நெஞ்சத்தில் தஞ்சமானவளே -11
முத்து கிருஷ்ணன் தனது மகன் என்றும் எம்கே கம்ப்யூட்டர் சென்டரின் புதிய நிர்வாக இயக்குனர் என்றும் முகில் கிருஷ்ணாவை அறிமுகம் செய்து வைக்க அவனும் மிடுக்காக மேடையேறினான்.
“எல்லோருக்கும் வணக்கம்….. நான் தான் நிறுவனரோட பையன் னு எதிர் பார்த்து இருக்க மாட்டீங்க குறிப்பாக நான் வேலை செய்த பிராஞ்ச் சில் உள்ளவங்க…. “என்றவனின் பார்வை ஆரண்யாவிடம் இருந்து விலகவில்லை. அவளது பார்வையோ அவனை குற்றம் சாட்டும் தொனியில் இருந்தது.
தீர்த்தன்யாவுக்கு எந்த வித உணர்வுகளையும் வெளிப்படுத்த இயலவில்லை… ஜீவாவிற்கு ஆச்சரியம் தாண்டவமாடியது.
சிறிது நேரம் பேசி விட்டு முகில் கீழே இறங்க முயற்சி செய்ய முத்துகிருஷ்ணன் அவனே எதிர்பாராத ஒரு விஷயத்தை கூறி அடுத்த அறிமுகத்தை செய்தார்.
என் இளைய மகனுக்கு திருமணம் ஏற்பாடு செய்து இருக்கிறேன் என்பதை இந்த நன்னாளில் கூறிக் கொள்கிறேன் எனது தொழிலின் பங்குதாரருமான நீண்ட நாள் நண்பருமான திரு. விநாயகமூர்த்தி அவர்களின் புதல்வி செல்வி. தனிஷாவை தான் துணையாக தேர்ந்தெடுத்து இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என அவளது புகைப்படம் திரையில் ஒளிர்ந்தது. அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருப்பதால் வர இயலவில்லை. என உரையை முடிக்க கூட்டத்தில் பலத்த கரவொலி எழுந்தது. முகில் அதிர்ச்சியாக தன் தந்தையை பார்த்து கொண்டிருக்க ஆரண்யா எழுந்து சென்றதை அவன் உணரவில்லை. பின்னாலேயே தீர்த்தன்யாவும் ஜீவாவும் சென்று விட்டனர்.
“ஆரு சொல்றதை கேளு மே பீ அவருக்கு இந்த விஷயம் தெரியாமல் கூட இருக்கலாம்… எதுவா இருந்தாலும் முகில் வந்ததும் பேசிக்கலாம்…. ” என்ற தீருவின் பேச்சை ஆமோதித்தான் ஜீவாவும்.
“தன் குடும்பத்தை பத்தி மறைச்சவருக்கு இது தெரியாமல் எப்படி இருக்கும்… சொல்லுடி இன்னைக்கு அவரை நிர்வாக இயக்குனரா அறிவிக்க போறாங்கன்னு தெரியும் இல்ல இப்பவாவது சொல்லி இருக்கலாமே … நேத்து நைட் நம்ம கூட தானே இருந்தாரு… ஏன் சொல்லலை… தன்னை தான் எம்டி ஆக்க போறாங்கன்னு தெரிஞ்சவருக்கு இது தெரியாமல் இருந்திருக்குமா…. எனக்கு பொய் சொல்றது பிடிக்காதுன்னு தெரிஞ்சும் இவ்வளவு பெரிய உண்மையை மறைத்து இருக்காரு…. அதை எல்லாம் விடு…. நான் கிளம்புறேன் நீ வர்றியா இல்லையா…. ??” வார்த்தைகளில் அனல் தெறித்தது.
“ஆரு…. முகில் கிட்ட சொல்லிவிட்டு கிளம்பலாம்…. அவர் சைட் என்ன நடந்தது னு தெரிய வேண்டாமா ?”
“எதுவும் தெரிய வேண்டாம் என்னால இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது… “
“ப்ப்ச் ஆரு பைத்தியம் மாதிரி பேசாத… நாம தனியா வரலை…. லாவண்யா மேடம் கிளம்பும் போது தான் போக முடியும் “என்று தீரு சொல்ல அமைதியாக அமர்ந்து விட்டாள்.
இங்கே முகிலை நகர விடாமல் பிடித்து வைத்து பேசிக் கொண்டிருந்தனர்….. முத்துகிருஷ்ணனும் விநாயகமூர்த்தியும் ….
விழா முடிந்து ஒவ்வொரு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எல்லாம் கிளம்ப லாவண்யாவுடன் முகிலிடம் கூறி விட்டு கிளம்பலாம் என்றார்.
“நீங்க சொல்லிட்டு வாங்க மேடம் நாங்க வெயிட் பண்றோம்…. “என ஆரண்யா இறுக்கமாக அமர்ந்து கொண்டாள்.
“ஜீவாண்ணா இப்ப என்ன செய்றது… முகில் இப்படி செய்வார் னு நானே எதிர் பார்க்கலை…!!”
“ப்ப்ச்… தீரு… அவருக்கே கூட இந்த விஷயம் தெரியாதோ என்னவோ…. அவர் கிட்ட பேசினா தான் எதுவும் உறுதியாக சொல்ல முடியும்…. நேத்து கூட அவர் நல்லா தானே பேசினார்” என்று தானாக மரியாதை கொடுத்து பேசினான்.
எப்படியாவது முகிலிடம் பேசி விட வேண்டும் என்று நினைக்கையில் அவனை விடவில்லை ஒருவரும்.
லாவண்யாவே மேனேஜரிடம் கூறி விட்டு ஆரண்யாவிற்கு முகில் கொடுத்த மொபைலை மேனேஜரிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பினார்..
இங்கே முகில் ஒரு வழியாக அங்கிருந்து வந்தவன் ஆரண்யாவை தேட மேனேஜர் வந்து கைபேசியை கொடுக்க அதிர்வாக அவரை பார்த்தான்.
“இந்தாங்க சார்…. இதை திருச்சி மாவட்ட பிராஞ்சைஸின் உரிமையாளர் லாவண்யா கொடுத்தாங்க….. அவங்க உங்க கிட்ட சொல்லிட்டு கிளம்ப நினைச்சாங்க… ஆனால் நீங்க பிஸியாக இருந்ததால் என் கிட்ட சொல்லிட்டு கிளம்பினாங்க ” என்றதும் ஆரண்யாவின் கோபம் அவனுக்கு புரிந்தது.
உடனே ஜீவாவிற்கு அழைக்க அவனோ தீருவை பார்த்தான்.
“தீரு ,முகில் கால் பண்றாரு !!”என அமைதியாக சொல்ல .,”ஸ்ஸ்ஸ் இரு பேசலாம்” என்று விட்டு .,”மேம் ஒரு காஃபி குடிக்கலாம்…. தலை வலிக்குற மாதிரி இருக்கு….” என தீர்த்தன்யா சொல்ல காரை நிறுத்தி விட்டு காஃபி ஷாப்பிற்குள் செல்ல ஆரண்யா தான் வரவில்லை என்று காரிலேயே அமர்ந்து கொண்டாள்.
“ஜீவாண்ணா சீக்கிரம் கால் பண்ணு “என்று அவசரப் படுத்த அவனும் உடனே கால் செய்தான்.
“ஜீவா… ஜீவா… நான் முகில் ஏன் சொல்லாம கொள்ளாம கிளம்பி போயிட்டீங்க …. என் மேல கோவமா ஆரு எங்க ??”படபடத்தான் முகில்.
“இல்ல சார்…. அது வந்து…!”
“என்ன ஜீவா யார் கிட்டயோ பேசுறது போல பேசுற…. ப்ளீஸ் எப்பவும் போல பேசு….”
“அப்படி எல்லாம் இல்ல நீங்க எவ்வளவு பெரிய ஆளு..!!”
“ப்ப்ச் ஜீவாண்ணா குடு இங்க “என வாங்கிய தீரு… “வாழ்த்துக்கள் ஓனர் சார்… இந்த ட்விஸ்டை நாங்க எதிர்பார்க்கலை சொல்லுங்க இன்னும் என்ன அதிர்ச்சி எல்லாம் எங்களுக்கு வச்சிருக்கீங்க…. ??”
“என்ன தீரா நீயே இப்படி பேசுற…. எனக்கே தெரியாது டா அவங்க அலையன்ஸ் பார்த்தது…. அது என் பிரச்சினை நான் பார்த்துக்கிறேன் இப்ப ஆரு எங்க அவ கிட்ட ஃபோனை குடு நான் பேசனும்…. “
“அவ கோபத்தில் இருக்கா சார் நீங்க பேச முடியாது…. அப்புறமா கோபம் குறைஞ்சதும் பேச வைக்கிறேன்… “
“ரொம்ப கோவப்பட்டாளா…. எல்லாம் என் நேரம்…. சரி அதை விடு நீயாவது “எனும் போதே அவனை யாரோ அழைத்தார்கள்.
“தீரா அம்மா கூப்பிடுறாங்க நான் வைக்கிறேன்..” என்று இணைப்பை துண்டித்து விட்டான்.
ஆரண்யா அழுகையை அடக்கிக் கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக வந்தாள். திருச்சி வரும் வரை அவள் எதுவும் சாப்பிடவும் இல்லை பேசவுமில்லை….
காலையில் வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்… வீட்டிற்கு வந்ததும் வந்த களைப்பில் உறங்கி விட சற்று நேரத்தில் கனகம் இருவரையும் எழுப்பினார்.
“ம்மா…. டயர்டா இருக்கு மா கொஞ்ச நேரம் கழித்து எழுந்துக்கிறோம்… ” என தீரு தூக்கத்தில் புலம்ப.,” ஏய் எழுந்திருச்சு ரெடி ஆகுங்க கொஞ்ச நேரத்தில் எல்லாரும் வந்திடுவாங்க…. ” என சொல்ல .,”யாரு வர்றா யாரா இருந்தாலும் அப்புறம் பார்க்கலாம் இப்ப தூங்க விடு…” என மீண்டும் புரண்டு படுக்க.,” ப்ப்ச்… அப்புறம் தூங்கலாம்… மாப்ள வீட்டுக்காரங்க வந்துட்டாங்க ம்ம்ம்ஹ்ம் சீக்கிரம் ரெடி ஆகுங்க” அவசரப்படுத்தினார் கனகம்.
இருவரும் திடுக்கிட்டு எழுந்து கொள்ள .,”என்னடி முழிக்கிறிங்க நீங்க ஊருக்கு போனப்ப சொன்னது தான் வந்ததும் என்ன சொன்னாலும் கேட்கிறேன் னு தானே சொன்னீங்க அதான் நிச்சயத்தை ஏற்பாடு செஞ்சாச்சு மறுத்து பேசாமல் ரெடி ஆகுங்க…. புடவை, நகை, எல்லாம் அங்க இருக்கு” என்று வெளியே செல்ல முற்பட .,”ஏன் மா மாப்ள யார் என்ன னு கூட தெரியாமல் மேரேஜ் பண்ணிக்கனுமா ??”என தீர்த்தன்யா சீறினாள்.
“ஏய் இந்த சீறுற வேலை எல்லாம் வேண்டாம்….. ஏன் மாப்ள யார் னு சொன்னா அவங்க கிட்ட கல்யாணத்தை நிறுத்த சொல்லிட்டு உங்க அக்காகாரி மாதிரி ஓடிப் போறதுக்கா ஒழுங்கா மரியாதையா ரெடி ஆகுங்க…. இல்ல தாத்தாவை கூப்பிட்டு பேச சொல்லுவேன் “என்றிட இருவரும் சிலையாக அமர்ந்து இருந்தனர்.
தீரு வீட்டு ஃபோனை தெரியாமல் எடுத்து வந்து முகிலுக்கு அழைக்க அதுவோ பிஸி என்றே வந்தது. சரி எப்படியாவது அழைத்திடுவான் விஷயத்தை கூறி விடலாம் வெறும் நிச்சயம் தானே நடைபெற போகிறது என்று சமாதானம் செய்து கொண்டு தயார் ஆனாள்.
தஞ்சாவூரில் இருந்து அகிலாண்டம் ,ராகவ் வீட்டினரை அழைத்து கொண்டு வர நேத்ரனின் பெற்றோரும் வந்திருந்தனர்.
ராகவ் இன்னும் மலேசியாவில் இருந்து வரவில்லை . நேத்ரன் ப்ராஜெக்ட் விஷயமாக பெங்களூர் சென்றிருந்தான்.
“எங்கடி பேத்திக ரெடி ஆகிட்டாங்களா… ” என அகிலாண்டம் அறைக்குள் செல்ல இருவரும் புடவை கட்டி அமர்ந்திருந்தனர்.
“யப்பா யப்பா என் கண்ணே பட்டுடும் போல ராசாத்தியாட்டம் இருக்கீங்க….!! என்று வெளியே அழைத்து வந்தார்.
“எல்லோருக்கும் இந்த காஃபியை கொடுங்க” என காஃபி தட்டை கொடுக்க இருவரும் குனிந்த தலை நிமிராமல் கொடுத்து விட்டு வந்து மீண்டும் அகிலாண்டத்தின் அருகில் நின்று கொண்டனர்.
நகை, சீர் வரிசை பற்றி பேசி முடிவு எடுத்து விட்டு இப்போது தாம்பூலம் மாற்றி கொண்டனர்.
ராகவ் பெற்றோரிடம் தாம்பூலத்தை மாற்றியவர்கள் “ராகவிற்கு ஆரண்யாவை கொடுக்க சம்மதிக்கிறோம் “என்று வரதராஜன் கனகம் தம்பதியும் இளம்பரிதிக்கு கார்த்திகாயினியை கொடுக்க சம்மதிக்கிறோம் என்று ராகவின் பெற்றோர் சண்முகமும் தெய்வானையும் ஒப்புதல் அளித்தனர்.
இப்போது அதிர்வடைவது இளம்பரிதியின் முறையாகிப் போனது. ஏனெனில் அவனுக்கும் இந்த தகவல் புதிது…
பின்னர் நேத்ரனின் பெற்றோரிடம் தாம்பூலத்தை மாற்றி நேத்ரனுக்கு தீர்த்தன்யாவை கொடுக்க சம்மதித்தனர் வரதராஜன் கனகம் தம்பதி.
இன்னும் இரண்டு வாரங்களுக்கு பிறகு இளம்பரிதி ,கார்த்திகாயினி ,திருமணம் முதலிலும் அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்து ராகவ், ஆரண்யவிஷாலினி திருமணமும் வைத்து கொள்ளலாம் என்றும் நேத்ரன் ,தீர்த்தன்யவிசாலினி ,திருமணம் மூன்று மாதங்களுக்கு பிறகு வைத்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தனர்.
இளம்பரிதி ,ஆரண்யா ,தீர்த்தன்யா மூவருக்கும் வசமாக மாட்டிக் கொண்ட உணர்வு…. எதுவும் செய்ய இயலாது தவித்து இருந்தனர்.
கார்த்திகாயினியிடம் பேசி எப்படியாவது திருமணத்தை நிறுத்தும்படி கேட்க வேண்டும்…. அப்போது தான் ஆரண்யாவிற்கும் அவள் விரும்பிய வாழ்வை அமைத்துக் கொடுக்க முடியும் என்று யோசித்தான்.
சென்னையில் இருந்து வந்த பிறகு முகில் யாருக்கும் அழைக்கவில்லை… இவர்கள் அழைத்தாலும் அந்த எண் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது.
ஒரு வாரம் ஆகி விட்டது. ஆரண்யாவிற்கு கோபம் தீரவில்லை. இருப்பினும் மனதின் ஓரத்தில் தன் நிலையை பற்றி கூறி நாலு திட்டாவது வாங்கி இருக்கலாமே… ஆனால் அவன் தன்னை அழைத்து பேச கூட இல்லை…. அப்படி என்றால் அவனும் புதிய உறவுக்கு தயார் ஆகி விட்டானா…. தன்னை மறந்து போனானா அதற்குள் நான் கசந்து விட்டேனா அவனுக்கு…. அதிக பணம் படைத்தவன்…அது தான் அழகும் பணமும் படைத்த பக்கம் சாய்ந்து விட்டானோ அது தான் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லையே …. இப்போது தானும் இப்படி வசமாக கொண்டோமே எப்படி தன் காதலில் வெற்றி பெறப் போகிறோம் என்று வேதனையில் இருந்தாள் .
தனிமை அவளுக்கு எது எதுவோ சொல்லியது…. தீரு அவளுக்கு மேல் பைத்தியமாக இருக்க இனி வேலைக்கு வர மாட்டார்கள் என்று அரங்கநாதன் ஏற்கனவே லாவண்யாவிடம் கூறி விட்டார். ஜீவாவாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை ….முகிலுக்கு அவனும் தொடர்பு கொள்ள அந்த எண் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. திருமண வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.
இளம்பரிதி எப்படியாவது கார்த்திகாயினியை பார்த்து விட வேண்டும் என்று நினைக்கையில் அவளை சந்திக்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை.
மிகவும் சிரமப்பட்டு அவள் போகும் கல்லூரியை கண்டு பிடித்து விட்டான்.
அவன் நண்பன் உதவியால் கார்த்தியிடம் பேச காத்திருக்க அவளும் வந்து சேர்ந்தாள் தோழிகளுடன்.
“டேய் மாப்ள அது தான் கார்த்தி “என அடையாளம் காட்ட .,” அச்சோ இவளாடா கார்த்திகாயினி சுத்தம்…. மச்சான் இவ கிட்ட ஏற்கனவே வம்பு பண்ணி வச்சிருக்கேன் டா சரி அதுவும் நல்லதுக்கு தான்…. அவளே என்னை வேண்டாம் னு ரிஜெக்ட் பண்ணிடுவா… வா பேசலாம் “என்று அழைத்து சென்றான்.
“கார்த்தி…. இவர் உன் கிட்ட பேச வந்திருக்காரு… !!”
“ஏன் அண்ணா… என்ன விஷயமாம்… ??”
“கார்த்தி எனக்கு தான் உன்னை கல்யாணம் பண்ணி வைக்க பேசி இருக்காங்க தெரியுமா ??”என்றதும் அவளது முகம் அதிர்ந்து இருக்க அதிலிருந்தே தெரிந்தது அவளுக்கும் மாப்பிள்ளை யார் என்று சொல்லவில்லை என தெரிந்தது.
“நானே உங்க கிட்ட பேசனும் னு நினைச்சேன்… நல்ல வேளை நீங்களே பார்க்க வந்துட்டீங்க… அந்த காஃபி ஷாப்பில் போய் பேசலாமா… ??”என விறுவிறுவென்று முன்னே நடந்தாள்.
“இவ என்ன இவ்வளவு ஈசியா பேசுறா “என நினைத்து கொண்டு நண்பனை இழுத்து கொண்டு நடந்தான்.
போய் அமர்ந்ததும் பரிதி ஆரம்பித்தான்.” நான் எப்படி டா பேச்சை ஆரம்பிக்கிறதுனு நினைச்சேன்…. பட் நீங்கன்னு தெரிஞ்சதும் எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு… ப்ளீஸ் எதையாவது சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க உங்களுக்கு புண்ணியமா போகும் “என்றான்… பட்டென்று
அவனை அமைதியாக பார்த்தவள்.,” இந்த கல்யாணத்தை ஏன் நிறுத்த சொல்றீங்கனு நான் தெரிஞ்சுக்கலாமா…. ??”என்க
“அது வந்து நான் வேற ஒரு பொண்ணை விரும்புறேன் “என்க அவனது நண்பன் வாயை வைத்து கொண்டு சும்மா இராமல் “அந்த பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சாம் “என்றான்.
“டேய் சும்மா இரு டா என்று விட்டு ப்ளீஸ் அவளை என்னால மறக்க முடியாது “என்றான் அழுத்தமாக.
“நீங்க மறந்து போங்க போகாம இருங்க அது எனக்கு தேவையில்லை…. ஆனால் நான் சொல்றதை கொஞ்சம் கேட்கறீங்களா…. ஹான் அண்ணா ப்ளீஸ் கொஞ்சம் தனியா பேசனுமே நீங்க அங்க உட்கார்ந்து இருக்கீங்களா என நேரடியாக சொல்ல மாப்ள பேசிட்டு வாடா நான் அங்க இருக்கேன் “என்று நகர்ந்தான்.
“நான் சொல்றது உங்களுக்கு சரின்னு படுதோ தவறா படுதோ எனக்கு தெரியாது ஆனால் நான் இதை சொல்றதை தவிர எனக்கு வேறு வழி தெரியலை… தயவு செஞ்சு என்னை கல்யாணம் பண்ணிக்கங்க… “என்றதும் அதிர்ச்சியாக அவளை பார்க்க அவள் தெளிவாக இருந்தாள்.
“என்னங்க சொல்றீங்க… ??”
“ஆமாம் உண்மையை தான் சொல்றேன்…. எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை தான் ஆனால் இந்த கல்யாணத்தை பண்ணிக்க என் அண்ணனுக்காக தான் சம்மதிச்சேன்….அவர் ரொம்ப பாவம்… இந்த ஒரு வருஷமா எங்கேயோ வெளி நாட்டில் இருந்து உழைச்சு என் அப்பா வாங்கின கடனை எல்லாம் இப்ப தான் அடைச்சிருக்கார் இதுல என் அக்கா வேற மாசா மாசம் ஏதாவது காரணம் சொல்லிட்டு பணம் வாங்கிட்டு போறா…. அதனாலேயே டுவெல்ப்த் ல அறுநூறு மார்க்குக்கு ஐநூத்தி இருபது மார்க் வாங்கி இருந்தும் கம்மியா தான் எடுத்திருக்கேன் பொய் சொல்லி பி. எஸ் சி நர்சிங் எடுத்தேன்…. என் அண்ணனை இதுக்கு மேல கஷ்டபட வைக்க விருப்பம் இல்லை… அவர் இதுக்கு மேலயாவது நல்லா இருக்கனும்… என் சைட்ல இருந்து எந்த கஷ்டத்தையும் தரக் கூடாது…. இப்ப பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்கும் போது அதிகம் பவுன் எதிர் பார்க்க மாட்டீங்க… சும்மா சும்மா அம்மா வீட்டுக்கு அனுப்பி அதை வாங்கிட்டு வா இதை வாங்கிட்டு வா னு சொல்ல மாட்டீங்க…. அதனால தான் உங்களை பார்க்காம கூட சம்மதிச்சேன்…. எப்படியும் உங்களுக்கு கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லை…. நான் வேண்டாம் னு மறுத்தாலும் வேற பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க தான் போறாங்க…. அதுக்கு நானே உங்க மனைவியா இருந்துட்டு போறேன்… உங்க கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்க மாட்டேன்… நாளைய பின்ன குழந்தை இல்லை அது இதுன்னு பேசினா கூட என் மேல குறை னு சொல்லி விலகிடுறேன்…. அதுக்குள்ள உங்களுக்கு மனசு மாறி என்னை ஏத்துகிட்டாலும் சரி இல்லை வேறு யாரையாவது பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் சரி…. நம்மளை பத்தி எதுவும் நம்ம வீட்டில் சொல்ல மாட்டேன்…. எனக்கு என் அண்ணன் சந்தோஷமா இருந்தா போதும் “என்றாள்… தீர்க்கமான தெளிவுடன்.
ஒரு நிமிடம் பரிதி அவளது பேச்சில் வியந்து போனான். வயதுக்கு மீறிய பக்குவம் பேச்சு எண்ணம்… இப்படியும் பெண் இருப்பாள் என்று அவன் யோசிக்க கூட இல்லை…. இத்தனை தெளிவாக யோசித்து இருக்கிறாளே…. என நினைத்தவன்… சட்டென்று ஆரண்யா நினைவு வந்து அவளுக்கும் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையே…. இதை எவ்வாறு இவளுக்கு புரிய வைப்பது என்று நினைத்திருக்க நேரடியாக ராகவிடம் பேச வேண்டும் என முடிவெடுத்து .,”சரி இதை பத்தி யோசிக்கிறேன் நீ உன் அண்ணன் வந்ததும் எனக்கு தகவல் சொல்லு சரி கிளம்புறேன்” என்றவன் கையில் ஸ்வீட் பாக்ஸை வாங்கி திணித்து விட்டு தனது கைபேசி எண்ணையும் கொடுத்தவன் பஸ் ஏற்றி விட்டு அதன் பின்னர் தன் நண்பனுடன் சென்றான்.
இங்கே ஆரண்யாவிடம் விஷயத்தை சொல்ல அவளோ “இந்த கலயாணம் நடக்கட்டும் அண்ணா என் தலையெழுத்து இது தான் னு நினைச்சுக்கிறேன்… முகில் என் கிட்ட பேசி இருந்தாலாவது ஒரு நம்பிக்கை எனக்கு இருந்திருக்கும்…. ஆனால் அவரும் பேசலை…. அன்னைக்கு அவருக்கு என்கேஜ்மென்ட் பண்ண போறதா அறிவிச்சாங்க… அவரும் அப்பா அம்மா பேச்சை மீற முடியாமல் அந்த கல்யாணத்தில் ஒத்துகிட்டு இருப்பார் அவர் மேல எனக்கு கோபம் இருக்கு தான் ஆனால் அவர் காதல் மேல நம்பிக்கை இருக்கு… நிச்சயமாக இக்கட்டான சூழ்நிலையில் தான் அவர் இருப்பார் .. நிச்சயம் அவர் என்னை ஏமாத்தலை….” என்றவள் “தாத்தாவோட ஆசையாவது நிறைவேறட்டும்… கூடவே அந்த பொண்ணு கார்த்தியோட ஆசையும் நிறைவேறட்டும்… ஒரு விஷயம் மட்டும் சொல்றேன் அண்ணா…. அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்து அவ விரும்பின படிப்பை படிக்க வை அது போதும் எனக்கு விதிப்படி நடக்கட்டும் “என்று வேலையை பார்க்க சென்றாள்.
தீர்த்தன்யா நிலை தான் அந்தோ பரிதாபம் என்றிருந்நது. ஏனோ நேத்ரன் மீது அவளுக்கு விருப்பமே இல்லை அதை விட அவளுக்கு தன் மாமா வீட்டிற்கு மருமகளாக செல்ல சுத்தமாக விருப்பம் இல்லை ஏனெனில் அவர்கள் குணம் அப்படி !!! ஏதோ தேவலோகத்தில் இருந்து இறங்கி வந்ததை போல பீத்தி கொள்வர் அதனாலேயே அவர்கள் வீட்டிற்கு மருமகளாக செல்ல அவளுக்கு விருப்பம் இல்லை .
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
ராகவ் மலேசியாவில் இருந்து வருவதாக முகிலுக்கு தகவல் தெரிவிக்க நினைக்க அவனது எண் கிடைக்காததால் வேறு வழியின்றி வந்ததும் பேசிக் கொள்ளலாம் என நினைத்தவன் சட்டென்று கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றான்.
அங்கே வேலை பார்க்கும் தன் இன்னொரு நண்பனிடம் முகிலைப் பற்றி கேட்க அவன் நடந்த அனைத்தையும் கூறி முடித்தான்.
“நிஜமாவாடா …..என்னால நம்பவே முடியலைடா…. எவ்வளவு சாதாரணமாக இருந்தான்… அச்சோ இனி அவன் இவன் னு கூட பேச முடியாது…. சரி ஓகே டா அவரை காண்டாக்ட் பண்ண வேற நம்பர் எதுவும் இருக்கா பேசனும்….”
“இல்ல மச்சி நாங்க அவரை ஆண்டு விழாவில் பார்த்தது தான் அதுக்கு அப்புறம் பார்க்கலை அது மட்டுமில்லாமல் அவருக்கு மேரேஜ் வேற பிக்ஸ் பண்ணி இருக்காங்க அதுக்காக கூட பிஸியா இருக்கலாம்…. நாம எப்படி காண்டாக்ட் பண்றது “என்றதும் அதிருப்தியாக நண்பனிடம் பேசி விட்டு தஞ்சாவூர் கிளம்பினான்.
வீட்டிற்கு சென்றதும்… தனக்கு பார்த்த பெண்ணை பற்றி விசாரித்தான்.
“அப்பா இப்பவாவது பொண்ணை பத்தி கேட்டியே… என்ன பையனோ போ…. பொண்ணு வேற யாரும் இல்லை நம்ம அகிலாண்டம் அத்தையோட பேத்தி ஆரண்யா தான்….நம்ம கார்த்தியை அவுக அண்ணனுக்கு தான் கொடுக்கிறோம்…. இரு போட்டோ எடுத்தாரேன் “என ஆரண்யாவின் ஃபோட்டோவை காட்டினார்.
“இவங்கள எனக்கு தெரியும் மா… நான் வேலை பார்த்த கம்ப்யூட்டர் சென்டரில் தான் வேலை பார்த்தாங்க…. பரிதி இவங்க அண்ணன் தானா…. சரி சரி அவனும் நல்ல டைப் தான் மா…. ஆனால் இன்னொரு தங்கச்சி இருக்கே சரியான வாயாடி மா “என்றவன்… “நான் பொண்ணை போய் பார்த்து பேசிட்டு வரவா மா…” என தயங்கினான்.
“இல்ல சாமி கல்யாணம் நெருக்குபாட்டுல வந்திடுச்சு… மாங்கல்யம் எல்லாம் செஞ்சாச்சு இதுக்கு மேற்பட்டு நம்ம சனங்க பொண்ணு மாப்ளையை பேச விட மாட்டாகன்னு தெரியாதா சாமி…. வேணும் னா ஃபோனில் பேசிக்க அது தான் மாப்ள தம்பி உனக்கு சிநேகிதம் னு சொல்ற ….. அப்புறம் முகில் தம்பிக்கு ஒரு பத்திரிக்கை வச்சிடுப்பா… ” என்றார்
“சரிம்மா நான் பேசுறேன் “என்றவன் முகிலை பற்றிய விவரங்கள் கூறியவன் .,”எப்படியாவது அவன் வீட்டு அட்ரஸ் கண்டு பிடித்து அனுப்புறேன் மா “என்றான்.
திருமண நாளும் நெருங்கி வந்து விட முகூர்த்தகால் போடப்பட்டு சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டு பந்தல் போட்டனர். மூன்று நாட்களே திருமணத்திற்கு இருந்த நிலையில் ஆரண்யா தன் நிலையை நொந்தபடியே அறைக்குள் முடங்கி கிடந்தவள் தன் வாழ்வை முடித்துக் கொள்ள நினைக்க நேத்ரன் பிரசன்னலெக்ஷ்மியுடன் வந்திறங்கினான்.
…… தொடரும்.