1,365 views

ஹரிஹரன் வெட்ஸ் வருணிகா என்ற பெயர்களை, அழகாக ஒட்டி அலங்கரித்துக் கொண்டிருந்தனர் இருவர். அவர்களுக்கு வேலை சொல்லிக் கொண்டிருந்தார், மாணிக்கம். வருணிகாவின் சித்தப்பா.

“இனிசியல் கொஞ்சம் கீழ இருக்க மாதிரி இருக்கு பாருப்பா”

அவரது கட்டளைக்கு இணங்கி அதை சரி செய்தனர். அந்நேரம் அவரது மகன் வந்து நின்றான்.

“ப்பா.. வாழை மரம் கட்டியாச்சு. வந்து பாருங்க”

“இந்தா வரேன். இந்த எழுத்து சரியா இருக்கானு பாரு”

“சரியா இருக்குப்பா”

“இவங்க கீழ தேதி எழுதுவாங்க‌. பாரு. நான் வாழை மரத்த பார்த்துட்டு உள்ள போறேன். நீயும் சீக்கிரம் வா”

அவர் உள்ளே நுழைய, அந்த திருமண மண்டபம், முழுவதும் உறவினர்களின் வருகையில் ஜேஜேவென காட்சியளித்தது.

இன்று நிச்சயதார்த்தம். நாளை காலை திருமணம். மாணிக்கத்தின் ஒரே அண்ணனின் ஒரே மகள் வருணிகா. அவர்கள் வீட்டின் தேவதை.

தேனி மாவட்டம் அருகே உள்ள ஒரு ஊரில், இரண்டு அண்ணன் தம்பி இருலரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். அண்ணன் வைரவன் சொல்லே வேதவாக்காக வாழும் மாணிக்கம். தம்பிக்கு தெரியாமல், துரும்பைக்கூட அசைக்காத அண்ணன் என்று பாசமாக வாழ்ந்தனர்.

இருவருக்கும் அடுத்தடுத்து திருமணம் முடிந்தாலும், மாணிக்கத்துக்கு முதலில் குழந்தை பிறந்து விட்டது. அதன் பின்பு ஆறு வருடங்கள் கழித்தே, வைரவனுக்கு குழந்தை பிறந்தது. வருணிகாவின் குழந்தை பருவத்திலேயே, அவளை பெற்றவர் உயிரை விட்டு விட்டார்.

வருணிகாவை வளர்த்தது எல்லாம், மாணிக்கத்தின் மனைவி தெய்வா தான். இரண்டு வருடங்களுக்கு முன்பு, மாணிக்கத்தின் மகன் பூபதிக்கு திருமணம் முடிந்து விட்டது.

இப்போது வருணிகாவிற்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் செய்து வைக்கின்றனர். குடும்பங்கள் இணைந்து நடத்தும் திருமணம். மகிழ்ச்சிக்கு குறைவே இல்லை.

பூபதி அந்த எழுத்துக்களை பார்வையிட்டுக் கொண்டிருக்க, “அண்ணா” என்று வந்து நின்றாள் சந்திரா.

“வாமா.. இவ்வளவு லேட்டாவா வருவ?”

“பஸ் லேட்ணா”

“உள்ள போ. வருணி உன்னைக் காணோம்னு தேடிட்டே இருந்தா. இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரவங்க வந்துடுவாங்க. அவ ரெடியாகிட்டாளானு பாரு”

“இதோணா”

சந்திரா வேகமாக உள்ளே நுழைந்தாள். சற்று நேரம் கழித்து நடக்கப்போகும் திருமணத்திற்கு, எல்லோரும் தயாராகிக் கொண்டிருக்க பார்வையிட்டபடி உள்ளே வந்தாள்.

மணப்பெண் அறைக் கதவை திறந்து, “ஹலோ” என்றாள்.

புடவை மடிப்பை சரிபார்த்துக் கொண்டிருந்த வருணிகா நிமிர, அவளோடு இருந்த மேக் அப் பெண்ணும் நிமிர்ந்தாள்.

“ஹாய்..”

“வாடா வா.. எவ்வளவு சீக்கிரமா வந்துட்ட?” என்று வருணிகா முறைக்க, “சாரிடா. கல்யாண சீசன். பஸ் எல்லாம் புக் ஆகிடுச்சு. அடிச்சு பிடுச்சு வந்து சேர போதும் போதும்னு ஆகிடுச்சு” என்றாள்.

“நல்லா காரணம் சொல்லு. நேத்தே வானு சொன்னா கடைசி நேரத்துல வந்து நிக்கிற”

“அதான் வந்துட்டேன்ல.”

வருணிகாவை சமாளித்து விட்டு அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, வருணிகாவின் அண்ணி மேனகா உள்ளே நுழைந்தாள்.

“வருணி ரெடியாகிட்டியா..? இந்தா.. இதை மேக் அப் கலையாம சாப்பிடு.” என்று சிற்றுண்டியை அவள் கையில் திணித்தாள்.

“நீ சாப்பிடுறியா சந்திரா?” என்று வருணிகா, அந்த சிற்றுண்டி வைத்திருந்த பேப்பர் தட்டை நீட்ட, மேனகா முறைத்தாள்.

“நான் உனக்கு தான் கொண்டு வந்தேன். ஒழுங்கா சாப்பிடு. கெஸ்ட் எல்லாருக்கும் என்கேஜ்மெண்ட் முடிஞ்சதும் ஸ்னாக்ஸ் கொடுக்கலாம்”

மேனகா அதட்டியதில், வருணிகா சந்திராவை சங்கடமாக பார்த்தாள்.

“நீ சாப்பிடு வருணி. நான் என் அத்த வீட்டுல லன்ச் சாப்பிட்டுட்டு தான் வந்தேன்” என்றாள் சந்திரா புன்னகை மாறாமல்.

“ஓகே டா” என்றவள், தட்டில் இருந்ததை வேகவேகமாக சாப்பிட்டாள்.

மதியம் அறைகுறையாக சாப்பிட்டு விட்டு, மேக் அப் போட அமர்ந்து விட்டாள். இப்போது இருந்த பசியில், சிற்றுண்டி வேகமாக உள்ளே சென்றது.

வருணிகா சாப்பிட்டு முடிக்க, மாப்பிள்ளை வீட்டினர் வந்து விட்டதாக தகவல் வந்தது.

எல்லோரும் அவர்களை வரவேற்று உபசரிக்கச் சென்று விட்டனர். சாப்பிட்டு முடித்து வாயை துடைத்துக் கொண்டாள், வருணிகா.

உதட்டுச்சாயம் சற்றே அழிந்து இருக்க, அதை சரி செய்து கொண்டாள்.

சில நிமிடங்கள் தனிமையிலும், அடுத்து நடக்கப்போகும் நிகழ்வுகளின் நினைவு கொடுத்த சந்தோசத்திலும் கழிந்தது.

நிச்சயதார்த்த நேரம் ஆரம்பமாக, வருணிகா அழைத்து வர பட்டாள்.

மணமகனை ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டே வந்து, அவனருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

ஹரிஹரனும், அவளது அழகை ரகசியமாக ரசிப்பதாக நினைத்து, வைத்த கண் வாங்காமல் பார்த்து வைத்தான்.

சடங்கு, சம்பிரதாயங்கள், மோதிரம் மாற்றி, மாலையிட்டு, புகைப்படங்கள் எடுத்து என நேரம் மின்னல் வேகத்தில் கடந்தது.

அந்த நேரங்களில், பட்டும் படாமல் உரசிக் கொண்ட தோள்கள், கைகள், பார்வைகள் எல்லாம் மணமக்களை புது உலகிற்கு கொண்டு சென்றது.

இருவருக்கும் இது நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான். ஆனால், இருவருக்கும் ஒருவரை ஒருவர் முன்பே தெரியும்.

இருவரும் ஒரே பள்ளி, கல்லூரியில் படித்தவர்கள். அவன் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் என்றால், அவள் எட்டாம் வகுப்பு மாணவி. அவன் முதுகலை பட்டத்தின் கடைசி வருடம் என்றால், அவள் அதே கல்லூரியில் முதல் வருடம் படித்தாள்.

இருவருக்கும், அடுத்தவரின் முகம் மற்றும் பெயர் தெரியும். ஏன் கல்லூரியில் சேர்ந்தப்பின்பு, இருவரும் சில நொடிகள் பேசவும் செய்திருக்கின்றனர்.

இன்று, இருவரும் ஒன்றாக திருமண பந்தத்தில் இணைகின்றனர். இருவருக்குமே, பெற்றோர் பேசிய வரன் யாரென்று தெரியாமல் இருந்தது. பள்ளி கல்லூரியைப்பற்றி பேச்சு வரும் போது தான், இருவரும் தெரிந்து கொண்டனர்.

நிச்சயதார்த்தம் சிறப்பாக முடிந்து விருந்தினர்கள் கிளம்பி விட, மணமகன் குடும்பத்தை ஒரு வீட்டில் தங்க வைத்தனர்.

இரவு, வருணிகா சாப்பிட்டு முடித்து அறைக்குள் வர, சந்திரா அங்கிருந்தாள்.

“தூங்கலாமா? செம்ம டயர்ட்” என்று வருணிகா உடலை முறிக்க, “நீ தூங்குமா கல்யாண பொண்ணே. எனக்கு தூக்கம் வரல. நான் லேட்டா எந்திரிச்சா ஒரு பிரச்சனையும் இல்ல” என்றாள் சந்திரா.

அந்நேரம், மேனகா கதவை திறந்து உள்ளே வந்தாள்.

“வருணி.. நாளைக்கு சீக்கிரம் எழனும். அரட்டை அடிக்காம படு”

“சரிங்கண்ணி. நீங்க என்ன தேடுறீங்க?”

“கல்யாண வீட்டுல எங்கயும் தொலைச்சுடக்கூடாதுனு உன் ட்ராவ்ல தான் போன வச்சுட்டுப் போனேன். அதை எடுக்க வந்தேன்”

கைபேசியில் யாரையோ அழைத்து, பேசியபடி மேனகா அங்கேயே அமர்ந்து விட, வருணிகா தன் கைபேசியை எடுத்து, காலை எழுவதற்கு அலாரம் வைத்து விட்டு, படுத்து விட்டாள்.

களைப்பாக இருந்த போதும், அதீத சந்தோசத்தில் தூக்கம் வரவில்லை வருணிகாவிற்கு. போர்வையை தலை வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு, மாலை நடந்ததை எல்லாம் நினைத்து பார்த்துக் கொண்டே படுத்து இருந்தாள்.

மேனகா பேசி முடித்து கிளம்பி விட, சந்திரா “வருணி” என்று அழைத்தாள்.

“ம்ம்..”

“தூக்கம் வரலையா?”

“ம்ம்.. டயர்டா இருக்கு. ஆனாலும் தூக்கமே வரல”

“எதாவது பேசிட்டு இருக்கலாமா?”

“என்ன பேசலாம் சொல்லு”

“உன் வருங்கால அவர் பத்தி சொல்லேன்”

சந்திரா கேட்டதும், வருணிகாவின் கண்ணில் காதல் மின்னியது.

“அவர பத்தியா?” என்று கேட்டவளுக்கு வெட்கம் வேறு வந்து விட்டது.

“ம்ம் சொல்லு.. போன்ல பேசிருக்கீங்களா? மெஸஜ் சேட்?”

“ம்ம்.. சேட் பண்ணி இருக்கோம்.”

“பாரேன்.. சொல்லவே இல்ல. கள்ளி.. என்ன பேசுவீங்க? இந்த லவ்வர்ஸ் மாதிரி அப்புறம் அப்புறம்னு மொக்க போட மாட்டீங்களே?”

“ஹேய்.. அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. நிறைய பேசுவோம்”

“அப்படியா?”

“ஏய் நம்புடா.. எங்களுக்கு பிடிச்சது பிடிக்காதது எல்லாமே சேர் பண்ணிக்குவோம்”

“என்ன பிடிக்கும் அவருக்கு?”

இந்த கேள்வி கேட்டதும், வருணிகாவின் முகம் சம்பந்தமில்லாமல் சிவந்தது.

இதே போல் தான், “உங்களுக்கு என்ன பிடிக்கும்?” என்று ஹரிஹரனிடம் கேட்டாள்.

அதற்கு அவனோ, “ஆமா” என்றான்.

“ஆமா வா?”

“ஆமா தான்.”

“எதுக்கு ஆமா?”

“நீ தான கேட்ட? உங்களுக்கு என்னை பிடிக்கும்னு. ஆமா எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்”

“அய்யோ! நான் அந்த என்னை கேட்கல”

“ஆனா உன்னை தான் சொன்னேன்”

அவனது வார்த்தைகள் எல்லாம் காதில் மீண்டும் ஒலிக்க, வெட்கத்தோடு படுத்து இருந்தாள்.

சந்திரா அவளை உலுக்க, “ஹான். .” என்றாள்.

“கனவா?”

“ஹி ஹி” என்று பல்லை காட்டி வைக்க, மீண்டும் மேனகா அறைக்குள் வந்தாள்.

அவசரமாக போர்வையை தலை வரை போர்த்திக் கொண்டு, வருணிகா பம்மி விட்டாள்.

சந்திரா மேனகாவை பார்த்து விட்டு, அமைதியாக கீழே இருந்த பாயில் படுத்துக் கொண்டாள்.

கட்டிலுக்கு மறுபக்கம், இன்னொரு பாயை விரித்து, மேனகாவும் அங்கேயே படுத்து விட, வருணிகா அசையவே இல்லை. பிறகு தூக்கம் தன்னால் வர, நன்றாக தூங்கி விட்டாள்.

அதிகாலையில் வருணிகாவை எழுப்பி, அலங்கரித்து, மண்டபம் அழைத்துச் சென்று, திருமண மேடையில் அமர்த்தி விட்டாள் மேனகா.

இப்போதும் அருகருகே அமர்ந்து கொண்டு, அவ்வப்போது பார்வையால் ரசித்துக் கொண்டிருந்தனர் மணமக்கள். சுபமூகூர்த்த நேரத்தில் தாலி கொடுக்க, அதை வருணிகாவின் கழுத்தில் கட்டினான், ஹரிஹரன்.

திருமணம் முடிந்து, சடங்குகள் முடிந்து, விருந்தினர்கள் பரிசை கொடுத்து வாழ்த்தி விட்டுக் கிளம்பினர்.

வீட்டிற்கு கிளம்ப வேண்டி, நல்ல நேரத்திற்காக இரு குடும்பமும் காத்திருந்தது.

ஹரிஹரன் மணமகன் அறை நோக்கிச் சென்றான்.

மணமகள் அறையைக்கடக்கும் போது, உள்ளே இருந்து யாரோ அழும் குரல் கேட்டது.

அப்படியே நின்று விட்டான்.

“என்ன பண்ண சொல்லுறீங்க? என் ஃப்ரண்ட் அவ. அவ வேணா துரோகியா இருக்கலாம். நான் இருக்க முடியாது”

“….”

“ஆமா.. நான் பைத்தியக்காரி தான். அப்படியே இருந்துட்டுப்போறேன்”

“….”

“உங்க கிட்ட போய் பேசுனேன் பாரு. என் ஃப்ரெண்ட்ட திட்டாதீங்க. போன வைங்க”

அவள் கோபமாக பேசும் குரல் கேட்டதும், மனம் கொள்ளாமல் கதவைத் திறந்து எட்டிப்பார்த்தான்.

அவள் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்ததால், முகம் தெரியவில்லை.

“எக்ஸ்கியூஸ்மீ?”

பட்டென நிமிர்ந்து பார்த்தாள். சந்திரா. அவனுக்கும் அடையாளம் தெரிந்தது.

‘இவள் வருணிகாவின் உயிர் தோழி அல்லவா? எதற்காக இப்படி தனியாக அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாள்?’

யோசனையுடனே அவளை பார்க்க, அவசரமாக கண்ணைத்துடைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

“எனி ப்ராப்ளம்?”

“நோ நோ. ஒன்னும் இல்ல”

“ஓ.. தனியா இருக்காதீங்க. கீழ போங்க” என்றவன், அவள் பதிலை எதிர் பார்க்காமல் சென்று விட்டான்.

சில நிமிடங்கள் கழித்து மீண்டும் கீழே வந்து, வீட்டுக்கு கிளம்பினான்.

காரில் ஏற மனைவியோடு நடந்து கொண்டிருந்தவனின் கண்ணில், சந்திரா பட்டாள்.

இருவரையும் அவள் ஏக்கமாக பார்ப்பது போல் தெரிய, ஹரிஹரன் புருவம் சுருங்கியது.

அவனது பார்வையை கவனித்து விட்டு, அவசரமாக தலையை குனிந்து கொண்டாள் சந்திரா.

விசித்திரமாக அவளை பார்த்து விட்டு, பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

வருணிகா தோழியை அணைத்து விடுவிக்க, “பை.. நல்லா இரு” என்றாள் சந்திரா.

அதுவும் ஹரிஹரனை பார்த்துக் கொண்டே.

“நாம போன்ல பேசலாம். பை” என்று வருணிகாவும் விடை பெற்றாள்.

கார் கிளம்பியது. மறுநாள் தான் மறுவீடு. அதற்கான விருந்து எல்லாம் ஏற்பாடாகி இருக்க, இப்போது மதுரைக்குக் கிளம்பி இருந்தனர்.

கூட்டத்திலிருந்து, மனைவியை தனியாக பிரித்து வந்ததே ஹரிஹரனுக்கு போதுமானதாக இருந்தது. காரை எடுத்ததுமே, மனைவியின் கையைப்பிடித்துக் கொண்டான்.

வருணிகா, தந்தையிடமும், சித்தப்பா சித்தியிடம் விடை பெறும் போது மட்டுமே, கண்ணீர் விட்டிருந்தாள். இப்போது கணவன் கையைப்பிடித்ததும் திரும்பிப் பார்த்தாள்.

கண்ணை துடைத்து விட்டவன், கண்ணால் ஆறுதல் சொல்ல, அவள் முகத்தில் புன்னகை மீண்டது.

இருவரும் தங்களது வாழ்க்கை பயணத்தை அந்த நொடி தொடங்கி இருக்க, சந்திரா வாசலில் நின்று, அந்த கார் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்