Loading

கணவனின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது மீரா பார்வையைத் திருப்ப, “அன்னைக்கு நைட் நான் ஏன் அப்படி நடந்துக்கிட்டேன்? போதைல ஒரு பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்கும் அளவுக்கு நான் பலவீனமானவனா? அந்தப் பொண்ணு எதுக்கு என் கூட இருந்தா? எனக்கு நினைவு இல்லன்னாலும் அந்தப் பொண்ணுக்கு என்னை நினைவு இருக்கு தானே. அப்புறம் ஏன் இத்தனை மாசமா அதைப்பத்தி யாருக்குமே தெரிய வரல? இப்படி ஆயிரம் கேள்விகள் இந்த ஒரு வருஷமா என்னைப் போட்டு வாட்டுச்சு. ஆனா இது எல்லாத்துக்கும் பதில் தெரிஞ்சும் நீ என் கிட்ட அதை மறைச்சிருக்க.” என்றான் ரன்வீர்.

 

மீராவின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாதது அவனுக்கு வசதியாகப் போயிற்று.

 

மீரா கலங்கிய கண்களுடன் அமைதியாக நின்றிருக்க, அவளை சுவரோடு சாய்த்து அவள் மீது சாய்ந்து நின்ற ரன்வீர் மீராவின் தாடையைப் பற்றி தன் முகம் காண வைத்தான்.

 

அப்போதும் கூட மீராவின் பார்வை தரை நோக்கியே காணப்பட்டது.

 

“அந்த ஒரு ராத்திரியால இவ்வளவு நாளா நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன்னு தெரியுமா? இந்த மச்சத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அந்த முகம் தெரியாத பொண்ணோட நினைவு தான் வரும். அந்த நேரம் எல்லாம் கோவம் அதிகமாகி நிறைய தடவை உன்னை வார்த்தையாலயே கொன்னிருக்கேன். முதல் தடவை உன்னை நெருங்கினது கூட அதனால தான். ஏன் தெரியுமா? ஒவ்வொரு தடவையும் உன் கூட இருக்கும் போது ஏதோ ஒரு கட்டத்துல அந்த நாளோட நினைவு வரும். ஆரம்பத்துல உன் மேல வெறுப்பா இருந்த நேரம் அந்தப் பொண்ணோட வார்த்தைகள் எனக்கு ஒரு வித்தியாசமான உணர்வைத் தரும். ஆனா உன்னோட முழு மனசோட சேர்ந்ததுக்கு அப்புறம் அந்தப் பொண்ணோட நினைவுகள் வரும் போது நெருப்பு மேல நிற்கிறது போல இருக்கும். என்னை நினைச்சாலே எனக்கு அசிங்கமா இருக்கும். அவ நினைப்போட உன்னைத் தொடவும் முடியாம அந்த நினைப்பை ஒதுக்கவும் முடியாம தவிச்சிருக்கேன். அதனால தான் பல தடவை சொல்லாமக் கொள்ளாம உன்ன விட்டு விலகி போய் இருக்கேன். கட்டின பொண்டாட்டி பக்கத்துல இருக்கும் போது வேற பொண்ணோட இருந்தத நினைக்கும் அளவுக்கு நான் கேவலமானவனான்னு என்னை நானே காரித் துப்புவேன். ஆனா நீ மட்டும் உண்மைய அப்போவே சொல்லி இருந்தா நான் இந்தளவுக்கு கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லையே. சொல்லு மீரா… ஏன் இவ்வளவு பெரிய உண்மைய மறைச்ச? சொல்லு.” எனக் கோபமாகக் கத்தினான் ரன்வீர்.

 

மறு நொடியே ரன்வீரை வேகமாகத் தள்ளி விட்ட மீராவோ, “சொல்லு சொல்லுன்னா என்ன சொல்றது? எப்படி சொல்றது? எந்த நம்பிக்கைல சொல்றது?” என ரன்வீரையும் விட பல மடங்கு கோபத்தில் பதிலுக்குக் கத்தினாள் மீரா.

 

“நான்‌ உன் புருஷன் மீரா. என் கூட இருந்ததை சொல்றதுல என்ன தயக்கம் உனக்கு?” என இம்முறை அமைதியாகவே கேட்டான் ரன்வீர்.

 

“புருஷனா?” என இளக்காரமாகக் கேட்ட மீரா, “நீங்க எப்பங்க எனக்கு புருஷனா நடந்து இருக்கீங்க? ஓஹ்… இதை சொல்றீங்களா?” எனக் கட்டிலைச் சுட்டிக் காட்டி நக்கலாகக் கேட்டாள்.

 

“இதைத் தவிர வேற எதுக்காக நீங்க என்னை நெருங்கி இருக்கீங்க? உங்க தேவை வெறும் உடலளவு தான். ஆனா எனக்கு அப்படி இல்ல. ஒரு மனைவிக்கு புருஷன் கிட்ட இருந்து கிடைக்க வேண்டிய உரிமை இதுன்னு நினைச்சீங்களா? உடல் தேவை மட்டுமா இருந்தா அதை நிறைவேத்த புருஷனா இருக்க வேண்டிய அவசியம் இல்ல. ஆம்பளையா இருந்தாலே போதும்.” என்றாள் மீரா அழுத்தமாக.

 

ரன்வீர் அவளை வெறித்துப் பார்க்க, “என் உடல் தேவைய தீர்த்த நீங்க அதுக்குள்ள இருந்த மனச பார்க்க தவறிட்டீங்க. சொல்லு சொல்லுன்னா எப்படி சொல்றது? எந்த நம்பிக்கைல சொல்றது? நான் மட்டும் நமக்கு கல்யாணம் முடிஞ்சதுமே இந்த உண்மைய சொல்லி இருந்தா நீங்க என்னை அப்படியே கைல தூக்கி வெச்சி கொஞ்சி இருக்கவா போறீங்க? பணத்துக்காக உங்க கூட இருந்தேன்னு தானே பழியைப் போட்டு இருப்பீங்க. எங்க இல்லன்னு சொல்லுங்க பார்ப்போம்.” என மீரா கேட்கவும் ரன்வீரிடம் பதில் இல்லை. 

 

அவன் ஆரம்பத்தில் அப்படித் தானே எண்ணிக் கொண்டிருந்தான்.

 

“கல்யாணம் முடிஞ்ச முதல் நாளே என்னைப் பார்த்து அப்படி சொன்னவர் தானே நீங்க.” என்ற மீரா சில நொடி அமைதிக்குப் பின், “அன்னைக்கு நாம ரெண்டு பேருமே போதைல தான் இருந்தோம். ஆனா உங்களுக்கு நான் உங்க உணர்ச்சிகளுக்கு வடிகாலா தான் இருந்தேன். ஆனா எனக்கு அப்படி இல்ல. போதைலன்னாலும் மனசு முழுக்க உங்க மேல காதல் இருந்ததனால தான் என்னையே உங்க கிட்ட ஒப்படைச்சேன். போதைல எவன் தொடுகைக்கும் மயங்குற அளவுக்கு கேவலமானவள் இல்ல நான்.” என்றாள் மீரா வலியுடன்.

 

அவளின் முகத்தைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்ட மீரா, “நானும் உன்ன காதலிக்கிறேன் மீரா. முழு மனசா காதலிக்கிறேன்.” என்றான் ரன்வீர் கண்கள் கலங்க.

 

அதனைக் கேட்டு ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல் சிரித்த மீரா, “உங்களுக்கு என் மேல காதலா? எப்படிங்க நம்புறது? நான் தான் உங்களுக்கு எந்த விதத்திலயும் பொருத்தம் இல்லையே.” என்ற மீரா இருவரின் கரங்களையும் பிணைத்துக் காட்டி, “இதோ… எவ்வளவு வித்தியாசம் பாருங்க. உங்க வருங்கால மனைவி கிட்ட நீங்க எதிர்ப்பார்த்த அழகோ, அறிவோ, நாகரீகமோ எதுவுமே என் கிட்ட இல்ல. பின்ன எப்படிங்க இந்தப் பட்டிக்காடு மேல உங்களுக்கு காதல் வரும்?” எனக் கேட்டாள் மீரா நக்கலாக.

 

“ஐயோ மீரா… தப்பு தான். நான் பேசின எல்லாமே தப்பு தான். உண்மையான அழகு வெளித் தோற்றத்துல இல்லன்னு எனக்கு இப்போ ரொம்ப நல்லாவே புரியுது. இந்த நிமிஷம் நான் உன்ன உனக்காகக் காதலிக்கிறேன். புரிஞ்சுக்கோ டி.” என்ற ரன்வீர் அவளின் முகத்தைக் கரங்களில் ஏந்தி இருவரின் நெற்றி முட்டி கெஞ்சலாகக் கூறினான்.

 

கசந்த புன்னகையுடன் அவனை விட்டு விலகிய மீரா, “அன்னைக்கு எனக்கு நினைவு திரும்பினதும் தப்பு பண்ணிட்டோமேன்னு நான் வருந்தவே இல்ல. என் மனசுல பூட்டிக் கிடந்த மொத்தக் காதலுக்காகவும் என்னையே உங்களுக்கு தந்துட்டேன்னு தான் நினைச்சிக்கிட்டேன். அப்பா சின்ன வயசுல இருந்தே உங்க குடும்பத்த பத்தி சொல்லித் தான் என்னை வளர்த்தார். அப்போவே முகம் கூட தெரியாத உங்க மேல நம்ம முறைப் பையன்னு எனக்குள்ள ஒரு ஆத்மார்த்தமான அன்பு இருந்தது. டீவில உங்கள முதல் தடவை பார்த்ததுமே அந்த அன்பு காதலா மாறிடுச்சு. அதனால தான் அன்னைக்கு நைட் அப்படி ஒரு நிலைமைல உங்கள பார்த்த அப்புறம் கூட எனக்கு உங்க கூட இருந்தது தப்பா தோணல. ஆனா அன்னைக்கு கூட நீங்க வார்த்தைக்கு வார்த்தை சனா சனான்னு சொல்லி என்னை உயிரோட கொன்னுட்டீங்க. வேற ஒரு பொண்ணுன்னு நினைச்சிட்டு நம்மள தொட்டுட்டாரேன்னு எவ்வளவு மனசுடைஞ்சி போனேன்னு எனக்குத் தான் தெரியும். உங்கள கல்யாணம் பண்ணணும்னு நான் ஒரு தடவை கூட நினைச்சது இல்ல. ஏனா நீங்க அவ்வளவு பெரிய நடிகர். நானோ படிக்காத பட்டிக்காடு. உங்களுக்கும் எனக்கும் ஏணி வெச்சாலும் எட்டாதுன்னு தெரிஞ்சு நான் அப்படி ஒரு‌ ஆசைய எனக்குள்ள வளர்த்துக்கல. ஆனா அந்த நைட்டுக்கு அப்புறம் உங்கள கல்யாணம் பண்ணலன்னாலும் பரவால்ல. ஆனா நீங்க தொட்ட உடம்ப வேற யாருமே தொடக் கூடாதுன்னு கல்யாணமே வேண்டாம்னு முடிவு பண்ணேன். உங்கள ஒவ்வொரு நடிகை கூடவும் சேர்த்து வெச்சி நியூஸ் வரப்பவும் மனசுக்குள்ள துடிச்சுப் போவேன்.

 

நானே எதிர்ப்பார்க்காம தான் உங்க சம்பந்தம் வந்தது. அப்போ கூட நான் இந்தக் கல்யாணம் நடக்கும்னு எதிர்ப்பார்க்கல. எப்படியும் நீங்க மறுத்துடுவீங்கன்னு நம்பிட்டு இருந்தேன். அதனால தான் நான் எதுவுமே பண்ணல. ஆனா உங்க சம்மதம் கிடைச்சதும் எங்க அப்பா அம்மா முகத்துல இருந்த சந்தோஷத்துக்கு அளவே இல்ல. ஒரு பொண்ணா நான் எப்படி அதைக் கெடுப்பேன். சரி நடக்குறது நடக்கட்டும்னு எல்லாத்தையும் அதன் போக்குவ விட்டேன். ஆனா அடி மனசுல உறுத்திட்டே இருந்துச்சு நீங்க எப்படி என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சீங்கன்னு. அதைப் பத்தி யோசிச்சு யோசிச்சு இருந்ததுல இந்தக் கல்யாணத்த என்னால சந்தோஷமா அனுபவிக்க முடியல. ஆனா நான் நினைச்ச மாதிரியே நீங்க விருப்பம் இல்லாம தான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருந்தீங்க. நிச்சயதார்த்தம் அன்னைக்கு நைட் நீங்க அத்தை கூட சண்டை போட்டுட்டு இருந்ததைக் கேட்டேன் நான். திரும்பவும் அதே சனா. அன்னைக்கு உங்க முகத்துல இருந்த வெறுப்ப பார்த்ததும் எனக்கு ஏன்டா பிறந்தோம்னே தோண ஆரம்பிச்சது.” என்றாள் கண்ணீருடன்.

 

ரன்வீரும் கண்ணீருடன் அவள் பக்கக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

 

“ஒவ்வொரு முறையும் நீங்க உங்க வார்த்தைகளாலும் செயலாலயும் என்னை வதைக்கும் போதும் எல்லாத்தையும் பொறுத்துப் போனது நான் உங்க மேல வெச்ச காதலால மட்டும் தான். என் காதல் உங்கள மாத்தும்னு நம்பினேன். ஆனா நீங்க என்னை முதுகெலும்பு இல்லாதவளா நினைச்சிருப்பீங்க. அப்படி இல்ல. எல்லாத்துக்கும் காரணம் நான் உங்க மேல வெச்ச காதல் தான். காதல் ரொம்ப பொல்லாததுங்க. சிலருக்கு அந்தக் காதல் பலத்தைக் கொடுக்கும். சிலருக்கு பலவீனத்தைக் கொடுக்கும். நான் ரெண்டாம் வகை. இந்தக் கட்டாயக் கல்யாணம் உங்களுக்கு எந்தளவு அழுத்தத்தைத் தரதுன்னு என்னால உணர முடிஞ்சது. அதனால தான் முதல் தடவை உங்க கோபத்துக்கு வடிகாலா என்னைத் தொட்டப் போது நான் உங்களோட எல்லா செய்கைக்கும் வழி விட்டு நின்னேன். அடுத்த நாள் டீவில சனா கூட உங்கள சேர்த்து வெச்சி நியூஸ் வரவும் அப்போ இன்னுமே இவர் அந்தப் பொண்ண நினைச்சி தான் என்னைத் தொடுறாரோன்னு நினைச்சி மனசளவுல செத்துட்டேன். நான் ஒரு பைத்தியக்காரி. இவ்வளவு நடந்தும் உங்களோட சின்னத் தொடுகைல எல்லாமே மறந்து உங்க கிட்ட மயங்கிடுறேன். அப்போ எல்லாம் எனக்கு என் மேலயே கோவம் வரும். ஆனா அதுக்கப்புறம் தினமும் நீங்க அதுக்காக மட்டும் என்னை நெருங்கும் போது ரொம்பவே வலிக்கும். ஒரு கட்டத்துல எனக்குள்ள இருந்த எதிர்ப்பார்ப்புகள் எல்லாமே போயிடுச்சு. நீங்க மாறிடுவீங்கன்னு எனக்கு இருந்த நம்பிக்கை போயிடுச்சு. அந்த நேரம் தான் நான் வயித்துல கருவும் தரிக்கலயேன்னு ரொம்ப மனசொடஞ்சி போய்ட்டேன். ஆனா அதை யார் கிட்ட வெளிப்படுத்த முடியும்? எப்பவும் போல எனக்குள்ளயே பூட்டிக்கிட்டேன். எவ்வளவு தான் அத்தை நல்லா என்னைப் பார்த்துக்கிட்டாலும் உங்களோட அன்புக்கும் அரவணைப்புக்கும் நிறைய தடவை ஏங்கி இருக்கேன். கொஞ்சம் நாள் போகவும் நீங்க கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வந்தீங்க. முன்ன மாதிரி என்னைத் திட்ட மாட்டீங்க. ஒரு மனைவியா உங்களுக்கு பணிவிடை செய்ய விடுவீங்க. அதெல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். அந்த நேரத்துல தான் டாக்டர் கிட்ட நீங்க என்னைக் கூட்டிப் போய் செக் பண்ணீங்க. ஏற்கனவே உங்களுக்குப் பொருத்தம் இல்லையேன்னு தாழ்வு மனப்பான்மைல இருந்த எனக்கு ஆரோக்கியமா ஒரு குழந்தைய கூட பெத்துத் தர முடியலயேன்னு ரொம்ப வருத்தமா இருக்கும். அப்புறம் உங்க விலகல். அந்த நேரத்துல தான் ராத்திரி முழுக்க வீட்டுக்கு வராம இருந்துட்டு காலைல கன்னத்துல லிப்ஸ்டிக் கறையோட வந்தீங்க. நானும் எவ்வளோன்னு தான்ங்க தாங்குவேன். அப்புறம்… அப்புறம்… அன்னைக்கு நைட்…” எனத் திக்கித் திணறியவளுக்கு அன்றைய இரவை நினைத்து இன்றும் மனம் வெதும்பியது.

 

எந்த ஒரு மனைவியும் பார்க்கக் கூடாத, கேட்கக் கூடாத காட்சிகள் அல்லவா?

 

“மொத்தமா செத்துட்டேன்ங்க.” என ஒரே வார்த்தையில் தன் மனதை வெளிப்படுத்தி விட்டுக் கதறி அழுத மனைவியைத் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்ட ரன்வீர் அவளுடன் சேர்ந்து கண்ணீர் சிந்தினான்.

 

வெகுநேரம் ரன்வீரின் மார்பில் சாய்ந்து கதறித் துடித்தவளைத் தூக்கிச் சென்று கட்டிலில் கிடத்தி தன்னுடன் காற்றுக் கூட புக முடியாதவாறு இறுக்கி அணைத்தவாறு படுத்திருந்தான் ரன்வீர்.

 

மீராவின் அழுகை குறைந்து கேவலாக மாறவும் அவளின் முகத்தை நிமிர்த்தி முகம் முழுவதும் முத்தமிட்ட ரன்வீர், “சாரி மிரு குட்டி… சாரி… நான் எவ்வளவு சாரி கேட்டாலும் நான் உனக்குப் பண்ண அநியாயத்துக்கு எல்லாம் மன்னிப்பே இல்ல. வேணும்னா என்னைப் போட்டு அடி.” என்ற ரன்வீர் மீராவின் கரத்தை இழுத்து தன் கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டான்.

மனம் விட்டு எல்லாம் கொட்டித் தீர்த்த பின் மீராவுக்கு இவ்வளவு நாளும் மனதில் இருந்த அழுத்தம் எல்லாம் காற்றாய் மறைந்து போனது.

 

“முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும். அதைப் பத்தி பேச வேணாம்ங்க.” என்ற மீரா ரன்வீரின் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

 

“சத்தியமா நான் காதலிச்ச முதலும் கடைசியுமான பொண்ணு நீ மட்டும் தான் மிரும்மா. அப்ப இருந்த மனநிலைல அந்த சனாவ கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன் தான். ஆனா அவ மேல ஒரு சொட்டு கூட காதல் கிடையாது அப்போ. என்ன தான் சனா கூட ரெண்டு மூணு தடவை வெளிய போய் இருந்தாலும் அவ்வளவு நெருக்கமா நடிச்சிருந்தாலும் அவ எனக்குள்ள எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தல. என் மனசுக்குள்ள முதல் தடவை பாதிப்பை ஏற்படுத்தினது நான் தேடிட்டு இருந்த முகமறியாத பெண் நீ தான்.” எனக் காதலுடன் கூறவும் மீராவின் கன்னம் வெட்கத்தில் சிவந்தன.

 

“மிரு… ஐ லவ் யூ சோ மச். இவ்வளவு நாளும் உன்னைக் கஷ்டப்படுத்தினதுக்கு எல்லாமே சேர்த்து உனக்கு சலிச்சுப் போற அளவுக்கு காதல கொட்டுறேன் நான்.” என்ற ரன்வீரின் மூக்கைப் பிடித்து ஆட்டியவள், “என் வீரோட காதல் என்னைக்குமே எனக்கு சலிக்காது. நான் உங்க மேல வெச்ச காதல் ஒவ்வொரு நொடியும் அதிகரிச்சிட்டு தான் இருக்கும்.” என்றாள் மீரா காதலுடன்.

 

பேசிக்கொண்டு இருக்கும் போதே மீராவைக் கட்டிலில் கிடத்தி அவள் மீது படர்ந்த ரன்வீர், “இப்போ என்னை என்ன பெயர் சொல்லிக் கூப்பிட்ட?” எனக் கேட்டான் காதலுடன்.

 

மீரா மாட்டிக் கொண்டோமே என நாக்கைக் கடிக்க, தன் விரல்களால் அதனை விடுவித்த ரன்வீர், “நீ இந்தப் பெயர் சொல்லி என்னைக் கூப்பிடுறத இதுக்கு முன்னாடியும் நான் கேட்டு இருக்கேன். ஆனா அப்போ எல்லாம் பெரிசா கவனிக்கல. எப்போன்னு சொல்லவா?” என ரன்வீர் கேட்கவும் திரு திரு என முழித்தாள் மீரா.

 

குனிந்து மீராவின் செவி மடலில் முத்தமிட்ட ரன்வீர் அவள் காதில் அந்தரங்க ரகசியம் பேச, “ஐயோ…” என வெட்கத்தில் முகத்தை மூடிக் கொண்டாள் பெண்ணவள்.

 

“ஒரு‌ தடவை வீர் னு கூப்பிடு மிரு. நல்லா இருக்கு.” எனக் கேட்ட ரன்வீரிடம் முகத்தை மூடிக் கொண்டே மறுப்பாகத் தலையசைத்தாள் மீரா.

 

“உன்ன எப்படி சொல்ல வைக்கணும்னு எனக்குத் தெரியும்.” என விஷமமாகக் கூறிய ரன்வீர் மறு நொடியே தன்னவளை மொத்தமாகக் கொள்ளையிடத் தொடங்கினான்.

 

இத்தனை மாதங்களாக மீரா ஆவலோடு எதிர்ப்பார்த்த தன்னவனின் உதிரம் அவளது மணி வயிற்றில் உதிக்க அன்றே அச்சாரம் இடப்பட்டது.

 

*****சுபம்*****

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
51
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Entha vishayam ma irundhalum nidhanam mukkiyam avasara pada kudathu
      Intha veer than athuku example