நெஞ்சத்தில் தஞ்சமானவளே -10
ஆரண்யாவை முகில் சென்னைக்கு வரும் படி அழைப்பு விடுத்திருந்தான்.
வீட்டில் சென்னைக்கு செல்ல வேண்டும் என்று ஆரண்யா கூற அனைவரும் அவளை பார்த்து இருந்தனர்.
“நீ ஆண்டு விழாவுக்கு தான் போறன்னு நாங்க எப்படி நம்புறது ஆரு….. அக்கா தங்கச்சி ரெண்டு பேரையும் நம்புறதுக்கு கஷ்டமா இருக்கு…. நாங்க உங்களுக்கு கொடுத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கீங்க…. எங்க கிட்ட பொய் சொல்லிட்டு ஸ்ரீரங்கம் போயிருக்கீங்க…. நாங்க இதுவரை அதை பத்தி எதுவும் கேட்கலை…. அப்போ நீங்க என்ன செஞ்சிருக்கனும்…. உண்மையை சொல்லி இருக்கனுமா இல்லையா….வேலைக்கு போறிங்கன்னு நம்பி அனுப்பினா…. வெளியே ஊர் சுத்திகிட்டு இரூக்கீங்க…. உங்க அண்ணா பார்த்துட்டு வந்து சொல்றான்… இதுவே வேற யாராவது பார்த்தால் தப்பா நினைக்க மாட்டார்கள்…. பொம்பளை பிள்ளைக அடக்க ஒடுக்கமா இருக்க தெரியாதா… கனகம் பொண்ணுங்க என்ன பண்றாங்க ஏது பண்றாங்கனு பார்க்கறது இல்லை…. இது தான் நீ பிள்ளை வளர்க்கிற லட்சணமா… ??” என அரங்கநாதன் கடிந்து கொண்டார்.
கனகம் ஆரு தீருவை முறைத்து கொண்டிருக்க…. தீருவோ .,”நீ தான் போட்டு கொடுத்தியா டா ??”என்ற ரீதியில் பரிதியை முறைத்தாள்.
“இப்ப கூட சென்னை போறேன்னு சொல்றீங்க இதுவும் உண்மையா இல்லையா னு தெரியலையே…. இப்படி தான் அந்த ஓடுகாலியும் சொல்லிட்டு போனா…. ஆனா போனவ திரும்பி வரலையே….லெட்டர் படிச்சு தானே அவ கல்யாணம் பண்ணிக்க போனான்னு தெரிஞ்சது… அது போல நீங்களும் செஞ்சுட்டா நாங்க விஷம் குடித்து சாகறதை தவிர வேறு வழி இல்லை…. உங்களை பெத்ததுக்கு எங்களுக்கு அவமானமும் அகால மரணமும் தான் மிச்சம் னு நினைச்சுக்கிறோம் “என்றிட
“தாத்தா…. நீங்க போக வேண்டாம் னு சொன்னா நாங்க போகலை…. அதுக்காக எங்களை இப்படி தவறா பேசாதீங்க…. இது எல்லோரும் சேர்ந்து செய்ற பங்ஷன்… அதனால தான் எல்லாரையும் வர சொல்றாங்க….. நீங்க வேணுன்னா லாவண்யா மேடத்துக்கிட்ட கேட்டு விட்டு எங்களை அனுப்புங்க…. நாங்க இப்ப உங்களோட பேத்திகளா போறோம் திரும்பி வரும் போதும் உங்க பேத்திகளா தான் வருவோம்…. அப்படியே நாங்க யாரையாவது விரும்பினாலும் உங்க கிட்ட சொல்லி உங்க சம்மதத்தோட தான் கல்யாணம் பண்ணுவோமே தவிர இப்படி கோழைத் தனமாக ஓட மாட்டோம்…. அப்படி நீங்க ஒத்துக்கலைனா ஒத்துக்கிற வரைக்கும் போராடுவோம்….” என தீர்த்தன்யா அழுத்தமாக கூற ஆரண்யாவோ பயத்தில் உறைந்தாள்.
“அவ்வளவு அவசியமா ஏன் போகனும்… பேசாம வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருங்க ….”என வரதராஜன் சொல்ல .,” சுத்தம்…. இது வேறையா.. வீட்டில் இருந்தா நான் பைத்தியம் பிடித்து குணசீலத்துக்கு இல்ல போயிடுவேன்…” என புலம்பியபடி நின்ற தீர்த்தன்யாவை இன்னும் கனகம் முறைத்து கொண்டிருந்தார்.
“சரி உங்களை அனுப்பி வைக்கிறோம் ஆனால் ஒரு கன்டிஷன்… !!”
அது என்ன என்பது போல பார்க்க… “வேற ஒண்ணுமில்ல வந்ததும் உங்க கல்யாணம் தான்… இதுக்கு சம்மதிச்சா நீங்க போகலாம் இல்லாட்டி வீட்ல இருங்க இன்னும் ஆறு மாசம் கழிச்சு கல்யாணத்தை நடத்திடலாம்… “என்றார் அரங்கநாதன்.
“ம்ம்க்கும் கிடைக்க போறது ஆயுள் தண்டனை அது இப்ப கிடைச்சா என்ன ஆறு மாதம் கழித்து கிடைச்சா என்ன… எல்லாம் ஒண்ணு தான்… “முணுமுணுத்துக் கொண்டாள் தீரா.
“யோசிச்சு முடிவு எடுங்க…. “என அரங்கநாதன் சொல்ல தீர்த்தன்யாவோ .,”தாத்தா நாங்க போயிட்டு வர்றோம் வந்ததும் உங்க எண்ணப்படியே கல்யாணம் நடக்கும்… சரி நாங்க ட்ரெஸ் பேக் பண்றோம்….” என ஆரண்யாவை அழைத்து கொண்டு உள்ளே சென்றாள்.
“இப்ப என்ன டி பண்றது எல்லாம் இந்த பரிதியால வந்தது. ஸ்ரீரங்கத்தில் பார்த்ததை போட்டு குடுத்துட்டான் “என சொல்லிக் கொண்டு இருக்கும் போதே இளம்பரிதி உள்ளே நுழைந்தான்.
“என்ன ரெண்டு பேரும் என்னை திட்டி முடிச்சாச்சா… ??”என்றபடியே கதவை தாழிட்டு விட்டு வந்தமர்ந்தான்.
“ஏன் அண்ணா இப்படி செஞ்சீங்க…. எதுவா இருந்தாலும் எங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாமே…??. ”
“நான் நினைச்சு இருந்தா உங்களை எப்பவோ காட்டி கொடுத்திருக்க முடியும்… என்ன திருட்டு தனமாக சந்திச்சா எனக்கு தெரியாதுன்னு நினைச்சிங்களா …. இல்ல ஃபோன் வச்சு பேசுறது தெரியாதுன்னு நினைச்சிங்களா ….. வீட்டில் நீங்க தேவை இல்லாமல் வெளியே சுத்துறதா மட்டும் தான் சொல்லி இருக்கேன்….. புரிஞ்சு நடந்துக்குங்க …. ஆரு உன் ஆளு கிட்ட பேசி சீக்கிரம் வந்து பொண்ணு கேட்க சொல்லு…. அவங்க நம்ம ஆளுங்களா இல்ல??”
“தெரியாது அண்ணா… அதெல்லாமா கேட்பாங்க… ??”
“கேட்கனும் டா இவங்களை பத்தி தெரிஞ்சும் லவ் பண்றன்னா உனக்கு தைரியம் தான்… நீ மட்டும் தானே இல்ல இந்த வாயாடியும் யாரையாவது லவ் பண்றாளா??”
“நமக்கு எல்லாம் இந்த லவ் செட் ஆகாதே…. நீங்களா பார்த்து யாரையாவது இழுத்து வந்து கட்டி வச்சா தான் உண்டு அப்புறம்…. இவங்க கிட்ட சீர்வரிசை வாங்கிட்டு தான் போற ஐடியாவில் இருக்கேன்… புரிஞ்சுதா…. ??”
“அதானே உன்னை எல்லாம் லவ் பண்ணானா அவன் சாமியாரா இல்ல போகனும்… ” வம்பிழுத்தான் பரிதி.
“அண்ணா…. இப்ப என்ன பண்றது… அதுக்கு ஒரு வழி சொல்லு உன் லவ் தான் புட்டுகிச்சு இவளுக்காவது…. நம்ம வீட்ல சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணி வைப்போம். “
“ஏய் அது எப்படி உனக்கு தெரியும் ??”
“ஆமா பெரிய கம்ப ரகசியம் தெரியாம போறதுக்கு…. அதை விடு அந்த பிள்ளையை கட்டறதுக்கு நீ சிங்கிளாவே இருக்கலாம்…. சரியான பணத்தாசை பிடித்த பேய்ங்க… சரி அதை விடு… எப்படி இந்த மேட்டரை சால்வ் பண்றது… “
“அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல…. ஆரு உன் ஆளை என் ப்ரெண்டு தான் சொல்லி பேசி பார்க்கலாம்… கல்யாணம் முடிஞ்சு உண்மையை சொல்லிக்கலாம்” என்றான்.
“சூப்பர் ஐடியா….” என தீரா சொல்ல.,” என்ன சூப்பர் ஐடியா பொய் சொல்றது தப்பு நான் உண்மையை சொல்லிட்டு கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றவளை முறைத்து விட்டு.,” அப்ப இந்த ஜென்மத்தில் கல்யாணம் நடக்காது நீ பேசாம இரு மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்” என்றாள் தீர்த்தன்யா.
“சரி சரி… அமைதியா இருங்க….. அநேகமாக தஞ்சாவூர் ல பார்த்த மாப்பிள்ளையை தான் தாத்தா ஆருவுக்கு பேசுவார் னு நினைக்கிறேன்… அவன் நல்ல பையன் அவன் கிட்ட நான் பேசுறேன் கண்டிப்பாக இந்த கல்யாணம் வேண்டாம் னு சொல்லிடுவான் அவனுக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம் ஆனா தீரு நீ தான் தப்பிக்க முடியாது…. உனக்கு அந்த நேத்ரன் தான் மாப்ளை…. “
“அய்யோ….. தெய்வமே… அதுக்கு நான் யாரையாவது லவ் பண்ணி ஓடியே போவேன்….”
“ஸோ சாரி சண்டைக்காரி…. உனக்கு வேற வழியே இல்லை… இல்லாட்டி ஒண்ணு பண்ணலாம்…. தஞ்சாவூர் பையனை வேணுன்னா நீ கட்டிக்கிறேன் னு சொல்லி விடலாம்…. நேத்ரனுக்கு அவன் எவ்வளவோ தேவலாம்… “
“அப்படிங்கிற…. சரி பார்ப்போம்… தெரிஞ்சே லூசை கட்டிக்கிறதுக்கு இது எவ்வளவோ பெட்டர் ஆமா ஆள் எப்படி சூப்பரா இருப்பானா ??”
“ஓய் கொழுப்பு தானே ஒரு அண்ணன் கிட்ட பேசுற மாதிரியா பேசுற… போட்டேன் பூசை… வாயாடி….. ” என்றபடி வெளியேறினான் பரிதி.
“யப்பா. ….ஒரு வழியாக பிரச்சினை சால்வ் ஆகிடுச்சு…. இனி உன் ஆளை வந்து பொண்ணு கேட்க வைக்கிறது தான் பாக்கி “என ஆயாசமாக அமர்ந்தாள் தீரா.
“இல்லடி எனக்கென்னவோ பிரச்சினை இதுக்கு மேல தான் ஆரம்பிக்குதோன்னு தோணுது… பார்ப்போம் என்ன நடக்குதுன்னு….. ” என்றவளை குறுகுறுப்புடன் பார்த்து விட்டு .,”நல்லதா நினைச்சு தொலை டி உன் காதலை சேர்த்து வைக்கங்காட்டியும் நான் ஒரு வழி ஆகிடுவேன் போல இருக்குது… “
லாவண்யா மேடம் வந்து அரங்கநாதனிடம் பேசி சென்னைக்கு அழைத்து கொண்டு சென்றார்.
பரிதி தானும் வருவதாக கூற தீர்த்தன்யா வேண்டாம் என்று விட்டு இங்கே நடப்பதை கூறும்படியும் நேத்ரனை திருமணம் செய்து கொள்ள தான் விரும்பவில்லை என்று தாத்தாவிடம் பேசுமாறு கூறினாள்.
“சரி பொழைச்சு போ…. செய்றேன்… நல்ல வேளை நேத்ரன் தப்பிச்சான்…. ” என்றிட போகும் நேரத்திலும் இருவரும் அடிச்சு பிடிச்சு ஓடி விளையாட ஆரம்பித்து விட்டனர்.
“ஏய் கிளம்புற நேரத்தில் அவன் கூட என்னடி வம்பு…. கிளம்பி வாடி” என கனகம் திட்டியதும் தான் இருவரும் அமைதியாகி கிளம்பினர்.
இருவரும் லாவண்யாவுடன் சென்னை கிளம்பினர். முகில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தான் ஆரண்யாவின் வரவிற்காக…
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
செங்கதிரோன் ஓய்வெடுக்க செல்ல நிலாமகள் தனது மென்மையான ஒளியை பரப்ப ஆரண்யவிஷாலினி ,தீர்த்தன்யவிசாலினி ,இருவரும் சென்னை வந்து விட்டனர்.
தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து எம்கே கம்ப்யூட்டர் சென்டரின் ஊழியர்கள் எல்லாம் வந்து கொண்டிருந்தனர்.
அந்த பிரபல ஹோட்டலில் எம்கே கம்ப்யூட்டர் சென்டரின் ஊழியர்களாக இருக்க முகில் வேகமாக வந்தான் ஆரண்யாவை தேடி….
“மேம் எப்படி இருக்கீங்க ??”என லாவண்யாவிடம் விசாரித்தவன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு அவனே அழைத்து சென்றான்.
“தீரா…. கம்ஃபர்டபிளா இரு… அப்புறம் உனக்கு என்ன வேணுமோ ஆர்டர் பண்ணிக்க… சரியா ஆருவுக்கும் சேர்த்து நீயே பண்ணிடு ஜீவா நீங்க என் கூட தங்குறீங்க…. வாங்க போகலாம் இது என் நம்பர் ஏதாவது வேணுன்னா கால் பண்ணுங்க மேம் “என்றவன் ஜீவாவை அழைத்து கொண்டு சென்றவன் மீண்டும் ஆருவிடம் வந்து.,” இந்த ஃபோனை கையில் வச்சுக்க நான் கூப்பிடுவேன் “என கூறி விட்டு சென்றான்.
“என்னவோ இவர் தான் எம்கே கம்ப்யூட்டர் சென்டர் ஓனர் மாதிரி பேசிட்டு போறாரு…. இன்னைக்கு ஆள் கொஞ்சம் கெத்தா தெரியறாரு ஆரு… என்னவோ முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்ப் வேற எரியுது உன்னை பார்த்த சந்தோஷத்தில் இருக்குமோ…. இருக்கும் இருக்கும்” என்று சிரித்தவளை அடித்து விட்டு “சும்மா இரு டி ” நாணத்துடன் உள்ளே சென்றாள்.
அன்று இரவு உணவை பஃபே சிஸ்டத்தில் முடித்து விட்டு அறைக்கு திரும்ப உடனே கால் செய்தான் முகில்.
“ம்ம்ம்ஹ்ம்… சொல்லுங்க முகி!!”
“ரூம் கம்ஃபர்டபிளா இருக்கா …. சாப்பாடு நல்லா இருந்ததா….??”
“ம்ம்ம்ஹ்ம் எல்லாம் நல்லா இருந்தது… சரி உங்க வீட்டில் உள்ளவங்களை பார்க்க கூட்டிட்டு போறீங்களா நான் மேடம் கிட்ட பர்மிஸன் வாங்குறேன்….”
“அவங்களை நாளைக்கே உனக்கு இன்ட்ரோ தரேன்…. இங்க வருவாங்க…. நான் காட்டுறேன் ஓகே…. சரி அந்த காரிடாருக்கு வா ஆரு ப்ளீஸ்…. “
“அது மேம் என்ன சொல்வாங்களோ தெரியலையே… !!”
“ப்ப்ச்… ப்ளீஸ் டி…. பத்து நிமிடத்தில் திருப்பி அனுப்பி வச்சிடுறேன்…. “
“சரி சரி வரேன்…. “
“ஓகே நான் வெயிட் பண்றேன் வா…. “
சற்று நேரத்தில் காஃபி குடித்து வருவதாக தீர்த்தன்யாவுடன் வந்தாள்.
“ஆரு நீ பேசிட்டு கூப்பிடு நான் அந்த பஃபே செக்ஷனுக்கு போயிட்டு வரேன்” என கழன்று கொண்டாள்.
“ஆரு…. ம்ம்ஹ்ம்…. ஆரு….”
“என்ன முகி…. எதுக்கு கூப்பிட்டிங்க??”
“இன்னைக்கு எனக்கு கண்டிப்பாக வேணும்… இப்பவே வேணும்…. “
“என்ன வேணும்… ??”
“ஏன் உனக்கு தெரியாது..??”
“ப்ப்ச்…. போங்க நான் தர மாட்டேன் கல்யாணம் முடிஞ்சு தான் எல்லாம்… நான் போறேன்… “என திரும்பி செல்ல எத்தனிக்க அவளை இழுத்து அணைத்து கொண்டு .,”ம்ம்ஹூம் முடியவே முடியாது நீ இப்ப தந்தா நாளைக்கு உன் மாமனார் மாமியாருக்கு இன்ட்ரோ தருவேன்… இல்லாட்டி இல்ல….”என மிரட்டல் விடுத்தவனை சிரித்து கொண்டே கன்னத்தில் மென்மையாக இதழ் பதித்து .,”இப்போ இது போதும்…. மீதி ஆஃப்டர் மேரேஜ் ஓகே பாய் …. “என்றவளின் கன்னத்தில் பதிலுக்கு முத்தமிட்டு… ” கூடிய விரைவில் உரிமையா உன்னை கேட்காமலேயே தருவேன் இப்ப இது போதும்…. பாய் குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ்…. ” என அனுப்பி வைத்தான்.
மறுநாள் காலையில் இன்னிசை நிகழ்ச்சி ஒருவரை ஒருவர் அறிமுகம் என்று அனைத்தும் நடந்து முடிந்தது.
ஆடல், பாடல், சமையல் போட்டி ,என்று அனைத்தும் நடந்தது .
விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தனர்.
தீர்த்தன்யா ப்ரேக் டான்ஸில் பங்கேற்று வெற்றி பெற ., ஆரண்யா நீண்ட கூந்தல் அழகியாக வெற்றி பெற்றாள்.
ஜீவா சமையலில் அசத்தினான். முதல் பரிசை தட்டிச் சென்றது அவனது அடை பிரதமன்.
முகில் சிரித்துக் கொண்டே அனைத்தையும் ரசித்து கொண்டிருந்தான்.
“நீங்க எதிலையும் கலந்துக்கலையா…. ??”
“ம்ம்ஹூம்…. எனக்கு இதெல்லாம் தெரியாது… பட் நீண்ட கூந்தல் அழகியை ரசிக்க தெரியும் “என்று கண் சிமிட்டி சிரித்தான்.
மதிய உணவு சைனீஸ் நார்த் இந்தியன் உணவுகளும் தென்னிந்திய உணவுகள் என அனைத்தும் இடம் பெற்றிருந்தது.
மாலை நேரம் வந்திட முகில் கிருஷ்ணாவை மட்டும் காணவில்லை… ஆரண்யா அவனை தேடி களைத்தாள்.
“வந்திடுவாரு ஆரு… முக்கியமான வேலை எதுவும் இருக்கும் “என்று சமாதானம் செய்தாள் தீர்த்தன்யா.
அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த வேளையில் எம்கே கம்ப்யூட்டர் சென்டரின் நிறுவனர் திரு. முத்து கிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் வந்திறங்கினார்.
மேனேஜிங் டைரக்டர்ஸ் வரவேற்க புன்னகை முகத்துடனேயே உள் நுழைந்தார். ஐம்பத்து ஐந்து வயது என்று சொல்ல முடியாத அளவிற்கு கம்பீரமான தோற்றத்தில் இருந்தார். அவரது மனைவி கல்யாணி அம்மாள் அத்தனை மங்கள கரமான முகத்துடன் இருந்தார். மகன் மகள் இருவரும் வந்திருந்தனர். பணக்கார களை முகத்தில் தெரிந்தாலும் பகட்டு இல்லாமல் இருந்தனர்.
சற்று நேரத்தில் விழா ஆரம்பிக்க வரவேற்புரை முடித்து குத்து விளக்கேற்றி விழா துவங்கியது.
போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார் முத்து கிருஷ்ணன்.
முத்து கிருஷ்ணனை பேசும்படி அழைக்க அவரும் கம்பீரமாக மைக்கின் முன் வந்து நின்றார். எல்லோரும் ஆவென பார்த்து கொண்டிருந்தனர்.
“வணக்கம் எல்லோரும் எப்படி இருக்கீங்க…. நான் முத்து கிருஷ்ணன்…. ரொம்ப வருஷமா எம்கே கம்ப்யூட்டர் சென்டரில் வேலை பார்க்கிறவங்களுக்கு என்னை தெரிஞ்சு இருக்கும் …. புதுசா வந்தவங்களுக்கு என்னை தெரிய வாய்ப்பு இல்லை…. நானும் உங்களை மாதிரி சாதாரண ஆள் தான்…. நமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்று கொடுக்கிற ஆசிரியர் அவ்வளவு தான் னு வச்சுக்கங்களேன்…. ஆனால் உங்க அளவுக்கு எல்லாம் நான் மெத்த படித்தவன் கிடையாது…. இரண்டு டிகிரி வாங்கி இருக்கேன்…. இன்னும் புதிது புதிதாக கற்றுக் கொண்டிருக்கும் ஒரு மாணவர் னு நினைச்சுக்கங்க… ரொம்ப பிளேடு போடுறேனோ…. “என்றதும் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
“ஓகே நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்…. இந்த முறை என் குடும்பத்தை உங்களுக்கு அறிமுகம் செய்றேன்….என் மகன், மகள் ,என்று பெருமை கொள்ளும் அளவுக்கு என் பசங்க வளர்ந்து விட்டார்கள்…. அதனால அவங்களுக்கும் பொறுப்புகளை தர வேண்டும் அல்லவா அதனால தான் இந்த விழாவும் கூட….”
“எனக்கு கணினி சம்பந்தமான படிப்புகளை சொல்லி தரும் நிறுவனம் மட்டும் அல்ல…. ஆடைகள் விற்பனையகங்களும் உண்டு… அதனுடைய நிர்வாகியாக நேற்று முன்தினம் எனது பெரிய மகன் பொறுப்பேற்று கொண்டான். அங்கிருந்தவங்களுக்கு அவனைக் கண்டு ஒரே ஆச்சரியம்…. ஏனெனில் அவன் அங்கே கடைநிலை ஊழியனாக வேலை செய்தான் யாருக்கும் அங்கே அவன் என் மகன் என்று தெரியாது… தெரியும்படியும் அவன் நடந்து கொள்ளவில்லை. அதே போல தான் இங்கேயும்…. எனது இளைய மகன் இங்கே தான் வேலை பார்க்கிறான் ….இங்கே வேலை பார்க்கும் ஊழியர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து ஒரு சாதரணமாக வாழ்வை வாழ்ந்து இருக்கிறான்… இன்று அவரை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்… “என முத்துகிருஷ்ணன் சொல்ல எல்லோரும் சலசலத்தனர்…. யாராக இருக்கும் என்று…. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே..
தீர்த்தன்யா… ஜீவாவை கிண்டல் செய்து கொண்டிருந்தாள் .
“ஏன் ஜீவாண்ணா ஒரு வேளை அந்த பையன் நீ தானோ ??”
“உனக்கு கொழுப்பா…. அவரு என்ன நிறத்தில் இருக்கார் நான் எந்த கலர் ல இருக்கேன்…. பேசாமல் இரு யார் னு பார்ப்போம்…. இந்த முகிலை வேற காணோம் கம்பெனிக்கு ஆள் இல்லாம போர் அடிக்குது ….”என்றான்.
“நானும் அவரை தான் தேடுறேன் ஆளைக் காணோம் “என பேசிக் கொண்டே கண்களை தவிப்புடன் அலைய விட்டாள் ஆரண்யா.
அதற்குள் அங்கே முத்து கிருஷ்ணன் தனது இளைய மகனின் பெயரை கூறி வரவேற்றார்.
மனமுவந்து நமது புதிய நிர்வாக இயக்குனர் திரு. முகில் கிருஷ்ணா அவர்களை மேடைக்கு வரும்படி அழைக்கிறேன் என்றிட ஆரண்யா தீர்த்தன்யா ஜீவா மூவரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். புன்னகை முகம் மாறாமல் கம்பீரமாக மிடுக்காக நடந்து வந்து மேடையேறினான் முகில் கிருஷ்ணா.
…….. தொடரும்.