Loading

வானம் – Epilogue

இரு வருடங்களுக்கு பிறகு…

அந்த தனியார் மருத்துவமனை வளாகமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க அறுவைச் சிகிச்சை அரங்கின் முன் கைகளை பிசைந்த வண்ணம் இங்கும் அங்குமாய் அந்த இடத்தையே அளந்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.

அறுவை சிகிச்சைக்கே மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்க தானும் உடன் வருவதாய் கூற அதனை மறுத்திருந்தாள் அவனின் காதல் மனைவி. “நான் கூட இருந்தா தைரியமா இருக்கும்ல சரயு மா. டாக்டர்ட்ட கேட்கிறேன்” என்றவனை வேண்டாம் என மறுத்திருந்தாள்.

தன்னைவிட அவன் பலவீனமானவன் என்பதை உணர்ந்தவளால் அவளோடு அவன் வர முற்றிலும் மறுத்திருக்க, அவனோ விடாபிடியாய் நின்றான்.

“நீங்க வர வேண்டாம் சித். அப்புறம் உங்களுக்கு தான் வைத்தியம் பார்க்க நேரிடும்” என்க, அவளை முறைத்தவனை, “கவலப்படாம வெளிய இருங்க. கொஞ்ச நேரத்துல வந்துருவேன்” என அவள் அவனுக்கு தைரியமூட்டிருக்க இருந்தும் அவன் மனம் கிடந்து தவித்தது.

சிறிது நேரத்திலே கதவு திறக்கப்பட, “பையன் பிறந்திருக்கான் சார், ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க” என்ற செவிலிப் பெண்ணின் வார்த்தைகளில் தான் சற்றே உயிர் பெற்றான்.

“இன்னும் கொஞ்ச நேரத்துல குழந்தைய காட்டுவாங்க சார்” என்றவர் மீண்டும் அறுவைச்சிகிச்சை அரங்கிற்குள் நுழைந்து விட, கற்பகம்மாளும் ராமமூர்த்தியும் பேரன் பிறந்ததை உற்றார் உறவினர்களிடம் அலைப்பேசியில் அழைத்துக் கூறத் தொடங்கி விட்டனர்.

மனதில் நிம்மதி படர அப்பொழுது தான் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான் சித்தார்த். அவனது நினைவுகளோ பின்நோக்கி நகர்ந்தன.

அவனது கைவளைவில் சுருண்டிருந்தவளிடம், “சரயு மா” என்றழைத்திட, அவனது மார்பில் மேலும் புதைந்தவளின், “ம்” என்ற பதிலும் உள்ளிறங்கி இருந்தது.

“டாக்டர கன்சல்ட் பண்ணலாமா டா” என்றவனின் வார்த்தைகளில் கேள்வியாய் அவனது முகம் நோக்கினாள் அவள்.

எதற்கு என அவள் விழிகள் வினவிட, “இப்பலாம் ரொம்ப ஏக்கமா இருக்கு டா, இன்னொரு பேபி வேணும்னு மனசு அடம் பிடிக்குது சரயு மா” என்றவனின் வார்த்தைகளில் அவள் மௌனமானாள்.

அவளின் மௌனத்தை உணர்ந்தவன், “இப்ப இருக்கிற டெக்னாலஜில இன்னொரு பேபிக்கு சாத்தியக்கூறுகள் இருக்குனு டாக்டர் சொன்னாங்க மா” என்றிட, இது எப்போது என்ற கேள்வியை தாங்கி நின்றது அவளது விழிகள்.

“இன்னிக்கு காலைல டாக்டர்கிட்ட செக்கப்க்கு போய்ட்டு வந்தேன்” என்றிட வேகமாய் அவனிடம் இருந்து பிரிந்து அமர்ந்துக் கொண்டாள் அவள்.

“ஏன் டா” என்றவனிடம், “வேண்டாம் சித்” ஒரே வார்த்தையில் அவள் மறுக்க, “ஏம்மா” என்றவனின் குரல் உள்ளிறங்கி இருந்தது.

“இதழிமாவே நமக்கு போதுமே” என்றவளின் உணர்வுகளை அவனும் புரிந்து கொண்டாலும் அவளோடான அவனது வாழ்க்கையில் ஒரு குழந்தை வேண்டுமென அவனது மனம் தற்போதெல்லாம் ஏங்கத் தொடங்கி இருக்கவே தான் மருத்துவரை அணுகி இருந்தான்.

அவரும் சாதகமாகவே பதிலுரைத்திருக்க தன் மனைவியிடம் தன் விருப்பத்தை தெரிவித்தான். ஆனால் அவளோ உடனே மறுத்துவிட முகம் சோகத்தை தத்தெடுத்துக் கொண்டது.

ஆனால் அவளோ தனது முடிவில் உறுதியாய் இருக்க, மீண்டும் மீண்டுமாய் அவளிடம் மன்றாடி பார்த்திட பலன் என்னவோ சுழியம் தான்.

அடுத்தக்கட்டமாய் இதழிகா மூலம் செயல்படுத்த துவங்கினான். அதில் ஓரளவு வெற்றியும் கண்டான்.

“சரயு மா என்கூட படிக்கிற எல்லாருக்கும் தம்பி பாப்பா இருக்காங்க. எனக்கும் தம்பி பாப்பா வேணும்” என அவள் அடம்பிடிக்க, பெரியவர்களும் விசயம் அறிந்து ஆவலோடு அவளது பதிலை எதிர்பார்க்க அவளோ மீண்டும் மீண்டுமாய் மறுத்துக் கொண்டே இருந்தாள்.

ஆனால் இதழிகாவும் விடாது அடம்பிடிக்க இறுதியாய் கணவனிடத்தில் சரணடைந்து இருந்தாள் சரயு.

“இன்னொரு குழந்தை வந்து நாளைக்கு ஏதோ ஒரு சூழ்நிலைல இதழிமாவ நான் கவனிக்கலனு பேச்சு வந்துட்டா அத என்னால தாங்க முடியாதுங்க” என அவனது மார்பில் புதைந்து அழுதவளை தேற்றியவன், “இங்க பாரு சரயு மா, நம்மளோட ஆசைகள தாண்டி இப்போ இதழிமாவும் ரொம்ப ஆசைப்படறா மா. அவளுக்குனு ஒரு தம்பி பாப்பா வேணும்னு எதிர்பார்க்கிறா. வாய்ப்பு இருக்கும் போது நாம ஏன் முயற்சி செய்து பார்க்கக் கூடாது” என்றிட அரைகுறை மனதோடு தான் அவள் சம்மதித்திருந்தாள்.

அதன்பிறகு Intracytoplasmic sperm injection (ICSI) சிகிச்சையின் மூலம் கருவுற்றவளை குடும்பத்தினர் அனைவரும் தங்களது கண்ணுக்குள் வைத்துப் பாதுகாக்க, இயல்பாய் தாய்மையின் உணர்வுகள் வெளிப்பட துவங்கவும் தனது கர்ப்பகாலத்தை முழு மனதோடு எதிர்கொள்ள துவங்கி இருந்தாள்.

இதில் அதிகம் மகிழ்ந்தது இதழிகா தான். சரயுவின் வீட்டினரும் அடிக்கடி வந்து அவளைப் பார்த்துவிட்டு செல்ல வளைகாப்பிற்கு பிறகும் அவளை தாய்வீடு அனுப்ப மனமற்று தன்னுடனே இருத்திக் கொண்டான் சித்தார்த்.

“தம்பி பாப்பாவ எப்போ ப்பா காட்டுவாங்க” என கண்ணில் ஆவலைத் தேக்கி இதழிகா வினவிட அதில் நிகழ்காலத்திற்கு வந்தவன், “இப்ப காட்டிருவாங்க இதழிமா” என்றிட, அதேநேரம் குழந்தையோடு மருத்துவர் வெளிபட்டார்.

“அப்பா, தம்பி பாப்பா” என இதழிகா கூவிட அவளைத் தூக்கிக் கொண்டவன் மருத்துவரின் அருகே சென்றான்.

வெள்ளை நிற பருத்தி துண்டில் அழகு குவியலாய் வீற்றிருந்த தன் மகவைக் கண்டவனின் விழிகளில் நீர் திரண்டன.

இதழிகாவோ ஆர்வமாய் தனது தம்பியின் பிஞ்சு விரல்களை பற்றிட, அதற்குள் கற்பகம்மாளும் ராமமூர்த்தியும் அவர்கள் அருகே வந்திருந்தனர்.

“அப்பா தம்பி பாப்பாவ நான் தூக்கவா” என ஆர்வத்தோடு வினவிட, அவளின் ஆர்வம் கண்ட மருத்துவரோ, “தம்பி பாப்பாவ தூக்கணும்னு ரொம்ப ஆசையா குட்டிமா” என்றார்.

அவளது தலையோ வேகமாய் ஆமாம் என்றிட, அதில் சித்தார்த்தின் முகம் பார்த்தவர் பின் அங்கிருந்த நாற்காலியில் இதழிகாவை அமர சொல்லிவிட்டு அவளது மடியில் குழந்தையை கிடத்திட, ஆறு வயதே ஆன இதழிகாவோ அவ்வளவு பக்குவமாய் தனது தம்பி பாப்பாவை மடியில் இருத்திக் கொண்டு கொஞ்ச ஆரம்பித்திருந்தாள்.

தனது வேலை முடிந்ததாய் மருத்துவர் சென்றிட மகளின் காலருகே தரையில் அமர்ந்த சித்தார்த்தின் கரங்களோ தனது மகவை ஆசையோடு தடவிப் பார்த்தது.

இதழிகாவோ, “இங்க பாருங்க ப்பா தம்பி அசையறான்” என்றிட, அவளது தலையை வருடி விட்டவனின் கண்களில் இருந்து நீர் திரண்டு கன்னங்களில் வழியாய் குழந்தையின் காலடியில் பட்டுத் தெறித்தது. தனது காலம் முழுமைக்கும் நடக்காது என்று நினைத்திருந்த ஒன்று இன்று உயிர்பெற்று அவன்முன் இருக்கையில் அவன் மனம் முழுவதும் அதற்கு காரணமானவளை இன்னுமின்னும் நேசிக்கத் தொடங்கியது.

அடுத்த சில நிமிடங்களிலே செவிலியர் குழந்தையை வாங்கிச் சென்றார். சில மணி நேரத்திற்கு பின்பே சரயுவும் குழந்தையும் அறைக்கு மாற்றப்பட, அதன்பிறகே இருவரையும் பார்ப்பதற்கு அனுமதித்திருந்தனர்.

மருந்தின் வீரியத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் தலையை ஆதுரமாய் வருடிக் கொடுத்தவன் அவளது பிறைநெற்றியில் இதழ் பதித்தான்.

அதில் அவள் லேசாய் அசைய முற்பட, “சரயு மா” என்றவனின் குரல் அவளது ஆழ்மனதினுள் ஒலித்தது. கடினப்பட்டு தனது விழிகளை அவள் திறக்க முற்பட அவள் அருகே படுக்க வைக்கப் பட்டிருந்த குழந்தையை கையில் ஏந்தியவன், “இங்க பாரு சரயு மா” என மகனை ஆசையாய் அவளிடம் காண்பித்தான்.

ஆனால் அவளோ அவனது முகத்தையே தான் பார்த்திருந்தாள். அவளது பார்வையை உணர்ந்தவன், “என்ன டா” என்றிட, “இப்போ ஹேப்பியா சித்” என்றாள் கண்களில் நீர் பனிக்க.

அவனோ குழந்தையோடு அவளையும் சேர்த்து அணைத்துக் கொண்டவன், “ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சரயு மா” என்றவனின் குரல் தழுதழுத்திருத்தது.

அதேநேரம் கற்பகம்மாளோடு அறையினுள் நுழைந்த இதழிகா, “தம்பி பாப்பா” என்ற கூவலோடு வேகமாய் சரயுவிடம் ஓடிவர, “பார்த்து கியூட்டி” எனப் பதறினாள் சரயு.

குழந்தையை மீண்டும் அவளருகே சித்தார்த் படுக்க வைத்திட அருகே இருந்த நாற்காலி ஒன்றின் மேல் அமர்ந்தவாறே தனது தம்பியை ஆசை தீர கொஞ்சியவள், சரயுவைப் பார்த்து, “தம்பி பாப்பா எப்போ ம்மா என்கூட விளையாட வருவான்?” என்றிட அவளின் அம்மா என்ற அழைப்பில் அங்கிருந்த மூவருமே இதழிகாவை தான் பார்த்தனர்.

அவளோ தம்பி பாப்பாவிலே தான் மூழ்கி இருந்தாள். “இன்னும் கொஞ்சம் நாள்ள உன்கூட விளையாட வந்திருவான் கியூட்டி” என்ற சரயுவின் பதிலில் அவளின் இதழ்களோ, “அப்போ இப்போ என்கூட விளையாட வர மாட்டானா” என்றது சோகமாய்.

“குட்டி தம்பி வளரணும்ல இதழிமா” என சித்தார்த் அவளை சமாதானப்படுத்த முற்பட்டான்.

குழந்தை பிறந்தவுடனே சரயுவின் வீட்டினருக்கு தகவலளித்திருக்க, அடித்துப் பிடித்து ஓடி வந்தாலும் அரைநாள் ஓடியிருக்க, தங்களின் பேரக்குழந்தையை கண்ட மகிழ்வில் அவர்களின் அகமும் புறமும் நிறைந்திருந்தது.

சரயுவின் அருகே சென்று அவளது தலையை வருடி விட்டார் தங்கம்மாள். அவள் எதுவும் பேசாமலே இருக்க, “இப்ப எப்படி மா இருக்கு?” என்றவருக்கு அவளின் “ம்” என்ற பதில் மட்டுமே கிட்டியது.

அதில் அவர் முகம் வாடிட, சுற்றி இருந்தவர்களோ அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்று புரியாமல் தவித்திட, தன் தாயின் மனநிலையை புரிந்தார் போல் குழந்தை வீறிட்டு அழ ஆரம்பித்தது.

“குழந்தை பசிக்கு அழுகுது போல” என்றவாறே கற்பகம்மாள் தன் பேரனைத் தூக்கிக் கொண்டார். அதில் அனைவரும் அறையை விட்டு வெளியேற, மகனின் பசியாற்றிட முனைந்தாள் சரயு.

அவளருகே அமர்ந்திருந்த சித்தார்த், “அத்தைட்ட இப்பவும் பேச மனசு வரலயா சரயு மா” என்றிட, “அண்ணாவோட வாழ்க்கை இப்படி இருக்கும் போது எப்படி என்னால அவங்க கூட சகஜமா பேச முடியும் சித்” என்றவளுக்கு தன் அண்ணனின் வாழ்வை எண்ணி தொண்டை அடைத்தது.

வருடங்கள் கடந்திருந்தாலும் அவன் மனதில் இன்னுமே ரேவதியே நிலைகொண்டிருக்க, திருமணம் என்ற வார்த்தையையே தவிர்த்திருந்தான். சரயுவாலும் அவனை மேற்கொண்டு வற்புறுத்த முடியவில்லை.

அவ்வபோது ஊருக்கு சென்று வந்தாலுமே தாயோடு சீராட மனம் ஒத்துழைக்காததால் அவள் இன்னுமே தங்கம்மாளிடம் இருந்து விலகியே இருந்தாள். முத்துச்சாமி உடன் மட்டும் ஓரிரு வார்த்தைகளில் உரையாடிடுவாள்.

தன் மனைவியின் உணர்வுகளை புரிந்து கொண்டவனாய் மேற்கொண்டு எதுவும் பேச முனையவில்லை.

சில நொடிகளில் குழந்தைக்கு பசி அடங்கியதால் உறக்கத்தினுள் தன்னை நுழைத்துக் கொள்ள, உறங்கும் தன் மகனையே கண்கொட்டாமல் பார்த்தாள் சரயு.

சித்தார்த்தின் மறுவுருவமாய் தன் மடியில் வீற்றிருந்தவனை ஆசைதீர கொஞ்சியவள் தன்னவனின் பார்வையை உணர்ந்து, ‘என்ன’ என புருவம் உயர்த்திட, அவனின் இதழ்கள் குவிந்து அவளை நோக்கி முத்தமொன்றை பறக்க விட்டான்.

அதில் அவளது கன்னங்கள் இரண்டும் சிவந்திட, “தொந்தரவு பண்ணிட்டனோ!” என்ற குரலில் அறைக் கதவை நோக்கினர் இருவரும்.

முகம் முழுக்க புன்னகையோடு நின்றிருந்தாள் சம்யுக்தா. “ஹேய் சம்யு!” என்றவளைக் கண்டுகொள்ளாமல், “குட்டி பையா, அத்தை வந்துருக்கேன் பாருங்க” என குழந்தையை கொஞ்சத் துவங்க இதழ்களில் புன்னகை உறைய தன் தோழியை பார்த்தாள் சரயு.

சில வாரங்களுக்கு முன் தான் திருமணம் ஆனதற்கான அடையாளமாய் அவளது கழுத்தில் மஞ்சள் நாண் குடிகொண்டிருந்தது.

“சாரி சம்யு, மேரேஜ்க்கு வர முடியாத சூழ்நிலை” என சரயு மன்னிப்பு வேண்டிட, அவளோ முறைத்தவாறே, “மொத என் தங்ககுட்டிய ஒழுங்கா பார்க்கிற வழிய பாரு டி” என்றவள், சித்தார்த்திடம் நலம் விசாரித்தாள்.

“மாப்பிள்ளைய கூட்டிட்டு வந்துருக்கலாம்ல மா” என்ற சித்தார்த்திடம், “அவருக்கு கொஞ்சம் வேலை ண்ணா. அதான் என்னை மட்டும் அனுப்பி வச்சாரு” என்றிட தோழிகளுக்கு தனிமை கொடுக்க எண்ணியவன், “ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க வந்தறேன்” என்றவாறே அறையை விட்டு வெளியேறினான்.

தன் தோழியின் கரம் பற்றியவள், “இப்போ தான் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு டி” என்றவள், “ஆனாலும் அந்த வானதி உனக்கு நல்லது தான் பண்ணிருக்கா இல்ல!” என்றவளின் சிரிப்போடு தானும் கலந்துக் கொண்டாள் சரயு.

அப்பொழுது தான் பிரஷாந்தின் ஞாபகம் வந்ததால், “அண்ணா இன்னும் அப்படியே தான் இருக்காங்களா சரயு” என்றாள் சம்யுக்தா சற்று சோகம் இழையோட.

“ம்” என்றவள், “வெளிய தான் இருக்கான் சம்யு, நீ வரும்போது பார்க்கலயா?” என்றாள் சரயு.

“இல்லையே” எனும்போதே பிரஷாந்த் அங்கு வருகை புரிந்திட, தோழிகள் இருவரின் முகத்திலும் சோகம் இழையோட அவனை நோக்கினர்.

அவர்கள் தன்னைப் பற்றி தான் பேசியுள்ளார்கள் என்பதை உணர்ந்தவன், “என் மருமகன் என்ன சொல்றான் குட்டிமா?” என்றவாறே குழந்தையை பார்த்திட, அதற்குள் அவர்கள் இருவரும் தங்கள் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

இதழிகாவோடு சித்தார்த்ம் அங்கே வந்திட, அதன்பின் அவர்களின் கேலிகளோடு அறை முழுவதும் சிரிப்பொலி பரவியது.

சிரித்த முகமாய் மையலோடு தன்னை நோக்கியவனின் பார்வையில் பாவையவள் முகம் சிவந்திட, “அண்ணா இனி நமக்கு இங்க வேல இல்ல, அவங்களே விரட்டி விடறதுக்கு முன்னாடி நாமளே டீசன்ட்டா வெளிய போய்ருவமா!” என பிரஷாந்தை நோக்கி சம்யுக்தா உரைத்திட, அதில் போலியாய் கோபம் கொண்டவள் அவளை அடிக்க கை ஓங்கினாள் சரயு.

“எஸ்கேப் ஆகிரு சம்யு” என்றவாறே அவள் அறையை விட்டு வெளியேறிட அவளின் பின்னே பிரஷாந்த்ம் வெளியேறினான்.

“சும்மாவே இருக்க மாட்டீங்களா, பாருங்க அவ எப்படி கிண்டல் பண்ணிட்டு போறானு” என சிணுங்கியவளிடம், “நான் சும்மா தான இருந்தேன் சரயு மா” என குழைந்திட,

“பிள்ளைங்க முன்னாடி என்ன பேச்சு இது!” என கண்டிப்போடு வந்தன வார்த்தைகள். அவனோ, ‘அங்கே பார்’ என கண்ணைக் காட்ட, இதழிகாவோ இவர்களைக் கண்டு கொள்ளாமல் தன் தம்பியை கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

அதில் மனம் நிறைவளாய் தன்னவனை நோக்கிட, அவனது அகமும் புறமும் மலர்ந்து மீண்டும் மையலாய் அவளை ஏறிட்டான்.

அவர்களின் காதல் வாழ்வு முழுமைக்கும் தொடர்ந்திட நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்.

முற்றும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்