Loading

** 29 **

 

ஆரூரனுடன் சண்டை போட்டுவிட்டு நேராக இருவரும் ஆதிரனின் இல்லத்திற்குச் சென்றனர். 

 

கோபமாக சென்ற கணவனை எதிர்பார்த்து வாசலிலேயே காத்திருந்த ஶ்ரீக்கு லக்ஷனாவுடன் வந்த ஆதிரனைக் கண்டதும் புரியாமல் விழித்தாள்.

 

“வா லக்ஷி” என்று அழைத்தவளிடம்.

 

ஆதிரன், “குடிக்க ஏதாவது கொண்டுவா” என்றவன் ஹாலில் இருந்து சோபாவில் ஆசுவாசமாக அமர்ந்தான்.

 

லக்ஷனா, “மாமா… வேணிக்கு ட்ரை பண்ணிப் பார்த்திங்களா?” எனக் கேட்கவும்.

 

குடிக்க தண்ணீர் கொண்டு வந்த ஶ்ரீ, “எப்ப வந்த லக்ஷி? ஏன் எனக்கு தகவல் சொல்லலை?” என தயக்கமாகக் கேட்டாள். 

 

“ஏனா நான் உங்க மேல் கோபமா இருந்தேன் க்கா… அதனால் தான் தகவல் சொல்லலை” என்ற லக்ஷனா,

 

“ஆரூ கூட சேர்ந்துகிட்டு நீங்க இப்படி செய்வீங்கனு நான் நினைக்கலைங்க க்கா… நீங்க அடிக்கடி கோபப்படும் போதெல்லாம் அது உங்க இயல்புனு நினைத்தோமே தவிர வன்மம் வைத்து பழிவாங்க வருவீங்கனு நாங்க யாரும் யோசனை கூட செய்து பார்த்ததில்லை” என முகத்திற்கு நேராக சொன்னாள். 

 

அதில் தவறை உணர்ந்து ஶ்ரீ, “ப்ளீஸ் லக்ஷி… நீயும் அதை பற்றி பேசி நோகடிக்காத” என்றவள்,

 

“இப்பக்கூட எனக்கு என்னுடைய பாட்டி வார்த்தை மேல் நம்பிக்கை இருக்கு, தேவையில்லாமல் யாரையும் தப்பா சொல்லமாட்டாங்க” என பாசத்தில் உண்மையை உணர முடியாமல் பேசினாள். 

 

ஶ்ரீயின் பேச்சைக் கேட்ட லக்ஷனா, “முதன் முதலா உங்களைப் பற்றி கேட்கும் போது ஆச்சரியமா இருந்ததுங்க க்கா… ஆனால் இப்ப நீங்க பண்ற ஒவ்வொரு செயலையும் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கு” என்றவள்,

 

“சத்தியமா உங்களை நினைத்தால் பரிதாபமாகத் தான் இருக்கு” என்று கூறியவள் தனக்காகக் கொடுத்த அறைக்கு சென்றுவிட்டாள். 

 

லக்ஷனா சென்றதும் மனைவியைக் கண்ட ஆதிரனின் மனதில் முதல் முதலாக பயமும் கவலையும் பிறந்தது.

 

தான் நம்பிய பாட்டி தனக்கு எத்தனை பெரிய துரோகத்தை செய்திருக்கிறார்கள் என தெரிந்தால் என்ன ஆவாள் என்ற பயமும் கவலையும் ஆதிரனின் மனதைக் கவ்வியது.

 

இதை எதையும் அறியாத ஶ்ரீ தன்னுள்ளேயே உழன்று கொண்டிருந்தாள்.

 

இல்லாளின் நடவடிக்கையை சிறிது நேரம் ஆராய்ந்த ஆதிரன், “ஶ்ரீ” என அழைக்கவும் திடுக்கிட்டு திரும்பினாள்.

 

அதிலேயே மனைவியின் மனப்போராட்டத்தை கண்டுகொண்டவன், “லக்ஷனா வந்ததிலிருந்து எதுவும் சாப்பிடலை, ஏதாவது செய்து கொடு” என்றான்.

 

அதில் சுயத்திற்கு வந்தவள், “இதை வந்ததும் சொல்ல வேண்டியது தானே ஆதி?” என்று கணவனை கடிந்துகொண்டவள் ஶ்ரீ மளமளவென்று உணவை தயார் செய்தாள்.

 

‘ஏன் ஶ்ரீ இப்படி இருக்க? இப்பையாவது உண்மையை புரிஞ்சுக்கோ… இன்னும் லேட் பண்ணா உன்னால் தாங்க முடியாது’ என மனதில் புலம்பியவன் சும்மா இருக்கப் பிடிக்காமல் மனைவிக்கு உதவி செய்தான்.

 

அரை மணி நேரத்தில் வேலையை முடித்தவர்கள் லக்ஷனாவுடன் சேர்ந்து மதிய உணவை முடித்தனர்.

 

சாப்பிட்டதும் குழந்தையைத் தூங்க வைக்க ஶ்ரீ சென்றுவிட லக்ஷனா ஆதிரனிடம், “அக்காவை பத்திரமாப் பார்த்துக்கோங்க மாமா… அவங்க பாட்டியை பற்றி தெரியும் போது தாங்க மாட்டாங்க அந்த அளவுக்கு பாசமா இருக்காங்க” என்றவள்,

 

“கவனமா இருங்க… கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு புரியவைங்க… பிளீஸ், ரொம்ப கடுமையா நடந்துக்காதிங்க மாமா” என்று வேண்டிக்கேட்டுக்கொண்டாள். 

 

“நீயும் ஆதிரனிடம் கொஞ்ச பொறுமையா பேசியிருக்கலாம் தான லக்ஷி” என தயக்கமாக ஆதிரன் கேட்கவும்.

 

லக்ஷனா சிரிப்புடன், “அப்படி சொன்னா அவன் புரிஞ்சுப்பானு உங்களுக்கு நம்பிக்கை இருக்கா மாமா?” என கேட்டவள்,

 

“ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம் மாமா… ஆரூரனைப் பொறுத்தவரை மென்மையா சொன்னா வேலைக்காகாது. ஆணி அடித்த மாதிரி பட்டு பட்டுனு சொன்னாத் தான் சரியாவரும்… ஆனால் ஶ்ரீ அக்கா அப்படி இல்லை… நீங்க எந்த அளவுக்கு கடுமையா பேசறிங்களோ அந்த அளவுக்கு புரிஞ்சுக்க முயற்சி கூட பண்ண மாட்டாங்க” என இருவரையும் சரியாக கணித்து கூறினாள்.

 

“நீ சொல்ல வருவது புரியுது லக்ஷி… ஆனால் பதட்டத்தில் என்ன பேசறேன் தெரியாம அவளை காயப்படுத்தறேன்… இந்த ரெண்டு மூனு நாளா அதிகமா அவளைப் படுத்திட்டேன்” என வேதனையாகக் கூறியவன்,

 

“ஶ்ரீ புரிஞ்சிக்காமல் தப்பு செய்வா தான், ஆனால் அவளுக்கு புரியவச்சா ஏத்துக்க முயற்சி பண்ணுவா… இத்தனை நாளா அப்படித் தான் இருந்தா, இப்ப நான் தான் அவளுக்கு சரியா புரியவைக்காமல் தப்பு பண்றேன்னு தோணுது” என்று கூறவும்.

 

“அதுதான் உண்மை மாமா… நீங்க மட்டும் ஆரம்பத்திலேயே பிரச்சனையை கண்டு சில விஷயங்களை புரியவைத்திருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்காது” என்றவள், 

 

“இனியாவது அதை செய்ங்க மாமா… பாவம் அக்கா” என கவலையாக கூறினாள்.

 

“கண்டிப்பா பண்றேன் லக்ஷி” என அழுத்தமாக ஆதிரன் கூறவும்.

 

லக்ஷனா, “மாமா நான் நாளைக்கே லால்குடி போறேன்” என்று அதிர்ச்சியை கொடுக்க.

 

“யாரும் இல்லாமல் நீ அங்க போய் என்ன பண்ணுவ? எங்க தங்குவ?” என படபடப்பாகக் கேட்டான்.

 

“இங்கையே இருந்து தடுமாறுவதை விட இலால்குடி போய் பார்த்து ஏதாவது பண்ணலாம் மாமா… ஆனால் அதுக்கு அங்க போனால் தான் சரியா வரும்… நான் கிளம்பறேனே” என ஒரு மாதிரியான குரலில் கேட்கவும்.

 

“சரி போ லக்ஷி… ஆனால் யசோகன் சித்தப்பா குடும்பம் வீட்டுக்கு வந்ததும் நானே கொண்டு வந்து உன்னை விடறேன்… அவங்க இருந்தா நீ பாதுகாப்பா இருப்பங்கிற நம்பிக்கையில் நான் அப்பா, அம்மாவைத் தேடுவேன்… அதுவரை கொஞ்சம் பொறுத்துக்கோ” என ஆதிரன் கெஞ்சலாகக் கேட்டான். 

 

“அவங்க ஊருக்கு வந்துட்டா நாம அத்தையையும் பெரியமாமாவையும் கஸ்தூரியையும் தேட வேண்டிய அவசியம் இல்லை மாமா” என்றவள்,

 

“எனக்கு தெரிந்த வரை நம்ம வீட்டு ஆளுங்க எங்க இருக்காங்க, எப்படி இருக்காங்கங்கிறது யசோகன் மாமாவுக்கு நல்லாவே தெரியும்… அவர் இலால்குடி எவ்வளவு சீக்கிரம் வராங்களோ அந்த அளவுக்கு அத்தையும் பெரியமாமாவும் நல்லா இருக்காங்கனு அர்த்தம்… அப்படி இவருக்கு தெரியலைனாக்கூட கஸ்தூரிக்கு தெரியாமல் இருக்காது… அவள் அவங்களை உள்ளங்கையில் வைத்து பொக்கிஷமா பார்த்துப்பா” என உறுதியான குரலில் கூறினாள்.

 

“ஆமாம் லக்ஷி… யசோகன் சித்தப்பாவுக்கு தெரியலைனா கூட கஸ்தூரி அப்பா, அம்மாவை விடமாட்டா” என்று கண்கள் கலங்கக் கூறியவன்,

 

“கஸ்தூரி நம்ம குலதெய்வம் லக்ஷி… அவள் மட்டும் இல்லைனா இத்தனை நாளா அப்பாவும் அம்மாவும் எப்படி இருந்திருப்பாங்கனே தெரியலை… எனக்கு இப்பவும் நல்லா நியாபகம் இருக்கு… 

 

முதன் முதலா நம்ம வீட்டுக்கு அவள் வரும்போது எவ்வளவு சந்தோஷமா இருந்தோம் தெரியுமா? எனக்கும் ஆரூக்கும் யார் பாப்பாவை தூக்கி வைச்சுப்பதுனு சண்டையே வரும்… நாங்க அடிச்சுக்குவதை பார்த்து பொக்க வாய்போட்டுக்கிட்டு சிரிப்பா பார்… அவ்வளவு அழகா இருக்கும்… அதிலேயே நானும் அவனும் பிளாட்டாகிடுவோம்… 

 

நான் தூக்கினால் ஆரூக்கிட்ட போக சிணுங்குவா, அவன் வாங்கினா என்னிடம் வர உதட்டைப் பிதுக்கி அழுவா… சரியானச் சேட்டைக்காரி… உண்மையை சொல்லணும்னா ஆரூக்கு என்னைவிட கஸ்தூரியைத் தான் ரொம்ப பிடிக்கும் லக்ஷி… என்னையும் அவனையும் தவிர இவள் யாரை அண்ணான்னு கூப்பிட்டாலும் அவனுக்கு பிடிக்காது, கோபப்படுவான், அவ்வளவு பிரியம்… 

 

நாளாக நாளாக படிப்பு, ஹாஸ்டல், வேலை, பணம்னு ஒடினதில் பாசம் மறந்து பாறையா இறுகிப் போயிட்டோம்… அவ்வளவு ஏன் இப்பக்கூட பாப்பாவுக்கு ஒன்னுன்னா அவன் துடிச்சு போய்டுவான், என்ன அதை  காட்டத்தான் தெரியாது” என்று தம்பியின் மனதை புட்டு புட்டு வைத்தான். 

 

“தெரியும் மாமா… அவன் குழந்தை பற்றி பேச்சு எடுக்கும் போதெல்லாம் கஸ்தூரி மாதிரி அப்படி இருக்கணும், இப்படி செய்யணும் சொல்லாமல் இருக்கமாட்டான்” என்று சொன்னவள், 

 

“இவ்வளவு பாசம் இருந்து என்ன பயன் மாமா? வெளியே காட்டாத அன்பு உதவாது, அதற்கு மதிப்பும் இல்லை… அதை மட்டும் ஆரூரன் புரிஞ்சுக்கிட்டா போதும்” என ஒரு மாதிரியான குரலில் கூறினாள். 

 

“அது என்னமோ சரிதான் லக்ஷி” என்று கூறியவன், 

 

“எனக்கே இப்பத்தான் புரியுது அவனும் கூடிய சீக்கிரம் புரிஞ்சுக்குவான் ம்மா” என்றவன் ரெஸ்ட் எடுக்க தம்பி மனைவியை அனுப்பிவைத்தான்.

 

லக்ஷினா சென்றதும் ஆதிரன் தந்தைக்கும் தங்கைக்கும் கால் செய்து பார்த்தான்… யாரும் எடுக்காமல் போக அயர்ந்து போய் அமர்ந்துவிட்டான்.

 

தனது அறைக்குச் சென்ற லக்ஷனா நாளை லால்குடிக்கு போவதை பற்றி திரிவேணிக்கும் கஸ்தூரிக்கும் மெயில் செய்துவிட்டு படுத்துக்கொண்டாள்.

 

அடுத்த நாள் மாலை ஆதிரன் முன் வந்து நின்ற லக்ஷனா, “மாமா நான் இலால்குடிக்கு கிளம்பறேன்” என்று சொல்லவும்.

 

ஆதிரன், “எங்க போய் தங்குவ லக்ஷி?” என கவலையாகக் கேட்டான். 

 

“நீங்க கவலை படாதிங்க மாமா… நான் நேத்தே வேணிக்கும் கஸ்தூரிக்கும் மெயில் பண்ணிட்டேன்… யாராவது ஒருவர் அங்க எனக்காக இருப்பாங்க, அப்படி இல்லைனா திரும்பி வந்திடறேன்” என்று அசால்ட்டாகக் கூறினாள். 

 

“என்னமோ போங்க… உன்னுடைய விருப்பப்படி செய்” என்ற ஆதிரன்,

 

“யாரும் இல்லைனா நீ அதே காரில் வந்திடு” எனக்கூறினான்.

 

“சரிங்க மாமா” என்றவள் அடுத்த பத்தாவது நிமிடமே இலால்குடியை நோக்கி பயணித்தாள். 

 

இரவு போல் இலால்குடியில் இருக்கும் வீட்டிற்கு வந்து சேர்ந்தவளை யசோகன் குடும்பத்தினர் தான் வரவேற்றனர்.

 

காரிலிருந்து இறங்கிய லக்ஷனாவைக் கண்டதும் திரிவேணி, “ஐயாவும் பரமு அம்மாவும் ஊரில் இல்லைங்க அண்ணி… வர எத்தனை நாளாகும்னு தெரியலை… வீட்டுச் சாவியும் எங்களிடம் இல்லை… அவங்க வரும் வரை நீங்க ஆதி அண்ணா வீட்டில் இருங்க” என மனப்பாடம் செய்து வைத்தது போல் ஒப்புவித்தாள்.

 

அதில் லக்ஷனாவுக்கு சிரிப்பு வரவும் முயன்று அடங்கியவள் வேணியை நோக்கி கை நீட்டினாள்.

 

யசோகன், “என்னம்மா?” என்று புரியாமல் கேட்கவும். 

 

லக்ஷனா, “வீட்டுச் சாவி தாங்க மாமா… தொடர்ந்து நாலு நாளா ட்ராவல் பண்ணினதில் உடம்பு ரொம்ப அசதியா இருக்கு, கொஞ்ச நேரம் படுத்து எழுந்தால் நல்லா இருக்கும்” என்றவள்,

 

பானுவை ஓரக்கண்களால் பார்த்தபடி, “மதியானம் சாப்பிட்டது பசி வேற தாங்க முடியலை, இப்போதைக்கு சமைக்கவும் வாய்ப்பு இல்லை, நீங்க கொடுங்க நான் போய் தண்ணீர் குடிச்சுட்டு தூங்கறேன்” என்று கூறவும்.

 

பானு, “போதும் அப்பாவும் மகளும் பேசினது… பிள்ளை வேற பசியில் நிற்கிறா சாவி கொடுங்க, நான் போய் சாதம் வைக்கிறேன்” என்று கூறியபடி மகளின் கைப்பையை பிடுங்கியவர் அதிலிருந்த சாவியைக் கொண்டு வீட்டை திறந்ததோடில்லாமல் லக்ஷனாவிற்காக சமையல் வேலையை ஆரம்பித்துவிட, யசோகனும் மனைவிக்கு உதவி செய்ய சென்றுவிட்டார். 

 

அதைக் கண்டு திரிவேணி தலையில் அடித்துக்கொள்ளவும் லக்ஷனா, “அவங்க ரொம்ப நல்லவங்கடி… நம்மை மாதிரி மனசுல வச்சுக்கிட்டு பழிவாங்குபவர்கள் இல்லை, சுயநலவாதிகளும் கிடையாது” என்றதும்.

 

திரிவேணி தயக்கமாக, “நீங்க எப்படி இங்க?” என கேட்கவும்.

 

“எல்லாம் ஆதி மாமா சொல்லித் தான் வந்தேன்… நீ நான் வந்ததைப் பற்றி அத்தை மாமாக்கிட்ட சொல்லிடு” என்று கூறி உள்ளே செல்லப் போனவள் நின்று, “அப்படி இனி நான் எங்கேயும் போகமாட்டேன் இங்க தான் இருக்கப்போறேன்னு சொல்லிடு” என கூறிவிட்டு திரும்பியும் பாராமல் உள்ளே சென்றுவிட்டாள்.

 

லக்ஷனா சென்றதும் கஸ்தூரிக்கு விஷயத்தை மெசேஜ் செய்தவள் அன்னைக்கு உதவியாக உள்ளே சென்றுவிட்டாள். 

 

திரிவேணி அனுப்பிய மெசேஜை கஸ்தூரி அப்படியே ஆடலரசனின் சொல்லிவிட்டாள். 

 

அதைக் கேட்ட ஆடலரசன், “நல்ல பொண்ணு இவனுக்கு வாக்கப்பட்டு அல்லாடுது” என புலம்பியவர்,

 

கஸ்தூரியிடம், “தினமும் போய் வேணியை பார்த்துக்கச் சொல்லு பாப்பா… தனியா இருப்பதுனா லக்ஷனாவுக்கு பிடிக்காது” என மருமகளின் மேல் இருந்த அக்கறையில் கூறினார். 

 

“சரிங்க ப்பா” என்ற கஸ்தூரி தோழிக்கு கால் செய்து ஆடலரசன் கூறியதை கூறினாள்.

 

குளித்து முடித்து சாப்பிட்டதும் லக்ஷனா இங்கே நடந்ததைக் கூறி ஆதிரனுக்கு ஆறுதல் கூறியவள் கணவனின் நம்பரை பிளாக் லிஸ்ட்டில் போட்டுவிட்டாள்.

 

“உனக்கான ட்ரீட்மெண்ட் இப்ப இருந்து ஆரம்பிக்குது ஆரூ… கொஞ்ச நாளைக்கு கஷ்டப்படுடா அப்பதான் உனக்கு உறவுகளோட அருமை தெரியும்” எனக்கூறியவள் இனி தான் செய்யப்போகும் வேலையை மனதில் குறித்துக்கொண்டவள் நிம்மதியாக தூக்கத்தில் ஆழ்ந்தாள். 

 

லக்ஷனா தூங்கச் சென்றதும் பானு, “மகனுக்கு இல்லாத அக்கறை இந்த பொண்ணுக்கு இருப்பதைப் பார்த்தா சந்தோஷமா இருக்கு வேணி” என்றவர்,

 

“நீ லக்ஷனா கூடவே இரு நாங்க வீட்டுக்கு கிளம்பறோம்” எனக்கூறியவர் மகளை விட்டுவிட்டு கணவனுடன் வீட்டிற்கு கிளம்பினார்.

 

இவர்கள் சென்றதும் பரமேஸ்வரியின் நலத்தை விசாரித்த திரிவேணி ஆடலரசனின் முடிவை கேட்டுக்கொண்ட பின் தான் படுக்கச்சென்றாள். 

 

லக்ஷனா போன் நம்பரை லாக் செய்தது கூட தெரியாமல் ஆரூரன் மனைவிக்கு கால் செய்து பார்த்து ஓய்ந்து போய்விட்டான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
16
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    2. Interesting sis nice ud sri ku avanga patti ah pathi sonna enna avanga parents pavam arasu appa amma rendu perum ivlo senjudhu ku aprm onna irundhalum manasu sangadam ilama piguduma enna pakkalam waiting for nxt ud sis