Loading

“நாம் நினைப்பது எல்லாம் நிஜத்தில்

நடப்பது இல்லை”.

        வலித்தால் தான் அதற்கு பெயர் வலி.

பிரிந்தால் தான் அதற்கு பெயர் பிரிவு.

நான் உன்னோடு இருந்தால் மட்டுமே அது என்னுடைய வாழ்க்கை. நீ இல்லாத ஒவ்வொரு நொடியும் எனக்கு நரகம் தானே! “ஓ”வென்று கதறி அழ உதடுகள் துடித்தாலும் மனது அதற்கு இடம் தரவில்லை அவளுக்கு. எங்கே தன்னுடைய அழுகை அவனையும் பலவீனமாக மாற்றி விடுமோ என்ற நினைப்பே அவளின் மெளன அழுகையின் காரணமாக அமைந்தது. இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருந்தாலும் எங்கே தன்னுடைய இதயம் வெடித்து விடுமோ? என்ற எண்ணம் அவளுக்கு தோன்ற ஆரம்பித்துவிட்டது. இதயத்தில் வலிகள் சேர்ந்து … சேர்ந்து இப்பொழுது வெடிக்கும் நிலைமையில் இருந்தது. ஏதோ ஒரு பாரம் சொல்லமுடியாத நிலைமையில் மூச்சும் விட முடியாத அளவுக்கு முட்டியது . அவளுக்கு உண்மை தெரிந்த அந்த நிமிடத்தில் இருந்து தெரியும் “தன்னுடைய வாழ்க்கை சாதாரணமான வாழ்க்கை முறை இல்லை ” வாழ்க்கை தனக்கு பல வலிகளை பரிசாக அளிக்கப் போகின்றது என்று . மனம் மட்டும் இன்னும் அதற்கு தயாராக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது . தன்னுடைய சிந்தனையை சேர்த்து வைக்க போராடி… போராடி தோற்று கொண்டு இருந்தாள் நுவலி.

            போரில் ஆயிரம் போர் எதிர்த்து நின்றாலும் கலங்காத மனது இன்று நுவலியை விட்டு பிரிய போகின்றோம் என்று நினைக்கும்போதே கலங்கியது உதிரனுக்கு. நாட்டுக்காக போராடும்போது வெற்றி மட்டுமே அவனின் குறிக்கோளாக இருந்தது . அதில் தன்னுடைய உயிர் பிரிந்தாலும் வருத்தபடாத மன உறுதியைக் கொண்டு இருந்தான் .ஆனால் இன்றோ அவளின் அழுகை இவனின் மன உறுதியை சற்று ஆட்டி பார்த்து விட்டது. அவன் ஒரு ராணுவ வீரனாக இருந்தபோதிலும் சரி படை தளபதியாக இருக்கின்ற போதிலும் அவனின் மனவலிமை அதிகம். இன்று இவனின் மனவலிமையை சோதிக்கின்ற விதமாக அவனின் மூளையோ வேலையை ரிசைன் பண்ணிவிடு என்றது .அந்த எண்ணத் தோன்றலில் ஒரு நொடி தன்னுடைய மனதும் உறுதியை உடைத்துவிட்டு இருந்ததை கண்டு கலங்கி தான் போனான் .

“தீயில் மாட்டிக்கொண்டு துடிக்கும் புழுவாய் துடித்துக்கொண்டு இருந்தான்”.

அவனின் எண்ணங்கள் எல்லையை கடந்து போரில் எதிரியை நிராயுதபாணியாக நிற்கும் வீரனைப் போல இப்பொழுது வாழ்க்கையின் நிராயுதபாணியாக இருப்பது போன்று தோன்றியது அவனுக்கு. வேலைக்கு சேர்ந்த அன்றே தெரியும் அவனுக்கு இந்த மாதிரி சூழ்நிலைகள் எல்லாம் கையாள வேண்டிய நிலைக்கு தான் வர கூடும் என்று. ஒருவழியாக தன்னை சமன் செய்துக் கொண்டு தன் மனைவியாரை பார்க்க ” நுவலி தூக்கத்தை எங்கேயோ தொலைத்து விட்டு தேட வழிதெரியாமல் நிற்கும் நிலையில் இருக்கும் மனிதரைப் போல அவளின் முகம் இருந்தது”. அவளின் கண்களில் இருந்து வழியும் கண்ணீரைத் துடைத்தவன் அவளை தன் நெஞ்சின் மீது போட்டுக்கொண்டு , அவளின் முதுகை தட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்தான். இரவு நெடுநேரம் ஆகிய பின்தான் இருவரும் உறங்கி போனார்கள். தீடீரென நடு இரவில் எழுந்தவள் அவனைத் தேட அவன் காணாமல் போயிருந்தான் .வேகமாக கண்ணைத் திறந்து பதறியடித்து எழுந்து பார்க்க தன்னுடைய அருகிலேயே அவன் உறங்கிக் கொண்டு இருந்தான். தூக்கத்தில் இவள் தான் அவனை விட்டு விலகி போய் படுத்து இருந்தாள். வேகமாக அவனின் அருகில் சென்று படுத்துக்கொண்டு அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டு உறங்கி போனாள். 

        காலை சூரியன் உறங்கிக் கொண்டு இருக்கும் காதல் ஜோடியை காண காலையில் சீக்கிரமாகவே வந்துவிட்டார் போலும். 

         கல்யாணம் ஆகியும் இன்னும் சின்ன குழந்தைப் போல பொறுப்பே இல்லாமல் எவ்வளவு நேரம் தான் தூங்குவாளோ? காலையில் சீக்கிரமாக எழுந்து வந்து அம்மாவுக்கு வேலையில் உதவுவோம் என்ற எண்ணம் எல்லாம் கிடையாது. இந்த வீட்டில்தான் இப்படி இருக்காள், மாமியார் வீட்டில் ஆவது நல்லா வேலை செய்யுற பிள்ளையினு பெயர் வாங்கனும் கடவுளே! . வசுமதி தனியாக சமையல் கட்டில் புலம்பிக் கொண்டு இருக்க அந்த நேரத்தில் ரத்னம் திட்டு வாங்கவே பொறந்து இருப்பதுபோல வகமதியிடம் வந்து “ஏன்டி காலையிலே தனியா புலம்பிக் கொண்டு இருக்க ?”

             இவ்வளவு நேரமா உன்னைத்தான் யா தேடிக்கொண்டு இருந்தேன். மணி என்ன ஆச்சுனு பார்த்தியா? நான் என்ன சமையல் செய்ய நேந்து விட்ட ஆடா? சொல்லு யா? நான் மட்டும் தினமும் தனியா இந்த சமையல் கட்டில் கஷ்டப்பட வேண்டும் என்று தலை எழுத்தா? நீ என்னவோ பெரிய நீதிபதி மாதிரி பஞ்சாயத்து பண்றேன் என்ற பெயரில் காலையிலே வீட்டைவிட்டு ஓடி போற சரி நாம கட்டிக்கிட்டது தான் நமக்கு சரியில்லை நாம பெற்றது ஆவது நமக்கு உதவி பண்ணும் என்று நினைத்த என்னுடைய எண்ணத்துல ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டுவிட்டாள் நாம பெத்த மகராசி. மாமியார் வீட்டில் ஆவது போய் மாமியாரை கொடுமை பண்ணாம மாமியாருக்கு கொஞ்சம் வேலை செய்வாளானு தெரியவில்லை?. நான் இப்படி புலம்பிக் கொண்டு இருப்பதற்கு நீ மட்டும்தான் யா காரணம் .

        என்னது நானா ? என்ற ரீதியில் ரத்னம் தன்னுடைய கண்ணை பெரிதாக விரித்து பார்க்க.

          என்ன யா ? அப்படி பார்க்கிற? என்ன காரணம்னு தெரியவில்லையா? .ரத்னம் ஆமாம் என்ற ரீதியில் தன் மனைவியைப் பார்க்க . வசுமதியோ, உன்னை கல்யாணம் பண்ணது தான் நான் செய்த பெரிய தப்பு அதை தான் காரணம்னு சொன்னேன். உன்னை கல்யாணம் பண்ணியதே பெரிய தப்பு இதுல இவளை வேற பெற்றது மிகப்பெரிய தப்பு. நீ இப்படியே ஊரையே கட்டிகிட்டு அழு நான் இன்னும் கொஞ்ச நாட்களில் உன்னை விவாகரத்து பண்றேன் பாரு யா.

        ரத்னம், ஏன்டி இப்படி பேசுற? நீ இல்லாமல் நானும் நுவலியும் என்னப் பண்ணுவோம் அதை யோசித்து பார்த்தியா? நீ இல்லாமல் என்னுடைய இந்த மீதி வாழ்க்கை என்ன ஆகும் என்று தெரியுமா? நீ இல்லாமல் நான் பூஜ்ஜியம் தான் டி.

           இதையெல்லாம் நல்லா பேசு யா. ஆமா எத்தனை சினிமா படம் பார்த்த? இப்படி ஒரே நேரத்தில் இத்தனை வசனங்கள் பேசுற .

        இதெல்லாம் நான் படம் பார்த்து சொன்னது இல்ல டி. இதெல்லாம் என்னுடைய மனசில் இருந்து வந்தது. இந்த மாதிரி உன்கிட்ட பேசவேண்டும்னு நினைப்பேன் ஆனா

           வசுமதி, ஏன் பூனை குறுக்க வந்து விட்டதா? நக்கலாக கேட்டுவிட்டு கேவலமான ஒரு பார்வை பார்த்துவிட்டு ” போயா …. போய் வேலையைப் பாரு” நைட் வேற நம்ம பொண்ணோட முகம் சரியே இல்லை .இதுல நீ வேற வந்து காமெடி பண்ணாதே! நானே அவங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் வரகூடாதுனு கடவுள் கிட்ட வேண்டி கிட்டு இருக்கேன். 

          ரத்னம், தன்னுடைய மனதிற்குள் ‘சிறுக்கி மவ எப்படி பேசுனாலும் நம்மளை ஒரே வார்த்தையில் ஆப் பண்ணிவிட்டு தான் அடுத்த வேலையே பார்க்கிறா . நம்ம வீட்டில் இல்லாத நேரம் எல்லாம் நம்மளை எப்படி திட்டுவதுனே யோசித்துக்கொண்டு இருப்பாளோ ?’ 

         என்ன யா சத்தத்தையே காணோம். நீ கல்லு மாதிரி இப்படி எதுக்கு இங்க நின்றுக்கொண்டு இருக்க ?

         ரத்னம், நான் என்ன யோசித்துக்கொண்டு இருந்தேன் என்றால் நம்ம பிள்ளையோட முகம் நைட் சரியில்லையினு சொன்னாயே அதைப்பற்றி தான் மா . நானும் இரவு அவங்க இருவருடைய முகத்தையும் கவனித்தேன் ” எனக்கு என்ன தோணுதுனா மாப்பிள்ளை இன்னைக்கு மாலை வேலைக்கு போறாரு .அந்த விசயத்தை நினைத்து தான் நம்ம பொண்ணு கவலையா இருக்கானு தோணுது ” உனக்கு என்ன தோணுது மா?.

          இதையே நீங்க இப்பதான் கண்டு பிடித்து இருக்கீங்களா? போய் தோட்டத்தில் இருந்து வாழை இலை கொண்டு வாங்க .

            நம்ம எது சொன்னாலும் இந்த வீட்டில் எடுபடாது போல? சரி நாம போய் வாழை இலையாவது அறுத்து கொண்டு வருவோம் என்று நினைத்துக் கொண்டே தோட்டத்திற்கு சென்றுவிட்டார் ரத்னம்.

          வேகமாக தன்னுடைய சமையலை செய்து முடித்துவிட்டு, சாப்பாட்டை எல்லாம் ஹாலில் கொண்டு வந்து வைத்து விட்டு ரத்னத்திற்கு சாப்பாட்டை பரிமாறிவிட்டு நுவலியின் அறையே அடிக்கடி பார்த்துக்கொண்டு இருந்தார். கதவை போய் தட்டலாம் என்றுப் பார்த்தால் அது சரியாக வராது அவர்களே எப்பொழுது எழுந்து வர வேண்டும் என்று தோணுதோ அப்பொழுதே வரட்டும் என்று நினைத்து தானும் சாப்பாட்டை போட்டுக்கொண்டு சாப்பிட்டு முடித்துவிட்டு தோட்டத்திற்கு சென்றுவிட்டார். ரத்னம் விட்டால் போதும் என்று அவசரமாக உணவை உண்டுவிட்டு வயலை சுற்றிப் பார்த்துவிட்டு வரேன் என்று கூறி சென்றுவிட்டார். 

          முதலில் கண் விழித்த உதிரன் எழ போக அவனை எழ விடாமல் அவனின் சட்டையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு இருந்தாள் நுவலி. அவளின் நெற்றியில் ஒரு முத்தம் வைத்துவிட்டு அவளின் தூக்கம் கலையாதவாறு அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். நேரங்கள் சென்றதே தவிற இருவருக்கும் எழவே விருப்பம் இல்லை.

அவர்கள் இருவரும் எழதானே வேண்டும் , எழுந்து அடுத்த வேலையை பார்க்க தானே வேண்டும். நாம் அமைதியாக இருந்தாலும் காலம் அமைதியாக இருக்காதே! சுழலும் பூமி எப்பொழுதும் தன்னுடைய வேலையை பார்த்துக்கொண்டு தான் இருக்கும் நாம் தான் சுழலாமல் ஒரே இடத்தில் சோம்பேறியாய் வசனம் பேசிக்கொண்டு இருக்கின்றோம் . “வாழ்க்கை வாழ தானே வாழ்ந்து தான் பார்ப்போமே” .

உதிரன் போன் ரிங்காகி சத்தத்தை குடுக்க , அந்த சத்தத்தில் மெதுவாக தூக்கம் கலைந்து தன்னுடைய கண்களை கடினப் பட்டு திறக்க முயன்று கொண்டு இருந்தாள் நுவலி. அவளை ஒரு கையால் தன் நெஞ்சோடு இறுக்க அணைத்துக்கொண்டு மற்றொரு கையால் போனை எடுத்து அட்டன் செய்து ” ஹலோ “

          மச்சா’ என்ன டா பண்ற? இன்னைக்கு நீ வேலைக்கு போற இந்த நண்பனுக்கு பார்ட்டி எதுவும் இல்லையா? அதெப்படி நீ பார்ட்டி குடுக்க முடியாதுனு சொல்லமுடியும் ? நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்க வீட்டில் இருப்பேன் நீ ரெடியா இருடா . உதிரனை பேசவிடாமல் பேசிக்கொண்டே இருந்தான் ராமு.

           உதி, சற்று சத்தமாக நான் என்ன பேசுகின்றேன் என்று காது குடுத்து கேளுடா .நீ மட்டும் பேசிகிட்டே போற எதிர்முனையில் இருக்கிறவங்களுக்கும் பேச டைம் கொடுக்க வேண்டும் .உனக்கு பார்ட்டி தானே வேண்டும் நீ வீட்டுக்கு உனக்கு பெஷலா ரெடி பண்ணி வக்கிறேன். உதிரனின் குரலே சொல்லாமல் சொன்னது அவனது கோபத்தை.

         ராமு, மச்சான் நான் ஏதோ தவறான நேரத்தில் போன் பண்ணிவிட்டேன் என்று நினைக்கின்றேன் நீ உன்னுடைய வேலையை பாரு டா. நான் மாலை வந்து வீட்டில் பார்க்குறேன் .பார்ட்டி ஒன்றும் முக்கியம் இல்ல நண்பன் தான் முக்கியம் அதை எப்போதும் மறக்க மாட்டான் இந்த ராமு .

             வாயை மூடிட்டு போனை வை டா . நீ நேர்ல மட்டும் என் கையில் சிக்கன முதுகெலும்பை உடைத்து விடுவேன் டா.

              ராமு அடுத்த வார்த்தை கேட்பதற்கு இந்த போனே வேண்டாம் என்று அழைப்பை கட் செய்து தூக்கி கட்டிலின் மீது எறிந்து விட்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டான். என்னடா ஒரு பார்ட்டி கேட்டது குத்தமா டா? அதற்கு போய் இந்த கிழி கிழிக்கின்றான். இன்னைக்கு ஏதோ கொஞ்சம் மரியாதையா திட்டி இருக்கான் ‘ ஒரு வேளை தங்கச்சி பக்கத்தில் இருந்து இருக்கும் போல’ தனக்கு தானே பேசிக்கொண்டு இருந்தான்.

            உதி, போனை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, கண்கள் இரண்டையும் திறக்க முடியாமல் கஷ்டப்படும் தன் மனையாளை பார்த்து ஒரு சிறிய புன்னகை செய்துக் கொண்டான். நுவலியை தூக்கி உட்கார வைத்தவன் அவளின் கண்களின் மேல் முத்தம் வைத்து தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். மெதுவாக கண்களை திறந்து அவனைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தினாள். அவளின் கண்களை பார்த்தவனின் மனம் வருந்தி அவ்வருத்தத்தை தன்னுடைய கண்களில் ஏற்றிக் கொண்டான். இரவு நீண்ட நேரம் தூங்காமல் அழுது கொண்டு இருந்ததால் அவளின் கண்கள் தக்காளி பழம் போல சிவந்து காணப்பட்டது. அவளின் கண்களைப் பார்க்க… பார்க்க அவனின் உள்ளே சொல்ல முடியாத அளவுக்கு அதிகமான வேதனைகள் தோன்றியது. அவனின் வேதனை தாங்கிய கண்களைப் பார்த்ததும் பதறிப்போய் ” என்னாச்சு டா மாமா ?”

 அவன் ஒன்றும் இல்லை என தலையை ஆட்ட ,

         நீ என்கிட்டையே மறைக்க பார்க்கிற உன்னை எல்லாம் என்னப் பண்ணலாம் ? சற்று யோசிக்கிற மாதிரி ஆக்சன் பண்ணியவள் அவனிடம் திரும்பி “இன்று முழுவதும் உன்கிட்ட பேச மாட்டேன் ” இதுதான் உனக்கு நான் தர பணிஷ்மெண்ட் .

          தன்னுடைய முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு அவளைப் பார்த்து ஏன்டி இப்படி சொல்ற? நீ சொல்ற மாதிரி ஒரு நாளும் என்கிட்ட பேசமா இருக்க கூடாது புரிந்ததா? ‘ அவளைப் பார்த்து கேட்க. 

         நுவலி, தலையை மட்டும் வலதுபுறமாக ஆட்டிவிட்டு அவன் அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்று அவனின் வாயை பார்த்துக்கொண்டு இருந்தாள். 

          உதி, என்னால் தானே உனக்கு இப்படி எல்லாம் பிரச்சனை வருது. நீ எப்படி எல்லாம் சந்தோசமாக இருக்க வேண்டிய பெண் தெரியுமா? உன்னை என் கூட திருமண பந்தத்தில் இணைத்து உன்னுடைய சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் பறித்து விட்டது போல எனக்கு தோன்றுகிறது. இப்ப கூட பாரு நைட் எல்லாம் சரியா தூங்காமல் அழுது கொண்டே இருந்ததால் கண்ணெல்லாம் எப்படி சிவந்து போய் இருக்கு பாரு’ இதுக்கு நான்தானே காரணம். உன்னை இந்த சூழ்நிலைக்கு ஆளாக்கி விட்டேனே என்ற வருத்தம் தான் அதிகமாக இருக்கிறது. 

          நுவலி, அவனின் கண்களைப் பார்த்து “இப்ப என்ன பண்ணலாம் ?” உன்னால் தானே எனக்கு காயம் வந்தது? அப்ப உன்னால் மட்டும் தான் என்னுடைய காயத்திற்கு மருந்து போட முடியும் டா மாமா . அவனின் நெஞ்சில் சென்று ஒளிந்து கொள்ள , அவனுக்கும் தெரியும் தான் வருந்த கூடாது என்பதற்காகவே அவள் நார்மலாக இருப்பது போன்று பேசுகிறாள் என்று. அவளின் எண்ணத்தை பொய் ஆக்காமல் ” மருந்து என்னனு கண்டுபிடித்து விட்டேன் டி” என்று அவளின் தலையை நிமிர்த்தி அவளின் கண்களின் மேல் மென்மையாக தன்னுடைய இதழை பதிக்க ஆரம்பித்தான். அவளின் கண் எரிச்சலுக்கு அந்த மருந்து தேவையாக இருந்தது அவளுக்கு அந்த நேரத்தில்.

அவர்களின் அன்பு அலைகடல் போல தொடர்ந்து கொண்டு இருக்க வெளியே பலரின் பேச்சு சத்தம் இவர்களின் தனிமையை தொந்தரவு செய்தது. உதிரன் , யாருடா நீங்க எல்லாம் எதுக்கு டா இப்படி வந்து காலையிலே சத்தம் போடுறீங்க? “யோவ் மாமா நீ உன்னுடைய பஞ்சாயத்தை வீட்டு வரைக்கும் கொண்டு வந்து விட்டியா? ” என தனக்குள் திட்டிக்கொண்டே கடிகாரத்தைப் பார்க்க மணி பத்து எனக் காட்டியது .

          என்னமா? எங்க என்ற பேத்தி நாங்க வந்து இவ்வளவு நேரம் ஆகுது இன்னும் வெளியே வரவே இல்லை. எங்க போய் இருக்கா அவ ? ஆமா என்ற பேரனும் எங்க போய் இருக்கான் அவனையும் காணோம்?.

         வசுமதி , என்ன சொல்வது என்று தெரியாமல் திருத்திருவென முழித்துக் கொண்டு இருந்தார்.

        உதி, அச்சச்சோ இது நம்ப பாட்டியோட குரல் ஆச்சே! இவங்க எல்லாரும் காலையிலே கிளம்பி வந்து விட்டாங்க போல? நாம சீக்கிரமா வெளியே போகவில்லை என்றால் இந்த பாட்டி நம்மளை ஒரு வழியாக்கி ஆக்கிவிடும் என்று நினைத்தவன் தன் மனைவியைப் பார்க்க ,” அவளோ இவனைப் பார்த்து தான் சிரித்துக்கொண்டு இருந்தாள் “. அவளின் உதட்டில் தன்னுடைய இதழ் முத்திரையை ஒன்றை பதித்துவிட்டு வேகமாக அறையில் இருந்த குளியல் அறைக்கு சென்றுவிட்டான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்