நீ வந்து தங்கிய நெஞ்சில்
💖1💖
சிறுமலை! அழகான மலையில் இருக்கும் சிற்றூர். இந்த ஊர் திண்டுக்கல்லிலிருந்து இருபத்தைந்து கிலோமீட்டரிலும், மதுரையிலிருந்து நாற்பது கிலோமீட்டரிலும் அமைந்துள்ள இயற்கைத் தாய் அன்புடன் அரவணைத்த மலைவாழிடம்.
இந்தச் சிறிய மலையில் பதினெட்டு கொண்டைஊசி வளைவுகள் உள்ளன.
உடல் விரைத்துப் போகுமளவு குளிரும் இல்லாமல், சூரியனின் வெப்பமும் தாக்காத, இதமான குளிர் ஆடையையும் தாண்டி, தன் உடலைத் தழுவ, “ஸ்ஸ்ஸ்ஹாஆஆ!” என்று சிலிர்த்தது போனான் ஜிஷ்ணு. (அர்ஜூனரின் மற்றொரு பெயர்.)
ஒவ்வொரு வருஷமும் கோடைவிடுமுறையில் இங்கே வருகிறான்… ஆனால் ஒவ்வொரு முறை வரும்போதும் அவனுக்குப் புதிதாக வருவதுபோல உணர்வைக் கொடுக்கும் ஊர் இது.
அர்ஜுனரு வில்லு
அரிச்சந்திரன் சொல்லு
இவனோட தில்லு பொய்க்காது
எதிரியைக் கொல்லு
இமயத்தை வெல்லு
உனக்கொரு எல்லை கிடையாது
யாரோ யாரிவனோ ஒரு
நீரோ தீயோ யாரரிவார்
ஆலம் வேரிவனோ அதை அசைத்துப் பார்க்க யார் வருவார்…
ஓ….
மொபைல் ஃபோன் ரிங்டோன் ஐ, வழக்கம்போல முழுவதும் கேட்டபிறகே, பச்சை வட்டத்தைத் தொட்டு ஃபோனை காதில் வைத்தான்.
“என்னடா நல்லபடியா போய்ச் சேர்ந்துட்டியா?” ஜிஷ்ணுவின் அம்மா சவிதாவின் குரல்!!
“ஏம்மா! எத்தனை தடவ சொல்றது? ஃபோனை எடுத்ததும், அந்தப் பக்கம் யார் பேசுறாங்கனு தெரிஞ்ச பிறகு பேசுன்னு… ஆமா!… போய்ச் சேர்ந்துட்டியா ன்னா கேட்ப? அப்படின்னா என்ன அர்த்தம்னாவது தெரிஞ்சுதான் கேட்கிறாயாம்மா? ” என்று தன் அம்மாவை கலாய்த்தான் ஜிஷ்ணு.
அதற்குள் ஜிஷ்ணுவின் அப்பா, அவன் அம்மாவிடமிருந்து ஃபோனை வாங்கி,
“ஊருக்குப் போனதும் ஃபோன் பண்ணுனு சொல்லித்தானே அனுப்பினேன்? இந்நேரம் நம் ஓட்டுனர் சோமு வா இருந்தா அப்பவே ஃபோன் பண்ணியிருப்பான். அவனையும் கழட்டி விட்டுட்டுப் போயிட்ட! உன் அண்ணனுக்கு ஃபோன் பண்ணினா, எருமை எடுக்கவே மாட்டேங்கிறான். அவனை நம்பி நீ தனியா போயிருக்க… நான் சொல்றதை யார் கேட்கிறாங்க?” என்று அவர் சலித்து முடியும் வரை காத்திருந்தவன்,
“அப்பா! ரயில் தாமதமாயிடுச்சு… நம்ம அண்ணனும் ரயில்வேஸ்டேசனுக்கு வண்டிய அனுப்பல… நம்ம தோப்பு வீட்டுக்குப் போறதுக்குக் குதிரையும் அனுப்பல… வேற வாடகைக் குதிரை ஏதாவது வருதான்னு காத்திருக்கேன். இதுல உங்களுக்கு எப்படி ஃபோன் பண்ணுவேன்?” என்றான் ஜிஷ்ணு.
“விஷ்ணு ஃபோனையும் எடுக்க மாட்டேன்றான் டா. அவனுக்காகக் காத்திருக்காம நீ வாடகைக் குதிரையில் போ! பாத்து சவாரி பண்ணனும்… பழக்கமில்லாத குதிரை. வேகமாகப் போகக் கூடாது.” என்று கூறிய அப்பாவிடம்,
“நான் ஒன்னும் சின்னப் பையன் இல்லைப்பா… தோப்பு வீட்டுக்குப் போனதும் உங்களுக்குக் கால் பண்றேன். ” என்று கூறி ஃபோனை வைத்து விட்டான்.
வாடகைக் குதிரைக்காக ஜிஷ்ணு காத்திருக்கும் நேரத்தில் தன் குடும்பத்தை நினைத்துப் பார்த்தான்.
அவன் அப்பா ராஜசேகர் சிவில் என்ஜினியர். தரமான கட்டிடங்களைக் கட்டிக் கொடுப்பதில் வல்லவர். அதனால் நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர். மதுரையில் பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி வைத்துத் திறம்பட நடத்துகிறார்.
அம்மா சவிதா! குடும்பத் தலைவி! நல்ல நிர்வாகத் திறமை உள்ளவர். அன்பைக்கூடக் கண்டிப்பதைப் காட்டுபவர். கணவனுக்கு வேலை டென்சன் தவிர, குடும்ப விவகாரங்கள் அனைத்தையும் தன் கையில் வைத்திருப்பவர்.
அண்ணன் விஷ்ணு! படிப்பில் கவனம் இல்லாததால், அரியர்ஸ் இல்லாமல் பிபிஏ முடித்ததே பெரிய சாதனை. படிப்பு முடிந்ததும் அப்பாவுடன் சேர்ந்து கன்ஸ்ட்ரக்ஷன் செய்ய ஆர்வமில்லாததால், சிறுமலை தோப்பை விஷ்ணு கையில் ஒப்படைத்தார் சவிதா!
இரண்டாவது, நம்ம ஹீரோ ஜிஷ்ணு! படிப்பில், விளையாட்டில், ஆடல், பாடல்கள் அனைத்திலும் ஆல்ரவுண்டர். சிறு வயதில் இருந்தே கட்டிட டிசைனில் ஆர்வமிருந்ததால், ஆர்க்கிடெக்ட் டில் மாஸ்டர் டிகிரி படித்துவிட்டு, அப்பாவுடன் வேலையில் இறங்கும் முன், ஆறுமாதம் ஜாலியாக இருக்கலாம் என்று எண்ணி சிறுமலைக்கு வந்திருக்கிறான்.
அடுத்துத் தங்கை! விஷாலினி! பயங்கரச் சேட்டை. அனைவருக்கும் செல்லம்.
இந்தச் சிறுமலை தோப்பு வீடு கூட சவிதாம்மாவின் ஐடியாதான். மலைப்பிரதேசத்தில் இடம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததுமே, கொடைக்கானல், மூணாறு இவை இரண்டைத்தான் ராஜசேகர் தேர்ந்தெடுத்தார். அதெல்லாம் ஜனநெரிசல் அதிகம் என்று அமைதியான இயற்கை அன்னை தாலாட்டும் சிறுமலையைத் தேர்ந்தெடுத்தது சவிதாம்மா தான்.
வருடம் முழுவதும் பணத்தைத் துரத்திக்கொண்டு ஓடும் கணவன் கவலை மறந்து ஓய்வெடும்பதற்காக, சவிதா தேர்ந்தெடுத்து வாங்கிய தோப்பு. தோப்பு என்று கூற முடியாது சிறிய எஸ்டேட் என்று வேண்டுமானால் கூறலாம்.
ஐம்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுற்றிலும் வாழை, காய்கறிகள், பழங்கள், தேயிலை, மற்றும் மூலிகைகள் என்று வஞ்சகமில்லாமல் வளர்ந்து செழிக்கும் பூமி.
அடர்ந்த மலைக்காடுகளுக்கு நடுவில் இவர்களின் எஸ்டேட் இருப்பதால், மெயின் ரோடு வரைதான் காரில் செல்ல முடியும். அதற்குப் பிறகு வரும் காட்டுபகுதியில் குதிரையில் தான் செல்ல வேண்டும்.
அதனால் மெயின்ரோட்டில் ஒரு கார் ஷெட்டும் கட்டி வைத்தார்கள். கார் நிறுத்தி வைக்கும் இடத்திலேயே, எஸ்டேட்க்குச் செல்வதற்காக இரு குதிரைகளும் இருக்கும்.
மதுரையிலிருந்து காரில் வந்து, ஷெட் டில் இருக்கும் குதிரையில் ஏறித்தான் பிருந்தாவனம் என்ற இவர்களின் தோப்புக்குச் செல்ல வேண்டும். பைக்கில் போனால் ஈரமான காட்டுமலைப் பாதை வழுக்கும்.
ஜிஷ்ணுவின் நினைவுகளைக் கலைத்தவாறு வாடகைக் குதிரை வந்து, அதற்கான இடத்தில் நின்றது.
ஜிஷ்ணு குதிரைக்காரன் அருகில் சென்று,
“குதிரை வருமா?” என்று கேட்க,
“நீங்க, பிருந்தாவனம் தோப்பு சின்னவர் தானே?” என்று கேட்டான் குதிரைக்காரன்.
“ஆமா! எனக்குக் குதிரை வேணும். வாடகை தந்துடுறேன். ” என்றான் ஜிஷ்ணு.
“வாடகைக்கு என்ன தம்பி அவசரம்? தாராளமா குதிரையை எடுத்துட்டுப் போங்கதம்பி.” என்றான் குதிரைக்காரன்.
“தோப்பில் நான் இறங்கியதும் குதிரை தானாகத் திரும்பி வந்துடும்ல?” என்று கேட்டான் ஜிஷ்ணு.
“அதெல்லாம் வந்துடும்ங்க. தெரிஞ்ச பாதைதானே”
வாடகை பணத்தைக் கொடுத்து விட்டு, குதிரையில் ஏறிப் பறந்தான்.
“ஐயோ! இவர் என்ன இவ்வளவு வேகமா போறாரு? ” என்று அதிர்ச்சியடைந்த குதிரைக்காரன், ஜிஷ்ணு கொடுத்த பணத்தை எண்ணிப் பார்த்தான்.
குதிரைக்குப் போக, வர சரியான வாடகைப் பணத்தைக் கொடுத்திருந்தான் ஜிஷ்ணு.
“சின்னவர் ல? அதான் கரெக்டா பணம் கொடுத்திருக்கார்! இவர் அம்மா மாதிரி கட் அன் ரைட். ஆனா பெரியவர், அப்பாவி! பத்து ரூபாயாவது அதிகமா கொடுப்பார். பல சமயங்களில், சில்லரை இல்லைனா, மீதியை நீயே வச்சுக்கன்னுவார். அப்படியே அப்பா மாதிரி இளகின மனசு.” என்று தனக்குத் தானே பேசிக்கொண்டே அருகிலிருந்த டீக்கடைக்குப் போனான் குதிரைக்காரன்.
ஈரப்பதமான காற்று, மூலிகை மணம் வீசும் மலைக்காடு. வழிநெடுக கண்ணுக்கும் மனதிற்கும் குளிர்ச்சி தரும் பசுமையான மரம், செடி, கொடிகள்… நண்பகல் வேளையிலும் இரவுக்குத் தயாராகும் மாலை வேளைபோல் இருக்கும் இந்தக் குறுகிய பாதையில் குதிரையில் செல்வதே ஜிஷ்ணுவிற்கு அலாதி இன்பம்.
தோப்பை நெருங்கியதுமே செக்யூரிட்டி, ஜிஷ்ணுவை பார்த்து விட்டுக் கேட் டைத் திறந்து விட,
அரைக் கிலோமீட்டர் தூரம் சென்று, அழகான பகுதியில் எழிலுற அமைந்திருந்த வீட்டு வாசலில் இறங்கிக் கொண்டு குதிரையை அனுப்பி விட்டான்.
வீடு என்று சொல்ல முடியாது. அது ஒரு குட்டி பங்களா.
சமையலுக்குக் கோதையும், மேல் வேலைக்கு அவள் கணவன் முத்துவும் நிரந்தரமாக வேலைக்கு இருந்தனர்.
குடும்பத்தினர் அனைவரும் வரும் சமயம், வேலை செய்யத் துணைக்கு இன்னொரு பெண்ணையும் அழைத்து வந்து விடுவாள் கோதை.
ஹாலுக்கு வந்த ஜிஷ்ணு, மீண்டும் விஷ்ணுவிற்கு ஃபோன் செய்தான். ஆனால் அண்ணன் விஷ்ணு எடுக்க வில்லை.
பிறகு, பெற்றோருக்கு ஃபோன் செய்து, தான் வந்து சேர்ந்த விபரத்தைக் கூறி விட்டு, மாடியில் இருந்த தனது அறைக்குச் சென்று, இதமான சுடுநீரில் குளித்துவிட்டு, மதிய உணவு சாப்பிட்டதும், மாடிக்குச் சென்று படுக்கையில் விழுந்தவன்தான்… இரவு ஏழு மணிக்கு விஷ்ணு, வீட்டிற்கு வந்து மொபைலில் கால் பண்ணவும்தான் எழுந்தான்.
“வா அண்ணா! ஆபீஸிலிருந்து ஏழு மணிக்கெல்லாம் தினமும் வந்துடுவாயா?” என்று ஆச்சரியத்துடன் ஜிஷ்ணு கேட்டதும்,
“இல்லைடா! சாதாரணமா ஒன்பது மணிக்குத் தான் வருவேன். இன்னைக்குப் புதன்கிழமை இல்லையா? அதான், சீக்கிரம் வந்துட்டேன். ஆமா, நீ எப்ப வந்த? எப்படி வந்த?” என்று விஷ்ணு கேட்டான்.
“நேத்து இரவுதான் இங்க வரணும்னு தோணுச்சு, காலையில கிளம்பி வந்துட்டேன். உனக்கு ஃபோன் பண்ணினா நீதான் எடுக்கவே இல்லையே! கார் ஷெட் டின் மாற்று சாவியும் எடுத்து வரல… வாடகைக் குதிரையில் தான் வந்தேன்.” என்றதும்.
“சாரிடா!… இன்னைக்குப் புதன்கிழமைன்றதால ஆறு மணிக்கெல்லாம் வேலையை முடிச்சுட்டு, இருட்டுறதுக்குள்ள காட்டை விட்டு வரணும் ல? அதான் மொபைல் ஃபோனை பார்க்கவே இல்லை! சரி முகம், கை, கால் கழுவிட்டு வா! சாப்பிட்டு விட்டுக் கொஞ்ச நேரம் பேசலாம்.” என்று கூறியபடி விஷ்ணு, தன் அறையை நோக்கி நடக்க,
ஜிஷ்ணுவும் மாடிக்குச் சென்று தயாராகி, கீழே டைனிங் ஹாலில் இருந்த டீவியை ஆன் செய்து அண்ணனுக்காகக் காத்திருந்தான்.
விஷ்ணு அவசரமாகக் குளித்துவிட்டு வருகிறான் என்று பார்க்கும்போது நன்றாகவே தெரிந்தது.
டிபன் பரிமாற வந்த கோதையிடம், “நாங்களே சாப்பிட்டுக் கொள்கிறோம்.” என்று கூறி,
இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறியபடி சாப்பிட்டு முடித்து, வீட்டின் முன்புறத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் தம்பியும், எதிரில் இருந்த நாற்காலியில் அண்ணனும் ரிலாக்ஸ்டாக அமர்ந்தனர்.
“வா ண்ணா! காலாற கொஞ்ச தூரம் நடந்துகிட்டே பேசிட்டு வரலாம்.” என்று ஜிஷ்ணு எழுந்து அண்ணனை அழைத்தும்,
விஷ்ணு எழும்பாமல் திருதிருவென முழித்தபடி, “இன்னைக்கு வேணாம்! நாளைக்குப் போகலாமே?” என்று சற்றுக் கெஞ்சும் தொணியில் கேட்டான்.
“ஏன்? இன்னைக்கு என்ன? வாடா அண்ணா!” என்று மீண்டும் அழைக்க,
“இன்னைக்குத் தான் நீ ஊரிலிருந்து வந்திருக்க… களைப்பாக இருக்கும்… நாளைக்கு நடக்கலாம்.” என்று தவிர்க்கும் விதமாகக் கூறினான்.
“டேய் நான் என்ன எட்டு பத்துமணி நேரம் டிராவல் பண்ணியா வந்திருக்கேன் டயர்ட் ஆக? இங்க இருக்கற மதுரையிலிருந்து தானேடா வந்தேன். அதோட நீ வரும்வரை நல்லா தூங்கியும் எழுந்துட்டேன். எனக்கொன்னும் களைப்பெல்லாம் இல்ல… வா!”
“எனக்குக் களைப்பா இருக்குடா. ப்ளீஸ்! கொடஞ்சு கொடஞ்சு கேள்வி கேட்காம உட்காரு. எனக்குத்தான் கேள்வி கேட்டாலே அலர்ஜியாகிவிடுமே!” என்று விஷ்ணு கெஞ்சவும்,
‘என்னாச்சு இவனுக்கு? ஆளைப் பார்த்தா களைச்சு போன மாதிரி தெரியலையே!’ என்று யோசித்த படியே ஜிஷ்ணு ஊஞ்சலிலேயே அமர்ந்தா
மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.