Loading

முன் தினம் காலையில் தான் ரன்வீரின் குடும்பத்தினர் மீராவின் ஊரை அடைந்து இருந்தனர்.

 

ரன்வீரின் கட்டளையின் பெயரில் அவனது திருமண விஷயம் வெளியே யாருக்கும் சொல்லப்படவில்லை.

 

அவனின் நண்பர்களுக்குக் கூடத் தெரியாது.

 

இன்னுமே ரன்வீர் மீராவைப் புகைப்படத்தில் கூடப் பார்த்தது கிடையாது.

 

நிச்சயதார்த்தத்துக்கும் கிளம்பித் தயாராக வந்தமர்ந்தவன் அருகே சற்று நேரத்தில் குனிந்த தலை நிமிராது வந்து அமர்ந்தாள் மீரா.

 

மீராவை முதல் முறை பார்த்த ரன்வீருக்கு ஏகத்துக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

 

அவனின் எதிர்ப்பார்ப்புக்கு முழு எதிர்மாறாக இருந்தாள் மீரா.

 

பிறந்ததில் இருந்தே கிராமத்தில் வளர்ந்ததால் என்ன தான் படித்து இருந்தாலும் நாகரீகத்தில் பின் தங்கியிருந்த அக் கிராமத்தில் இருந்த மீராவும் ரன்வீர் கூறும் பட்டிக்காட்டுப் பட்டியலில் தான் இருந்தாள்.

 

சினிமாத்துறையில் இருப்பதால் அவனை சுற்றி இருக்கும் பெண்கள் அனைவருமே வெளித் தோற்றத்தில் பேரழகிகள்.

 

முதல் படத்திலேயே இளம் பெண்களின் மனதைக் கொள்ளை கொண்டவனின் அழகைப் பற்றியும் கூற வேண்டுமா?

 

அதனால் தனக்கு வரப் போகும் மனைவியும் பேரழகியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ரன்வீருக்கும் இருந்தது.

 

ஏனென்றால் தன்னுடன் தன் மனைவி வெளியே வரும் போது இருவருக்கும் இடையில் எந்த வேற்றுமைகளும் இருக்கக் கூடாது என அவன் எண்ணினான்.

 

தன் தகுதிக்கும் தராதரத்துக்கும் ஏற்றவளாக தன் மனைவி இருக்க வேண்டும் என விரும்பினான்‌.

 

அழகு, படிப்பு, நாகரீகம் என எல்லாவற்றிலும் உயர்ந்தவளாக தன் மனைவி இருக்க வேண்டும் என எதிர்ப்பார்த்தான்.

 

ஆனால் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒன்றான குணத்தைப் பற்றி அவன் யோசிக்கவில்லை.

 

அவனின் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக ரன்வீரை விட மிகவும் நிறம் குறைந்தவளாக இருந்த மீராவோ பத்தாவது வரை மாத்திரமே படித்திருந்தாள்.

 

அதற்காக முற்காலம் போல நாகரீகம் அறியாதவளும் அல்ல அவள்.

 

ஆனால் ரன்வீர் எதிர்ப்பார்க்கும் நவநாகரீகம் தான் கிராமத்தில் வளர்ந்தவளுக்குத் தெரியவில்லை.

 

தனக்கு எந்த விதத்திலும் பொருத்தமற்ற மீராவை முதல் பார்வையிலேயே வெறுத்து விட்டான் ரன்வீர்.

 

சட்டெனத் திரும்பி தாயை ஏக்கமாக நோக்கினான் இப்போதாவது அவரது மனது மாற மாட்டாதா என்று.

 

ஆனால் காயத்ரியோ வாயெல்லாம் பல்லாக அவ்வளவு மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கவும் ரன்வீரால் பெருமூச்சு தான் விட முடிந்தது.

 

அவனுக்கு ஒரே நிம்மதியாக இருந்தது அவனது திருமண விஷயத்தை ரகசியமாக வைத்திருந்தது மாத்திரமே.

 

ரன்வீரின் முகமாற்றத்தை மீராவும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.

 

அதிலேயே அவளின் மனதில் பாரம் ஏறி விட்டது.

 

நிச்சயப் பத்திரிகை வாசித்து முடிந்து இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ளும் நேரம் கூட ரன்வீர் மீராவின் விரலைப் பட்டும் படாமல் தான் தொட்டான்.

 

அப்போது கூட அவனின் கவனம் இருந்தது என்னவோ இருவருக்கும் இடையில் இருந்த நிற வேறுபாட்டில் தான்.

 

ஏனோ அவனுக்கு காரணமே இன்றி மீராவின் மீது கோபமும் வெறுப்பும் வளர்ந்தன.

 

அவளாவது இத் திருமணத்துக்கு மறுப்புக் கூறி இருந்தால் நன்றாக இருந்து இருக்குமே என்ற எண்ணம் தான் அவனுக்கு.

 

ஆனால் அவன் தான் இன்னும் ஒரு முறை கூட மீராவிடம் பேசியது இல்லையே.

 

அவளின் முகத்தையே இப்போது தான் பார்க்கிறான்.

 

ஆனால் இதைப் பற்றி எல்லாம் அவன் யோசிக்கவில்லை.

 

நிச்சயதார்த்தம் முடிந்த மறு நொடியே ரன்வீர் யாரிடமும் கூறாது சட்டென அங்கிருந்து எழுந்து சென்று விட, அனைவரும் அதிர்ந்து விட்டனர்.

 

காயத்ரி தான் ஏதேதோ கூறி அவர்களை சமாதானப்படுத்தினார்.

 

ஆனால் உண்மை அறிந்த மீராவின் முகமோ வாடியே இருந்தது.

 

அவ் ஊரிலேயே ஓரளவு பெரிய வீடு மீராவின் வீடு தான்.

 

அதனால் அவர்களின் வீட்டிலேயே ரன்வீரின் குடும்பம் தங்க ஏற்பாடு செய்திருந்தனர்.

 

அன்று இரவு தூக்கம் வராமல் மாடிக்குச் செல்லும் வழியில் நடந்த மீராவோ ரன்வீரின் குடும்பம் தங்கியிருந்த அறையைத் தாண்டித் தான் நடக்க வேண்டும்.

 

அந் நேரம் பார்த்து தன் தாயிடம் கத்திக் கொண்டிருந்தான் ரன்வீர்.

 

ரன்வீரின் வார்த்தைகளைக் கேட்ட பின் மீராவால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை.

 

“அம்மா… ஏன் மா இப்படி பண்ணுறீங்க? அந்தப் பொண்ணு எனக்கு கொஞ்சம் கூட மேட்ச் ஆகல. படிப்ப விடுங்க. அட்லீஸ்ட் என் கூட வெளிய வரும் போது நாழு பேர் பார்த்து பொறாமைப்படுற போலவாவது இருக்க வேணாமா? ட்ரெஸிங் சென்ஸ் கூட இல்ல. மாடர்ன்னா என்னன்னே தெரியாது. அசல் பட்டிக்காடு போல இருக்கா. அழகு இல்ல. அறிவு இல்ல. படிப்பு இல்ல. ஸ்டேட்டஸ் இல்ல. எதுவுமே இல்ல. என்னைக் கல்யாணம் பண்ணிக்க எத்தனை பொண்ணுங்க லைன்ல நிற்கிறாங்க. ஆனா நீங்க என்னடான்னா பெத்த பையனுக்கே இப்படி ஒரு அநியாயத்த செய்றீங்க.” என்றான் ரன்வீர் கோபமாக.

 

“ஷ்ஷ் ரன்வீர்… சத்தமா பேசாதே. அவங்களுக்கு கேட்கப் போகுது. என்னடா இப்படி எல்லாம் பேசுற? நான் உன்ன அப்படியா வளர்த்தேன்? அது என்ன நாழு பேர் பார்த்து பொறாமைப்படணும்? உன் மனைவிய நீ மட்டும் ரசிச்சா போதாதா? ஊரே பார்த்து ரசிக்கணும்னு நினைக்குறியா? அந்தப் பொண்ணுக்கு என்னடா குறை? மகாலட்சுமி கணக்காட்டம் இருக்கா. எவ்வளவு நல்ல பொண்ணு தெரியுமா அவ? வெளித் தோற்றத்த மட்டும் வெச்சி பேசாதே ரன்வீர். ஒரு வயசு தாண்டினதுக்கு அப்புறம் அதெல்லாம் காணாம போயிடும். முதல்ல உன்னோட இந்த எண்ணத்த மாத்திக்கோ. இதெல்லாம் பழகவா நீ சினிமாவுல காலடி எடுத்து வெச்ச? உன்னோட சனாவ நீ கல்யாணம் பண்ணி இருந்தன்னா நீ சொல்றது போலவே நாழு பேர் பார்த்து நிச்சயம் பொறாமைப்பட்டு இருப்பாங்க தான். அதே நேரம் அந்த அழகு போனதும் உனக்கே சலிச்சு போயிடும். ஒழுங்கா உன் மனச மாத்திக்கிட்டு நாளைக்கு கல்யாணத்துக்கு தயாராகு.” என்றார் காயத்ரி கட்டளையாக.

 

வெளியே நின்றிருந்த மீராவுக்கோ சனாவின் பெயரைக் கேட்டதும் உள்ளத்தில் ஊசியால் குத்திய வலி.

 

வேண்டாத நினைவுகள் எல்லாம் வரத் தொடங்கின.

 

கண்ணீர் வேறு அவள் கட்டுப்பாட்டையும் மீறி உடைப்பெடுத்தது.

இவற்றை எல்லாம் எண்ணியவாறு மணமேடையில் மீரா சோகமே உருவாக அமர்ந்திருக்க, ரன்வீரும் கோபத்தின் உச்சத்தில் இருந்தான்.

 

ஐயர் ‘கெட்டிமேளம்… கெட்டிமேளம்…’ என்கவும் தாலியைக் கையில் எடுத்த ரன்வீர் மீராவின் முகத்தைக் கூட நோக்காது வேண்டா வெறுப்பாக அவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு மீராவைத் தன் சரி பாதி ஆக்கிக் கொண்டான்.

 

அக்னியைச் சுற்றி வலம் வரும் போது தன் கோபம் அனைத்தையும் மீராவின் கரத்தில் காட்டினான் ரன்வீர்.

 

மீராவிற்கு வலியில் உயிர் போனது.

 

தன் வலியை முகத்தில் காட்டாமல் இருக்கப் பெரும்பாடு பட்டாள் அவள்.

 

ஒரு வழியாக திருமணம் முடிய, மீராவின் வீட்டில் பகல் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

 

ரன்வீரோ வீட்டை அடைந்ததும் வேஷ்டி சட்டையைக் களைந்து விட்டு சாதாரண ஜீன்ஸ் டீ ஷர்ட்டிற்கு மாறி விட்டான்‌.

 

நகரத்தில் வளர்ந்தவனைப் பார்த்து யாராலும் எதுவும் கூறவும் முடியவில்லை.

 

மற்ற சின்னச் சின்ன சடங்குகளுக்கு மீராவின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, ரன்வீர் அதனை மறுக்க முன்னரே அவனைப் பார்வையால் அடக்கினார் காயத்ரி.

 

பால் பழம் சாப்பிடுதல், குடத்துக்குள் கை விட்டு மோதிரம் தேடல், தலையில் அப்பளம் உடைத்தல் என எல்லாவற்றையும் இயக்கி விட்ட ரோபோ போல் செய்து முடித்தான் ரன்வீர்.

 

இளம் பட்டாளம் மணமக்களை சீண்டுவதற்காக மேலும் ஏதேதோ விளையாட்டுக்களை ஏற்பாடு செய்திருக்க, ரன்வீரின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தைத் தத்தெடுப்பதை அவதானித்த மீரா அவசரமாக அனைத்தையும் மறுத்து அவர்களை அடக்கி இருந்தாள்.

 

அதன் பின் தான் ரன்வீரால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

 

ஆனால் அப்போதும் கூட அவன் மீராவின் முகத்தைப் பார்க்கவில்லை.

 

“அம்மா… சீக்கிரம் ரெடி ஆகுங்க. இன்னைக்கே ஊருக்கு கிளம்பணும். எனக்கு வேலை இருக்கு.” என ரன்வீர் காயத்ரியிடம் கூறக் கேட்டதும் அனைவருமே அதிர்ந்து விட்டனர்.

 

இன்னும் ஒரு வாரத்துக்காவது அவர்கள் தங்கி இருப்பர் என மீராவின் வீட்டினர் எண்ணியிருக்க, ரன்வீரோ இன்றே கிளம்பத் தயாராகி இருந்தான்.

 

ரன்வீரின் செயலில் காயத்ரிக்கும் ஸ்ரீனிவாஸனுக்கும் தான் மீராவின் வீட்டினரின் முகத்தைப் பார்க்க சங்கடமாக இருந்தது.

 

“என்ன ரன்வீர் இப்போ வந்து இப்படி சொல்ற? அவங்களும் பாவம்ல. ரெண்டு நாளாவது தங்கிட்டுப் போகலாம்.” என இம்முறை ஸ்ரீனிவாஸனே மெல்லிய குரலில் மகனைக் கடிந்து கொண்டார்.

 

“இவ்வளவு நேரமும் நீங்க ரெண்டு பேரும் சொன்னதைத் தானே செஞ்சிட்டு இருக்கேன். இதுக்கு மேல என்னால ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க முடியாது. அப்படியே உங்களுக்கு இங்க இருந்து தான் ஆகணும்னா தாராளமா இருங்க. நான் இப்போவே கிளம்புறேன்.” என்றான் ரன்வீர் கோபமாக.

 

மூவரும் மாறி மாறி வாக்குவாதம் செய்து கொண்டிருக்க, மீராவின் தந்தை சொக்கலிங்கமே மருமகனுக்கு என்ன அவசரமோ என்ற எண்ணத்தில், “தங்கச்சி… மாப்பிள்ளைக்கு அங்க வேலை இருக்கும். எல்லாம் போட்டதை போட்டபடி வந்து இருப்பீங்க. பரவால்ல. நாங்க நினைச்சா வந்து பொண்ண பார்த்துட்டு போறோம். என்ன அவசர அவசரமா கல்யாணம் நடந்ததுல மீராம்மாவ ஒரேயடியா பிரியுறது கஷ்டமா இருக்கு. ஆனா பொண்ணப் பெத்தவங்க எல்லாருமே இதைக் கடந்து தானே ஆகணும்.” எனும் போதே அவரின் கண்கள் கலங்கின.

 

“அப்பா…” என மீராவும் தந்தையைக் கட்டிப் பிடித்து அழுது கரைய, ரன்வீருக்குத் தான் இவற்றை எல்லாம் பார்க்கும் போது எரிச்சலாக இருந்தது. 

 

“அம்மா… எல்லாத்தையும் ரெடியா எடுத்து வைங்க. ஈவ்னிங் கிளம்பணும்.” என்றவன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு எங்கோ வெளியே கிளம்பினான்.

 

சொன்னது போலவே மாலை மீராவை அழைத்துக் கொண்டு  சென்னையை நோக்கிப் பயணம் செய்தனர்.

 

திருமண வேலைகளுக்கு வண்டி தேவைப்படும் என்பதால் வரும் போது தம் வண்டியிலேயே வந்திருக்க, இப்போது போகும் போது காயத்ரியாலும் ஸ்ரீனிவாஸனாலும் தம் வயது காரணமாக அவ்வளவு நேரம் அமர்ந்தவாறு பயணம் செய்ய இயலவில்லை.

 

ஆகவே அவர்கள் இருவரும் விமானத்தில் அனுப்பி விட்டு புதுமணத் தம்பதிகள் மாத்திரம் வண்டியில் பயணம் செய்தனர்.

 

ரன்வீருக்கு மீராவையும் அவர்களுடன் அனுப்பி வைக்கும் எண்ணம் தான்.

 

ஆனால் அவளுக்குத் தான் பாஸ்போர்ட் எதுவும் இல்லையே.

 

தன் சுயநலத்துக்காக பெற்றவர்களைக் கஷ்டப்படுத்தவும் அவன் விரும்பவில்லை.

 

அதனால் வேறு வழியின்றி மீராவைத் தன்னுடன் தனியாக அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

 

செல்லும் வழி முழுவதும் இருவரிடத்திலும் பெரும் மௌனம் தான் நிலவியது.

 

ரன்வீரோ அங்கு ஒருத்தி இருப்பதையே கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

 

மீராவோ தன் குடும்பத்தைப் பிரிந்த சோகத்திலும் இனி வரும் நாட்களை எண்ணிய பயத்திலும் காணப்பட்டாள். 

 

அடிக்கடி கடைக்கண்ணால் ரன்வீரைப் பார்த்தவளுக்கு அவனின் இறுகி இருந்த தோற்றம் வலியை ஏற்படுத்தியது.

 

சில மணி நேரங்கள் கழித்து ஒரு ஹோட்டல் முன் வண்டியை நிறுத்திய ரன்வீர் மீராவிடம் எதுவும் கூறாது அவன் மட்டும் இறங்கி உள்ளே செல்ல, மீரா தான் என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.

 

செல்வதா வேண்டாமா என மாறி மாறி தன்னையே கேட்டுக் கொண்டிருந்தவள் திடீரென அவள் பக்கக் கதவு திறக்கப்படவும் அதிர்ந்து திரும்பினாள்.

 

அங்கோ கோபமாக நின்றிருந்த ரன்வீர், “உன்ன வெத்துல வெச்சி கூப்பிடணுமா வான்னு? சாப்பாடு வேணும்னா இறங்கி வா. திரும்ப வீடு போய் சேரும் வரை எங்கேயும் நிறுத்த மாட்டேன். வரதுன்னா வா. இல்ல இங்கயே கிடந்து சாகு.” எனக் கத்தி விட்டு மீண்டும் உள்ளே சென்று விட, கணவனின் கோபத்தில் முகம் வாடினாலும் அவனை மேலும் கோபத்துக்கு ஆளாக்க வேண்டாம் என்று மீரா வண்டியை விட்டு இறங்கி ரன்வீரைப் பின் தொடர்ந்தாள்.

 

தயங்கித் தயங்கி ரன்வீருக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்தவளின் முகத்தைக் கூடப் பார்க்காது மெனுவை அவள் பக்கம் நகர்த்திய ரன்வீரிடம், “எ…எதுனாலும் ஓக்கே எனக்கு. நீ…ங்களே ஆர்டர் பண்ணுங்க.” என்றாள் மீரா தயக்கத்துடன்.

 

அவளை நக்கலாக ஒரு பார்வை பார்த்த ரன்வீர், “எதுக்கு இப்போ சீன் போட்டுட்டு இருக்க? கட்டினா உன்ன தான் கட்டணும்னு எங்க அம்மா ஒத்த கால்ல நிக்கிற அளவுக்கு அதான் பெரிய இடமா பார்த்து வளைச்சி போட்டு இருக்கியே. இன்னும் எதுக்கு இந்த ட்ராமா? பிடிச்சதெல்லாம் ஆர்டர் பண்ணி சாப்பிடு.” என்றான் குத்தலாக.

 

அதனைக் கேட்டு பொங்கிய கண்ணீரைக் கட்டுப்படுத்த வழி தெரியாது அவனின் பேச்சு ஏற்படுத்திய தாக்கத்தில் ரன்வீரின் முகத்தை வெறித்தவாறு மீரா இருக்க, ரன்வீர் என்ன நினைத்தானோ அவனே இருவருக்குமான உணவை ஆர்டர் செய்தான்.

 

ஆர்டர் செய்த உணவு வந்ததும் ரன்வீர் அவசர அவசரமாக சாப்பிட, மீராவோ இன்னுமே கண்ணீருடன் ஒரு வாய் கூட சாப்பிடாது உணவை அலைந்தபடி இருந்தாள்.

 

வெகு நேரம் கழித்தே அதனை அவதானித்த ரன்வீர், “ப்ச்… இப்போ என்ன உனக்கு குடி முழுகி போச்சுன்னு இப்படி சாப்பிடாம உக்கார்ந்துட்டு இருக்க? மனுசன நிம்மதியா சாப்பிட கூட விட மாட்டியா? ச்சே…” என எரிச்சலாகக் கேட்டவனின் கைப்பேசி ஒலி எழுப்ப, “நான் இந்தக் கால பேசிட்டு வரதுக்குள்ள நீ சாப்பிட்டு முடிச்சிருக்கணும். இல்ல உன்ன இங்கயே அப்படியே விட்டுட்டுப் போயிடுவேன்.” என விரல் நீட்டி எச்சரித்து விட்டு அங்கிருந்து அகன்றான்.

 

ரன்வீர் சென்றதும் கஷ்டப்பட்டு உணவை விழுங்கியவளுக்கு கண்ணீர் நிற்கவே இல்லை.

 

அவசர அவசரமாகப் பெயருக்குக் கொரித்து விட்டு ரன்வீர் வரும் முன்னே சென்று வண்டியில் அமர்ந்து கொண்டாள்.

 

அழைப்பைத் துண்டித்து விட்டு வந்த ரன்வீர் ஒரு நொடி மீராவைக் காணாது குழம்பியவன் கண்ணாடி வழியாக வெளியே வண்டியினுள் அமர்ந்திருப்பதைக் கண்டு கொண்டு சலிப்படைந்தவன் உணவை முடித்துக் கொண்டு கிளம்பினான்.

 

அதன் பின் மீண்டும் சென்னையை நோக்கி அவர்களின் பயணம் தொடர, மீராவுக்குத் தான் முதல் தடவை இவ்வளவு தூரம் வண்டியில் பயணிப்பதால் வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வந்தது.

 

ஒரு கட்டத்தில் அடக்கமாட்டாமல் அவசரமாக இடது கரத்தால் வாயை மூடிக்கொண்டு வலக் கரத்தால் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த ரன்வீரின் கரத்தைத் தொடவும் அவனோ தீச்சுட்டார் போல் அவளது கரத்தை உதறி விட்டான்.

 

“ஏய் அறிவில்லையா உனக்கு?” என ஆவேசமாகத் திட்டத் தொடங்கியவன் அதன் பின்னர் தான் அவளின் அதிர்ந்த தோற்றத்தையும் அசௌகரியமான உடல் மொழியையும் உணர்ந்து வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினான்.

 

மறு நொடியே அவசரமாக வண்டியை விட்டு இறங்கிய மீரா ஒரு ஓரமாகச் சென்று சாப்பிட்ட அனைத்தையும் வாந்தியிட்டு வெளியேற்றினாள்.

 

வண்டியை நிறுத்தி விட்டு மறு பக்கம் திரும்பி நின்றிருந்த ரன்வீரோ மீரா வந்து வண்டியில் ஏறவும் அவளின் முகத்தைப் பார்க்காது தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.

 

அதனை வாங்கிக் குடித்த பின் தான் மீராவுக்கு ஓரளவு சரியானது.

 

ரன்வீர் வேறு ஏசியை அணைத்து விட்டு ஜன்னல்களைத் திறந்து விடவும் அவனது இந்த ஒரு செயலே மீராவின் காயம்பட்ட இதயத்தை மயிலிறகால் வருடியது.

 

வண்டி ரன்வீரின் வீட்டை அடைந்த போது மீராவோ சீட்டில் சாய்ந்து உறக்கத்தைத் தழுவியிருக்க, அவளை எழுப்புவதற்காக வேண்டி வண்டி ஹார்னை ரன்வீர் விடாது அழுத்தவும் பதறிக்கொண்டு எழுந்தமர்ந்தாள் மீரா.

 

மீரா எழுந்ததும் ரன்வீர் அவளை விட்டு விட்டு இறங்கி வீட்டின் உள்ளே சென்று விட, சில நொடிகள் கழித்தே மீராவுக்கு சுற்றம் உரைத்தது.

 

மெதுவாகத் திரும்பி ரன்வீரின் இல்லத்தைப் பார்த்தவளுக்கு மூச்சடைத்தது.

 

அவ்வளவு விசாலமாகவும் அழகாகவும் கலைநயத்துடனும் கட்டப்பட்டு இருந்தது அவ் வீடு.

 

மீராவின் வீட்டுடன் ஒப்பிடும் போது இது ஏதோ அரச மாளிகை போல் இருந்தது.

 

இதுவும் கூட மீராவின் மனதில் இருந்த தாழ்வுமனப்பான்மையை அதிகரித்து இருவருக்கும் இடையில் இருந்த வேறுபாட்டை பூதாகரமாகக் காட்டியது.

 

வேறு வழியின்றி வண்டியை விட்டு இறங்கியவள் தான் கொண்டு வந்த உடைமைகளை எடுத்துக் கொண்டு வாசல் வரை செல்ல, அவசரமாக ஆரத்தி கரைத்து எடுத்து வந்தார் காயத்ரி.

 

முதல் முறை வீட்டுக்கு வரும் மருமகளை தனியாக வீட்டிற்குள் வரவேற்பது சஞ்சலமாக இருந்தாலும் ரன்வீரைப் பற்றி நன்கு தெரிந்தவர் மீராவுக்கு ஆரத்தி சுற்றி வீட்டினுள் அழைத்துச் சென்றார்.

 

மீராவின் கரத்தால் பூஜையறையில் விளக்கை ஏற்ற வைத்தவர் அவளுக்கு ரன்வீரின் அறையைக் காட்டி விட்டு தன் அறைக்குச் சென்றார்.

 

அங்கு ரன்வீரின் அறைக்கு முன்னால் தனித்து விடப்பட்ட மீராவுக்கு அவ் அறைக்குள் நுழையவே பயமாக இருந்தது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
30
+1
3
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment