Loading

** 30 **

 

“பரமும்மா இந்த நேரத்தில் நீங்க ட்ராவல் பண்றது சரியில்லை, சொன்ன பேச்சைக் கேளுங்க… இன்னும் பத்துப் பதினைந்து நாட்களுக்குப் பின்பு வாங்க… அதுவரை நாங்க லக்ஷி அண்ணியைப் பார்த்துக்கிறோம்” என்று கஸ்தூரி கெஞ்சாதக் குறையாகக் கூறினாள். 

 

“அதெல்லாம் முடியாது… பெரியவங்க துணையில்லாமல் இவ்வளவு நாளா  லக்ஷனாவை விட்டதே தப்பு கஸ்தூரி… அதுவும் இந்த மாதிரி நேரத்தில் சரிகிடையாது” என்று கூறியவர்,

 

“நாங்க இப்பவே இலால்குடி கிளம்பி வரத்தான் போறோம்… என்னை அதட்டுவதை விட்டுட்டு ஒழுங்கா மாப்பிள்ளைத் தம்பியை கவனிச்சுக்கோ” என மகளை அதட்டினார்.

 

“உங்களை வச்சுக்கிட்டு முடியல ம்மா” என ஆயாசமாக கூறியவள்,

 

“ஆஃப்ரேஷன் முடிந்து முழுசா இருபது நாட்கள் தான் ஆகுது அதுக்குள்ள இவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணி வருவது உங்களுக்கே நல்லதா படுதா?” என கேட்டவள்,

 

“நான் சொன்ன நீங்க கேட்க மாட்டிங்க இருங்க உங்க மாப்பிள்ளை தம்பிகிட்ட தரேன்… அவர் சொன்னாதான் கேட்பிங்க” என்றவள் அருகிலிருந்த தேனிசைச்செல்வனிடம் போனை கொடுத்தாள் .

 

சிரிப்புடன் அதை வாங்கியவன், “எப்படீ இருக்கிங்க பரமு ம்மா? உடம்பு பரவாயில்லையா? கரெக்ட் டைமுக்கு மருந்து சாப்பிடறிங்களா? நேத்து மாமா ஏதோ சொன்னார், நீங்க சரியா மாத்திரை போடுவதில்லையாம், அப்படியா? இப்படிச் செஞ்சா எப்படி குணமாகும்?” என கனிவு கலந்த குரலில் கூறினான். 

 

மாப்பிள்ளை சொன்னதை கேட்டதும் அருகிலிருந்த ஆடலரசனை முறைத்த பரமேஸ்வரி அசட்டு சிரிப்புடன், “அதெல்லாம் இல்லைங்க மாப்பிள்ளை இவர் பொய் சொல்றார்… நான் கரெக்டா மாத்திரை மருந்து சாப்பிட்டு ரெஸ்ட் மட்டும் தான் எடுக்கிறேன்” என்று கூறியவர், 

 

“நேத்து சாப்பிட கொஞ்சம் லேட்டானதில் தான் மாத்திரை சாப்பிடலை” என பொய் கூறினார்.

 

“லேட்டா சாப்பிட்டது யார் தப்பு பரமும்மா?” என கிடுக்கிப்பிடி போட்டவன்,

 

“இப்படி எல்லாம் நீங்க மருந்து எடுத்துக்காத போது எப்படி இவ்வளவு தூரம் வருவீங்க? உங்க உடம்பு தாங்குமா?” என அக்கறையாக கேட்டான்.

 

“இனி கரெக்டா மாத்திரை சாப்பிடறேன் மாப்பிள்ளை” என சோகமா பரமேஸ்வரி கூறவும். 

 

தேனிசைச்செல்வன், “கவலைப்படாதிங்க பரமும்மா… இங்க தான் நான், கஸ்தூரி, வீரன் மூணு பேரும் இருக்கோமில்லை பார்த்துக்கிறோம்… இப்ப நீங்க போனை மாமாகிட்ட கொடுங்க” என்று கூறவும் ஆடலரசனிடம் கொடுத்தவர் சோகமாக அமர்ந்துகொண்டார். 

 

“ஹலோ மாமா” என தேனிசைச்செல்வனை அழைக்கவும்,

 

ஆடலரசன், “மாப்பிள்ளை” என தயக்கமாக அழைத்தவரிடம்,

 

“புரியுது மாமா… நீங்க பரமு ம்மாவை சமாதானம் செய்யுங்க நான் டாக்டரிடம் பேசிட்டு அடுத்த என்ன பண்ணலாம்னு சொல்றேன்” என சிரிப்புடன் கூறினான். 

 

“சரிங்க மாப்பிள்ளை” என்றவர்,

 

“லக்ஷனாவையும் பாப்பாவையும் கொஞ்சம் பார்த்துக்கோங்க” என்று கூறினார்.

 

“சரியா போச்சு போங்க… அவங்க ரெண்டு பேருடன் இந்த வேணியும் சேர்ந்து பண்ற கூத்திருக்கே முடியலை மாமா… விட்டால் வீரன் இப்பவே சென்னை ஓடிவந்திடுவான், அந்த அளவுக்கு மூணு பேருடைய குறும்பும் அதிகமாகிடுச்சு” என்று சிரிப்புடன் சொன்னவன்,

 

“இப்படித் தான் நேத்து வீரனை உழவு ஓட்டச் சொல்லி வாட்டி எடுத்துட்டாங்க, அதோடு விட்டாங்களா நெல்லங்காட்டில் களையெடுக்க போட்டு அவன் இடுப்பை பேத்துட்டாங்க” என்று கூறினான். 

 

அதில் பதறிய ஆடலரசன், “அச்சோ! பாவம் வீரன், இப்ப தம்பி எப்படி இருக்கார் மாப்பிள்ளை?” என பதட்டமாகக் கேட்கவும்.

 

“அதெல்லாம் நல்லாத்தான் மாமா இருக்கான்” என்றவன், 

 

“நாட்டுக் கோழி குழம்பும் நண்டு சூப்பும் வச்சுகொடுத்து அவனைக் காக்கா பிடிச்சுட்டாங்க… வீரனும் அவங்க விளையாட்டுப் புரியாமல் சாப்பாட்டை வெளுத்துகட்டிக்கிட்டு இருக்கான்” என அட்டகாசமான சிரிப்புடன் கூறினான். 

 

“மாப்பிள்ளை, தம்பி வருத்தப்படபோறாங்க” என சங்கடத்துடன் கூற.

 

“அவனா? அட போங்க மாமா… உண்மையை சொல்லணும்னா இங்க தான் வீரன் மனசுவிட்டு சிரிக்கிறான்… சந்தோஷமா இருக்கான்” என்று கூறிய தேனிசைச்செல்வன்,

 

“நன்றி மாமா… நீங்க மட்டும் உங்க பொண்ணை எனக்கு கொடுக்கலைனா நானும் வீரனும் இந்த அளவுக்கு மகிழ்ச்சியா இருந்திருக்க மாட்டோம்… ஏனோ தானோனு தான் வாழ்ந்திருப்போம்” என கண்கள் கலங்க கூறினான்.

 

“என்ன வார்த்தை சொல்லிட்டிங்க மாப்பிள்ளை? உண்மையைச் சொல்லணும்னா நீங்க ரெண்டு பேரும் எங்களுக்கு கிடைக்க நாங்க தான் கொடுத்துவைத்திருக்கணும்” என்று தழுதழுத்த குரலில் கூறினார்.

 

“போதும் மாமா… இதுவரை அழுததெல்லாம் போதும், இனியாவது சந்தோஷமா இருக்கலாம்” என்றவன் சிறிது நேரம் அவருடன் பேசிவிட்டு போனை வைத்துவிட்டான்.

 

போனை வைத்தவன் மனைவியின் சிரிப்பு சத்தத்தில் திரும்பி பார்த்தவனின் முகத்தில் புன்னகை தானாக அரும்பியது.

 

ஆடலரசனிடம் சொன்னது போலவே டாக்டரிடம் பரமேஸ்வரி பயணத்தைப் பற்றி பேசியவன் அடுத்த நாளே பெரியவர்கள் மூவரையும் இலால்குடிக்கு அழைத்துவந்துவிட்டான்.

 

ஆம்! மூவர் தான்!.

 

கம்பெனியின் முழு பொறுப்பு வளையாதியிடம் இருந்தாலும் அங்கே நடக்கும் அத்தனையும் அவ்வவ்பொழுது மகனிடமும் மருமகளிடமும் தெரியப்படுத்தினார்… அதனால் அவர் அத்தனையும் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வளர்ப்பு மகன்களுடன் தங்குவதற்காக பிறந்தகத்துக்கு மூட்டைமுடிச்சை கட்டிக்கொண்டு வந்துவிட்டார்.

 

அவரின் மகனும் தந்தைக்கு இலால்குடியிலாவது நிம்மதி கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில் அவரைத் தடுக்காமல் அனுப்பிவைத்தான். 

 

மகன் தடுத்திருந்தாலும் வளையாபதி கேட்கப்போவதில்லை என்பது வேறு விஷயம்… ஆனாலும் தன்னவர்கள் தன்னை புரிந்துகொண்ட சந்தோஷத்தில் நிம்மதியாக பிறந்த ஊருக்கு வந்துவிட்டார். 

 

மகனைக் காண வெளிநாட்டிற்கு சென்ற ஜவஹரும் இளவரசியும் மகளின் செயலை கேள்விப்பட்டு உடனடியாக ஶ்ரீயின் வீட்டிற்கு வந்துவிட்டனர்.

 

இளவரசி, “ஶ்ரீ… ஶ்ரீ” என ஆக்ரோஷமாக அழைத்தபடி வீட்டிற்குள் சென்றவர் சமையலறையிலிருந்து வந்த மகளைக் கண்ட நொடி பளார் என்று அறைந்திருந்தார்.

 

இத்தனை வருடங்களாக தன்னை அடிக்காத அன்னை இன்று அடிக்கவும் புரியாமல் விழித்தாள்.

 

அத்தையின் சத்தத்தில் மகனுடன் பெட் ரூமிலிருந்து வெளியே வந்த ஆதிரன் இளவரசியின் செயலை கண்டதும் அதிர்ச்சியில் தன்னை மீறி “அத்தை” என்று கத்திவிட்டான்.

 

அவனின் சத்தத்தில் திரும்பி இளவரசி, “இது எனக்கும் இவளுக்கு இருக்க பிரச்சனை… தயவு செய்து நீங்க இதில் வராதிங்க” என கடுமையாகக் கூறவும் ஆதிரன் கையாலாத தனத்துடன் அதிர்ச்சயில் உறைந்து நின்ற மனைவியை பார்த்தான். 

 

“உன்னுடைய மனதில் என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க? யார் கொடுத்த தைரியத்தில் அண்ணிக்கிட்டையும் அண்ணனிடமும் அப்படி பேசின?” என கத்தியவர்,

 

எதையோ யோசனை செய்தவராக, “இப்பதான் புரியுது நீ ஏன் இத்தனை ஆட்டம் ஆடினனு… என்ன பலி வாங்கறியா? அதுவும் உன்னுடைய பாட்டி பேச்சை நம்பி… நீயெல்லாம் என்னத்த படிச்சி கிழிச்ச?” என நக்கலாக கேட்டார்.

 

“பாட்டிய தப்பா பேசாதிங்க மாம்… உங்க அண்ணனும் அண்ணியும் தான் தப்பு” என ஶ்ரீ புரிந்துகொள்ளாமல் கூறவும். 

 

ஜவஹர், “யார் தவறானவங்க? என்னுடைய நண்பனா? இல்ல ஶ்ரீ உன்னுடைய பாட்டி, அதாவது என்னை பெத்த அம்மா தான் தப்பு” என அழுத்தமாகக் கறார் குரலில் கூறினார்.

 

தான் கேட்டதை நம்ப முடியமல் ஶ்ரீ, “ப்பா” என தடுமாற்றத்துடன் அழைத்தாள்.

 

“அப்பா தான்… உன்னுடைய அப்பா நான் தான் சொல்றேன், என்னை பெத்த அம்மாவினால் தான் அத்தனை பிரச்சனை… அவங்களுடைய பேராசையால் தான் நாங்க இலால்குடி பக்கமே போகமுடியாமல் போச்சு… அவங்களால் தான் நீ இப்படி முட்டாளா இருக்க” என்று கூறியவர்,

 

“அம்மாவுடைய பணத்தாசை தான் நம்ம குடும்பம் பிரிந்ததுக்கு” என்று ஆணியடித்தார் போல் கூறியவர் அன்னையின் பித்தலாட்டங்களை புட்டு புட்டு வைத்தார்.

 

தான் நம்பிய பாட்டியின் குரூர புத்தி தெரிந்ததும் ஶ்ரீ மொத்தாக உடைந்து போய்விட்டாள். 

 

“இப்ப நம்பறையா அவங்க தப்புனு?” என்று இளவரசி கேட்டார்.

 

மனைவியின் நிலையை கண்டு ஆத்திரமடைந்த ஆதிரன், “போதும் நிறுத்துங்க” என்று கத்தினான்.

 

அதற்கு இளவரசியும் ஜவஹரும்  எதையோ கூற வர ஆதிரன், “ஶ்ரீ இப்படி இருக்க அந்த பாட்டி முதல் காரணம்னா அடுத்த காரணம் நீங்க ரெண்டு பேரும்” என்று கோபமாகக் கூறவும் பெண்ணை பெற்ற இருவரும் புரியாமல் விழித்தனர்.

 

அதைக் கண்ட ஆதிரன், “புரியலையா? பாட்டி இவளை தப்பான வழியில் கொண்டு போகும் போது நீங்க ரெண்டு பேரும் ஏன் தடுக்காமல் அமைதியா வேடிக்கை பார்த்திங்க? மாமாவுக்கு மகளை விட அம்மா பெருசுனா, உங்களுக்கு மாமாவுடைய மன நிம்மதி பெருசு… அதனால் தான இத்தனை வருஷமா உண்மையை மறைத்து வைத்திருந்திங்க?” என்று கேட்கவும் பெரியவர்கள் இருவரும் தலை குனிந்து கொண்டனர்.

 

அதில் வேதனையடைந்த ஶ்ரீ கணவனைப் பார்க்க அவனோ இவளைக் கண்டும் காணாமல் அத்தையிடம், “பொண்ணைப் பெத்த நீங்க நினைத்திருந்தால் இவளை சரியான வழியில் கொண்டுவந்திருக்க முடியாதா? முடியும்… ஆனால் நீங்க பண்ணலை” என்றவன்,

 

“முன்பு நடந்ததை விடுங்க இப்ப எங்க கல்யாணத்திற்குப் பிறகு ஶ்ரீ நடந்துக்கிட்டதையெல்லாம் நீங்க பார்த்திங்க தான? அப்ப ஏன் அமைதியா வேடிக்கை பார்த்திங்க? அவளிடம் உண்மையை சொல்லி புரியவைத்திருக்கலாம் தான?” என கேட்டான்.

 

ஆதிரனின் கேள்விக்கு இளவரசியும் ஜவஹரும் பதில் சொல்ல முடியாமல் தடுமாறவும், “ஏனா, அப்பவும் உங்களுக்கு உங்க சுயநலம் தான் பெருசா போச்சு… இப்படி இருக்க நீங்க ஶ்ரீயை குறை சொல்ல தகுதியில்லாதங்க” என கடுமையாக கூறியவன்,

 

“நானும் ஶ்ரீயும் இன்னைகே இலால்குடி கிளம்பறோம்” என தகவலாக சொல்லியவன் மனைவியை அழைத்துக்கொண்டு படுக்கையறைக்கு சென்றுவிட்டான்.

 

தனது தவறை உணர்ந்த ஜவஹர் தொய்ந்து போய் அமர, இளவரசி ஊமையாகக் கண்ணீர் வடித்தவர். 

 

அடம்பிடித்து இலால்குடி சென்ற பரமேஸ்வரி தங்கள் குடும்ப வாரிசை வயிற்றில் சுமந்துகொண்டிருக்கும் லக்ஷனாவை உள்ளங்கையில் வைத்து தாங்காத குறையாகத் தாங்கினார். 

 

மாமியாரின் பாசத்தில் ஒவ்வொரு முறையும் பரிசுத்தமான தாயின் அன்பை உணர்ந்த லக்ஷனா இந்த முறையும் மெய்சிலிர்த்து போனாள். 

 

அதோடு தான் எடுத்த முடிவும் சரியென நினைத்துக்கொண்டாள்.

 

அப்பொழுது உள்ளே வந்த யசோகன், “அடடா! என்ன இது? அழுகாச்சி எல்லாம் போதும்… இன்னும் ரெண்டு நாளையில் தீபாவளி வேற வருது, அதுக்கு தயாராவதை விட்டுட்டு எதுக்கு சோகம்? ஓடுங்க ஓடுங்க” என்று இளையதுகளை விரட்டியவர்,

 

தோழனிடம், “நடந்ததை நினைத்து வருந்தாமல் இனி நடக்கப்போவதை பற்றி மட்டும் யோசி… இப்ப லக்ஷனா வாயிம் வயிறுமா இருக்கா அவளுக்கு ஆரோக்கியமான சூழல் தான் நல்லது… ஊரில் யாருக்கும் தெரியாமல் உன் பொண்ணுக்கு கல்யாணத்தை முடிச்சாச்சு, அதை ஈடுகட்டுவதுபோல் தீபாவளிக்கு அடுத்த நாள் விருந்து வச்சுடலாம்… இல்லைனா நம்ம மக்கள் பேசியே நம்மை கொன்னுடுவாங்க” என்று சிரிப்புடன் கூறினார்.

 

“அதுவும் சரிதான் யசோகா” என்ற ஆடலரசன்,

 

“என்ன கண்ணு பண்ணிடலாமா?” என மனைவியிடம் கேட்டார்.

 

“என்னை கேட்பது இருக்கட்டும் முதலில் பெத்தவக்கிட்ட கேளுங்க மாமா” என பரமேஸ்வரி சிரிப்புடன் கூறவும்.

 

அசட்டு சிரிப்புடன் ஆடலரசன், “நீ சொல்லு வடிவு?” என கேட்டார். 

 

அதற்கு அவரோ, “இதில் நான் சொல்ல என்ன இருங்குங்க ஐயா? நீங்களும் அக்காவும் முடிவு பண்ணுங்க” என்றவர்,

 

“இப்பவே வீட்டு வேலையை ஆரம்பித்தால் தீபாவளிக்குள் முடியும்” என்றார். 

 

அதற்கு வளையாபதி, “உனக்குனு எந்த ஆசையும் இல்லையா வடிவு?” என கேட்டார். 

 

“நான் ஆசைபட்டதுக்கும் மேல் ஐயாவும் அக்காவும் கஸ்தூரிக்கு செய்யும் போது என்ன சொல்வது?” எனச் சிரிப்புடன் கேட்டார்.

 

“சரிதான்” என்று புன்னகையுடன் கூறியவர், 

 

“அரசா, வேலையை ஆரம்பிச்சுடலாம்டா” என்று சிரிப்புடன் கூறினார். 

 

அன்று மாலையே ஆதிரன் ஶ்ரீயுடன் அங்கே வந்துவிட யாரும் அவளை தவறாக ஒரு வார்த்தை கேட்காமல் அன்போடு அரவணைத்தனர்.

 

இவர்களின் அன்பு பெண்ணவளைப் பலவீனப் படுத்தவும் உடைந்து போனவள் பரமேஸ்வரி மற்றும் ஆடலரசனின் காலில் விழுந்து தனது செயலுக்கு மன்னிப்பை யாசித்தாள். 

 

ஏற்கனவே லக்ஷனா ஶ்ரீயின் மனநிலையை கூறியிருந்ததினால் எளிமையாக அவளைக் கையாண்டனர்.

 

இதையெல்லாம் கண்கள் கலங்க கண்ட ஆதிரன் முதன் முதலாக தனது செயல்களுக்காக பெற்றோரிடம் மன்னிப்பை வேண்டினான். 

 

என்னதான் பிள்ளைகளின் செயலில் மனது காயப்பட்டிருந்தாலும் திருந்தி வருந்தி வந்தவர்களை கோபமெனும் ஆயுத்தினால் சவுக்கடி கொடுக்காமல் மன்னித்து ஏற்றுக்கொண்டனர்.

 

இவர்களின் மன்னிப்பே ஶ்ரீயையும் ஆதிரனையும் மேலும் மேலும் குற்றவுணர்வில் தள்ளியது.

 

இவர்களின் மனதை நன்றாக உணர்ந்துகொண்ட கஸ்தூரியும் தேனிசைச்செல்வனும் ஶ்ரீயையும் ஆதிரனையும் பேசிப் பேசியே சகஜமாக்கினர்.

 

இப்படியே அடுத்து வந்த இரண்டு நாட்களும் விறுவிறுப்பாக செல்ல பட்டாசு சத்தத்திலும் பலகாரங்களின் வாசனையிலும் தீபாவளி பண்டிகை அழகாக தொடங்கியது.

 

இந்த கலகலப்பையும் சந்தோஷத்தையும் வீரனும் தேனிசைச்செல்வனும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்.

 

இவர்களின் மகிழ்ச்சியைக் கண்ட வளையாபதி அளவற்ற சந்தோஷத்தில் பத்து வயது குறைந்தவர் போல் சுற்றித் திரிந்தார்.

 

இப்படி இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்க ஆரூரனோ மழிக்கப்படாத தாடியும் கசங்கிய சட்டையுமாக ஆளே மாறிப் போய் காரில் வந்திறங்கியவன் தயக்கத்துடன் வீட்டிற்குள் செல்லாமல் வெளியே நின்றிருந்தான். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
20
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    2. வேணியொட pair யாருனு சொல்லவே இல்லை

    3. Interesting sis nice ud aadhiran sonnadhu correct dhana sollavendiya nerathula sollama ipa solli enna panna nice ud sis