Loading

 

போவோமா ஊர்கோலம்.

 

அத்தியாயம் -02

 

சேதுவின் வண்டியை பார்த்ததும் அந்த கயவனோ அவளை நெருங்குவதை நிறுத்தி விட்டு, அவனை பார்வையால் அளவெடுத்து கொண்டு இருக்க, அவனோ முறைத்துக்கொண்டே வண்டியில் இறங்கி ஓங்கி ஒரு குத்து வைத்தான் அந்த குடிகாரனின் முகத்தில்.

 

அவன் குத்திய ஒரே குத்தில் அவனின் மூக்கில் குருதி வந்தது.

 

” வாவ் வாவ் சூப்பர் டா சேது, உன் ஆக்ஷன் காட்ட தானா என்னைய இங்க தனியா விட்டுட்டு போனியா டா ” என்றவளின் கன்னத்தில் ஒரு அறை வைத்தான்.

 

” ஏய் கூருகெட்டவளே, உனக்கு எல்லாத்துலயும் விளையாட்டு தானா, அப்ப படிப்பையும் விளையாட்டுக்கு தான் படிச்சியா, எதுக்கு டி வீட்டை விட்டு ஓடியாந்த ” என்றதும், அவளோ “ஞ்கே என் அப்பா எனக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டாரு, நாளைக்கு அவங்க வூட்டுக்கு தான் போறாங்க, போனா கையோடு என்னைய பார்க்க மாப்பிள்ளை வீட்டுங்கள அழைச்சிட்டு வருவாரு டா, எனக்கு கல்யாணமே பண்ணிக்க பிடிக்கலை. அதான் யாருகிட்டயும் சொல்லாம ஓடியாந்துட்டேன் ” என்று விழிகளில் தேங்கி கண்ணீரோடு சொல்ல, அவனுக்கு தான் எங்கேயாவது சென்று தலையை முட்டி கொள்ளலாமென்று இருந்தது…

 

” சரி வண்டில ஏறு நான் வீட்டுல கொண்டுப்போய் விடறேன் ” என்றது பதறி “ஐயோஓஓ வீட்டுக்கா நான் வரல, வேற ஒரு நல்ல லேடீஸ் ஹாஸ்டல் பார்த்து வுடு நான் அங்கனே தங்கி வேலை தேடிக்குறேன் ” என்றாள் சைலு..

 

அவனோ ” அப்படியா அப்போ விடிய இன்னும் மூனு மணிநேரம் இருக்கு, அதுவரைக்கும் இங்கனே இரு, நான் கிளம்புறேன் ” என்று வண்டியை இயங்க செல்ல முற்பட்டவனின் கரத்தை தடுத்து நிறுத்தினாள் அவள்.

 

அவனோ அவளை கேள்வியோடு ஏறிட்டு பார்க்க, ” நீ எங்கன போறியோ அங்கேயே என்னையும் கூட்டிட்டு போ சேது ” என்றதும் திகைத்து போனான் ஆடவன்.

 

” ஏதே நான் போற இடத்துக்கு உன்னையும் கூட்டிட்டு போறதா, ஏய் என்னைய அவ்வளவு சாதாரணமா எடை போடாத  டி, நான் அவ்வளவு நல்லவனும் இல்லை  அதுக்காக கெட்டவனும் இல்லை. நான் போற இடத்துக்கு பொண்ணு நீ எல்லாம் வரக்கூடாது, ஒழுங்கா உன் வீட்டுக்கே போயி சேரு ” என்றதும், ” முடியாது முடியாது நான் வீட்டுக்கு போவ மாட்டேன் ” என்றவளை முறைக்க மட்டும் தான் முடிந்தது அவனால்.

 

அவளோ அவனின் வண்டியில் ஏறி அமர்ந்து, ” சேது இந்த பெட்டியை தூக்கி பின்னாடி கட்டிவிடேன் டா ” என்றதும் அவனோ, ” ஏய் என்ன மரியாதை இல்லாம வா டா போ டா பேசற, உனக்கு அவ்வளவு தான் லிமிட்டு வாயை வச்சிட்டு கம்முனு வரணும் இல்லை போற வழிலே உன்னைய இறங்கி விட்டுட்டு போயிடுவேன் ” அவளை நோக்கி விரல் நீட்டி எச்சரிக்க, அவளோ “என்ன டா இப்படி சொல்ற காலேஜ் படிக்கும் போது நான் உன்னைய டா போட்டு தானே கூப்பிடுவேன், அப்போ வராத ரோஷம் ஏன் இப்போ வருது டா, நம்ம இனி நல்ல பிரண்ட்ஸ்சா இருப்போம் டா ” என்றதும் ” ஏய் மரியாதையா கீழ இறங்கு போனப்போவட்டும் பாவமாச்சே ன்னு பார்த்து விட்டா, ரொம்ப கொழுப்பா பேசற, என்ன டி அந்த குடிகார ஆளு கிட்ட இந்நேரம் மாட்டிட்டு இருந்தா உன் நிலைமை என்னாகி இருக்கும் ன்னு நினைச்சி பாரு ” என்றவனின் வார்த்தையில் அவளின் உள்ளமோ தீயாய் சுட்டது.

 

கண்களும் கலங்க அதை அவனுக்கு தெரியாமல் துடைத்து கொண்டவள், மெல்லிய குரலில் ” சாரி சேது இனி உங்களை பேர் சொல்லியே கூப்பிடறேன், ” என்றதும் அவளை மேலும் கண்கலங்க வைக்க முடியவில்லை அவனால்.

 

அவனும் மௌனமாக வண்டியை ஸ்டார்ட் செய்து பயணத்தை தொடர்ந்து கொண்டு சென்றப் போது நேரமோ ஐந்தை எட்டியது….

 

விடியலில் எழுந்து வாசலை பெருக்கி கோலம் போட்டுவிட்டு வாசலின் எப்போதும் போல் நிற்கும் மகனின் வண்டியை காணவில்லையே என்று பதறி உள்ளே வந்த சேதுவின் தாயார் மகனின் அறையை எட்டி பார்த்த போது, அவனை அங்கே காணாது வீட்டை முழுக்க தேடி சோர்ந்து போனவர், உறங்கும் கணவரை எழுப்பி, ” ஏனுங்க பையனை பார்த்தீங்களா? ” என்றதும், அவரோ ” இல்லையே நானே இப்ப தான் கண்ணு முழிக்குறேன், அந்த பய ரூமுல போயி பாரு அவன் வழக்கம் போல ஒரு பையை எடுத்துட்டு போவானே அந்த பையி இருக்குதா இல்லையான்னு பாரு “! …

 கணவரின் வார்த்தையில் அவனின் அறைக்கு சென்று பார்த்த போது அந்த பை காணாமல் போனது. அவனின் போன் மொபைல் சார்ஜ்ர் கூட காணாமல் போகவே, தாயானவருக்கு புரிந்துவிட்டது, மகன் வீட்டை விட்டு எங்கேயோ கிளம்பிவிட்டானென்று.

” அய்யோ இப்ப என்ன பண்றது, நான் தான் அப்பவே சொன்னேனே அவன் கிட்ட இன்னைக்கு பொண்ணு வீட்டுக்காரருவ வராணுவ சொல்லாதீங்கனு கேட்டியாலா? ஏதோ இந்த ஜாதகமாச்சு கைகூடி வரும்னு நீங்க சொன்னதே என் மனசுக்கு ஆறுதலா இருக்கு, இந்த பய ஏன் இப்படி பன்றேன், அவனுக்கு எல்லாத்துலையும் விளையாட்டு தானா, ஏங்க நான் பாட்டுக்கு ஒப்பாரி வச்சிட்டு இருக்கேன், நீங்க பாட்டுக்கு போன் எடுத்து யாருக்கு போன் போடறீங்க, ” என்று சேலை முந்தானையில் மூக்கை சிந்தி கொண்டே கேட்க, அவனின் தந்தையோ, ” ஹான் உன் அருமை புத்திரன காணோம்னு தரகர் கிட்ட போன் பண்ணி சொல்லப்போறேன் ” என்ற அடுத்த நொடியே அவரின் கையில் இருந்த கைபேசியை பிடுங்கினார் சேதுவின் தாயார்.

 

” ஏனுங்க என்ன காரியம் இது, நீங்களே அவன் வாழ்க்கைக்கு ஒலை வச்சிடுவீங்க போல, கொஞ்சம் நாள் பொறுங்க அவனே வந்துடுவான் ” என்றதும், ” கொஞ்சம் நாள் என்ன எவ்வளவு நாள் வேணா பொறுத்துப்பேன், ஆனா இன்னைக்கு வரபோற பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு என்ன பதில் சொல்லப்போற நீ, என்ன மூக்கை சிந்திட்டு இருக்கறவ அவங்க வரத்துக்கு முன்னாடியே நம்ம பையன் அர்த்தராத்திரில ஓடி போய்ட்டான் ன்னு சொன்னா நம்ம மானம் மரியாதை எல்லாம் தப்பிக்கும், ” என்று கைபேசியை அழுத்த, அதை வெடுக்கென பிடிங்கினார் அவரின் துணையாள்.

 

” ஏங்க செத்த நாழி பொறுத்து பார்ப்போம் அவன் வருவானா இல்லையான்னு, பொறவு அவன் வராம இருந்தா அவன் என் புள்ளையே கிடையாதுனு தலைமுழுங்கிடறேன்ங்க ஒஹ்ஒஹ் ” என்று கண்ணீர் சிந்த, ” இந்தா இப்ப இன்னா நடந்து போச்சு இப்படி பேசற, சரி நீ சொன்ன போல செத்த நேரம் பொறுத்து பார்ப்போம் ” என்றார் சேதுவின் தந்தை.

அங்கே பெண்ணின் வீட்டிலும் அவளின் தாயாரோ, ” அந்த சண்டாளி கால் கையை உடைசிவச்சி இருக்கனும் நானு, இப்படி அசிங்கம் அவமானம் வாங்கி கொடுத்துட்டு போய்ட்டாளே, ஏனுங்க நீங்க என்ன கம்முனு உட்கார்ந்து இருக்கறீங்க, அந்த தரகர்க்கு போன் போட்டு மாப்பிள்ளை வீட்டுக்கு போவ வேணாம்னு சொல்லிடுங்க ” என்று கூறிய பெண்ணின் தாயை பார்ப்பதற்கு பரிதாபமாக தான் இருந்தது.

 

வீட்டில் ஒரு பூகம்பமே வெடித்து கொண்டு இருக்க, இவை ஏதும் அறியாது சுதந்திர பறவைகளாக பறந்துகொண்டு இருந்தார்கள் சேதுவும் சைலுவும்.

 

முகத்தை தூக்கி அமர்ந்து கொண்டு இருந்த சேதுவின் தந்தை கைபேசியோ அலற, அதை ஏற்று செவியில் வைத்த கணமே அவரின் மனைவியை தேடி சென்றார்.

 

அவர் மனைவியோ அடுப்பை பற்ற வைத்து சாதத்திற்கான ஒலையை வைத்து கொண்டு இருக்க அவரிடம் வந்த தந்தையானவர், ” இப்ப தான் தரகரே போன் பண்ணாரு, இன்னைக்கு பொண்ணு வீட்டுல இருந்து வரலையாம், ஏன்னு கேட்டதுக்கு பொண்ணும் காணாம போயிடுச்சாம் ” என்றதும், ” என்னங்க சொல்லறீங்க, பொண்ணும் காணாம போயிடுச்சா, என்னால நம்பவே முடியல, முதல்ல பொண்ணு பத்தி ஊருல விசாரித்து இருக்கனும், பொறவு அவங்கள வரச்சொல்லி இருக்கனும்” என்று கூற, ” ஆமா உன் பையன் மட்டும் ரொம்ப யோக்கியன் பாரு எந்த பொண்ணப் பார்க்க போவ நேரத்துல தான் வூட்டை விட்டு காணாம போயிடுறான், எல்லாம் என் விதி அவனை புள்ளையா பெத்ததுக்கு இதெல்லாம் அனுபவிக்கனும்ன்னு என் தலை எழுத்து ” என்று சுவரில் மாட்டி இருந்த சட்டையை எடுத்து அணிந்து கொண்டு கழனி காட்டை நோக்கி சென்றார்.

 

—————-

 

” சேது இந்த ட்ராவெல்லிங் கூட நல்லா தான் இருக்கு, ஆமா எந்த ஊர் காட்டுக்கு போற நீ, “..

 

” ஹான் அமேசான் காட்டுக்கு போறேன், அங்க அனகோண்டா, ராஜநாகம் பாம்பு கிட்ட பிரண்ட்ஸா பழக போறேன், நீயும் வரியா ” என்றவனிடம்,

 

” டேய் காமெடி பண்ணாத டா, சிரிப்பே வரல வேற ஜோக் ட்ரை பண்ணு “.

 

” ஏய் இப்ப தானா சொன்னேன் டா  போட்டு பேசாதன்னு, கீழ இறங்கு டி முதல்ல ” என்று வண்டியை நிறுத்த, அவளோ ” சாரி சேது அது பழக்க தோஷத்துல சொல்லிட்டேன் ” என்றாள் அவள்

” ஏய் இந்த சமளிக்குற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம், நான் தூரத்துல போறேன் உன்னையையும் கூட்டிட்டு போனா வண்டிக்கு யாரு பெட்ரோல் போடறது, அதனால நீ பஸ் புடிச்சு உன் வீட்டுக்கே போயி சேரு “..

 

” இந்தா சேது எந்த டாபிக் பேசினாலும் நீ என்னைய வீட்டுக்கு அனுப்புறதுலே குறியா இருக்குற, நீ என்னதான் சொன்னாலும் நான் வீட்டுக்கு மட்டும் போவவே மாட்டேன்”.

 

” பொறவு கோயில்ல புளியோதரை போடறாங்க அதை வாங்கி சாப்பிட்டு கோயில் வாசலுலே தங்கிக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா ” என்றதும் கலகலவென சிரித்தாள் அவள்.

 

அவளின் சிரிப்பு அவனுக்கு எரிச்சலை கொடுக்க, அவனோ ” ஏய் எதுக்கு நீ இப்ப சிரிக்கிற, நான் என்ன ஜோக்கா சொன்னேன், “.

 

” பின்ன உனக்கு நடக்க போறதை எனக்கு நீ சொல்ற, சிரிக்காம என்ன பண்றது நானு, “.

 

அவளின் வார்த்தையில் சினம் மேலோங்கியது அவனுக்கு.

 

” ஏய் என்ன விட்டா ஓவரா பேசிட்டே போற நீ அடங்கவே மாட்ட முதல்ல உன்னைய எங்கேயாவது கொண்டு போயி விடணும், நான் எதுக்கு கோயில் வாசலுல உட்காரணும், நான் ஆம்பள டி எங்கவேணாலும் போவலாம் பொழக்க எனக்கு ஆயிரம் வழி, ஆனா உனக்கு அப்படி இல்ல. பொண்ணுங்களுக்கு பாதுகாப்பே இல்லை. நீ உன் வூட்டுக்கு போயி சேரறது தான் எனக்கு நல்லதுன்னு தோணுது ” என்றவனின் பின் தலைமுடியை அழுத்தமாக பிடித்து ” நீ என்ன என்னைய வூட்டுக்கு அனுப்புறதுலே இருக்குற, ” என்றாள் அவள்.

 

” பின்ன நீ தான் கம்முனு வர மாட்டுற, நான் பாட்டுக்கு என் சிவனேனு இருந்தேன் டி, காலேஜ் லைப் கூட என்னால நிம்மதியா என்ஜாய் பண்ண விட்டியா டி நீ, அப்போ இருந்த பொறுமை கூட எனக்கு இப்ப இல்லை. ஒழுங்கா என் கோவத்தை கிளறி பாக்காம வாயை மூடிட்டு கம்முனு வா, சிங்கிள் வாழ்க்கையில தனியா ஜாலியா வாழலாம் ன்னு வூட்டை விட்டு வந்தா, இந்த துரோகி கூட சுத்தணும் ன்னு என் தலையெழுத்தே மாறி போச்சு. இதுக்கு என் ஆத்தா கையி காட்டுற பொண்ணையே கண்ணை மூடிக்கிட்டு கல்யாணம் பண்ணலாம்ன்னு தோணுது ” என்று தன் போக்கில் புலம்பியவனின் சத்தம் சைலுவின் செவிகளுக்கு கேட்க 

 

அவளோ ” ஓஹ் அப்போ ஏன் வூட்டை வுட்டு வந்த, அந்த பொண்ணையே கட்டிக்க வேண்டியது தான “..

 

” ஏய் அது உனக்கு தேவைல்லாதது கம்முனு வா ” என்றவனின் வண்டியோ பெட்ரோல் இல்லாமல் நடுரோட்டில் நிற்க, ” அச்சோ வண்டியில எண்ணெய் தீர்ந்து போச்சு, இப்ப என்னா பண்றது, எல்லாம் உன்னால டி, நீ மட்டும் வராத இருந்து இருந்தா நான் இந்நேரம் பாண்டிச்சேரி கிட்ட போயிருப்பேன் டி வெண்ண ” என்று அவளின் நடுமண்டையில் ஓங்கி ஒரு கொட்டு வைக்க அவளுக்கோ உச்சியில் சுருக்கென்று வலித்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Archana

      ரெண்டு அப்பா அம்மாவும் பார்த்த வரனே இவங்க ரெண்டு பேர் தானோ🤣🤣🤣🤣🤣