சில மாதங்களுக்குப் பிறகு,
“அம்மா… ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்க? என்னால நீங்க சொல்ற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. என்னோட ட்ரீமே வேற. அதுவும் அந்தப் பட்டிக்காட்டுல போய் கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்க. நோ வே மா. அப்பா நீங்களாச்சும் சொல்லுங்க.” என்றான் ரன்வீர் கோபமாக.
“நீயாச்சு உன் அம்மாவாச்சு. நான் ஒன்னுக்கும் இல்லப்பா. அதுவும் இல்லாம உன் அம்மா பேச்ச நான் எப்பவாச்சும் மீறி இருக்கேனா? நீ தலை கீழா நின்னு குதிச்சாலும் ஒன்னும் ஆகப் போகுதில்ல மை சன்.” எனத் தோளைக் குலுக்கினார் ரன்வீரின் தந்தை ஸ்ரீனிவாஸன்.
தந்தையை முறைத்துப் பார்த்த ரன்வீர் தன் பாட்டுக்கு புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த அவனது தாய் காயத்ரியிடம் மீண்டும் சென்று, “அம்மா ப்ளீஸ் மா. என்னால நீங்க சொல்ற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. என்னோட எதிர்ப்பார்ப்பே வேற. நீங்க சொல்ற பொண்ணு அதுக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாம இருக்கா. புரிஞ்சிக்கோங்க மா.” என்றான் கெஞ்சலாக.
“அது எப்படி நீ ஃபோட்டோ கூட பார்க்காம அந்தப் பொண்ணப் பத்தி அப்படி பேசலாம்? எனக்குத் தெரியும் உன் மனசுல எவளோ ஒரு ஆட்டக்காரி இருக்கா. இங்கப் பாரு ரன்வீர்… எனக்கு வரப் போற மருமகள் அரையும் குறையுமா உடுத்திக்கிட்டு புருஷன் முன்னாடி மட்டும் காட்ட வேண்டியத கேமரா முன்னாடி முழு உலகத்துக்கும் காட்டுறவளா இருக்கக் கூடாது.” என்றார் காயத்ரி உறுதியாக.
“சனா அப்படி இல்லம்மா. அவ ரொம்ப நல்லப் பொண்ணு.” என ரன்வீர் வாய் தவறி உளறி விட, மறு நொடியே எல்லாத் தாய்மார்களும் கையில் எடுக்கும் ஆயுதத்தை எடுத்தார் காயத்ரி.
“நான் சொன்னேன் தானேங்க. எனக்குத் தெரியும். இவன் அந்தப் பொண்ண மனசுல வெச்சிக்கிட்டு தான் கல்யாணம் வேணாம்னு சொல்றான். எவ்வளவு பாரம்பரியம் மிக்க குடும்பம் நம்மளோடது. இவன் என்னன்னா ஒரு நடிகைய இந்தக் குடும்பத்து மருமகளா கொண்டு வரேன்னு சொல்றான். இதெல்லாம் பார்க்கத் தான் நான் இன்னும் உயிரோட இருக்கேனா? அப்படி என்னங்க நான் அவன் கிட்ட பெரிசா கேட்டுட்டேன். இத்தனை வருஷமா அவன் இஷ்டத்துக்கு தானே அவன விட்டிருக்கேன். அவன் ஆசைப்பட்ட எல்லாத்துக்கும் சம்மதிச்சு தலையாட்டி இருக்கேன். முதல் தடவை… முதல் தடவையா அவன் கிட்ட ஒரு அம்மாவா ஆசையா ஒன்னு கேட்டேன். என் பையனுக்கு வரப் போற பொண்டாட்டி மகாலட்சுமி கணக்கா, அழகா, அம்சமா, எல்லாரையும் மதிச்சு நடக்குறவளா இருக்கணும்னு நினைச்சேன். ஒரு அம்மாவா அவனுக்கு நல்லது நினைச்சேன். அது தப்பா?” எனக் கேட்டார் கண்ணீருடன்.
“அம்மா… நீங்க என்ன சொன்னாலும் நான் செய்வேன் மா. ஆனா இப்போ நீங்க கேட்குறது என்னோட லைஃப். வாழ்க்கை பூரா என் கூட எனக்குத் துணையா வரப் போற என் பொண்டாட்டி நான் ஆசைப்பட்ட போல இருக்கணும்னு நினைக்கிறேன். நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லம்மா. எனக்கு வரப் போற மனைவி எப்படி இருக்கணும்னு நான் ஆசைப்பட்டேனோ அதுக்கெல்லாம் பொருத்தமா சனா இருக்கா. என் கெரியருக்கும் அவ எப்போவும் துணையா இருப்பா. அதனால தான் அவள கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க மா.” என்றான் ரன்வீர்.
ரன்வீர் இவ்வளவு கெஞ்சுவதைப் பார்க்கும் போது ஸ்ரீனிவாஸனுக்கே பாவமாக இருந்தது.
அவர் தன் மனையாளை ஆதங்கமாக நோக்க, காயத்ரிக்கோ ரன்வீரின் மனது புரிந்தாலும் அவரால் சனாவை தன் ஒரே மகனுக்கு மனைவியாகக் கொண்டு வர மனம் இடம் கொடுக்கவில்லை.
தேஜ் மூலம் ரன்வீரின் மனம் பற்றி அறிந்தவர் சனாவைப் பற்றி எல்லா இடத்திலும் விசாரித்துப் பார்க்க, அவர் அறிந்து கொண்டவை எதுவும் அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை.
அதுவும் பத்திரிகைகளிலும் செய்திகளிலும் ரன்வீரை சனாவுடன் இணைத்து வைத்துப் பேசுவதை அவரும் பார்த்து இருக்கிறார்.
நேர்காணல்களில் சனாவின் திமிரான நடவடிக்கைகள் முதல் அவள் அணியும் ஆடைகள், பழக்கவழக்கங்கள் வரை எதுவும் காயத்ரிக்கு பிடிபடவில்லை.
காயத்ரி ஒன்றும் இந்தக் காலத்துப் பெண்களை வெளித் தோற்றத்தை மாத்திரம் வைத்து விமர்சிக்கும் அளவு பிற்போக்குவாதி இல்லை.
இருந்தும் பாரம்பரியம் மிக்க தன் குடும்பத்துக்கு வரும் மருமகளும் அவரைப் போலவே கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புபவளாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் காயத்ரிக்கு.
காயத்ரியின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக பாரம்பரியத்தில் ஊறிப்போன குடும்பம்.
காயத்ரியும் நன்றாகப் படித்து சப் கலெக்டராகப் பெரிய பதவியில் இருந்து விட்டு தற்போது ஓய்வு எடுத்து இருந்தாலும் என்றும் அவர் தன் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்ததில்லை.
ஸ்ரீனிவாஸனின் குடும்பம் காயத்ரியின் அளவுக்கு வசதியானவர்கள் இல்லாத போதிலும் அவரின் விடாமுயற்சியும் திறமையும் காயத்ரியின் தந்தையைக் கவர, ஸ்ரீனிவாசனைத் தன் மகளுக்கு மணாளனாகக் கொண்டு வந்தார்.
என்ன தான் சினிமாத்துறையில் வேலை செய்தாலும் எந்தவொரு தவறான பழக்கவழக்கங்களும் இல்லாதவர் தான் ஸ்ரீனிவாஸன்.
அதுவும் மனைவியின் வாக்கே அவரது வேதவாக்கு.
இருவருக்கும் இடையில் அவ்வளவு புரிந்துணர்வும் காதலும் இருந்தது.
அவர்களின் காதலுக்கு வரமாகக் கிடைத்த பரிசு தான் ரன்வீர்.
தந்தையுடன் சேர்ந்து சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் ரன்வீருக்கோ சிறு வயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம்.
பெரும் நடிகனாக வர வேண்டும் என ஆசை கொண்டவன் எம்.பி.ஏ முடித்ததும் தன் கனவுகளுக்கு உயிர் கொடுத்தான்.
நினைத்ததை விட அவனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
“ரெண்டு பேரும் நல்லா கேட்டுக்கோங்க. என் குடும்பத்துக்கு ஒரு நடிகை மருமகளா வரக் கூடாது. இத்தனை வருஷமா கட்டிக் காத்த பாரம்பரியத்த ஒரு சினிமாக்காரி வந்து சந்தி சிரிக்க வைக்கிறதுல எனக்கு இஷ்டம் இல்ல. அப்படி மட்டும் ஏதாவது நடந்துச்சுன்னா அது தான் நீங்க ரெண்டு பேரும் என்னை உயிரோட பார்க்குற கடைசி முறையா இருக்கும். இவன் நான் சொல்ற பொண்ண கல்யாணம் பண்ணிக்கலன்னா சாப்பாடு தண்ணி எதுவும் இல்லாம நான் போய் சேருறேன்.” எனக் கோபமாகக் கூறிய காயத்ரி தன் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொள்ள, “அம்மா…” “காயு…” எனத் தந்தையும் மகனும் அதிர்ச்சியாகக் கத்தினர்.
காயத்ரி கூறிச் சென்றதைக் கேட்டு ரன்வீர் தலையை அழுந்தப் பற்றிக்கொண்டு அமர்ந்து விட, “ரன்வீர்… உங்க அம்மா சொல்றத எல்லாம் பெரிசா எடுத்துக்காதே. அவ கோவத்துல ஏதோ பேசிட்டு போறா. கொஞ்சம் நேரத்துல அவளே சமாதானம் ஆகி உன்னத் தேடி வருவா. நீ எதைப் பத்தியும் யோசிக்காம இரு.” என்றார் ஸ்ரீனிவாஸன் ரன்வீரின் தோளில் தட்டிக் கொடுத்து ஆதரவாக.
அதனைக் கேட்டு மறுப்பாகத் தலையசைத்த ரன்வீர் ஏதோ முடிவெடுத்தவனாக பெருமூச்சு விட்டுக்கொண்டு காயத்ரியின் அறையை நோக்கி எழுந்து சென்றான்.
“அம்மா… கதவைத் திறங்க.” என வேகமாகக் கதவைத் தட்டிய ரன்வீரிடம், “இல்லப்பா. இந்த அம்மா எப்படிப் போனா உனக்கு என்ன? நீ போய் அந்த சினிமாக்காரி கூடவே கூத்தடி.” என்றார் காயத்ரி கோபமாக.
“அம்மா…” என அழுத்தமாக அழைத்த ரன்வீர், “நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு புரியுதா உங்களுக்கு? கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்கலாம். ஆனா வாழ வேண்டியது நான் தான். எனக்குன்னு ஒரு மனசு இருக்குறது உங்களுக்கு புரியலயா?” எனக் கேட்டான் ஆதங்கமாக.
மறு பக்கம் காயத்ரி மௌனம் சாதிக்க, ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்ட ரன்வீர், “சரி… இப்போ என்ன? நான் நீங்க சொல்ற பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும். அவ்வளவு தானே. பண்ணிக்குறேன். போதுமா?” எனக் கேட்டான் விரக்தியாக.
பட்டென அறைக் கதவைத் திறந்த காயத்ரியோ, “நிஜமாவா?” எனக் கேட்டார் ஆவலாக.
ரன்வீர் ஆமோதிப்பாகத் தலையசைக்கவும் அவனை அணைத்து நெற்றியில் முத்தமிட்ட காயத்ரி, “எனக்குத் தெரியும் என் புள்ள அம்மா பேச்ச மீற மாட்டான்னு. என்னங்க… இன்னைக்கே பொண்ணு பார்க்க போகலாம். அண்ணன் கிட்ட சொல்லிடுங்க நாங்க வரோம்னு.” என ரன்வீரிடம் தொடங்கி ஸ்ரீனிவாஸனிடம் முடித்தார்.
“அதெல்லாம் ஒன்னும் அவசியம் இல்ல. இந்த சடங்கு சம்பிரதாயம் எல்லாத்துக்கும் எனக்கு நேரம் இல்ல. அதான் நீங்க ரெண்டு பேரும் பொண்ண பார்த்துட்டீங்களே. இனிமே நான் பார்க்க என்ன இருக்கு? கல்யாணத்துக்கு நாள் குறிங்க.” என்றான் ரன்வீர் உணர்வுகள் மரத்துப் போன குரலில்.
“அப்போ பொண்ணு ஃபோட்டோவாச்சும் பாருடா.” என்ற காயத்ரியை அழுத்தமாக நோக்கிய ரன்வீர், “நான் பார்த்து மட்டும் என்ன ஆகப் போகுது? பிடிக்கலன்னாலும் கல்யாணம் பண்ணி தானே ஆகணும். அவ தான் என் பொண்டாட்டின்னு முடிவாகிடுச்சு. இனிமே எதுக்கு இந்த ஃபார்மாலிட்டீஸ்? ஆங் இன்னொரு விஷயம். கல்யாணம் க்ரேன்டா எல்லாம் ஏற்பாடு பண்ண வேணாம். ஒரு கோயில்ல சிம்பிளா ஏற்பாடு பண்ணுங்க. நம்ம ஃபேமிலிய தவிர வெளிய வேற யாருக்கும் என் கல்யாணத்த பத்தி தெரிய வேணாம்.” என்றான்.
“என்னப்பா இப்படி சொல்ற? நீ எங்களுக்கு ஒரே புள்ள. உன் கல்யாணத்த பத்தி எங்களுக்கு எவ்வளவு கனவு இருக்கு. சிம்பிளா கோயில்ல பண்ணலாம்னு சொல்ற.” என காயத்ரி வருத்தமாகக் கேட்க, “எனக்கும் என் கல்யாணத்த பத்தி நிறைய கனவு இருந்துச்சு மா. சரி விடுங்க. இனி அதைப் பத்தி பேசி என்ன ஆகப் போகுது? என்னைப் பேச வைக்காதீங்க. இதையாவது என் விருப்பத்துக்கு பண்ணுங்க.” என்ற ரன்வீர் யாரின் பதிலுக்கும் காத்திராமல் விருட்டென அங்கிருந்து அகன்றான்.
“என்னங்க அவன் இப்படி சொல்லிட்டு போறான்?” என காயத்ரி கணவனிடம் கேட்டார் ஆதங்கமாக.
“அவன வேற என்ன தான் பண்ண சொல்ற? அதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டானே. அவனுக்கு கொஞ்சம் இதெல்லாம் ஏத்துக்க டைம் கொடு. ஆனாலும் காயு… இப்படி நம்ம பையன கட்டாயப்படுத்தி ஒரு கல்யாணம் பண்ணி வைக்கத் தான் வேணுமா? பாரு அவன் எப்படி போறான்னு.” எனக் கேட்டார் ஸ்ரீனிவாஸன் ஆதங்கமாக.
“என்னங்க நீங்களும் இப்படி பேசுறீங்க? நான் என் பையனுக்கு நல்லது தானே நினைப்பேன். இப்போ வேணா நான் அவன கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்கலாம். ஆனா பாருங்க கொஞ்சம் நாள்ல அவனே நான் அவனுக்கு நல்லது தான் பண்ணி இருக்கேன்னு புரிஞ்சுக்குவான்.” என்றார் காயத்ரி உறுதியாக.
“என்னவோ பண்ணு. இதுவரைக்கும் நீ எடுத்த எல்லா முடிவும் கரெக்டா தான் இருந்து இருக்கு. இதுவும் கரெக்டா இருக்கும்னு நம்புறேன். எது எப்படியோ? என் புள்ள நல்லா இருந்துட்டா சரி.” என்று விட்டு அங்கிருந்து அகன்றார் ஸ்ரீனிவாஸன்.
சாதாரண கூறைச்சீலை அணிந்து வரிந்து வாரிப் பின்னலிட்ட நீண்ட கூந்தலில் தலை நிறைய மல்லிகைப்பூ சூடி சாதாரண ஒப்பனையில் தலை குனிந்து அமர்ந்து இருந்தாள் மீரா.
அவளுக்கு இன்று திருமணம் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்.
மீராவின் முகத்தில் கிஞ்சித்தும் திருமணக் களையே இல்லை.
ஒரு வித சோகமே உருவாக அமர்ந்து இருந்தாள் பெண்ணவள்.
அதற்கு மாறாக அவளின் அருகில் அமர்ந்திருந்த ரன்வீரோ சிடுசிடு என இருந்தான்.
அவனின் மனமோ உளைக்கலமாகக் கொதித்துக் கொண்டிருந்தது.
ரன்வீர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததுமே திருமண வேலைகள் துரித கதியில் நடந்தன.
காயத்ரியின் ஒன்று விட்ட அண்ணன் மகள் தான் மீரா.
மீராவின் குடும்பம் காயத்ரியின் குடும்பத்தின் அளவுக்கு பெரிதாக வசதி இல்லாதவர்கள்.
கிராமத்தைச் சேர்ந்த அவர்களுக்கு விவசாயம் தான் எல்லாம்.
கணவனின் தொடர் வேலைப்பளுகளுக்கு நடுவே காயத்ரிக்கு மீராவின் குடும்பத்தோடு பெரிதாக தொடர்புகள் இருக்கவில்லை.
அதனால் ரன்வீருக்கும் அவர்களைப் பற்றி எதுவும் தெரியாது.
ஆனால் மீராவின் தந்தையோ சிறு வயதில் இருந்தே அவளுக்கு உறவுகளைப் பற்றியும் உறவுகளின் மகத்துவத்தைப் பற்றியும் சொல்லிக் கொடுத்து வளர்த்து இருந்தார்.
ரன்வீர் முதல் முறை திரையில் தோன்றியதுமே அவன் யார் என்று மீராவுக்கு அவளது தந்தை கூறி இருந்தார்.
அதனால் ரன்வீர் தனக்கு முறைப் பையன் என்பது வரை மீரா அறிவாள்.
அதுவும் ரன்வீரைத் திரையில் பார்த்த நொடியில் இருந்தே மொத்தமாக அவனைத் தன் இதயத்திற்குள் பூட்டி வைத்திருந்தாள் பெண்ணவள்.
அவள் அதற்கு ஒரு தீவிர ரசிகையின் செயல் எனத் தனக்குத் தானே சமாதானம் கூறி இருந்தாலும் உண்மை என்னவென்று அவள் அறிவாள்.
சில நாட்களுக்கு முன் மீராவின் ஊரில் நடந்த ஒரு திருமண வீட்டுக்குச் சென்ற காயத்ரி தன் உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டார்.
அதுவும் மீராவைப் பார்த்த முதல் பார்வையிலேயே அவருக்குப் பிடித்து விட்டது.
அழகு எல்லாம் அவருக்கு இரண்டாம் பட்சம் தான்.
மீராவின் குணத்தைக் கண்கொண்டு பார்த்தவர் உடனேயே மீராவைத் தனக்கு மருமகளாக முடிவு செய்து கணவனிடமும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.
அவர் என்று மனைவியின் பேச்சை மீறி இருக்கிறார்?
கணவனின் சம்மதம் கிடைத்ததுமே முதல் வேலையாக மீராவின் தந்தை சொக்கலிங்கத்திடம் தன் விருப்பத்தைத் தெரிவிக்க, அவருக்கும் தன் மகளுக்கு ஒரு சிறப்பான வாழ்க்கை கிடைக்கப் போகும் மகிழ்ச்சியில் அவரது மனைவி சுபத்ராவிடம் கலந்தாலோசித்து விட்டு தன் சம்மதத்தைத் தெரிவித்தார்.
அன்றே மீராவிடமும் தகவல் தெரிவிக்கப்பட, அவளோ அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றாள்.
அவள் கனவிலும் எதிர்ப்பார்க்காதது இது.
தொட முடியாத உயரத்தில் இருப்பவன் தனக்கு கணவனாக வரப் போகிறானா என எண்ணும் போது மீராவுக்கு மகிழ்ச்சிக்குப் பதிலாக கவலை தான் வந்தது.
போதாக்குறைக்கு ஏதேதோ கசப்பான நினைவுகள் வேறு கிளர்ந்தெழுந்து அவளின் மனதை வாட்டின.
எப்படியும் ரன்வீர் சம்மதிக்க மாட்டான் என உறுதியாக நம்பியவளுக்கு ரன்வீர் சம்மதித்த செய்தி கிடைக்கப் பெறவும் ஏனோ சந்தோஷப்பட முடியவில்லை.
மாறாக நெஞ்செல்லாம் பாரம் ஏறின.
ஆனால் தந்தையின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியைப் பார்த்த பின் அவளால் இத் திருமணத்தை மறுக்கவும் முடியவில்லை.
நடப்பது நடக்கட்டும் என்ற நிலையில் தான் நேற்று வரை இருந்தாள்.
ஆனால் முன் தினம் நிச்சயதார்த்தமும் முடிந்த பின் அவளுக்கு இத் திருமணத்தில் இருந்த தயக்கம் மேலும் பன்மடங்கு அதிகரித்தது.
Apdi enna pannu iruka intha Sana