160 views

இனி நேத்ராவால் பழையபடி இருக்க முடியாது என்று டாக்டர் கூறும்போதே
நிமல் அவ்விடம் விட்டு வெளியேறினான். ஏனோ அவன் வெளியேறியதும்
ஒரு வகையில் நன்மை தான் என எண்ணிய மருத்துவர், மேலும் அவளை
பற்றிய விவரங்களை கூறினார். ஏனெனில் அவன் அழுத அழுகையை
அவரும் பார்த்துக் கொண்டு தானே இருந்தார்.
கார் மோதின வேகத்தில் அவங்க தூக்கி எறியப் பட்டதில தலையில் பலத்த
அடி பட்டுருக்கு. அதனால இனி அவங்க பேசுறது கஷ்டம் தான். கால்ல
எலும்பு பிராக்ஜர் ஆகிருக்கு. கொஞ்சம் கொஞ்சமா அவங்கள ரெகவர் பண்ண
டிரை பண்ணலாம். ஆனா முழுசா சரியாகறது உங்களோட கைல தான்
இருக்கு. ஒன் மன்த் கண்டிப்பா அப்சர்வேஷன்ல வைக்கணும். சோ இதுல
உங்களுக்கு ஏதாவது பிராப்ளம் இருந்தா சொல்லிடுங்க என்றதோடு முடித்தார்
டாக்டர்.
டாக்டர் கூறிய அனைத்தையும் கேட்டவனின் கண் முன் ஓடி விளையாடும்
நேத்ராவின் முகம் தான் தெரிந்தது. எங்களுக்கு ஒரு பிராபிளமும் இல்ல
டாக்டர். நீங்க என்ன டிரீட் மெண்ட் வேணும்னாலும் செய்ங்க. எங்களுக்கு
எங்க நேத்ரா மறுபடியும் கிடைக்கணும் என்று சரண் சொல்லிவிட்டு
வெளியே சென்று நிமலை பார்க்க,
அவன் நேத்ரா இருக்கும் அறையின் உள்ளே அவளின் கைகளை பற்றிய படி
அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தான். உள்ளே சென்ற சரண் நிமல் பேசிய
வார்த்தைகளில் அப்படியே உறைந்து நின்று விட்டான்.

வேகமாக நிமலின் அருகில் சென்ற சரண், நிமலை எழுப்பி அவனின்
கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட, அப்போது தான் சுற்றம் அறிந்தது
போல….டேய் சரண் ஏன்டா இப்போ என்ன அடிச்ச… என்று கேட்கும் தன்
நண்பனை என்ன சொல்லி தேற்றுவது என்றே சரணிற்க்கு தெரியவில்லை.
காதல் ஒருவனை இப்படியெல்லாமா மாற்றும்???…….
ஆம் தானே….
காதல் மட்டும் வந்து விட்டால் ஒருவனை எப்படி வேண்டுமானாலும்
மாற்றும்.
சரண் உள்ளே நுழையும் போது, நிமல் நேத்ராவின் கைகளை பிடித்துக்
கொண்டு ஏன் அம்மு இவ்வளவு நாள் என்ன தனியா விட்டுட்டு போன.
ரெண்டு வருஷம் கழிச்சு உன்ன நான் இந்த நிலையில பார்க்கத் தான்
காத்திருந்தேனா. அதும் உன்னோட இந்த நிலைமைக்கு நானே 
காரணமாகிட்டேனே. நான் உயிரோட இருந்து என்ன புரோயாஜனம். நான்
இப்போவே சாக போறேன். உன்ன என்னால இந்த நிலையில பார்க்க
முடியல அம்மு. என்று சொல்லும் போது தான் சரண் அவனை அடித்தான்.
இரண்டு வருடமாய் அவள் விழி ஒன்றை மட்டுமே அடையாளமாய் வைத்து
அவளைத் தேடி அலைந்து திரிந்தவன், இன்று இப்படி ஒரு நிலையில்
காணும் போது எப்படி இருக்கும் என்பதை சொல்லிதான் ஆக வேண்டும்
என்பதில்லை. ஒவ்வொரு நொடியும் அவளின் நினைவில் வாழ்ந்தவன் இன்று
அவளின் நிலைக்கு தானே காரணம் என்று எண்ணும் போது மனமே
ரணமாகியது.
அவள் சாலையை கவனிக்காமல் வந்தது ஒரு புறம் இருந்தாலும் காரில்
வந்து கொண்டிருந்தவன் ஃபோனில் பேசிக்கொண்டே வந்ததில் சாலையை
கவனிக்காமல் விட்டு விட்டான். அதில் தான் எதிரே வந்தவளை பார்க்காமல்
இருந்துவிட அதுவே அவளின் இப்போதைய நிலைக்கும் காரணமாகியது.

தன்னிலையில் இல்லா நண்பனை எப்படி சமாதானம் செய்ய என்றே சரண்
நொந்து போனான். நிமலனை வெளியே அழைத்துச் சென்ற சரண், இங்க பார்
நிமல்….. நேராவுக்கு ஒன்னும் இல்லை. அவளை நாம பழையபடி
மாத்திடலாம் டா.
நீ………உன்னோட காதல் அவளை மாற்றும் டா… நம்பிக்கையா இரு. எதற்கும்
சோர்ந்து போறவன் இல்லைடா என்னோட நிமலன். கொஞ்சமாவது நடந்தத
புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. நீ செத்து போய்ட்டா நேரா மறுபடியும் நல்லா
ஆகிடுவாளா…… கொஞ்சம் யோசிச்சு பாரு. இனி நீ தான் அவளுக்கு
எல்லாமே. கூறியவன் அமைதியாய் நிமலை பார்க்க அவன் சிறிது
தெளிவடைந்தான்.
இப்போ வா வந்து ரிலாக்ஸ் ஆகு என்று சரண் நிமலை அழைத்துச்
சென்றான்.
இது தான் நட்பு. துவலும் நேரங்களில் ஆறுதல் அளித்து நிதர்சனத்தை புரிய
வைக்கும் நட்பு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
தெளிவடைந்த நிமல் நேத்ராவை விட்டு விலகவே இல்லை. இரண்டு நாட்கள்
அவள் அருகிலே இருந்தான்.
இரண்டு நாள் கழித்து கண் விழித்த நேத்ரா அறையை சுற்றிப் பார்க்க
அவளின் அருகில் தலை சாய்த்து உறங்கிக் கொண்டிருந்தான் நிமல்.
ஆறடி உயரத்தில் எதிரிகளை தன் பார்வை ஒன்றின் மூலமே பொசுக்கிவிடும்
கம்பீரமும் திமிருமும் அவனுக்கே உரியது. பெண்கள் என்றால் இரண்டடி
தள்ளி நின்று பேசும் இவனின் கண்ணியம் தான் பெண்ணவளை அவனிடம்
விழ வைத்தது. அப்படி இருந்தவன் இன்று தனக்காக இப்படி மாறிவிட்டானே
என்று அவனை பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் கண்ணீர் வழிய
ஏதோ உந்துதலில் கண்ணை திறந்த
நிமல் அவளை பார்க்க… மீண்டும் அவ்விரு விழிகளிலும் தன்னை
தொலைத்திருந்தான் நிமல்.

அவளின் கண்ணீரை துடைத்து இனி எப்போதும் நீ அழக் கூடாது. உனக்காக
நான் இருக்கேன் என்று சொன்ன அவனின் கண்களிலும் நீர் வடிந்தது.
அன்பில் பிரிவை அடைந்து அதே அன்பு மீண்டும் நம் கையில் சேரும்
நிமிடம் மனம் நிம்மதி அடைந்தாலும் விழியிரண்டும் சிந்தும் கண்ணீர் கூறி
விடும் நாம் கொண்ட வலிகளை.
அன்றும் அவள் விழிகளுடன் மட்டுமே  பேசிக் கொண்டிருந்தவன் இனியும்
அப்படித் தான் இருக்க போகிறான் என்பதை சரண் இன்னும் அவனிடம் கூற
வில்லை.
வாய் மொழி கொண்டு தான் உணர்வுகளை கூறவேண்டும் என்பதில்லை.
உண்மையான அன்பு விழியிரண்டிலுமே உணர்வுகளை பரிமாறிக் கொள்ளும்.
இங்கும் அதே தான் நடந்து கொண்டிருந்தது.
பரிசோதனைகள் அனைத்தும் அவளுக்கு செய்யப்பட சரண் வந்து சேர்ந்தான்.
தலை கை கால் என உடல் முழுதும் காயங்கள். அவளின் வேதனைகள்
வலியின் காரணமாக முகத்திலே தெரிந்தது. சரணை பார்த்த நேத்ரா
ஆவலுடன் பேச முயற்சி செய்ய, பாவம் அவளால் முடியவில்லை. மீண்டும்

முயற்சிக்கவும் தலை வலிக்க கண்களில் நீர் வழிந்தது. ஓடிச் சென்று
அவளை நிதானம் செய்த சரண் வேண்டாம் நேரா….ரொம்ப ஸ்ட்ரைன்
பண்ணாத….. உனக்கு…உனக்கு…உன்னால இப்போ பேச முடியாதுனு டாக்டர்
சொல்லிட்டாங்க. வேதனையுடன் தான் அவனும் கூறினான்.
இப்போது அங்கிருந்த இருவருக்கும் அதிர்ச்சி தான். நிமல் அவளை பார்க்க
கண்ணீருடன் அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இரண்டு வருட தவிப்பையும் பேசி சரி செய்து விடலாம் என்று இருவரும்
நினைத்திருக்க அதுவும் இப்போது முடியாமல் போனது. வேறு ஒன்றும்
முடியா நிலையில் அவர்களின் நிலையை எண்ணி இருவரும் கண்ணீர்
விடத் தான் முடிந்தது.
இந்நிலை மாறுமா…..

விரைவிலேயே அவளின் நிலை மாறி அவனின் அவளாக…..நிமலின்
அம்முவாக மாறும் நிலையும் வரும். இவ்வுலகில் மாறாதது எதுவும்
இல்லை, என்றே நிமல் ஆறுதல் அடைந்தான்.
நாட்கள் கடந்தன….முழு நேர அம்முவின் நிமலாக மாறிப் போனான் நிமலன்.
இவர்களின் விழி வழிக் காதல் நாள்தோறும் வளர்ந்து கொண்டே சென்றது.
இன்று நேத்ராவை வீட்டிற்க்கு அழைத்துச் செல்லலாம் என்று டாக்டர்
கூறிவிட்டார். உடலில் சிறிது முன்னேற்றங்கள் தெரிந்தாலும் அவளின் குரல்
கேட்கவே நிமலன் காத்திருந்தான்.
நேத்ரா இருந்தது ஒரு ஆசிரமத்தில் தான். தாய் தந்தையை இழந்த இவள்
காதலனையும் பிரிந்து வாட அவளுக்கு ஆறுதல் அளித்தது ஆசிரமம் தான்.
சிறு குழந்தைகளுடன் குழந்தையாய் மாறி அவளது துன்பங்களை
மறந்திடுவாள் என்பதை விட மறைத்திடுவாள் என்பதே சரி. அவள் அங்கு
தான் செல்ல வேண்டும் என்றே இருந்தாலும் இப்போது தான் நிமல் வந்து
விட்டானே…. பிறகென்ன..இனியும் அவளை பிரியும் சக்தி அவனுக்கு இல்லை.
இந்த இரண்டு வருடங்களில் அவன் பட்டதே போதும் என்று தான் சொல்ல
வேண்டும். அதனால் தான் அவளை தன்னுடனே வைத்துக் கொள்ளவும்
முடிவு செய்து விட்டான். கூடவே ஒரு முடிவையும் செய்து விட்டான்.
அனைத்து வேலைகளும் முடிந்து அவளை சரணும் நிமலும் வெளியே
அழைத்து வந்தனர். முழுதாக ஒரு மாதம் கழித்து இப்போது தான் வெளி
உலகை காண்கிறாள்.அறையிலேயே இருந்தவளுக்கு காலைக் கதிரவனின்
ஒளியில் கண்கள் கூசியது. அதைக் கண்ட சரண்.. இதே பழைய நேராவாக
இருந்திருந்தால் இப்படி ஓரிடத்தில் அமர்ந்திருப்பாளா….. என்ற
உள்ளுக்குள்ளே நொந்து கொண்டான்.
நேத்ரா நிமலிற்கு அறிமுகமானது சரணின் மூலம் தான். சரண் நேத்ராவின்
நண்பன். வயதில் பெரியவன் என்றாலும் அவளுடன் சரிக்கு சமமாக
சண்டையிடுவான். இதில் அவளைப் பற்றி சொல்லவே வேண்டாம். எதிர்பாரா
விதமாக அமைந்தது தான் இவர்களின் நட்பு. எப்படி இருவரும் நண்பர்கள் ஆகினர் என்று இருவரிடமும் கேட்டால் தெரியாது என்ற பதில் தான் வரும்.
நேத்ராவை வெறுப்பேற்றவே அவளை நேரா என்று அழைப்பான். அவள் தன்
வாய் ஜாலத்தை எல்லாம் சரணிடம் தான் காட்டுவாள். பழைய
நினைவுகளில் உழன்றவன் முன் தன் விரலை சொட்டக்கிட்டு அழைத்தாள்
ஒரு பெண்.
அவளை அவ்விடம் எதிர் பாராமல் நண்பர்கள் இருவர் மட்டும் அல்லாது
நேத்ராவின் முகத்திலும் அதிர்ச்சி தான்.
அவள் வேறு யாரும் இல்லை சரணின் சித்தப்பா மகள். தங்கை என்று
சொந்தம் கொண்டாட வேண்டிய அண்ணன் முகம் கோபத்தில் இறுகி
சிவந்திருந்தது. எப்படி கோபம் இல்லாமல் இருக்கும் இரண்டு வருடமாய் தன்
நண்பணும், உயிர் தோழியும் அடைந்த வேதனைக்கெல்லம் காரண
கர்த்தாவே இவள் தானே. ஆனால் இவை ஏதும் நிமலிற்க்கு
தெரியாது.அவனுக்கு இவள் எப்பிடி இங்கு வந்தாள் என்ற அதிர்ச்சி தான்.
ஆனால் விஷயம் மட்டும் தெரிந்திருந்தால் அவள் அவன் முன்
நின்றிருப்பாளா என்ன. அவன் பார்வையிலேயே பஸ்பமாக்கி இருப்பான்.
அதற்காக தான், நிமலின் கோபம் தெரிந்து சரண் அவளை விட்டு
வைத்திருக்கிறான்.
நேத்ராவிற்கோ பயம் கலந்த அதிர்ச்சியாக தான் இருந்தது. அந்த
பயத்திற்கான காரணம் அவளவனிற்க்கு தெரியும் போது அந்த பெண்
இவ்வுலகை விட்டு சென்றாலும் ஆச்சர்யம் இல்லை. ஏனெனில் நிமல்
நேத்ராவின் காதலுக்கு இவள் செய்த காரணம் அப்படி. என்ன காரணம் என்று

அவள் கூற முடியாமல் தவிக்கும் நிலையை பிறகு காணலாம். இப்போது
நிமல் மற்றும் சரணுடன் சாதாரணமாக பேசி அவர்களுடன் சேர்ந்தே நிமலின்
வீட்டிற்குச் சென்றாள் சித்து. சித்து என்று அழைக்கப்படும் சித்தாரா.

நிமலின் வீட்டின் முன் கார் நின்றது. தன்னவளை தன் வீட்டிற்க்கு அழைத்து
வந்ததில் அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. ஆனால் நேத்ராவிற்கோ
பயமாகவும் சங்கடமாகவும் இருந்தது.
நீ பயம் கொள்ள தேவையே இல்லை என்ற வகையில் இருந்தது அங்கு
நிகழ்ந்த செயல்.
அச்செயலில் எல்லோரும் ஆனந்தம் அடைந்தாலும் சித்தாரா மட்டும்
கொதித்துக் கொண்டிருந்தாள்.
அப்படி என்ன நடந்தது என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்……….

 

தொடரும்…… PRABHAAS

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *