வந்தா இவ என்னடான்னா குழந்தை மாதிரி வெவ் வெவ்வே காட்டிட்டு இருக்கிறா. எனக்குனு வாச்சது எல்லாம் இப்படி டியூப்லைட்டா இருக்கே புள்ளையாரப்பா!” என வானத்தை நோக்கி இரு கரங்களையும் விரித்துக் கூற,
“யாரு டா டியூப் லைட்… நானா, நானா” என அவன் முதுகில் அவள் கரங்கள் அடியெனத் தட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்க, “வலிக்குது டி ஃபிளவர்” என அவன் குதித்துக் கொண்டிருந்தான்.
அடிப்பதை நிறுத்தியவள், “ஏன் டா என்கிட்ட சொல்லல? ஆமா, நீங்க எல்லாம் வெள்ளிக்கிழமை வர்றதா தான ஃபிளான்? நீ மட்டும் ஏன் டா இன்னிக்கே வந்த?” என்றாள் மலர்விழி.
“அவங்க வெள்ளிக் கிழமை தான் வருவாங்க… என்னால தான் இந்த ஃபிளவர்ர பிரிஞ்சு இரண்டு நாள் கூட இருக்க முடியாம உடனே ஓடி வந்துட்டேன்” என அவன் கண்ணடிக்க,
‘இத நம்பற மாதிரி இல்லையே!’ என்ற சந்தேகத்தோடு பார்த்தாள் அவள். “ப்ராமிஸ் பேபி… உன்மேல வேணும்னா சத்தியம் பண்ணவா?” என அவன் அவள் தலைமேல் கரங்களை வைக்கப் போக, அவள் பதறியபடியே வேகமாக அவனை விட்டுச் சற்று விலகி நின்றாள் மலர்விழி.
அவளின் செயலால் அவன் முகம் சுருங்க, “சும்மா சீன் போடாத டா… ஒழுங்கா சொல்லு, எதுக்கு உடனே வந்த?” எனக் கேள்விக்கணைகளை வீசினாள்.
“நான் சொன்னத நம்பலையா ஃபிளவர்?” என அவன் உதட்டைப் பிதுக்கிச் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு வினவ, “சத்தியமா நம்ப மாட்டேன் டா கரிச்சட்டி…” என அவள் தீர்மானமாய் கூறினாள்.
“அதுவந்து…” என அவன் கால்கள் தார் சாலையில் கோலமிட, “அய்ய…” என்றாள் மலர்விழி.
“ச்சீ, என்ன கண்றாவிய டா பண்ற நீ?” என அவள் முகம் சுளிக்க,
“தட்ஸ் கால்டு வெட்கம் ஃபிளவர்” என மீண்டும் அவன் கால் விரல்கள் கோலமிட, அவன் கால்மேல் தன் காலை வைத்து அழுத்தியவள்,
“சைட் அடிக்க வந்தத ஏன் இவ்ளோ இழுக்கிற? எப்படியோ நீ பஞ்சாயத்த கூட்டாம விட மாட்டப் போல, பாரு… நான் ஒரு மடச்சி, ரோட்லயே நின்னு எல்லாத்தையும் விசாரிச்சுக்கிட்டு இருக்கேன். முதல்ல கார எடு, வீட்டுக்குப் போய் மீதிய பேசிக்கலாம்” என்றவள் முன்பக்க கதவைத் திறந்து அமர்ந்தாள் மலர்விழி.
டிரைவர் இருக்கையில் அமர்ந்த கரிச்சட்டியென மலர்விழியால் செல்லமாக அழைக்கப்பட்ட ஹரிஹரன் வண்டியைச் செலுத்தினான். இருவருமே தற்பொழுது தான் எம்.பி.பி.எஸ் முடித்துள்ளனர்.
அனைத்து சம்பாஷணைகளையும் பார்த்துக் கொண்டிருந்த அவன், சற்று குழப்பத்தோடு தனது புல்லட்டை முறுக்கினான்.
ஐந்து நிமிட பயணத்திற்கு பிறகு வந்த தோட்டமொன்றில் தெரிந்த மண் பாதையில் வண்டியைத் திருப்பச் சொன்னாள் மலர்விழி.
சாலையிலிருந்து சற்று தொலைவில் அந்தத் தோட்டத்தின் மையப்பகுதியில் ஒரு மச்சு வீடு தென்பட்டது.
அந்தத் தோட்டத்திற்குள் நுழையும் போதே மண்வாசனையோடு மல்லிகையின் மணமும் இருவரின் நாசியையும் தீண்டியது.
அந்த மண் பாதையின் இருபுறமும் பூக்கள் பூத்து குலுங்கி வரவேற்றன. ஒருபக்கம் சாமந்தியும், மறுபக்கம் மல்லிகையும் பயிரிடப்பட்டு இருக்க, அதற்கு அடுத்த பகுதியில் கோழி கொண்டை மலர்கள் சிவப்பு நிறத்தில் பார்க்கவே கண்ணுக்குக் குளிர்ச்சியாகக் காட்சி அளித்தது.
வீட்டின் முன்பக்க வாசலில், மாட்டுக்குத் தீவனம் போட்டுத் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த குணவதி, தங்கள் இல்லத்தை நோக்கி ஒரு கார் வருவதை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
“இந்த வீடு தான் டா” என மலர்விழி கூற, காரை நிறுத்தினான் ஹரிஹரன். அவள் காரிலிருந்து இறங்க, தன் மகளைத் திடீரெனத் தன் முன் கண்ட குணவதி கண்கள் விரிய நின்றிருந்தார்.
“அம்மா!” என அழைத்தாள் மலர்விழி. இந்த அழைப்பு அவர் இதயத்திற்குள் சென்று ஒரு உணர்ச்சி பிழம்பையே ஏற்ப்படுத்தியது.
அவள் ஐந்து வருடம் கழித்து இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ளாள் என்பதையும் தாண்டி, இத்தனை வருடங்கள் கழித்து தன் மகளைக் கண்ட பூரிப்பில் வேகமாக அவள் அருகில் வந்தார் குணவதி.
“மலரு!” என அவள் கன்னம் தடவ, “என்ன மா, எப்படி இருக்கீங்க?” என்றாள் மலர்விழி.
“இருக்கேன் மா… ஒரு வார்த்தை கூடச் சொல்லாம திடுதிப்புனு வந்து நிக்கிறியே டி!” என அவர் கூற,
“சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்ப, ஊருக்கே தண்டோரம் போடாத குறையா சொல்லி இருப்ப. எதுக்கு தேவையில்லாத சீன் கிரியேட் பண்ணனும்? நான் வந்தது உனக்காக, அவ்ளோ தான்” என அழுந்தச் சொன்னவள்,
“அவன் என் பிரண்ட் கரிச்சட்டி, ச்சீ ச்சீ… ஹரி மா” எனத் தன் நண்பனை அறிமுகப்படுத்த,
“வாங்க தம்பி…” எனப் புன்னகை முகமாய் வரவேற்றார் குணவதி. அவரின் சாந்தமான முகம் அவனுக்குப் பார்த்தவுடனே பிடித்துப் போக, “இப்போ தான் புரியுது ஆன்ட்டி, மலரு ஏன் இவ்ளோ அழகா இருக்கானு… அவளுக்கு அக்கா மாதிரி இருக்கீங்க” என அவன் கூற,
அவரோ என்ன கூறுவது எனத் தெரியாமல் அவனின் புகழச்சியில் சற்று முகம் சிவந்தார்.
“உன் ஆட்டத்த என் அம்மாகிட்டயே ஆரம்பிச்சுட்டியா டா கரிச்சட்டி?” என மலர்விழி முறைத்தாள் மலர்விழி.
“உண்மைய சொன்னேன் டி. பாரு, ஆன்ட்டி பக்கத்துல நீ நிக்கும்போது கொஞ்சம் அழகு கம்மியா தான் தெரியற. நான் என்னிக்காவது பொய் சொல்லி இருக்கிறனா?” என அவன் பாவமாய் வைத்துக் கொண்டு கூற,
“ஆமா… ஆமா… நீ என்னிக்கு உண்மைய பேசி இருக்க” என முணுமுணுத்தவள், “ம்மா, இவன் ஒரு லூசு. இப்படி தான் எப்பவும் பேசுவான், நாங்க உள்ள போறோம். நீங்க அந்த மாட்ட கட்டி வச்சுட்டு வந்து இந்த மாட்ட கவனிச்சுக்க மா” என ஹரிஹரனை பார்த்து நக்கலாகக் கூறியவள்,
“உள்ள வா டா கரிச்சட்டி” என அவனை அழைத்தவாறே வீட்டினுள் நுழைந்தாள்.
வீட்டின் முன்னால் பரந்த வாசல், அதனையடுத்து பெரிய திண்ணை, அந்தப் பிரமாண்ட கதவைத் தாண்டினால் பெரிய ஹால் போன்று முன்பகுதி பரந்து விரிந்து இருந்தது.
அதன் இடப்புறம் சமையற்கட்டும், அதனையடுத்து பூஜையறையும் இருக்க, அதனை அடுத்து எல்லாம் அறைகளாக இருந்தன.
பெரிய வீடு தானென மனதில் நினைத்துக் கொண்டவன், “இப்படியொரு வீட்ட கோயம்பத்தூர்ல கட்டுனா நம்ம தான் கோடீஸ்வரன்” என்றான் ஹரிஹரன்.
“இது அந்தக் காலத்து வீடு டா. தோட்டத்து வீடு. அப்படி தான் இருக்கும், நீ இந்த ரூம்ல தங்கிக்கோ… உள்ள பாத்ரூம் இல்ல, வீட்டுக்குப் பின்பக்கம் தான் இருக்கு. அத யூஸ் பண்ணிக்கோ டா” என்றவள், அந்த அறைக்கு எதிரே இருந்த அறைக்குள் நுழைந்தாள் மலர்விழி.
அவள் கூறிய அறைக்குள் நுழைந்தவன் அறையை நோட்டம் விட்டான். அனைத்து வசதிகளும் இருந்தன. ஆனால் கழிப்பறை வசதி மட்டும் வெளியே இருக்க, “எல்லாம் மார்டனா ஆல்டர் பண்ணி இருக்காங்க… ஆனால், இந்தப் பாத்ரூம் மட்டும் இங்கயே இருந்து இருந்தா அப்டியே இது ஹெவன் தான்” என்றவாறே ஜன்னலைத் திறக்க, விசு விசுவெனச் சில்லென்ற மழைக் காற்று அவன் முகத்தை வருடியது.
கண் மூடி அதனை ரசித்துக் கொண்டிருக்க, “தம்பி…” என்ற அழைப்பு அதனைத் தடை செய்தது.
யாரெனத் திரும்பிப் பார்க்க, அங்கு நடுத்தர வயது பெண்மணி ஒருவள் நின்றிருந்தாள்.
அவர் யாரெனத் தெரியாததால் அவன் குழப்பத்துடன் பார்க்க, “கொல்லைல தண்ணி இறைச்சு வச்சுருக்கேங்க தம்பி… கை, கால் அலம்பிகோங்க” என்றவாறு அவர் நகர, அவன் அவர் கொல்லைப்புறம் என விளித்த வீட்டின் பின்கட்டிற்கு சென்றான்.
பின்பக்கம் கிணற்றடி இருக்க, அங்குப் பெரிய அண்டா ஒன்றில் நீர் எடுத்து வைக்கப்பட்டு இருந்தது.
வெந்நீர் வெளாவி வைக்கப்பட்டு இருக்க, அந்த இதமான சூழ்நிலைக்கு அந்த வெந்நீர் கதகதப்பைக் கொடுத்தது.
முகம், கை, கால் கழுவிக் கொண்டவன் மீண்டும் வீட்டினுள் நுழைய, உடை மாற்றித் தலைமுடியை அள்ளிக் கொண்டை இட்டவாறே வந்த மலர்விழி, “ஒரு டென் மினிட்ஸ்ல ரெபிரஷ் ஆகிட்டு வந்தறேன் டா” என்றவாறே பின்கட்டிற்கு சென்றாள்.
அறைக்குச் சென்றவன், இலகுவான உடைக்கு மாறிச் சற்று நேரம் அலைப்பேசியில் மூழ்கி இருக்க, அதற்குள் ரெபிரஷ் ஆனவள் முகத்தைத் துடைத்தவாறே அவனை அழைத்தாள்.
அப்பொழுது குணவதியும் அங்கு வர, “சூடா காஃபி போடட்டுமா மலரு, பால் வேற இல்ல, வரக்காஃபி தான். அந்த தம்பி குடிக்குமா?” என்றார் மலர்விழியிடம்.
“அதெல்லாம் அந்தக் கரிச்சட்டி குடிப்பான் ம்மா, நீங்க வரக்காஃபியே வைங்க” என்றவள், அறையிலிருந்து வெளியே வந்தவனைப் பார்த்து, “வரக்காஃபி ஓ. கே தான டா?” என்றாள்.
“அப்டினா?” என அவன் முழித்தான். “பிளாக் காஃபி டா” என அவள் விளக்க, “ஓ. கே டி” என்றான் ஹரிஹரன்.
“அம்மா கூட அப்படியே வாழைக்காய் பஜ்ஜி” என அவள் அங்கிருந்து சமையற்கட்டிற்குள் இருக்கும் அன்னைக்கு கேட்குமாறு கத்த, “இந்த பஜ்ஜிய இங்கையும் விட மாட்டியா டி” எனச் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் வினவினான்.
“நீ ஏன் டா இவ்ளோ ஃபீல் பண்ற?” என்றாள் மலர்விழி.
“அப்புறம், நீ கேட்ட வாழைக்காய் பஜ்ஜிக்காக என்னை இருபது கிலோமீட்டர் அலைய விட்டவ தான டி நீ” என அவளின் கல்லூரி பக்கத்தை நினைவுப்படுத்த,
“அவன் அவன் தோழிக்காக நிலவையே கொண்டு வந்து கொடுப்பேனு சொல்றான்… நீ என்னடான்னா ஒரு பஜ்ஜி வாங்க ஜஸ்ட் இருபது கிலோமீட்டர் போனதுக்கு இப்படி சலிச்சுக்கிற” என முறைத்தாள் மலர்விழி.
மலர்விழிக்கு பஜ்ஜி என்றால் மிகவும் பிடித்தம். ஒரு முறை அவர்கள் படித்த கல்லூரியிலிருந்து இருபது கி.மீ தொலைவில் இருந்த கடையில் பஜ்ஜி சுவையாக இருக்கும் என யாரோ ஒரு புண்ணியவான் தெரிவித்து இருக்க, ஐந்து ரூபாய் பஜ்ஜிக்காக இருபது கிலோமீட்டர் அலைய விட்டாள் ஹரிஹரனை.
கடைசியில் பஜ்ஜி வந்து சேர்வதற்குள் ஆறிப் போய் இருக்க, “ஆறிப் போய்ருச்சே டா…” என்றவளை ஏகத்துக்கும் முறைத்து வைத்தான் ஹரிஹரன்.
பழைய நினைவுகளில் அவளை ஹரிஹரன் முறைக்க, “விடு டா கரிச்சட்டி…” என அவன் தோளில் கைப் போட,
அப்பொழுது “சாமி…” என்ற அழைப்பில் இதுவரை பூவாய் மலர்ந்திருந்தவளின் முகம் அந்தக் குரலைக் கேட்டு இறுகியது.
சிறந்த எழுத்து நடை படிப்போரை நிகழ்வுகள் அமையும் இடத்திற்கே கொண்டு சென்று பார்வையாளராய் கதாபாத்திரங்களுடன் பயணிக்க வைக்கிறது.
வாழ்த்துக்கள் தங்கை.
மிக்க நன்றிகள் சகோ
ஆரம்பமே சூப்பர்.மலர் ஹரி நல்ல நட்பு.புல்லட்டில் மலரை தொடர்ந்து வந்ததது யாரு?.
Super starting sis …..
Super sis